இந்த குளக்கரைப் பக்கமாகத்தான் நூறாண்டு காலமாக கிளைகளும் இமைகளுமாய் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பி வேறுன்றி உள்ளது அந்த காலத்து அரச மரம்.
பல இள ஜீவராசிகள் சங்கமமாகி உள்ள அதன் கீழே விநாயகர் பெருமாள் அம்சமாக அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு காலையும் மாலையும் அபிஷேகம் செய்து தீப ஆராதனை காட்டி பிரசாதம் படைத்து செய்கிறார் சாமி ஜயர். மரத்தடி விநாயகர் விசேஷம் நிறைந்தவர். வேண்டுதல் பிரார்த்தனைகளுக்கு உடனே செவி சாய்ப்பார் என்ற ஐதீகம் உண்டு.
இங்கு பலதரப்பட்ட மனிதர்களின் ஆசைகளும் எண்ணங்களும் எண்களைப் போல் அடுக்கிக் கொண்டே போகிறதே ஒழிய அதற்கு எவ்வித முற்றுப்புள்ளியும் கிடைப்பாது.
கோரிக்கைகளுக்கு விநாயகர் பெருமான் செவி சாய்ப்பாரோ இல்லையோ அவரோடு ஒன்றியிருக்கும் எனக்கு நித்தமும் காற்றோடு காற்றாக ரிங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
ஒருவேளை, விநாயகர் பெருமாளின் அருளால் என் உள்ளக்கிடக்கையை வெளிகொணர முற்பட்டால் கூட அவற்றுக்கு என்றும் முடிவுரை கிடையாது. அவர்களின் பிரார்த்தனைகளுக்கு உடனே தீர்வு ஏற்பட்டவுடன் விநாயகர் பெருமானுக்கு ஆபிஷேகங்கள் முதல் அன்னநானம் வரை பிரமாதப்படுத்தி விடுவார்கள்.
அதுவே, எதிர்மறையாக மாறினால் தெய்வம் இல்லை என்ற சித்தாந்தங்களோடு பல வசவுகள் உயிர் பெறுகிறது. உண்மையிலேயே நான் நாணி கோணிப் போகிறேன்.
கால மாற்றத்திற்கேற்ப மனிதனின் உணர்வுகள் மாறுவதை நினைத்த வேளையில் அந்த மனிதனைக் கண்டேன். பரட்டைத் தலையோடும், தாடி மீசையோடும், கறை படிந்த பற்களோடும் இங்கு வருவோர் போவோரிடம் ஞானியைப் போல் பேசுகிறான் சிரிக்கிறான்.
சிலர் அவனைக் கண்டு அஞ்சி ஒதுங்கினர். சிலர் அவனின் பேச்சுக்கு மதிப்பளித்து தலையாட்டினர்.
சாமி ஐயர் எதனையும் பாராமல் விநாயகருக்கு படைக்கப்படும் பிரசாதங்களை அவனுக்குக் கொடுத்து விட்டுச் செல்வார்.
அன்றொரு நாள். மழை வருவதற்கு அறிகுறிகள் தென்பட்டாலும் அது சாத்தியம் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அப்பொழுது ஒரு பெண் கண்ணீரும் கம்பலையுமாய் என் முன்னே நின்றாள்.
விநாயக பெருமானிடம் தன் குறைகளை அழுகையோடு சொல்ல தொடங்கினாள். தான் கருப்பாகவும் தடியாகவும் இருப்பதால் தனக்கு வரும் வரன்கள் தட்டிப் போவதால் அம்மா அப்பா கவலையாக இருப்பதாக சொன்னாள்.
அப்பெண்ணின் கதையைக் கேட்டு நானும் கவலைப்பட்டேன், ஆனால், அந்த சித்தனோ எவ்வித முகபாவனையும் காட்டாமல் ‘தங்கச்சிக் கண்ணே! ஒரு காரியம் செய். நாற்பத்து எட்டு நாட்கள் விடாமல் விநாயக பெருமானுக்கு ஒன்பது தடவை குடத்தில் தண்ணீர் நிரப்பி நம்பிக்கையோடு அபிஷேகம் செய். நல்லதே நடக்கும்’, என்றவாறு படுத்துக் கொண்டான்.
அப்பெண் சிறிது நேரம் நின்றாள். பிறகு நடையைத் தொடர்ந்தாள். சித்தனின் யோசனையை ஏற்று கொள்வாளா என்ற சந்தேகம் என்னுள் எழுந்தது. மறுநாள், அப்பெண் குடத்தொடு வந்தாள். அவளின் வருகைக்கு பின்னே. என் தளம் குளிச்சியாகவே இருந்தது.
வயதான தம்பதிகள் மூட்டை முடிச்சுகளோடு வந்து தெய்வத்திடம் முறையிட்டனர். பிள்ளைகளால் அவர்கள் ஏமாற்றப்பட்டு வீட்டை விட்டு விரட்டப்பட்டனர். இதனைக் கேட்டு நானும் கண் கலங்கினேன்.
அந்த சித்தனோ ‘ஒரு காலத்தில் நீங்க உங்கள் பெற்றோரை ஓ… ஓட வீரட்டினீங்க. கர்மா உங்களை விடாம துரத்துகிறது! அதனால் இங்க புலம்புவதை விடுத்து பொழைப்ப பார்த்துக்குங்கள்”, என்றான்.
நான் பிரமித்து போனேன். அடப்பாவிகளா! இது கலியுகம் நாம் ஒருத்தருக்கு செய்கின்ற பாவங்கள் இப்பிறவிலேயே அனுபவித்து செல்ல வேண்டும் என்பதே எழுதப்படாத விதி!
பரவாயில்லையே! இந்த சித்தன் எல்லாவற்றையும் அறிந்து வைத்திருக்கிறானே. இவனின் வருகைக்கு பின், நிறைய பேர் வர தொடங்கினர். குண்டாக இருந்த பெண் கொடி இடையானாள்.
தன் பிரார்த்தனையைச் செவ்வன் செய்து விட்டு சென்றாள். மூன்று மாதங்களுக்கு பிறகு தன் கணவனோடு வந்து விநாயகர் பெருமானுக்கு கொழுக்கட்டைகள், அன்னதானம் செய்து சித்தனின் ஆசிர்வாதத்தை வாங்கிச் சென்றாள்.
பல ஆண்டுகள் பிள்ளை பேறு இல்லாதவர்கள் சித்தனின் யோசனையைக் கேட்டு அழகான குழந்தைகளைப் பெற்றனர். இவ்விஷயத்தில் ஆன்மீகமும் நவீன மருத்துவமும் கலந்திருப்பதை உணர செய்தான்.
எப்பொழுதும் சுயநலமாக என்னைப் பற்றியே பிதற்றிக் கொண்டிருப்பேன். ஆனால், சித்தனின் மன உணர்வுகள், அவனுடைய பேச்சில் தொனிக்கும் உண்மை, நேர்மை, நயமாக எடுத்துரைக்கும் பாங்கு, இதுவெல்லாம் என்னை சிந்திக்க செய்தது, சிலர் அவனைப் பைத்தியம் என்றனர். பலர் நம்பிக்கையோடு அவனின் பேச்சைக் கேட்டனர். இறுதியில் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தது. இதனால், சித்தனுக்கு ஏதாவது நன்மைகள் கிடைத்திருக்குமா! என்றால் பூஜ்ஜியம்தான் என்பேன்.
இவ்விஷயத்தில், பலன் அடைந்தவர்கள் விநாயக பெருமானும் சாமி ஐயரும்தான், அனுதினமும் தடபுடலான படையல்கள், அலங்காரங்கள் மற்றும் இருப்பத்தொரு அபிஷேகங்கள் என்று விநாயக பெருமான் மகிழ்ச்சியில் திளைக்க, சாமி ஐயரிடம் லட்சுமி தாராளமாக தவழத் தொடங்கினாள்.
சித்தன் எதனையுமே கண்டுக் கொள்ளாமல் தன் போக்கில் இருந்தான்.
அன்றிரவு சரியான மழை! இடி முழக்கம் என்னை பயமுறுத்தியது. என்னுள் இருக்கும் பறவைகளும் அஞ்சி நடுங்கின.
காலை கதிர் தன் கடமையைத் தொடங்கியது. நானும் கண்களைத் திறந்தேன். அப்பொழுதான் ஒன்றை கவனித்தேன். சித்தன் அங்கில்லை என்பதை அறிந்தேன்.
இன்று வருவான் நாளை வருவான் என்று விழி மேல் விழி வைத்து காத்திருந்ததுதான் மிச்சம். சாமி ஐயரும் வருவோர் போவோரிடம் தெரியாது! என்று சொல்லியே ஓய்ந்து போனார்.
எனக்குதான் பெரிய இழப்பு எனலாம். தனித்திருந்த வேளையில், என் மனத்திற்கு இதமாக வந்தவன் தான் அந்த சித்தன். எங்கே சென்றாய் நண்பா? என்றவாறு கண்ணீர் சிந்தினேன்.
‘நண்பா! உன்னுள் பல குழப்பங்களோடு மன்றாடிக் கொண்டிருந்தாய். உனக்காகவே வந்தேன். பலரின் அறியாமையைப் போக்கினேன். கடமை முடிந்தது அவ்விடத்தை விட்டு அகன்றேன். நீ என்னுள் அடக்கம்!’ என்றவாறு சாமி ஐயரின் வருகைக்காக காத்திருக்க தொடங்கினார் மரத்தடி விநாயக பெருமான்.
– திருமதி விஷ்ணு சிம்பாங் ரெங்கம், ஜொகூர், மலேசிய நாளிதழில் வந்த கதையாகும்