வெற்றிப்படம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 4,197 
 
 

“குஞ்சரம்மா..! உங்களுக்கு ஒரு கடுதாசி… சென்னையிலிருந்து..உங்க பேரன் வெற்றிதான் எழுதியிருக்கப்ல..”

“என்ன கொமரு..கடுதாசிய குடுத்துப்புட்டு உம்பாக்குல போனா..? யாரு படிச்சு சொல்லுவாக…?”

“ஆச்சி.. ஊருக்கே தெரிஞ்ச ரகசியம் எனக்கு தெரியாதா.?
நீ கைநாட்டுன்னு…!

இன்னும் மூணு கடிதாசு இருக்குது.பக்கத்தாப்லதான்.
குடுத்துபுட்டு ஓடியாரமாட்டேன்…?

இங்கனக்குள்ள குந்தி இருங்க ஆச்சி.!”

குஞ்சரம்மாவால் சும்மா இருக்க முடியுமா..?

‘ பேரன் என்ன எழுதியிருக்கும்..? ஒருவேள அப்பத்தாளப் பாக்க கெளம்பி வருதோ…?

எம்பேரனுக்கு எம்மேல எம்புட்டு பிரியம்.? இந்தகாலத்தில அப்பச்சிய மதிச்சு கடுதாசி போடற பேரன் எங்கிட்டு இருக்கான்..?

முணுமுணுத்துக் கொண்டே குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள் குஞ்சரம்..

‘ இந்த கொமருப்பயலுக்கு என்ன அவசரம் ? படிச்சு காட்டிட்டு போனா பத்தாதா..?’

சொன்னபடி வந்துவிட்டான் குமாரு.

“ஒரு எடத்தில உக்கார முடியுதா..? குடுங்க ஆச்சி.. படிச்சு சொல்லுதேன்…”

“பிரியமுள்ள.அப்பத்தா…நானு உங்கள் வெற்றி..ஆத்தா..உங்க வாக்கு பலிச்சிடுச்சு.. நானும் சினிமா நடிகனாயிட்டேன்.

நானு நடிச்ச படம் வார வெள்ளிக்கிழம எல்லா தியேட்டரிலையும் வரப் போகுது.. முக்கியமான வேசந்தான்..கதையே என்ன சுத்தி தான் நடக்குது..

அப்பா, அம்மா , தங்கச்சிங்களுக்கு டிக்கெட் எடுத்தாச்சு…!

நீங்களும் வந்தா இன்னொரு டிக்கெட் கிழிக்கச் சொல்லி வைக்கிறேன்.

நம்ம ஊருக்கு படம் வர ஒரு மாசத்துக்கு மேல பிடிக்கும்..உடனே பொறப்பட்டு வாங்க…

உங்கள் அருமை பேரன்,
வெற்றி….

“கொமரு..என்னோட கனவு நிசமாயிடுச்சுது…

எம்பேரன் பெரிய நடிகனாயிட்டானே….எனக்கு சந்தோசம் தாங்கலியே..!!

இரு. வர்ரேன்..!

என்னவோ நெனச்சுகிட்டு காலையிலதான் அதிரசம் சுட்டு வச்சேன்..பிள்ளைங்களுக்கு கொண்டுபோ…மகராசனாயிருப்ப..!

குமார் கிழவியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்…

திடீரென்று நினைவு வந்தவனாய் சைக்கிளை ஒரு மிதிமிதித்தான்.

“ஆச்சி..இப்பவே ஊர்ல ஒரு பய விடாம போய் சொல்லிப்புடமாட்டேன்…?”

***

வெற்றி ஒரு வித்தியாசமான பையன்.பிறந்ததென்னமோ பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில்..

அம்மாவைவிட அப்பத்தா குஞ்சரம் மடிதான் அதிகம் பழக்கம். பிடிக்கும்…!

குஞ்சரம்மா சினிமாவில் சேர்ந்திருந்தால் அந்த கால டி.ஏ.மதுரம்…கண்ணாம்பா எல்லோரையும் தூக்கி சாப்பிட்டிருப்பாள்..

பேரனுக்கு வெறும் வாயாய் வார்த்தையாய் கதை சொல்ல மாட்டாள்..நடித்தே காண்பிப்பாள்..!!

வெற்றியும் தை.தக்காவென்று அப்படியே திருப்பி நடித்து காண்பிப்பான்.

பத்து மாத குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு யாரிடமும் சொல்லாமல் டென்ட்டு கொட்டகையில் தரை டிக்கெட் வாங்கிக் கொண்டு வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு உட்கார்ந்து விடுவாள். மடியில் வெற்றி..

வைத்த கண் வாங்காமல் சினிமாவைப் பார்த்துக் கொண்டிருப்பான்.

வீட்டுக்கு வந்ததும் ஒரே கொட்டம் தான்.

குஞ்சரம்மா அந்த கதையை திரும்ப சொல்ல, வெற்றி மடியில் இருந்து கொண்டே ஆடுவான்.

மகன் சோலையப்பனுக்கு அம்மா பண்ணுவது சுத்தமாகப் பிடிப்பதில்லை…மருமகளோ கேட்கவே வேண்டாம்..

“இது என்ன வீடா..இல்ல சினிமா கொட்டாயா.?
ஆத்தாளும் பேரனும் அடிக்கிற கூத்து கேக்க நாதியில்லையா?

எம்புள்ள ஒரு நாள் அரிதாரம் பூசிகிட்டு வேசம் கட்டத்தான் போறான்… இதெல்லாம் வேலக்கு உதவாது… ஒரு நாள் நானு சொன்னது நடக்கத்தான் போவுது…

ஆம்… செண்பகம் சொன்னது நடந்தே விட்டது…..

***

குஞ்சரத்துடன் இருந்தால் தனது மகன் கெட்டுவிடுவான் என்று நினைத்தாரோ அல்லது தனக்கும் ஒரு நல்ல வேலை வாய்ப்பு அமையும் என்று எண்ணினாரோ சோலையப்பன் குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டார்…

குஞ்சரம் வெள்ளையம்மாளை உதவிக்கு வைத்துக் கொண்டு தோப்பு துரவுகளைப் பார்த்துக் கொண்டு ஊரிலேயே தங்கி விட்டாள்..

இப்போது சோலையப்பன் குடும்பம் பெரிதாகி விட்டது..

வெற்றிக்குப் பின்னால் வரிசையாக அல்லி , முல்லை , மல்லி….

பேரனும் பாட்டியும் ஒரு வருடப் பிரிவில் தவித்துப் போய்விட்டார்கள்..

வெற்றிக்கு படிப்பில் அதிகம் நாட்டமில்லை….

குழந்தைகளை தொலைகாட்சி பார்க்கக் கூட அனுமதிப்பதில்லை..

சினிமா பற்றி பேச்சு எடுத்தாலே ஒரு முறை முறைப்பார்..

குழந்தைகள் சப்தநாடியும் ஒடுங்கிப்போய் பயத்தில் வாயைத் திறப்பதேயில்லை…

ஆனால் வெற்றியின் இரத்தத்தில் நடிப்பு ஊறிக் கிடக்கிறதே..

வீட்டுக்குத் தெரியாமல் பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தான்..

அவன் மேடையில் ஏறினாலே பசங்களின் விசில் சத்தம் காதைப்பிளக்கும்…

வாங்கிய ஒன்றிரண்டு கோப்பைகளை படிப்பு , விளையாட்டுக்களில் கிடைத்ததாக வீட்டில் பொய் சொல்லி விடுவான்..

பள்ளி ஆண்டு விழாவில் நடந்த நாடகத்தில் இவன்தான் கதாநாயகன்..

வீட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பி விட்டார் ஆசிரியர்..

வெற்றியின் பெயரைப் பார்த்ததும் பெல்ட்டை உருவிவிட்டார் அப்பா…

அடுத்த நாள் யாரிடமும் சொல்லாமல் அப்பத்தாளைப் பார்க்க வண்டி ஏறினவன்தான் வெற்றி..

“அந்தப் பயல தல முழுகிட்டேன்.அதோட சேத்து எங்காத்தாளுக்கும் சங்குதான்…”

கோபத்தில் கத்தினார் சோலையப்பன்.

அப்பத்தாவின் ஆசியுடன் திரைப்பட வாய்ப்பைத் தேடி புறப்பட்டான் வெற்றி..

இதோ பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு கடிதம்…

***

வாசலில் கதவு தட்டும் சத்தம் பலமாகக் கேட்டது..மல்லிதான் ஓடிவந்து கதவைத் திறந்தாள்.

வாசலில் நின்ற தாடியும் மீசையும் வைத்த இளைஞன் ..

‘மல்லி!’ என்றதும் பயந்து போய் ஒரே ஓட்டமாக அக்காவிடம் வந்து நின்றாள்.

“அக்கா..வாசல்ல தாடியும் மீசையும் வச்சிகிட்டு ஒருத்தன் ‘ மல்லி’ ன்னு எம்பேரச் சொல்லி கூப்பிடறான்.வா..வந்து பாரு…”

“எவன் உம்பேரச் சொல்லி கூப்பிடறது..இதோ வரேன்….”

“வா..அல்லி…என்னப்பாத்து முல்லை அரண்டு போயிடிச்சு..”

ஒரு நிமிடம் அல்லியும் மிரண்டுதான் போனாள்..

“ஏய்…என்ன முழிக்கிற? நானு வெற்றி…!”

“அண்ணா…அடையாளமே தெரியல.எங்க போன? இத்தன நாள் எங்கே இருந்த? அம்மா உன்ன நெனச்சு அழுவாத நாளே இல்ல…!

அம்மா.. சீக்கிரம் வா..வெற்றி அண்ணன் வந்திருக்கு…!”

சத்தம் கேட்டு வந்தது அம்மா இல்லை..அப்பா…!

“டேய் ! எவண்டா அது? எனக்கு வெற்றின்னு யாரையும் தெரியாது..பொறுக்கி ராஸ்கல்..உள்ள வந்த , காலிரெண்டையும் வெட்டிப்போடுவேன் …ஆமா..சொல்லிபுட்டேன்….!!

அதற்குள் செண்பகம் வாசலுக்கு வந்து விட்டாள்..

“வெற்றி…எம்பாவி மகனே…எங்கடா தொலஞ்ச….? எம்புட்டு நெஞ்சுரம் இருந்தா அப்பா அம்மாவையே உதறிப்புட்டு போவ ?..உள்ள வாடா ராசா…!

யாரு உன்ன தடுக்குறாங்கன்னு பாப்பம்…!

அவனைத் தள்ளிவிடப் போன புருஷன் கையைத் தட்டி விட்டு உள்ளே இழுத்தாள் செண்பகம்…

“அம்மா.. ஒரு நிமிசம்.. நான் சொல்ல வந்ததை சொல்ல விடுங்க.. அப்புறமா நீங்க தீர்மானம் செய்யுங்க..நானு உள்ள வரலாமா , வேண்டாமான்னு..!!

“என்ன ? தொர பெரிய ஹீரோவாயிட்டாராமா? நடிச்ச படம் வெளியில வரப்போகுதாமா…?

ஆமான்னு சொல்லச் சொல்லு…! ஆரத்தி கரச்சு நானே உம்பையன கூட்டிக்கிட சொல்லுதேன்…!!

“அம்மா..போயி ஆரத்தி கரச்சு எடுத்துகிட்டு வாங்க…!!
அப்பா நீங்க சொன்ன சொல்ல மீறக்கூடாது…!!”

“ஏண்டா..என்னிய மாங்கா மடையன்னு நினச்சுபுட்டியா…? நானு சொன்னது வெளங்கலியா..?”

“எல்லோரும் அப்படியே நில்லுங்க..”

வெற்றி தனது பையிலிருந்து சுருட்டி வைத்திருந்த ஒரு பெரிய போஸ்ட்டரை எடுத்தான்…

அது ஒரு சினிமா போஸ்டர்..!

‘என்னப் பெத்த ராசா ‘ என்று கொட்டையாக எழுதியிருந்தது..

ஒரு வயதானவரின் முகம்..நரைத்த தாடி , மீசையுடன்.. !!

பிதாமகன் இயக்கத்தில்..!
அறிமுகம்..வெற்றி…!
விரைவில் உங்கள் வெள்ளித்திரையில்….!!
என்று பெரிய பெரிய எழுத்துகளில்..!!

“அப்பா..அம்மா.. பாருங்க…!”

“ஏங்க..இது வெற்றி மாதிரியில்ல.?”

“மாதிரி என்னம்மா.. நானேதான்.. கீழதான் எம்பேரு கொட்டையா எழுதியிருக்கே.!! அதுவும் பிதாமகன் சார் டைரக்க்ஷனில.”

“அண்ணா..அண்ணா..மெய்யாலுமா..? அம்மா பாரு..இது அண்ணன்தான்..”

அப்பாவுக்கு ஒரு வினாடி முகத்தில் அசடு வழிந்தது..இருந்தும் சமாளித்துக் கொண்டு..,

“இத நம்பச் சொல்றியா…?”

“முதல்ல என்ன உள்ள விடுங்க…விவரமா சொல்லத்தானே போறேன்..!”

கேட்க கேட்க குடும்பமே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தது….

***

“அப்பத்தா எனக்கு அஞ்சாயிரம் கையில குடுத்து ‘ நல்லா வருவ வெற்றி’ ன்னு அனுப்பி வச்சுது.

இங்க காசிநாதன்னு என்னோட சிநேகிதன் அவனோட வீட்ல கொஞ்ச நாளு தங்கச்சொன்னான்..

அவனுக்கு சினிமால நடிக்கிற க்ரூப் டான்ஸ் ஆடறவுங்களுக்கு டிரெஸ் தைக்கிற தையக்காரரு பழக்கம்.

அவர்மூலமா ஜோதின்னு ஒரு அக்கா பழக்கமானாங்க.

அவுங்க என்ன ஒரு சினிமா ஸ்டூடியோல ஆபீஸ் பையனா சேத்து விட்டாங்க…”

“வெற்றி..நீ இவ்வளவு சிரமப்பட்டு அப்பிடியாவது சினிமால சேரணம்னு என்னப்பா தலையெழுத்து…?”

செண்பகத்துக்கு பொறுக்கவில்லை..

அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுது விட்டாள்.

“எல்லாம் திமிரு..ஆத்தா குடுத்த செல்லம்… அவமானம்!

சோலையப்பனுக்கு எரிச்சலாக வந்தது..

“இருங்கம்மா..அண்ணன சொல்ல விடுங்க…! ம்ம்ம்..நீ சொல்லண்ணே.!!”

“முருகன்னு ஒருத்தர்…வசனமெல்லாம் நல்லா எழுதுவாரு..என்ன ரொம்ப பிடிச்சுப் போச்சு..

அவரு எழுதின வசனத்தை ஒருநாள், “சார் இப்படி எழுதினா நல்லாருக்குமேன்னு ‘ சொன்னேன்..

அப்படியே கட்டிப் பிடிச்சிகிட்டாரு…

“நான் நல்லா நடிப்பேன் சார்.பள்ளிக்கூடத்தில நிறைய பரிசு வாங்கிருக்கேன்…”

“எங்க..இந்த சீன நடிச்சு காமி…”

நான் நடிச்சதப்பாத்து அப்படியே அசந்து போயி நின்னுட்டாரு…

டைரக்டர் பிதாமகன் கிட்ட என்னப்பத்தி சொன்னாரு..

“‘ம்..பாக்கலாம்’ னு சொல்லிட்டு போனவர்தான்..

கையில இருந்த காசெல்லாம் கரஞ்சு போச்சு..மூணு வேளையும் சாப்பிட்டு வருசமாச்சு…பேசாம வீட்டுக்கு போயிரலாம்னு கூட நெனச்சேன்….”

அப்பா ஏதோ முணுமுணுத்தார்..

ஒரு வருசம் கழிச்சு முருகன் சார் எங்கிட்ட… “பிதாமகன் சார் உன்ன கையோட கூட்டிட்டு வரச் சொன்னாரு “ன்னு சொன்னதுமே கையும் ஒடல.காலும் ஒடல..!

அப்புறம் நடந்ததெல்லாம் இப்ப நெனச்சாலும் புல்லரிக்குது அப்பா…!!

***

வெற்றிக்கு ராஜ உபசாரம் தான்.. அதுவும் செண்பகத்துக்கு கால் பூமியில் பட்டால்தானே…!!

“எனக்கு, அப்பவே தெரியும்..நீ பெரிய நடிகனா வருவேன்னு…”

“ஏம்மா‌! பொய் சொல்ற !! நீயும் அப்பாவும் சேந்து அவன வீட்ட விட்டு வெரட்டினதெல்லாம் மறந்து போச்சா…? பாவம் அப்பத்தா…!! அவுங்களையும் என்னமா ஏசுனீங்க.?”

“சரி..பழைய புராணம் எதுக்கு..?

ஆமா..ராசா..!! உன்னிய ஒண்ணு கேக்கணும்..இன்னிக்கு இருந்தாலும் உனக்கு இருபத்தஞ்சு முப்பது வயசு கூட இல்லியே..உனக்கு போயி கெழவன் வேசமா ? எனக்கு மனசுக்கு ஒப்பலடா ! “

“ஐய்யோ ..அம்மா…கதையே என்னச் சுத்திதான்..!! எனக்கு ரெண்டு டூயட் கூட இருக்கு!!”

“டூயட்டா..? யாரு கூட ? ஒரு கெழவியோடையா…?”

மல்லி கேட்டதும் எல்லோரும் சிரித்து விட்டார்கள்..

வெற்றிக்கு முகம் சிவந்து விட்டது!!

“ஃப்ளாஷ் பேக் ! தெரியாதா ? சின்ன வயசுல நானும் ஹீரோயினும் ….! படம் வெள்ளிக்கிழமை ரீலீஸ்..பாத்தாதானே தெரியும்!”

எல்லோரும் டிக்கெட் வாங்கியாச்சு..அப்பத்தாளுக்கு லெட்டர் போட்டாச்சு… அவுங்க வந்தால்தான் என்னோட அரும உங்களுக்கெல்லாம் புரியும்…”

“அதெல்லாம் சரித்தான்.. எவ்வளவு பணம் குடுத்தாங்க….?”

“பணமா..? என்னப்பா…! மொத படம்…!! பிதாமகன் டைரக்சன்ல நடிக்கணும்னு அவனவன் நாயா பேயா அலையறான்…!”

“ஏண்டா..கேனப்பயலே… ஒண்ணும் வாங்காமயா நடிச்ச..? நல்லா உருப்படுவ !”

வெற்றியின் முகம் கருத்து விட்டது..

“அப்பா.. சினிமா பத்தி உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்…? இந்த படத்த பாத்து என்ன ஒரு கோடிக்குக் கூட புக் பண்ணுவாங்க..!”

“என்னது ? கோடியா.?”
செண்பகம் ஆவென்று வாயைப் பிளந்தாள்…!”

“பாத்து…யான வாய்க்குள்ள போயிறப்போகுது…!”

சோலையப்பனுக்கு இதெல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை…

“அண்ணா.. அந்த சினிமா கதைய சொல்லு..கேப்போம். !!”

“அது ஸஸ்பென்ஸ் ! தியேட்டர்ல தான் பாக்கணும்…!”

ஆம் ..உண்மையிலேயே அது ஸஸ்பென்ஸ் தான்…..!

***

“ஏ.முல்ல…சினிமா பாக்கப்போறியா, இல்ல நடிக்கப்போறியா ? ஹீரோயின் கணக்காவுல்ல மேக்கப் பண்ணி தடபுடலாக கெளம்பியிருக்கீங்க..?

“அப்பா.. நீங்களும் நல்லா பட்டு வேட்டிய எடுத்து கட்டுங்க..அம்மாவப் பாருங்க பட்டு சீல கட்டி கழுத்து நெறைய நகைய அள்ளிப்போட்டிருக்கு…!!

“விட்டா உங்கம்மா யான மேல அம்பாரி கூட ஏற்பாடு செய்வா…நானே வரவா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்….”

இதையொன்றும் காதில் வாங்காதவளாய் குஞ்சரம்மா பேரனுடன் பேசிக் கொண்டிருந்தாள்..

“வெற்றி…எனக்கு எம்புட்டு சந்தோசம் தெரியுமா…?

தெரையில உம்முகத்த பாத்தாலே போதும்.. நிம்மதியா போய்ச்சேந்திடுவேன்..!!

ஒருவழியாக எல்லோரும் அவரவர் இருக்கையில் அமர்ந்த பத்து நிமிடத்தில் படம் ஆரம்பித்து விட்டது…

பிதாமகன் இயக்கம் என்றால் எப்பவுமே ஹவுஸ் ஃபுல் தானே..

வெற்றியை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை…

படம் தொடங்கியது…..!

பிதாமகன் பெயரைப் பார்த்ததும் ஒரே விசில் சத்தம்.எல்லோரும் எழுந்து நின்று ஆட ஆரம்பித்து விட்டனர்..

அறிமுகம்..வெற்றி..!! சத்தமில்லாமல் கடந்து போனது..!!

அல்லி, முல்லை , மல்லி கைதட்டல் மட்டும் பலமாகக் கேட்டது…

விசிலடித்த அல்லியை முறைத்தார் அப்பா…!

முதல் சீன்….!

ஆஸ்பத்திரியில் ஒரு கிழவர் படுத்திருக்கிறார்..இண்டு இடுக்கு விடாமல் வாயிலும் மூக்கிலும் குழாய்கள்..!!

பக்கத்தில் ஒரு கிழவி அழுகிறாள்..
சுற்றிலும் மகன், மகள் , மருமகள் , பேரக்குழந்தைகள்.!!

“அப்பா.. அம்மா..
படுத்திருக்கிறது யாரு தெரியுதா… நான்தான்…!”

“நீயா..நல்லா இருக்குது..!! மொகமே தெரியல !! இது என்ன கருமம்..ஆரம்பத்திலேயே ஒப்பாரியா..?”

கண்ணை மூடிக்கொண்டாள் செண்பகம்..

“இருங்கம்மா.. இப்பத்தான் கதையே ஆரம்பம்.

ஃபிளாஷ் பேக் ‘ வரும் பாருங்க…!!

நல்லவேளை..கடைசி வரிசை.. யாரும் இவர்கள் பேச்சை பொருட்படுத்தவில்லை.

“அப்பா..எங்கள விட்டு போயிடாதீங்க.. நீங்கதான் எங்க தெய்வம்…!!”

கிழவி கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்..

“இப்ப நானும் எம்பொண்டாட்டியும் டூயட் பாடுனது வரப்போகுது! “

மல்லியும் அல்லியும் சீட்டின் நுனிக்கே வந்துவிட்டார்கள்..

டூயட் வந்தது..ஆனால் இவர்கள் இல்லை..

முதல் பையனும் அவனது மனைவியும்..
ஊட்டியில் சந்தித்தது.. ஒரு டூயட்!!

அப்புறம் அவர்களது திருமணம்.

இரண்டாவது மகனின் காதல்… கல்யாணம்..

மகள் ஊருக்கே கலெக்டராக வருவது…!!

“அப்பா..எல்லாம் உங்க தியாகத்தால தானே…!

எல்லோரும் படுக்கையைச் சுற்றி நின்று கொண்டு பேசுகிறார்கள்…

வெற்றி படுத்தவன் படுத்தவன்தான்…..!

இடைவேளை…..!!

சோலையப்பன் துண்டை உதறி தோளில் போட்டவர், “நான் கெளம்பப் போறேன்.இதுக்குமேல படம் பாத்தா எனக்கும் கிறுக்கு பிடிச்சிடும்..!

எங்கூட வரவுங்க வரலாம் !!”

வெற்றிக்கும் ஒரே குழப்பமாயிருந்தது… டூயட் எல்லாம் எங்கே போச்சு…?”

“அப்பா.. இனிமேதான் முக்கிய கட்டமெல்லாம் வருது…!”

“ஆமா..உன்னோட கருமாதியையும் , மாலபோட்ட உம்படத்தையும் வேற பாக்கச்சொல்றியா..?

யார் தடுத்தும் கேட்காமல் கிளம்பி விட்டார்…!!

இன்ட்டர்வெல் முடிந்ததும் அடுத்த சீன் …

“ஏங்க நம்ம கல்யாணம் நெனவிருக்குதா…?”

கிழவி படுத்திருக்கும் கணவனிடம் கேட்கிறாள்!

ஃபிளாஷ் பேக்….!!

“அண்ணா… நீதானா?..ஐய்யோ!! எவ்வளவு ஸ்டைலா இருக்க…?”

பழனி கோவிலில் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.. மூன்று நிமிடம்…”

“இப்பத்தான் டூயட் வரும்…”

“உங்கப்பனுக்கு பொறுமையே இல்லை..இருந்து பாக்க குடுத்து வைக்கல…”

டூயட்டையும் காணம் .ஒண்ணையும் காணம்….!!

மீதிப் படம் முழுவதும் குடும்பத்தில் நடக்கும் சண்டை , கலெக்ட்டரை வில்லன் கடத்துவது, காப்பாற்றும்
ஹீரோ மேல் காதல், கல்யாணம்…..

நர்ஸ் ஓடி வருகிறாள்…..

“டாக்டர்..நூத்தி மூணு பேஷன்ட்டோட பல்ஸ் இறங்கிட்டே வருது….ஹி இஸ் கேஸ்ப்பிங் ஃபார் பிரத்… சீக்கிரம் வாங்க…”

“என்னப்பெத்த ராசா…!! என்ன விட்டு போயிராதீங்க…”
கதறுகிறாள் மனைவி…”

கிழவரின் கதை முடிந்தது
அடுத்த சீன்..

சொக்கலிங்கம் சொன்ன மாதிரி வெற்றியின் பெரிய படத்துக்கு ரோஜாப்பூ மாலை..

“எல்லோரும் விழுந்து கும்பிட்டுக்குங்க..!

அப்பாதான் நம்ம குலசாமி..!

படம் முடிந்தது….!!

ஒரே கைதட்டல்..

வெற்றி அழுதுவிடுவான் போலிருந்தது..

செண்பகம் தலையிலடித்துக் கொண்டு ஏதோ பெரிதாக சத்தம் போட்டு சொல்லவந்தாள்..!

“உன் வியாக்கியானமெல்லாம் வீட்டுல போயி வச்சிக்கிடு…!
குஞ்சரம் அதட்டுகிறாள்…

தங்கைகள் மூவரும் சிரிப்பை அடக்க முடியாமல் வாயைப் பொத்திக் கொள்கிறார்கள்..

வெற்றிப்படம்..! வெற்றிப்படம்!

பார்த்தவர்கள் அனைவரும் கட்டை விரலை உயர்த்திக் காண்பித்துக் கொண்டு போகிறார்கள்..!

“வெற்றி ! நிமிர்ந்து நடய்யா…!! பாரு சனங்க சொல்லுறது கேக்குதா…?

இது வெற்றிப்படம்.!! உம்படம் ஐய்யா..!! ஏதோ ஒரு குக்கிராமத்தில பொறந்து இம்மாம் பெரிய தெரையில உம் முகத்த காட்டிட்டயே ராசா..!! எனக்கு அது போதும் ராசா…! என்னப் பெத்த ராசா…!

இது எம் பேரன் வெற்றி படம்.!!

ஆத்தாளை அப்படியே கட்டிக் கொள்கிறான் வெற்றி….

இயற் பெயர் சரஸ்வதி சூரியநாராயண்.தற்போது கோயமுத்தூர் வாசியாகிய நான் ' சரசா சூரி' எனும் பெயரில் நான்கு வருடங்களுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வருகிறேன்... நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று, சில காலம் சிறப்புத் தேவை வேண்டும் குழந்தைகளுடன் பணியாற்றியதை , வாழ்வில் எனக்குக் கிடைத்த வரமாகக் கருதுகிறேன்..பெரிய குடும்பத்தில் பிறந்ததால் உறவுகளின் பெருமை அறிந்தவள்.சிறுவயதிலேயே நான்கு சகோதரிகள் இணைந்து' ஜாங்கிரி' எனும் கையெழுத்துப் பிரதியை நடத்தியது மகிழ்ச்சியான அனுபவம்..என்னுடைய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *