வேலியோர பொம்மை மனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 6,828 
 
 

ஜெயரஞ்சனி யின் அப்பா ஓரிரவு அவள் விரும்பிய கரடி பொம்மையை வாங்கி வந்திருந்தார். அவள் அவரைக் கட்டிக்கொண்டு முத்தம் பொழிந்தாள். அடுக்களையிலிருந்து வெளிவந்த அம்மாவுக்கு ஜெயாவின் சந்தோஷம் மனதை பிசைந்தது. கரடி பொம்மையின் புசுபுசுவென்ற அடர் கருமைநிற முடியை ஜெயா வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தாள். மிருதுவான அதன் தலையில் முத்திட்டு மகிழ்ந்தாள். அப்பாவும் அம்மாவும் கண்கள் தளும்ப யாரோ உருவாக்கிய பொம்மையை ரசிக்கும் தாங்கள் உருவாக்கிய பேசாபொம்மையை ரசித்துக்கொண்டிருந்தபோது, அவள் கரடி பொம்மையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.

ஆறு வருடங்களுக்கு முன் ஜெயா பிறந்தபோது அப்பாவை விட அம்மாதான் அதிகம் சந்தோஷப்பட்டாள். போரில் காலை இழந்ததால் மகன் பிறப்பான் தன்னை விட சிறந்த வீரனாக வலம் வருவான் என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார் அப்பா. பிறந்தது மகள் என்றபோது வெளிப்பட்ட ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு மகளை ஆண்பிள்ளை போல் வளர்க்க வேண்டும் என்றே நினைத்திருந்த அப்பாவின் எண்ணத்தில் பேரிடியாய் அந்த செய்தி வந்து விழுந்தது. காதுகேளாத, வாய்பேச முடியாத குழந்தையாக ஜெயரஞ்சனி பிறந்திருந்தாள். தவமிருந்து பெற்ற பிள்ளையின் நிலையை கண்டு தவமுதல்வன் மீதே வெறுப்பை உமிழ்ந்தார் அப்பா. துடிதுடித்து போனாள் அம்மா. ஏதோவொரு நம்பிக்கையில் நகர்ந்தன நாட்கள்.

ஜெயாவின் உலகம் பொம்மைகளால் நிறைந்தது. நாய்க்குட்டிகளும், சிங்கங்களும், யானை பொம்மைகளும் மட்டுமே ஜெயாவின் மௌனமொழியைப் புரிந்துகொண்டன. அவள் இருப்பே பொம்மைகள் சூழ என்றாகிப் போனது. மனதின் மொழியை கண்களால் வெளிப்படுத்தி பொம்மைகளுடன் அவள் உரையாடுவதை வேதனையுடன் பார்த்துவிட்டு நகர்வாள் அம்மா. ஆனால் படிப்பில் எல்லோரும் ஆச்சர்யமூட்டும் வகையில் கூர்மை மிக்கவளாக திகழ்ந்தாள் அவள். அம்மா சைகையில் கற்று கொடுக்கும் பாடங்களை உடனே புரிந்துகொள்வாள். அப்பா வாங்கி தந்திருக்கும் கரடி பொம்மையை இடது தோளில் சாய்த்தணைத்தபடியே தனக்கு மட்டுமேயானதொரு மௌன உலகில் நடமாடுவாள்.

ஒலியறியா ஜெயாவின் செவிகள் அந்த துயர்மிகுந்த இரவில் விழுந்து வெடித்த வெடிகுண்டின் பெருஓசையை கேட்டுணர்ந்து கொள்ளவில்லை. அவள் உறக்கத்திலிருந்தாள். இரத்தம் தோய்ந்த உடையுடன் அவளது அறைக்குள் வந்து விழுந்த அம்மாவின் கைகள் ஆழ்ந்த உறக்கத்தில் கனவுலகில் பொம்மைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த ஜெயாவை தட்டியெழுப்பியபோது, திடுக்கிட்டு எழுந்தாள். அம்மாவைக் கண்டவுடன் பயத்தில் கண்கள் மருள கரடி பொம்மையை கட்டிக்கொண்டவளின் காலடியில் விழுந்து மரணித்தாள் அம்மா.

அநாதை என்னும் வக்கிர சொல் ஜெயாவின் செவிகளில் நுழைய முடியாமல் காற்றில் அலைந்து திரிந்தது. முள்வேலிக்குள் தனக்கு மிகவும் பிடித்தமான கரடி பொம்மையை அணைத்தபடி வெளிர் மஞ்சள் நிற பாவாடையில் உணவுக்காக தட்டை ஏந்தி நின்றுகொண்டிருந்தாள். கண்ணீர் அவளது பிஞ்சு மனதின் வலிகளை மொழிந்து கொண்டிருந்தது. நேற்றுவரை உணவூட்டிய அம்மாவின் நினைவுகள் அவளது கன்னத்தில் கோடுகளை தீட்டிச் சிந்தின. சக மனிதனின் மரணத்துயரின் ஓலமும், உறவுகளின் பிரிதலினால் ஏற்பட்ட துயரமும் அவளால் உணரமுடியவில்லை எனினும், அவளது இதயம் அந்த வலியை உணர்ந்துகொண்டது.

பகலெல்லாம் வெய்யிலின் உக்கிரமும், இரவின் கடுங்குளிரும் இப்போது ஜெயாவுக்கு பழகி இருந்தன. சுற்றிலும் முள்வேலியிட்ட உடைந்த கட்டிடமொன்றில் அவளும் இன்னும் பலரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்களது பாதுகாப்புக்காக என்று நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில் ஒருவன் மிகவும் மூர்க்கமானவனாக தோன்றினான். இரக்கமற்ற அவனது கண்களை பயத்துடன் பார்ப்பாளவள். அவனது தோற்றமும் கன்னத்திலிருக்கும் வெட்டுத்தழும்பும் அவனை கதைகளில் வரும் பூச்சாண்டியை நினைவூட்டின. அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவருக்கும் அவனது மௌன மிரட்டல் மேலும் அச்சத்தைத் தந்தது. ஜெயாவின் அருகில் வந்தவன் அவளது பொம்மையை பறித்துக்கொண்டு சத்தமிட்டு சிரித்தபோது அருகிலிருந்த கல்தூணுக்கு பின் ஒண்டிக் கொண்டாள்.

மறு நாள் அதிகாலை வெளியே சென்றவள், இரு பாதியாய் முள்வேலியோரம் கிடந்த பொம்மையை கண்டு அழுதுகொண்டே அந்த பிய்ந்த பொம்மையை அள்ளி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள். அப்படியே உறங்கியவளின் கனவில் கரடிபொம்மைகள் உயிர்ப்பெற்று அவளோடு ஓடியாடி விளையாடின.

அவர்கள் தருகின்ற ரொட்டிகளை வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. வரிசையை கட்டுப்படுத்தியவர்களுள் அந்த முரடனும் இருந்தான். எல்லோரும் வாங்கி சென்றபின் ஜெயா ரொட்டியை வாங்கினாள். பசியில் ரொட்டித்துண்டு இனித்தது. ரொட்டியைக் கடித்தபடி நடந்தவளின் பார்வையில் களைத்து கல்லொன்றின் மீதமர்ந்த முரட்டுச் சிப்பாய் தெரிந்தான். சோர்வாக அவன் அமர்ந்திருப்பதை கண்ட ஜெயா அவனருகில் சென்று ரொட்டித்துண்டில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு, மற்றொன்றை அந்த முரட்டு ராணுவவீரனுக்கு கொடுக்க கைநீட்டினாள்.

தன்னை நோக்கி நீள்கின்ற பிஞ்சுவிரல்களும், ரொட்டித்துண்டும், அதன் வெள்ளை மனதும் கண்டவன் முதல் முறையாக மெல்லியதாய் தன்னுடல் நடுங்குவதை உணர்ந்தான். தனிச்சையாக அவனது கைகள் நீண்டன.

அவனுக்கு ஒரு ரொட்டியை கொடுத்துவிட்டு தன் ரொட்டித்துண்டை கடித்தபடி, இடது கையில் பிய்ந்த கரடி பொம்மையை அணைத்துக்கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள் ஜெயா.

– Tuesday, December 1, 2009

நிலாரசிகன் ஒரு தமிழ்க் கவிஞர் மற்றும் எழுத்தாளர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதி வருகிறார். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் ஆனந்த விகடன், வார்த்தை, உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர் எழுத்து, கல்குதிரை, கொம்பு போன்ற அச்சிதழ்களிலும், கீற்று, கூடல்திணை, அதிகாலை, உயிரோசை, திண்ணை, தமிழோவியம் போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *