அச்சம் தவிர்த்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 8,762 
 
 

ரயில்வே கேட்டைக் கடந்து, கிருஷ்ணன்கோவில் கண்மாயின் மேட்டில் ஏறி, வளைந்து சென்ற அந்த மேட்டில் பயணித்து. பின் சரேலென்று இறங்கி, வலது புறம் இருந்த காவல் கோபுரத்துடன் கூடிய கிறித்தவ தேவாலயத்தைக் கடந்து, அத்திகுளம், கிராமத்தின் சாயாக்கடைகள், சைக்கிள் கடைகள், ஊர்ப்பொதுச்சாவடி யாவும் கடந்து, ஒடுங்கிய தார்ச்சாலையின் வலது பக்கம் வண்டியை ஒடித்த போது, ஸ்கூட்டரின் முன்பக்கம் கைப்பிடியுடன் மேலும், கீழுமாய் தடால் தடாலென்று குதித்தது.

இந்த வட்டாரத்திலேயே மிகவும் மோசமான சாலை என்று பேரெடுத்தது அத்திகுளத்திலிருந்து நாச்சியார்பட்டிக்குச் செல்லும் ஒற்றையான தார்ச்சாலை. பல்லாங்குழிகள் போல சாலையெங்கும் மேடு பள்ளங்கள், குழிகள். ஒவ்வொர் பள்ளத்திலும் விழுந்து எழுந்த போது, ஸ்கூட்டரின் முன்பக்கமே குலுங்கியது. பிரேக்கை அணைத்து, அணைத்து ஒவ்வொரு பள்ளமாய் பார்த்து, கவனத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டியிருந்தது. அத்திகுளம் விலக்குத் தாண்டியதுமே சாலையின் இரு பக்கங்களும் வானம் பார்த்த பூமி தான். மானாவாரி புஞ்சைக் காடுகள் ‘பஹோ’ வென்று வானம் பார்த்துப்பரந்து கிடந்தன. விரிந்த ஆகாயத்தின் கீழ் பூமி பரந்திருந்தது. கரிசல் பூமியில் எங்கும் மக்காச்சோளப் பயிர்கள். அரை ஆள் உயரத்தில் வானம் பார்த்து மழைக்காக ஏங்கி நின்றன.

கீழ் வான வெய்யிலின் நீண்ட கதிர்கள் பட்ட இடமெல்லாம் பொன் மயம். வழியெங்கும சாலை ஓரம் காவல் காத்து நின்ற கருவை மரங்கள். மருந்துக்குக் கூட மனித நடமாட்டம் அற்ற புஞ்சை பூமி. இங்கு சோளம் விதைத்து விட்டு வீட்டுக்கப் போய் விட்டு, பிறகு நாலு மாசம் கழித்து சாவகாசமாய்த் திரும்பி வந்து அறுவடைக்கு நாள் குறிப்பார்களோ என எண்ணத் தோன்றியது.

வேலியில்லாமலும், எல்லை குறிக்காமலும், சம்சாரிகள், பார்த்த இடமெல்லாம் மக்காச்சோள வெள்ளாமை செய்து வைத்திருந்தார்கள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் கருஞ்சாம்பல் நிறப் பின்னணியும், நிர்மலமான வானமும், காலைப் பொழுதின் அமைதியும், மெல்லிய குளிர் காற்றும், சூரியனின் சுடர்களும், எங்கும் பார்த்த வெள்ளாமை பூமியும் கொண்ட காட்சி ஒரு கணம் கண்களில் நிறைந்தது. சர்வ வல்லமையான தெய்வத்தின் சிருஷ்டி இது தானோ என்று வானம் நோக்கி கை கூப்பிடத் தோன்றியது. இந்தக்காட்சியை வெளியில் தீட்டிய இறைவன் நல்ல ஒரு ஓவியன். நல்ல கலைஞன். அல்லது பரம்பொருளே இப்படி இயற்கையெனும் வடிவம் எடுத்துத் தன் நிஜ விஸ்வரூபத்தைக் காட்டுகிறதோ என்றும் மனதில் ஒரு கணம் பிரமிப்பு தட்டியது. காணும் இடமெங்கும் கடவுளின் மாட்சி என அவன் உணர்ந்தான்.

இத்தகைய சிருஷ்டிகளுக்கு ஒரு காரண கர்த்தா இருந்தே தீர வேண்டும். எனில் அவன் எவ்வாறு இருப்பான்? சகலத்துக்கும் உருவம் தந்த ஒருவனின் உருவம் எப்படி இருக்கும்? பரம்பொருளின் திவ்விய சொரூபம் எப்படி இருக்கும்?

தார்ச்சாலையில் இருந்து பல கிளைச் சாலைகள் பிரிந்து வலதும், இடதுமாக சென்றன. ஸ்கூட்டரை மிகுந்த கவனத்துடனே நிதானமாகத்தான் அவன் செலுத்த வேண்டியிருந்தது. வழியில், காரை வீடுகளும், கான்கிரிட் வீடுகளும் இருந்த நாச்சியார்பட்டி தென்பட்டது. அதன் ஊர்ப்பொது ஊரணி தென்பட்டது. பஞ்சாயத்து நீர்த்தேக்கத்தொட்டி தென்பட்டது. முண்டாசு கட்டிய ஊர் மக்கள் தென்பட்டார்கள்.

சாலையில் இப்போது வேகமெடுத்து முன்னேறிய போது, நல்லம தேவன் பட்டியை ஸ்கூட்டர் கடந்தது. வலது பக்கம் பெரிய பஞ்சாலை நின்றது. அதன் ஊழியர்கள் இரவு ஷிப்ட் முடிந்து சைக்கிள் மிதித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். ஸ்கூட்டர், அந்தத் தொழிலாளிகளின் கூட்டத்தைக் கடந்து மேலே சென்ற போது, சாலை முடிந்து, குறுக்காக ஒரு தார்ச்சாலை ஓடியது. இதுவும் அதே லட்சணம் தான். இந்தச் சாலையில் வலது பக்கம் போனால், புதுச்செந்நெல் குளம் கிராமம். முழுக்க முழுக்க தெலுங்கு மட்டுமே பேசும் வடுக இன மக்கள் வாழும் இடம்.

அவன் ஸ்கூட்டரை இடது பக்கம் ஒடித்து, மேலும் கவனமாகச் சென்றான். வலது பக்கம் ‘ராமலிங்காபரம் 0.5 கி.மீ’ என்று தெரிந்த போர்டைப் புறக்கணித்தான். வேகம் பிடித்து, ஆக்சிலேட்டரை முடுக்க, அது சீறியது. பத்து நிமிஷம் பயணித்த பின், அவன் தேடி வந்த கிராமம் தெரிந்தது. ஊர் வாசலில் நெடுஞ்சாலைத்துறையின் செவ்வக போர்டு “அச்சம் தவிர்த்தான்” என்று சொன்னது. உள்ளே நுழைய, வலது பக்கம் கிராமப்பள்ளிக்கூடம், பஞ்சாயத்து ஆபீஸ், சிறிய ஆஸ்பத்திரி, ஊர் சனங்கள் வம்பளக்கும் சாயாக் கடைகள், உரக்கடை, பலசரக்குக் கடைகள், ஆடு-புலி ஆட்டம் ஆடும் அரசமரத்தடி சிமிண்டுத்தரை, அதில் உறங்கும் வயசாளிகள், பீடி உறிஞ்சும் சட்டை போடாத கூலித் தொழிலாளிகள் யாவற்றையும் கடந்து சென்று, அங்கு காலை பஸ்ஸுக்காகக் காத்து நின்ற, பேன்ட், சட்டையில் பளிச்சென்று தெநிந்த இளைஞனிடம் சென்றவன், ஸ்கூட்டரை நிறுத்தி அதன் இஞ்சினை அணைத்தான்.

‘சார், இங்க பெருமாள் கோவில் எங்க இருக்கு?’

‘பெருமாள் கோவிலா? அது இப்படியே போகணும்.’ கை காட்டினான் ஊர்க்காரன்.

‘கொஞ்சம் சொல்லுங்க சார்!’

‘நேராப் போங்க. அங்க வி.ஏ.ஓ. ஆபீஸ் பக்கம் இடது பக்கம் வளைஞ்சீங்கன்னா, நேரா ஒரு பாதை போகும். அதுல அப்படியே போனா வண்ணான்துறை வரும். அந்த வண்ணான்துறையைத் தாண்டிப் போனா சில வீடுகள் இருக்கும். அது முடியற இடம் தான் அக்ரஹாரம். அந்த அக்ரஹாரத்துல தான் பெருமாள் கோவில் இருக்கு. பாத்துப்போங்க’.

‘ரொம்ப தேங்க்ஸ்’

ஸ்கூட்டரை மீண்டும் உசுப்பி, ஆக்சிலேட்டரை மாற்றி அந்த இளைஞன் காட்டிய திசையில் போனான்.

காலை கரடுமுரடாய் இருந்தது. வண்ணான் துறையைக் கடந்து, வீடுகள் கடந்து, அக்ரஹாரத்திற்குள் நுழைந்தவன் ஏதோ யுத்தம் முடிந்த ஊருக்குள்ளே வந்து விட்டோமோ எனத் திகைத்தான்.

நீண்ட அக்ரஹாரத்தெரு தென்-வடலாய் இருந்தது. ரெட்டை வரிசையிலும் வீடுகள். ஓடு வேய்ந்த காரை வீடுகள். எல்லாமே மொட்டை மாடியுடன் கூடிய வீடுகள். பழைய காலத்துப் பாணியில் அரைத்துப் புசிய வெள்ளைச் சுண்ணாம்புக் காரைக் கட்டிடங்கள். வெண்கலப் பூண் போட்ட இற்றுப்போன முரட்டு மரக்கதவுகள். பூட்டிய மர ஜன்னல்கள்.

ஆள் அரவமற்ற வீதியில் இரு பக்கமும் பார்த்தபடி ஸ்கூட்டரில் சென்றவன், ‘இது அக்கிரஹாரம் தானா?’ என்று தனக்குள்ளே ஒரு கேள்வியும் கேட்டுக் கொண்டான். அந்தத் தெருவின் இடது பக்கம் ஓரிடத்தில், தெருக்குழாயிலிருந்து கொட்டிய தண்ணீர் பிளாஸ்டிக் குடத்தை நிறைத்து, பின் தண்ணீர் குடத்திலிருந்து நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்கு ஸ்கூட்டரை நிறுத்தினான்.

அருகே இருந்த வெண்கலப் பூணிட்ட மரக்கதவு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் முன்புறம் இழைத்த மரங்கள் தாங்கிப் பிடித்த திண்ணை வெறுமையாய் இருந்தது. வந்தவன் குரல் கொடுத்தான்.

‘மாமி… மாமி…’

பதில் இல்லை.

‘மாமி… மாமி…’

நடந்து சென்று, படிகள் ஏறி, திண்ணையில் நின்று மீண்டும் குரல் கொடுக்க, பதில் ஏதும் இல்லை. திண்ணையின் நிழலில் நின்று கதவைத் தட்டியதும், சிறிது நேரம் கழித்து,

‘இதோ வர்றேன்! செத்த இருங்கோ!’

வந்து மெதுவாகக் கதவு திறந்ததும், வந்த பெண் எழுபதைத் தாண்டியிருந்தாள். குள்ளமாய், கரிய உருவம். கசங்கிய, அழுக்குச் சங்கடிப் புடவை கட்டியிருந்தாள்.

‘அங்குச்சி மாமிங்கறது நீங்களா?’

‘ஆமா, நான் தான் அங்குச்சி மாமி. உங்களுக்கு என்ன வேணும்?’

வலது கை கண்களுக்கு மேலே குடை பிடித்தன.

‘என்ன விஷயம். சொல்லுங்கோ!’

‘மாமி, நான் காசினிவேந்தன். ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வர்றேன். என் வீட்டு ஓனர் நாராயணன் மெட்ராஸ்ல இஞ்சினியரா இருக்கார். அவர் இந்த புரட்டாசி மாசம் இங்க ஊருக்கு வர்றார். இங்கு ஶ்ரீனிவாச பெருமாள் கோவில்ல ஏதோ வேண்டுதலாம். நிறைவேத்தணுமாம். அதனால் என்னை முன்னாடியே அனுப்பி வெச்சார்.’

‘அப்படியா! உள்ளே வாங்கோ! இங்க வந்து உக்காருங்கோ. சூடி, இங்க வாம்மா! வந்து மாமாவுக்கு ஒரு ஸ்டூலை எடுத்து போடும்மா!’

‘வாங்கோ மாமா, நமஸ்காரம்!’.

‘சூடி, இந்த மாமா காசினி வேந்தன். ஶ்ரீவில்லிப்புத்தூர்ல இருந்து வந்திருக்கார். ஸ்டூலை எடுத்துண்டு வந்து இவருக்கு போடும்மா!’

சூடி உள்ளே போனாள். ஒரு சிறிய, இருண்ட அறையிலிருந்து ஒரு ஸ்டூலைத் தூக்கிக் கொண்டு வந்து காசினி வேந்தன் அருகே போட்டாள்.

‘இருக்கட்டும் மாமி’ என உட்கார்ந்தான்.

‘நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கோ!’

‘அவர், எங்க வீட்டு ஓனர் வர்ற இருபத்தி மூணாம் தேதி இங்கு ஶ்ரீவில்லிபுத்தூருக்கு டிரெய்ன்ல வர்றார். அவரோடு அவர் ஒஃய்பும் வர்றா. வந்ததும், ஒரு நாள் அங்க ஶ்ரீவில்லிபுத்தூர்லயே தங்கி, சொந்தக்காரா எல்லாரையும் பாக்கறார். மறுநாள், அதிகாலை இங்க அச்சந்தொரத்தான் வர்றா, வந்ததும் இங்க தான் குளிச்சுட்டு, மடியா இங்க சீனிவாசப் பெருமாள் கோவில்ல சேவிச்சுட்டு, பிறகு சக்கரைப் பொங்கல் தளிகை பண்ணி பெருமாளுக்கு அமிசேத்தி. எல்லோருக்கும் விநியோகம். கோவில் வேண்டுதலை முடிச்சுட்டு, மதியம் இங்க இருந்து கிளம்பறா. அவ்வளவு தான். இங்க ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு நீங்க தான் சக்கரைப்பொங்கல் தளிகை பண்ணித் தரணும். அதனால தான் முன்கூட்டியே உங்க கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணி வெக்கச் சொல்லி எனக்கு போன் பண்ணி சொன்னா. தளிகைக்கு வேண்டிய சாமான்கள் எல்லாம் நீங்களே வாங்கி வெச்சிடுவேளாம், அதான் சொல்லிட்டுப் போக வந்தேன்’.

‘என்னால இப்பல்லாம் முன்ன மாதிரி வேலை செய்ய முடியல. இத்தனை வருஷம் எல்லா தளிகை வேலையையும் நானே இழுத்துப்போட்டுண்டு செஞ்சிண்டிருந்தேன். இப்ப உடம்பு தளர்ந்து போச்சு’.

‘இல்ல மாமி! நீங்க தான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்தத் தளிகையை பண்ணித் தரணும். ஒரே ஒரு படி அரிசி. சக்கரைப் பொங்கல். வேணும்னா எல்லா மளிகைச் சாமானையும் நானே கொண்டு வந்து கொடுத்திடறேன். அவ்வளவு தான்!’

‘கேளு. என்னால முடியல. உடம்பு ஆட்டம் கொடுத்துடுத்து. என் ரெண்டு பெண்ணையும் காஞ்சிபுரத்துல கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டேன். என் மூத்த பையன் சந்தானம் ஈ.பி.ல. வேலை பாத்தான். அவன் ஆத்துக்காரி அவனோட வாழப் பிடிக்காம, அவளோட அப்பா வீட்டுக்குப் போயிட்டா. இப்ப என் பிள்ளை சந்தானம் தான் எனக்குப் பாதுகாவல். வெளில போயிருக்கான். இப்போ சித்த நாழில வந்துடுவான்’…

…சந்தானம் வந்து சேர்ந்தான். சட்டை இல்லாத கரிய உடலில் பூணூல் தெரிந்தது. ஒரு துண்டைத் தோளில் போட்டிருந்தான். இடுப்பு வேஷ்டியை மடித்துக் கட்டியிருந்தான்.

‘அம்மா நீ கேட்டபடி பலசரக்கெல்லாம் வாங்கிண்டு வந்துட்டேன். பலசரக்கு கடைக்காரனுக்கு இன்னமும் பாக்கி இருக்கு. அதைத் தீர்க்கச் சொல்லி கடைக்காரன் சொன்னான். இப்போதைக்கு ‘கடனாக் கொடுடா’ன்னு சொல்லி வாங்கிண்டு வந்தேன். ஆமா, இவர் யாரு?’

சந்தானம், இவர் தான் காசினி வேந்தன். ஶ்ரீவில்லிபுத்தூர்ல இருந்து வந்திருக்கார். விவசாயம் பாக்குறாராம். இவரோட ஹவுஸ் ஓனர், மெட்ராஸ்ல இருந்து கோவிலுக்கு பெருமாள் சேவிக்க வர்றாராம். அதுக்கு ஒரு படி சக்கரைப்பொங்கல் தளிகை பண்ணித்தர முடியுமான்னு கேக்காறார்.

‘என்னிக்கு?’

‘வர்ற இருபத்தி மூணாந்தேதி ஞாயித்துக்கிழமை’.

‘வேற ஜோலி வெளியே இல்லாம இருந்தா, இருந்து தளிகை பண்ணித்தர்ரேன்’.

நேரே காரைச் சுவர் அருகே சென்றவன், எண்ணைப் பிசுக்கும், அழுக்கும் ஏறியிருந்த சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாதக்காலண்டரில் உற்றுப் பார்த்து விட்டு,

‘மாமா இருபத்து மூணாம் தேதி எனக்கு வேற ஜோலி இல்ல. அதுக்கு முந்தின நாள், ராஜபாளையத்துல ஒரு தெவசத்துக்கு தளிகை. அட்வான்ஸ் கை நீட்டி வாங்கிட்டேன். அதுக்கு அடுத்த நாள், சும்மா தான் இருக்கேன். இங்க தான் இருப்பேன். அவர் வந்தா மடப்பள்ளில வெச்சு தளிகை பண்ணித் தர்றேன்’.

‘ரொம்ப தேங்க்ஸ்ன்னா. எங்கே நீங்க மாட்டேன்னு சொல்லிருவேளோன்னு பயந்திண்டே இருந்தேன்’.

‘இருந்தா தளிகை கைங்கரியம் பண்ணி வெக்கப்போறேன். நீங்க பணம் தரப்போறேள். இதுல என்னத்துக்கு பிடிவாதம்?!’ – சந்தானம் விகல்பமின்றி சொன்னான்.

‘இந்தாங்கோ. பிடிங்கோ அட்வான்ஸ்’ ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணி எடுத்து சந்தானத்திடம் நீட்ட, அவன் உடனே வாங்கிக்கொண்டு அங்குச்சி மாமியிடம் நீட்டினான். அவள் வாங்கிக்கொண்டு சமையற்கட்டுக்குள் நுழைந்தாள்.

அங்குச்சியைப் பின் தொடர்ந்து சென்ற சூடி தன் பாட்டியிடம்,

‘பாட்டி, எனக்கு க்ரீம் பிஸ்கட்டு வேணும். நேத்திக்கே வாங்கித் தர்றேன்னு சொன்னியே!’ என்று கோரிக்கை மனுவைப் பாட்டியிடம் தந்தாள்.

அங்குச்சி உடனே,

‘க்ரீம் பிஸ்கட். அவ்வளவுதான? கொஞ்ச நேரம் கழிச்சி, நாடார் கடைக்குப் போயி, உனக்கு நீ கேட்ட க்ரீம் பிஸ்கட் வாங்கித் தர்றேன்டி என் செல்லம்!’ என்றாள்.

காசினி வேந்தன், ‘அண்ணா, இங்க வந்தது வந்துட்டேன். ஒரு சுத்தி கோவிலைப் பார்த்துட்டுப் போயிடறேன்!’ என்றான்.

‘இதோ வாங்கோ. சேர்ந்தே போகலாம்‘ என்றான் சந்தானம்.

அக்ரஹாரத்தின் தென் மூலையில் தெருவை அடைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது அந்தப் பெருமாள் கோவில். தூரத்தில் இருந்து பார்த்த போதே, கட்டிடம் முழுக்க மேலிருந்து கீழாக வெள்ளையும், செங்காவிப் பட்டைக் கோடுகளும் மாற்றி மாற்றி அடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

கோவில் வாசல் படிக்கட்டுகளில் காகிதக் குப்பைகளும், புகையிலைப் பொட்டலத்தின் பிளாஸ்டிக் உறைகளும், பீடித்துண்டுகளும் சிதறிக் கிடந்தன.

கோவில் வாசலில் இருந்த பிரம்மாண்டமான கதவு பதினைந்து அடி உயரத்தில், பழங்கால கருங்காலி மரத்தில் செய்யப்பட்டிருந்தது. பெயிண்ட இல்லாமல் இத்துப் போயிருந்த கதவுகள். கதவில் தொங்கிக் கொண்டிருந்த நீளச்சங்கிலிகளை இணைத்து நின்ற பெரிய இரும்புப்பூட்டு துரு ஏறிப் போயிருந்தது. சாவியைப் பூட்டின் துவாரத்தில் நுழைத்த சந்தானம்,

‘இந்தக் கோவிலுக்கு யாருமே இப்ப வர்றதில்லை. எப்பவாவது யாராவது வருவா. அவா வர்ற போது கதவைத் திறக்கறது தான். இப்பல்லாம் யாருமே இங்க வர்றது கிடையாது.’

சாவியால் திருகித் திருகி, குடைந்து, குடைந்து, சந்தானம் பூட்டோடு போராடடம் நடத்தியதில், கதவுகளில் எண்ணையிடப்படாத கீல்கள் ‘கிர்ர்ரீச், கிர்ரிரீச், கிர்ரீர்ர்… கிர்ரீர்…’ என்று நாராசமாய் சப்தம் எழுப்பின.

உள்ளே நுழைந்ததும், தூசியும், தும்பட்டையுமான சிமெண்ட் தளம். அங்கும், இங்கும் உடைந்து செங்கல்கள் துருத்திக் கொண்டு நின்றன. கோவில் எங்கும் குப்பை, நியூஸ் பேப்பர் காகிதங்கள், பிளாஸ்டிக் பைகள், இலை தொன்னைகள். கோவிலின் மேற்கு மூலையில் ஒரு பெரிய அரச மரம். அது இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது. கொடுக்காப்புளி மரங்கள், இலையின்றி மொட்டையாகத்தெரிந்தன. சிமிண்ட் தளமெங்கும் அரச மரத்தின் காய்ந்த இலைகள் தரையே தெரியாதவாறு மூடியிருந்தன. கோவிலின் கிழக்கு மூலையில் மடப்பள்ளி. அதன் இரும்பு ஜன்னல்கள் புகையோடிக்கிடந்தன. மடப்பள்ளி பூட்டியே கிடந்தது.

‘கோவிலில் யாரும் திருவாராதனம் பண்ணலியா?’

‘யார் பண்றா? இங்க திருவாராதனமெல்லாம் கிடையாது. அதெல்லாம் நின்னு ரொம்ப வருஷமாச்சு’.

‘நான் ஆரம்பத்துல பண்ணின்டு தான் இருந்தேன். ஒரு அரைக்காப்படி பெருமாளுக்கு அதைக்கொண்டு தளிகை அமிசேத்தி பண்ணுவேன். இதுக்கு எனக்கு எக்ஸிகியூட்டிவ் ஆபிசர் ஒரு நாளைக்கு அறுபது ரூபாய் சம்பளம்ன்னார். அதை வாங்கறதுக்கு மடவார் வளாகம் கோவிலுக்குப் போனேன். இந்தக் கோவிலுக்கு அங்க தான் ஆபீஸ். அங்க இருக்கற கிளார்க் ‘சம்பளம் போடுறேன். உன் சம்பளத்துல நூத்துக்கு இருபது ரூபா கமிஷன் குடு. இல்லாட்டா அதையும் போட மாட்டேன்னான்’. ‘உன் சம்பளத்த நீயே வெச்சுக்கோ’ன்னு சொல்லிட்டுத் திரும்பி வந்துட்டேன்’.

‘உன் கிட்ட கமிஷன் கேட்டவன் யாருன்னு சொல்லு. நான் மேலதிகாரிட்ட சொல்றேன்.’’

‘அதச்சொல்லி என்ன பண்ண? அன்னிக்கு இருந்து, ஒரு நாள் ஒரு வேளை திருவாராதனம்ன்னு அரைக்காப்படி அரிசி சாப்பிட்டுண்டு இருந்த பெருமாள் அதுக்கப்புறம் நித்திய பட்டினி தான்’.

‘இது பாவமில்லையா? பெருமாளைப் பட்டினி போடலாமா? நமக்கெல்லாம் படியளக்கறதே அந்தப் பெருமாள் தானே. அவருக்கே ஒரு அரைக்காப்படி அரிசிக்கு வக்கில்லையா?!’

‘இது அந்த ஈ.ஓ. ஆபீசருக்கத் தெரியணும். எரியற வீட்டுல பிடுங்கினது ஆதாயங்கற மாதிரி கோவில்ல கிடைச்சதைச் சுருட்டிண்டு கம்பி நீட்டறான் பாரு. மடவார்வளாகம் கோவிலுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கியெல்லாம் ஒழுங்கா வசூல் பண்ணினாலே இந்தக் கிராமத்துல இருக்கற எல்லாருக்கும் தினசரி இலவசமாவே சாப்பாடு போடலாம். எவன் குத்தகை பாக்கியை வசூல் பண்றான்?’.

சந்தானம் முன்னே நகர்ந்து, நான்கு படிகள் ஏறி, மங்கலான நவ்தால் பூட்டைச் சாவி போட்டுத்திறந்து, இரும்பு ஷட்டர் கேட்டை விலக்கினான். உள்ளே நுழைந்து பார்க்க, இருளில் பெருமாள் நின்றிருந்தார். கண்கள் இரண்டிலும் ஒட்டப்பட்டிருந்த வெள்ளி நயனங்கள். இருளில் கிடந்ததாலோ என்னவோ அருளே இழந்தது போலத் தோன்றினார். அருகில் அமிர்தவல்லி நாச்சியார் மற்றும் உபய நாச்சியார்கள்.

சந்தானம் கீழே இருந்த பழைய டால்டா தகர டப்பாவிலிருந்து மீந்து போன எண்ணையை எடுத்து, தீபக்காலில் ஊற்றி, கால பைரவர் தூணில் தடவி, தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு போய் விளக்கேற்றினான்.

இப்போது விளக்கொளியில் சீனிவாசப் பெருமாள் கரிய திருமேனி காட்டி நின்றார்.

‘இவர் தான் சீனிவாசப் பெருமாள். நின்ற திருக்கோலம், வடக்கே பார்த்து நின்று சேவை சாதிக்கிறார். வலது பக்கம் அமிர்தவல்லித் தாயார். அங்கே பக்கத்தில் உபய நாச்சியார்கள். தீப ஒளியில், கர்ப்பக்கிருகத்தில் நிழல்கள் அசைந்தன. இவர் தான் வருஷக்கணக்கில் பட்டினி கிடக்கார்’.

‘சரி. இங்க இருக்கற அக்கிரஹாரத்துல இருக்கறவா, யாராவது முன் வந்து நானாச்சுன்னு சொல்லி பெருமாளுக்கு நித்தியப்படி திருவாராதனம் பண்ண வேண்டியது தானே?!’

‘யாரு பண்ணுவா? ஆள் இங்க தங்கினாத்தானே! எல்லாரும் படிச்சு முடிச்சு, வேலை கிடைச்சதும் மெட்ராஸ், பாம்பே டெல்லின்னு போயாச்சு. பல பேர் அமெரிக்கா, கனடான்னு பறந்து போயாச்சு. பெருமாள் மட்டும் தான் இங்க அநாதையா நிக்கறார். அவருக்கு பாஸ்போர்ட், விசா கிடைச்சா, அவரும் பறந்து போயிடுவார்’.

‘அண்ணா, பெருமாளைக் கேலி பண்ணாதீங்கோ. அவர் வரப்பிரசாதி’.

‘அவர் வரப்பிரசாதியாவே இருக்கட்டும். அவரை அநாதையா விட்டுட்டு எல்லாரும் அசலூருக்குப் போயாச்சே! என்ன பண்றது? கடைசியா இங்க அக்கிரகாரத்துல இருந்தது அம்மாளி பாட்டி ஒருத்தி தான். அவளோட பையனுக்கு வேலை கிடைச்சதும், அவளைக் கல்கத்தாவுக்குக் கூட்டிண்டு போயிட்டான். அங்க அவ சௌக்கியமா இருக்கா. பெருமாள் தான் இங்க ஒரு சுகமும் இல்லாம இருக்கார்’.

‘அக்கிரஹாரத்துல இப்ப யாரு இருக்கா?’

‘நானும் என் அம்மாவும், என் பொண்ணும் மட்டும் தான். மத்தவா எல்லாம் வீட்டை வித்துட்டுப் போய் வெளி தேசத்துல செட்டிலாயாச்சு. இப்ப நான் குடியிருக்கற வீட்டை உள்ளூர்ல இருக்கற பரமுத் தேவர் ரெண்டு லட்ச ரூபாய்க்கு கிரையத்துக்குக் கேக்கறார். வித்துட்டு நாங்களும் வெளியூர் போகலாமான்னு தோண்றது. நாங்க தான் இங்க இருக்கற கடைசி குடும்பம்’.

காசினி வேந்தன் தீப ஒளியில் சீனிவாசப் பெருமாளைப் பார்த்தான். விளக்கொளியில் அவர் சந்நிதானம் ஒளிர்ந்தது. பெருமாள் தன்னந்தனியே அச்சத்துடன் நடுங்கிக் கொண்டே நிற்பது போலத் தோன்றியது. அங்கு சந்நிதி மட்டுமே இருந்தது. சாந்நித்யம் இல்லை. கர்ப்பக்கிருகத்துக்குள் எலிகளின் ‘கீச்சு…கிரீச்…கிரீச்…கிரீச்’ சத்தம் இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.

கர்ப்பக்கிருகத்தை சந்தானம் பூட்டினான். வெளியே வந்த காசினி வேந்தன். வானத்தைப் பார்த்தான். வெய்யில் சூடேறிக் கொண்டிருந்தது. அரச மரத்தில் அமர்ந்திருந்த காக்கைகள் ஏக நேரத்தில் ஒன்றாய்க் கரைந்தன.

‘இந்த ஊருக்கு அச்சந்தொரத்தான்னு ஏன் பேர் வந்தது?’.

‘அது அச்சந்தொரத்தான் இல்ல. அச்சம் தவிர்த்தான். இந்தப் பெருமாள் எல்லாரோட அச்சத்தையும் நீக்கி தைரியம் அளிப்பார். அதனால அவர் பேரு அச்சம் தவிர்த்த பெருமாள்’.

‘அப்ப நான் கிளம்பறேன். சனிக்கிழமை அன்னிக்கே தளிகைக்குத் தேவையான எல்லா மாளிகைச் சாமான்களையும் வாங்கிண்டு வந்திடறேன். ரொம்ப முக்கியம், சக்கரைப் பொங்கல், நெய்யில் பண்ணினதா இருக்காணும், கிஸ்மிஸ், முந்திரியோட, மடப்பள்ளியை நீயே சுத்தம் பண்ணிக்கிறயா?’

‘அதெல்லாம் நான் பாத்துக்கறேன். ஞாயித்துக்கிழமை நீங்க சீக்கிரமே வந்திடுங்கோ. மத்தியானத்துக்கு மேல வீட்டைக் கிரயம் பேசி அட்வான்ஸ் தர்றதுக்கு பரமுத் தேவர் வந்தாலும் வருவார்.

திரும்பும் வழியில், நாச்சியார்பட்டி தாண்டியதுமே ஸ்கூட்டரில் வேகம் கூட்டினான் காசினி வேந்தன். அத்திகுளம் விலக்குக்கு முன்பாக பரந்த, காய்ந்த கரிசல் பூமியில் மக்காச்சோளக் காடு எல்லையின்றி விரிந்து கிடந்து. பின்புலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும், இள நீல நிறத்தில் வெளிறிய வானமும் தென்பட்டது. ஏனோ, அப்போது, அச்சம்தவிர்த்தான் பெருமாளின் உருவம் அங்கு எல்லா இடத்திலும் படர்ந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது.

***

1. தளிகை சமையல்

2. அமிசேத்தி தெய்வத்திற்கு உணவு படைத்தல்

3. மடப்பள்ளி சமையலறை

4. கைங்கரியம் உதவி, சேவை

5. திருவாராதனம் பூஜை, வழிபாடு

6. அரைக்காப்படி முகத்தல் அளவை

7. உபய நாச்சியார்கள் மனைவியர்

8. சேவை சாதிக்கிறார் தோன்றுகிறார்

9. நித்தியப்படி திருவாராதனம் தினசரி பூஜை

– 2014-ல் வெளியான “முத்தா” சிறுகதைத்தொகுப்பில் இந்தச்சிறுகதை வெளியானது

அடியேனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர். தொழில் தனியார் பள்ளி ஆசிரியர். இது வரை மொழிபெயர்ப்பு, புனைவு இலக்கியம், குறு நாவல்கள், கட்டுரை நூல்கள், ஆங்கிலக்கவிதை, தமிழ்த்திரைக்கதை, என்று 15 நூல்கள் வெளியிட்டுள்ளேன். எமது 3 நூல்களுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நூல் வெளியிட நிதி தந்துள்ளது. தொலைந்து போன கால்டுவெல் ஐயரின் நூல்களை மீட்டெடுத்து, மீள் பதிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ். ரமேஷ்.அலமேலு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *