கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 10,598 
 

மகேஷுக்கு பெண் பார்க்கப் போவது என்றால் திருநெல்வேலி அல்வாவைச் சுடச்சுட சாப்பிடுவதுபோல அவ்வளவு பிடிக்கும். கிட்டத்தட்ட ஒரு திருவிழா கொண்டாட்டத்திற்குத் தயாராகும் உற்சாகம் தாண்டவமாடும். மனசுக்குள் இன்னதென்று சொல்ல முடியாத பறவை ரெக்கை கட்டி வட்டமடிக்கும். சரி, கல்யாணம் கட்டிக் கொள்ளத்தான் அலைகிறான் என்று நீங்கள் நினைத்தால், அது தப்புக்கணக்கு.

நாலாவதோ, ஐந்தாவதோ அல்ல நாற்பத்தெட்டாவது முறையாக பெண் பார்க்கும் வைபவமாக இன்று சீஷமங்கலத்தை நோக்கிய பயணம். “இவர்தான் மாப்பிள்ளை, இவர்தான் மாப்பிள்ளை’ என்று பிறர் அடையாளப்படுத்தும் மரியாதையில் கிடைக்கும் போதைக்கு ஒரு கட்டத்தில் அடிமையாகிப் போயிருந்தான்.

“”கல்யாண வீட்டுல மாப்பிள்ளையா இருக்கணும். எழவு வீட்டுல பொணமா இருக்கணும்’னு அலையும் பப்ளிசிட்டி பைத்தியம்.

48-ஆவது பெண்மகேஷின் இத்தகைய மாற்றத்திற்கு பல சைடுகளிலிருந்து பார்த்த “சைட்டு’ காரணங்கள் உண்டு.

ஊர்நாட்டில் எங்காவது பெண்பிள்ளையை பார்க்க விடுகிறார்களா? அப்படியே பார்த்தாலும் அந்தப் பிள்ளைகள் சும்மாதான் இருக்கிறார்களா?

“குறுகுறு’ பார்வையில் லேசாக “ஸ்டிரா’ போட்டு விழுங்கினால் போதும் “தூ’ என்று எச்சில் கீழே படாமல் காரிமுழிந்து விட்டுச் சென்றது சில சிட்டுகள். மிகச் சிலவோ மகேஷையே வைத்த கண் வாங்காமல் முறைத்து வைத்து “ஏதாவது போலீஸ்காரர் மகளோ?’ என இவனுக்கு பீதியைக் கூட்டியிருந்தனர். இவன் அங்குலம் அங்குலமாக மேய்வது தெரிந்தாலே பயந்து கண் பார்வையை இவன் பக்கமே செலுத்தாத நங்கைகளும் உண்டு.

அனைத்திற்கும் உச்சகட்டமாக செருப்பை எடுத்து முகத்துக்கு நேராக காட்டிவிட்டு போன யுவதியால் தான் “பல்பு’ வாங்கிக் கொண்டான்.

ஆனால் இந்தப் பெண் பார்க்கும் வைபவத்தில்தான் எத்தனை சௌகர்யத்தை இந்தப் பெரியவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்? ஓர் ஆண் ஒரு பெண்ணை எப்படி பார்த்தாலும் எந்த ஆங்கிளில் வைத்து ரசித்தாலும் யாரும் தப்பு சொல்வதேயில்லை.

நெய் மணம் கமழ கேசரி, பஜ்ஜியை சுவைத்தபடி அதிலும் தினுசு தினுசாக பெண்களை பார்ப்பது இந்திர சிம்மாசனத்தில் அமர்ந்து ரம்பை, மேனகையின் நாட்டியத்தைக் கண்டு களிப்பதுபோல அத்தனை சொகுசு, அவ்வளவு மவுசு.

“பொண்ண நல்லா பாத்தியாப்பா, பொண்ண நல்லா பாத்தியாப்பா’னு எத்தனை விசாரிப்புகள்?’

“பார்த்தல்’ சாதாரணமாக இருப்பினும் ஒவ்வொரு பெண்ணின் சாமுத்ரிகா லட்சணங்களை அலசி ஆராய்வது அவனின் வழக்கம். எதிரே வந்து அமரும் பெண்ணின் நளினமும் வெட்கம் தோய்ந்த முகமும் அடுத்த பெண் பார்க்கும் வைபவம் வரை கனவில் பரவசப்பட தாக்குப் பிடிக்கும்.

அதிலும் அந்தப் பெண் இவனைப் பார்க்க வேண்டி வெட்கப்பட்டு மெல்ல தலை தூக்கி மகேஷின் கண்களை ஒரே நேர்கோட்டில் சந்தித்து நழுவும்போது ஹய்யோ…

உச்சந்தலை நரம்புகளெல்லாம் ஜிலீரிடும். “ஜிவ்’வென காற்றில் பறக்க ஆரம்பித்து விடுவான்.

மகேஷை பொருத்தவரை அவனுக்கு கன்னிப் பெண்களை பார்ப்பது கொளுத்தும் உச்சிவெயிலில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதுபோல அலுக்கவே அலுக்காது. விட்டால் ஒருநாள் பொழுதும் பார்த்துக்கொண்டே இருப்பான். ஆனால் இவனுடன் மல்லுக்கட்டிக் கொண்டு வரும் அப்பா, அம்மா மற்றும் தங்கை நித்யாவுக்கோ பெண் பிடிக்கவில்லை என இவன் சொல்லும் காரணங்களில் மண்டை காயும்.

“மூக்கு சரியில்லை, நாக்கு சரியில்லை, அவர்கள் வீட்டு காஃபி சரியில்லை’ என அவன் காரணத்தை அடுக்கும்போது “பளுக்… பளுக்’னு நாலு பிரம்படி கொடுக்கலாம்போல மகேஷின் அப்பாவுக்கு கை பதைபதைக்கும். முகூர்த்த நாள் வந்தால் போதும். அவன் அப்பா எந்த எந்த ஊருக்குப் போக வேண்டும் என பெரிய லிஸ்ட் போட்டு வைப்பார்.

அலுப்போ சலிப்போ சொல்லாமல் ஓபனிங் பேட்ஸ்மேன் போல ரெடியாகி நிற்பான்.

அப்பாவுக்கு மகேஷை பார்க்கப் பார்கக பத்திக் கொண்டு வரும். “”டேய்…. இந்த பொண்ணுக்கு என்னடா குறை”னு கேட்டு கேட்டே தேய்ந்து போய்விட்டார்.

“”ஏய்… போற வீட்லயெல்லாம் பொண்ண பாக்குறியா இல்ல அந்த வீட்டு வயசானவங்களைப் பாத்துட்டு வர்றியாடா? பிடிக்கல பிடிக்கலங்குற? கமலா… எனக்கென்னவோ இவன் கண்ணு மேலதான் சந்தேகமா இருக்கு. முதல்ல இவன கண் டாக்டர பாத்து கண்ணாடி போடச் சொல்லு. பொண்ண பாக்குறானா இல்ல எந்த எழவையாவது பாக்குறானான்னு தெரியல” என அம்மாவிடம் சீறுவார்.

“”டேய் மகேஷ், நீ காதல் கத்திரிக்கானு மனசுல எந்த பொண்ணயாவது வச்சிருக்கியான்னு சொல்லுடா. இருந்தா அவளயே உனக்கு கட்டி வெச்சிட சொல்றேன். இத்தன வயசுக்கப்புறம் லொங்கு லொங்குனு நாய் கணக்கா உங்கூட திரிய முடியலடா”.

“”அம்மா, கொஞ்சம் பொறு. “ஆஃப் செஞ்சரி’ ஆனதும் மேல யோசிச்சி ஒரு நல்ல முடிவ சொல்றான்”.

“”அய்ய… இவரு பெரிய எம்.எஸ்.தோனி “ஆஃப் செஞ்சரி’ அடிக்கப் போறாரு. இந்த வெக்கக் கேடுக்கு சாதன பண்ற தோரண ஒரு கொறச்சல். ச்சீ… நீ அனுஷ்காவே வந்தாலும் அட்டு ஃபிகர்னுதானே சொல்லுவ. ம்… வயசாகிட்டே போவுது. அப்புறம் கல்யாண மார்க்கெட்டுல உம் மவுசு கொறஞ்சு போயிடும். அப்பாவுக்கு முப்பத்தஞ்சு வயசுலதான் அர சொட்ட விழுந்துச்சி. உனக்கு முப்பது வயசுலயே அந்த நல்ல காரியம் நடந்தாலும் நடந்துடும்”. அடுக்கிக்கொண்டே போனாள் தங்கை நித்யா.

“”உன் வாஷ்பேஷன் வாய கொஞ்சம் மூடுறியா? இங்கதான் வக்கனயா பேசுவ. போற இடத்துலலாம் பொண்ண கூட்டி வர்றாங்களே ஒரு அஞ்சு நிமிஷம் ஒக்கார விடுறாங்களா? காலுல சுடுத்தண்ணி ஊத்துன கணக்கா ஒரு சொடக்கு போடுறதுக்குள்ள உள்ள கூட்டிட்டு போயிடுறாங்க. பொண்ணு கொஞ்சம் அப்படியே இருக்கட்டும்.

எங்கண்ணன் இன்னும் சரியா பாத்துருக்காது’னு சொல்ல வாய்வராதே…”

“”அடப்பாவி, வெச்ச கண்ணு வாங்காம உன் எக்ஸ்-ரே கண்ண வெச்சு ஊடுறுவுற, உனக்கா நேரம் பத்தல? ஹலோ பிரதர். யாருகிட்ட காது குத்தற? அப்புறம் நான் கழுவி கழுவி ஊத்துனா… வுன் சாயமெல்லாம் வெளுத்துப் போயிடும்”. நித்யா தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அப்பட்டமாக நிரூபித்தாள்.

“”சை… வயசுக்கு தகுந்தா மாதிரியா பேசுறீங்க… உங்க சண்டய நிறுத்துங்க. கால் டாக்சி வந்துடும். கிளம்புற வழிய பாருடா” ஒரு அதட்டு போட்டார் அப்பா.

கிளம்பும்போதே பழுப்புநிற பூனை குறுக்கே போனது. “”ம்க்கும்… சகுனம் பாத்து போறப்பெல்லாம் முடியல. பூனை குறுக்கே போகுது. பூனை போன ராசியிலயாவது முடியுதான்னு பாப்போம்” என்ற விரக்தியில் அப்பா பூனையை கவனியாதவாறு பார்வையை சுழற்றினார்.

பூனை குறுக்க போனா என்ன? ஒருவேளை பொண்ணு வீட்டுல இன்னிக்கு ஏதாவது ஏடாகூடமா இருக்குமோ? மகேஷ் கற்பனையில் ஆழ்ந்தான்.

கால் டாக்சியில் அப்பா, அம்மா, நித்யா மூவரும் வழிநெடுக கிசுகிசுத்துக் கொண்டே வந்தார்கள். “பால்ய சிநேகிதன் – மார்த்தண்டம் பொண்ணு – கல்யாணம் அவங்களே பண்ணிடுவாங்க’ என்று உதிரி உதிரியாகதான் ஏதேதோ காதில் விழுந்தது.

ஆஹா… இந்த மூணு பேரும் சேர்ந்து செய்யுற சதித்திட்டமா இது? மகேஷுக்கு கிலி உண்டாயிற்று. “நான்-ஸ்டாப்’ஆ போயிட்டிருந்ததுக்கு நங்கூரம் பாய்ச்சிடுவாங்களோ?

மகேஷுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மூவரும் அவனை மீறிய உற்சாகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ம்ஹும்… விடக்கூடாது. இவ்வளவு தூரம் வந்துட்டோம். ஒரு ரெக்கார்டுக்காவது ஐம்பதுன்னு இருக்க வேணாமா? என்ன ஆனாலும் சரி, இன்னிக்கு பொண்ணு தேவதையாவே இருந்தாலும்கூட அதே ரெடிமேட் ஆன்ஸர் “பிடிக்கல’னு தட்டிவிட வேண்டியதுதான்.

வழக்கம்போல நடுத்தர வீட்டு லட்சணங்களைக் கொண்ட சுகாந்தரமான வீடு. வீட்டினுள் காலடி எடுத்து வைத்த நேரம் பார்த்து மின்சாரம் ஒழிந்து போனது.

“”அங்காள பரமேஸ்வரி, நல்ல வழி காட்டிட்டம்மா” புலம்பிக் கொண்டாள் அம்மா தனக்குள்ளாகவே.

“”அம்மா… கரெண்ட் போயிடுச்சு. நுழைஞ்ச உடனே அபசகுணம். ஏதாவது சொல்லி தட்டிக் கழிச்சிட்டு போயிடலாம் வாம்மா”.

“”அடச்சீ, பல்லு போன கொள்ளுபாட்டிங்க கூட தமிழ்நாட்டுல கரெண்ட் போறத அபசகுணமா பாக்கல. படிச்சவன் உனக்கென்னடா காயுது வெங்காயம். சும்மா வாடா” அப்பா கோபத்தில் முறைத்தார்.

பெண் உண்மையிலேயே தேவதையாக இருந்தாள். ஆனாலும் உனக்கும் அதே பல்லவிதான் என்பவனாக அப்பா பக்கம் திரும்பினான். காதின் நுனி வரை எட்டிவிட்ட அப்பா, “”டேய், பொண்ணு அழகா அம்சமா இருக்கு. தெரிஞ்ச இடம், நல்ல மனுஷாளு. வேண்டாம்னு சொன்ன… சொத்துல ஒரு நயா பைசா கொடுக்க மாட்டேன்”.

“என்ன ஒரு வில்லத்தனம்! பிரம்மாஸ்திரத்தை ஏவிவிட்டதாக நினைப்பா? யாருகிட்ட பூச்சாண்டி? இந்த பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் அஞ்சுவதில்லை’ என்ற தோரணையில் புருவத்தை உயர்த்தி அப்பாவை நோக்கினான் மகேஷ்.

இதற்குள் பெண்ணின் பெரியப்பா இவனிடம் எழுந்து வந்து “”பொண்ணு உங்ககிட்ட தனியா பேசணுமாம் மாப்ள. அந்த வாசல் பக்கம் போங்க. பொண்ணு காத்துட்டிருக்கு”.

“”அடப்பாவிகளா…”

கோபத்துடன் அம்மா காதில் கிசுகிசுத்தான். “”அம்மா, கல்யாணத்துக்கு முன்னாடியே பேசணும்னு சொல்லுதே… இதெல்லாம் ஒரு குடும்ப பொண்ணா? இதுக்கு முன்னாடி எத்தன பேர்கிட்ட இப்புடி பேசுச்சோ. எனக்கு இந்த பொண்ணே வேணாம். நான் போக மாட்டேன்”.

“”டேய், பொண்ணுகிட்ட பேச உனக்கென்னடா வெக்கம்? போய்த் தொலடா… உங்கப்பா வுன்ன வுட்டுட்டு என்ன கொன்னு பொதச்சுடுவார்டா…”

“”சரி, கத்தாத… இப்ப போறேன். ஆனா கண்டிப்பா இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டேன், சொல்லிட்டேன்”.

தயங்கி நின்றவனின் கையைப் பிடித்துக் கொண்டு போகும் தோரணையில் பாலீஷாக முறுக்கினார் அப்பா. கழுத்தில் தாம்புக்கயிறு ஒன்றுதான் இல்லை. அசல் பலி ஆடு கணக்காய் தள்ளி விட்டார்கள்.

“நாப்பத்தேழு பொண்ணுல ஒன்னுகூட பேசக் கூப்புடல. இவ பெரிய திமிர்பிடிச்ச கைங்காரிபோல. ஐயோ… உள்ள போய் என்ன பேசுறது? கனவுலகூட ஒரு டிரயல் பாத்ததில்லையே…’

மூளைக்குள் மைண்ட் வாய்ஸ் அலறிக் கொண்டிருந்தது. வியர்வை ஊற்றெடுக்க தொப்பலாய் உள்ளே போனான்.

ஸ்கிரீனை மூடி விட்டார் பெரியப்பா.

5….. 10….. 15 நிமிடங்கள் முழுதாய் கரைந்தது. ஒருவித அசட்டு முகபாவனையில் ஒருவர் பின் ஒருவராக இருவரும் வெளியே வந்தார்கள்.

“கிளீன் போல்ட்’ ஆகி இருந்தான் மகேஷ்.

வீட்டிற்கு வந்ததிலிருந்து கிலி பிடித்தவன் போல் இருந்தான் மகேஷ். கல்யாணம் கட்டினால் இந்தப் பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்ற வைராக்கியமே வந்துவிட்டது அவனுக்கு. அவனே எதிர்பாராவண்ணம் அவனுக்கு பெண்ணை மிக மிக பிடித்திருந்தது. வந்தது முதல் யாராவது தன்னை இதுகுறித்து வாயைக் கிளறுவார்கள் என எண்ணியவனுக்கு பெருத்த ஏமாற்றம். வாயை இழுத்து வைத்து தைத்ததுபோல உதடு பிரிக்காமல் எல்லோரும் வம்படியாக அவரவர் வேலையில் பழியாய் கிடந்தனர்.

நித்யாவிடம் சொல்லி சீண்டலாம் என்றாலோ அவள் தன்னை ஐபிஎல்-லில் முழுவதுமாக தொலைத்து விட்டிருந்தாள். ஒவ்வொரு விக்கெட் விழுந்தபோதும் அவள் தன்னை மறந்து எழுந்து ஆட்டம் வேறு போட்டாள். தன்னை வெறுப்பேற்றத்தான் இப்படியெல்லாம் அவள் செய்கிறாளோ என்ற எண்ணம்கூட எட்டிப் பார்த்தது மகேஷுக்கு.

சரி, வழக்கம்போல இந்தப் பெண்ணும் தனக்கு பிடிக்கவில்லை என்று எண்ணிவிட்டார்களோ? இன்று பார்த்து அம்மா அசதியில் சீக்கிரமே தூங்கிவிட்டார். இல்லையென்றால் அவளிடமாவது விருப்பத்தை தெரிவித்திருக்கலாம். கட்டிலில் புரண்டாள். தூக்கம் தொலைந்த இரவானது அது.

மறுநாள் காலை சிவப்பேறிய கண்களுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.

அப்பாதான் மெல்ல ஆரம்பித்தார்.

“”டேய் கண்ணு, நேத்து போயிட்டு வந்தோம்ல அந்த பொண்ணுக்கு இஷ்டம் இல்லையாம். பொண்ணுன்னா என்ன அவ்வளவு கேவலமா? இத்தனை பொண்ணுங்கள வேணான்னு சொல்றதுக்கு? இவ்வளவு திமிர் பிடிச்சவன் எனக்கு வேணவே வேணாங்குதாம். அவங்கப்பா அதான் என் தோஸ்த் போன் பண்ணான். சரி போவட்டும் விடு.

வேற இடம் பாக்கலாம்”. மூக்குக் கண்ணாடியை லுங்கி மடிப்பில் துடைத்தபடியே சொன்னார் அப்பா.

“”அ… அப்பா… அந்த பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குப்பா… எப்படியாவது பேசி கல்யாணம் பண்ணி வெச்சிடுங்கப்பா”.

வித்தியாசமான கோணங்களில் எல்லோரும் அவனை இப்போது பரிதாபமாய் பார்த்தனர்.

– மே 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *