அனுதாபம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 2,492 
 
 

(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் அப்பாவியாகத் தோற்றம் கொண்டிருந்தான். மனிதக் கும்பலிடையே தனித்துநிற்கும் படியான தோற்றம் அவனுக்கு இல்லையாயினும், அவன் ஒரு விசித்திர மனிதன்தான். அவனோடு சிறிது பழகியவர்களுக்கும் அது புரிந்துவிடும்.

அவன் மட்டும் முண்டி அடித்து முன்னேறித் தன்னை சதா உணர்த்திக்கொள்ளும்-மற்ற அனைவர் நோக்கிலும் கருத்திலும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய-சாமர்த்தியத்தைப் பெற்றிருந்தானானால், அவனுடைய அந்தத் தனிப் பண்புக்காக அவனுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டிருக்கலாம். ‘மகான், மகாத்மா’ என்று போற்றிப் புகழ்வதற்கும் அவனைச் சுற்றிலும் கும்பல் கூடியிருக்கவும் கூடும். ஆனால் அவன் அரசியல்வாதி இல்லை.

அவன் ஒரு செல்வராக இருந்து, இந்தப் பண்பை விளம்பரப் பகட்டுடன் வெளிச்சமிடக் கற்றிருந்தால், அவனுக்கு அர்த்தம் விளங்காத வடமொழிப் பெயர் கொண்ட பட்டங்களை வழங்க ஞானிகளும், ஆதீனங்களும் மடத்தலைவர்களும் முன்வந்திருக்கக்கூடும். அவனை ஞானி என்றும், தியாகி என்றும், ஜீவன் முக்தன், சித்தன். என்ற தன்மைகளிலும் கூடப் பாராட்டி விழா எடுக்க அடியார் திருக்கூட்டம் எப்போதும் சித்தமாகக் காத்திருக்கவும் கூடும்.

அவனோ அத்தகைய சிறப்புகள் எதையும் பெற்றிராத, எனினும் வாழ்க்கைப் பாதையிலே ஒவ்வொரு நாள் பயணத்தையும் மற்றவர்களுக்குப் புலஞகாத-பிறர் புரிந்து கொள்ளவும் தயாராக இராத-தியாகங்களைச் செய்தபடி நடத்தியாக வேண்டிய நிலையில் உள்ள மத்திய தர வர்க்கத்தை, அதிலும் அவ்வர்க்கத்தின் கீழ்த்தட்டை சேர்ந்த சாதாரண மனிதனாக இருந்தான்.

அவனுக்கு அப்படி ஒரு இதயம் ஏன் வாய்த்தது? வாழ்க்கையையே மென்னியை அழுத்தும் பயங்கரமான சிலுவையாக ஏற்றுக் கூனிக்குனிந்து திரியும் அந்த அப்பாவிக்கு ஏன் இந்த விசித்திர சுபாவம்?

மழை பெய்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் கனத்த மழைதான். அவன் வீட்டில் ஜன்னலின் பின்னிருந்து, சரிந்து விழும் மழைக் கம்பிகளையும், ஓடிப் பதுங்கும் மனிதர்களையும், குடை பிடித்து சாவகாசமாக நடப்பவர்களையும், வேடிக்கை பார்த்தபடி பொழுதுபோக்குகிறான். அப்போது ஒரு மாடு நனைந்துகொண்டே வந்தது. ஒரு வீட்டின் ஓரமாக ஒதுங்க முயலுகிறது. அங்கே மழைக்கு ஒதுங்கி நின்றவர்கள் அதை விரட்டுகிறர்கள். அது மிரண்டு பார்வையைச் சுழற்றியபடி மீண்டும் தெருவில் நடக்கிறது.

அதன் அந்தப் பார்வை அவனை என்னவோ செய்கிறது. அந்த மாட்டுக்கு உதவ வேண்டும் என்ற ஆசையும், எப்படி உதவுவது எனத் தெரியாத தவிப்பும் அவன் உள்ளத்தில் கவிகின்றன. அது சிறு வேதனையாய்க் குறுகுறுக்கிறது. அதை அமுக்கிக்கொண்டு வேறொரு வேதனை அங்கே படர அல்லது பழைய வேதனையே கனத்துப் பெரிதாகிச் சுமையாய் அழுத்த உதவுகிறது வேறொரு காட்சி.

சிறுவன் ஒருவன் தலைகுனிந்து நடந்துபோகிறான். தலை மீது விழும் மழையோ, கைகளில் பாரமாய் இழுக்கும் ஐஸ் ஜாடிகளே அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதுவே முழுப்பெரும் காரணம் ஆகிவிடாது. மழை பெய்வதனால்-இன்னும் தொடர்ந்து பெய்யும் எனத் தோன்றியதனால்-ஜஸ் விற்க வழி இல்லை; எனவே அவன் பிழைப்பில் மண்தான் என்ற எண்ணமே அவனை அழுத்தி, மண்ணைப் பார்த்துக் குனிந்தவாறு நடக்கச் செய்தது.

ஜன்னலுக்குப் பின்னிருந்து பையனைக் கவனித்த அவனுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. ஐஸ் விற்று, அதில் கிடைக்கும் கமிஷனைக் கொண்டு, பிழைப்பு நடத்தியாக வேண்டிய நிலையிலிருந்த அச்சிறுவனுக்காக அவன் இரக்கப்படாத நாளே கிடையாது. அந்த இரக்கத்தினால் அவ்வப்போது அந்தப் பையனிடம் பத்துப் பைசாவுக்கோ இருபது பைசாவுக்கோ ஐஸ் வாங்கி, தனக்கு ஐஸ் பிடிக்காது, தேவையும் இல்லை என்பதனால் அதை ரோட்டின் மீது சிறி அடித்து அது துகள் துகளாகச் சிதறித் தெறிப்பதைக் கண்டு ரசித்திருக்கிறான். சில சமயம் ஐஸ்-பால் ஜஸ், என்ற குரல் கேட்டு, வாங்கித்தின்ன ஆசை இருந்தும் வசதி இல்லாததனால் அந்தப் பையனையே ஏக்கத்துடன் பார்த்து நிற்கும் யாராவது சிறுவன் அல்லது சிறுமிக்கு, அவன் வாங்கியதை கொடுத்துவிடுவதும் உண்டு. அப்போது ஆசை எதிர்பாராது நிறைவேறப்பெற்ற சிறுவன் அல்லது சிறுமியின் முகத்தில் புது உதயமாய் ஒளிவீசும் மகிழ்ச்சி அவன் உள்ளத்தில் சேர்க்கும் ஆனந்த நிறைவு அவனே கிறுகிறுக்க வைக்கும்.

மழை பெய்யும் வேளையில், ஐஸ் பையனுக்கு உதவி தேவைப்படுகிறபோது தன்னால் சிறு உதவியும் செய்ய இயலவில்லையே -ஐஸ் வாங்கி உதவத் தன் கையில் பத்துப் பைசா கூட இல்லையே-என்ற உணர்வு அவன் வேதனைச் கமையில் பளு அதிகம் சேர்த்தது. துயரம் அவன் தொண்டையை அடைத்தது. நெஞ்சில் வலித்தது. கண்களில் நீர் வடிந்தது. இப்படி. எத்தனையோ சந்தர்ப்பங்கள்! அவனை அறிந்தவர்கள் கூட, அவன் வாய் மூலமாக அவனது இதய வேதனையைக் கேட்டறிந்தால், ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது?’ என்று எள்ளிச் சிரிக்கும்படி செய்கிற விஷயங்கள்…

அவன் வீட்டின் முன்னே உள்ள தெரு வழியாகத்தான் மயானத்துக்குப் பிணங்கள் எடுத்துச் செல்லப்படும். அப்படிச் செல்கிறவற்றின் இறுதி யாத்திரையில்தான் எத்தனை ஏற்றத் தாழ்வுகள்! கொட்டு முழக்கமும் பூ அலங்காரமும் ஆட்டபாட்டமுமாய்ச் செல்லும் ஊர்வலம். இறத்தவனின் அந்தஸ்தையும் செல்வாக்கையும் காட்டும் விதத்தில் பலரகமான மனிதர்கள் கும்பலாகத் திரண்டுவர, மெதுவாக நகர்ந்துசெல்லும் ஊர்வலம். சுமாரான கூட்டத்தோடு போகும் சராசரி ஊர்வலங்கள்-

அவற்றை எல்லாம் கண்டிருந்த அவன் ஒருசமயம் ஒரு பிணத்தின் பயணத்தைக் காண நேரிட்டது. கொட்டு முழக்கு, சேகண்டி ஒலி எதுவும் கிடையாது. பூ அலங்காரம், தடபுடல்கள் இல்லவே இல்லை. முன்னும் பின்னும் மவுனமாக நடந்து வரும் ஆட்களும் இல்லை. பாடையைச் சுமந்து செல்லும் நாலுபேர். கொள்ளிச்சட்டி தாங்கி நடக்கும் ஒருவன். வெறும் மூங்கில் பாடையில் பரிதாபமாய் கிடந்த பிணம். அவ்வளவுதான். ‘அன்வெப்ட், அன் ஆனர்ட் அண்ட் அன்ஸங்’ என்கிற மாதிரி, துக்கம் கொண்டாட எவரும் இன்றி, நேற்றுவரை இருந்தவனின் நினைவை கெளரவிக்கும் பெருமைச் சின்னங்கள் எதுவும் இல்லாமல், அவன் சிறப்பைப் புகழவோ அவன் இழப்பை எண்ணி அழவோ யாரும் இராது, வாழ்வின் வெறுமையை எடுத்துக் காட்டுவது போல் சென்றுகொண்டிருந்த அந்தப் பிணத்தைப் பார்த்து, அதனுடைய அவலநிலைக்காக அவன் மனம் இரங்கி அழுதது.

ஒரு சந்தர்ப்பத்தில் அவன் ஆஸ்பத்திரிக்குப் போனான். அங்கே ஒவ்வொரு பகுதியிலும் நோயாளிகளாய்க் காத்து நின்றவர்களைப் பார்த்ததும் அவனுக்கு என்னவோபோல் ஆயிற்று. கண் நோவினாலும் காது உபத்திரவங்களாலும், சரும வியாதிகளாலும், இன்னும் மனித உடலில் ஏற்படக்கூடிய என்னென்னவோ சீக்குகளாலும் சிரமப்பட்டுக்கொண்டு, சீட்டு வாங்கக் காத்து நின்று, பிறகு உரிய பகுதியில் டாக்டரைக் காணக் காத்து நின்று, பின்னர் பதிவு செய்துகொள்ளும் இடத்திலும், அப்புறம் மருந்துகள் வாங்குமிடத்திலும் காத்து நின்று அவதிப்படுவதைக் கண்டதும், அவன் அவர்கள் எல்லோருக்குமாகவும் அனுதாபம் கொண்டான்.

மழை பெய்கிற நாட்களில், மழையில் நனைகிறவர்களுக் காகவும், ரோடுகளின் ஒரங்களில் நடைபாதைகளில், குடியிருந்து மழைத்தொல்லையால் கஷ்டப்படும் மனிதர்களுக்காகவும் அவன் மனவேதனை அடைவது போலவே வெயிலின் கடுமையால் பாதிக்கப்படும் அனைவருக்காகவும் இதயவலி அனுபவிப்பது உண்டு.

அழகிகளைப் பார்த்தும் அவன் அனுதாபம் கொண்டான். அதை அறிந்த்ததும்தான் அவனுடைய நண்பர்கள் அவனுக்கு ‘சம்திங் இஸ் ராங் ஸம்வேர்’ ‘மூளையில் ஏதோ கோளாறு’ என்றும், ‘அவன் மைண்டே கோளாறானதுதான்’ ‘சைக்கலாஜிக்கலி தேர் இஸ் ஸம்திங் ராங் வித் ஹிம்’ எனவும் தாராளமாக ஸ்ர்டிபிகேட் வழங்கினர்கள்.

அழகாக விளங்குகிற பெண்ணைப் பார்த்து, அவளது எழில் அம்சங்களே ரசித்து மகிழ்வதற்குப் பதிலாக:

அவன் பட்டினத்தார்த்தனம் பண்ணுவானோ-அது சீழ்க்கட்டி, இது தசை, இது உதிரம், இது அருவருக்கப்பட வேண்டிய குழி எனப் புலம்புவானோ-என்று கேட்டால், அப்படிச் செய்தாலாவது பரவாயில்லை; ஒரு வேதாந்தப் பித்து, சாமியார்ப் பைத்தியம் என்று கருதலாமே என நண்பர்கள் குறிப்பிடுவார்கள்.

அவன் விஷயமே வேறு. ஒரு அழகி சிங்காரித்துக் கொண்டோ, சிங்காரிக்காமலோ, சிரித்த முகமும் சீதேவியுமாக அவன் கண்ணில் படுகிறபோது, அவன் உள்ளம் அனுதாபத்தால் அழுது வழியும். பருவ வயசில் அவளைப் போலவும் அவளை விடவும் அழகாக விளங்கிய சில பெண்கள், இரண்டு மூன்று வருட காலத்திலேயே வாடி வதங்கி, அழகு குலைந்து ஒட்டி உலர்ந்து வெகுளிகள் மாதிரி ஆகிவிட்டது அவன் நினைவில் தோன்றும். அவன் கண்ணெதிரே – பளபளவெனத் துலக்கப் பெற்று, பூவிட்டுப் பொட்டுமிடப்பட்ட குத்து விளக்குப்போல் காட்சி அளிக்கிற பெண்ணும் வாழ்க்கைத் தீயில் கருகி வதக்கப்பட்டு எப்படி எப்படியோ மாறிப்போவாளே என்ற எண்ணமும், அவள் அவ்வாறு கோரமாய், கண்ணறாவியாய் நிற்கிற தோற்றமும்தான் அவனுள் பளிச்சிடும். அதற்காகவே அவள் உள்ளம் மோனத்துயர் சிந்தி அனுதாபப்படும்.

இதை மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் அது அவன் தவறா? இல்லை, அவர்கள் தவறு என்றுதான் எப்படிச் சொல்லமுடியும்?

அவசியம் இல்லாததற்கெல்லாம் அவன் அனுதாபம் கொண்டு வருந்தினான். அவனது அனுதாபத்துக்கு இலக்கானவர்கள் தங்கள் நிலை குறித்து ஒருநாள் ஒரு பொழுதுகூட.. வருத்தப்படுவதில்லை என்பது அவனுக்கே தெரியும்.

வறுமையினால் பசிக்கொடுமையால், தங்கள் உடலை வாடகைக்கு விட்டுப் பிழைப்பு நடத்தும் பெண்களுக்காக அவன் நியாயமான அனுதாபம் வளர்த்தான். அதேபோல, ஸ்டைலாக, நாகரிகப் பகட்டுகளோடு, ஜாலியாக நாளோட்டுவதற்குத் தங்கள் உடலையும் கவர்ச்சியையும் பயன்படுத்தத் தயங்காத கல்லூரிக் குமரிகள், உத்தியோக மகளிர், சமூகப் பெண்கள் வகையறாவுக்காகவும், அரசியல் உலகில்-பொது வாழ்வில்-கலைத்துறையில் முன்னேறிப் புகழ்பெறும் நோக்கத்தோடு தங்கள் உடலை முதலாகவும் ஏணியாகவும் துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தக் கூசாத துணிச்சல்காரிகளுக்காகவும், அவர்களது போக்குகளுக்காகவும் அவன் வருத்தப்பட்டு அனுதாபம்கொள்வது வழக்கம்.

உல்லாச வாழ்வு வாழும் மேல் மினுக்கிகளும் சிங்காரிகளும் தங்கள் வாழ்க்கை முறையை வெற்றிப் பாதை என்று கருதுகிறார்களேயொழிய, இப்படியும் வாழ வேண்டியிருக் கிறதே என்று கவலைப்படவா செய்கிறார்கள்?

மனம் குமையும் அந்த அப்பாவிதான், ‘சே, இதெல்லாம் ஏன் இப்படி இருக்கு மனித வாழ்க்கை எதற்காக இவ்வாறு அமைந்திருக்கு? இந்த உலகத்தில் எதுவுமே சரியாக இல்லேன்னுதான் தோணுது’ என்று குமுறுவான், அவன் மனமும் அடிக்கடி புலம்பும்.

பெரிய ஆறுகள் பொங்கிப் பிரவாசித்து ஊர்களே நாச மாக்கின; மனிதர்களைச் சாகடித்தன… மனிதர்கள் சமரிட்டுச் செத்து விழுகிறார்கள். பிள்ளைகள் சாகடிக்கப்படுகின்றன. பெண்கள் அவமானப்படுத்தப்பட்டு, கொலை செய்யப்படுகிறார்கள். மக்கள் சொத்திழந்து, வீடிழந்து சொந்த நாட்டை விட்டு அகதிகளாக ஓடிவந்துகொண்டே இருக்கிறார்கள்–இவை போன்ற செய்திகள் அவனே பித்துப் பிடித்தவன்போல் ஆக்கிவிடும்.

தலைமயிரைப் பிய்ப்பதுபோல் கை விரலால் உருவிக் கொண்டு, ‘சே, இதெல்லாம் ஏன் இப்படி நடக்கு? இதுக்கு என்ன பண்ணுவது? ஏதாவது பண்ணியாகணுமே!’ என்று முணுமுணுத்தபடி இருப்பான். அவ்வேளைகளில் அவன் ஒரு வேடிக்கை மனிதன் ஆகவே மற்றவர்களுக்குத் தோன்றினான்.

மனிதர்களுக்காக மட்டும்தான் அவன் மனம் நொந்தான் என்றில்லை. சாக்கடையில் புரண்டுவிட்டு, தெருவில் அசிங்கக் கோலம் தீட்டியவாறு அசைந்து நடக்கும் பன்றிகளுக்கும். கோபத்தை பல்லில் காட்டி வெறியை உறுமலில் தேக்கி, ஒன்றோடொன்று கவ்விக் கடித்துச் சண்டைபோடும் தெரு நாய்களுக்காகவும் அவன் அனுதாபப்பட்டான். ‘இதெல்லாம் ஏன் இப்படி இருக்கு?’ என்று வருந்தனன்.

கொடிகளில், செடிகளில், இனிமையாய் குளுமையாய் பூத்துக் குலுங்கவேண்டிய மலர்கள் செடி அருகில் உதிர்ந்தும் அடிபட்டுத் தெருப் புழுதியில் புரண்டும் அலைக்கழிவதைக் கண்டும் அவன் உள்ளம் உருகி வருந்தினான்.

இரக்கத்தின், கருணையின் ஊற்றாக இருந்தது அவன் உள்ளம். அவனே அனுதாபம் எனும் உணர்ச்சியின் உயிர் உருவமாகத் திரிந்து அல்லாடினான். அவனை, அவன் உள்ளத்தை, உணர்ச்சியின் தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் அவன் வழியில் வந்து சேரவேயில்லை; பாவம்!

அன்று…

காலை நேரம் ரசிக்கப்பட வேண்டிய அற்புதக் காவியமாக மலர்ந்து கிடந்தது. விண்ணும், மண்ணும், இளம் ஞாயிற்றின் பொன்னொளி தொட்ட இடங்களும் பொருள்களும் இனியனவாய், எழில் சேர்ந்தனவாய் மிளிர்ந்தன. பூக்கள் சிரித்த செடிகொடிகள் தனி அற்புதம். வண்ணமயமான விதவிதப் பூக்கள் குளுமைக் காட்சிகள்.

அவன் உள்ளத்தில் ஒரு கிளுகிளுப்பு. புதிதாய்ப் பிறந்து விட்டவன்போல், அவன் தனியொரு உவகைத் துடிப்புடன் தெருவில் நடந்துகொண்டிருந்தான். எதன் மீதோ ஏறி எங்கோ மிதந்து பறப்பது போன்ற உணர்வுடன் நடந்தான்.

நடு ரஸ்தாவில் ஒரு பூ கிடந்தது.

இரண்டு இலைகளைக்கொண்ட ஒரு அழகு ரோஜா, புதுமையாய் சிரித்தது. ஸ்கூட்டரின் பின்புறம் ஜம்மென அமர்ந்து அவசரமாக எங்கோ சென்ற எவளின் கூந்தலையாவது அழகுபடுத்திக் கொண்டிருக்க வேண்டிய மலர். அப்படி இருந்து, வேகத்தில்-உலுக்கலில், அவளறியாமலே அது நடுத்தெருவில் விழுந்திருக்க வேண்டும்.

‘இந்த அழகுக்கு இப்படி ஒரு முடிவு ஏன்? இது சரியில்லையே!’ என்றது அவன் மனம். அழகின் சிரிப்பு அவனை இழுத்தது. அதற்காக, அதன் பரிதாப நிலைக்காக, அனுதாபம் கொண்ட அவன் அதை அப்படியே விட்டுவிட விரும்பாதவனாய், பூவை எடுக்கக் குனிந்தான். தனது உணர்வும், தன் கருமமும், தானுமாய் ஆகிவிட்ட அவன் சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வு கொண்டிருந்தானில்லை.

வெகுவேகமாக வந்த கார் ஒன்று அவனை மோதியது. தள்ளியது. ஏறியது. கோபத்தால் உறுமிக்கொண்டு மேலும் வேகமாய் முன்னேறிப் பாய்ந்தது. புழுதியை வாரி இறைத்துக்கொண்டு சடக்கென ஒரு திருப்பத்தில் ஓடி மறைந்தது.

அதை ஒட்டியவர் அவசர உலகத்தின் மிக அவசரமான பிரதிநிதி. மனிதாபிமானமோ, உயிர்களிடம் இரக்கமோ, ஊறா எனும் மிருக உள்ளுணர்வு துடிப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. அது அவர் இயக்கிய காரையும் பற்றிக் கொண்டதில் வியப்பில்லை.

அவன்-அனைத்துக்காகவும் அனைவருக்காகவும் இதயத்தில் ஈரம் கொண்டிருந்த அனுதாபி-அவனுக்காக அனுதாபப்பட எவரும் இல்லாத வெளியிலே கவனிப்பாரற்றுக் கிடந்தான்.

சூரியனின் பொன்னொளி அவன் உடலேயும் தொட்டுப் பளிச்சிட்டது.

– ‘சதங்கை’, ஏப்ரல் 1972

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *