ஸொமேட்டோ தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 2,342 
 
 

மதன் உள்ளூரில் பயிற்சி டாக்டர். வீட்டிலிருந்து வேலை செய்யும் இடம் கொஞ்சம் தூரம் என்பதால் வழக்கமாக வீட்டுச் சாப்பாடு லஞ்ச் எடுத்துக் கொண்டுப் போவான். வாரம் ஒரு முறை நைட் டூட்டி இருக்கும் போது மட்டும் வெளியேயிருந்து ஸ்மோடோ அல்லது ஸ்விக்கியில் ஆர்டர் பண்ணிச் சாப்பிடுவது வழக்கம்.

“ஹோட்டல் சூப்பர் ஃபுட் பாக்ஸ்-ல் மல்லிகை இட்லி ரொம்ப ஜோராயிருக்கும் என்று அன்னிக்கி ஆர்டர் பண்ணினேன். பேரு தான் இட்லி. ஆனா , கல்லு மாறி இருந்தது. சாம்பார் ஊத்தி நனய வச்சி சாப்பிட்டாத் தான் எதோ வாயில் போவும். இட்லி பேரையேக் கெடுத்து விடுவானுங்கோப் போலிருக்கு”. மதன் தன் தாயிடம் டின்னர் புராணம் வாசித்தான்.

இன்னொரு வாரம், இன்னொரு ஓட்டலில் ஆர்டர் பண்ணி சாப்பிட்டதைக் கதைத்தான் “மசாலா தோசைக்குச் சட்னி கொஞ்சம் கெட்டுப் போயிருக்கு. காத்தாலேப் பண்ணது. அப்படியே வீசிட்டேன் . சிங்கிள் ஸ்டார் ரேட்டிங் தான் கொடுத்தேன். அதுக்கு கீழே இல்லேயே?”. இப்படி வாரா வாரம் தன் ஹோட்டல் அனுபவம் பற்றி வீட்டில் விவாதம் நடக்கும்.

அம்மா ஒரு நாள் ஆலோசனைச் சொன்னாள். “டேய்!, ‘அடுமனை ஹோம் மெஸ்’ என்று இருக்கு. வீட்டிலிருந்து அவங்க நடத்தறாங்க. அதிலே வாட்ஸப்-லே ஆர்டர் கொடுக்கலாம். நம்பர் கொடுக்கிறேன். ஐட்டம்ஸ் ரெண்டு தான் இருக்கும். நைட்-க்கு நாலு மணி முன்னாடியே ஆர்டர் பண்ணனும்.. நல்லா இருக்குன்னு கேள்விப் பட்டேன். அந்த மெஸ் நம்ம வீட்டுக்குப் பக்கம் தான். நேரடியா போய் கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியும். ட்ரை பண்ணிப் பாரேன் “.

அந்த வாரத்தில் அம்மா சொன்ன மாதிரி, ஹோம் மெஸ்-ஸில் ஆர்டர் செய்தான். இரவில் அம்மாவிடம் விவரித்தான். “சூப்பர். சூப்பர். காளான் பிரியாணி சாப்பிட்டேன். ஒரு சில ஹோட்டல்ல எண்ணெய் போட்டுத் தாளிச்சுருப்பாங்க. இங்கே எனக்குப் பிடிச்சா மாரி காரமும் ஜாஸ்தி இல்லாம பதமா இருந்தது. நீ பண்ற மாதிரி இருக்கும்மா”.

ஏழட்டு வாரங்கள் நல்லப்படியாகப் போய்க் கொண்டிருந்தது. அந்த வாரம் மதன் நண்பன் சுரேஷ் அவனிடம் வந்து “டேய், இன்னிக்கு உன் நைட் டூட்டி நான் பார்க்கிறேன். நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு. எக்ஸ்சேன்ஜ் ப்ளீஸ் ” என்று கெஞ்சினான்.

“சரி, நான் டின்னர் ஆர்டர் பண்ணியாச்சு. 3 சப்பாத்தி, மட்டர் பன்னிர் குருமா வரும். நீ சாப்பிட்டுக்கோ. நான் வீட்டிலே சாப்பிடுறேன்.” மதன் சொல்லிவிட்டு வீட்டுக்கு வரும் சமயம், அம்மா அப்போது தான் வெளியேப் போய் விட்டு கதவை திறந்துக் கொண்டுருந்தாள்.

“என்னடா, டூட்டி இல்லையா” என்று அம்மா வினவ, மதன் பதில் சொல்லாம உள்ளே நுழைய குருமா வாசனை மூக்கைத் துளைத்தது. “என்னம்மா, இன்னிக்கு ஸ்பெஷல்?”.

“சப்பாத்தி, மட்டர் பன்னிர் குருமா. உனக்கு பிடிச்ச ஐட்டம்ஸ் தான். குளிச்சிட்டு வா . சாப்பிடலாம்”.

மதனுக்கு அதிர்ச்சியுடன் ஒரு சந்தேகம். “அம்மா, அந்த ஹோம் மெஸ்ஸுக்குப் போய் ‘தேங்க்ஸ்’ சொல்லிட்டு வரணும் . அது எப்படி எங்க அம்மா மாதிரி செய்யறீங்கன்னு பாராட்டணும்”.

“அதெல்லாம் வேணாம். ஒரு சீக்ரெட் உண்மை சொல்லிடுறேன். நீ ஆர்டர் பண்ணி சாப்பிட்டது எல்லாம் நான் செஞ்சு அனுப்பினது தான். உனக்கு ஹோட்டல் சாப்பாடு வேண்டாம்னு நான் தான் அந்த மெஸ் கூட ஒரு அரேஞ்மென்ட் பண்ணிக்கிட்டேன். நீ நாலு மணிக்குள் ஆர்டர் செய்யற. நா உடனே அதுக்கு வேண்டிய சமையல் செய்து அவங்ககிட்டக் கொடுத்திடுவேன். அவங்க பேக் பண்ணி உனக்கு டெலிவரி செய்வாங்க. எப்படி ஐடியா?”

“சூப்பர்மா! ரொம்ப அசத்திட்டே போ! ஸொமேட்டோ தாய் ஆயிட்டே”. மதனின் குளிர்ச்சியான வார்த்தைகளில் நனைந்தாள் தாய்.

– குவிகம் மின்னிதழ் 15-மே 2023 இல் வெளியிடப்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *