கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2014
பார்வையிட்டோர்: 18,781 
 
 

இலையுதிர்காலம் 1946. குவாமிங்தாங் படைகளுக்கெதிராக ஒரு சிறு தாக்குதல் நடத்துவதென்று எங்கள் கடலோரப் போர்ப் படையின் தலைவர் முடிவெடுத்ததுமே, போர்ப்படைப் பிரிவினருக்கு உதவவென்று எங்கள் நாடகக் குழுவிலிருந்து சிலர் அனுப்பப் பட்டனர். நான் பெண் என்பதாலோ என்னவோ, முதலுதவிப் பிரிவில் என்னை நியமிக்க தளபதி இறுதிக் கட்டம் வரை காத்திருந்தார். அன்றைக்கு மழை பொழிந்திருந்தது. வானம் வெறித்திருந்தும் கூட சாலைகள் இன்னமும் வழுக்கலாகவே இருந்தன. இருபுறமும் பயிர்கள் பசுமையாகவும் புதியதாகவும் வெயிலில் மின்னின. காற்றில் ஈரம் கலந்திருந்தது. எதிரிகளின் தொடர் குண்டு வெடிப்புகள் மட்டும் இல்லாவிட்டால், கிராமத் திருவிழாவுக்குப் போகும் வழி போல் உணர்ந்திருப்போம். முன்னால் நடந்தான் தூதுவன். எங்கள் இருவருக்குமிடையில் ஒரு டஜன் கஜதூரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். என் கால்கள் கன்னிப் போயிருந்ததால், எவ்வளவு முயன்றும் என்னால் அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போனது. கொஞ்சம் நிற்கச் சொன்னால், என்னைக் கோழையென தீர்மானிப்பானோ என்ற பயம். தனியாக என்னால் முகாமைக் கண்டுபிடிக்கவும் முடியாது. என்னை எரிச்சலூட்டினான்.

வேடிக்கை என்னவென்றால், அவன் பின்னந்தலையில் கண்கள் கொண்டவன் போலும். சட்டென்று தானே நின்றான். திரும்பி என்னைப் பார்க்கவில்லை. தலையைத் திருப்பாமல் நேராகவே முறைத்தபடியிருந்தான். அவனருகில் நடந்து நெருங்கியதுமே மீண்டும் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தான். மிகச் சரியாக மீண்டும் எங்கள் இருவருக்குமிடையில் ஒரு டஜன் கஜதூரம் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். எட்டிப் பிடிக்க முடியாமல் சோர்வால் திணறினேன். மெதுவாகப் பின் தொடர்ந்தேன். அதுவும் பரவாயில்லை என்று பட்டது. ஏனெனில், அவன் என்னை நெருங்கவும் விடவில்லை. என்னை அதிக தொலைவிலும் விட்டுவிடவில்லை. நான் வேகத்தைக் கூட்டினால் அவனும் வேகமாக நடந்தான். நான் இழுத்து மெதுவாக நடந்தால் அவனும் வேகத்தைக் குறைத்தான். விசித்திரம் என்னவென்றால், ஒருமுறை கூட என்னை அவன் திரும்பிப் பார்ப்பதை நான் பார்க்கவில்லை. அவனைப் பற்றி அறிய என்னில் ஆர்வம் பிறந்தது.

தலைமை முகாமில் அவன் முகத்தைக் கூட சரியாகப் பார்த்திருக்கவில்லை. உயரமான இளைஞனாக இருந்தான். பலங்கொண்டவனாகத் தோள்கள் காட்டின. முழங்கால் வரை நீண்ட வெளுத்த மஞ்சள் காலுறையும் சீருடையும் அணிந்திருந்தான். துப்பாக்கியுறையில் செருகப்பட்ட சுள்ளி எதிரிகளை ஏமாற்றும் வித்தைக்கென்பதை விட வெறும் அலங்காரத்துக்கென்றே தோன்றியது.

அவனுக்கு இணையான வேகத்தில் என்னால் நடக்க முடியாத நிலையில் என் பாதங்கள் வீங்கி வலித்தன. கொஞ்ச நேரத்துக்கு ஓய்வெடுப்போம் என்று கூவிக் கொண்டே எல்லைக் கல் மீதமர்ந்தேன். என் இருப்பை முற்றிலும் அலட்சியப் படுத்தியவன் போல எனக்கு முதுகைக் காட்டியவாறு இன்னொரு கல் மீதமர்ந்து கொண்டு துப்பாக்கியை முழங்கால்கள் குறுக்கே மடியில் வைத்துக் கொண்டான். இதெல்லாமே நான் ஒரு பெண் என்பதால் தான் என்று எனக்கிருந்த அனுபவத்தால் எனக்குத் தெரிந்தது. கூச்ச சுபாவம் கொண்ட வாலிபர்களிடம் இது தான் பெரிய பிரச்சனை. வேண்டுமென்றே அவனெதிரில் சலிப்புடன் சென்றமர்ந்தேன். வெகுளியான வட்ட முகங்கொண்டவனுக்கு பதினெட்டு வயதுக்கு மேலிருக்காது. என் அண்மை அவனை அஞ்ச வைத்ததோ. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு. மீண்டும் முதுகைக் காட்டி உட்காரவும் என்னை நேருக்கு நேர் பார்க்கவும் மிகத் தயங்கினான். முகத்தை நேராக வைத்துக் கொண்டு எங்கிருந்து வருகிறான் எனக் கேட்டேன். தொண்டையைச் செறுமிக் கொண்டு, “தியான்முஷன்”, என்றான்.

அட, எங்கள் ஊர்காரன் தானா நீ ?!

“ஊர்ல என்ன செஞ்சிட்ருந்த?”

“மூங்கில் தூக்குவேன்.”

விரிந்த தோள்களைக் கண்டேன். என் மனத்திரையில் பசிய மூங்கில் பரப்பொன்று விரிந்தது. ஒரு வாலிபன் நீலத் துணி போர்த்திய பரந்த தோள் மேல் மூங்கில் குறுத்துகளைத் தூக்கிக் கொண்டு மேலேறி நடக்க, குறுத்துகள் பின்புறக் கற்படிகள் மீதுரசின. அது எங்கள் கிராமத்தின் அன்றாடக் காட்சி. உடனே, எங்கள் ஊர்க்காரன் மீது எனக்கு ஈர்ப்பேற்பட்டது.

“என்ன வயசு?”, எனக் கேட்டேன்.

“பத்தொன்பது.”

“எப்ப ராணுவத்துல சேர்ந்த?”

“போன வருஷம்.”

“ஏன் சேர்ந்த?” வரிசையாகக் கேள்விகள் கேட்கத் தோன்றியது. அது உரையாடல் போலில்லாமல் விசாரணை போலமைந்தது.

“ராணுவப் படை கிராமத்தைக் கடந்து போனப்ப நானும் கூடவே வந்துட்டேன்.”

“உங்க குடும்பத்ல யார் யாரெல்லாம் இருக்காங்க?”

“அம்மா, அப்பா, ஒரு தம்பி, தங்கைகள், எங்க கூடவே வசிக்கற ஒரு அத்தை.”

“கல்யாணமாயிடுச்சா?”
“…”

ஒன்றுமே சொல்லாமல் திருதிருவென்று விழித்தான். கொஞ்சம் வெட்கமும் பட்டாற்போலிருந்தது. கண்களைத் தரையிலிருந்து எடுக்கவே இல்லை. கோணலாய்ச் சிரித்து வேகமாகத் தலையாட்டினான். “காதலி இருக்காளா?”, என்ற கேள்வி நுனிநாக்கு வரை வந்ததை அப்படியே விழுங்கிக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்துக்கு ஒன்றும் பேசாமல் அங்கே உட்கார்ந்திருந்த பிறகு, “நேரமாச்சி, கெளம்புவோம்”, என்று சொல்வதைப் போல வானத்தை நிமிர்ந்து பார்த்து விட்டு என்னையும் பார்த்தான். முதலுதவி முகாமை அடையும் போது மதியம் மணி இரண்டானது. போர்க் களத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த தொடக்கப் பள்ளியில் அமைத்திருந்தார்கள். முக்கோண வடிவில் இருந்தன ஆறு கட்டடங்கள். வகுப்புகள் நின்று கொஞ்ச காலமாகி விட்டததென்று முற்றத்தில் வளர்ந்து நின்ற புல்லின் உயரம் சொன்னது. நாங்கள் போய்ச் சேர்ந்த போது அங்கிருந்த ஊழியர்கள் காயத்திற்கு கட்டுப் போடவென்று வலைத் துணி ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அறைக் கதவுகள் நீக்கப்பட்டு செங்கற்கள் மீது வைத்து படுக்கைகள் அமைத்திருந்தார்கள்.

அப்போது, உள்ளூர் அரசாங்க ஊழியன் ஒருவன் உள்ளே வந்தான். இரவெல்லாம் வேலை செய்திருந்ததால் அவன் கண்கள் சிவந்திருந்தன. வெளிச்சத்திலிருந்து மறைத்துக் கொள்ள தனது துணித் தொப்பியின் கீழ் அட்டையை ஒட்டியிருந்தான். ஒரு தோளில் துப்பாக்கி தொங்கியது. மற்ற தோளில் ஓர் அடிக் கோல். ஒரு கூடை நிறைய முட்டையும் பெரிய சீஞ்சட்டியும் தூக்கிக் கொண்டிருந்தான். மூச்சிரைத்தபடி உள்ளே நுழைந்தவன் தண்ணீர் மடக்குகளுக்குக் இடையில், சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்த சோற்றுருண்டையைக் கடித்ததற்கிடையில், சாமான்களிருந்த நிலைக்கு மன்னிப்பு கேட்டவாறே எல்லாவற்றையும் கீழே வைத்தான்.

சொன்னது புரியாமல் இருந்தாலும் எல்லாவற்றையும் அவன் செய்த வேகத்தைக் கண்டு வியந்து போனேன். ஏதோ மெத்தையை இரவல் வாங்கப் போவதாகச் சொன்னது மட்டும் தான் விளங்கியது. இராணுவ மெத்தைகள் இன்னும் வந்திருக்கவில்லை என்றும் காயம் பட்டு உதிரம் இழக்கும் போர் வீரர்களுக்கு மேலும் அதிகம் குளிரும் என்பதால் கிராம மக்களிடமிருந்து மெத்தைகள் இரவல் வாங்கவிருந்தனர் என்றும் அங்கே இருந்த மற்ற ஊழியர்களிடமிருந்து அறிந்தேன். ஒன்றுமே இல்லாததற்கு ஒன்றோ இரண்டோ டசன் மெத்தைப் போர்வைகளாவது கிடைத்தால் நன்றாக இருக்கும். ஏதோ ஒரு விதத்தில் உதவும் ஆர்வத்தில் அவசரம் கருதி அப்பணியை நான் எடுத்துச் செய்வதாகச் சொன்னேன். என்னுடன் வந்திருந்த எங்களூர் இளைஞனிடம் திரும்பிப் போகும் முன்னர் எனக்கு உதவ வேண்டினேன். கணநேரத் தயக்கத்திற்குப் பிறகு ஒத்துக் கொண்டான்.

அருகிலிருந்த கிராமத்துக்குப் போனதும் கிழக்கில் திரும்பி நடந்தான். நான் மேற்கே போனேன். இரண்டு மெத்தைகளுக்கும் ஒரு தடித்த போர்வைக்கும் ரசீது கொடுத்தேன். சுமையைத் தாண்டியும் மனம் லேசானது. அவற்றைக் கொடுத்து விட்டு மீண்டும் திரும்பி வர எண்ணிக் கொண்டேன். என்னுடன் வந்திருந்த தூதுவன் வெறுங்கையுடன் திரும்பியிருந்தான்.

“என்னாச்சு?” கிராம மக்கள் எல்லோருமே எங்கள் படைக்குப் பக்கபலமாக, அனுசரணையாக இருந்தார்கள். ஏன் அவனுக்கு மட்டும் எதுவும் கொடுக்காமல் இருந்தனர் என்று தான் தெரியவில்லை.

“நீங்களே போய் கேளுங்க சகோதரி. இது போன்ற நிலப்பிரபுத்துவ மனங்கொண்ட பெண்களை என்ன தான் செய்வது?”

“எந்த வீடு? என்னைக் கூட்டிட்டுப் போ.” சொல்லக் கூடாத எதையோ சொல்லிக் கோபப் படுத்தியிருப்பான். ஒரேயொரு மெத்தை குறைவாகக் கிடைப்பதொன்றும் பெரிய பிரச்சனையில்லை. ஆனால், உள்ளூர் மக்களை விரோதித்துக் கொள்வது பின்விளைவுகளைக் கொணருமே. மக்களை விரோதித்துக் கொள்ளாமல் இருப்பது எத்தனை முக்கியமானது என்று நான் எடுத்துச் சொல்லும் வரை ஆணியடித்தது போல நின்றிருந்தான். உடனேயே, என்னைக் கூட்டிக் கொண்டு நடந்தான்.

நாங்கள் நுழைந்த வீட்டுக் கூடத்தில் ஒருவருமில்லை. உள்ளறை வாயிலில் சிவப்பு விளிம்பிட்டிருந்த நீலத் திரைச் சீலை தொங்கியது. இருபுறமும் பளீர் சிவப்பில் ‘மகிழ்ச்சி’ என்ற சித்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அங்கேயே நின்று பல முறை கூப்பிட்டேன். உள்ளே மனிதர்கள் அசையும் அரவம் கேட்டும் யாருமே பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களில் திரைச் சீலையை ஒதுக்கி உயர்த்தியவாறே ஓரிளம் பெண் வந்தாள். வில் போன்ற புருவமும் பளீர் சிரிப்புமாக மிக அழகிய முகம் கொண்டவள். வீட்டுத் தறியில் நெய்யப்பட்ட அவளது ஆடைகள் புதியவை. பெரியண்ணி என்றழைத்தேன். தூதுவன் ஏதும் தவறாகச் சொல்லியிருந்தால் மன்னியுங்கள் என்றேன். சற்றே துணுக்குற்ற பாவனையில் உதடுகளைக் கடித்துப் புன்னகைத்தபடி நின்றாள். நான் சொல்லி முடித்த பிறகு தலையைத் தொங்கப் போட்டவாறே உதடுகளைக் கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். என் வேண்டுதலை எப்படிச் சொல்வதென்று புரியாது விழித்தேன். தன் உயரதிகாரி ஏதோவொரு புதிய பயிற்சியைச் செய்து காட்டுவதைக் கவனிப்பவன் போல உடன் வந்த இளைஞன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றான். துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, நாட்டு மக்களைக் காக்கவென்று வீரர்கள் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று விவரித்து, ஒரு மெத்தை கொடுங்கள் என்று பட்டெனக் கேட்டேன். இடையிடையே அறைக்குள் பார்த்துக் கொண்டே சிரிக்காமல் கேட்டுக் கொண்டு நின்றாள். என் சொற்களை எடை போடுபவள் போல முதலில் என்னையும் பிறகு என் அருகில் நின்ற இளைஞனையும் பார்த்தாள். அடுத்த கணம், உள்ளே போனாள்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி இளைஞன் என்னிடம் புலம்பினான்.

“ஒண்ணும் பிரயோசனமில்ல. இதையே தான் நானும் சொன்னேன். ஆனா, கேக்கல்லயே.”

கண்டிப்பான ஒரு முறைப்பை அவனை நோக்கி வீசினேன். அதற்குள், அப்பெண்மணி மெத்தையுடன் திரும்பி வந்தாள். அவனுக்கு மெத்தையை இரவல் கொடுக்க அவள் ஏன் முன்வரவில்லை என்று எனக்குப் புரிந்து விட்டது. அது பூப்போட்ட தடிப் போர்வை. அதுவும் புத்தம்புதியது. பளிச்சென்ற சிவப்புப் பின்னணியில் சரிகை வேலைப்பாட்டில் எண்ணற்ற அல்லிகள் தைத்த உறை போட்டிருந்தது. இளைஞனைக் கோபப்படுத்தும் நோக்கில் மெத்தையை என்னிடம் நீட்டி, “இந்தாருங்கள்”, என்றாள்.

என் கைகளில் ஏற்கனவே பொருட்கள் இருந்ததால், வாங்கு என்று சொல்ல இளைஞனைப் பார்த்தேன். என்னைக் கவனிக்காதவன் போல நின்றான். பெயரைச் சொல்லி அழைத்ததும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு மெத்தையை வாங்கிக் கொண்டு அங்கிருந்து விடுவிடுவென்று விரைந்தான். ஏதோ கிழியும் ஓசை கேட்டது. அவனுடைய சீருடை கதவில் மாட்டி தோளில் கிழிந்திருந்தது. பெரிதாக இருந்தது கிழிசல். ஊசியையும் நூலையும் எடுத்து வர முறுவலுடன் அவ்விளம்பெண் உள்ளே போனாள். ஆனால், அவள் தன் உடுப்பைத் தைப்பதை அவன் விரும்பவில்லை. ஆகவே, மெத்தையைத் தூக்கிக் கொண்டு மறைந்தான்.

நாங்கள் அதிக தூரம் போயிருக்கவில்லை. அந்தப்பெண் மணமாகி மூன்றே நாட்களாகியிருந்த மணப்பெண் என்றும் அந்த மெத்தை மட்டுமே அவளுக்குக் கிடைத்த சீதனம் என்றும் வழியில் யாரோ சொன்னார்கள். அதைக் கேட்டு மிகவும் வருத்தமாகி விட்டது. என் முகத்தையே முறைத்துப் பார்த்த இளைஞனும் என்னைப் போலவே வருத்தப் பட்டவன் போலக் காணப் பட்டான். “வருத்தமாத் தான் இருக்கு. அது அவங்களோட கல்யாணச் சீருன்னு நமக்கு எப்டித் தெரியும்?”, என்று முணுமுணுத்தான்.

அவனைச் சீண்ட நினைத்து, “ஆமா, இது போல ஒரு மெத்தைய வாங்க சிறுமியாக இருந்தப்பருந்தே விடிகாலைல இருந்து நள்ளிரவு வரைக்கும் உழைச்சிருப்பாங்க. சிறுகச் சிறுகச் சேர்த்திருக்கணும். எவ்ளோ நஷ்டமோ அவங்களுக்கு. இதுல யாரோ அவங்கள நிலப்பிரபுத்துவ மனங்கொண்ட பொண்ணுனு யாரோ சொன்னாங்களே,..”, என்றேன்.

சட்டென்று நின்றான். “திருப்பிக் கொடுத்துடுவோம்.”

“அப்டி செஞ்சா அவங்க வருத்தந்தான் படுவாங்க. ஏற்கனவே இரவல் கொடுத்துட்டாங்கள்ல?”

அவன் முகத்தில் தெறித்த வருத்தமும் அக்கறையும் என்னை சுவாரஸியப் படுத்தின. இந்த எளிய கிராமத்தானுக்குள் ஏதோ ஓர் அரிய வசீகர அழகு இருக்கிறது !கொஞ்ச நேரம் யோசித்திருப்பான் போலும். “சரி, எடுத்துட்டுப் போவோம். பயன் படுத்தின பிறகு நல்லா அலசித் துவைத்து விடுவோம்”, என்றான். மனதில் உறுதிப் படுத்திக் கொண்டவனாக என் கையிலிருந்த மெத்தைகளை என்னிடமிருந்து வாங்கி தோளில் சாய்த்துக் கொண்டவனாக விடுவிடுவென்று நகர்ந்து நடந்தான்.

முதலுதவி முகாமை அடைந்ததும், அவனைத் தலைமையகத்துக்கு திரும்பிப் போகச் சொன்னேன். உடனே, முகம் மலர்ந்து எனக்கு சல்யூட் வைத்து விட்டு ஓடிவிட்டான். சில அடிகள் போனதுமே எதையோ நினைத்துக் கொண்டவனாக நின்று சட்டைப்பையைக் குடைந்து இரண்டு பான்களை எடுத்தான்.

இரண்டையும் நீட்டிக் காட்டி வீதியோரக் கல் மீது வைத்து விட்டு, “சாப்பாடு தயார்”, என்று கூவி விட்டு ஓடினான். அருகில் சென்று காய்ந்த பான்களை எடுத்தேன். தொலைவில் அவனது காதுக்குப் பின்னால், ஏற்கனவே நீட்டிக் கொண்டிருந்த சுள்ளிகளுடன் ஒரு சாமந்திப் பூவும் ஆடியது. தூரப் போய் விட்டான். கிழிந்த சட்டை காற்றில் ஆடியதைப் பார்க்க முடிந்தது. அதைத் தைத்துக் கொடுக்காமல் போனோமே என்று வருந்தினேன். மாலை முழுவதும் அவன் தோள்கள் குளிரில் திறந்தே கிடக்கும்.

முதலுதவி முகாமில் நாங்கள் மிகச் சிலரே இருந்தோம். சமைக்கவும் குளிக்கவும் கிணற்றிலிருந்து நீர் இரைக்க கிராமப் பெண்களைக் கூப்பிட்டு கிராமத்துப் பெரியவர் உதவினார். அதிலொருவர் மூடிய உதடுகளில் புன்னகை விரிந்த புது மணப்பெண். யாரையோ தேடுபவள் போல அவ்வப்போது என்னைத் தன் கைக்கண்ணால் பார்த்துக் கொண்டாள்.

“எங்கே அந்த காம்ரேட்?”, என்று கேட்டாள்.

அவன் திரும்பி தலைமை முகாமுக்குத் திரும்பிப் போய்விட்டான் என்று சொன்னதும் பூடகமாகச் சிரித்துக் கொண்டே, “மெத்தை இரவல் கேட்டு வந்த போது அவனிடம் நான் சற்றே கடுமையாக நடந்து கொண்டேன்”, என்றாள். சிரித்துக் கொண்டே போய் வேலையில் இறங்கினாள். மெத்தைகளையும் போர்வைகளையும் உருவாக்கப்பட்ட படுக்கைகள், மேசைகள் மீது அழகாக விரித்தாள். தான் கொடுத்த மெத்தையை வெளி வாசல் தாழ்வாரத்தில் கீழே விரித்தாள்.

மாலையில் நிலவு உதித்தது. ஆனாலும் எங்கள் தாக்குதல் இன்னும் தொடங்கியிருக்கவில்லை. வழக்கம் போல எதிரிகளுக்கு இருட்டிய போது அச்சமும் உடன் வந்திருந்தது. ஏராளமான வாணவெடிகளைக் கண்டபடி சுட ஆரம்பித்திருந்தனர். எண்ணற்ற வெளிச்சத் தெறிப்புகள் வானில் எழுந்து கீழிருந்த அனைத்தையும் பட்டப்பகல் போலத் துலங்க வைத்தன. இந்நிலையில் தாக்குதல்கள் தொடங்குவது மிகக் கடினம். மிகப் பெரியளவில் சேதங்களை விளைவிக்கும். வெள்ளியென ஒளிர்ந்த வட்ட முழுநிலவும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
உள்ளூர் அரசாங்க ஊழியர் எங்களுக்கு உணவும் வீட்டில் செய்யப்பட்ட நிலவுப் பணியாரமும் கொண்டு வந்தார். அன்று நிலவுக்குத் திருவிழா ! அதெல்லாம் எனக்கு வீட்டு நினைவைக் கொணர்ந்தன. திருவிழாவுக்கு ஊரில் ஒவ்வொரு வீட்டின் முன்பு சிறு மூங்கில் மேசை மீது வத்திகள் கொளுத்தி சூரியகாந்தி விதைகள், பழங்கள் மற்றும் நிலவுப் பணியாரங்கள் படைத்திருப்பார்கள். வத்திகள் முழுக்க சாம்பலாகி நிலவுக் கடவுளுக்குப் படைத்த பதார்த்தங்களை எடுத்துத் தின்னக் காத்திருப்பார்கள் பிள்ளைகள். மேசையைச் சுற்றி சுற்றி வந்து, ‘நிலவு தான் எத்தனை பிரகாசம், மத்தளங்கள் அடித்து இனிப்புகளை படைத்து,..’ என்றோ ‘நிலவம்மா, எம் மீது ஒளிருங்கள்,..’ என்றோ பாடிக் குதிப்பார்கள்.

தியான்முஷன்னிலிருந்து வந்த மூங்கில் குறுத்துகள் சுமக்கும் அவ்விளைஞனின் நினைவு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவனும் அந்தப் பாடல்களைப் பாடியிருப்பான். சுவையான நிலவுப் பணியாரத்தை எடுத்துக் கடித்தேன். ஏதேனும் பதுங்குகுழியில் ஒளிந்து கொண்டோ தலைமையத்தில், போர்க்களத்திற்கருகில் நடந்து கொண்டோ இருக்கக் கூடியவனை எண்ணிக் கொண்டேன்.
சீக்கிரமே துப்பாக்கிகள் குண்டுகளைச் சடசடவென்று துப்பத் தொடங்கியதில் வானில் சிவப்புத் தடங்கள் தென்பட்டன. தாக்குதல்கள் தொடங்கி விட்டன. கொஞ்ச நேரத்திலேயே காயம் பட்டவர்கள் ஒவ்வொருவராக அனுப்பப் பட்டனர். முதலுதவி முகாமில் பதைபதைப்பு கூடியது.

ஒவ்வொருவரின் பெயரையும் முகாமையும் குறித்துக் கொண்டேன். சின்னக் காயங்களுடன் இருந்தவர்களால் விவரங்களைச் சொல்ல முடிந்தது. பலத்த காயமடைந்தோர் சீருடையில் ஒட்டப்பட்ட குறிப்பட்டையைத் திருப்பிப் பார்க்க வேண்டியிருந்தது. பலத்த காயமடைந்திருந்த ஒருவனது குறிப்பட்டையை ‘தூதுவன்’ எனக் கண்டது என் இதயம் துடித்தது. நல்லவேளை இது வேறொரு தூதுவன். என் நண்பன் தலைமை முகாமில் அல்லவா பணியாற்றுகிறான். பொருட்களைக் கொடுப்பதும் வாங்குவதும் தவிர அவன் என்ன வேலை செய்தான், எங்கிருப்பான், காயமடைந்தோரில் யாரேனும் போர்க் களத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்க வாய்ப்புண்டா என்றெல்லாம் கேட்க நினைத்து பின்னர் வாயை மூடிக் கொண்டேன்.

தாக்குதல் தொடங்கி சுமார் ஒரு மணிநேரம் வரை எல்லாம் சாதாரணமாகத் தான் போனது. வலைக் கம்பி வேலியைத் தகர்த்து வீதியில் போரிடுவதாகக் காயமடைந்தோர் சொன்னார்கள். அக்கட்டத்தில் செய்திகள் வருவதும் நின்றது. கேட்ட கேள்விகளுக்கு பதிலாக காயம் அடைந்தவர்கள், “இன்னும் போரிடுகிரார்கள்”, என்றோ “வீதிக்கு வந்து விட்டது சமர்”, என்றோ சுருக்கமாகவே சொன்னார்கள். அவர்கள் மீது பூசியிருந்த சேறும், அவர்களில் படிந்திருந்த சோர்வு மட்டுமில்லாமல் டோலிகள் மீது அப்பியிருந்த சேறும் போரின் தீவிரத்தைச் சொல்வதாக இருந்தன.

சீக்கிரமே போதுமான டோலிகள் இல்லாமல் போயிற்று. படுகாயமடைந்தோரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடனே அனுப்ப முடியாமல் போனது. அவ்வீரர்களின் வலியைப் போக்க என்னால் பெரிதாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. கிராமப் பெண்களை விட்டு அவர்களுடைய காயங்களைக் கழுவி கொஞ்சம் கஞ்சியைப் புகட்ட மட்டும் தான் முடிந்தது. சிலருக்கு ஆடைகளை நீக்கி குருதியையும் சேற்றையும் கழுவ வேண்டியிருந்தது. எனக்கு இது போன்ற பணிகள் பழக்கம் தான். ஆனால், கிராமப் பெண்களுக்குக் கூச்சமாக இருந்ததால் தயங்கினர். இதை விட சமைக்கவே விரும்பினர். இவ்வேலைகளுக்கு புதுமணப் பெண்ணைச் சம்மதிக்க வைக்க நீண்ட நேரம் பேச வேண்டியிருந்தது. எனக்கு உதவியாளராகப் பணியாற்ற அரை மனதுடன் தான் ஒத்துக் கொண்டாள் என்று தோன்றியது.
போர்க்களத்தில் குண்டுகள் ஒழுங்கற்று வெடித்தன. சீக்கிரமே விடியுமென்று நினைத்துக் கொண்டேன். நிலா வழக்கத்தை விட மிகப் பிரகாசமாக ஒளிர்ந்தது. பலத்த காயமடைந்த அடுத்த வீரனைக் கொண்டு வந்த போது படுக்க வைக்க காலிப் படுக்கை இல்லை. டோலி தூக்கிகள் அவனை வாசல் தாழ்வாரத்தில் கிடத்தினர். பிறகு, சுற்றி அமர்ந்து நகர மறுத்தனர்.

அவர்களுள் ஒருவன் என்னை மருத்தவர் என்று கருதி என்னிரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “டாக்டர், இவனைக் காப்பாற்ற எப்படியாவது ஏதாவது செய்யணும் நீங்க. காப்பாற்றினால் டோலி தூக்கிகள் உங்களுக்கு ஒரு செங்கொடியைக் கொடுப்பார்கள்”, என்றான். மற்ற டோலி தூக்கிகள் விழி விரித்து என் தலையாட்டல் மட்டுமே போது என்பது போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர். மேற்கொண்டு விவரிக்கும் முன்னரே புதுப்பெண் தண்ணீர் கொண்டு வந்து வீரிட்டழுதாள். கூடியிருந்தோரை விலக்கிக் கொண்டு உள்ளே போனேன்.

அங்கே வட்ட முகங்கொண்ட இளைஞன் சேறு படிந்து காயமடைந்திருந்தான். முகம் வெளிறியிருந்தது. கண்கள் நிம்மதியாக மூடியிருந்தன. தோளிலிருந்த சீருடைக் கிழிசல் காற்றிலாடியது.

“எங்களுக்காக அடி பட்டான்”, என்றார் டோலி தூக்கி வந்த முதியவர் பச்சாதாபத்துடன். “கிட்டத்தட்ட பத்து பேர் நாங்கள். சாலையைக் கடந்து முன்னேறக் காத்திருந்தோம். எங்களுக்குப் பின்னாலிருந்தான் அவன். படுபாவிகள் ஒரு கையெறி குண்டைக் கூரைக்கு மேலிருந்து வீசினர். எங்களிடையே புகைவிட்ட படி நகர்ந்து போக்குக் காட்டியது குண்டு. அவன் எல்லோரையும் தரையில் குப்புறப்படுக்கச் சொல்லிக் கத்தினான். அடுத்த கணம் குண்டின் மீதே பாய்ந்து விழுந்தான்.”

புதுப்பெண் பெருமூச்செறிந்தாள். கண்ணீரை அடக்கிக் கொண்டு டோலி தூக்கிகளிடம் சில வார்த்தைகள் சொல்லி அனுப்பி வைத்தேன். திரும்பிப் பார்த்த போது சிறு கைவிளக்கை எடுத்து வந்து அவன் சட்டையைக் கழற்றினாள். அதுவரை அவளிடமிருந்த கூச்சங்கள் பறந்து போயிருந்தன. மிகுந்த ஊக்கத்துடன் தடவிக் கொடுத்தாள். உயரமான அந்தத் தூதுவன் ஓசையின்றிக் கிடந்தான். மருத்துவரை அழைக்கவென்று ஓடினேன். அவர் வந்து அவனுக்கு ஊசி போடும் போது புதுப்பெண் அவனருகில் அமர்ந்திருந்தாள். சீருடையில் இருந்த கிழிசலை ஒவ்வொரு தையலாகப் போட்டுக் கொண்டிருந்தாள். மருத்துவர் அவனைச் சோதித்தார். பிறகு, எழுந்து பெருமூச்சிட்டார். “எதுவும் செய்வதற்கில்லை.”

நான் எழுந்தேன். இளைஞனின் நாடித் துடிப்பைப் பார்த்தேன். கை சில்லிட்டிருந்தது. புதுப்பெண் இதையெல்லாம் ஏற்கனவே அறிந்தவள் போல எதையும் கேட்காமலிருந்தாள். நுட்பமாகவும் நேர்த்தியாகவும் தைத்துக் கொண்டிருந்தாள். அவளைக் காணவே முடியவில்லை என்னால்.

“போதும், நிறுத்து”, எனக் காதருகே முணுமுணுத்தேன்.

சட்டென்று ஆச்சரியத்துடன் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். அடுத்த கணமே, தன் தையல் வேலையைத் தொடர்ந்தாள். சோகச் சூழலிலிருந்து அகற்றி அவளைக் கூட்டிக் கொண்டு போய்விட நினைத்தேன். அவன் எழுந்து பூடகமாகச் சிரிப்பதையும் காண மிக விரும்பினேன். அக்கணத்தில், என் சட்டைப் பைக்குள் அவன் கொடுத்த இரண்டு பான்கள் தட்டுப்பட்டன.

ஊழியர்கள் சவப்பெட்டி ஒன்றைக் கொண்டு வந்தனர். மெத்தையை அகற்றினர். புதுப்பெண் சட்டென்று வெளிறினாள். சடாரென்று மெத்தையைப் பிடுங்கி பாதியை விரித்து மறுபாதியைப் போர்த்தவென்று விட்டாள்.

“இந்த மெத்தை கிராமத்துக்காரங்களோடது”, என்றார் ஊழியர்.

“அது என்னோடது தான் !”, என்றாள் புதுப்பெண் மறுபுறம் திரும்பியவளாக. வழியாத கண்ணீர் நிறைந்த அவளுடைய கண்கள் பளபளத்தன. பரந்த தோளில் நீலத் துணி போர்த்தி அதன் மேல் மூங்கில்களைத் தூக்கி நடக்கும் சாதாரண கிராம இளைஞனின் முகத்தை மூடுவதைக் கண்டேன். பளிச்சென்ற சிவப்புப் பின்னணியில் சரிகை வேலைப்பாட்டில் எண்ணற்ற வெள்ளை அல்லிகள் தைக்கப்பட்ட மெத்தையால் போர்த்தினர். காதலையும் இதயத்தையும் பிரதிபலித்த புனித வெள்ளை அல்லி மலர்கள்.

Translated into English by Gladys Yang (1958)
ஆசிரியர் குறிப்பு: ரூ ஜீஜுவன் சீனாவின் மிகப் பிரபல எழுத்தாளர்களுள் ஒருவர். சிறுமியாக இருந்த போதே அநாதை விடுதிக்கு அனுப்பிவைக்கப் பட்டவர். 1943ல் தொடக்கப் பள்ளி ஆசிரியையானார். அதன் பிறகு, நாடகக் குழுவில் சேர்ந்தார். 1950ல் முதல் சிறுகதை பிரசுரமானது. இருப்பினும், ‘அல்லிகள்’ என்ற சிறுகதை தான் 1958ல் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ‘உயர் பிரபலம்’ என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு 1959ல் பிரசுரமானது. இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘அமைதியான பிரசவ இல்லம்’ 1962ல் பிரசுரமானது. பிற்காலப் படைப்புகளான ‘புல்வெளியூடே ஒரு பாதை’ மற்றும் ‘மோசமாகப் பிழை திருத்தப்பட்ட கதை’ தேசிய விருதுகள் பெற்றன.

தாமரை – மார்ச் 2012
சீனச்சிறுகதை: மூலம்: ரூ ஜீஜுவன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *