வேர்விடும் உறவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 11,117 
 
 

கல்யாணம் நல்லபடியாக நடந்து மருமகள் லக்ஷ்மியோடு வீடு திரும்பிய சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார் ராமச்சந்திரன்.

மதுராம்பாளுக்கு சர்க்கரை உச்சம். இன்சுலின் போட்டு ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தது. கல்யாண முகூர்த்தம் சுபமாக முடிய வேண்டுமென குலதெய்வத்தைப் பிரார்த்தனை செய்தபடியே இருந்தார். சம்பந்தி வீட்டில் கல்யாணத்தை நிறைவாகச் செய்தார்கள். எந்த ஒரு சம்பிரதாயத்தையும் விட்டுவிடாது பார்த்துப் பார்த்து செய்தார்கள்.

வேர்விடும் உறவுகள்தஞ்சாவூர் பக்கத்து சமையல்காரர்கள், அப்படியொரு கை மணம். கிராம்பு ரசம் ஹைலைட். சாப்பாட்டு ஹாலே மணத்தது.

லக்ஷ்மி ஒரே பெண். செல்ல வளர்ப்பு. கல்யாணம் முடிந்து மறுநாள் கட்டு சாதம் வைத்து சம்பிரதாயங்கள் முடிந்து மாப்பிள்ளையோடு கிளம்பும் போது பெற்றவர்கள் கண்கலங்கி நின்றார்கள். கடைசியில் துக்கம் பீரிட்டு குமுறிக் குமுறி அழுது தீர்த்துவிட்டார்கள். சந்தோஷமான நேரத்தில் கண்ணீர்விட்டு அழக்கூடாது என்று பெரியவர்கள் தேற்றினார்கள். கூடியிருந்தவர்களுக்கு அந்தச் சூழ்நிலை மிகுந்த மனபாரத்தைத் தந்தது. எல்லோரும் பேச்சின்றி இறுகிய முகத்தோடு நின்றார்கள்.

நிலைமை ஒருவாறு மாறியது. லக்ஷ்மி குருமூர்த்தியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டாள். காரில் மகன் மருமகளோடு ராமச்சந்திரன் மதுராம்பாள் ஏறிக் கொண்டார்கள். வீடு வந்ததும் இரு சுமங்கலிப் பெண்கள் புதுமண தம்பதிகளை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள். வலது காலை எடுத்து வைத்து லக்ஷ்மி வீட்டிற்குள் வந்தாள்.

பூஜை அறைக்குச் சென்று ஸ்வாமி நமஸ்காரம் செய்தபின் மாமியார், மாமனார், கணவன், பெரியவர்கள் என்று எல்லோருக்கும் நமஸ்காரம் செய்தாள்.

லக்ஷ்மி காஸ் அடுப்பில் பாலைக் காய்ச்சி, பிறகு பால் பாயசம் வைத்தாள். நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் மணம் சற்றுத் தூக்கலாகவே இருந்தது. எல்லோரும் பாயசத்தை ருசித்துக் கொண்டிருக்கும் போது சம்பந்தி வீட்டில் வைத்திருந்த கட்டு சாதத்தை அத்தை பிரித்தாள்.

அட்டைப் பெட்டியில் சிறு சிறு சில்வர் ஃபாயில் பொட்டலங்களை அடுக்கிவைத்திருந்தார்கள். புளியோதரை, தயிர் சாதம், தொட்டுக் கொள்ள வற்றல், மோர் மிளகாய், புளிக்காய்ச்சல், மிளகாய்ப் பொடி தடவிய இட்லி.

அந்தக் காலத்தில் மூங்கிற் கூடையில் வாழை இலை பரப்பி, ஒரு கூடை புளியோதரை, இன்னொரு கூடை தயிர்சாதம், மற்றொரு கூடையில் இட்லி என்று வைத்து கூடைகளைத் துணியால் இறுகக் கட்டிவைப்பார்கள்.

“காலம் ஒவ்வொரு செயல்பாட்டையும் எப்படி எப்படி மாற்றிவிடுகிறது..’ ராமச்சந்திரன் ஆச்சரியப்பட்டார்.

ராமச்சந்திரன் மாலையில் மொட்டைமாடிக்குச் சென்று பூந்தொட்டிகளுக்கு தண்ணீர்விட்டார். வீட்டுக் காவலுக்கு வந்திருந்த செக்யூரிட்டி கார்டு பூச்செடிகள் வாடிவிடாமல் தண்ணீர்விட்டிருந்தார்.

ஒரு துளசிச் செடி மட்டும் சற்றே வாடிப் போயிருந்தது. “இளஞ்செடி. வெயில் அதிகமாக அதன் மீது விழுந்தது கூட காரணமாயிருக்கலாம்…’ என்று சொல்லிக்கொண்டே நீரை ஊற்றினார்.

மறுநாள் காலையில் பார்த்தபோது துளசி சற்று அதிகமாகவே வாடிப் போயிருந்தது. எனவே தோட்டத்திலிருந்த துளசி கன்று ஒன்றை ஆணி வேரோடு பத்திரமாகப் பெயர்த்தெடுத்து மண்ணோடு சேர்த்து மொட்டை மாடிக்குக் கொண்டுவந்தார். பூந்தொட்டியில் இயற்கை உரம் கலந்த மண்ணை நன்கு கிளறி துளசிக் கன்றை நட்டார். உயிர்த் தண்ணீரும்விட்டார்.

வீட்டிற்கு வந்த மருமகள் லக்ஷ்மி வீட்டு வேலைகளை மாமியாரிடம் கேட்டுக் கேட்டு பதவிசோடு செய்வதைப் பார்த்த ராமச்சந்திரனுக்கு சந்தோஷமாக இருந்தது.

அன்று காலை மதுராம்பாளின் உடல் நிலை திடீரென்று சரியில்லாமல் போனது. சர்க்கரை கன்னாபின்னாவென்று எகிறிவிட்டது. மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாள் தீவிர சிகிச்சைக்குப் பிறகுதான் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அந்த இரண்டு நாட்களும் அதற்கடுத்த நாட்களிலும் லக்ஷ்மி வீட்டு வேலைகளில் முழுவதுமாக மூழ்கிப் போனாள். காலை காபி, டிபன், மதிய சாப்பாடு, மாலை ஓட்ஸ் கஞ்சி, இரவு சப்பாத்தி என்று இயந்திர கதியில் வேலை.

லக்ஷ்மி புக்ககம் வந்து ஒரு வாரம் நெருங்கியது. அவள் தனது பிறந்த வீட்டை நினைக்கக் கூட நேரமில்லாது போனதை நினைத்து ராமச்சந்திரன் மிகவும் வருந்தினார். அப்போதுதான் எதேச்சையாகப் பார்த்தார். லக்ஷ்மியின் முகத்தில் ஏதோ இனம்புரியாத வாட்டம் தெரிந்தது. இரவு குருமூர்த்தியிடம் லக்ஷ்மியை சம்பந்தி வீட்டிற்கு அழைத்துப் போய் வருமாறு கூறினார்.

“‘போனதும் வந்ததுமாக வர வேண்டாம். அவள் விருப்பப்படி இரண்டு மூன்று நாட்கள் தங்கிவிட்டு வரட்டும். அவளும் அடுத்த வாரம் லீவுமுடிந்து வேலைக்குச் சேரவேண்டும். அதற்குப் பிறகு அவளுக்கு நேரம் கிடைப்பதே துர்லபம்.”

லக்ஷ்மி இரண்டு நாட்கள் கழித்துத் திரும்பிவந்தாள். அவள் முகம் வாட்டமற்றிருந்தது.

அந்த இரண்டு நாட்களுக்குள் ராமச்சந்திரன் சமையல் உட்பட வீட்டு வேலைகள் முழுவதையும் செய்ய ஓர் அம்மாவை அமர்த்தியிருந்தார். ஊர்க்காரர்களிடம் எப்போதோ சொல்லியிருந்தார். அது வாகாக அப்போது கைகூடிற்று.

சமையல் அம்மாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல். கணவர் இல்லை. ஒரேபிள்ளை. புதுடெல்லியில் வேலை. அவனுக்கு ஓர் ஆண் குழந்தை. டெல்லி குளிர் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் குழந்தைக்கு மூன்று வயதானதும் கிராமத்திற்கே திரும்பிவிட்டாள். எது எப்படியோ வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் தோதாக நல்ல நபர் கிடைத்ததில் ராமச்சந்திரன் மனநிறைவோடு இருந்தார்.

“மதுரத்திற்கும் முடியவில்லை. லக்ஷ்மியும் வேலைக்குப் போக வேண்டும். கடவுளாகப் பார்த்து ஆள் அனுப்பியிருப்பதாக’ வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தார். லக்ஷ்மிக்கு புகுந்த வீட்டில் பிடிப்பு அவள் அறியாமலேயே வந்துவிட்டது. மாமனார், மாமியார், கணவன் என்று எல்லோரிடமும் பரிவும் பாசமும் இயல்பாகப் படர்ந்தது.

மாடிக்குச் சென்ற ராமச்சந்திரன் புதிதாகத் தொட்டியில் வைத்த துளசிக் கன்றை உற்றுநோக்கினார்.
புலம் பெயர்ந்ததால் இருந்த வாட்டம் நீங்கி துளசித் செடி நிமிர்ந்து நின்றது கம்பீரமாக. முளைத்த மண்ணில் உள்ள ஊட்டச்சத்தோடு புதுமண்ணில் உள்ள சத்தையும் கிரகித்துக் கொண்டு துளசி ஆரோக்கியமாக வளர்வதை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

“”புதிய இடத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு வாழ்வதில் செடிகளுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை…” என்று சொல்லிக் கொண்டே ராமச்சந்திரன் பூவாளியில் நீரை நிரப்பி துளசிச் செடிக்கு ஊற்றினார்.

இனந்தெரியாத சந்தோஷம் மனசு முழுவதும் நிறைந்திருப்பதைப் போல உணர்ந்தார்.

குளிர்ந்த நீர்த் துளிகள் துளசி இலைகளின் மீது பட்டுத் தெறித்தன.

இலைகள் காற்றில் மெல்ல ஆடின.

– ஏப்ரல் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *