(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
”நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேணும்” என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.
“ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?” என்று கேட்டார் பிள்ளை.
”அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!” என்று சொல்லி, சிவராமன் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.
“என்ன விஷயமய்யா? இப்ப அவ உங்க வீட்டிலே இல்லையா?” அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவா சூரியன் பிள்ளையைத் தூண்டியது.
ஆனால், பசி பசி என்று படுத்திய குழந்தைகளுக்காக இட்டிலி வாங்கி வர வேகமாகக் கிளம்பியிருந்த சிவராமனுக்கு நின்று பேச நேரமில்லை. “ராத்திரி வரை இருந்தாள். அப்புறம் ஆள் அவுட்! சொல்லாமலே கம்பி நீட்டி விட்டாள். அது ரொம்ப ரசமான விஷயம். அப்புறம் சொல்றேனே” என்று, பிள்ளையின் ஆவலைக் கிளறிவிட்டு விட்டு அவசரமாய் நடந்தார்.
– நம்ம சிவராமன் சார் வீட்டுக்கு வந்து போகிற வேலைக்காரி ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு டைப் தான் ஒருத்தியாவது ரொம்ப நாள் நிலைத்திருந்ததில்லை. இந்த பஞ்சவர்ணத்தம்மாள் நீடிச்சு வேலை பார்ப்பாள்னு தோணிச்சு. அவளும் போயிட்டாளா? ஊம்ம்….
சூரியன் பிள்ளைதான் பஞ்சவர்ணத்தம்மாளை வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டவர். “வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டவள். வசதியான இடம் கிடைத்தால் பிழைப்புக்கு வழி பண்ணிவிடுங்க” என்று, அவருக்கு வேண்டியவரும் அந்த அம்மாளுக்குச் சொந்தக்காரருமான ஒருவர், அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் சிவராமனும் “வீட்டு வேலைக்கு ஒரு ஆள் கிடைத்தால் சொல்லுங்களேன்” என்று பிள்ளையிடம் கேட்டுக் கொண்டார்.
சிவராமன் சாரையும் அவர் குடும்பத்தையும் நன்கு அறிந்தவர் பிள்ளை. மரியாதைக்காக அவரை இவர் “சார் போட்டுப் பேசுவதும் குறிப்பிடுவதும் உண்டே தவிர, சிவராமன் “ஸார்” (உபாத்தியாயர்) வேலை எதுவும் பார்க்கவில்லை. ஏதோ ஒரு ஆபீசில் நல்ல உத்தியோகத்தில் இருந்தார். குழந்தைகள் சின்னஞ் சிறுசுகள். வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரி இல்லாமல் தீராது. இயல்பாகவே “வீக்” அடிக்கடி ஏதேனும் வியாதி வந்து உறவு கொண்டாடிக் கொண்டே இருக்கும். அதனாலே, சமையல் வேலை, இதர வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு ஒருத்தி அத்தியாவசியத் தேவை என்ற நிலைமை எப்போதும் உண்டு.
இந்த வேலைக்காரி பிரச்னை சிவராமனுக்கு என்றும் “ஓயாத தொல்லை”யாகவே இருந்து வந்தது. அப்பாடா, வேலைக்காரி ஒருத்தி கிடைத்து விட்டாள். இனிமேல் கவலை இல்லை!” என்று அவர் நினைப்பார். அப்படி நினைத்த நாலைந்து நாட்களுக் குள்ளேயோ, ஒரு வாரத்திலேயோ, மீண்டும் “ஆள் தேடும் படலம்” ஆரம்பிக்க வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டு விடும். சில சமயம் ஒரு மாதம் வரை நீடித்திருக்கக்கூடும், கவலை இல்லாத காலம். திடீரென்று ஒரு நாள் வேலைக்காரிக்கு “சீட்டுக் கிழிக்க வேண்டிய நெருக்கடி நிலை தலை தூக்கியிருக்கும்.
சூரியன் பிள்ளை பஞ்சவர்ணத்தம்மாளை அழைத்து வந்து அந்த வீட்டில் விடுவதற்கு முந்தி, பாக்கியம் என்றொருத்தி அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருத்தி தான் இரண்டு மாத காலம் வேலை செய்தவள்.
– இந்தப் பஞ்சவர்ணம் வேலையிலே சேர்ந்து ரெண்டு மாசம் ஆகியிருக்குமா…. ஊம். இருக்காதுன்னுதான் தோணுது. ஆனா ஒரு மாசத்துக்கு மேலே ஆயிட்டுதுன்னு நினைக்கிறேன்.
பஞ்சவர்ணத்தம்மாள் இந்த வீட்டில் ஒட்டிக்கொள்வாள் என்றுதான் சூரியன் பிள்ளை நினைத்திருந்தார். சாப்பாட்டுக்கே இல்லாது, சிரமப்பட்டுக் கொண்டிருந்தவள். இங்கே வீட்டோடு சாப்பிட்டுக் கொண்டு, இருக்கிற வேலைகளைச் செய்தவாறு செளகரியமாக இருக்கலாம். வேலைகளும் அதிகமாகவோ கடுமையாகவோ இரா. மாதக் கடைசியில் சம்பளம் என்று முப்பது ரூபாய் கிடைக்கும். பஞ்ச நிலையிலிருந்த பஞ்சவர்ணத் தம்மாளுக்கு இது சுகவாசமாக அல்லவா தோன்றும் என்று அவர் எண்ணினார்.
ஆனால் அவள் என்னவோ தன் சுயவர்ணத்தைக் காட்டி விட்டாளாமே?
– அந்த வீட்டின் ராசியோ, அல்லது வந்து சேரும் வேலைக் காரிகளின் ராசிதானோ, ஒருத்தி கூட நிலைத்திருப்பதில்லையே! வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரியைப் பிடிக்காமல் போய் விடும். இல்லாவிட்டால், வேலைக்காரிக்கு அந்த இடம் ஒத்து வராமல் போய்விடும்! எப்படியானாலும், சிவராமன் சாருக்குத் தான் வேறு ஆள் தேட வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. இது பெரிய தலைவலி தான்.
ஒவ்வொரு வேலைக்காரியைப் பற்றியும் சிவராமன் சூரியன் பிள்ளையிடம் சொல்லத் தவறியதில்லை. தனது மனக்குறையை யாரிடமாவது சொல்லித் தீர்த்தால் ஏதோ ஆறுதல் ஏற்படுமே! “சும்மா தெரிந்தவர்” என்ற நிலையிலிருந்து, “சிநேகிதர்” என்ற தகுதிக்கு உயர்ந்திருந்த சூரியன் பிள்ளையிடம் சொல்லாமல் அவர் வேறு யாரிடம் கூறுவார்?
ஆகவே, எல்லா வேலைக்காரிகளைப் பற்றியும் அவருக்குத் தெரிந்துதானிருந்தது.
இரண்டு மாத காலம் வேலை பார்த்து “ஒரு ரெக்கார்டு” ஏற்படுத்தி விட்ட பாக்கியம் நன்றாகத்தான் நடந்து வந்தாள். அவ் வீட்டிலேயே அதிக நாள் நீடித்து விட்ட தெம்பிலோ என்னவோ, வரவர அவள் அதிக உரிமைகள் எடுத்துக்கொள்ளலானாள். தான் இருந்த இடத்தில் உட்கார்ந்தபடியே, “குழந்தைகளை”அதை எடு; இதைச் செய். தண்ணி கொண்டு வா. உருளைக் கிழங்குத் தோலை உரி” என்ற தன்மையில் சில்லறை அலுவல் களைக் கவனிக்கும்படி ஏவலானாள். குழந்தைகள் செய்ய மறுத்தால், கூப்பாடு போட்டுக் கண்டித்தாள். வசைமாரி பொழிந் தாள். குளிப்பதற்கு, வீட்டு அம்மா தனக்கெனத் தனியாக வைத்திருந்த சோப்பை எடுத்து உபயோகிக்கத் துணிந்தாள். பிறகு, கொடியில் கிடந்த நல்ல சேலையை, அம்மாளிடம் கேட் காமல் தானாகவே எடுத்துக் கட்டிக் கொண்டாள். அம்மா கண் டிக்கவும், அதை அவிழ்த்து அப்படியே போட்டு விட்டாள். அல சிப் பிழிந்து உலர்த்தவில்லை என்று அம்மாளுக்குக் கோபம். அவள் சத்தம் போட்டாள். அந்த ஆத்திரத்தை பாக்கியம் குழந்தைகள் மீது திரும்பினாள். அன்று சமையலை சுவையில் லாதவாறு கெடுத்து வைத்தாள். அடிக்கடி முணமுணத்தாள்.
“இனிமேல் நீ சரிப்பட்டு வரமாட்டே!” என்று அம்மா, கணக்குப் பார்த்து ரூபாபைக் கொடுத்து, அவளை அனுப்பி விட்டாள்.
பாக்கியத்துக்கும் முன்னாடி ஒருத்தி வேலை பார்த்தாள். வயது சற்று அதிகமானவள். “பெரியம்மா” என்றே எல்லோரும் அவளை அழைத்தனர். அவள் நன்றாக வேலை செய்வாள் என்றுதான் தோன்றியது. ஆனால், வேலை செய்கிற நேரங் களை விட அதிகமான ஒய்வு வேளைகளை அந்தப் பெரியம்மா விரும்பினாள் என்பது மூன்று நான்கு நாட்களிலேயே புரிந்து விட்டது. காலையில் நேரம் கழித்துத் தான் எழுந்திருப்பாள். மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு, உண்ட களைப் பால் கண்ணயர்கிற வளை, “பெரியம்மா காப்பி போடலியா?* “நேரமாச்சு பெரியம்மா” என்று “தார்க்குச்சி போட்டுத் தான் எழுப்ப வேண்டும். மேலும், ஒவ்வொரு வேலைக்கும் அதைச் செய், இதைச் செய், என்று தூண்டிக் கொண்டே இருக்க வேண்டும்
.
நான் எப்படி இருக்க வேண்டியவ! என் மகன் மட்டும் சரியாக இருந்தால், நான் இப்படி புழுக்கை வேலை செய்துக் கிட்டு சங்கடப் படனுமா? அவன் ஊரிலே இல்லாத விதமா அதிசயப் பெண்டாட்டி வந்து சேர்ந்து விட்டாள்னு நெனச்சு, அவளை தோள் மேலே தூக்கி வச்சுக்கிட்டுக் கூத்தாடுதானே! அப்புறம் அந்தத் தேவடியா என்னை மதிப்பாளா? எனக்கு அங்கே இருப்புக் கொள்ளலே. எங்காவது வேலை செய்து காலம் கழிக்கலாமின்னு கிளம்பிட்டேன்” என்று ஒருநாள் அவள் தன் வரலாற்றைப் புலம்பினாள்.
பெரியம்மாளுக்கு “உழைக்கும் உற்சாகம் குறைந்து கொண்டே வந்தது. தலைவலி, மேல் வலி, நெஞ்சு வலி என்று என்னென்னவோ சொன்னாள். வந்த ஏழாவது நாளே, நான் மகனைப் பார்த்துப் பேசிவிட்டு வாறேன்” என்று பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். போனவள் அப்புறம் வரவேயில்லை.
அவள் இருந்த இடத்துக்கு பாக்கியம் வந்து சேர்ந்தாள். பெரியம்மாதான் விலாசம் சொல்லி அனுப்பி வைத்திருந்தாள். அந்த மட்டுக்கு அவள் பரவாயில்லே!
ஒரு சமயம் அகிலாண்டம் என்றொருத்தி சிவராமன் சார் வீட்டில் வேலை பார்த்தாள். வாயாடி, யாராவது ஒரு பேச்சு சொன்னால், அவள் பதிலுக்கு ஒன்பது பேசுவாள். வேலை களைக் குறைவின்றிச் செய்தாள். ஆனால், வந்த ஐந்தாம் நாளே அவளுக்கு அலுத்து விட்டது. “இதென்ன் வீடு அக்கம் பக்கத்திலே வீடுகளே இல்லாமல்! பேச்சுத் துணைக்கு இங்கே யாருமே இல்லியே. வேலை செய்து முடிச்சப்புறம் கொட்டு கொட்டுனு முழிச்சுக்கிட்டிருக்க வேண்டியிருக்கு. இல்லைன்னு சொன்னா, சுருண்டு முடங்கிப் படுத்துக் கிடக்கணும். ஒருத்தி எவ்வளவு நேரம் தான் தூங்குவா? பேசக் கொள்ள அண்டை அசலிலே ஆளுக இருந்தால் அல்லவா கெதியா இருக்கும்? இப்ப அட்டுப் புடிச்ச மாதிரி இருக்கு. இப்படி ஒரு மாசம் இருந்தால் எனக்குப் பைத்தியமே புடிச்சிடும்!” என்று சொல்லி விட்டுப் போய் சேர்ந்தாள்.
சிவகாமி என்று ஒரு வேலைக்காரி இருந்தாள். சரியான சாப்பாட்டுராமி. முதலில் தனக்கு திருப்தியாய் பார்த்துக் கொள்ளுவாள். அப்புறம் தான் குழந்தைகளுக்கும், வீட்டு ஐயாவுக்கும் அம்மாவுக்கும். காப்பி தனக்கென்று “ஸ்பெஷலா, ஸ்ட்ராங்கா தயார் பண்ணிக் கொள்வாள். அதுவும் அடிக்கடி வேண்டும். தோசை சாப்பிடும் போது ஒவ்வொரு தோசைக்கும் நிறையவே எண்ணெய் ஊற்றிக் கொள்வாள். நெய்யும் எடுத்துக் கொள்வாள். ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா போன்றவற்றை சும்மாவே கரண்டியால் அள்ளி வாயில் போட்டுச் சுவைத்து மகிழ்வாள். நெய்யையும் சீனியையும் கலந்து தின்பதில் அவளுக்கு விசேஷப் பிரியம் இருந்தது.
அவள் வந்து சேர்ந்து பத்து நாட்கள் கூட ஆகவில்லை. வழக்கம் இல்லாத வழக்கமாக, அவ்வீட்டில் சாமான்கள் ஏகத்தாறாகக் காலியாகி விட்டன. நெய்யும் எண்ணெயும், சீனியும் பிறவும் அதிகம் வாங்க நேரிட்டது. இவளை வைத்துக் கொண்டு வேலை வாங்கினால், நம்ம வருமானத்துக்குள்ளே குடும்பம் நடத்த முடியாது; கடனுக்கு மேல் கடன் தான் வாங்க வேண்டியதாகும் என்று சிவராமன் உணர்ந்தார். சிவகாமி வெளியேற நேர்ந்தது.
சிவகாமிக்கு நேர்முரணான ஒருத்தி ஒரு சமயம் அவ்வீட்டில் வேலை பார்த்தாள். பேரு ராசம்மாளோ என்னவோ. அவள் தன் வயிற்றுக்குச் சரியாகச் சாப்பிடமாட்டாள். தனக்கு உரியதை எடுத்து மூடிவைத்து விடுவாள். அப்படியே மறந்தாலும் மறந்து போவாள். “ராசம், சாப்பிட்டையா?” “சாப்பிடலியா ராசம்மா? “நேரமாச்சு, சாப்பிடு. வேண்டியதைச் சாப்பிடு! இப்படி அவளை அடிக்கடி தாங்கி உபசரித்தாலும், அவளுக்கா மனம் இருந்தால்தான் சாப்பிடுவாள்: வெற்றிலை புகையிலை மட்டும் அடிக்கொரு தடவை வாயில் திணிக்கப்படும். “அதனால் தான் பசி மந்திச்சுப் போகுது சாப்பாடு வேண்டிருக்கலே” என்று சிவராமன் குறிப்பிடுவார்.
அவள் சுத்தமாகவும் இருக்க மாட்டாள். மூக்கைச் சிந்தி, சுவர் மீது விரலைத் துடைப்பாள். கால் கைகளை நன்றாகக் கழுவ மாட்டாள். தினசரி குளிக்க வேண்டியிருக்குதே” என்று ரொம்பவும் சங்கடப்படுவாள்.
அவளுடைய “அசுத்த மோகம்” வீட்டம்மாளுக்குப் பிடிக்கவில்லை. “சீக்கிரமே போ அம்மா!” என்று வழி அனுப்பி வைத்தாள்.
ராசம்மாளுக்குப் பிறகு வந்த சுந்தரம் சுத்த மோகியும் சிங்காரப் பிரியையுமாக இருந்த காரணத்தினால் வெளியேற்றப் பட்டாள். அவளுக்கு முப்பது – முப்பத்தைந்து வயது இருக்கும். ஒல்லியாய், கரிக்கட்டையாய், கன்னம் ஒட்டிப் போய்த்தான் இருந்தாள். அவள் மனசில் “நாம ரொம்ப அழகு” என்ற எண்ணம் இருந்திருக்கும். அடிக்கடி கண்ணாடி முன்நின்று அழகு பார்த்துக் கொள்வது அவளது பொழுது போக்குகளில் ஒன்று. அதே மாதிரி, தினசரி மூன்று நான்கு தடவைகள் முகம் கழுவி, பவுடரை தாராளமாகப் பூசி, பொட்டிட்டு, தலையைச் சீவிக் கொள்வதிலும் சிரத்தை காட்டுவாள். காலையில் அடுப்புச் சோலி முடிந்ததும் இப்படிச் சிங்காரித்துக் கொண்டு மார்க்கெட்டுக்குப் போவாள். மத்தியானச் சமையல் ஆனதும், முகம் கழுவிப் பவுடர் தடவிக் கொள்வாள். அதே மாதிரிச் சாயங்காலமும், காலையிலும் மாலையிலும் குளிப்பாள். வாசனை சோப்பு இல்லாமல் குளிக்க மாட்டாள்.
சிவராமனின் புத்தக அலமாரியை, மேஜையை எல்லாம் கண்ணோட்டம் விட்டாள் சுந்தரம். “என்ன புத்தகம் இதெல்லாம்! மர்மக் கதை, துப்பறியும் நாவல், அது மாதிரி எதுவுமே இல்லையே? சினிமாப் பத்திரிகை ஒன்றுகூட வாங்குவதில்லையா? அழகழகாப் படங்கள் போட்ட பத்திரிகைகள் எத்தனையோ வருதே – நீங்க எதுவுமே வாங்குறதில்லையா?” என்று விசாரித்தாள்.
”இந்த மேனாமினுக்கி நம்ம வீட்டுக்கு வேண்டாம்” என்று சிவராமனும் அவர் மனைவியும் ஏகமனதாகத் தீர்மானித்து, அத்தீர்மானத்தை உடனடியாகச் செயலுக்குக் கொண்டு வந்தார்கள்.
பெரியவர்கள், தெரியாதவர்கள் தான் இப்படி ஏறுமாறாக வந்து வாய்க்கிறார்க்ள்! நம் ஊரிலிருந்து, சொந்தக்காரங்க வீட்டிலிருந்து, ஏழைச் சிறு பெண் ஒருத்தியை அழைத்து வந்தால், திருப்திகரமாக நடந்து கொள்ளக் கூடும் என்று சிவராமன் எண்ணினார். அவ்வாறே, ஒரு பெண்ணைக் கூட்டி வந்தார். பதின்மூன்று வயது இருக்கும் அவளுக்கு. சகல வீட்டு வேலைகளையும் செய்து அனுபவப்பட்டவள்தான். குழந்தை களிடம் பிரியமாக இருந்தாள். குழந்தைகளும் “அக்கா, அக்கா” என்று அவளிடம் ஆசையோடு பழகின.
அவள் அவ்வீட்டுப் பெண் மாதிரியே. தானும் நடத்தப் படுவாள் என்று எதிர்பார்த்ததாகத் தோன்றியது. குழந்தை களுக்குப் புதுசாகச் சட்டைகள் தைக்கும்போது, தனக்கும் பாவாடை, தாவணி சட்டைகள் வாங்கவேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். எனக்கு ஒண்ணும் இல்லையா மாமா என்று கேட்கவும் செய்தாள். அடிக்கடி சினிமாவுக்குப் போக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். குழந்தைகளுக்காக வாங்கப்பட்டுள்ள பவுடர், கண் மை, வாசனைச் சாந்து, ஹேராயில், ரிப்பன் முதலியவற்றை அவள் தாராளமாக எடுத்து உபயோகித்தாள். வறுமைச் சுழலில் வாழ்ந்தவள் ஆதலால், இங்கு வளங்களைக் கண்டதும் “காய்ந்த மாடு கம்பிலே விழுந்தது போல, பேராசையோடு அனைத்தையும் அனுபவிக் கத் துடித்தாள். நெய்யை வெறும் வாயில் தின்றாள். சீனியை வாய் நிறைய அள்ளிப் போட்டுக் கொண்டாள். சிறு குழந்தை களுக்காக வாங்கி வைத்திருக்கும் தின்பண்டங்களையும் பிஸ்கட் தினுசுகளையும், தெரிந்தும் தெரியாமலும் அமுக்குவதோடு நிற்பதில்லை. குழந்தைகள் தின்னும்போது, “ஏய் – ஏய் அக்காளுக்கு இல்லையா?” ” அக்காளுக்குக் கொடேன்” என்று எத்திப் பிடுங்கி மொக்குவதிலும் கருத்தாக இருந்தாள்.
அந்தப் பெண்ணின் போக்குகளும் இயல்புகளும் வீட்டு அம்மாளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் வந்தது போல் சொந்த ஊருக்கே போய்ச்சேர வேண்டியதாயிற்று.
அவர்களுக்கெல்லாம் பிறகுதான் பஞ்ச வர்ணத்தம்மாளுக்கு அவ்வீட்டில் வேலை கிடைத்தது. அவளும் தனது சுயவர்ணத் தைக் காட்டி விட்டாள் என்றால், அப்படி என்ன தான் செய்திருப்பாள்?
சூரியன் பிள்ளையின் ஆர்வம் குறுகுறுத்துக் கொண் டிருந்தது. சிவராமன் சாருக்கு எப்போது வசதிப்படும்; எந்த நேரத்தில் எந்த இடத்தில் அவரை சந்தித்தால், சாவகாசமாகப் பேச முடியும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! அவ்விதமே அவரைக் கண்டு உரையாடப் பிள்ளை தவற வில்லை.
பூசி மெழுகாமல் சிவராமனும் விஷயத்தை உள்ளபடி சொல்லித் தீர்த்தார்.
பஞ்சவர்ணத்தம்மாளுக்கு, அதிகமாய் போனால், முப்பத் தஞ்சு வயசு இருக்கலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்ற ஆசை அவளுள் கனன்று கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கை அவளை வஞ்சித்து விட்டது. கல்யாணமாகி யும் என்ன காரணத்தினாலோ கணவன் அவளை விலக்கி வைத்து விட்டான். சாப்பாட்டுக்கே திண்டாடுகிற குடும்ப நிலைமை. எப்படி எப்படியோ காலம் தள்ளவேண்டியிருந்தது. கஷ்ட ஜீவனம்தான். பெரியப்பா மகனான அண்ணாச்சி ஒருவர் அவள் மீது இரக்கப்பட்டு, தம்மாலான உதவிகள் செய்து வந்தார். அவர்தான் சூரியன் பிள்ளையிடமும் உதவி கோரி, அவளுக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார்.
சிவராமன் வீட்டுக்கு வந்த பிறகு அவளுக்கு மூன்று வேளையும் வயிறாறச் சாப்பாடு கிடைத்தது. சாயங்காலம் காப்பி, சில வேளைகளில் ஏதேனும் சிற்றுண்டியும் கிடைத்தது. அதனால் அவளுள் ஒரு தெம்பும், உடலில் ஒரு தெளிவும் சேர்ந்தன. வயிற்றுப் பசிக்கு நிச்சயமான தீர்வு கிட்டியவுடன், அவளிடம் உறங்கிக் கிடந்த இதர பசிகள் விழித்துக் கிளர்வுற்றன போலும்.
தனது புறத் தோற்றத்தில் அவ்வளவாக அக்கறை காட்டாதிருந்த பஞ்சவர்ணத்தம்மாள் இப்போது சிரத்தை கொள்ளலானாள். நன்றாகச் சீவி முடித்து, முகத்துக்குப் பவுடர் பூசிக் கொள்வதில் ஆர்வம் காட்டியதோடு, தன்னை ஆண்கள் பார்க்க வேண்டும் என்ற விருப்பமும் கொண்டாள். அதனால் வேலை இல்லாமலே தெருவில் அங்குமிங்கும் போனாள். வாசல் படியில் நின்று தன்னையே காட்சிப் படுத்தினாள். போகிற வருகிற ஆண்களைப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம் கண்டாள்.
பார்ப்பதோடு மட்டும் திருப்தி கண்டு விடாத மனம் ஆண்களோடு பேசிக்களிக்கத் தூண்டியது. சமையல்காரியான அவள் யாரோடு பேச முடியும்? பால்காரன், காய்கறி விற்பவன், ஐஸ் வாலா, ரோடோரத்தில் தள்ளு வண்டியில் குளிர் பானங்கள் விற்கிறவன் – இப்படிப்பட்டவர்களிடம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. அவர்களிடம் வியாபாரம் பண்ணுவது போல், சிரித்துச் சிரித்துப் பேசி அவர்களையும் பேச்சுக்கிழுத் தாள். இவர்களில் ஒன்றிரண்டு பேர் எடுப்பான உடல் தோற்றமும், உரையாடிக் களிக்கும் மனமும் திறமையும் பெற்றிருந்தார்கள்.
ஒரு நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் சினிமாவுக்குப் போய் விட்டாள் இரவுக் காட்சிக்கு. அவள் திரும்பி வந்ததும், சிவராமன் கோபித்துக் கொண்டார். “இரவு 10 மணிக் காட்சிக்குத்தானா போக வேண்டும்? மாட்னிக்குப் பேர்கிறது தானே? இல்லாவிட்டால், கேட்டுக் கொண்டு 6.30 மணிக்காட்சிக்குப் போறது!” என்று உபதேசித்தார்.
அது அவளுக்குப் பிடிக்க வில்லை. “வேலைகளை முடித்து விட்டுத் தானே போகணும்? சாயங்காலக் காப்பி போட்னும், ராத்திரிச் சாப்பாடு தயாரிக்கணும். இரவுக் காட்சி தான் செளகரியம். வேலைக்கு இடைஞ்சலாக இராது” என்றாள்.
பிறகு, வாரம் தோறும் அவள் அவ்வாறே செய்யலானாள், அவள் ஒரு மாறுதலாக சினிமா பார்க்கத் தான் போகிறாள் என்றே சிவராமன் எண்ணினார். அது தவறு என்பது அவருக்கு விரைவிலேயே புரிந்து விட்டது.
“உங்க வீட்டு வேலைக்காரியை தியேட்டரிலே பார்த்தேன், ஸார். கூல் ட்ரிங்க்ஸ் விற்பானே ஒருத்தன் – தள்ளு வண்டியிலே வச்சு – சிவப்பா, கட்டுகுட்டுணு, சிலிர்த்து நிற்கும் கிராப்பும் சிரிச்ச முகமுமா – அவனுக்கும் அவளுக்கும் சிநேகம் போலிருக்கு! அந்த அம்மா தன்னை மறந்து அவன் கூடப் பேசிச் சிரிச்சுக்கிட்டு நிக்கறதை நான் பார்த்தேன்” என்று அவரது ஆபீசைச் சேர்ந்த ஒருவன் ஒரு நாள் அவரிடம் சொன்னான். அவருக்குத் “திக் கென்றது”.
அன்றே அவர் பஞ்சவர்ணத்தம்மாளிடம் கண்டிப்பாகச் சொல்லி வைத்தார். இனிமேல் அவள் சினிமா இரவுக் காட்சிக்குப் போகக் கூடாது; அப்படிப் போய் விட்டு வந்தால் கட்டாயமாகத் கதவைத் திறக்கவே மாட்டேன் என்று.
முந்திய நாள் இரவு பஞ்சவர்ணத்தம்மாள் வீட்டில் இல்லை. “மனசே சரியில்லை. சினிமாவுக்குப் போறேன் என்று சொல்லி விட்டுப் போனாள்” என்று மனைவி தெரிவித்தாள். உடனே அவரும் தியேட்டர் பக்கம் போனார். தியேட்டருக்கப் போக வேண்டிய தேவையே ஏற்படவில்லை. பஸ் ஸ்டாப்பில் வந்து நின்ற ஒரு பஸ்ஸில் அவளும் கூல்ட்ரிங்க்ஸ் விற்பவனும் ஏறுவதும், உள்ளே போய் ஒரே ஸ்பீட்டில் இருவரும் உட்காருவதும் அவர் பார்வையில் பட்டது. இரண்டு பேரும் சந்தோஷமாகக் காட்சி அளித்தார்கள். இருவரும் சேர்ந்து பேசி, திட்டமிட்டுத் தான் கிளம்பி-யிருக்கிறார்கள் என்பது விளங்கி விட்டது.
“அப்புறம் என்ன! நமக்கு ஒரு வேலைக்காரி வேண்டும். நல்ல ஆளா உங்களுக்குத் தெரிந்த நபர் யாராவது இருந்தால் சொல்லுங்க” என்றார் சிவராமன்.
– தீபம் 1978
– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.