கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 7,274 
 
 

அதிர்ந்து போனான் முத்து.

ஒரு கணம் திகைத்தவன், அடுத்த கணம் தான் பார்த்த உண்மையின் அசிங்கம் உறைக்க, உடனே தன் வீட்டுக் குடிசையின் வாசலிலிருந்து மெளனமாக விலகினான். உடம்பு பட படத்தது. மனம் வலித்தது.

குடிசையின் பின் புறமுள்ள சிறிய பிள்ளையார் கோவிலின் அரச மரத்தடிக்குச் சென்று அமர்ந்தான்.

தன் தந்தை இது காறும் தன் தாயைப் பற்றி சொல்லிவந்த குற்றச் சாட்டுகள் உண்மையாகிவிட்ட அவல நிலையை எண்ணி வருந்தினான். தாய், தாய்மை ஆகியவைகளைப் பற்றி இலக்கியமும், காப்பியங்களும் பெருமையுடன் குறிப்பிடுபவதை எண்ணி சற்று சினம் கொண்டான். அந்த சினம் அவனை மேலும் தறிகெட்டு சிந்திக்கச் செய்தது…

தாய்மை அடைவது புனிதம் என்று கருதியா ஒருத்தி தாய்மையை அடைகிறாள்? தாய்மையை மனதில் நினைத்துக் கொண்டா ஒருத்தி கணவனுடன் கலவியில் ஈடுபடுகிறாள்? அல்ல….அவ்வப்போது உடம்பில் ஏற்படும் கண நேரத்து உணர்ச்சிகளின் உசுப்புதல்களுக்கு கிடைக்கும் விடைதானே ஜனித்தல்…இதற்கு எதற்கு தாய்மை என்கிற பெயரில் பம்மாத்து என்று நினைத்தான்.

அவனுடைய பதினைந்து வயதுக்கு அவன் கண்ட காட்சி தந்த அதிர்ச்சியினால் அடிபட்டுப் போய், மேலும் சிந்திக்கத் திராணியற்று அழுதான். சுய பச்சாதாபம் அவனை ஆட்கொள்ள, தன் பள்ளித் தோழன் மூர்த்தியின் நல்ல குடும்ப நிலையையும், தன் வீட்டில் தான் அன்றாடம் எதிர்கொள்ளும் அசிங்கங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வெட்கினான்.

முத்துவும், மூர்த்தியும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படிப்பதால், முத்து பெரும்பாலும் மூர்த்தியின் வீட்டில்தான் குடியிருப்பான். குடிசை வாசியாக இருந்தாலும், முத்துதான் வகுப்பில் முதல் ரேங்க். அதனாலேயே மூர்த்தியின் பெற்றோர், சாம்பசிவம்-யோகாம்பாள் தம்பதியினருக்கு முத்துவின் மேல் மிகுந்த கரிசனமும், வாஞ்சையும் அதிகம். இன்னொரு ம்கனைப்போல் அவனைப் பாவித்து அன்பு செலுத்தினார்கள்.

தவிரவும் முத்துவின் தாய் பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டில் வேலைகாரியாக இருந்தவள்தான் என்பதால், முத்துவின் வீட்டில் நிலவும் பஞ்சமும், ஏழ்மையும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

பள்ளி இருக்கும் நாட்களில், முத்துவின் தந்தை ரிக்ஷாக்கார மாயாண்டி தினமும் காலையில் தன் ரிக்ஷாவில், மூர்த்தியின் வீட்டில் தன் மகனை இறக்கிவிட்ட பிறகுதான், தன் சவாரிக்குச் செல்வான். அங்கிருந்து முத்து, மூர்த்தியுடன் அவர்கள் வீட்டுக் காரில் டிரைவருடன் பள்ளிக்குச் சென்று திரும்புவான். முத்து மிக நன்றாகப் படிப்பதாலும், தன் மகனுக்கு நல்ல கல்வித் தோழனாக இருப்பதாலும் சாம்பசிவம் அவனுக்கும் சேர்த்தே பள்ளிக் கட்டணங்கள் கட்டினார், யூனிபர்ம் எடுத்துக் கொடுத்தார். தவிரவும் முத்துவுக்கு காலை டிபன், மதியம் கோ¢யரில் சாப்பாடு, இரவு உணவு என சகலமும் மூர்த்தி வீட்டில்தான்.

இன்னும் சொல்லப் போனால் முத்துவுக்கு ஐயர் வீட்டுப் பழக்கங்கள் அத்துப்படி. சாயங்காலம் விளக்கு வைத்த பிறகு, கை கால்களை நன்றாக அலம்பிக்கொண்டு நெற்றியில் பட்டையாக வீபூதி இட்டுக் கொண்டுதான் அன்றைய வீட்டுப் பாடங்களை மூர்த்தியுடன் சேர்ந்து செய்வான். இரவுச் சாப்பாடும் மூர்த்தியுடன் முடிந்ததும், தந்தை மாயாண்டிக்காக காத்திருந்து, ரிக்ஷாவில் ஏறி தன் வீடு திரும்புவான்.

தன் வீட்டை நரகமென உணர்வான். மாயாண்டி இவனை தன் குடிசையில் இறக்கிவிட்டதும், நைட்ஷோ சவாரிக்குப் போய்விட்டு திரும்பி வரும்போது நன்றாக குடித்திருப்பான். அந்த அர்த்த ராத்திரியில், தன் மனைவியை – முத்துவின் தாயை – சாராய நெடியுடன் எழுப்பி உதைப்பான், கத்துவான். அவ்விதம் கத்தும் போது அவளின் ஒழுக்கத்தைப் பற்றி தரங்கெட்டு அசிங்கமாகப் பேசுவான். அப்போதெல்லாம் முத்துவுக்கு, தாயைக் கொச்சைப் படுத்திப் பேசும் தன் தந்தையின் மீது வெறுப்பும், கோபமும் கொப்புளிக்கும். தான் ஒரு நல்ல குடும்பத்தில் பிறக்கவில்லையே என்கிற ஆதங்கம் மேலோங்கும்.

ஆனால், தன் தந்தை அவ்விதம் பேசிய அசிங்கங்களெல்லாம் தற்போது உண்மையாகிப் போனதை நினைத்தபோது முத்துவின் உடம்பு பதைத்தது. ஒரு கணம், அன்று தான் பார்த்ததை தன் தந்தையிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தவன், அடுத்த கணம் அதனால் ஏற்படப் போகும் விபா£தங்களை நினைத்துப் பயந்தவனாய், அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

தன் வீட்டுக் குடிசையில் அன்று நடந்ததை மறுபடியும் நினைத்துப் பார்த்தான்.

பள்ளியிலிருந்து வழக்கம்போல் அன்றும் மூர்த்தியுடன் அவன் வீட்டிற்குச் சென்றான். மறுவாரம் மூர்த்திக்கு பூனூல் கல்யாணமாதலால், அதற்காக முக்கியமானவர்களை நேரில் அழைப்பதற்காக சாம்பசிவம்-யோகாம்பாள் தம்பதியினர் வெளியே கிளம்ப, மூர்த்தியும் அவர்களுடன் ஒட்டிக் கொண்டான். தனித்து விடப்பட்ட முத்து, தன் தந்தைக்காக காத்திராமல், சீக்கிரமாக தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றான்.

ஒருக்களித்திருந்த தன் வீட்டுக் குடிசையின் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில், அங்கே தன் தாய் சைக்கிள் கடை செல்லப்பாவின் மடியில் படுத்தபடி அரை குறை ஆடையுடன் குலாவிக் கொண்டிருந்த அவலத்தைக் கண்டவன், மெளனமாக விலகிச் சென்றான்.

அடுத்த சில தினங்கள் முத்து தன் தாயிடம் எதுவும் பேசவில்லை. மிகப் பெரும்பாலான நேரங்களை மூர்த்தி வீட்டில்தான் கழித்தான். மூர்த்திக்கு நடக்கப் போகும் பூனூல் கல்யாணத்தை முன்னிட்டு இவனுக்கும் புதுத் துணிகள் எடுக்கப் பட்டன. மூர்த்தியின் வீட்டில் விருந்தினர்கள் கூட ஆரம்பித்தனர். வீடு விசேஷக் களை கட்டியது.

மறு நாள், விடிந்தால் மூர்த்திக்கு பூனூல் கல்யாணம். தினமும் குடித்துவிட்டு கலாட்டா செய்யும் மாயாண்டி, அன்று இரவு குடிசைக்கு வரவில்லை. முத்து நிம்மதியாகத் தூங்கி காலை ஆறு மணிக்கே எழுந்து மூர்த்தியின் வீட்டிற்கு சென்றான். அவர்கள் வீட்டிலேயே குளித்துவிட்டு, புதுத் துணிகள் அணிந்து மூர்த்தியின் பூனூல் கல்யாணத் தோழனானான்.

பூனூல் வைபவத்தின்போது, சாம்பசிவ ஐயர் முத்துவுக்கும் ஒரு கள்ளப்பூனூலை சாஸ்திரிகளிடம் போட்டுவிடச் சொல்ல, அவர் ‘இது என்ன கூத்து’ என்பதைப் போல் வேண்டா வெறுப்பாக அதைச் செய்தார். முத்து கள்ளப் பூனூலில் ஜொலித்தான். மூர்த்தியின் பூனூல் கல்யாணம் நல்லபடியாக முடிந்தது.

காலை பத்து மணியிருக்கும்… வீட்டு வாசலில் பொ¢ய அரவம் கேட்டு, சாம்பசிவ ஐயர் வெளியே சென்று பார்த்தார். முத்துவும், மூர்த்தியும் அவரைப் பின் தொடர்ந்தார்கள்.

வாசலில் இருபது, இருபத்தைந்து பேர் கூடியிருந்தனர். அவர்களிடம் அமைதியின்மையும், கூச்சலும் காணப் பட்டது. முத்துவை தங்களுடன் உடனே வரச் சொல்லி இரைந்தார்கள். ஏதோ ஒரு விபா£தத்தை உணர்ந்த சாம்பசிவம் வந்திருந்தவர்களிடம் என்னவென்று விசாரிக்க, முந்தைய இரவு முத்துவின் தந்தை மாயாண்டி கள்ளச் சாராயம் சாப்பிட்டதால் ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டானென்றும், சடலம் வீட்டில் கிடப்பதாகவும், முத்து தன் தந்தைக்கு கொள்ளிபோட தங்களுடன் உடனே வர வேண்டும் என அவசரப் படுத்தினார்கள்.

கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் கோபத்துடன் முத்துவை நெருங்கி, “எல அப்பன் செத்துக் கிடக்கான், உனக்கு இங்க அய்யிரு வீட்ல என்னல வேல? இது என்னல உடம்புல புதுக் கயிறு?” கள்ளப்பூனூலை பற்றி இழுத்தார்.

மிகுந்த ஆத்திரத்துடன் அவர் கையைத் தட்டிவிட்ட முத்து குரலில் விரக்தி தொனிக்க, “ஒழுக்கம் தவறிய அப்பனும் ஆத்தாளும் எனக்கு வேண்டாம்…கள்ளச் சாராயம் குடித்துச் செத்த ஆளுக்கு நான் ஏன் கொள்ளி போடணும்? அந்தாளு முகத்தைப் பார்க்கிறதே பாவம்…என்னால இப்ப அங்க வர முடியாது… நீங்களே ஆக வேண்டியதைப் பாருங்க” என்றான். பேசிய வேகத்தில் உடம்பு பட படத்தது. கண்களில் நீர் முட்டியது.

நிலமையின் தீவிரத்தை உணர்ந்து பதட்டமடைந்த சாம்பசிவம், “முத்து நீ என்னப்பா பேசற… உடனே கிளம்பு” என்றார்.

கலவரமடைந்த முத்து வீட்டிற்குள் திரும்பவும் ஓடிச் சென்று, ஒரு அறையினுள் தஞ்சமடைந்து தன்னைப் பூட்டிக் கொண்டான்.

செய்வதறியாது திகைத்த கூட்டத்தினர், ஐயர் வீட்டில் விசேஷம் என்பதால், ரசாபாசமாக எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற அக்கறையினால் முணுமுணுத்தபடி அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

முத்துவின் இந்தச் செய்கை, சாம்பசிவ ஐயருக்கு ஒரு கணம் ஆச்சரியமளித்தாலும் – அடுத்த கணம் பதினைந்து வருடங்களுக்கு முன்னால், யோகாம்பாள் தன் பிரசவத்திற்காக ஊருக்கு சென்றிருந்தபோது, தான் முத்துவின் தாயாரிடம் சறுக்கியதையும், அதன் விபரீத விளைவினால் அவள் கர்ப்பமுற்று வேலையிலிருந்து நின்று கொண்டதையும், நினைத்துக் கொண்டார்.

அடுத்த பத்து நிமிடங்களில் முத்து அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தான்.

சாம்பசிவ ஐயர் அவனை நெருங்கி தன் பால் இழுத்து அணைத்து, அவன் தலை முடியை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார்.

அந்த வருடலில், ‘என் பிள்ளை அடுத்தவனுக்கு கொள்ளி போடாதது இயற்கையும், நியாயமும்தானே’ என்கிற பெருமிதம் தொனித்தது.

Print Friendly, PDF & Email
என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *