நான் தில்லியில் மத்ய சர்க்கார் உத்யோகத்தில் இருந்த காலம். 1985 இருக்கும். நானும் சில நண்பர்களும் ஒன்றாக சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, சொந்தமாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தோம். காலையில் இருவர் மாலையில் இருவர் என்று இதிலே ரோடெஷன் வேறே!
அந்த வருஷம் சம்மர் லீவில் என் பெரிய அண்ணாவோட கூட வேலைசெய்யும் நண்பர் ஹரி தன் மனைவி மற்றும் மகளுடன் தில்லி வந்தார். ஆக்ரா மதுரா ஜெய்பூர் போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக. அவர் மனைவி பெயர் ஸ்ருதி; அவர் மகள் பெயர் அகிலா. நாங்கள் கரோல் பாகில் இருந்ததாலும், அவருக்கு ஹிந்தி தெரியாததாலும், லோக்கல் பர்ச்கேசுக்காக,இடையே ஓரிரு நாட்கள் எங்கள் வீட்டில் எங்களுடன் இருந்தார்.
ஒரு நாள் அஜ்மல் கான் மார்க்கெட்டை சுற்றி அலுத்து அருகில் இருந்த ஒரு சவுத் இந்தியன் ஹோட்டலில் ‘சாப்பாடு’ சாப்பிட்டுவிட்டு களைத்து போய் வீட்டுக்கு வந்தோம்.
வந்த சிறிது நேரத்தில் அவர் பெண் குழந்தை தில்லியின் ட்ரேட் மார்க் வெப்பம் காரணமாக அழத் தொடங்கியது. அவரும் அவர் மனைவியும் என்னென்னவோ முயன்றும் அழுகை ஓயவில்லை. “ டேய் கண்ணா (என் செல்ல பெயர்!) நீ தான் கொஞ்சம் ட்ரை பண்ணேன்டா. உங்க அக்கா பொண்ண நீ ரொம்ப நல்லா பாத்துபேனு உங்க அண்ணா சொல்லி இருக்கான்” என்றார் என்னிடம். (இந்த சமயத்தில் ஒரு கொசுறு செய்தி : என் அக்காவிற்கு ஒரு பெண் குழந்தை இருந்தாள். பெயர் ஸ்ருதி. வயது ஆறு. என்னிடம் மிகவும் பிரியமாக இருப்பாள் குழந்தை. நான் ஊருக்கு அக்கா வீட்டுக்கு சென்றால் என்னை விட்டுப் பிரியவே மாட்டாள்)
“சரிண்ணா, try பண்றேன்” என்ற நான் குழந்தை கிட்டே சென்று விளையாட்டு காட்ட ஆரம்பித்தேன். ஒரு குழந்தைக்கு விருப்பமான என்னென்ன பொருள் என் வீட்டில் இருக்குமோ (சமையல் ரூம் சாமான்கள் உட்பட) எடுத்து அதன் முன்னால் போட்டேன். “லு லு ஹா ஹா ஒ ஒ “ என்று வாயினால் என்னென்ன சப்தம் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் செய்தேன். எதற்கும் மசியவில்லை குழந்தை.
கடைசி ஆயுதமாக என் வண்டி சாவிக்கொத்தை அதன் முன்னால் காட்டி“ ஸ்ருதி வாடி செல்லம் அங்கிள் கிட்ட. சமத்தா வந்தேன்னா அங்கிள் இத ஒனக்குத் தருவேன். வாடி செல்லம், என் கண்ணில்ல; ஸ்ருதிக் குட்டி ஒரு முத்தா குடுடி செல்லம்” என்று குழந்தைகளிடம் பேசுவோமே அந்த குரலிலும் பாஷையிலும் பேசினேன். ( என் அக்கா மகள் பெயர் ஸ்ருதி என்பதாலும், இந்தக் குழந்தையும் அதே வயது என்பதாலும், இருவரில் ஒருவர் பெயர் ஸ்ருதி என்பதாலும் பெயரை மாற்றி கூப்பிட்டு கொண்டிருந்தேன் என்று எனக்கு உறைக்கவில்லை!)
நான் பேசியதைக் கேட்டுக்கொண்டு இருந்த ஹரி அண்ணா முகத்தில் ஒரு புன்னகையும், அவர் மனைவி முகத்தில் ஒரு அதிர்ச்சியும் தெரிந்தது அது எதனால் என்பதை உணரும் நிலையில் நான் இல்லை. குழந்தையை எப்படியாவது சமாதானப் படுத்தி என் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற வெறியில், ‘ஸ்ருதி’ ‘ஸ்ருதி’ என்று ஒரு நூறு முறை கூப்பிட்டு விட்டேன்! போதாததற்கு இடை இடையே ‘ஸ்ருதி’யிடம் முத்தா வேண்டும் என்று வேறு கேட்டுக் கொண்டு இருந்தேன்!
ஒரு ஐந்து நிமிஷம் கழித்து தன் மனைவியின் சங்கடம் பொறுக்க முடியாத ஹரி அண்ணா “ டேய் கண்ணா! இப்படி எல்லாம் என்னை எதிர்ல வச்சிண்டு முத்தா குடுன்னு கேட்டா, ‘ஸ்ருதி’ எப்படிடா தருவா? நான் வேணா சித்த வெளில போகவா?னு சிரிச்சிண்டே கேட்டார்.
ஒரு நிமிஷம் பேந்த பேந்த முழித்த நான், விஷயம் புரிந்தவுடன் வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டு அடுத்த ரூமுக்குள் ஓடி விட்டேன்.
அன்று என் முகத்தில் வழிந்த அசடு ஒரு அஞ்சு லிட்டர் இருக்கும் என்று நினைக்கிறேன்.
– பெப்ரவரி 2013