ஒருஆய்வு அதிகாரியாய் அந்த பள்ளி வளாகத்தில் நுழைந்து அலசி ஆராய்ந்து வந்து தலைமை ஆசிரியை முன் அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்குள் ஏகப்பட்ட வியப்பு, திகைப்புகள் !!
காரணம்…? எங்கும் சுத்தம், சுகாதாரம், மரம், செடிகொடிகள் வளர்ப்பு!
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி.
இந்த இடம் வெட்ட வெளிச்சம் வெற்றிடமாய் உள்ள அரசு புறம்போக்கு 50 ஏக்கர் நிலம். இதை அப்படியே வளைத்து சுற்றுச்சுவர் எழுப்பி அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அடுத்து உயர் நிலைப்பள்ளி என்று பகுதி, பகுதியாகப் பிரித்து ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பெரிய பாடசாலையாக்கிவிட்டார்கள் அரசாங்கத்தார்கள்.
அதுவே அவருக்குள் பெரிய வியப்பாகத்தானிருந்தது.
எங்கும் சுத்தம் சுகாதாரம். மாணவ மாணவியர்கள் பள்ளியில் அமர்ந்து படிக்கும் ஒழுக்கம். பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரிய, ஆசிரியைகளும் நேர்மையான நடப்பு. குடிநீர் வசதி. கட்டண கழிப்பிட பராமரிப்பையும் தாண்டிய கழிப்பிட சுத்தம். எப்படி இப்படி ஒரு நிர்வாகம்…?
அடிமட்ட ஊழியர்களிலிருந்து மேல் மட்ட நிர்வாக ஆட்கள் வரை எல்லோருமே மாற்றம் பெற்று வந்து செல்பவர்கள். அப்படி இருந்தும் எப்படி இப்படி ஒழுங்கு, நிர்வாகம்…?
ஆரம்பித்தவன் ஒழுங்காக ஆரம்பித்ததால் அடுத்து வந்தவர்களும் அதனைத் தொடர்ந்தார்களோ..?! முன் ஏர் எப்படியோ. அப்படியே பின் ஏரும் என்பதுவோ..? !அப்படித்தானிருக்க வேண்டும்..! பின்னால் வந்தவர்கள் தன் பெயர் கெடாமல் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்..?!
பள்ளியின் பின் புறம்….. வானளாவிய மரங்கள். எல்லா மரங்களிலும் ஆண், பெண் பெயர்கள் தொங்கல். ஏன்..??….
“மேடம். !” அழைத்தார்.
“சொல்லுங்க சார்…?” அவள் பவ்வியமாகக் கேட்டாள்.
“பள்ளியில் எப்படி இவ்வளவு மரங்கள், பின்னால் காடு…?” கேட்டார்.
“எல்லாம் இந்த மூன்று பள்ளி மாணவ மாணவியர்கள் அன்பளிப்பு சார்.!” அடக்கமாக சொன்னாள்.
“புரியல..?!” குழப்பமாகப் பார்த்தார்.
“இங்கே மாணவ மாணவிகள் தவறு செய்தால் தண்டனை அடித்தல், முட்டிப் போடுதல், ஓடுதல், எழுதுதல் என்கிற கடுமைமான தண்டனை எல்லாம் கிடையாது. மரக்கன்றுகள் நடச் செய்வோம். !” என்றாள்.
புதிய சிந்தனை!! – சந்திரசேகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அப்படியா…???..”
“ஆமாம் சார். ஒருவன் சரியாய்ப் பாடம் படிக்கலை, வீட்டுப் பாடம் எழுதவில்லை என்றால் மரக்கன்று நடச் சொல்வோம். அடுத்த நாள் வேறொருவன் தவறு செய்தால் அதற்கு தண்ணீர் ஊற்றச் சொல்வோம். அப்படி வளர்த்ததுதான் இத்தனை மரங்கள். இடம் காடாச்சு. அருமையான நிழல், சுத்தமான காற்று. இதெல்லாம் இந்த பள்ளி மாணவ மாணவியர்கள் இந்த பள்ளிக்குக் கொடுத்த கொடை !” என்றாள்.
“இப்படி செய்யச் சொன்ன ஆசிரியர் யார்..?”
“ஒரு பையனோட அப்பா. சார்!”
“அவர் அதிகாரியா, அரசியல்வாதியா..?”
“ஒரு சாதாரண பக்கத்து கிராமத்து ஆள் சார். கொஞ்சம் படித்தவர். விபரம் புரிந்தவர் , விவசாயி”
“கொஞ்சம் விபரம் சொல்லுங்களேன்…?”
“அவர் பையன் பெயர் அசோகன். இங்கு முதன் முதலில் தொடங்கப்பட்ட ஈராசிரியர் தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவன். ஒருநாள் சரியா பாடம் படிக்கலைன்னு ஆசிரியை பிரம்பால் அடிச்சிருக்காங்க.. அதனால் அவனுக்கு சுரம். மறுநாள் பள்ளிக்கு வரவில்லை.
மாறாய்… அவன் அப்பா பள்ளிக்குள் வந்து..”பையனை ஏன் அடிச்சீங்க..? எதுக்கு அடிச்சீங்க, மாணவ, மாணவிகள் தவறு செய்தால் இப்படித்தான் மிருகத்தனமாய்த் தாக்கி உங்கள் பலத்தைக் காட்டி அவர்கள், மனம், உடலில் காயத்தை ஏற்படுத்துவதா…?” ன்னு கத்தி கூச்சல் போட்டிருக்கார்.
“இப்படி இந்த பிஞ்சு மாணவ மாணவிகளை மிருகத்தனமாய் தாக்கினால் மனித வள மேம்பாடு கழகம் வரை புகார் செய்வேன்!”னு மிரட்டல் சார்.
ஆசிரியைகள் இருவரும் பயந்து போய்… “பையன் படிக்கலை, தவறு செய்தால் அடிப்பதைத் தவிர தண்டிப்புக்கு வேறு என்ன வழி சார்…?” கேட்டிருக்காங்க.
அப்போதான் அவர், “தண்டனை எவருக்கும் மனவலி, உடல் வலி ஏற்படுவதாய் இருக்கக் கூடாது. முக்கியம் குழந்தைகளுக்கு அப்படி ஏற்படுவதாய் இருக்கக்கூடாது. மாறாய்….அவர்கள் திருந்துவதற்கும். பின்னால் நினைத்துப் பெருமை படுவதற்கும் ஏற்றதாய் இருக்கனும் சொல்லி…தவறு செய்பவர்களை மரக்கன்றுகள் நடச் சொல்லி இந்த இடத்தை மரமாக்கி, காடாக்கி இந்த மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யுங்கள்!” ன்னு ரொம்ப சர்வ சாதாரணமாய் சொல்லிப் போனார் சார்.
நல்ல விசயமாய் இருக்கே..? ன்னு அந்த ஆசிரியைகள் மனதில் பதிந்து போக….மறுநாளிலிருந்து செயல் படுத்த ஆரம்பித்து விட்டார்கள். அது அப்படியே தொடர….இங்கே இவ்வளவு பெரிய மரங்கள் காடு!” நிறுத்தினாள்.
“அப்புறம்… நிறைய மரங்களில் அசோக் பெயர் இருக்கே.? அவன் அவ்வளவு மக்கா..?” கேட்டார்.
“இல்லே சார். நல்லா படிப்பான். முதல் ரேங்க் வாங்குவான். அவன் பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கேதான் படித்தான். மரம் வளர்ப்பதில் அவனுக்கு அதிகம் ஈடுபாடு. அதற்காகவே அடிக்கடி தப்பு செய்வான்…”
“ஓஓ…..!” கேட்கவே ஆச்சரியமாக இருந்தது.
“அந்த பையன் இப்போ என்ன பன்றான்….? ”
“இ…இல்லே சார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போது சாலை விபத்தில்…” அவளுக்குத் தொண்டை கமறியது. கண்கள் கலங்கியது.
சந்திரசேகரனுக்குள்ளும் சோகம் வந்து அப்பியது.
“இந்த மரம் வளர்ப்பைப் பற்றி இவ்வளவு தெளிவாய் விலாவாரியாக சொல்றீங்களே…நீங்கதான் அவன் ஆரம்பத்துக்கால ஆசிரியையா …?” கேட்டார்.
“இல்லே சார் தாய் !” கண்ணீர் விட்டாள்.
சந்திரசேகரனுக்குள் இடிகள் இறங்க உறைந்தார்!