கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 10, 2023
பார்வையிட்டோர்: 3,386 
 
 

பிள்ளையார்கோவில் தெருவில், அதுதான் பெரிய பங்களா. எதிரே ஓலை வேய்ந்த சின்னச்சின்ன மண்சுவர் வீடுகள். பங்களாவின் முன்புறமாக நீண்ட கம்பிகேட் போடப்பட்டிருந்தது. கம்பிகேட்டின் உட்புறமாக நான்கு வயது சிறுவன் ராஜா விளையாடிக் கொண்டிருந்தான்.

பங்களாவில் அவன் பிறந்து விட்டதால் விளையாட்டுச் சாமான்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அவ்வழியாகச் செல்பவர்கள் ராஜாவை நின்று பார்க்காமல் செல்லமாட்டார்கள். அவ்வளவு அழகு! சுருள் சுருளான சுருட்டை முடி, சிரிக்கும் கண்கள். மெல்லிய சிவந்த உதடுகள்.

All in the Game

அவன் அம்மா விஜயா, கேட்டிற்கு உட்புறத்தில் போடப்பட்டுள்ள ஊஞ்சலில் ஆடிக்கொண்டே, மகன் ராஜாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிலநேரங்களில் நாவல் படித்துக் கொண்டிருப்பாள். அவளது ஊஞ்சல் ஆட்டமும் ராஜாவின் விளையாட்டும் தினமும் பங்களாவில் காணும் காட்சிகள்.

அந்த பங்களாவின் அருகில் மங்கம்மாளின் சிறு மண்சுவர் குடிசை. தென்னந்தட்டிக் கதவு போடப்பட்டிருந்தது. குடிசைக்குள் இரண்டு மூன்று மண்
பானைகள். அழுக்கடைந்த பிளாஸ்டிக் வாளி ஒன்று.

இதில் வசிக்கும் மங்கம்மாளும், அவளுடைய நான்கு வயது சிறுவன் நாச்சிமுத்துவும் அன்றாடங்காச்சிகள். நாச்சிமுத்து பிறந்தபோது மங்கம்மாளின் கணவன் எங்கோ சென்றுவிட்டான். இன்று வரை திரும்பவில்லை. எங்கு போனான், என்ன ஆனான்..? யாருக்கும் தெரியாது.

மங்கம்மாள் வேலையாக இருக்கையில் குடிசை வாசலில் இருக்கும் சிறுசிறு கற்களை எடுத்து நாச்சிமுத்து விளையாடுவான்.

அந்த வழியாகச் செல்பவர்கள் நாச்சிமுத்துவைப் பார்த்து முகம் சுளிப்பார்கள். காரணம்,அவன் அணிந்திருக்கும் அழுக்கடைந்த சட்டையில் சிறுசிறு பொத்தல்கள் காணப்படும். தலைமுடி எண்ணெய் காணாமல் காட்சிதரும். மண்ணில் எப்போதும் விளையாடுவதால் அவன் கைகால்கள் புழுதிபடிந்து காணப்படும்.

அன்றும் அப்படித்தான். வழக்கம்போல் நாச்சிமுத்து கற்களைப் பொறுக்கி விளையாடிக் கொண்டிருந்தான். சுவாரஸ்யத்தில் நகர்ந்து நகர்ந்து விஜயாவின் பங்களா கேட் வரை சென்றுவிட்டான். ஆர்வ மிகுதியில் கேட் கம்பியைப் பிடித்தபடி விளையாடத் தொடங்கினான்.இதைப் பார்த்த ராஜா, தன் பொம்மைகளை அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தான். நாச்சிமுத்துவைப் பார்க்கப் பார்க்க ராஜாவுக்கு நகரும் பொம்மையைக் காண்பது போல் இருந்தது. உடனே ‘ஆ… ஊ…’ என குரல் கொடுத்தான்.

பதிலுக்கு நாச்சிமுத்துவும் மகிழ்ச்சியுடன் ‘ஆ… ஊ…’ எனக் கத்தினான்.ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த விஜயா விடுவிடுவென்று வந்தாள். ராஜாவைத் தூக்கிக் கொண்டாள். ‘‘அதான் அவ்வளவு பொம்மைங்க இருக்கே… அப்புறம் ஏன் இந்த அழுக்குப்பையனோட விளையாடற..?’’ விஜயா இழுத்துச் செல்லச் செல்ல ராஜா அழ ஆரம்பித்தான். நாச்சிமுத்துவுக்கு என்னவோ போல் இருந்தது. ராஜா தன்னை விட்டுப் பிரிந்ததை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன தோன்றியதோ… கேட்டை பலம் கொண்டு அடித்தான். சத்தம் கேட்டும் ராஜா வரவில்லை. எதையோ பறிகொடுத்தது போல் நாச்சிமுத்து அழத் தொடங்கினான்.பதற்றத்துடன் குடிசையில் இருந்து ஓடி வந்த மங்கம்மாள் தன் மகனை வாரி அணைத்தாள். ‘‘அம்மாவைக் காணும்னு அழறியா முத்து… நான் எங்கயும் போகலைடா…’’ என்றபடி அவனை இடுப்பில் தூக்கிக் கொண்டு குடிசையை நோக்கிச் சென்றாள்.

ராஜாவின் பங்களாவைப்பார்த்தபடியே நாச்சிமுத்து அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருந்தான். மறுநாள்.வழக்கம்போல் ராஜாவின் முன் பொம்மைகளைப் பரப்பிவிட்டு ஊஞ்சலில் அமர்ந்து நாவலைப் படிக்கத் தொடங்கினாள் விஜயா.மங்கம்மாள் தன் குடிசையில் சமைக்கத் தொடங்கினாள். நாச்சிமுத்து வெளியே வந்து எப்போதும்போல் கற்களைப் பொறுக்கி விளையாடத் தொடங்கினான்.ஆட்டத்தோடு ஆட்டமாக ராஜாவின் கேட்டுக்கு வந்து அதைத் தட்டினான்.

இதற்காகவே காத்திருந்ததுபோல் பொம்மைகளைப் போட்டுவிட்டு ஓடிவந்து நாச்சிமுத்துவின் கைகளைப் பற்றினான் ராஜா.

முந்தைய தினம் போலவே இருவரும் ‘ஆ… ஊ…’ என கத்தியபடி விளையாடினர்.படித்துக் கொண்டிருந்த நாவலைப் போட்டுவிட்டு கோபத்துடன் விஜயா எழுந்து வந்தாள்.

முத்துவின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த தன் மகனின் கையை வெடுக்கென்று பிடுங்கி உதறி பங்களாவுக்குள் சென்றவள் கதவை ஓங்கிச் சாத்தி தன் கோபத்தை வெளிப்படுத்தினாள். ராஜாவின் கையை வெடுக்கென்று விஜயா இழுத்ததால் நிலைதடுமாறி விழுந்த நாச்சி முத்து அழ ஆரம்பித்தான்.

சத்தம் கேட்டு குடிசையில் இருந்து ஓடி வந்த மங்கம்மாள், தன் மகனைத் தூக்கிக் கொண்டாள்.

நாச்சிமுத்து எதற்காக அழுகிறான் என்று அவள் கேட்கவேயில்லை! மாறாக, ‘‘பசிக்குதா முத்து… வா… சோறு சாப்பிடலாம்…’’ என்றபடி குடிசைக்குள் நுழைந்தாள்.பொழுது விடிந்தது.கடையில் இருந்து வாங்கி வந்த பொரி உருண்டைகளை நாச்சிமுத்துவிடம் கொடுத்தாள் மங்கம்மாள். ‘‘இதைச் சாப்பிட்டு கிட்டே விளையாடிட்டு இரு… நான் சோறாக்கறேன்…’’அம்மா நுழையும் வரை காத்திருந்த நாச்சிமுத்து நைசாக பங்களா கேட்டுக்கு வந்தான். கேட் கம்பிகளைத் தட்டினான்.

பொம்மைகளுடன் இருந்த ராஜா ஏறிட்டான்.தன் கையில் இருந்த பொரி உருண்டையை நாச்சிமுத்து காண்பித்தான்.ஓடி வந்து அதைப் பெற்றுக் கொண்ட ராஜா, சரிபாதியாக அதைக் கடித்து ஒரு பாதியை முத்துவிடம் கொடுத்தான்.குடிசையை விட்டு வெளியே வந்த மங்கம்மாள், தன் மகனைக் காணாமல் திகைத்தாள். ஒருவேளை பங்களா கேட்டில் விளையாடிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்து அங்கு வந்தவள் அதிர்ந்தாள்.

மகனிடம், தான் கொடுத்த பொரி உருண்டை சரி பாதியாக உடைக்கப்பட்டு இருவரும் அதை சப்புக் கொட்டி சாப்பிடுவதைக் கண்டாள்.

‘‘பாவி… இதை மட்டும் பங்களாம்மா பார்த்தா என்ன ஆகும்…’’ பாய்ந்து வந்து நாச்சிமுத்துவைத் தூக்கிக்கொண்டு குடிசையை நோக்கி ஓடினாள்.

பங்களா… குடிசை எல்லாம் குழந்தைகளுக்குத் தெரியாது… ஒரே வயது என்பதால் முத்துவும் ராஜாவும் சேர்ந்து விளையாட விரும்புகிறார்கள். ஆனால், இதை விஜயா விரும்ப மாட்டாளே…

பெருமூச்சுடன் தன் மகனை அணைத்தபடி குடிசைக்குள் சுருண்டாள் மங்கம்மாள்.அவள் நினைத்தது சரிதான். பங்களாவாசியான விஜயாவுக்கு தன் மகன் குடிசை வீட்டு முத்துவுடன் விளையாடுவது பிடிக்கவில்லை. ‘அவனும்… அவன் கோலமும்…’ முகத்தைச் சுளித்தாள்.‘‘பொம்மைகளோடு மட்டும்தான் நீ விளையாடணும்… புரிஞ்சுதா..?’’ ராஜாவைக் கண்டித்தாள்.புரிந்ததுபோல் ராஜாவும் தலையசைத்தான்.ஆனால், தங்கள் அம்மாக்களுக்கு தெரியாமல் ராஜாவும் முத்துவும் விளையாடத் தொடங்கினார்கள். சாக்லெட்டை காக்கா கடி கடித்து பரிமாறிக் கொண்டார்கள்.

அன்று ஃபைவ் ஸ்டார் சாக்லெட் ராஜாவுக்கு கிடைத்தது. தன் அம்மாவுக்குத் தெரியாமல் அதில் பாதியை முத்துவிடம் கொடுத்தான்.

இதை தற்செயலாக விஜயா பார்த்துவிட்டாள். பாய்ந்து வந்து தன் மகனின் கையில் இருந்த பாதி ஃபைவ் ஸ்டாரை பிடுங்கி தூக்கி எறிந்தாள்.

இந்த நேரம் பார்த்துத்தானா மங்கம்மாள் அங்கு வரவேண்டும்..? கண் முன்னால் தெரிந்த காட்சி அவளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது.

‘‘மன்னிச்சுடுங்கம்மா… என் பையன் தெரியாம பண்ணிட்டான்…’’ கையெடுத்துக் கும்பிட்டாள்.

‘‘தெரியாமயா… பாதி சாக்லெட்டை பிடுங்கி உன் மகன் கடிச்சிருக்கான்…’’ விஜயா கத்தினாள். ‘‘என்ன தைரியம் இருந்தா என் மகன் கூட உன் பையன் விளையாடுவான்… ஒரு தராதரம் வேண்டாம்… அடுத்த முறை என் பையனோட உன் மகன் விளையாடறதைப் பார்த்தேன்… நடக்கறதே வேற…’’

குனிந்தபடி மங்கம்மாள் தன் மகனைத் தூக்கிக்கொண்டு விடுவிடுவென்று குடிசைக்கு வந்தாள்.

மறுநாள்.தன் முன் பரப்பப்பட்ட எல்லா பொம்மைகளையும் தூக்கி வீசிவிட்டு கேட்டை நோக்கி ராஜா ஓடினான். கம்பியை அடித்து அழத் தொடங்கினான். பதறியடித்து ஓடி வந்த விஜயாவுக்கு எதுவும் புரியவில்லை. ராஜாவை என்னென்னவோ சொல்லி சமாதானப்படுத்தினாள். ராஜா அழுகையை நிறுத்தவில்லை.

ஒருவேளை வயிற்று வலியாக இருக்கலாம் என்று குடும்ப டாக்டரிடம் சென்றாள்.

‘‘ராஜாவுக்கு ஒண்ணும் இல்ல… ஆமா… ஏன் விடாம அழறான்..?’’ விஜயாவிடமே டாக்டர் கேட்டார்.

‘‘தெரியலையே டாக்டர்…’’

‘‘பொதுவா யார் கூட விளையாடுவான்..?’’

‘‘பொம்மைகளோடதான் டாக்டர்…’’

‘‘அப்ப பொம்மைகளை கொடுங்க…’’

‘‘தூக்கி வீசறான் டாக்டர்…’’

விஜயாவை உற்றுப் பார்த்தார் டாக்டர்.

விஜயா மெல்ல, ‘‘சில நாட்களா இவன் பக்கத்து குடிசைல இருக்கிற பையன் கூட விளையாடிட்டு இருந்தான்…’’ என்றாள்.

‘‘இதுக்காக ராஜாவை கண்டிச்சீங்களா..?’’ டாக்டர் கேட்டார்.

விஜயா தலைகுனிந்தாள்.

‘‘அதான் அழறான்… ஏங்கறான்னு நினைக்கறேன்… அந்தப் பையனோட விளையாட விடுங்க… அழுகை நின்னுடும்…’’

யோசனையுடன் காரில் விஜயா வீடு திரும்பினாள். வழி எங்கும் ராஜா நிறுத்தாமல் அழுது கொண்டிருந்தான்.

நேராக மங்கம்மாளின் குடிசைக்கு வந்தாள்.

உள்ளே நாச்சிமுத்து கயிற்றில் கட்டப்பட்டிருந்தான். விஜயாவின் இடுப்பில் இருந்த ராஜாவைக் கண்டதும் முத்து ஓடி வர முயன்றான். கட்டப்பட்ட கயிறு இழுத்து தடுத்தது. “மங்கம்மா! எதுக்காக குழந்தையைக் கட்டிப் போட்டிருக்க… பாவம்ல… அவிழ்த்துவிடு… பசங்க விளையாடட்டும்…’’ எதுவுமே நடக்காததுபோல் விஜயா சொன்னாள். மங்கம்மாளுக்கு ஆச்சர்யம். நாச்சிமுத்து வேறு துள்ளிக் கொண்டிருந்தான். மவுனமாக மகனைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தாள்.

அவ்வளவுதான். ராஜாவும் முத்துவும் ஒருவரையொருவர் கட்டிக் கொண்டார்கள். விளையாடத் தொடங்கினார்கள். ராஜாவின் அழுகை இருந்த இடம் தெரியவில்லை! “மங்கம்மா, இந்த நிமிஷத்துல இருந்து என் வீட்டுக்கு வேலைக்கு வந்துடு… நீயும் உன் பையனும் எங்க அவுட்ஹவுஸ்லயே தங்கிக்கலாம்…’’ சொல்லிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென்று பங்களாவை நோக்கிச் சென்றாள் விஜயா. அவள் செல்வதையே மங்கம்மாள் பார்த்துக் கொண்டிருந்தாள்.

– 11 Oct 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *