(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மணி அடித்தது. பாடசாலையின் திறந்தவெளி மண்ட பத்தில் தடதடவென்று பிள்ளைகள் காலைக் கூட்டத்திற்கு விரைந்தனர். கிறா அத்’ ஓதி காலைக் கீதம் பாடியபின் ஆசிரிய அறிவுரையும் முடிந்தது. மாணவ மாணவிகள் மீண் டும் வகுப்புகளுக்குச் சென்றனர்.
எங்கள் கண்கள் அவர்களைத் தேடுகின்றன. ஷாலியா, காசிம், பீலி இப்படி…
அவர்கள் எங்கே? இன்று எங்களுக்கு பெரிய ஏமாற்றம்.
ஆராய்ந்ததில் சில பிள்ளைகள் சொன்னார்கள் —
“லத்திபா சம்மளங்குளத்துக்கு அவகட. காக்காட கல்யாணத்துக்கு போய்ட்டா.
“ரஹீமா அக்காவோட முழுகப் போனா”
“நிஜாரா காட்டுக்கு கொள்ளி கொண்டார போனா”
“சேர் துத்துருப்பிட்டி ரோட்டு டோசர் போட்டு வெளிசாக்குறயாம். ஹாலியா அவட வாப்பாவோட செக் ரோல் வேலைக்கு போனா
“காசிம் பீலி வூடு மொழுக நிக்கிறா”
அப்படியென்றால் ஆஷா எங்கே?
சரியாக ஒரு கிழமை பாடசாலைக்கு ‘கட்’ அடித்துக் கொண்டு எங்கே திரிகிறாள்? எதற்காக நிற்ப்பந்திக்கப் படுகிறாளோ?
ஆஷா இல்லாட்டால் பாடசாலையில் சுறுசுறுப்பு இல்லையே!
சரி வரட்டும். இன்று இல்லாவிட்டால் மறுநாள். என்றோ ஒரு நாள் வந்து தானே ஆகவேண்டும்.
இந்த முறை இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண் டும். கைகள் சிவக்க இரண்டு அடி போடவேண்டும். அப் போது தான் ரோஷம் வரும்.
அவள் இன்றி பாடங்களை எப்படி நடத்துவது? ஆஷா
பாடசாலை நிர்வாகத்துக்கு சமர்ப்பித்திருக்கும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தின்படி அவளுக்கு பதின்மூன்று பூர்த் தியாகிவிட்டது. ஆனால் வயதுக்கு மீறிய வளர்ச்சி. கிரா மத்துக்குச் சொந்தமான அந்த வெகுளிப் பார்வை. பொது நிறம். எந்நேரமும் சுறுசுறுப்புடன் காட்சியளிப்பாள்.
ஆஷா பாடசாலைக்கு வந்துவிட்டால் போதும், ஆயிரம் சண்டைகள். ஒரே கத்தலாக இருக்கும்.
“சேர் ஆஷா அடிக்கிறா”
“சேர் ஆஷா பட்டஞ் சொல்றா”
“சேர் ஆஷா தூசனத்தால் ஏசினா”
வழக்குகளை விசாரித்து தீர்ப்பும் தண்டணையும் வழங் கும் பொறுப்பு மௌலவி ஆசிரியரிடமே, ஆஷாவின் குரல் தான் ‘கீச் கீச்’ என்று ஒலிக்கும் மாலையில் பனை மரங்களில் வந்தடையும் கிளிக் கூட்டத்தின் இரைச்சலைப் போல.
ஆனால் அவள் படிப்பில் கெட்டிக்காரி. அபார ஞாபக சக்தி. அவளுடைய விவேகத்தை நாங்கள் பாராட்டியுள் ளோம். ஆங்கில ஆசிரியர் அவளை ஒரு ‘ஜீனியஸ்’ என்றே சொல்வார்.
பாடசாலையில் ஆஷாவைப்போல் ஆரிபாவும் ஒருத்தி அவர்களுக்கு நிகராக முபாரக்கைக் குறிப்பிடலாம். பாட சாலையை விட்டு விலகி மூதூரில் கல்வி கற்கும் ரவூப்தினும் கெட்டிக்காரன். அடுத்து அமீர், சிக்தீக் என்று வரிசைக் கிரமமாகக் கூறலாம்.
ஆஷாவுக்கு ஒரு விசயத்தை ஒரு முறை சொன்னால் போதும். பல்கீஸ் போன்றோருக்கு மூன்று நான்கு முறை விளங்கப்படுத்த வேண்டும். திருப்பித் திருப்பிக் கூறி சிறு குறிப்புகளும் கொடுக்க வேண்டியவர்களும் உண்டு. ஆனால் நாங்கள் யாரையும் ஒதுக்கி விடுவது இல்லை. அது ஆசிரி யப் பண்பு ஆகாது. எல்லாரையும் மூளை சாலிகளாக்கி நாட்டுக்குப் பயன் உள்ளவர்களாக்கி அவர்களுக்கு விமோ சனம் அளிப்பதே ஆசிரியக் கடமை.
இங்கு படிப்பு முடிந்ததும் எத்தனை பேர் மகா வித்தி யாலயத்திற்குப் போவீர்கள்? அதற்குப் பின் உங்கள் எதிர் கால விருப்பம் என்ன? இப்படி ஒரு நாள் நாங்கள் புள்ளி விபரம் எடுத்தோம்.
டொக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள், விவசா யிகள், லிகிதர்கள்…
“ஆஷா உன் விருப்பம் என்ன?” நாங்கள் ஆவலுடன் கேட்டோம்.
அவள் சொன்னாள், ‘சேர் நான் டொக்டராக வந் தால் எங்கட உம்மா, தம்பி இந்த ஊரிலே எல்லாரும் கன தூரம் ஆஸ்பத்திரிக்கு என்னத்துக்கு சேர் போகனும்’
இந்த ‘ரஜரட்ட’ பிரதேச முஸ்லிம் கிராமத்தில் பிறந் தவள் ஒரே பெண். அதிஷ்டசாலி என்றார்கள். அவளுக்கு மூத்தவர்கள் நான்கு பேரும் ஆண்கள். மூன்று பேருக்கு கல்வி இல்லை. மாடு சாய்க்கிறார்கள், வயல்வேலை, சேனை என்று காலம் ஓட்டும் வேலை. இளையவன் பாடசாலைக்கு வருகிறான். அவன் தான் அமீர். மூத்தவன் தௌபீக் ‘மொறக்காய்’ வியாபாரம் செய்து வரும்போது அமீரைப் பார்த்து தகப்பன் சொன்னார், ‘பார்டா அமீர் தௌபீக் காக்கா யாவாரம் செய்து காசு ஒழைக்கிறான். கெட்டிக் காரன் நீ ஸ்கூல், ஸ்கூல் என்று காலத்தை வீணாக்கி பின்பு அமீர் பல நாட்கள் பாடசாலைக்கு வரவில்லை. காக்காவோட மொறக்காய்க்குப் போகிறான் என்று கேள் விப்பட்டு நாங்கள் கண்டித்தோம்.
ஆஷா பிறந்து நாற்பது நாள் கூட முடியவில்லை. உறவுக்காரர்களில் ஒருவர் தன் பிள்ளைக்கு பெண் கேட்டாராம்.
இப்போது அவளுக்கு பதின்மூன்று பிந்திவிட்டது. இனித்தான் பிரச்சினை.
மழலைப் பருவத்தில் கேட்டது கேட்டபடியே கல்யா ணங்கள் நடந்துவிட வேண்டியது கிராமிய மரபு. இல்லா விட்டால் பெரிய ‘கசலி’யில் வந்து முடியும்.
ஆஷா தவழும்போது ஆஷாட வாப்பாவும் உம்மாவும் அவளின் எதிர்காலத்தை எப்படித் திட்டமிட்டிருப்பார்கள் என்பது எங்களுக்கு இப்போது திட்டவட்டமாகத் தெரியும்.
குழந்தையை நல்ல முறையில் வளர்த்து உரிய காலத் தில் பாடசாலைக்கு அனுப்பி, கல்வி கற்க வாய்ப்பளித்து, உயர் கல்விக்காகவும்…
சே, அப்படி ஒரு சிந்தனை கனவில் கூட அவர்களின் உள்ளத்தில் உதித்திருக்குமா? ஆஷாவுக்கு ஐந்து அல்லது ஆறு வயது ஆகியிருக்கும் போது. அந்தப் பொல்லாத விளையாட்டுப் பருவத்தில் வீட்டில் பெரிய தொல்லை. கட் டுப்படுத்த முடியாது. ஆளுக்காள், வயல், சேனை காடு என்று கலைந்து விடுவார்கள். வீட்டில் யாரும் இல்லை. எல்லாரும் காலையில் போனால் மாலையில்தான் வருவார்கள்.
ஆஷாட வாப்பா சொன்னார்
“ஊரில ஒரு ஸ்கூல் கெடக்கு, அவவ மாஸ்டர்மார் கையில பாரஞ் சாட்டினாத்தான் சரி. வூட்டிலே வச்சிருக் கப்படாது. எங்க ஆஷாட உம்மா, அவட உபண்ண சட்டிபிக்கட்?”
ஒரு சிலேட்டும் புத்தகத்தோடும் பாடசாலைக்கு வந்து விட்டாள் ஆஷா. அது அதிஷ்டம்தான். மதிய போசனத் துக்குப் பாடசாலையில் பிஸ்கட்டும் கிணற்றில் தண்ணீரும் இருக்கும். பெரும்பாலும் கிராமத்தின் ஓலைக் குடிசைகளில் மதிய வேளையில் அடுப்புகள் புகையாது.
இன்று ஆஷா வளர்ந்து கொண்டிருக்கிறாள். ஆசிரியர் களின் முயற்சியினால் படித்துக் கொண்டிருக்கிறாள். அவளு டைய திறமைதான் எல்லாம்.
இதெல்லாம் அவள் பெற்றோருக்குப் புரிவதில்லை. அவர் களுடைய சிந்தனை இப்போது திசை மாறுகிறது.
“ஆஷாவ வூட்ட நிப்பாட்டினா சோறு அவிக்க, மத்த வேலைகளைச் செய்ய, தம்பிய பாத்துக்க ஒதவியா இருக்கும். புள்ளகள பெத்து, அவக தாய் தகப்பனுக்கு ஒதவி இல் லாட்டி என்னத்துக்கு இருந்து”
நாங்கள் முடிவாகச் சொன்னோம். ஆஷாவின் கல்வி யில் மட்டும் குறுக்கிடாதீர்கள்.
ஆஷா எப்பவும் இப்படியே படிக்கமாட்டா. அவவுக்கு வயது வந்து கொண்டிருக்கு. அவ பெரியவ ஆனா. அவ வுக்கு மாப்பிள்ளை பேசிக்கெடக்கு, அவ குடும்பம் நடத்த வேணும். முறைப்பாடு வேறு.
ஆஷாவின் வளர்ச்சியிலும் நீங்கள் குறுக்கிடாதீங்க . அவளையும் கிணற்றில் தள்ளி விடாதீங்க” இது எங்களது வாதம்.
அவள் பாடசாலைக்கு வந்து கொண்டு தான் இருந்தாள். திடீரென்று ஏன் நின்றாள்?
நெடுக பாடங்கள் தவறவிட்டால் அவளுக்கு மட்டும் தனியாகப் பாடசாலை நடத்த முடியுமா?
பாடசாலைக்கு வராவிட்டால் எல்லாக் கிராமியப் பெண் பிள்ளைகள் சொல்லும் காரணங்களைத்தான் அவர் களும் சொல்வார்கள்.
சேர் நான் நெல்லு காயவைக்கப் போற”
“சேனை வெளிசாக்கப் போன”
“வந்தா வூட்ட வாப்பா அடிக்கிற; வேலை செய்ய ஆரும் இல்ல”
‘சேர் சூடு பிரிக்கிறவங்களுக்கு தீன் கொண்டு போன”
“ம்மா ஆஸ்பத்திரிக்கு போனா, வூட்ட தம்பிய பாத் துக்க சொன்னாம்மா”
“சேர் எனக்கு சட்டை இல்ல. சட்டையைக் கழிகி காயப்போட்ட”
இப்படியாக இவர்கள் கூறும் காரணங்களை அலசி ஆராய, ஒரு விசாரணை நடத்தினால் பிள்ளைகள் நிரபராதிகள்.
அப்படியென்றால் குற்றவாளிகள்?
இதைப்பற்றி பெற்றார் ஆசிரியர் சங்கக் கூட்டங்களில் விரிவாக எடுத்துரைத்திருக்கிறோம். ஊரில் தனித்தனியாக சந்திக்க நேரும் போதும் காரசாரமாக விவாதித்திருக் கின்றோம்.
“பெற்றார்களாகிய நீங்கள் எல்லாரும் சுயநலவாதிகள். பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்ட வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளங்களில் உதிப்பதில்லை. படிக்க வேண்டிய பிஞ்சு வயதில் உங்கள் சொந்த வேலைகளுக்கு உபயோகிக்கிறீர்கள். இப்போதுள்ள புதிய கல்வியின் அருமையை கிராமப்புற பெற்றோர்களாகிய நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும்!
இப்படிக் கருத்துப்பட பல கூட்டங்களில் எங்கள் பேச்சுக்கள் நீண்டு கொண்டே போகும். மனஸ்தாபப்பட்டு இன்னும் எங்களுடன் பேசாத பெற்றோரும் இருக்கிறார்கள். அவர்களுடைய குறுகிய மனப்பான்மை, மூட நம்பிக்கை, இவற்றைப்பற்றியும் நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.
ஜப்பாருடன் மோதிக் கொண்டது எங்களுக்கு இன் னும் நல்ல ஞாபகம்.
“அல்லா என்டே வாப்போய் இந்த மாஸ்டமாருக்கு புள்ளகாலி வந்தா என்ன வராட்டா என்ன. அரசாங்கம் ஒங்களுக்கு சம்பளம் குடுக்குது. எடுத்துட்டு ஒங்க, ஒங்கட வேலைகளை பார்த்திட்டு இருக்கிறது தானே?”
ஆஷாவுக்கு மாமா முறை அவன். அவனுடைய மக னுக்குத்தான் ஆஷாவை பேசிக் கிடக்குதாம். ஆஷாவு டைய வீட்டில் அவனுடைய பலவந்தமும் ஓங்கியிருக்க வேண்டும்.
“ஆஷா ஏன் பாடசாலைக்கு வரவில்லை” இந்தக் கேள்வி எங்களைக் குடைந்து கொண்டிருந்தது.
ஆஷாட வாப்பா ரசீதை சந்தித்து விசாரிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால் அவர் லொறியில் மாடு ஏற்றி கொழும்பு அராபியா வீதிக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வர சில நாட்கள் ஆகும் என்றும் அறிந்தோம். சுற்று வட்டாரத்தில் உள்ள யாராவது ஒரு பிள்ளையிட மாவது விசாரிக்க வேண்டும் என்று எண்ணி அடுத்தநாள் காலை ஆஷாவின் பக்கத்து வீட்டு பல்கீஸ் பீலியை தனி யாகக் கூப்பிட்டோம்.
அவள் மேசைக்கு அருகே வந்து நின்றாள். ”பல்கீஸ், ஆஷா ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரல்லே?”
அவள் தயங்கித் தயங்கி மௌனமாக இருந்தாள். பருவ மங்கையைப் போல் நாணத்துடன் தலை கவிழ்ந்து, தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
“பல்கீஸ், இதுதானா உன் பதில்?”
“எது கேட்டாலும் நீ இப்படித்தான்: பேசிப் பழகா விட்டா படிக்க ஏலாது….பல்கீஸ் வாயைத் திறந்து பதில் சொல். ஆஷா ஏன் வரவில்லை?”
நீண்ட பிரயத்தனத்துக்குப் பிறகு
“சேர் எனக்குத் தெரியா….” அவள் விருட்டென்று ஓடிவிட்டாள்.
நாங்கள் அதற்கு மேல் அலட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் பல்கீஸிடம் வினாவியதை உற்றுக் கேட்டுக் கொண் டிருந்த சில துணிச்சலான மாணவிகள் கத்தினர். ‘சேர் ஆஷாவுக்கு சொகமில்லை” கூறிவிட்டுச் சிரித்தனர்.
ஆஷாவும் அவளைப்போல் ஹபீதா, கைரூன், காசிம் பீலி, நஜீரா ஆகியோரும் ஆண்களில் ரகீம், ஜாபா, சுல் தான், அமீர் இப்படியாக, பாடசாலை இடாப்புகளில் பூஜ் யங்களை நிரப்பும் அந்தத் திறமைசாலிகளின் பட்டியல் விரிந்து கொண்டே போகும். வராததற்கு அவர்கள் கூறும் காரணங்களைப் பரிசீலனை செய்தால், ஆர்வமும் பாடங்கள் பிந்தும் அந்தக் கவலையும் அவர்களுக்கு இருப்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்.
இடைவேளையின் போது வகுப்புகளுக்கு பிஸ்கட் பங்கிடப்பட்டது.
நாங்கள் எங்கள் அறைகளுக்குச் சென்று தேநீர் அருந் தினோம். இடைவேளைக்கு வரும் பிள்ளைகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. தெரிந்தும் ஒரு புதிய பாடத்தைத் தொடங்கப்போகும் ஆங்கில ஆசிரியருக்கு ஒரு நப்பாசை.
“ஆஷா வரமாட்டாளா?”
பாடசாலை விட மணி அடித்ததும் எல்லாரும் எழுந்து நின்று ‘சலவாத்து’ ஓதினார்கள். பின்பு ‘சலாம்’ கூறி வீடுகளுக்குச் சென்றனர்.
நாங்கள் மீண்டும் பல்கீஸ் பீலியை அழைத்தோம். அவள் எங்கள் முன் வந்து அந்த நாணத்தோடு நின்றாள்.
“இங்கேபார் பல்கீஸ் பீலி, கொழும்பால ஆஷாட வாப்பா வந்திருந்தா, ஒருக்கா பின்னேரத்துக்கு வந்திட்டு போகச் சொல்லு”
அவள் நடந்து கொண்டே ‘ஹா’ என்று சம்மதம் கூறினாள்.
மதிய உணவுக்குப் பிறகு நாங்கள் கொஞ்சநேரம் அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருக்கும் போது –
“மாஸ்டர்மார் நித்திரையா?”
ஒரு சிம்மக்குரல் முன் வாசலில் கேட்டது. ஆஷாட வாப்பாட குரல்தான் அது.
நாங்கள் நித்திரையை விட்டு எழுந்து விட்டோம். “நீங்க…?”
ஏதோ சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால் சொல்லவில்லை.
“எப்ப வந்தீங்க?”
“இப்பதான், மூன்றரை மணி திருகோணமலை பஸ்ஸில் வந்து வூட்ட போக, பல்கீஸ் ஓடிவந்து சொன்னா”
“விசயம் ஒன்றும் இல்ல, ஒங்கட மகள் பள்ளிக்கூடத் துக்கு ஒரு கிழமையா வரல்ல. பாடங்கள் எல்லாம் பிந்திப் போகுது; விசாரிக்கத்தான். ஒங்களையும் இந்தப் பக்கத்துக்கே தெரிபட இல்ல”
“மாஸ்டர்மாருக்கு நான் வந்து சொல்லத்தான் இருந்த, ஆஷா இனி பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டா.”
“இனி பள்ளிக்கூடத்துக்கு வரமாட்டாளா? ஏன்?”
“ஓம் சேர். அவ பக்குவப்பட்டுட்டா…”
எங்களுக்கு ஒரு கணம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இருப்பினும் எங்கள் முயற்சியை நாங்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
“அப்ப ஆஷா தொடர்ந்து படிக்கக் கூடாதா?”
“மறுகா வாயில மண், ஊருல, உலகத்தில் இருந்த பாடில்லை. குமருப்புள்ள படிச்சிதான் என்ன கிடக்கு?”
ஒரு நாள் மாலை பாடசாலைக் கிணற்றில் தண்ணீர் அள்ளி சட்டிபானை பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்தாள் ஆஷா. ஓர் அழுக்குச் சேலை அவள் உடம்பைச் சுற்றிக் கொண்டிருந்தது. அந்தச் சேலைதான் அவளை ஒரு பெரிய மனுஷியாக்கிக் கொண்டிருந்தது.
ஆஷா பெரிய பெண்ணாகி விட்டதும், முக்காடு போட்டிருந்தாள். எங்களைக் கண்டதும் போட்டிருந்த முக்காட்டை இன்னும் இழுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்.
ஆஷா இனி பாடசாலைக்கு வரமாட்டா. அவளுக்கு மட்டுந்தானா அந்த நிலை?
கிராமத்தில் ஆரியா, சித்தி, கைருன், பல்கீஸ், ஷமீதா இப்படியாக, அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
– மல்லிகை – பெப்ரவரி 1976.
– இரவின் ராகங்கள் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு : ஜூலை 1987, மல்லிகைப்பந்தல், யாழ்ப்பாணம்.