வெள்ளைக்காரச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 509 
 

(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொங்கல் என்றால் எனக்கு அவள் ஞாபகம்தான் வருகிறது.

மாட்டுப்பொங்கலின் போது ‘வெள்ளைக்காரச்சி’ பிறந்து பந்து நாள் தான் ஆகியிருந்தது; என்றாலும் அவளுடைய குதிப்பிலும் ஓட்டத் திலும் நல்ல தெம்பும் துள்ளலும் இருந்தது. ஒரு வேளைப் பால் பூராவும் அவளுக்குத்தான்; கேட்பானேன்?

என் தாயாருக்கு அவளிடத்தில் வெகுபிரியம். தொட்டுத் தொட்டு வளர்த்தாள். தினமும் கஞ்சி தவறாமல் புகட்டுவாள். நானும் பள்ளிக் கூட நேரம் போக பாக்கி பொழுது பூராவும் அவளுடன்தான் கழிப்பேன். என் தங்கை அவளுக்குக் கழுத்தில் மாலையெல்லாம் கட்டிப் போடுவாள். அவளுடைய முகத்தில் பால் வாசனை அடிக்கும். சதா அவளை முத்தமிட்டுக்கொண்டே இருப்பேன்.

‘வெள்ளைக்காரச்சி’ என்று அம்மாதான் பெயர் வைத்தாள். அவ்வளவு வெண்மையாக இருந்தது அவள் நிறம். நிலவில் நிறுத்திப் பார்க்க வேண்டும் அவள் அழகை.

அன்று பூராவும் உற்சாகம் எனக்குத் தலை தெரியவில்லை. கடையில் போய் சிகப்பு வர்ணம் வாங்கிக்கொண்டு வந்து எண்ணையில் கரைத்து வைத்துக் கொண்டேன். மாட்டுக்காரப் பையன் பத்து மணிக்கு வந்து மீனாக்ஷியையும் ‘வெள்ளைக்காரச்சி’ யையும் வாய்க்காலுக்குக் குளிப்பாட்டக் கொண்டு போனான். நானும் கூடப் போனேன். குளிப்பாட்டின பிறகு உடம்பில் மஞ்சன் பூசி நெற்றியில் குங்குமம் வைத்தோம். மீனாக்ஷியின் கொம்புகளில் வர்ணத்தைப் பூசினோம். சாயந்திரம் எப்பொழுது ஆகுமென்று துடித்துக் கொண்டிருந்தோம் நானும் என் தங்கையும்.

விளக்கு வைக்கிற நேரம். அன்று மாடுகள் மேயப் போகவில்லை. அம்மா கட்டுத்துறையை அலம்பி கோலமிட்டு செம்மண் பூசி வைத்திருந்தாள். மீனாக்ஷிக்குக் கூட அன்று ஏதோ விசேஷமென்று தெரிந்துவிட்டது. கட்டுத்துறையில் அவளுக்கு நிலை கொள்ளவில்லை. ‘உம், உம்!” என்று கொண்டு காதுகளைக் கூட்டி எங்களைப் பார்த்த வண்ணமாக இருந்தாள். பொங்கல் வாசனை அவளுக்குத் தெரிந்து விட்டது.

அம்மா பொங்கலை ஒரு தட்டில் மீனாக்ஷிக்கும் மற்றொரு தட்டில் வெள்ளைக்காரச்சிக்குமாகக் கொண்டு வந்து தூரத்தில் வைத்துவிட்டு இருவருக்கும் தலையிலும் கழுத்திலும் பூ சூட்டி பூஜை பண்ணினான். ஆனால் மீனாக்ஷிக்கு அதில் எல்லாம் கவனம் செல்லவில்லை. தட்டி லிருந்த பொங்கலைப் பார்த்து சுற்றிச் சுற்றி வந்தாள். அம்மா அவளைத் தொட்டு கண்ணில் ஒற்றிக்கொண்டு விட்டு பொங்கல் தட்டை அவள் முன் வைத்தாள். வெள்ளைக்காரச்சிக்கு நன்றாகத் தின்னத் தெரியவில்லை.

நானும் என் தங்கையும் தட்டுகள் வைத்துக்கொண்டு குச்சியால் தட்டி ‘பொங்கலோ பொங்கல்!’ என்று கத்தினோம்.

எங்கள் குரல்களும் ஊரிலிருந்து கிளம்பிய மற்ற குரல்களும் கலந்து அந்த அந்தி நேரத்து மூச்சுக் காற்றில் கலந்தன. இன்று போலிருக்கிறது! அந்த இருள் வரும் வேளையும் பொங்கல் கூற்றும் அத்த மாடும் கன்றும் என் கண்முன் நிற்கின்றன!

வெள்ளைக்காரச்சி பெரியவளாகி எங்கோ பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். கொம்பு முளைக்காத அவள் கன்று முகத்தை உயிர் உள்ளளவும் நான் மறக்க முடியாது.

– பாரதமணி, 15:01.1939

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *