‘‘கஸ்தூரி.. விடிஞ்சிடுச்சு பாரு, எழுந்து டீ போடேன்..!’’ & கிருஷ்ணனின் காலை அலாரம்.
கஸ்தூரி உடம்பை முறித்துக் கொண்டு எழுந்தாள். ‘‘உடம்பெல்லாம் ஒரே வலிங்க. நீங்கதான் ஒரு நாளைக்கு டீ போடறது! குறைஞ்சா போயிருவீங்க’’ என்று சிணுங்கினாள்.
‘‘கல்யாணம் முடிஞ்சு முழுசா முப்பது நாள்கூட ஆகலே. நான் இன்னும் புது மாப்பிள்ளை, தெரியுமில்லே? வேலைக்கு நேரமாயிடும். டீ போடும்மா செல்லம்’’ & கிருஷ்ணனின் தாஜா!
‘‘ம்க்கும்… நானும்தான் புதுப் பொண்ணு! நானும்தான் வேலைக்குப் போறேன். காதலிச்சுதானே என்னைக் கட்டிக்கிட்டீங்க… எனக்காக இதுகூடச் செய்ய மாட்டீங்களா? போங்க, போய் டீ போடுங்க’’ என்று பொய்க் கோபத்துடன் அவனை விரட்டினாள் கஸ்தூரி.
‘‘ஏய்… என்ன, என்னை இந்த வெரட்டு வெரட்டுறே? இதை எங்கம்மா பார்த்திருக்கணும்…’’
‘‘ஏன், என்ன செய்வாங்களாம்? எங்க வீட்டைப் பாருங்க. எங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும்தான் வேலைக்குப் போறாங்க. ஸ்டேட் பேங்க்லதான் ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டாங்க. அப்படியே பழகி கல்யாணம் கட்டிக்கிட்டாங்க. இப்பக்கூட எங்கப்பாவுக்கு எங்கம்மான்னா உசிரு! அவர் வீட்டுல எத்தனை வேலைகளை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்வாரு தெரியுமா? எங்கம்மாவையே சுத்திச் சுத்தி வருவாரு. கஷ்டமான வேலைகளையெல்லாம் அம்மாவைச் செய்யவே விடமாட்டாரு. அப்படி ஒரு காதல் அம்மா மேல!’’
‘‘சரி சரி, அதுக்கு நீ ஏன் வெக்கப்படறே? டீ போடுடா கண்ணம்மா..!’’ என்றான் கிருஷ்ணன்.
‘‘விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப் பாங்கற கதையால்ல இருக்குது? எங்க மாமா, மாமி ரெண்டு பேரும்கூட வேலைக்குப் போறவங்கதான். வீட்டு வேலையை எப்படிப் பகிர்ந்துக்குவாங்க தெரியுமா? உங்களை மாதிரி மாமா எங்க மாமியை விரட்ட மாட்டாரு. எல்.ஐ.சி&ல ஒண்ணா வேலை செஞ்சாங்க. எல்.ஐ.சி. எவ்ளோ ஒசரமோ, அவ்ளோ ஒசந்தது அவங்க காதல்! வேலை முடிஞ்சு, ரெண்டு பேரும் ஒண்ணாதான் வீட்டுக்கு வருவாங்க. மாமாதான் சுடச்சுட வெந்நீர் போட்டு, மாமிக்கு எடுத்து வைப்பாரு. அப்புறம்…’’
‘‘அடுப்பு மூட்டி சமையலே செய்து போடுவாராக்கும்!’’
‘‘கரெக்ட்டுங்க! எங்க மாமா ரொம்ப ருசியா சமைச்சு அசத்துவாரு. நீங்களும் இருக்கீங்களே…’’
‘‘நானும் வெந்நீர் போட்டு உன்னைக் குளிப்பாட்டி விடவா?’’ என்று கண்ணடித்தான் கிருஷ்ணன்.
கணவனை வெட்கத்துடன் பார்த்த கஸ்தூரி, எழுந்து டீ போடத் தயாரானாள். கிருஷ்ணன் அவள் கையை ஆசையோடு பற்றினான்.
‘‘விடுங்க, வேலைக்கு லேட்டா போனா, கூட இருக்கிறவங்க, ‘என்ன கஸ்தூரி! ராத்திரி முழுக்க தூக்கம் இல்லையா? கன்னத்தைக் காட்டு. உதடு என்ன, இப்படிச் செவந்திருக்கு?’ன்னு கேட்டுக் கலாட்டா பண்ணுவாங்க’’ என்றபடி அவள் ஓட, துரத்திச் சென்ற அவன் அவளைப் பின்புறமாக அள்ளி அணைத்து, மீண்டும் படுக்கையில் சாய்க்க, இருவரும் டீயை மறந்தனர்.
மதிய உணவைக் கட்டி எடுத்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, இருவரும் கிளம்பினார்கள். போகும் வழியெல்லாம் கஸ்தூரி யின் காதோரமாகக் கிசுகிசுப்பதும், சில்மிஷங்கள் செய்வதுமாக இருந்தான் கிருஷ்ணன். புது மணத் தம்பதி என்பதால், கொஞ்சலும் குலாவலும் சற்றே அதிகப் படியாக இருப்பது சகஜம்தானே!
இதோ, அவர்கள் வேலை செய்யும் இடம் வந்துவிட்டது. இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்தனர்!
கிருஷ்ணன், கீழே சிமென்ட் கலவையைப் பாங்காகக் கலக்க, தலையில் செங்கற்களைச் சுமந்து கொண்டு ஒய்யாரமாக நடந்தாள் கஸ்தூரி.
கஸ்தூரியின் பெற்றோர்கூட இப்படித் தான்… ஸ்டேட் பாங்க் கட்டும்போது காதலில் கட்டுண்டு, கணவன் மனைவி ஆனார்கள். எல்.ஐ.சி. கட்டும்போது ஒன்றாக உழைத்தவர்கள்தான் கஸ்தூரியின் மாமாவும் மாமியும்!
அது சரி, படித்துப் பட்டம் பெற்ற கணவன் மனைவியர்தான் வேலைக்குப் போகிறார்களா என்ன? எத்தனையோ காலமாக கிருஷ்ணன்& கஸ்தூரி போன்ற உழைப்பாளிகளும் இருந்துகொண்டு தானே இருக்கிறார்கள்!
சொல்லப் போனால், இவர்களும் ‘வொர்க்கிங் கப்பிள்’தானே!
– மே 2006