கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 24, 2013
பார்வையிட்டோர்: 12,898 
 
 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருட்டு போர்த்தியிருந்தது.. இந்த நேரம் பார்த்து பவர் கட் வேறு.சுசித்ராவிற்கு நெஞ்சுக்குள் திக்.. திக் என்று இதயம் அடித்து கொண்டிருந்தது. சில்லென்று தண்ணீர் குடித்தால் தேவலாம் போலிருந்தது. ஹாலுக்கு சென்று ப்ரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து வர பயமாக இருந்தது. பக்கத்தில் கையோடு கொண்டு வைத்திருந்த பாட்டில் நீரை ஒரு முழுங்கு குடித்து விட்டு பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த ஹர்ஷிதா வை பார்த்தாள். மெல்லிய இதழ் புன்முறுவலோடு நிம்மதியாக தூங்கிகொண்டிருந்தது. மூன்று வயது குழந்தைக்கு போய் என்ன பயம் தெரிய போகிறது? பேசாமல் வீட்டை பூட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு போய் விட்டிருக்கலாமோ என்று தோன்றியது. கதிர் கேட்கவில்லை,

“ ஏய் எதுக்கு அவ்வளவு தூரம் போயிட்டு மறுபடியும் வரனும்.. ஜஸ்ட் ஒன் டே தானே.? பக்கத்துல மாமில்லாம் இருக்காங்க எதாச்சும் அவசரம்னா கண்டிப்பா உதவுவாங்க.. கதவை உள் பக்கமா பூட்டிக்கிட்டு படுத்து தூங்கு காலையில் நிதானமா ஏழு மணிக்கு எழுந்துக்கோ. .. வீணா பயப்படாதே..!” சொல்லிவிட்டு போனான்.
இதுவரை இப்படி தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வரவில்லை. கதிர் திடீரென்று ஆபிஸ் வேலையாக ஹைதராபாத்துக்கு போக வேண்டிய கட்டாயம். எப்போதுதான் விடியுமோ மணி பதினொன்று, பனிரெண்டு என தாண்டி கொண்டிருந்தது. “ இந்த பக்கம் திருடு பயம்லாம் இல்ல.. அப்படி எதாவது ஆபத்துன்னா நீ போன் கூட பண்ண வேணா, ரிங் கொடு நான் மாமாவையும், யுவனையும் அனுப்பி பார்க்க சொல்றேன்.. மாமி தைரியம் சொல்லி வைத்திருந்தாள்.

சரி ஒரு மணியாயிடுச்சி கண்ணை மூடி தூங்குவோம் என்று சுசித்ரா நினைத்த போது பக்கத்து ரூமில் காலொடி ஓசையும் இருட்டில் எதோ விழுந்த ஓசையும் தெளிவாக கேட்டது. மெல்ல எழுந்து சாவித்துவாரம் வழியாக பார்த்தாள். சந்தேகமில்லை பக்கத்து ரூம் கதவு திறந்திருந்து.. ஒரு கட்டையான உருவம் டார்ச் ஒளியில் எதோ தேடிக் கொண்டிருந்தது. சுசியின் லப்-டப் கூடுதலாகி கை கால் நடுங்கியது.

அந்த கட்டையான உருவத்தை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது, ம் எதிரி பிளாட்டில் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவன் தான். அவன் பார்வையே சரியில்லை, தீவிரமாதிரி மாதிரி தெரிந்தான். தினமும் குடிக்க தண்ணீர் கேட்டு வருவான். ஒன்றிரண்டு முறை தந்துவிட்டு காதில் கேட்காதவள் போல் இருந்துவிடுவாள். கதிர்தான் திட்டுவான். “ சுசி தண்ணிதானே கொடு, அவன் இந்திக்காரன் தமிழ் பேச தெரியலை பாவம்.. நான் இங்க வீடு கட்டறப்ப மாமிதான் நமக்கு தண்ணி கொடுத்து உதவினா. நாமளும் ஒருத்தருக்கு உதவினாதானே..?”

பாவி தண்ணீர் கேட்கும் சாக்கில் வேவு பார்த்திருப்பான் போலும், பெட் ரூம் கதவை உடைத்து பீரோவிலிருக்கும் பணம் , நகைகளை கொள்ளையடிக்க வெகு நேரம் பிடிக்காது. பயத்தில் மயக்கமே வரும் போலிருந்தது. கழுத்தில் காதில் இருந்ததையெல்லாம் கழற்றி அலமாரியில் வைத்தாள். “ கடவுளே அவன் என்னையும் , குழந்தையும் ஒன்றும் செய்யாமல் இருந்தால் போதும்.”

பாப்பாவிற்கு சளி என்று ஸிரப் ஊற்றி படுக்க வைத்திருந்தாள். சத்தம் கேட்டாலும் எழுந்திருக்காது. மெல்ல ஹர்ஷிதாவை தூக்கி கட்டிலுக்கு அடியில் படுக்க வைத்தாள். இனி நான் மட்டும் தூங்குவது போல் நடிக்க வேண்டியதுதான். அவன் பீரோவை உடைத்து எல்லாம் எடுத்து போகும் வரை தெரியாத மாதிரி இருந்து விட வேண்டியதுதான். அசைந்தால் கத்தியால் குத்திவிட்டு போய்விட்டால் என்ன செய்வது? எதற்கும் மாமிக்கு ஒரு ரிங் கொடுத்து விடலாம் என்று போர்வைக்குள்ளேயே மாமி நம்பரை தேடி நான்கைந்து மிஸ்டு கால் கொடுத்தாள்.

கர… கர… எதோ சத்தம் கேட்டது. மறுபடியும் காதை தீட்டினாள். கர.. கர.. பிரஷ் கொண்டு அழுத்தமாக பல் தேய்க்கும் ஓசை.. பாவி திருடனுங்க இப்பல்லாம் திருட வர்ற வீட்ல நிம்மதியா சாப்பிட்டுட்டே போறானுங்களாமே.. முந்தா நாள் தான் பேப்பரில பார்த்தோம். ஒரு வீட்ல பிரிட்ஜில இருந்ததை எல்லாம் சாப்பிட்டு சாவகாசமா தண்ணியடிச்சிட்டு பாட்டிலை எல்லாம் போட்டுட்டு போயிருந்ததா. நாம எப்படி தப்பிக்க போறோம்..வந்திருப்பவன் அந்த கட்டை ஆள் மட்டுமா கூட யாராவது கூட்டாளியும் இருக்குமோ…? திரும்பவும் பிரஷ் பண்ணும் ஒசை மிக நெருக்கமாக கேட்டது, ஒரு கை போர்வை விலக்கியது, அம்மா… அலறியவாறே கைகளை இறுக்கி கொண்டாள்.

“ ஏய்.. சுசி.. என்னாச்சு உனக்கு? வழக்கமா அஞ்சு மணிக்கே எழுந்து ப்ரஷ்ஷாகிடுவே.. மணி எட்டாயிடுச்சு.. பாவம் உடம்பு சரியில்லையோ என்னவோன்னு கேட்கதான் எழுப்பினேன்..”
சுசியின் உடம்பு நடுங்கி கொண்டிருந்ததை பார்த்ததும், “ என்ன எதாவது கனவு கண்டியா? “

அப்ப கனவுதான் கண்டிருக்கோமா? மெல்ல தெளிந்தவள் நீங்க ஹைதராபாத் போகலை என்று கேட்டாள்.

“ என்ன உளர்றே.. நான் அடுத்த வாரம்தானே போக போறேன்.
தான் நிஜம் என்று நம்பிய கனவை பின்னனி இசை விடாமல் ஒப்பித்தாள்.

தனியா இருக்க போறதை நினைச்சிகிட்டே டி.வி சீரியல் பார்த்திருப்பே.. அதுவும் இப்பல்லாம் அழுவாச்சி சீரியல் போய் ராஜேஷ் குமார் நாவல்லாம் எடுத்து திகில் தொடர் போடறான்.. பார்க்கும் போது இன்டரஸ்ட்டா பார்த்துட்டு இப்ப நீயே ஒரு எபிசோடு டைரக்ட் பண்ணியிருக்க… “ பரவாயில்லைடி… நீ கூட கதை எழுதலாம் போலிருக்கே… ஆஹ்ஹா வென்று சத்தம் போட்டு சிரித்தான்.

காலிங்க பெல் ஒலித்தது. கதவை திறந்தான், புன்னகையுடன் எதிர் பிளாட் ஓனர். பின்னால் அந்த கட்டை மனிதன்.

“ ஸார்.. இவன் அமர்.. ரொம்ப நல்லவன். இவனை மீறி ஒரு பொருள் வெளியே போவாது கட்டிடத்தை இவன் பொறுப்பில தான் விட்டிருக்கேன். தமிழ் தெரியாத இவனுக்கு ஸிஸ்டர்தான் கேட்கிறப்ப தண்ணி குடுக்கும்னு சொன்னான். இன்னிக்கு ரக் ஷா பந்தனாம். அதான் ராக்கி குடுக்கனும்னு சொன்னான்…”

சுசி முதன் முதலாய் அவனை பார்த்து புன்னகைத்து வாங்க அண்ணா என்றாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *