அவன் அரையுள்ளே நுழைந்தான். சன்னலை மூடினான். நாங்கள் இன்னும் படுக்கையில் தான் இருந்தோம். அவனுக்குக் காய்ச்சல் மாதிரி தெரிந்தது.
அவன் உடல் நடுங்கியது. முகமும் வெளுத்திருந்தது, பைய நடந்தான். அவனுக்கு வலி ஏதேனும் இருக்கவேண்டும். அசையக் கூட கஷ்டப்பட்டான்.
‘என்னப்பா ஷாட்ஸ்! உனக்கு என்ன ஆயிற்று?’
‘எனக்குத் தலை வலிக்கிறது’ ஷாட்ஸ் எனக்குப் பதில் சொன்னான்.
‘படுத்துக்கொள்’
‘இல்லை, பரவாயில்லை’
‘நீ படு. நான் கிளம்பத் தயாராகும் போது உன்னை பார்க்கிறேன்’
நான் இறங்கி வரும் சமயம், அவன் தயாராக இருந்தான். குளிர் காயும் கணப்புத்தீ அருகே உட்கார்ந்திருந்தான். ரொம்பவும் வாடியிருந்தான். அவன் என்ன ஒரு ஒன்பது வயதுச் சிறுவன். அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல்தான்.
‘போய் படு நீ, உனக்கு சுரம்.’
‘எல்லாம் தேவலை.’
டாக்டர் வந்து டெம்ப்ரேசர் கணக்கெடுத்த போது ‘டெம்ப்ரேசேர் எவ்வளவு இருக்கிறது’ என்றான்.
‘நூற்றி இரண்டு’ என்றார் டாக்டர்.
டாக்டர் கீழே இறங்கி வெவ்வேறு நிறத்தில் மூன்று கேப்சூல்கள் கொடுத்து இவைகளை சாப்பிடு என்று விஷயம் சொன்னார். ஒன்று சுரம் குறைக்க மற்றது வயறு சுத்தம் பண்ணவுதற்கு, அடுத்ததுவோ வயிற்றின் அமிலத்தன்மை குறைப்பதற்கு. காய்ச்சலின் விஷ நுண் உயிர்கள் அமிலத்தன்மையில் வீர்யமாயிருக்குமாம். ஆக, அமிலத்தன்மை குறைக்கப்படவேண்டும் என்றார் டாக்டர். அவருக்குக் காய்ச்சல் தொடர்பான அத்தனை விஷயங்களும் அத்துப்படி. ஆக, காய்ச்சல் நூற்றி நான்கு டிகிரிக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
தற்போது அங்கங்கே வந்திருப்பது, லேசான ஒரு ப்ளு. என்றாலும் நிமோனியா வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பையனுக்கு இறங்கி இருக்கும் இருக்கும் டெம்பரேசர் எழுதி வேறு வேறு கேப்சியூல்கள் கொடுத்த அந்த நேரத்தையும் குறித்து வைத்தேன்..
‘எழுதியதை படிக்கட்டுமா?’
‘சரி. படிக்கவேண்டும் என்றால் படியுங்கள்.’
அவன் முகம் வெளிறி இருந்தது. கண்களுக்குக் கீழே கருமையாய் இருந்தது. அவன் படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி நடப்பவைகட்கும் தனக்கும் தொடர்பில்லாமல் உணர்ந்தான்.
ஹாவர்ட் பைல் எழுதிய ‘கடற்கொள்ளையர்கள்’ நூலை நான் உரக்க வாசித்தேன். அவன் காதில் வாங்கினால் தானே.
‘எப்படி இருக்கிறது காய்ச்சல் உனக்கு?’
‘அதே மாதிரியே தான் இருக்கிறது.’ பதில் சொன்னான்.
அவன் கால் மாட்டிலேயே அமர்ந்து, மனதிற்குள்ளாக அந்த புத்தகத்தைப் படித்தேன். அடுத்த கேப்சியூல் தரவேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாக இந்நேரம் அவன் உறங்கி இருக்கவேண்டும். ஆனால் தன் கட்டிலின் கால் மாட்டையே முறைத்துக்கொண்டு படுத்துக்கிடந்தான்.
‘ஏன் நீ உறங்காமல் இருக்கிறாய்? உறங்கேன். நான் மருந்து கொடுக்க எழுப்புகிறேன்.’
‘இல்லை நான் விழித்துக்கொண்டே இருக்கிறேன்.’
சிறிது நேரம் சென்றது. ‘அப்பா நீ என்னோடு இங்கு இருக்க வேண்டுமா என்ன. உனக்கு சிரமம்தானே.’
‘அப்படி ஒன்றும் இல்லை.’
‘நான் சொல்வது என்னவென்றால் இங்கிருப்பதில் உனக்கு சிரமம் இருக்கலாம்.’
அவனுக்குக் கொஞ்சம் தலைபாரம் சற்றுக்குறைந்தும் கூட இருக்கலாம். பதினோறு மனிக்கு ஒரு கேப்சியூல் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் வெளியில் வந்தேன்.
குளிர்காலம். கதிரவன் பிரகாசமாய் இருந்தான். தரை மீதோ பனிக்கட்டியும் தண்ணீருமாக இருந்தது. இலையுதிர்த்த மரங்கள், செடிகொடிகளின் அடிக்கட்டைகள், புற்கள், வெற்றுத்தரை எல்லாவற்றின் மீதும் பனி வார்னீஷ் கணக்காகப்பூசி இருந்தது. அயர்லாந்து நடை நாய் ஒன்றை அழைத்துக் கொண்டு சிறிய நடைப்பயின்றேன். தெருவில் பள்ளமெல்லாம் பனிக்கட்டிகள், வழுக்கும் தரை மீது நிற்பதா நடப்பதா எதுவும் கடினமாகத்தான் இருந்தது. அந்த சிவப்பு நாய் வழுக்கியும் சறுக்கியும் சென்றது. நான் இரண்டு முறை கீழே விழுந்தேன். துப்பாக்கியை கீழே போட்டேன். அது பனிக்கட்டி மீது வழுக்கிகொண்டு போனது.
சிறு வியாபாரிகள் அமைத்த மண் மேட்டிற்கும் அதன் மேல் தொங்கும் செடிகளின் அடிக்கட்டைகளுக்கும் இடையே நான் பறவைக்கூட்டத்தை விரட்டினேன். மண்மேடு மறைத்துக்கொள்ளவே எனக்கு பார்வை கிட்டவில்லை. ஆக இரண்டு பறவைகளை மட்டுமே சுட்டேன். பறவைகளில் பல மரம் மீது அமர்ந்து மரத்திற்கு வெள்ளை ஒளி தந்தன.. மர அடிக்கட்டைகளிலும் செடியின் அடிகளிலும் பரவலாக அவை அமர்ந்திருந்தன. பனி மூடிய அடி மரக்கடைகளின் மீது ஏறி ஏறித்தான் நான் அவைகளை ஓட்டவேண்டியதாயிற்று. தட்டுத்தடுமாறி ஆடும் பனிமூடிய அடிக்கட்டைகளின் மீது ஏறியபடி நான் எப்படிச்சுடுவது. இரண்டு பறவைகள் சுட்டேன். ஐந்து பறவைகளைத் தவறவும் விட்டேன். இன்று வீட்டருகே நான் பறவைக் கூட்டங்கள் கண்டதே ஒரு மகிழ்ச்சிதான். இன்னும் எத்தனையோ பறவைகள் வரும். அந்த அடுத்த நாளும் வரும்.
வீட்டில் காய்ச்சல் வந்த அந்தப்பையன் தன் அறையுள்ளாக யாரையும் வரக்கூடாது என்கிறானாம்.
‘உள்ளே வராதே. எனக்கு வந்தது உனக்கும் வந்துவிடவேண்டாம்’. அவன் சொன்னான்.
நான் அவனிடம் சென்று பார்த்தேன். நான் விட்டுச்சென்ற மாதிரியே முகம் வெளிறி கன்னங்கள் சுரவேகத்தில் தொங்கியபடியிருக்க, கட்டிலின் அடிப்பகுதியை இன்னும் முறைத்தபடியே இருந்தான்.
நான் அவனுக்கு அப்போதைய டெம்பெரேசர் எடுத்தேன்.
‘டெம்பரேசர் எவ்வளவு?’ என்றான்.
‘நூறு இருக்கலாம்.’ நான் சொன்னேன். நூற்றி இரண்டும் ஒரு நான்கின் கீழ் பத்தும் இருந்தது.
‘நூற்றி இரண்டுதானே?’
‘யார் அப்படிச்சொன்னது?’
‘டாக்டர்!’
‘உன் உடல் வெப்பம் சரியாத்தான் இருக்கிறது. கவலைப்படாதே!’
‘நான் கவலைப்படவில்லை. ஆனால் அதனையும் நான் நினைக்கத்தானே வேண்டியிருக்கிறது.’
‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீ சாதாரணமாக இரு.’
‘நான் சாதாரணமாகத்தான் இருக்கிறேன்.’ நேராகப்பார்த்தான். அவன் மனத்தில் ஏதோ ஒரு இறுக்கம் மட்டும் இருந்தது.
‘நீ இந்த தண்ணிரைக்குடியப்பா.’
‘இது இப்போது என்ன செய்துவிடப்போகிறது எனக்கு.’
‘ஆமாம்! நிச்சயம் செய்யும்.’
அந்த கடற்கொள்ளையர் புத்தகத்தை மீண்டும் உட்கார்ந்து வாசிக்கத் தொடங்கினேன். அவன் எங்கே அதனைக் கேட்டான். நான் புத்தகத்தை மூடி வைத்தேன்.
‘நான் எந்த நேரம் செத்துப்போவேன்?’ அவன் தான்.
‘என்னப்பா சொல்கிறாய்? நீ ஏன் சாகப்போகிறாய். உனக்கு என்ன ஆயிற்று?’
‘நான் என் காதால் கேட்டேனே, எனக்கு நூற்றி இரண்டு டிகிரி என்று!?’
‘யாரும் நூற்றி இரண்டு டிகிரி காய்ச்சலில் செத்துவிட மாட்டார்கள். முட்டாள் மாதிரியா பேசுவாய் நீ?’
‘செத்துதான் போவார்கள். பிரஞ்சு பள்ளிக்கூடத்தில் பாடம் சொன்னார்களே? நாற்பத்தி நாலு டிகிரி இருந்தாலே, மனிதன் உயிரோடு இருக்கமுடியாது என்று. எனக்குதான் நூற்றி இரண்டு டிகிரி. பின் எப்படி?’
இன்று காலை ஒன்பது மணி தொடங்கி, அவன் சாவதற்காகவே காத்துகிடக்கிறான்.
‘முட்டாள் ஷாட்ஸ். நீ என்ன கிழவனாகி விட்டாயா. அவை மைலும் கிலோமீடாரும் போலத்தான். நீ சாக மாட்டாய். இரண்டு தெர்மாமீட்டர்கள் உள்ளனவே. தெரியாதா உனக்கு. ஒன்றில் முப்பத்தேழு டிகிரி, மனிதனின் சாதாரண வெப்பம். இங்கிருப்பதிலோ அதுவே தொண்ணூற்றி எட்டு!’
‘நிஜமாகத்தான் சொல்கிறாயா நீ?’
‘நிச்சயமாக. அது மைலும், கிலோமீட்டரும் போலத்தானப்பா. எழுபது மைல் காரில் சென்றால், அது எத்தனை கிலோமீட்டர் என்பது நமக்கு நன்றாய்த் தெரியும்தானே?’
‘அப்படியா?’
கட்டிலின் அடியை முறைப்பது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தது. அவன் இருக்கமும் சற்றுக் குறைந்தது. என் பையன் அடுத்த நாளே சாதாரணமாகி விட்டான்.
உப்பு பொறாத விஷயத்துக்கு எல்லாம் ‘ஆ.. ஊ..’ என்று கத்தி இப்போது ஆர்பாட்டம் செய்கிறான்.
– எர்னஸ்ட் ஹெமிங்க்வே (Ernest Hemingway), தமிழில்: எஸ்ஸார்சி.