அவன் ஒரு இனவாதி ?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 7,946 
 
 

‘பாவம் செந்தூரன்’ மைதிலி; பஸ்சுக்கு ஓடிக்கொண்டிருக்கும்போது,பத்து வயதான அவளின் கடைசி; மகனைப் பற்றி நினைத்துக்கொண்டாள். அதிகம் ஓடியதால் அவளுக்கு மூச்சு வாங்கியது. செந்தூரனுக்கு கடந்த சில நாட்களாகத் தடிமலும் காய்ச்சலும். லண்டன் சுவாத்தியத்தில்; எப்போது தடிமல்,காய்ச்சல்வரும் என்று சொல்ல தெரியாது. வீட்டுக்கு வரும் அழையாத விருந்தாளிகளாகத் தடிமலும் இருமலும் லண்டனில் வரும் வியாதிகளாகும். செந்தூரன் மூச்செடுக்கவும் சிலவேளைகளிற் கஷ்டப்படுகிறான்.

உலகத்திலுள்ள பல வசதியான தாய்கள் மாதிரி,முழு நேரமும் வீட்டிலிருந்துகொண்டு தன்குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் விடிந்தால் வேலையென்றோடும் தன் வாழ்க்கையை நினைத்து நொந்து கொள்வதா அல்லது உழைத்து வாழவேண்டும்,மற்றவர்கள் உதவியில வாழக்கூடாது; என்ற நியதியைத் தன் மக்களுக்குக்; காட்டவேண்டும் என்ற தனது பிடிவாதம் முக்கியமா என்று சில வேளைகளில் மைதிலி; யோசிப்பாள்.

பஸ் இன்னும் வரவில்லை.அதிக நேரம் பஸ்சுக்குக் காத்திருந்து குளிரிற் தவிக்க அவள் விரும்பவில்லை. செப்டம்பர் மாதம் முடியப்போகிறது. கடந்த ஒன்றிரண்டு நாட்களாகப் பரவாயில்லாத சுவாத்தியமாகவிருந்தது. இப்போது சரியாகக் குளிர்கிறது. காலையில்,யாரோ பல அரக்கர்கள் அவசரமாக ஓடிவந்து,லண்டன் மாநகரைப்புகாரால் இழுத்து மூடிக்கட்டியதுபோலிருந்தது. தூரத்திலிருந்து பஸ் வருகிறதா என்றும் தெரியவில்லை. அந்த நேரத்துக்கு வழக்கமாக பஸ் எடுக்க இவ்விடம் வரும் பிரயாணிகள் ஒவ்வொருத்தராக வந்து கொண்டிருக்கிறார்கள்.

லண்டன் மாநகரிற்தான் எத்தனை விதமான மனிதர்கள்? முன்னூற்று முப்பதுக்கும் மேலான மொழிகள் பேசும் மக்கள் லண்டனில் வாழ்வதாக பி.பி.சி. நிகழ்ச்சி ஒன்றிற் சொன்னாhர்கள். இந்த பஸ் ஸ்ரொப்புக்கு வரும் மக்கள் எத்தனை ரகமான மக்கள்?

எல்லோர் கவனத்தையும் திருப்புப்படி,பெரிய சத்தம்போட்டுப் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வரும்,மிக உயர்ந்த தோற்றமுடைய நையீரியர்களை இன்னும் இவ்விடத்தில் காணவில்லை. மற்றவர்கள் பலர் இந்தத் தரிப்பில் நின்றிருப்பதைப் பற்றி அக்கறைப் படாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். கடந்ந சில தினங்களாக நையீரிய அரசியல் நிலை பற்றிப் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

‘அமெரிக்கா ஏன் எங்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிடவேண்டும்’ என்பது பற்றி விவாதித்துக்கொண்டார்கள். நேற்று அவர்கள் வழக்கம்போல் விவாதித்துக் கொண்டிருந்தபோது,

‘சோசியல் வேக்கர்ஸ் பார்ட்டி’ பததிரிகையை வைத்துக்கொண்டிருந்த ஒரு ஆங்கிலேய இளைஞன் அவர்களைப் பார்த்தச் சிரித்து விட்டு,’உங்கள் நாட்டில் எண்ணெய்க் கிணறுகள் தாராளமாக இருக்கின்றன,அதுதான் தேனைத் தேடும் ஈக்கள் மாதிரி உங்கள் நாட்டைத் தேடுகிறார்கள, சோமாலியாவில் எண்ணெய் இருக்கிறதாம்,அங்கு அமெரிக்கர்கள் அமைதி காக்கும் படையாகப் போய் என்ன செய்கிறார்கள் என்று தெரியும்தானே’ என்று சொன்னான்.

உலகத்திலுள்ள எல்லா பஸ்தரிப்புகளும் ஒவ்வொரு சிறு உலகமா?

அவள் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். இந்த பஸ் தரிப்பல் எத்தனையோ விதமான பிரச்சினைகளை அவள் கண்டிருக்கிறாள். காதல்,சோகம்,விளையாட்டு நிகழ்ச்சிகளின் விவாதங்கள்,இனவாதக் கோணங்கள் என்று பல தரப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்

போனவாரம் ஒரு பங்களதேசி மூதாட்டியை வெள்ளையின வெறி பிடித்த ஒருவன் மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்தினான். அன்றைக்கு, பஸ்வந்து நின்றதும், பஸ்சுக்குக் காத்திருக்கம் அந்த மூதாட்டியை இடித்துவிட்டு அந்த வெள்ளை இன வெறியன் ஏறியதை அந்த மூதாட்டி பொறுக்காமல் முணுமுணுக்க அவன் அவளைக் கண்டபாட்டுக்குக் கீழ்த் தரமான வார்த்தைகளாற் பேசினான்.அதைப் பொறுக்காத மைதிலி அவனுடன் வாதம் செய்ய,பஸ்சுக்கு நின்ற மற்ற பிரயாணிகள் அந்த இனவாதியை பஸ்சிலிருந்து வெளியேற்றினார்கள்.

மைதிலி இனவாதக் கொடுமைகளுக்குப் பெயர்போன இலங்கையிலிருந்து வந்தவள்.

இலங்கையில் இனக் கொடுமையால் எத்தனையோ அசம்பாவிதங்கள் தமிழருக்கெதிராகப் பகிரங்கமாக நடந்தாலும் அதைப்பற்றிப் பேச மற்றவர்கள் முனைய மாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

இங்கு, தான் வந்து சேர்ந்த அன்னிய நாட்டில் தனக்கு முன்னால் நடக்கும் கொடுமைகளுக்கு அவள் குரல் கொடுக்க,அவளுடன் இணைந்து இனவாதத்தை எதிர்க்க எத்தனையோபேர்; அன்று முன்வந்தது அவளுக்குச் சந்தோசத்தை; தந்தது.

மைதிலியின் நினைவு வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளிற் தாவுகிறது.இப்போது பாடசாலைகள் விடுமுறையென்றபடியால் வீட்டில் குழந்தைகள் தனியாக இருக்கிறார்கள். மைதிலி வீட்டுக்குத் திரும்பும் வரையும் அவர்கள் வெளியே போகக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லி வைத்திருக்கிறாள். வேலை முடிந்து வீடு திரும்பும் வரைக்கும் அவர்களைப் பற்றிய நினைவு அவள் மனதைக் குடைந்து கொண்டிருக்கும்.

பெரிய மகனுக்குப் பதினைந்து வயதாகிறது. அவன் பொறுப்பானவன். மற்ற இருவரும் அவன் சொல்லைக் கேட்டு நடப்பார்கள். காலையில் அவள் வேலைக்கு வெளிக்கிடும்போது தடிமலால் மூக்கு வழிந்து கொண்டிருக்கும் அவளது கடைசிமன் முத்தம் கொடுத்து மைதிலியை வழியனுப்பி வைத்தான்.

அந்தக் குழந்தை மனதைப் பொறுத்தவரையில்,அம்மா வேலைக்குப்போனாற்தான் தனக்குப் பிடித்த விளையாட்டுச்சாமான்கள் வாங்கித்தருவாள் என்பதுதான். இரண்டாவது மகன்,’அம்மா பிஸ்கட் கொண்டு போங்கள்’ என்று சொன்னான்.வேலையிற் சிலவேளை மதிய சாப்பாட்டுக்குப்போகவே நேரம் கிடைப்பதில்லை மைதிலி ஒரு நாள்ச் சொன்னதை ஞாபகத்தில் வைத்திருக்கிறான். மூத்த மகன் வழக்கம்போல் ‘கவனமாகப் போய் வாருங்கள்’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.

லண்டனில் பெரும்பாலும் இனவாதம் பெரிதாக இல்லை என்று நினைத்தவளுக்குப் போனவாரம் டெலிவிசனில்,’இங்கிலாந்தில் ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்துக்கும் மேலான இனவெறித்தாக்குதல்கள் நடப்பதாகவும் அதில் ஐம்பது வீதமானவை லண்டனில் நடைபெறுகின்றன,என்றும்,அதிலும் பெரும்பாலான தாக்குதல்கள்,ஆசிய நாட்டு மக்களான,இந்திய, பாகிஸ்தானிய,பங்களதேசி மக்களைக் குறிவைத்து நடக்கின்றன’ என்று சொன்னார்கள். அதனால் வேலைக்குப் போகும் தனது தாயைக் கவனமாக இருக்கும்படி மகன் சொல்லியனுப்புவான்.

மைதிலி சிலிர்த்துக் கொண்டாள். குளிரும் பயமும் அவள் மனதில் மோதின. பஸ் இன்னும் வரவில்லை. வழியை மூடிக்கிடக்கும் புகாரின் காரணமாகப் போகிற வழி சரிவரத் தெரியாததால் பஸ் இன்று தாமதித்து வரலாம் புகாருள்குள்ளால் நையிரிய நாட்டைச்சேர்ந்த இந்த இருவரின் குரல்களும் கேட்டன.அந்த பங்களதேஸ் நாட்டைச் சேர்ந்த மூதாட்டியும் வந்து சேர்ந்தாள். இந்தக் குளிரில் இந்தக் கிழவி எங்கே போகிறாள் என்று மைதிலி யோசித்தபோது,அந்த மூதாட்டி பார்த்தலோமியஸ் ஹொஸ்பிட்டலுக்கு டிக்கட் வாங்குவது ஞாபகம் வந்தது. வைத்தியசாலையிலிருக்கும் உறவினரைப் பார்க்கப்போகிறாள்போலும்.

பஸ்வந்ததும் மைதிலியும் அந்த மூதாட்டியும் எதிரெதிரே உள்ள இருக்கைகளில் அமர்ந்து கொண்டார்கள். பஸ் வெளிக்கிடும்போது, மிகவும் உடல் பருத்த மேற்கிந்திய மாது மூச்சு இளைக்க ஓடிவந்து பஸசில் ஏறிக்கொண்டாள்.

கிழவி ஒதுங்கி,ஓடிவந்த மாதுக்கு இடம் கொடுத்தாள்,அவள் கிழவிக்குத் ‘தாங்க் யு’ சொன்னாள்;.

மைதிலிக்குப் பக்கத்திலிருந்த வெள்ளையன்;,’சண்’ பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தான். கிழக்கு லண்டனில் நடந்த இனவெறித் தாக்குதல் பற்றிய செய்தி மைதிலியின் கண்களையுறத்தின.

‘ஹிட்லர் இறந்து போனாலும் ஹிட்லரின் மாதிரி துவேச சிந்தனைகொண்ட பலர் உலகில் எப்போதும் எங்கேயோ இருந்துகொண்டிருப்பார்கள், சிறுபான்மையின மக்கள் இன்றும் பல நாடுகளில்,மதத்தின் பெயரால்,மொழியின் பெயரால் சாதியின் பெயரால்,பாலியல் வித்தியாசத்தால்,ஏழைகள் என்ற காரணத்தால் கொன்று குவிக்கப் படுகிறார்கள்’ மைதிலி தனக்குள் நினைத்துக்கொண்டாள்..

கிழக்கு லண்டனில் வெள்ளையினவாதிகளாற் கொலை செய்யப் பட்ட,மூன்று குழந்தைகளின் தந்தை மேர்ஸா ஒரு அப்பாவி என்றும் அந்த முஸ்லிம் தந்தை ஒரு காரணமுமமின்றி இனவாதிகளால்ப் பயங்கரமாகத் தாக்கப் பட்டு,அவர் உயிருடனிருக்கும்போது படுமோசமான குளிர் நீரில் தள்ளப்பட்டு கொலை செய்யப் படடிருக்கிறார்; என்றும் செய்திகள் கூறுகின்றன.

போனவாரம் டுமெசி அலி என்ற பதினேழு வயதுப் பையன் இனவாதிகளால்ப் பயங்கரமாகத் தாக்கப் பட்டுப் பார்வையற்ற நிலையில் கிழக்கு லண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் இன்னொரு செய்தி சொன்னது.

மைதிலியின் மனம் சிலிர்த்தது. அவளின் குழந்தைகளும் இன்னும் சில வருடங்களில் சிறகு முளைத்த பறவைகளாக வெளியுலகில் தடம் பதிக்கப்போகிறார்கள், அவர்கள் என்னமாதிரியான துவேசங்களை எதிர் கொள்ளப் போகிறார்கள்? அப்படியான நெருக்கடிகளைத் தாங்க அவர்களை இவள் தயார் படுத்தி வைத்திருக்கிறாளா?

மைதிலி தன்னைத்தானே கேள்வி கேட்கும்போது அவள் இறங்கும் இடம் வந்து விட்டது.

ஆபிசுக்குள் நுழைந்ததும் ‘ஹலோ மைதிலி குட்மோhணிங்’ என்று அன்புடன் வரவேற்றார் இவளின் மேலதிகாரி மிஸ்டர் பரட்.

மைதிலி ஒரு புனத்தாருண ஸதாபனத்தில் வேலை செய்கிறாள்.

பல விதமான போதை மருந்துகளுக்கு அடிமையாகி வாழ்க்கையைச் சீரழித்துப் போராடுபவர்களைத் திரும்பவும் ஒரு நல்ல வழிக்குத் திருப்பும் உதவிக்காக வேலை செய்யும் ஸ்தாபனங்களில் இதுவுமொன்று.

இங்கு வேலை செய்வதே அவளால் நம்பமுடியாத விடயம். பலதரப்பட்ட மனச்சிக்கலுள்ளவர்களையும் சந்திக்கும் இடமிது.சினிமாப் படங்களிலும் கற்பனைக் கதைகளிலும் வரும் பல விதமான வில்லன்கள், பெலவீனமானவர்கள்,அகங்காரம் பிடித்தவர்கள், சாதாரண உலகை மறந்து தங்களின் அசாதராரணமான உலகில் வாழ்பவர்கள் என்று பலரை இங்கு சாதாரணமாகச் சந்திக்கலாம்.

‘எப்படி உன்னுடைய குழந்தைகள்?’ மிஸ்டர் பரட் வழக்கம்போல் இவளை விசாரித்தார்.அவருக்குக் குழந்தைகள் கிடையாது. தன்னுடைய ஆண் சினேகிதனுடன் வாழ்கிறார்.ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்க்க அவருக்கு விருப்பம். ஆனால் ஹோமோசெக்சுவல் தம்பதிகள் குழுந்தை ஒன்றைத் தத்து எடுத்து வளர்ப்பதை பிரித்தானிய அரசு இன்னும் அனுமதிக்கவில்லை என்று மைதிலியிடம் சொல்லி ஒப்பாரி வைப்பார் மிஸ்டர் பரட். அன்பும் ஆதரவுமுள்ள தகப்பன் மாதிரி அங்குள்ள எல்லோரையும் பராமரிப்பார் பரட். அதிலும் மைதிலியில் அவருக்கு ஒரு தனிப்பட்ட பாசம். அந்த ஸ்தாபனத்துக்கு வேலைக்கு வந்த முதலாவது ‘இந்தியப் பெண்மணி’ என்று அவள் அங்கு வந்தபோது எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.

தான் இந்தியப் பெண்மணி அல்ல இலங்கைப் பெண்மணி என்று அவருக்குச் இவள் சொல்ல அவர் மைதிலியை ஒரு கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து விட்டு’நீ கிருஷ்ணனை வணங்குபவளா’ என்று கேட்டார்.

கிருஷ்ணனை மட்டுமா?

அவள் பதில் சொல்லத் தயங்கமுதல் அவர்,’நாங்கள் எல்லாம் கிருஷ்ணனின் குழந்தைகள் என்று எனது பார்ட்னர் சொன்னார்’ என்றார்.

அதன்பின் ஏதோ ஒருபேச்சில் தனது பார்ட்னர் ஹமில்டன் இந்து சமயத்தில் மிகுந்த ஈடுபாடுள்ளவர் என்றும் பகவத்கீதை படிப்பவர் என்றும் மிஸ்டர் பரட் மைதிலிக்குச் சொன்னார்.

அவர் இவளிடம் குழந்தைகளைப் பற்றிக்கேட்டதும் சின்ன மகன் செந்தூரன் தடிமலுடன் கஷ்டப்படுகிறான் என்று மைதிலி; சொன்னதும் அவர் மிகவும் அனுதாபப்பட்டார்.

‘உன் மனதில் துன்பங்கள் இருக்கும்போது…”என்று தொடங்கியவர் அவளின் முகத்தை உற்றுப் பார்த்தார்.பின்னர்,”இன்று இரண்டு புதியவர்கள் வந்திருக்கிறார்கள்…”என்று சொல்லி முடித்தார்.

புனத்தாருண நிலையத்திற்கு அடிக்கடி புதியவர்கள் வருவார்கள். அதிலென்ன பெரிய விடயமிருக்கிறது? அவளுக்குப் புரியாமல் அவரின் முகத்தைப் பார்த்தாள்.

‘ம்ம்..’என்று தன்பாட்டுக்கு முணுமுணுத்துவிட்டுப் பேச்சை மேலே தொடராமல் பைல்களை எடுத்தார்.அவர் ஏதோ சொல்லத் தயங்குகிறார் என்பது அவரின் முகத் தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் தெரிந்தது.

அடுத்த ரிஸப்சன் அறையிலிருந்து டெலிபோன் மணி அடிப்பது கேட்டது. இன்னும் ரிஸப்சனிஸ்ட் வரவில்லை. அவர் எழுந்தார்,’மைதிலி, இந்தப் பைல்களைப் பாருங்கள்’

மிஸ்டர் பரட் மைதிலியிடம் இரு பைல்களைத் திணித்து விட்டு அடுத்த அறைக்குப் போனார்.

மைதிலி பைல்களிலுள்ள விடயங்களைப் படிக்கத் தொடங்கினாள்.

ஓரு பைல், பதினாறு வயதான போதை வஸ்துக்கு அடிமையாயிருக்கும் பெண்ணைப் பற்றியது. அந்த இளம் பெண் கடந்த ஒரு வருடமாக ஹெரோயின் எடுக்கிறாள்.அதற்கு முதல் பலவகையான போதைப் பொருட்களை எடுத்திருக்கிறாள்.போதை வஸ்துக்களை வாங்கப் பணத்தேவைக்கு விபச்சாரம் செய்கிறாள்.சிலவேளை கடைகளிற் திருடுவாள். இப்போது போலிசில் அகப்பட்டு கோர்ட் கேஸ் போடப்பட்டிருக்கிறது. தான் ஒரு சீர்திருத்த ஸ்தாபனத்தில் சேர்ந்து,போதை வஸ்துகளிலிருந்து விடுபடும் வழிகளைத்தேடப்போகிறேன் என்றும்,தனது பழைய குற்றங்களை மன்னித்துக் கருணை காட்டும்படி நீதிபதியிடம் கேட்கப்போகிறாளாம்.

அடுத்த குறிப்பு மைக்கல் என்ற இளைஞனைப் பற்றியது.அவனுக்கு இருபத்தியொருவயது.அவனுடைய பதின்மூன்று வயதிலிருந்து போதை மருந்தெடுக்கிறானாம்.இப்போது ஒரு நாளைக்கு ஒரு கிராம் ஹெரோயின் எடுக்கிறான்.போதை மருந்தக்களை வாங்கத் தேவைப் படும் பணத்தைப் பல பயங்கரமான வழிகளில் எடுத்திருக்கிறான்.

மைதிலி மேலெழுந்தவாரியாக இருகுறிப்பையும் படித்து முடித்தாள். இவ்விடம் வரும் பெரும்பான்மையானவர்களின் பழையவாழ்க்கை இப்படித்தானிருக்கும். கொள்ளையடித்து, உடல் வியாபாரம் செய்து, மற்றவர்களை ஏமாற்றி என்று பல வழிகளில் பணம் எடுத்துத் தங்களின் வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கைகளையம் நிர்மூலமாக்கி விட்டு, எப்படியும் ஒரு சுமுகநிலைக்கத் தங்கள் வாழ்க்கையைத் திருப்ப இந்த புனத்தாருண நிலையத்திற்கு வருவார்கள்.

மிஸ்டர் பரட் இந்தக்குறிப்புக்களை அவளிடம் ஏன் கொடுத்தார் என்று அவளுக்குத் தெரியும்.இன்று மைதிலிதான அட்மிஸன் ஆபிஸர். இன்று வரும் கேஸஸ் அவளின் பொறுப்பில் விடப்படும்.அவர்களைக் கவன்சில் செய்து அவர்கள் அந்த நிலையத்திலிருந்து அவர்கள் போகும்வரை அவள்தான் அவர்களுடைய கவுன்சிலர்.

இந்த நிலையம் பன்னிரண்டு பேருக்கு இடம் கொடுக்கும் வசதிகளைக் கொண்டது. போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிச் சீர்திருத்த வழிகளைத் தேடும் ஆண்கள் பெண்கள் இங்கு வரலாம். இங்கு இடமெடுக்க பலகாலமாகக் காத்துக் கிடக்கும் மனிதர்களிற் பன்னிரண்டு அதிர்ஷ்டசாலிகள் மூன்று கிழமைகளை இங்கே செலவழிப்பார்கள்.அவர்களின் வைத்தியத் தேவைகளைப் பார்க்க டாக்டர்களும் நேர்ஸசும் இருக்கிறார்கள். அவர்களுடன் பழகி, அவர்களை உணர்ந்து அவர்களை சீர்திருத்தும் வழிகளைக் காட்ட இங்கு வேலை செய்யும் ‘கவுன்சிலர்’ உத்தியோகத்தரில் மைதிலியும் ஒருத்தி. இங்கு புனத்தாருண சேவை நாடி வருபவர்கள்,அந்த நிலையத்திலிருக்கும்போது தனியாக எங்கும் போக முடியாது. இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் ‘கவுன்சிலர்களின்’ கண்காணிப்பில் இங்கிருப்பார்கள். அவர்களைப் பார்க்க யாரும் வரக் கூடாது. அவர்கள் தங்கள் சொந்தக்காரர்கள் சினேகிதர்களுடன் டெலிபோனில் மட்டும் தொடர்பு கொள்ளலாம்.

இன்று மைதிலியும் கரலைனும்,ஜேம்சும் ‘கவுன்சிலர்ஸ்’; டியுட்டியிலிருக்கிறார்கள். மிஸ்டர் பரட் மேலதிகாரி.

அவர் தனது டெலிபோன் சம்பாசணையை முடித்துக்கொண்டு அவரின் அறைக்குள் வந்தார்.வந்ததும் வராததுமாகச் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார். மைதிலிக்குச் சிகரெட் பிடிக்காது என்று அவருக்குத் தெரியும். சிலவேளைகளில் மிகவும் டென்ஸனாக இருக்கும்போத சிகரெட் பிடிப்பார். இன்று அவர் மிகவும் டென்ஸனாக இருக்கிறார் என்று மைதிலி புரிந்து கொண்டாள்.

‘சரி மைதிலி, இரண்டு கேஸ்களையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.முதலாவது கேஸ்,அந்தப் பெண் பார்பரா டானியல் என்ற பதினாறு வயதுப்பெண் அவளுடன் பேசியபோது அறுபது வயதுக் கிழவி மாதிரி வாதம் செய்கிறாள்.அடிபட்ட பழைய மரம்போல்ப்பேசுகிறாள்.நீங்கள் அவளைச் சமாளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.அடுத்தது…..’ அவர் தன்னுடைய பேச்சை மேலே தொடராமல் அவளை ஏறிட்டுப் பார்த்தார்.

அடுததது கேஸ் என்ன போதை வஸ்துக்கு அடிமைப்பட்ட காமுகனா,அல்லது யாரையும் ஆட்டிப் படைக்கப்போகும் பெரிய கிரிமினலா? அவள் தனக்குள் கேள்வியைக் கேட்டுக்கொண்டுத் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு தனது மேலதிகாரியை உற்று நோக்கினாள்

‘ஐயாம் சாரி மைதிலி…இப்படியானவர்களுடன் நீங்கள் வேலை செய்வதை நான் விரும்பவில்லை. ஆனால் டியுட்டி லிஸ்டின்படி இன்று நீங்கள்தான் அட்மிஸன் கவுன்சிலர், இன்று வரும் கேஸசை நீங்கள்தான பார்க்கவேண்டும். அதிலும் மைக்கல் பார்க்கர் என்பவனை நீங்கள்தான் கவுன்சில்pங் செய்யவேண்டியிருக்கிறதையிட்டு நான் மிக மிக மனம் வருந்துகிறேன’ அவர் உண்மையான வருத்தத்துடன அவளிடம் சொன்னார்.

‘என்ன இது, காமுகர்களுடனும், கற்பழிப்பு செய்தவனுடனும், கொலை செய்தவனுடனும் நான் கவுன்சிலின் செய்வது முதற்தடவை அல்லவே’ மைதிலி தன் முகத்தை முட்டும் அவரது சிகரெட் புகை ஒதுக்கியபடி அவருக்குச் சொன்னாள்.

”ஆனால்..மைக்கல் ஒரு இனவாதி’ மிஸ்டர் பரட் அவசரமாகச் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டார். அவரது டென்ஸன் ஏனென்று அவளுக்குப் புரிந்தது.

அவள் கொஞ்ச நேரம் மவுனமாக இருந்தாள் அவளது வேலை கவுன்ஸிலிங். மூடிய அறையில்,தனியாக இருந்து கொண்டு இந்தப் போதை மருந்துக்கு அடிமையானவர்களின் பேச்சுக்களைக் கேட்கவேண்டும்.ஒரு ‘இந்தியப் பெண்மணி(?)’, வெள்ளையினவாதியுடன் ஒரு தனி அறையில் அமர்ந்து கொண்டு கவுன்ஸிலிங் செய்வது ஆபத்தில்லையா?

‘பயமாக இருக்கிறதா?’ மிஸ்டர் பரட் நேரடியாக இவளிடம் கேட்டார். மைக்கலுக்குக்; கவுன்ஸிலிங் செய்யப் பயமென்று இன்று தப்பலாம். இன்னொரு நாளைக்கு,மைதிலி டியுட்டிக் கவுன்சிலராக இருக்கும்போது இன்னொரு இனவாதி வரலாம்,தட்டிக்கழிப்பது அவளின் உத்தியோக லடசணமல்ல.

‘இல்லை..எதற்கும் முகம் கொடுப்பதுதானே இந்த வேலையின் தாரக மந்திரமே இல்லையா?’ தனது பயத்தையும் தயக்கத்தையும் அவருக்குக் காட்டாமல் அவள் பதில் சொன்னாள்.

”நான் மைக்கலுக்கு உங்களைப்;பற்றிச் சொல்லியிருக்கிறேன்..நீங்கள் ஒரு இந்தியப் பெண்மணியென்றும் உங்களுடன் கவுரவமாகப் பழகவேண்டும் என்று அவனுக்குச் சொல்லியிருக்கிறேன்’ மிஸ்டர் பரட்,தனது கடைமையைச் சரியாகச் செய்த தோரணையில் அவளுக்குச் சொல்லிக்கொண்டு இன்னொரு சிகரெட்டைப் புகைக்கத் தொடங்கினார். அவள் தனது கேஸ் பைல்களுடன் அவ்விடத்தை விட்டு வெளியேறினாள்.

மைக்கல் டைனிங் அறையில் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். மைதிலி அங்குபோனதும் ‘குடமோர்ணிங் மைதிலி’ என்று அந்த நிலையத்திலிpருக்கும் வாடிக்கைக்காரர்களும் சக உத்தியோகத்தர்களம் சொல்லிக் கொண்டார்கள்.

புதிதாக வந்த மைக்கல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். அவன் மிகவும் உயர்ந்து ஓங்கி வளர்ந்த ஆங்கிலேயன். பொன்னிற உடலும பூனைக் கண்ணளுடனும் மைதிலியை ஏறிட்டுப் பார்த்தான்.பெரும்பாலான ஆங்கிலேய இனவாதிகள் மாதிரி அவன் மொட்டைத்தலையுடன் காணப்படவில்லை. போதையெடுப்பதால் ஒளியிழந்த கண்களுக்கப்பால் ஒரு தேடல் தெரிந்தது.

மைதிலி ‘குட்மோர்ணிங் மைக்கல்’என்றாள் அவன் பதிலுக்கு ‘குடமோர்ணிங்’என்று மெல்லமாகச் சொன்னான்.

‘நான் உனது கவுன்சிலர்..’ மைதிலி தன்கையை அவனிடம் நீட்டினாள். அவன் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் தயக்கத்திலும் முக மாற்றத்திலும்; தெரிந்தது. அவள் நீட்டிய கரங்களைப் பார்த்தான். அவனது வலது கையில் முள்ளுக் கரண்டியிருந்தது. அதை வைத்து விட்டு அவளிடம் கைகுலுக்கினான்..அவன் கை மிகவும் முரட்டுத்தனமாகவிருந்தது. முழங்கை வரைக்கும் பல தரப்பட்ட மச்சங்கள் காட்சியளித்தன.பாம்புகள்,முதலைகள் அத்துடன் கோரமான முகத்துடன் ஒரு நாய் என்பன அந்த மச்சக் குவியலிற் தெரிந்தன்.

நாய் உருவ மச்சத்தை உற்றுப்பார்த்த மைதிலி ,’அது என்ன உன்னுடைய ஆசைப் பிராணியா?’ என்று கேட்டாள். ஆங்கிலேயர்கள் சொந்த மனிதர்களை விடத் தங்களின் செல்லப் பிராணிகளான நாய் பூனையை மிகவும் அதிகமாக நேசிப்பவர்கள்.

அவன் திடுக்கிட்டு அவளை உற்று நோக்கினான். மற்றவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். அவளின் சக உத்தியோகத்தர்கள் கரலைனும் ஜேம்சும் கிண்டலான புன்னகையைத் தங்கள் முகங்களில் தவழ விட்டார்கள். அவளின் அப்பாவித்தனம் அவர்களுக்கு வேடிக்கையாகவிருந்தது.

‘உங்களுக்குத் தெரியாதா இது என்ன அடையாளம் என்று?; மைக்கல் உண்மையான ஆச்சரியத்துடன் மைதிலியைக் கேட்டான்.தனக்குத் தெரியாது என்பதைத் தலையாட்டுதல் மூலம் தெரிவித்தாள் மைதிலி.

‘அது..அது..’அவன் தயங்கினான. அவள் அவனது தயக்கத்தை அவதானித்தாள்.

‘இது இதுதான பிரிட்டிஷ் நாஷனல் பார்ட்டியின் சின்னம்.இந்த நாய்தான் பிரிட்டிஷ் புல்டோக்’ அவன் குரல் தடுமாறச் சொல்லி முடித்தான்.

அது வெள்ளையினவாதிகளின் அரசியற் கட்சியான பிரிட்டிஷ் நாஷனல் பார்ட்டியின் சின்னம்!

அதைப் பெருமையாக அவன் கையிற் பெருமையுடன் பதித்திருக்கிறான!;.

அவள் சில வினாடிகள் மவுனமானாள்.

அந்தப் பதினேழுவயது முஸ்லிம் பையனைத் தாக்கிக் கண்ணைக் குருடாக்கியவர்களில் இவனும் ஒருத்தனா ?

மூன்று குழந்தைகளின் தந்தையான முஸ்லிம் மனிதரைத் தாக்கிக் கொலை செய்ததில் இவனுக்கும் பங்குண்டா?

இன்று அவன் வெறுக்கும் ஆசிய சமுதாயத்தைச் சோந்த ஒரு பெண்ணிடம் உதவி பெற்று சீர்திருத்த வாழ்க்கையைக் காண வந்திருக்கிறான்.

இருவரும் ஒன்றாக வேலை செய்யமுடியுமா?

அவள் பயமில்லாமல் அவனுடன் தனியாக இருக்கலாமா?

அவள் மற்றவர்களுக்கு உதவி செய்யும் வேலையிலிருப்பவள்,

பயமோ வெறுப்போ பாகுபாடோ அவள் தொழிலில் தலையிடக் கூடாது.

‘ஐ ஹோப் வீ வில் வேர்க் ரு கெதர் மைக்கல்;’ அவள் புன்முறுவலுடன் மைக்கலுக்குச் சொன்னான்;.

அவன் தலையாட்டினான்.

டைனிங் அறை காலியாகிக் கொண்டிருந்தது.

மைதிலி தனக்கு ஒரு தேனிர் ஊற்றிக் கொண்டாள்.மைக்கல்,மைதிலியை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டான்.

மிஸ்டர் பரட்,பார்பரா டானியல் என்ற பதினாறு வயதுப்பெண்ணை அழைத்துக்கொண்டு டைனிங் அறைக்கு வந்தார். அவள் சூயிங்கம் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். முகத்தில் ஒரு அலடசியம்.அவளது வாய் ஓயாமல் அசைந்து கொண்டிருந்தது.

‘ஹலோ பார்பரா..குட்மோர்ணிங்’ மைதிலி பார்பராவைப் பார்த்துச் சொன்னாள் பார்பரா,பதிலுக்கு’குட்மோர்ணிங்’ என்று சூயிங்கம் துவைந்த பதிலைச் சொன்னாள்.

‘பசிக்கவில்iயா?’ பார்பராவிடம் கேட்டாள் மைதிலி.

‘பசிக்கல்ல’பார்பரா பட்டென்று பதில் சொன்னாள்.

போதை வஸ்து எடுப்பவர்கள் மற்றவர்களை மதிக்காமல் நடப்பதும் பதில்களை ஏனோதானோ என்று தூக்கியெறியும் பாணியிற் பேசுவதையும் மைதிலி பல தரம் கண்டிருக்கிறாள். மைதிலி வேறு ஏதும் கேட்க முதல் பார்பரா டி.வி இருக்கும் அறைக்குள் போய்விட்டாள்.டி.வியில் சீக்கியர்களின் கோயில் ஒன்று வெள்ளையினவாதிகளாற் தாக்கப் பட்ட செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள்:

மைதிலி மைக்கலுடன் பேசிக்கொள்ள அதிக நேரமிருக்கவில்லை. அவளுக்குச் சரியான வேலை. அத்துடன் மைக்கல் மூன்று கிழமைகள் இந்த சீர்திருத்த நிலையத்தில் இருக்கப்போகிறான்.ஆறுதலாவும் கவனமாகவும் அவனுடன் தொடர்பை வளர்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.அவனுடன் ஓடும் புளியும்போல் பழகி அவளைப்புரிந்து கொள்வதால் அவனுக்கு உதவி செய்வது இலகுவாகவிருக்கும் என்று முடிவுகட்டினாள்.

ஐந்தாம் நாள்:

‘எக்ஸகியுஸ் மி’ குரல் வந்த தசையைத் திரும்பிப்பார்த்தாள் மைதிலி.மைக்கல் இரத்தம் வழியும் தனது இடது விரலைப் பிடித்துக்கொண்டு மைதிலியின் ஆபிஸ்வாசலில் நின்று கொண்டிருந்தான்.ஆப்பிள்ப் பழம் சீவும்போது விரலிற் காயம் வந்ததாம்.

‘முதலுதவியறையில் யாருமில்லையா?’

மைதிலி அவனைக்கேட்டாள்.

அவன் அங்கு யாருமில்லை என்று சொன்னான். மைதிலி அவனைக்கூட்டிக்கொண்டபோய் டெட்டோலால் காயத்தைக் கழுவினாள்.

‘நீங்கள் பிலாஸ்டிக் கையுறைபோடாமல் என் இரத்தத்தைக்கழுவுகிறீர்கள’ மைக்கல் பதறிக்கொண்டு சொன்னான்.

‘கையுறை போட்டிருக்கத்தான் வேண்டும் ஆனாலும் நான் கவனமாகக் கழுவுகிறேன் எனது கையில் எந்த இரத்தமும் படவில்லை’ மைதிலி ஆறதலாகப் பதில் சொல்கிறாள்.

‘எங்கள் பேர்வழிக்கு எயிட்ஸ் இருக்குமென்று உங்களுக்குப் பயமில்லையா’

‘இருந்தால என்ன, நான் கவனமாகத்தானே உன் காயத்தைக் கழுவினேன். இரத்தம் வெளியே பாயுமே தவிர உள்ளே எகிறிப்போகாது,உன்னுடைய இரத்தம் என்னுடைய இரத்தத்தடன் ;கலந்து எனக்குப் பிரச்சினை தருவதற்கு எனது கைகளில் எந்தக் காயமுமில்லை’ அவளின் மறுமொழி அவனை ஆச்சரியப்படுத்தியிருக்கவேண்டும் அவளை வினோதமாகப் பார்த்தான்.

‘சரி கவனமாக உன்னுடைய காயத்தைப்பார்த்துக்கொள் மூன்று நாளைக்கத் தண்ணீர் படக்கூடாது’

மைதிலி திரும்பிப்போக ஆயத்தமானாள்; மைக்கலின் கையிலிருந்த பிரிட்டிஷ் புல்டோக் மச்சம் மைதிலியை முறைத்தது. அவள் தனது மச்சத்தை உற்றுப் பார்ப்பதை அவன் கவனித்துத் தன் கைகளைத் தன் முதுகுக்குப் பின் தள்ளினான்.

‘ உங்களுக்குக குழந்தைகள் இருக்கிறார்களா’ மைக்கல் சட்டென்று கேட்டான்.

யாரும் இவளிடம் குழந்தைகள்பற்றிப்பேசினால் உருகிப் போவாள்.

‘இருக்கிறார்கள் மூத்த மகன் உன்னுடைய உயரத்திலிருப்பான்’அவள் மலர்ந்த முகத்துடன் சொல்கிறாள்.

‘நீங்கள் மிகவும் கருணை மனம் படைத்தவர்’மைக்கலின் குரல் தடுமாறுகிறது.

‘ எனது கடைமையைத்தான் செய்தேன்’

‘எனக்குத் தாயில்லை..’மைக்கல வாசலில் நின்று கொண்டு சொன்னான்.அவன் திடிரென்று ஏன் இதைச் சொல்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை.

கவுன்ஸிலிங் அறையில் அவனுடைய சுயசரிதத்தை மைதிலி இன்னும் கேட்கத் தொடங்கவில்லை.நாளைக்குத் தொடங்கலாம் என்று யோசித்திருக்கிறாள்.

‘நீpங்கள்தான் நான் முதற்தரம் பேசிய,பழகிய இந்தியப் பெண்மணி’மைக்கலின் குரலில் ஒரு கனிவு.அவன் சட்டென்று அவன் முகத்தை மூடிக்கொண்டான். மைக்கல் அழுகிறான் எனபது தெரிந்தது.

ஏன் அழுகிறாய் என்று அவள் கேட்கவில்லை. கொஞ்ச நேரத்தின்பின்’ ஐயாம் சாரி’ என்றான். ‘அழுவது நல்லது.மனப்பாரம் குறையும்’ அவள் தாய்மையுடன் சொன்னாள்.

பாவம் தாயில்லாக் குழந்தை என நினைத்துக்கொண்டு நடந்தாள்.

பன்னிரண்டாம் நாள்

மைக்கல் தன் சரித்திரத்தை மைதிலிக்குச் சொல்லத் தொடங்கி மூன்று நாட்களாகி விட்டன.அவன்,தான் ஒரு அனாதை என்றும்,தன்னை ஒரு குடும்பம் தத்தெடுத்து வளர்த்தாகவும், தத்தெடுத்த தாய் மைக்கல் ஆறுவயதாக இருக்கும்போது இறந்து விட்டதாகவும் அதன் பின் தனது வாழ்க்கை நரக உலகமாகி விட்டதாகவும் சொன்னான்.

ஓரு கவுன்சிலரின் கடைமையுடன் தன்னிடம் வந்து தங்கள் துயர் சொல்வோரின் பேச்சை அமைதியாகக்கேட்டாள்.. கவுன்ஸிலர்ஸ் என்பவர்கள்,தங்களிடம் வருபவர்களைக் குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர்களுமில்லை, தண்டனை கொடுக்கும் நீதிபதிகளுமில்லை.

தாய் தகப்பன் அன்பு தெரியாமல் வளர்ந்தவர்களெல்லாம் அந்த விரக்தியில் மற்ற அப்பாவிகளை அடிக்கவும் துன்புறுத்தவும் தொடங்கினால் உலகம் தாங்குமா? அவள் அதை அவனிடம் கேட்கமுடியாது.

‘நான்,அப்பாவிகளான பாகிஸ்தானிய,இந்திய,பங்களதேசி மக்களை அடித்ததும் இம்சை செய்ததும் மிக மிக கொடுமையானது மட்டுமல்ல,இழிவான செயலாகவும் என்று இப்போது நினைக்கிறேன’ மைக்கல், மைதிலியைத் திருப்திப்படுத்தச் சொல்லாமல், இதுவரை தான் செய்த கொடுமைமளுக்குத் தன்னை நொந்து கொள்கிறான் என்பது அவனின் குரலிற் தெரிந்தது.

‘தயவு செய்து என்னைத் திருப்திப்படுத்த எதையும் சொல்லவேண்டாம் மைக்கல். எங்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து..” மைதிலி ஆதரவுடன் சொன்னாள்.

மைக்கல் மைதிலியை நிமிர்ந்து பார்த்தான். ‘தயவு செய்து என்னை நம்பு’ என்ற பாவம் அவன் பார்வையில் தவழ்ந்தது. அந்த அறையில் அவர்களைத் தவிர யாரும் கிடையாது. அவனின் பெருமூச்சு அவளுக்குக் கேட்டது.

‘நான் ஏன் அப்படிக் கொடியவனாக நடந்தேன் என்று நீங்கள் கேட்கவில்லையே’அவள் அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்காமல் அவனைப் பார்த்தாள்.ஒரு குழந்தைபோல் அவன் மைதிலி முன்னால் உட்கார்ந்திருந்தான்.

கொஞ்ச நேர அமைதியின்பின் ‘நீ உன்னைப்பற்றிய தகவல்களைச் சொன்னால்,அதன்மூலம் நான் உனக்கு ஏதும் உதவி செய்ய முடிந்தால் நல்லது’.

‘ஏன் மனிதர்கள்,தங்கள் வாழ்க்கையில் பாதை தவறி,தடம்மாறித் தடுமாறுகிறார்கள?’அவன் குரலில் இவளிடமிருந்து நல்ல பதில் வரவேண்டுமென்ற நம்பிக்கை தொனித்தது.

‘மைக்கல், ஒவ்வொருத்தர் வாழ்க்கையையும் அவரவர்கள்தான் நிர்ணயித்துக்கொள்கிறோம.;.அதை நிர்மாணிப்பதற்கு மனிதர்களுக்கு அத்திவாரமாகவிருப்பது அவர்களின்; ஆரம்ப வாழ்க்கை.தாய் தகப்பன், படிப்பு,சுற்றாடல்,சூழ்நிலை,என்று பல தரப்பட்ட பரிமாணங்களில் ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. நல்ல சூழ்நிலை இருந்தால் எந்த மனிதனும் தன் வாழ்க்கையைத் திடமாக்கிக் கொள்வான் என்று நினைக்கிறேன்’

‘ஒரு நாட்டில்,ஒரு சமுதாயத்தில்,நல்ல சூழ்நிலை,வாழ்க்கையின் அடிமட்டத்திலிருப்பவர்களுக்கு உண்மையாகவே உதவவேண்டும் என்ற மனப்பான்மை இருந்தால் இனவாதம் இருக்கும் என்று நம்புகிறாயா’?

மைக்கல் என்ற ஆங்கிலேயக் கிரிமினல்,மைதிலி என்ற ‘இந்தியத்’தாயைக்கேட்டான்.

பிரித்தானியாவில் மிகப்பிரச்சினையாகவிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமையின் மட்டத்திலிருக்கும் ஆங்கிலேய வாலிபர்களை, கடை கண்ணி வைத்துப் பிழைக்கும் ஆசிய நாட்டு மக்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது என்பதும்அதனால் இனவாத அடிப்படையில் அப்பாவி ஆசிய நாட்டார் தாக்கப் படுவதும் பலரறிந்த விடயம்.

ஓரு நாட்டின் பொருளாதார நிலைக்கும் ஒரு சாதாரண மனிதனின் சீரழிந்த வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு அவளுக்குப் புரிந்தது.

அவனது,வாழ்க்கை சீரழிந்ததற்கு அதுமட்டும்தான் காரணமாகவிருக்குமென்று அவளால் நம்ப முடியவில்லை.

‘நான் உண்மையாகவே திருந்த முயற்சிக்கிறேன்..என்னை நம்புவீர்களா மைதிலி?’

பாம்பு கடிக்க மாட்டேன் என்பதை நம்பலாமா?

‘மைக்கல், என்னை நம்புவதோ நம்பாமல் விடுவதோ என் கடைமையல்ல,நீ திருந்த முயன்றால் அதற்கு உதவி செய்வது என் கடைமை,கண்டபாட்டுக்குத் திரியாமல் நிரந்தரமாக ஒரு வீட்டில் வாழ விரும்பினால் சோசியல் சேரிவிஸ் மூலம் அந்த உதவியைச் செய்து தருகிறேன்,ஏதும் வேலை செய்ய விருப்பமென்றால் எம்ப்லோய்மென்ட் டிப்பார்ட்டைப்போய்ப் பார்க்க அப்போயினட்மென்ட் எடுத்துத் தருகிறேன்….’மைதிலி சொல்லி முடிக்க முதல் அவன் அழத் தொடங்கி விட்டான்.

‘நம்புங்கள், தயவு செய்த என்னை நம்புங்கள்,நான் நல்லவனாய் மாறுவேன் என்பதை உங்கள் வாயால் சொல்லுங்கள்’மைக்கலின் முகம் சிவந்து,கண்ணீர் வழிந்தேடிக்கொண்டிருந்தது.

மைதிலிக்குத் தர்ம சங்கடமாகவிருந்தது.

இதுவரையும் அவனை ஒருத்தரும் உண்மையான அன்புடன் அணுகவில்லை என்பது அவன் துயரில் வெளிப்பட்டது.

‘சின்ன மீன்களைப் பெரியமீன்கள் சாப்பிடும்…….’மைக்கல் ஏதோ சொல்லத் தொடங்கிவிட்டு மைதிலியைப் பார்த்தான். ‘நான் ஒரு காலத்தில் யாருமற்ற அனாதை…….’ தொடர்ந்து அவனாற்பேச முடியவில்லை. விம்மினான்.

‘ஏன் போதை வஸ்துக்களுக்கு ஆளாகினேன்,ஏன் அப்பாவி வயோதிபர்களான இந்திர்களைத் தாக்கினேன் என்பதெல்லாம் எனது வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவங்களின் எதிரொலி,என் மனதில் ஆழ்ந்து கிடந்து என்னை வதைக்கும் வேதனையை மறக்கப் போதை வஸ்துக்களை நாடினேன்.’

அவன் வார்த்தைகள் மடை திறந்த வெள்ளம்போல் கொட்டின.அவன் மனதில் ஒட்டிக் கிடக்கும் அழுக்குகள் அத்தனையும் அவன் கண்ணீருடன் சேர்ந்து வெளியேறட்டும்.

மைதிலி மவுனமாகவிருந்தாள்.

மைக்கல் அந்த சீர்;திருத்த நிலையத்திற்கு வந்த இரண்டாம் கிழமையின் நடுப்பகுதியில்,மைதிலியும் மைக்கலும் ஒரே மேசையில் இருந்து சாப்பிடுவதை அந்த நிலையத்திலிருந்த அத்தனைபேரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.

வீpட்டில் செந்தூரனின் தடிமல் சுகமாகிவிட்டது. மகனைப்பற்றிய மன உளைச்சலின்றி மைதிலி வேலைக்குப் போனாள் போகும் போது ‘கார்டியன்’ பத்திரிகை வாங்கிக் கொண்டாள்.

அந்தப் பத்திரிகை பல விடயங்களை அள்ளிப் போட்டிருக்கிறது.

ஜேர்மனி ஒன்றாக இணைந்தபின் கிழக்கிலிருந்து மேற்கு ஜேர்மனிக்க வந்த கிழக்கு ஜேர்மனியர்கள் அங்கு அகதிகளாக அல்லது வேலை தேடிவந்த அன்னிய நாட்டாரைத்தாக்குகிறார்களாம்.

பொஸ்னியாவில் முஸ்லிம்கள் படுபயங்கரமாகக்கொலை செய்யப் படுவதை நாகரீகமடைந்த மேற்குலகம் மவுனமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

கிழக்கு லண்டனில் இன்னுமொரு ஆசிய நாட்டான் நையப் புடைக்கப் பட்டுவிட்டான்.

இலங்கையில்,யாழ்ப்பாணத்தில் தனது நாட்டு மக்கள் என்றும் பாராமல், அவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை விமானங்கள் குண்டுகளைப் பொழிpந்து தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கின்றன.

மைதிலி பெருமூச்சுடன் வேலைக்குப் போனாள். மைக்கலின் கேஸ் பற்றிய தனது றிப்போர்ட்டை அவள் எழுதி முடித்துவிட்டாள்.

இருபதாம் நாள்:

மைக்கல் நாளைக்கு இந்த நிலையத்தை விட்டுப்போகிறான்.மைதிலியும் மைக்கலும் கவுன்சிலிங் அறையில் கடைசியாகச் சந்தித்துக் கொண்டார்கள்.

‘நீங்கள் என்னை அன்புடன் கவனித்துக்கொண்டதற்கு எனது நன்றிகள்’மைக்கல வித்தியாசமான மனிதனாகத் தெரிந்தான்.மைதிலி,தன்னை ஒரு நல்ல வழியில் வாழ மைதிலி வழகாட்டியிருக்கிறாள் என்றான்.தன்னை அப்படி மாற்றியதற்கு நன்றி சொன்னான்.

‘நீங்கள்தான் நான் என் வாழ்க்கையில் பேசிய பழகிய முதல் இந்தியப் பெண்மணி.உங்கள் சமுதாயம் உங்களைப்போல் கருணையுள்ளதானால் அந்தச் சமுதாயத்துக்கு நான் செய்த கொடுமைகளுக்கு நான் மிக மிக வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்றான்.

‘வெளியிற் சென்றதும் உன்னைப்போற் திண்டாடும் மற்றவர்களையம் உன்னால் முடிந்தால் திருத்தப்பார் மைக்கல்”மைதிலி அன்புடன் அவன் தலையைத் தாய்மையுடன் தடவி விட்டாள்.

அவன் அவள் கைகளை இறுக்குப் பிடித்துக்கொண்டான்.

‘மைதிலி,இந்த உலகத்தில் பலர் மனச்சாட்சியைக்கொலை செய்து விட்டுப்; பெலவீனமானவர்களைத்தங்கள் திருப்திக்கும் சந்தோசத்துக்கும் பாவித்துக் கொள்கிறார்கள்.குழந்தைகளையும் ஏழைகளையும் கூட இவர்கள் மனிதத் தனமையுடன் பார்ப்பதில்லை.’

மைக்கல் குரலில் ஆவேசம். மைதிலி மவுனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவன் தொடர்ந்தான்.

‘நான் என்ன பிறக்கும்போது இனவாதியாகவா பிறந்தேன்?.@எனது வாழ்க்கையின் அனுபவங்கள் என்னை இப்படியாக்கியது. எனக்கு நடந்த கொடுமைகளைத் தாங்காமல் எனக்கு முன்னால் அகப்பட்ட அப்பாவிகளைத் தாக்கினேன்.

அனாதையான என்னைத் தத்தெடுத்த தகப்பன்,தத்தெடுத்த தாய் இறந்ததும் என்னைத் தன் பாலியல் தேவைகளக்குப் பாவித்துக் கொடுமை செய்தான். ஏழுவயதில் உலகம் தெரியாத வயதில்,அன்பு காட்டவேண்டியவன் இருண்ட அறையில் செய்த கொடுமைகளை எப்படி மறப்பேன்?

அந்தக் கொடுமைகளை மறக்க இளமையிலேயே யாரையோ அடிப்பேன் பள்ளிக் கூடத்தில் ஆசியப் பையன்களை வதைத்தேன் பாடசாலையிலிருந்து நீக்கப் பட்டேன். வயது வந்ததும் வழியில் காண்பவர்களைத்; தாக்கினேன்.இந்த உலகத்தில் தங்கள் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்ட என்போன்றவர்களின் பிரச்சினையைத் தீர்க்க இந்த சமுதாயம் என்ன செய்கிறது?இளவயதிலியே என் பிரச்சினைககுக் காரணத்தைக் கண்டறிந்து என்னைப் போலவர்களுக்கு உதவி செய்தால் என்னைப் போன்ற இனவாதிகள் உருவாக மாட்டார்கள்.என்னைபபோல் ஆயிரமாயிரம் இளைஞர்கள் பல காரணிகளால் போதை வஸ்துக்கு ஆளாகிறார்கள்.பல காரணிகளால் இனவாதிகளாகிறார்கள். அவர்களெல்லாம் தங்களைத் திருத்திக் கொள்ள உங்களைப்போல் ஒரு மைதிலியைச் சந்திக்க முடீயுமா?’

– வீரகேசரி வாரவெளியீடு 6.2.94

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *