அவனின் நாணயமே அவனுக்கு எதிரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 6,310 
 
 

காலையில் பேப்பரை விரித்த எனக்கு ஒரு செய்தியை பார்த்தவுடன் வியப்பாய் இருந்தது. போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார், என்று அவரின் படத்தை போட்டிருந்தார்கள். அவரை பார்த்தவுடன் எனக்கு அன்று நடந்த நிகழ்ச்சி நினவுக்கு வநதது.

பள்ளி முடிந்தவுடன் நண்பன் “கை பேசியில்” அழைத்தான். நம்ம ஸ்கூல் அறிவியல் மாஸ்டர் மனைவிக்கு ஆண் குழந்தை இப்பொழுதுதான் பிறந்தது,என்று நியூஸ் வந்திருக்கிறது. நீ வந்தால், நாம் இருவரும் பார்த்துவிட்டு வந்து விடலாம்.

நான் ஹாஸ்பிடல் வாசலில் காத்திருக்கிறேன், எப்படி வரவேண்டும் என்று வழியும் சொன்னான்.வீட்டுக்கு செல்லும் யோசனையில் வண்டியை எடுத்தவன் ஹாஸ்பிடலை நோக்கி வண்டியை திருப்பினேன்.

வேகமாக வந்த இரு சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்திய அந்த காவல் அதிகாரி “வண்டியை ஓரமாய் நிறுத்துங்க” என்று சொன்னார். வண்டியை நிறுத்த யோசித்தவனின் முகத்தை பார்த்த அந்த அதிகாரி ஏன் சார் நிறுத்தமாட்டீங்களா? என்று மெல்ல குரலை உயர்த்த முயற்சிக்க, அப்படியே ஏதாவது பேசி சமாளித்து போய் விடலாம் என்று நினைத்த எனக்கு, மரியாதை போய்விடும் என்ற பயத்தில் வண்டியை மெல்ல ஓரங்கட்டினேன்.

வண்டியின் அருகில வந்த அதிகாரி ஏன் சார் படிச்சவங்களா தெரியறீங்க, இது “ஒன் வே” அப்படீன்னு தெரிஞ்சும் வர்றீங்க? பிடிச்சா போலீஸ் பிரச்சினை பண்ணுதுண்ணு சொல்ல ஆரம்பிச்சுடுறீங்க, சொல்லிக்கொண்டே வந்தவரிடம் சார் நான் கவர்ன்மெண்ட் சர்வண்ட், மெல்ல பேச்சு கொடுத்தேன், அதுனால என்ன சார், இந்த வழியிலே வந்தது குத்தம், அதுல கவர்மெண்ட் என்ன பிரைவேட் என்ன?

இந்த தடவை மன்னிச்சுங்குங்க சார், நான் பக்கத்துல இருக்கற ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கேன், அவசரமா ஹாஸ்பிடல் போக வேண்டியிருந்தது, இது வழியா போனால சீக்கிரம் போயிடலாம்னு நண்பன் சொல்லியிருந்தான், ஆனா இது “ஒன் வே” அப்படீன்னு சொல்லல,ப்ளீஸ் என்று கெஞ்சலாய் பார்த்தேன்.

அவர் சிறிது நேரம் என் முகத்தை பார்த்து விட்டு ஏன் சார் வாத்தியாரா இருக்கீங்க, ஒருத்தர் சொல்லலயில்லென்னாலும் இந்த பாதை “ஒன் வே” அப்படீன்னு போர்டு வச்சிருக்கமே
சார், அதை படிச்சிருக்கணும்ல, என்ற கேள்விக்கு நான் சரியா மாட்டிக்கிட்டோம் இந்த ஆளிடம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

சார் என்னுடைய தப்புதான் சார், நீங்க வேற ஏதாவது எதிர்பார்க்கிறீங்களா என்று மெல்ல தணிந்த குரலில் பேசி சட்டை பைக்குள் கையை விட்டேன்.என்னையே சிறிது நேரம் பார்த்தவர், முதல்ல சட்டை பைக்குள்ள இருந்து கையை எடுங்க சார். இந்த மாதிரி செஞ்சு, போலீஸ் லஞ்சம் வாங்கறான், அப்படீன்னு பேப்பர்ல எழுதறது, இப்படித்தானே சார் நடக்குது.ஏன் சார் நான் கேட்கறேன் போலீஸ் கேட்காமலேயே ஒருத்தர் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்தாரு அப்படீன்னு ஏதாவது நியூஸ் வருதா சார்?

இந்தக்கேள்வி எனக்கானது போல் இருந்ததால், நான் எனது வாயை மூடிக்கொண்டேன்,மன்னிச்சுங்குங்க சார்,என்று முடித்துக்கொண்டேன்.

இது தான் கடைசி தடவை இனிமேல் இந்த மாதிரி வராதீங்க, அப்படி வந்துட்டா உடனே லஞ்சம் கொடுக்க முயற்சி பண்ணாதீங்க, நான் தப்பு பண்ணிட்டேன், நீயும் தப்பு பண்ணு அப்படீங்கறமாதிரி இருக்கு, நீங்க செய்யறது.சொன்னவரை அதிசயமாய் பார்த்துக்கொண்டே வண்டியை எடுத்து கிளம்பினேன்.

இந்த காலத்தில் இப்படி ஒருத்தரா? ஆச்சர்யத்துடன் என்னைப்பற்றி கொஞ்சம் வெட்கப்பட்டுக்கொண்டேன்.

எனக்கு அவரை பார்க்க வேண்டும் போல் இருந்தது. கண்டிப்பாக தவறு செய்திருப்பார் என்ற எண்ணம் வரவில்லை, ஏதோ ஒரு சூழ்நிலை,செய்ய தூண்டி இருக்கலாம் என் மனம் நினைத்தது.ஆனால் எண்ணியபடி அவரை போய் பார்க்க முடியவில்லை, வேலைப்பளு காரணமாக நானகைந்து நாட்கள் ஓடிவிட்டன. அதற்குள் இந்த நிகழ்ச்சி மனதை விட்டு மறைந்து விட்டது.

அன்று காய்கறிகள் வாங்க கடையில் நின்று கொண்டிருந்தேன், கடையில் எனக்கு முன்னால் கூட்டம் நின்று கொண்டிருந்தது. இப்பொழுதெல்லாம் காய்கறிக்கடையில் ஆண்கள் கூட்டம்தான் அதிகம் என்று மனதில் எண்ணியபடி எனக்கு முன்னல் காய்கறிகளை பொறுக்கி, எடுப்பவரை கவனிக்க ஆரம்பித்தேன். இந்த காய் என்ன விலை? அந்த காய் என்ன விலை? என்று அதிகாரமாய் கேட்டி ஒவ்வொரு காய்களிலும், அரை கிலோ,கால் கிலோ, என வாங்கி தான் கொண்டு வந்த பையில் போட்டுக்கொண்டிருந்தார். சரிப்பா மொத்தமா எவ்வளவு ஆச்சு? என்று கேட்டார். கடைக்காரர் எழுபத்தி ஒன்பது ரூபாய் ஆச்சு சார் என்று சொல்ல, இவர் பர்ஸில் தேடி எழுபத்தி ஐந்து ரூபாய் சில்லறையாக எடுத்து கொடுத்தவர், மீதி தொகைக்காக தனது பேண்ட், மற்றும் சட்டை பைகளை தடவி தேட ஆரம்பித்தார்.

பரவாயில்லை சார், அடுத்த முறை கொடுங்க சார் என்று சொல்ல,வேண்டாப்பா, நீயே நாளைக்கு போலீஸ்காரன் ஓசியில வாங்கிட்டு போறான் பாரு அப்படீன்னு சொல்லுவ?
சொல்லிவிட்டு கடைசியாக கிடைத்த பத்து ரூபாயை எடுத்து கொடுத்தவர், அப்பா கிடைச்சுடுச்சு, இந்தா, மிச்சம் கொடு, பஸ்ஸ¤க்கு வேணும் என்று அதிகாரமாய் கேட்டார். எனக்கு இவரின் குரல் பரீச்சயமாய் இருக்க சிறிது நேரத்தில் கண்டு பிடித்து விட்டேன்.

அட.. அன்னைக்கு என்னை “ஒன் வேயில்” பிடித்தவரல்லவா, இவரை பற்றித்தானே பத்திரிக்கையில் அப்படி போட்டிருந்தது, ஆனால் நேரில் எவ்வளவு கறாராக இருக்கிறார் என்று
மனசு சொல்ல அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள மனம் ஆசைப்பட்டது.

இருந்தாலும் செய்தித்தாளில் வந்ததைப்பற்றி கேட்க வேண்டியிருக்கும், அதனால் பேசாமல் இருப்பதே உத்தமம் என்று முடிவு செய்து கொண்டேன்.அவர் காய்கறிகள் வாங்கிவிட்டு நகர்ந்த பின் மெல்ல காய்கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்தேன். இப்ப காய் வாங்கிட்டு போனாரே அவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே, என்று மெல்ல இழுக்கவும், சார் அவர் “ட்ராபிக்ல” இருக்காரு சார், ரொம்ப நாணயமான மனுசன் சார், இங்க யார்கிட்டயும் பத்து காசு வாங்க மாட்டாரு சார், என்று சொன்னார், நான் அவரை பத்தி ஒருவாரத்துக்கு முன்னால ஒரு நியூஸ் வந்ததே,என்று கேட்டேன், நியூஸ் கரெக்ட்தான் சார், அவரோட நாணயம்தான் அவருக்கு எதிரி, மத்தவங்களுக்கும் இடைஞ்சல், அவங்க பண்ண ஏற்பாடு. அதுதான் சார் அந்த நியூஸ், இது அங்கிருந்த எல்லாத்துக்கும் தெரியும் சார்,இருந்தாலும் என்ன பண்ண? கேட்டுக்கொண்டே, வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

ஒருவர் நேர்மையாய் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அவருடன் பணி புரியும் சமூகம் கூட எந்தளவுக்கு துன்பபடுத்துகிறது என்று நினைத்தவண்ணம் காய்கறிகளை பொறுக்கி எடுக்க ஆரம்பித்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *