வேலைக்காரி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 8,155 
 
 

அதிகாலை.

தங்கம்மாள் வீட்டை விட்டுப் புறம்படும்போதே… மனதில் உற்சாகம்.

” தங்கம் ! நாளைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன். ராத்திரியே புறப்படுறேன். திரும்பி வர ரெண்டு நாளாகும். வீட்டுல ஐயா மட்டும்தானிருப்பார். காலை, மாலை வழக்கம் போல் வந்து வேலையை முடிச்சிட்டுப் போ..” மாலினி சொன்னது இவள் மனதில் இனித்தது.

கட்டுடலான 25 வயது தங்கம்மாளுக்குக் கை கொஞ்சம் நீளம். எந்த வீட்டில் வேலையில் சேர்ந்தாலும் சாமார்த்தியமாக ஏதாவது ஒரு பொருளை அடித்துக் கொண்டு வேலையை விட்டே நின்றுவிடுவாள். இது இவள் வழக்கம்.

மாலினி வீட்டில் வேலைக்காட்ட நினைக்கிறாள். முடியவில்லை. ! அதற்கான நேரம் காலம் வாய்க்கவில்லை. இன்று வாய்ப்பு. !!

தங்கம்மாள் ஒன்றும் ஏமாளி அல்ல. இது போல சந்தர்ப்பங்களில் வீட்டிற்கு விருந்தாளியோ..வேற்றாளியோ…. மூன்றாம் மனிதர்கள் வந்தால்தான் பொருட்களில் கை வைப்பாள்.

” காணோமே…! ” என்று தன்னைச் சந்தேகப் பட்டுக் கேட்டால்…

” தெரியலம்மா! வந்தவங்க எடுத்திருக்கலாம் ! ” என்று பழியைச் சுலபமாக அவர்கள் மீது திருப்பி தப்பிப்பாள்.

அது மட்டுமல்ல.

” நான் உண்மையா உழைச்சேன். எப்போ என் மேல சந்தேகப்பட்டுக் கேட்டீங்களோ அப்பவே…. உங்களுக்கு என் மேல உள்ள நம்பிக்கை, நாணயம் வீணாய் போச்சு. அடுத்து எது காணாமப் போனாலும் என் மேலத்தான் சந்தேகப்படுவீங்க. கேட்பீங்க. வேணாம்மா இந்த வீண் விவகாரம். திருடிப் பட்டம் . வேலையை விட்டு நின்னுக்கிறேன். ! ” சொல்லி நின்றுவிடுவாள்.

‘ இன்னைக்கு ஒரு புது மனுசாள் வரணும். ஆண்டவனே..! ‘ – வேண்டிக் கொண்டே நடந்தாள்.

இவள் வீட்டிற்குள் நுழைந்தபோது… மாலினி கணவன் கோபால் கைலியில் கூடத்து சோபாவில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்தான்.

தங்கம்மாள் அவனைத் தாண்டி அடுப்படிக்குள் நுழைந்தாள்.

கையில் வாளித் தண்ணீ ர் , விளக்குமாற்றுடன் வெளியில் வந்தாள்.

வாசல் தெளித்து, பெருக்கி கோலமிட்டு உள்ளே சென்றாள்.

” அம்மா ! பால் ! ” – வெளியில் சப்தம் கேட்டது.

பாத்திரத்துடன் வந்து வாங்கி உள்ளே சென்றாள்.

ஐந்து நிமிடங்களில் கொதிக்கும் காபியுடன் கூடத்திற்கு வந்தாள் .

” ஐயா ! காபி. ” சொல்லி அவன் முன் வைத்துவிட்டு திரும்பி சென்றாள்.

கோபால் தினசரியை மடக்கி வைத்து விட்டு காபியை எடுத்துக் குடித்தான்.

தங்கம்மாள் சமையல் கட்டில் பாத்திரங்களை உருட்டி வேலைகள் செய்தாள்.

” கோபாலா…! ” எவர் குரலோ கேட்டது.

அடுக்களையில் இருந்த தங்கம்மாள் காதில் தேன் பாய்ந்தது.

” வாங்க சித்தப்பா..! ” கோபால் எழுந்து உள்ளே வந்தவரை வரவேற்றான்.

அடுத்த சில வினாடிகளில்…

” தங்கம் ! இன்னொரு டம்ளர் காபி .” கோபால் குரல் கொடுத்தான்.

இவள் சிறிது நேரத்தில் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டுச் சென்றாள்.

வந்தவர் காபியை எடுத்தார்.

” ஏன்டா ! மருமக இல்லியா..? ” உறிஞ்சினார்.

” இல்லே சித்தப்பா. வெளியூ ர் போயிருக்காள். திரும்ப ரெண்டு நாளாகும்.”

வந்தவரின் கண் வீட்டின் மேல் சென்றது.

” வீடு நல்லா இருக்கு. வாடகை எவ்வளவு..? ” – காலி டம்ளரைக் கீழே வைத்தார்.

” பத்தாயிரம் ! ”

” இருபது இருக்கும்ன்னு நெனைச்சேன். வசதியா…? ”

” சுத்திப் பார்த்துட்டு வந்து சொல்லுங்க சித்தப்பா..”

பெரியவர் எழுந்து சுவாதீனமாக அமர்ந்திருந்த கூடத்தை ஒரு சுற்று சுற்றினார். படுக்கை அறையை எட்டிப்பார்த்தார். அடுத்துள்ள அறையைத் திறந்து பார்த்தார். அப்படியே அடுப்படிக்குச் சென்றார்.

தங்கம்மாள் தட்டுமுட்டுச் சாமான்கள் துலக்கிக் கொண்டிருந்தாள்.

அவளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, கொல்லைக்குச் சென்றார். திரும்ப பழைய இடத்திற்கு வந்தார்.

முகம் திருப்தியாய் இருந்தது.

” நல்லா இருக்குடா. ” சொல்லி அமர்ந்தார்.

” என்ன சித்தப்பா சேதி..? திடீர்ன்னு வந்து மொளைச்சிருக்கீங்க. ” கோபால் அவரை ஏறிட்டான்.

” ஒண்ணுமில்லேடா.. பேரன் ஒருத்தன் படிச்சு முடிச்சுட்டு சும்மா இருக்கான். உன்னால அவனுக்கொரு வேலை வாங்கித் தரமுடியுமான்னு கேட்டுப் போக வந்தேன்.” வந்த விசயத்தைச் சொன்னார்.

” என்ன படிச்சிருக்கான்..? ”

” சிவில் ! ”

” தெரிஞ்ச இடம், கம்பெனி ஒன்னு இருக்கு. சொல்லி வைக்கிறேன். ”

” கண்டிப்பா கிடைக்குமா…? ”

”கிடைக்கும் ! ”

பெரியவர் முகத்தில் பிரகாசம்.

” அப்போ… ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்க்கவா..? ”

” வேணாம் சித்தப்பா. வயசான காலத்துல நீங்க வீணா அலைய வேணாம். உங்க கைபேசி எண் என்கிட்டே இருக்கு. தகவல் சொல்றேன். ”

” ரொம்ப சந்தோசம். அப்போ கிளம்பறேன். ” எழுந்தார்.

” வாங்க சித்தப்பா..” இவனும் எழுந்தான்.

அவரை வாசல்வரை வந்து வழி அனுப்பி வைத்துவிட்டு கதவைத் தாழிட்டுத் திரும்பினான்.

தன் வேலையை முடித்து விட்டு வந்த தங்கம்மாளுக்கு வாசல் கதவடைப்பு திக்கென்றது. ஆனாலும்…..

” ஐயா. வர்றேன் ” சொல்லி நகர்ந்தாள்.

” நில்லு !! ” கோபால் கை நீட்டி மறித்தான்.

ஆளை ஏற இறங்கப் பார்த்தான்.

‘ தப்பாச்சே..! ‘ – தங்கம்மாளுக்கு வியர்த்தது.

” படுக்கை அறைக்குப் போ..”

” ஐயா…ஆ…..” அலறினாள்.

” இதோ பார். ! நீ யார், எப்படிப்பட்டவள் , எப்படித் திருடுவே என்கிறதெல்லாம் எனக்கு நல்லத்தெரியும். நீ அடிக்கடி இடம் மாறுவதால்….எனக்குள்ளேயே ஏன்னு கேள்வி. அதனால் நீ இங்கே வேலைக்குச் சேர்ந்த அடுத்த நாளிலிருந்து… நீ முன்னாடி வேலை செய்த இடங்களிலெல்லாம் தகவல்கள் சேகரிச்சேன். உன்னைக் கையும் களவுமாய் பிடிக்கனும்ன்னு திட்டமிட்டு மூச்சுக் காட்டாமல் என் மனைவியை வெளியூருக்கு அனுப்பிட்டு உன் வசதிக்குத் தக்கப்படி… என் சித்தப்பாவையும் வரவழைச்சு அனுப்பினேன். இது நான் விரிச்ச வலை. வேற யாருக்கும் தெரியாது. தெரியப்படுத்தவும் மாட்டேன். இப்போ நீயும் நானும் தனி. இப்போ எப்படியும் என் வீட்டுப் பொருள் உன் மடியில இருக்கும். உனக்கு சிறை, திருட்டுப் பட்டம் வேணாம்ன்னா… என் ஆசைக்கு இணங்கணும். என்ன சொல்றே..? ” கோபால் அவளைப் பார்த்தான்.

பார்வை… அவள் கழுத்துக்குக் கீழ் நிலைத்தது.

தங்கம்மாவிற்கு நெஞ்சடைத்தது. வியர்க்க விறுவிறுக்க…

” ஐயா..! நான் அப்படிப்பட்ட ஆளில்லைங்கய்யா ” சொல்லி……

மெதுவாக தன் மடியிலிருந்து ஒரு அடி நீளமுள்ள வெள்ளி குத்து விளக்கை எடுத்து கீழே வைத்தாள்.

” இதுக்கு என்ன அர்த்தம்…? ” – கோபால். ஏறிட்டான்.

” இந்தப் பொருளும் கற்பும் ஒன்னாகிடாதுங்கய்யா. என் திருட்டுக்குத் தண்டனையா அதைத் தவிர…வேற என்ன தண்டனை வேணுமின்னாலும் கொடுங்க ஏத்துக்கிறேன். இதுதான் கடைசி. இனி வேற எங்கேயும் திருட மாட்டேன். சத்தியம் ! ” சொல்லி அவன் காலில் விழுந்தாள்.

கோபால் முகத்தில் மலர்ச்சி.

” இந்த சத்தியம் உண்மைன்னா…எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைச்சுட்டு எப்போதும் போல வேலைக்கு வா. இதுக்கு இதுதான் தண்டனை `! ”

அவ்வளவுதான் தங்கம்மாவிற்கு மரணத்திலிருந்து மீண்ட மலர்ச்சி.

குத்து விளக்கை சாமி அறையில் வைத்து விட்டு…

”வர்றேங்கய்யா…” நன்றி விசுவாசமாக சொல்லி எப்போதுமில்லாத புதுப் பெண்ணாக கதவு தாழ்ப்பாள்த் திறந்து வெளியேறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *