ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் கழுவியாயிற்று. பாலக்கலுங்கில் வந்து அமர்ந்தான் சுப்பையா.
ஆலமரத்து நிழல். பாலத்துக்குக் கீழே பாயும் தேரேகால் ஆற்றின் சலசலப்பு. ஆலமரத்துக்கு எதிரில் கிழக்குப் பார்த்து நின்ற சுடலைமாடன் புது மஞ்சணைப்பூச்சில் திகுதிகுவென நின்றார். சுடலைமாடனின் முகப்புச் சுவரில் கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதி வேட்பாளராக 1962-ம் ஆண்டுத் தேர்தலுக்கு பிரஜா சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான T.S.இராமசாமிப்பிள்ளைக்கு ஆலமரம் சின்னத்தில் வாக்களிக்குமாறு நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
ஒரு காலத்தில் சுடலைமாடன் கோயில். இன்று ஸ்ரீ சுடலைமாட ஸ்வாமி தேவஸ்தானம். யானை தூறியது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கிழிந்து போகாதா? எதுவானாலும் ஒடுக்கத்திய வெள்ளிக்கிழமை மஞ்சணை பூசி, விளக்கேற்றி, ஒரு சீப்பு பேயன்பழம் வெற்றிலை பாக்கு வைத்து, சாம்பிராணி போட்டு, ஒரு தேங்காயும் உடைத்து வைத்து, சூடம் காட்டிவிட்டு எல்லாம் கையோடு எடுத்துக்கொண்டு போயிருப்பார் அவகாசப்பட்டவர். மஞ்சணையும் அரளிப்பூ மாலையுமே மிச்சம்.
சுடலைமாடனைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தால் காரியம் ஆகுமா? வீட்டுக்குப் போனால் அம்மா கையில் ஒரு கடவத்தை எடுத்துத் தந்து எரிக்கச் சுள்ளி பொறுக்கிவரச் சொல்வாள். வந்தபிறகே பத்தும் தண்ணியுமாக ஏதும் குடிக்கக் கிடைக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருவேளை குருணைக்கஞ்சியோ, பயத்தங்கஞ்சியோ, உளுந்தங்கஞ்சியோ வைக்கவும் ஆகலாம் என்று யோசித்திருந்தான் சுப்பையா. அவ்வாறெனில் அது விருந்து எனப்படும்.
தெற்கில் திருப்பதிசாரம் சாலையில் இருந்து வலது கையில் பித்தளைத் தூக்குவாளி வளையத்தைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு ஏசுவடியான் வேகமாக வந்துகொண்டிருந்தான். சுப்பையாவுடன் எட்டாம் வகுப்பில் படிப்பவன். சுப்பையாவைப் போலவே ஏசுவடியானுக்கும் எப்போதும் கிழிந்து ஒட்டுப்போட்ட, சந்தையில் வாங்கிய பழைய நிக்கர்தான். ஏசுவடியான் நடந்து கிட்டே வந்தவுடன் கேட்டான், “எங்கடே காலம்பற அவசரமாப் போற?”
“சர்ச்சிலே பால் கலக்கி ஊத்துகாங்க… ஒரு பாத்திரத்திலே அம்ம வேண்டிக்கிட்டு வந்தா… நானும் போயி இந்த வாளீல வேண்டிக்கிட்டு தாழக்குடிக்குப் போறன். அக்கா வீட்ல குடுக்கணும்…” சொல்லிக்கொண்டே வேகமாக நடந்து போனான்.
வீட்டுக்குப் போய் ஒரு பாத்திரம் எடுத்துக்கொண்டு பால் வாங்கப் போகலாம் என்று தோன்றியது சுப்பையாவுக்கு. தூக்குவாளி கொண்டு போனால் நிறைத்து ஊற்றித் தந்தால் தலைக்கு ஒரு தம்ளர் கிடைக்கும்.
வேகமாக நடந்து வீட்டுக்குப் போனான். அம்மா மாட்டுத் தொழுவத்தில் சாணி ஒதுக்கிக் கொண்டிருந்தாள். பிறகு அதை உரக்குண்டுக்கு சுமக்கணும். சத்தம் காட்டாமல், வயலுக்கு வழக்கமாக அப்பாவுக்குக் கஞ்சி கொண்டு போகும் பித்தளைத் தூக்குவாளியைத் தேடி எடுத்தான். வாளி கிடைத்தது மூடி கிடைக்கவில்லை. அடுக்களையில் தட்டுப்படவில்லை. சரி, கிடக்கட்டும் என்று, மூடி இல்லாத, ஈயம் பூசியிருந்த தூக்குவாளியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்.
கொலுசம்மைப் பெரியம்மை வீட்டில் அவல் தாளிக்கிறாள் போலும். திருப்பதிசாரம் சாலையில் நடக்க ஆரம்பித்தான். இடுப்பில் நிற்காமல் வழுகி இறங்கும் நிக்கரைக் காபந்து செய்ய அதன்மேல் மணிக்கொச்சக் கயிற்றுத் துண்டொன்றால் இறுக்கிக் கட்டியிருந்தான். ஊரின் பொதுப்பெயர் ஒன்றென்றாலும் வடக்கூரையும் தெக்கூரையும் பிரிப்பது இரண்டு பர்லாங் தூரம். வடக்கூரில் வெள்ளாங்குடி, வைராக்குடி, பண்டாரங்கள் நாலைந்து வீடுகள், மறக்குடி ஒன்று, தச்சாசாரி வீடொன்று, வைத்தியர் வீடு ஒன்று. தெக்கூர் காலனி என்று வழங்கப் பெற்றது.
வடக்கூரின் தெற்கெல்லை ஆற்றின் படித்துறை அதன் காவலுக்கும் நிழலுக்கும் எழுபது எண்பது ஆண்டுகள் மூத்த ஆலமரம். ஆலமரத்தின் அடிமரத்தில் இயக்கியம்மன் பீடம் ஒன்று வடக்குப் பார்த்து. முத்தாரம்மன், முப்புடாதியம்மன் என்போரெல்லாம் பெரும்பாலும் வடக்குப் பார்த்து வாழும் செல்விகள். காலனியை நோக்கித் தென்திசை நடக்கும்போது இடக்கைப் பக்கம் ஓடிக்கொண்டிருந்தது ஆறு வேகமெடுத்துப் பாயும் வெள்ளத்துக்கு இணையாக. ஒரு கையில் வாளியும் மறுகையை வீசியும் நடந்தான் சுப்பையா.
படித்துறையின் காப்புச் சுவரில் ஆற்றுக்கும் அதில் குளிக்க – துவைக்க – வெள்ளம் கோர என வரும் பெண்டிருக்கு முதுகு காட்டி இரண்டொருவர் அமர்ந்திருந்தனர். முதுகில், தலையில் சூரியக் கதிர் படாமல் ஆலமரம் காப்பு. படித்துறைச் சுவரில் ஆற்றுக்கும் அருணனுக்கும் புறம்காட்டி, மேற்குப்பார்த்து அமர்ந்திருந்த கடுவாப் போத்தி, குனிந்து கால் முட்டுக்களைத் தடவிக் கொண்டிருந்தார். ஏதும் எண்ணெய் தடவியிருப்பார் போலும். உளுந்தில் எண்ணெய் தடவியதைப் போன்று மினுங்கியது முட்டுக்கள். அவருக்கு நேர் எதிரே அம்மன் கோயில் தெரு, சாத்தாங்கோயிலில் சென்று தெற்குத் தெருவுக்குத் திரும்பும். அம்மன் கோயில் தெரு தொடங்கும் இடத்தில் வலதுகைப் பக்கம் பகவதி விலாசம் சுக்குக் காப்பிக்கடை. இட்டிலியும் ரசவடையும் வருடம் முன்னூற்று அறவத்தஞ்சு நாளும் காலைப் பலகாரம். அதனுள் நான்கைந்து பேர் அமர்ந்திருக்கக் கூடும்.
பால் ஊற்றுவது தீர்ந்து போய்விடக்கூடாது என வேகமாக நடந்தான். காலனியை நெருங்கியபோது, சாலையின் வலப்பக்கம் கிழக்குப் பார்த்திருந்த வேதக்கோயில் முன்பாக ஒரு டெம்போ கிடந்தது. அதன் பின்புறம் அவன் நடக்கும் திசையில். சுற்றிலும் ஆடவர், பெண்டிர், சிறார் எனச் சிறுகூட்டம் பேசிக் கிடப்பதும் தெரிந்தது.
வேதக்கோயில் எனக்கூறியே பழக்கம். கத்தோலிக்கமா, புரோட்டஸ்டான்டா, பெந்தகொஸ்தேயா என்ற தெளிவு இல்லை. இரட்சணியசேனை என்றோர் சொல் செவிப்பட்டிருக்கிறான். வெள்ளைக் காற்சட்டையும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருப்பார்கள் உபதேசியார் எனப்பட்டவர். சட்டையின் தோள்பட்டைப் பட்டி மட்டும் அரக்குச் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் பொன்னிறத்தில் குருசு கோக்கப்பட்டிருக்கும்.
வளர்ந்து பெரியவனான பின்பும் கிறிஸ்துவத்தில் எத்தனை வகைகள் அல்லது பிரிவுகள் உண்டென்று அவனுக்குத் துல்லியமாகத் தெரியாது. பிற்பாடு அவன் நலன்களில் அக்கறை கொண்ட, குடும்பத்தின் நலனுக்காகப் பிரார்த்திக்கிற கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்த அருட்தந்தை ஒருவர், அவனுக்கு நட்பாக வாய்த்தார். அவரிடம் நேரிடையாக ஒருமுறை கேட்டான், “பாதர், கத்தோலிக்கத்தில் எத்தனை பிரிவுகள் உண்டு?” என்று. விளையாட்டாக அவர் பதில் சொன்னார், “அது கர்த்தருக்கே தெரியாது!” என்று.
பெரிய அண்டாக்களில் பால் பவுடர் கலக்கி வைத்திருந்த டெம்போவின் பின்வசம் சிறு கூட்டம் நின்று பால் வாங்கிக்கொண்டிருந்தது. வாங்கிய பெண்கள் வாங்க நின்ற பெண்களுடன் சிரித்து உரையாடிச் சென்றனர். டெம்போவில் ஏறி நின்று இருவர் பெரிய போணியால் கோரிக்கோரி கொண்டுவந்த பாத்திரங்களில் ஊற்றிக் கொண்டிருந்தனர். இருவரும் வேட்டியை மடித்துக் கட்டி, துவர்த்தைத் தலைப்பா கட்டி சுறுசுறுப்பாக நின்றனர். அவர்கள் உடம்பிலும் டெம்போ தளத்திலும் பால் அலம்பிச் சிந்தி, காற்றில் பால்வாசம் நின்றது.
கீழே நின்று பால் வாங்க வந்தவர்களை ஒழுங்கு செய்தவரை அவன் அறிவான். கறுப்பாய், ஒல்லியாய், வரியோடிய வயிற்றுடன் வளர்த்தியாய் இருந்த அவரை நொண்டிச் சாலமன் என்பர். ஒரு காலில் சின்ன கிந்தல் அளவுக்குக் குறை, அவ்வளவே! சுள்ளென வெயில் உறைக்க ஆரம்பித்திருந்தது. டெம்போவில் குலுங்கும் பால் அண்டாவும், குறைந்துபோன கூட்டமும், தனக்கும் பால் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தந்தது சுப்பையாவுக்கு. சற்று அகல நின்ற நல்லாயி ஆத்தா அவனைப் பார்த்துச் சிரித்தாள். நொண்டிச் சாலமனின் அம்மை அவள். அவனை அறிவாள். எல்லோரும் அவளை நல்லாயிக் கிழவி என்பார்கள்.
‘அங்க போயிப் பாலு வேண்டீட்டு வந்திட்டியா?’ என்று ஆட்சேபனைக் குரலில் அம்மா கேட்க இருப்பது மனதில் ஒலித்தது. ஆனாலும் அடுப்புக் காந்தலில் பால் பாத்திரத்தை அப்படியே வைக்கத்தான் போகிறாள். பாலைக் காய்ச்சி ஒரு நாளும் இல்லாத திருநாளாகப் பாலூற்றி சுக்குக் காப்பி போடலாம் அல்லது கோட்டயம் சர்க்கரையோ, பனங்கருப்பட்டியோ, வீட்டுப் பானையில் கிடந்தால், சீவிப்போட்டு ஆற்றி யாவர்க்குமாய்ப் பதினோரு தம்ளரில் தோதுபோல அளவு பார்த்து அரைக்கப்போ, முக்கால் கப்போ ஊற்றலாம். அல்லது கொலுசம்மை பெரியம்மை வீட்டில் உறைமோர் வாங்கி, உறையூற்றி வைத்து, அடுத்தநாள் தடியங்காய் புளிசேரி வைக்கலாம். சம்பாரமும் கலக்கலாம். வெள்ளரி கிடந்தால் பச்சடியும் வைக்கலாம்.
சற்று நகர்ந்து டெம்போ பக்கம் போனான். மனதின் அறைப்பு உடலில் சாட்சி நின்றது. டெம்போ மேல் நின்று தானமானம் நடத்திக்கொண்டிருந்த ஒருவன் திரும்பி சுப்பையா முகத்தைப் பார்த்தான். இனம் கண்டு, வெடித்த குரலில் சொன்னான் –
“வெள்ளாங்குடிப் பெய இஞ்ச என்னத்துக்கு வந்து நிக்கான்? சும்ம கெடய்க்கும்னா எங்கினயும் போயி நிப்பானுவ… அவுனுக கோயில் கொடைக்குக் கால் நாட்டியாச்சுண்ணா நம்மள ஊருக்குள்ள எறங்கி நடக்க விடுவானுவளா?”
கடுப்பும் இளக்காரமும் இருந்தது அவன் குரலில். சத்தம் கேட்டு நிமிர்ந்த மற்றவன் அதட்டலாகச் சொன்னான்
“வந்திருக்காம் பாரு வாளியும் தூக்கீட்டு மானங்கெட்டுப் போயி… ஓடுலே வடக்க மாற இங்கேருந்து!”
டெம்போவைச் சுற்றி நின்றவர் மெலிதாக நகைத்தனர். சுப்பையா வகுப்பில் வாசிக்கும் பேரின்பம் அவன் முகத்தையே பார்த்தாள். குறைச்சலாக இருந்தது. அழக்கூடாது என்று நினைத்தான். இனி நின்று காரியமில்லை எனத் தோன்றியது.
இளக்காரம், ஏளனம், அவமானம் என மனம் கன்னத் தொடங்கிய காலம். இப்படித்தான் பட்டுப் பட்டுக் காய்த்துப் போகும் என்ற உண்மை அறியும் வயதல்ல அவனுக்கு.
நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த நொண்டிச் சாலமன் டெம்போ மேல் நின்ற இரு தானமானக்காரர்களையும் அதட்டினார். சினந்து குரலெடுத்துக் கூறினார் –
“வாயைப் பொத்தீட்டு சோலியைப் பாருங்கலே! கர்த்தருக்குச் சாதி உண்டாலே சவத்துக்குப் பெறந்த பெயக்களே? பாவம்லே இந்தப் பெய… நல்ல படிக்கப்பட்ட பெய… தாரித்திரியத்துக்க கொணம் வாளியத் தூக்கீட்டு வந்திருக்கான்… சாடி ஏறிக் கடிக்கப்பிடாது முட்டாப் பெயக்களா! நீ வாளியைக் கொண்டாலே இப்பிடி…”
சுப்பையாவிடம் வாளியைப் பிடுங்காத குறையாக வாங்கி, மேலே நின்றவனிடம், “நெறச்சு ஊத்திக் கொடு… பாவங்க குடிச்சிற்றுப் போட்டும்… அஞ்சாறு கண்ணுங்கயந்தலைய…” என்றார்.
வாளி ததும்பத் ததும்ப பாலூற்றித் தந்தார். நன்றியுடன் அவர் முகமேறிட்டுப் பார்த்து வாளியை வாங்கி, தலை கவிழ்ந்து, மடங்கி வடக்காக நடந்தான் சுப்பையா. மனம் குறுகி வலித்தது. பால் நிறைந்திருந்த மூடியில்லாத தூக்குவாளி அலம்பிச் சிந்திவிடாமல் பதனமாய் நடந்தான். திரும்பி நடக்கையில் ஆறு வலப்பக்கம் ஓடியது. இடதுசாரியும் வலதுசாரியும் நடப்பதைப் பொறுத்ததுதான். ஆற்றங்கரையில் இறங்கி இரண்டு எருமைகளைக் கூனாங்காணிப் பாட்டா மேய்த்துக்கொண்டிருந்தார். வாளியைச் சாலையோரம் வைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி, ஓரமாய்ச் செழித்து வளர்ந்து காற்றில் ஆடி நிற்கும் சேம்பு இலையொன்று பறித்து வந்து வாளி மேல் கவிழ்த்து மூடி எடுத்துப் போகலாமா என்று தோன்றியது. வாளியை வைத்துப் போனால் கருங்காகம் பறந்து வந்து அமர்ந்து கவிழ்த்துப் போய்விடக்கூடும். அல்லது எதையெதையோ கொத்தித் தின்றுவிட்டு வந்து முழு அலகையும் பாலினுள் விட்டுக் குடிக்கவும் கூடும்.
‘சீ’ என மனம் அருவருத்து ஒதுக்கியது. பால் வாளி அலம்பிச் சிந்தாமல் வடக்கு முகமாக நடந்தான். ஊர் எல்லையில் ஆற்றங்கரைப் படித்துறைக்கலுங்கில் ஏழெட்டுப்பேர் உட்கார்ந்திருந்தனர்.
கடுவாப்போத்தி சுருட்டு வலித்துக்கொண்டிருந்தார். சாரத்தைத் திரைத்துக் கவுட்டுக்கிடையில் செருகியபடி, தலை முண்டைக் கழுத்தில் கண்டமாலையாகப் போட்டபடி, வெற்றிலை பாக்கும் தடைப்புகையிலையும் அதக்கியபடி, மூக்குப்பொடி நாசியில் திணித்தவாறு. சொக்களிப்பேச்சும் நகைப்புமாகக் கிடந்தது படித்துறைக் கலுங்கு.
காலையில் பழையதோ, சுடுகஞ்சியோ, கொழுக்கட்டையோ, தாளித்த அவலோ, அரிசி உப்புமாவோ, அடையோ, தோசையோ, புட்டோ, வேகவைத்துத் தாளித்த பெரும்பயிறோ, சிறுபயிறோ, பத்துந்தண்ணீருமோ கழும மாந்தியிருக்கலாம்.
விவசாய வேலைகள் ஏதுமின்றி சூம்படைந்த இருப்பு. வயக்காட்டின் நெற்பயிர் அரை வைத்து, களை பறி முடிந்து, மேல் உரம் போட்டு, கரும்பச்சை நிறத்தில் காற்றடி வாங்கிக் கொண்டிருந்த காலம்.
சம்பாப் பயிர் சமைந்தால் தெரியும் என்பார்கள். வெள்ளம் தண்ணீர் பார்க்கக் காலையிலேயே வயக்காட்டுக்குத் தோப்புக்குப் போய்த் திரும்பியிருப்பார்கள். ‘உழுபடைக் கொழுமுனை தொடுமுனம் கூசும்’ மண். வெள்ளம் காலினால் விலவினால் போதும். சாணி வழிப்பு, பால் கறவை, புல்லறுப்பு, மாடு கன்று குளிப்பாட்டிக் கட்டுதல் எல்லாம் முடிந்திருக்கும்.
‘வெதச்சது கொய்யும்’ என்பார் மலையாளத்தில். விதைத்ததை அறுப்பார் எனலாம் தமிழில். இனி அந்தப் பூவின் கொய்த்துக்குக் காத்திருப்பு எல்லோருக்கும். அறுவடை என்ற பொருளில் அறுப்பு, கொய்த்து எனும் சொற்கள் புழங்கின. இனி மத்தியானச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போனால் போதும்.
தாயக்கட்டம், பதினெட்டாம் புலி, நாயும் புலியும், பரமபதம், பல்லாங்குழி, சீட்டுக்களி என கோயில் படிப்புரைகளில் நிழலில் இருந்து வீர விளையாட்டுகள் நடக்கும் நேரம். அந்த வழியாக எவனும் கூட்டுக்கறிக்கோ துவரனுக்கோ எவன் மரத்திலோ இருந்து பப்பாளிக்காய் பறித்துப் போவான், தரித்திரத்தின் குணமாக.
“ஏ! என்னா! பொண்டாட்டிக்கு கெர்ப்பம் கலைக்கவா? இல்லே கொழுந்தியாளுக்கா?” என்பார்கள் அவன் போவதைப் பார்த்து.
“சும்மா கெடங்கடே! கறிக்குப் பறிச்சிற்றுப் போறன்” என்பான் அவன்.
“ஓ! அதான கேட்டன்… செவம் பப்பாளிக்காயி பறிச்சுக் கறி வய்க்கப்பட்ட கெதி வந்திற்று பாரு…
நல்ல சீரு… நெல்லு வித்த பணமெல்லாம் பூதம் காக்கதுக்குப் பூத்து வெச்சிரு… எவன் தோப்பிலயாம் பப்பாளிக்காயி… அவத்திக்கீரை பறிச்சிற்றுப்போயி கறி வச்சுத் திண்ணு என்னா!”
சற்று நேரம் களித்துச் சிரித்துக் கலகலத்திருப்பார்கள்.
ஆற்றங்கரை என்பதால் நடக்கும்போது வெயில் உறைக்கவில்லை. மறுபக்கம் வயலும் தோப்புகளும். மைனாக்கள் சலம்பிக் கிடந்தன. கொக்கும் நாரையும் குருகும் புழுக்கள் பொறுக்கின. ஆற்றங்கரையில் ஆற்றில்பாதி சாலையில் பாதியெனக் கவிந்து கிடந்தன புன்னை. முத்துகள் போல வெண் பூங்கொத்துகள். குற்றுச்செடிகளாய் எருக்கு, நாயுருவி, ஆமணக்கு, ஆவாரை, பீநாறி, நொச்சி, குருக்கு, உண்ணி, மஞ்சணத்தி, அழிசு, பூலாத்தி, திருகுக்கள்ளி, சப்பாத்துக்கள்ளி, கொடுக்கள்ளி, சதுரக்கள்ளி, ஊதாச்செடி மூடுகள். ஆனையறுகு, நொறிஞ்சான் எனப் படர்ந்திருந்தன. ஆற்றின் கரையோரம் தண்ணீர் சலசலப்பில் நாணலும் கோரையும் பேய்ச் சேம்பும்…
ஆற்றங்கரைப் படித்துறைக் கற்சுவரை நெருங்க, அதன்மேல் அமர்ந்திருந்த சிலர் சுப்பையாவைத் திரும்பப் பார்த்தனர். அதில் ஒருவன் மேலத்தெருப் பண்ணையாருக்குப் பாரவண்டி அடிப்பவன் குத்தாலிங்கம். சுப்பையாவையும் கையிலிருந்த தூக்குவாளியையும் பார்த்து, “எங்கலே பெயிற்று வாற?” என்றான்.
அவன் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நடந்தான்.
“கேட்டா பதிலு சொல்ல மாட்டேரோ?” என்று எழுந்து வந்து வாளியைப் பார்த்தான்.
“ஆமா! வேண்டிய லெச்சணம்தான்… வேதக்கோயில்லே போயி பவுடர் கலக்கி ஊத்தப்பட்ட பாலு வேண்டீட்டு வாறேரா? நல்ல கூத்துடே!” என்று இகழ்ந்து வாளியைப் பிடுங்க யத்தனித்தான்.
விளிம்புவரை நிறைந்திருந்த பால் சற்று அலம்பி இரு சிரங்கை சாலையில் சிந்தியது.
“விடுண்ணேன்… நான் வீட்டுக்குப் போட்டும்” என்றான் நயந்து, பணிந்து, இரங்கி.
வாளியைப் பிடுங்கிய குத்தாலிங்கம் பாலைக் கொண்டுபோய் கலுங்கில் உட்கார்ந்திருந்தவர்களிடம் காட்டினான். பாண்டுரங்கம்பிள்ளை என்ற நடுத்தரவயதுக்காரர், பாலினுள் இடது கையை விட்டுக் கோரிப்பார்த்து, “நல்ல கட்டிப்பாலா இருக்குடே! ஒண்ணுக்கு ஒண்ணு தண்ணி விடலாம்” என்றார்.
“அவுனுக இப்பமே கொழுப்பெடுத்து அலையானுகோ… அங்க போயி தொண்ணாந்து திண்ணு பாலு வேண்டீட்டு வருகு பாரு… நம்மளை மானங்கெடுத்த…” என்றார் பரதேசியா பிள்ளை. அவர்மகன் சங்கர குற்றாலம் சுப்பையாவுடன்தான் படித்தான்.
“எண்ணேன்… எண்ணேன்… தாண்ணேன் போட்டும்…” என்று மன்றாடிக் கெஞ்சினான் சுப்பையா.
வேறொருவன் மூர்க்கமாக, “அப்பிடி வாங்கிக் குடிச்சு கறி வளக்கணுமாலே எரப்பாளி?” என்றான் சினந்து.
பால்வாளியைக் கையில் வைத்திருந்த குத்தாலிங்கம், “இனிமே இந்த மாரிக் காரியம் பாக்கப்பிடாது கேட்டயா?” என்று அதட்டியவாறு, இரண்டு எட்டு நடந்து, பால் வாளியின் தூரைத் தாங்கிப் பிடித்து, சாலையில் நின்றவாறே, பாலை ஆற்றில் வீசினான்.
“ஏலே! ஏலே! பாவம்லே! என்ன காரியம் செய்தே?” என்று பதறினார் கடுவாப் போத்தி. எல்லோரும் கனைத்துச் சிரித்தனர். கண்ணீர் பாய நின்றவனிடம் பால் சொட்டும் வெற்றுத் தூக்குவாளியை நீட்டினான் குத்தாலிங்கம்.
வாளியை வெடுக்கென வாங்கி, படிக்கட்டில் இறங்கி, ஆற்றுக்குள் முட்டளவு வெள்ளத்தில் போய் நின்றான் சுப்பையா. வாளியைத் தண்ணீரில் முக்கி அலசிக் கழுவினான். கெண்டையும் கெளுத்தியும் புரண்டு மறிந்தன. கன்னங்களில் கோடாய் வடிந்திருந்த கண்ணீரை ஆற்று நீரில் கழுவி வழித்தான். வீட்டுக்குப் போனதும் அம்மை கேட்பாள், “வாளியைத் தூக்கீட்டு எங்கலே போன?” என்று.
ஆற்றைப் பார்த்து நின்றவன் நெற்றிக்கு நேராகச் சூரியன். திரும்பிப் படியேற வந்தான். படித்துறையின் வலப்பக்கம் மரமடி நீளத்துக்குக் கரையோரம் கொடுப்பைக்கீரை மண்டிக் கிடந்தது. ஓரமாகப் போய் நின்று, கை கையாக ஆய்ந்து வாளியில் நிறைக்க ஆரம்பித்தான். வடக்குப் பார்த்திருந்த ஆலமரத்தடி இசக்கியம்மன் அவனைப் பார்த்திருந்தாள்!
– 2020 விகடன் தீபாவளி மலரில் வெளிவந்தது