கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,446 
 
 

(1998 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கொஞ்சம் இங்கே பாருங்கள்!…. தலையைச் சாடையாக இந்தப் பக்கம் சாயுங்கள்; அந்தப் பக்கமல்ல, இந்தப் பக்கம்… போதும் சரி, சரி….. எங்கே சாடையாகச் சிரியுங்கள்.

பூவழகியினால் இதற்கு மேலும் பொறுக்கமுடியவில்லை. நெஞ்சுக்குள்ளே நிறைந்து தொண்டைக்குழியில் பொங்கிக் கொண்டு நின்ற சிரிப்பை இதுவரையும் அடக்கி அடக்கி வைத்திருந்தாள். சாடையாகக் சிரிக்கச் சொன்னதுதான் தாமதம், படீரென்று சிரித்துக் கொட்டிவிட்டாள்! சிரிப்பு எப்போதும் தனித்து நிற்பதில்லையே! பக்கத்தில் நின்ற பூவழகியின் தோழி தங்கமலரும் சிரித்தாள்.

பெரிய கமெராவுக்கு பின்னால் நின்று கொண்டு போட்டோ எடுக்கத் தாயராக நின்ற சம்பந்தன் – ‘சரியான நல்ல போ’ சைக் கெடுத்துவிட்டீர்களே!’ என்று கோபப்படவேண்டியவன், அவனும் சிரித்தான். பிறகு, “நீங்கள் இப்படிச் சிரித்துக்கொண்டிருந்தால் இன்றைக்குப் போட்டோ எடுத்த மாதிரித்தான்; நான் டபிள் சார்ஜ்’ போட்டு விடுவேன்!” என்றான்.

“அப்படியானால் உடனே ஒரு போட் பலகை’ எழுதி முன் பக்கம் தொங்க விடுங்கள்; ‘சிரிக்கிறவர்களுக்கு டபிள் சார்ஜ்; அழுகிறவர்களுக்கு அரைச் சார்ஜ் என்று!- உங்கள் ஸ்ரூடியோ அழுது வடிந்து கொண்டிருக்கும்” என்றாள் பூவழகி.

“அதனாலென்ன, உங்களைப் போன்றவர்கள் அழுதால் கூட அதிலும் ஒரு நல்ல ‘போஸ்’ இருக்குமே!” என்றான் சம்பந்தன்.

இந்த வார்த்தைகளை வெறும் வாயினால் அவன் சொன்னதாகத் தங்கமலர் நினைத்தாள். ஆனால் பூவழகிக்கோ அவை வெறும் வார்த்தைகளாகத் தோன்றவில்லை. அவன் கரும்பு வில்லை வளைத்துத் தொடுத்துவிட்ட மலர்ப் பாணங்களாகத் தோன்றின. அவள் கன்னங்களில் சிவப்பேறிற்று. எங்கிருந்தோ ஒரு நாணம் ஓடிவந்து அவள் முகத்தில் படர்ந்து அழகு செய்தது.

பொதுவாகப் பெண்களின் உருவத்திலே கலை அழகைக் கண்டு ரசிக்கின்ற சம்பந்தனுக்கு, பூவழகியின் வடிவிலே அந்தக் கலைக்கும் மேலான ஏதோ ஒன்று இருப்பதாகத் தோன்றிற்று.

ஒரு வழியாகப் போட்டோ எடுத்து முடித்துக் கொண்டு தோழிகள் வீட்டுக்குப் புறப்பட்டார்கள். அவர்களுடைய ஊரான நல்லபுரத்துக்குப் போகிற பஸ், சீக்கிரமே கிடைத்ததுமல்லாமல் இருவருக்கும் வசதியாக ஒரு ஆசனமும் கிடைத்துவிட்டது!

“என்ன பூ, உன்னோடு உயிரை விடுகிறாரே அந்த ஸ்ருடியோ மனேஜர்! என்ன சங்கதி?” என்று கேட்டாள் தங்கமலர்.

“என்ன செய்துவிட்டார் அப்படி? அவர் பிஸ்னெஸ்’ காரர் எல்லோரோடும் அப்படித்தான் நடந்து கொள்வார்” என்றால் பூவழகி.

“அதுதான் பார்த்தேன், நாங்கள் வாசலில் தலை காட்டியவுடன் ஓடி வந்து உபசரித்தார். போட்டோ எடுப்பதற்கு தானே வந்தார். அத்தனை ‘கிளாக்’ மார் இருக்கவும் தானே வந்து பில் போட்டுத் தந்தார். இவை தான் போகட்டும்; எங்களுக்கு முன்னால் போட்டோ எடுத்தவர்களுக்கு பத்து நாள் தவணை போட்டாரே, எங்களுக்கு மட்டும் எப்படி மூன்றே நாட்களில் – சனிக்கிழமையே தருவதாகச் சொன்னார்?” என்று தங்கமலர் கேட்டாள்.

தங்கமலர் சொல்லச் சொல்லப் பூவழகியின் உள்ளத்தில் இனந்தெரியாத ஒரு மகிழ்ச்சி துள்ளிக் குதித்தது. வெட்கமாகவும் இருந்தது. “நான் முன்பும் சில தடவைகள் அவருடைய ஸ்ரூடியோவில் வந்து போட்டோ எடுத்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் பழக்க முண்டு. அதோடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவருடைய மாமா வீடு இருக்கிறது. எப்போதாவது அங்கே வரும்போது…”

“ஓ! அங்கே வரும்போது கதைத்துப் பேசிக்க கா….”

“சீ, சும்மா இரு தங்கம், அப்படியொன்றுமில்லை. ஸ்ரூடியோவுக்கு வந்தபோது தவிர ஒருநாட்கூட அவரோடு நான் கதைத்ததில்லை…”

இவ்வளவில் பூவழகிக்குக் கொஞ்சம் உசார் வந்து விட்டது. தோழியிடம் சாடையாக மனதைத்திறக்கவேண்டும் போல ஒரு புழுகம் ஏற்பட்டுவிட்டது. அவள் தொடர்ந்து, “தங்கம், அவரைப்பார்த்தால் மிக நல்ல பிள்ளையாகத் தோன்றுகிறது!” என்றாள்.

“ஓ! அதோடு மிக அழகாகவும் இருக்கிறரே!” என்று கூறித் தங்கமலர் விஷமமாகச் சிரித்தாள்.

“போ, போ; உனக்கு எப்பவும் கேலிதான்” என்று அவளை முழங்கையால் இடித்தாள் பூவழகி.

இதற்கிடையில் நல்லபுரம் வந்துவிட்டது.

தங்கமலர் வீடு முன்னுக்கு வரவும் அவள் முதலில் இறங்கிவிட்டாள். அவள் பஸ்ஸைவிட்டு இறங்கினாளே தவிர, பூவழகியின் உள்ளத்தை விட்டு இறங்காமல், ‘அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே…. அதோடு மிக அழகாகவும் இருக்கிறாரே’ என்று ஓயாமல் குசுகுசுத்துக் கொண்டேயிருந்தாள்.

இதற்குப் பிறகு இலங்கையில் பத்துக் கோர மரணங்கள் நடந்துவிட்டன; எழுபத்தைந்து பேர்கள் வரை காயமடைந்து விட்டன.

அதாவது மூன்று நாட்கள் கழிந்து விட்டன!

அன்று சனிக்கிழமை, தோழிகள் இருவரும் யாழ்ப்பாணம் போய், போட்டோப் பிரதிகளை எடுத்துக்கொண்டு திரும்பி வந்தார்கள். வரும்போது தங்கமலர் ஏதோ ஒரு விஷயத்தை அமுக்கி வைத்துக்கொண்டு அதன் சாயலை விஷமச் சிரிப்பாகச் சிரித்துக்கொண்டேயிருந்தாள். ‘என்ன சங்கதி? என்ன சங்கதி?’ என்று பூவழகி இரண்டும் மூன்று தரம் கேட்டாள். ‘ஒன்றுமில்லை’ என்று தங்கமலர் மழுப்பினாள். பிறகு வீட்டுக்கு வா; சொல்லுகிறேன்’ என்றாள்.

தங்கமலர் தன்னுடைய வீட்டருகில் இறங்காமல் பூவழகியுடன் இறங்கி அவளுடைய வீட்டுக்குப் போனாள். அறைக்குள்ளே போனதும் மேசைமேல் ஸ்ரான்டில் சொருகியிருந்த பூவழகியின் போட்டோவை எடுத்தாள். பிறகு, தான் மறைத்து வைத்திருந்த ஒரு படத்தை எடுத்து அதில் சொருகி மேசைமீது வைத்து விட்டு, “பூ, படம் எப்படியிருக்கிறது!” என்றாள்.

பூவழகி பார்த்தாள். திறந்த கண்களை மூடாமல்- மூட முடியாமல் பார்த்தாள். அது சம்பந்தனின் போட்டோ!

“இது என்ன தங்கம்!” என்று கேட்ட பூவழகியின் குரலில் வெறும் பயம் மட்டுமல்ல, உள்ளே ஒரு மகிழ்ச்சியும் ஒளித்திருந்தது.

“இதுவா? தெரியவில்லை உனக்கு? திருவளர்ச் செல்வன் சம்பந்தன்; ‘கலை ஒளி ஸ்ரூடியோ’வின் உரிமையாளர்…. என் தோழி ஒருத்தியின் உள்ளத்திலே…”

“போதும், போதும் உன்னுடைய ஆலாபனையை நிறுத்திக்கொள்… அது சரி தங்கம், இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்ற பூவழகி கேட்டாள்.

“திருடினேன்!” என்று பளிச்சென்று ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் தங்கமலர். பிறகு எனக்காகவல்ல; … உனக்காகக் கண்ணே , உனக்காக!” என்று இராகம் இழுத்துச் சிரித்தாள்.

“யாராவது பார்த்திருந்தால் எப்படியிருக்கும்?….. நீபெரிய மோசம்!” என்று தோழியைக் கண்டித்தாள் பூவழகி.

“நீ பெரிய பயந்தாங்கொள்ளி…. சும்மா மனசுக்குள்ளேயே நினைத்து ஆசைப்பட்டால் போதுமா? எல்லாம் காரியத்தோடுதான் செய்திருக்கிறேன். இனி திங்கட்கிழமை வருவேன். ஏதாவது புதினமிருந்தால் சொல்லு” என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போய்விட்டாள்.

அவள் போனதும் பூவழகி கதவைச் சாத்திவிட்டு ஓடிப்போய் சம்பந்தனுடைய படத்தைக் கையில் எடுத்தாள். அப்படித் திருப்பிப் பார்த்தாள்; இப்படித் திருப்பிப் பார்த்தாள். அவருடைய கண்ணும், பார்வையும், தலை இழுப்பும், கள்ளச் சிரிப்பும், ஆளைப்பார் ஆளை!,’ என்று; மனதுக்குள் செல்லம் கொஞ்சினாள். பிறகு திங்கட்கிழமை பூவழகிக்கு ஒரு கடிதம் வந்தது சம்பந்தன் எழுதியிருந்தான்.

“என் அன்பே,
உமக்கு கடிதம் எழுதலாமா எழுதலாமா என்று ஆசைக்கும் பயத்துக்குமிடையே திண்டாடிக் கொண்டிருந்த எனக்கு, சனிக்கிழமை நீர் செய்த துணிகரமான வேலையால், உறுதி வந்துவிட்டது. அந்த ஸ்ரான்டிவிருந்த என்னுடைய படத்தை எடுத்துக்கொண்டு உம்முடைய படத்தை அதில் வைத்துச் சென்றீரல்லவா? உமது மன விருப்பத்தை எவ்வளவு நுட்பமாகத் தெரிவித்திருக்கிறீர்!

சில நாட்களாக எனக்கு எந்த நேரமும் உமது எண்ணந்தான். எத்தனையோ பெண்கள் வருகிறார்கள், போகிறார்கள். அவர்களுள் உம்மைப்பற்றி மட்டுமே என் சிந்தனை செல்வதை நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இருவருடைய கருத்தும் ஒருமித்தபோதுதான் இப்படி ஒரு மன நிலை ஏற்படும் போலிருக்கிறது!

இப்போது என்ன எழுதுவதுதென்று தெரியாமல் ஒரே மகிழ்ச்சிக் குழப்பமாக இருக்கிறது. நான் மாமா வீட்டுக்கு வரும்போது உமது வீட்டுக்கும் வரலாமா? எவ்வளவோ கதைக்க வேண்டும் போலிருக்கிறது.

அன்பான பதிலை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

உமது
சம்பந்தன்”.

கடிதத்தை படிக்கப் படிக்கப் பூவழகி மேலே மேலே பறந்து கொண்டிருந்தாள். ஒரே புளகம்! திரும்பத் திரும்பத் படிக்கிறாள், படிக்கிறாள்; படிக்கிறாள். அவன் என்ன தேனூறும் கவிதையா எழுதியிருக்கிறான்?

தங்கமலர் வந்தாள். முதலில் வெகு நேரம் கடிதம் வந்த விஷயத்தைப் பூவழகி மறைத்துவிட்டுக் கடைசியில் ஒரு மாதிரி ஒப்புக்கொண்டாள். ஆனாலும் அந்தக் கடிதத்தைத் தங்கமலருக்குக் காட்டவேயில்லை! பரவாயில்லை. நீ எனக்கு அதைக்காட்ட வேண்டாம். ஆனால் ஒழுங்காக உடனே ஒரு பதில் எழுதிப் போட்டுவிடு. பாவம், அவர் தபாற்காரன் வரும் வழிமேல் விழிவைத்துக் கொண்டிருப்பார்” என்றாள் தங்கமலர்.

“பதிலா? எல்லாம் யோசித்துப் பார்த்துச் செய்யலாம்” என்று பூவழகி இழுத்தாளே தவிர, அன்றைய தினமே பதில் கடிதம் தயாரித்து அனுப்பிவிட்டாள்.

இப்படியாகத்தானே இவர்களது காதல் நாளொரு கடிதமும் வாரமொரு சந்திப்புமாக வளர்ந்துகொண்டு வருங்காலத்திலே, பூவழகியின் தகப்பனார் உங்களுக்குத் தெரியுமே, முன்பு அரசாங்கத்திலே பெரிய பதவியிலிருந்து இளைப்பாறியிருப்பவர், இப்போது நல்லபுரம் கிராமச் சங்கத் தலைவராயிக்கிறவர், திருவாளர் நல்லசிவம் பிள்ளை – அவர்தான் பூவழகியின் தகப்பனார். புகழ்ச்சிக்காகச் சொல்லவேண்டியதில்லை. மிகப் பெரிய பணக்காரர் என்று சொல்லாவிட்டாலும் அந்தச் சுற்றுவட்டாரத்தில் கொஞ்சம் பெரிய மனிதர் என்று பெயர் வழங்கியவர். பூவழகி அவருக்கு ஒரே பிள்ளை . அதனால் செல்லப்பிள்ளையும்.

இந்த வருடம் பூவழகிக்கு எங்கேயாவது ஒரு நல்ல இடத்தில் திருமணத்தை முடித்துவிடவேண்டும் மென்று நல்லசிவம் தீர்மானித்துக்கொண்டார். இரண்டொரு இடத்தில் பேச்சுவார்த்தைகளும் நடக்கத் தொடங்கின.

பூவழகிக்கு இது தெரியவந்ததும் பகீரென்றது. எவ்வளவுதான் செல்ல மகளானாலும் அப்பா, நான் மிஸ்டர் சம்பந்தனைக் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லுகிற அளவுக்கு வளர்ச்சி பெறாத பேதை. என்னசெய்வாள்? நெஞ்சுக்குள்ளே குமைந்து குமைந்து வேதனைப்பட்டாள்.

இவள் வேதனைப்படுவது தங்கமலருக்கு எப்படியோ மணத்துவிட்டது. அவள் ஓடோடியும் வந்தாள்

“நீ ஏன் யோசிக்கிறாய் பூ? எல்லாம் ஒழுங்காக நடக்கும். சம்பந்தனைப்பற்றி எல்லா விபரங்களும் நான் விசாரித்து வைத்திருக்கிறேன். அவருடைய தமக்கை ஒருத்தி எங்களுடைய சொந்தத்துக்குள் கல்யாணம் முடித்து மலாயாவில் இருக்கிறா. சாதி,சமயம் பொருள், பண்டம், அறிவு, அழகு எல்லாவிதத்தாலும் உனக்குச் சம்பந்தன் மிகப் பொருத்தமானவர்தான் . எப்படியாவது உன் அப்பாவுக்குத் தெரியப்படுத்திவிட்டால் அவரே பேசிச் செய்து வைப்பார்…..” என்றாள் தங்கமலர்.

“அப்பாவுக்குத் தெரியப்படுத்துகிறது! என்னால் முடியவே முடியாது!” என்றால் பூவழகி.

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே!” என்று சொல்லிவிட்டுத் தங்கமலர் போனாள்.

‘தங்கம் உன்னுடைய மனசு தங்கம்!’ என்று ஆனந்தக் கண்ணீர் விட்டாள் பூவழகி.

தங்கமலர் சொன்னமாதிரியே செய்துவிட்டாள். பூவழகியின் பக்கத்து வீட்டிலிருந்து எழுத்தாளர் சிற்றம்பலத்தின் மனைவி மங்கையற்கரசியைத் தங்கமலருக்குத் தெரியும். மங்கையற்கரசி மூலம் சிற்றம்பலத்துக்குப் பாய்ச்சி, சிற்றம்பலத்திலிருந்து நல்லசிவத்துக்குப் போக விட்டாள் செய்தியை. – ஏறாத மேட்டுக்கு இரண்டுதுலை என்பார்களே, அப்படி!

ஒரு வார காலமாக நல்லசிவம் இதே வேலையாகத் திரிந்தார். சம்பந்தனின் குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் திருப்தியாக இருந்தன. போட்டோ எடுக்கிற சாட்டில் ஒருநாள் கலை ஒளி ஸ்ரூடியோவுக்குப் போய் சம்பந்தனைப் பார்த்தார். அவனைப் பிடிக்காமலிருக்குமா? ஸ்ரூடியோவை நோட்டம் பார்த்தார். இருபத்தையாயிரமாவது பெறும் என்று ஒரு மதிப்புப் போட்டார். வீட்டுக்கு வந்ததும் பூவழகியைக் கூப்பிட்டு, “பார்த்தால் பூனை மாதிரியிருக்கிறாய்; நீ சரியான ஆளடி. பிடித்தாலும் பிடித்தாய் புளியங்கொம்பாகப் பிடித்திருக்கிறாயே!” என்று கேலி செய்தார். “போங்களப்பா!” என்று வெட்கமும் மகிழ்ச்சியும் துள்ளக் கூறிவிட்டுப் பூவழகி உள்ளே ஓடினாள்.

பிறகு மிக விரைவாகக் காரியங்கள் நடந்தன. பூவழகிக்கு நாற்பதினாயிரம் ரூபா பெறுமதியான வீடு வளவும், பதினையாயிரம் ரூபா ரொக்கப்பணமும், ஐயாயிரத்துக்கு நகையும் கொடுப்பதென்று பேசித் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் முகூர்த்தம் வைப்பதற்கு மட்டும் இன்னும் ஐந்து மாதங்கள் காத்திருக்க வேண்டுமென்று சம்பந்தனின் தகப்பனார் கேட்டுக்கொண்டார். “மலாயாவில் இருக்கிற என்னுடைய மகள், தான் இல்லாமல் தம்பியின் கல்யாணம் நடக்கக் கூடாதென்று எழுதியிருக்கிறாள். அவள் ஆயத்தம் செய்து வந்து சேர நாலுமாதமாவது செல்லும். இப்போது கார்த்திகையா? மார்கழி, தை போனால், மாசி மாதம் கூடாது; பங்குனி நாள் வைக்கலாம்’ என்றார். நல்லசிவம் ஒத்துக்கொண்டார்.

கல்யாணம் நிச்சயமானது சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் கட்டு அவிழ்த்து விட்டது மாதிரியிருந்தது.

பண்டாரநாயக்கா மாண்டாலென்ன, தகநாயக்கா ஆண்டாலென்ன, என்று காதலரிருவரும் தாமும் தம்முடைய உலகுமாக இருந்தனர். பாவம் தங்கமலரைக் கவனிப்பாரேயில்லை!

இவர்கள் இப்படி இன்பமாக இருப்பது பிரம்மச்சாரி தகநாயக்காவுக்குப் பிடிக்கவில்லைப்போலும்! திடீரென்று ஒருநாள் அவர் பாராளுமன்றத்தைப் போட்டு உடைத்தார்.

ஆம், தேர்தல் வந்தது!

நல்லசிவம்பிள்ளை போகிறவர்களிடமெல்லாம் தேர்தலைப் பற்றியே கதைக்கத் தொடங்கினார். “தேர்தலில் போட்டியிடுவதைப்போல மடைத்தனம் வேறில்லை. உண்மையாகத் தன்னுடைய ஊருக்காகப் பாடுபடுகிறவன் பாராளுமன்றத்தில் போய் என்ன செய்யப்போகிறான்?- கிராமச் சங்க விஷயம் வேறு – பாராளுமன்றத்திலே பேரும், புகழும், வஞ்சமும், கட்சி வெறியுந்தானே கண்ட மிச்சம்!” என்பர். –

சில சமயம் “ஒரு படிப்போ, அறிவோ, அந்தஸ்தோ இல்லாத வெறுந் தடியன்களெல்லாம் கேட்கிறார்களே, இவர்களெல்லாம் நாட்டை ஆண்டால் நன்றாய்த்தானிருக்கும்!” என்பார்.

நல்லசிவத்தின் உள்மனதுக்கும் உள்ளே ஒரு பாராளுமன்ற ஆசை கிடந்து – நெளிவதை, சில கழுகுக் கண்காரர்கள் கண்டு கொண்டார்கள். விடுவார்களா!

“ஐயா, உங்களைப்போன்ற ஆட்கள் கட்டாயம் கேட்க வேண்டும்!” என்றார்கள்.

“சேச்சே! என்று சொல்லி அவர் சிரித்தார். அடிமனத்திலே கிடந்து நெளிந்த அந்த ஆசையின் உருவம் அந்தச் சிரிப்பிலே தெளிவாகத் தெரிந்தது.

“இதெல்லாம் பெரிய கோடி சீமான்கள் பார்க்க வேண்டிய வேலை. தேர்தல் என்றால் சும்மாவா? இல்லையில்லையென்றால் முப்பதினாயிரம் நாற்பதினாயிரமாவது வேண்டும். எங்கள் தரவளி ஆட்கள் இதிலே தலையிட்டால் நடுவழியில் கிடந்து மாயவேண்டும்.

கிராமச் சங்கத்தில் ஏதாவது அலுவல் பெற வந்திருப்பவர் எப்படியாவது நல்லசிவத்தைப் பிளீஸ்’ பண்ணுவதிலேயே கருத்தாக இருப்பார்:

“ஐயா, நீங்கள் கேட்கிறதானால் அந்த மாதிரியெல்லாம் தேவையில்லை. ஆகக் கூடுதலாகப்பார்த்தாலும் ஒரு பத்தாயிரம் ரூபா போதுமென்னப் போதும். நீங்கள் ஒரு சதம் செலவழிக்கவில்லையென்றாலும் எங்களுடைய பக்கம் முழுவதும் உங்களுக்குத்தான். நீங்கள் மட்டும் ஓம்’ என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். கட்டுக் காசுக்குக் கூட நானே ஐந்து பேரைச் சேர்த்துக் கட்டுகிறேன்.” என்று தூபம் போட்டார்.

“சேச்சே, அப்படி ஒருவேளை நான் கேட்கிறதென்றாலும் வேறு ஆட்களை ஒரு சதம் கூடச் செலவழிக்க விடமாட்டேன். எனக்காகப் பாடுபடுவதுமல்லாமல் காசையும் செலவழிக்கலாமோ?” என்றார் நல்லசிவம். பூவழகிக்குச் சீதனம் பேசி வைத்த பதினையாயிரத்தைவிட, வங்கியில் கிடந்த இன்னொரு பத்தாயிரம் ரூபா அப்படியே உருண்டோடி வந்து அவருடைய நெஞ்சிலே கல கல வென்று சத்தமிட்டது.

ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தார். ‘வென்றாலும் சரி, தோற்றாலும் சரி; ஆறாயிரம் ரூபாவுக்கு மேல் ஒரு சதம் செலவளிக்கிறதில்லை’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டார். அடி மனத்திலே கிடந்து துடித்த ஆசை, வெளிமனத்திலே வந்து தாளம் போட்டது. பிறகு பகிரங்கமாக வெளியிலே வந்து கூத்தாடத் தொடங்கியது.

‘பூவழகியின் திருமணம் பங்குனியில் வருகிறதே என்று ஒரு நிமிஷம் யோசித்தார். ஒரு நிமிஷந்தான். பிறகு ‘தேர்தல் மார்ச் 19ம் திகதி தானே; பங்குனிக் கடைசி என்றால் ஏப்றில் மாதமாகிவிடும். – அது நடத்தி விடலாம்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டார்.

தை மாசத்தில் தேர்தலுக்குக் கட்டுப் பணம் கட்டியவுடனேயே, நல்லசிவத்தின் தேர்தல் ஆசை பேராசையாக மாறிவிட்டது!

ஆறாயிரமென்ன, பத்தாயிரமுமே போகட்டும்! பூவழகியின் திருமணம் முடிந்துவிட்டால் பிறகு எனக்கு ஏன் இந்தப் பணத்தை ? சாக முன்னர் ஒரு எம். பி.’ என்ற பெயரை எடுத்துவிட வேண்டும்’ என்று நினைக்கலானார்.

தேர்தலுக்குப் பதினைந்து நாட்களிருக்கையில் இந்தப் பேராசை, ஆவேசமாக மாறிற்று. பத்தாயிரத்துக்கு மேல் இன்னும் மூன்று நாலு ஆயிரம் கடன்வாங்க வேண்டுமென்று ஓடித்திரிந்தார். வசதியாகக் கிடைக்கவில்லை. பூவழகியின் சீதனப் பணம் பல்லைக் காட்டிச் சிரித்தது. ‘தேர்தல் முடியட்டும்; எங்காவது மாறிக் கொடுக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டு அதில் ஐயாயிரத்தை எடுத்தார்.

தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கையில் நிலைமை சரியான போட்டியாக இருந்தது. இன்னுமொரு ஐந்தே ஐந்து ஆயிரங்கள் இல்லாவிட்டால் தோல்வி கண்டு விடுவார் போலத் தோன்றிற்று.

மனிதனுக்கு வெறி மூட்டுகின்ற வேலை மதுவுக்கு மட்டும் ஏகபோகச் சொத்தல்ல; ஆசைக்கும், கோபத்துக்குங் கூட அந்த உரிமையுண்டு.

நல்லசிவத்துக்கு வெறி வந்துவிட்டது!

தேர்தலின் வெற்றி காணவேண்டுமென்ற ஒரே வெறி மயக்கம் தம்முடைய பொருளாதார நிலையையும், மகளின் திருமணத்தையுங்கூட மறைத்துவிட்டது.

1960-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ம் திகதி. 476 வாக்குகளால் நல்லசிவம் தோல்வியடைந்தார். வெறி அடங்கிவிட்டது! ஆனால் வேதனை நிறைந்து விட்டதே!

பூவழகியின் சீதனப் பணத்தை இவர் கோட்டை விட்ட விஷயம் எப்படியோ சம்பந்தனின் தகப்பனாருடைய செவிக்கு எட்டிவிட்டது. இனி இந்தச் சம்பந்தம் சரிவராது என்ற மாதிரி இடை ஆட்கள் மூலம் அவர் சொல்லி அனுப்பினார்.

சம்பந்தன் பதறினான். பூவழகி துடித்தாள்.

அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்க்கக்கூட நல்லசிவத்துக்குத் துணிவில்லை. அவருடைய உள்ளம் காய்ந்து கறுத்து உக்கிக்கொண்டிருந்தது. அகத்தின் அவலம் முகத்தைச் சுட்டது. ‘பொலிடோ’லைப் பற்றிய எண்ணம் மூளையின் ஆழத்தில் தோன்றிப் பயமுறுத்த ஆரம்பித்தது.

“ஐயையோ!” என்றால் கயல்விழி – அவள் இந்தக் கதையைப் படித்துக்கொண்டிருந்தவள்.

“என்னது?” என்றான் இளங்கோ – இதை எழுதிக் கொண்டிருந்தவன். “பாவம், பூவழகி! – அவளுடைய தகப்பனாரைக் கொன்றுவிடாதீர்கள்.!”

இளங்கோ தன மனைவியை நிமிர்ந்து பார்த்தான். “நான் என்ன செய்ய முடியும்? கதைபோகிற போக்கில் அவர் பொலிடோலைக் குடித்துவிடுவாரே!” என்றான்.

“உடனே ஆஸ்பத்திரிக்கு அவரை அனுப்பி வையுங்கள்.” எப்படியாவது அங்கே அவரைக் காப்பாற்றிவிடுவார்கள்!”

“உடனே எப்படி அனுப்புவது? யாரையாவது பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் குடிக்கமுடியுமா? அல்லாமலும் பொலிடோல் மிகக் கொடிய விஷம். – ஆள் தவறவே முடியாது!”

கயல்விழி யோசித்தாள். பூவழகியின் காதலை நினைக்க நினைக்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. பிறகு ஏதோ துணிந்தவள் போல் “உங்களால் முடியாவிட்டால் என்னிடம் விடுங்கள். நான் காப்பாற்றி, பூவழகிக்கும் சம்பந்தனுக்கு கல்யாணமும் செய்து வைக்கிறேன்!” என்றாள்.

“உன்னால் முடியுமானால் செய்!” என்று கூறி இளங்கோ விலகிக் கொண்டான். கயல்விழி எழுதத் தொடங்கினாள்.

***

1960-ம் ஆண்டு பங்குனி மாதக் கடைசியில் திருவளர்ச் செல்வன் சம்பந்தனுக்கும் திருவளர் செல்வி பூவழகிக்கும் சுருக்கமான முறையில் ஆனால் சிறப்பாக திருமணம் நடைபெற்றது.

“இது என்ன இது! கதையை நாசமாக்கிவிட்டாயே!” என்று இளங்கோ குதித்தான்.

“ஏன், என்ன?” என்றாள் கயல்விழி.

“சீதனப் பணம் இல்லாமல் சம்பந்தனுக்கும் பூவழகிக்கும் எப்படிக் கல்யாணம் நடக்கமுடியும்? சம்பந்தனின் தகப்பனார் ஒருபோதும் இதற்குச்சம்மதிக்கமாட்டார். சம்பந்தனோ தகப்பனாருடைய முகத்தை முறித்துக் கொண்டு போகமாட்டான்!”

“அப்படியா? என்று கேட்டாள் கயல்விழி. பிறகு, கொஞ்சம் பொறுங்கள். கதை இன்னும் முடியவில்லை!” என்று சொல்லிவிட்டு எழுதத் தொடங்கினாள்.

கல்யாணச் சந்தடி முடிந்து மூன்றாம் நாள். சம்பந்தன் தனியாக இருக்கும்போது நல்லசிவம்பிள்ளை சந்தித்தார்.

“தம்பி, நான் உமக்கு எவ்விதம் கைம்மாறு செய்யப் போகிறேனோ தெரியவில்லை !’ என்றார்.

“அப்படியெல்லாம் ஒன்றும் பெரிதாக நினைக்காதீர்கள் மாமா!” என்றான் . சம்பந்தன்.

“அது சரி தம்பி உம்மிடம் பத்தாயிரம் ரூபா இருந்த விஷயம் உமது தகப்பனாருக்குத் தெரியாதா?…… நீர் அவரிடம் ஒளித்திருக்க மாட்டீரே!” என்று கேட்டார் நல்லசிவம்.

“உண்மை தான். அவருக்கு தெரியாமல் நான் பணம் வைத்திருப்பதில்லை….. என்னுடைய ஸ்ரூடியோவோடு புளொக் மேக்கிங்’ பகுதி ஒன்று சேர்ப்பதற்காக வங்கியில் கடன் கேட்டிருந்தேன். அந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியாது. பணம் கிடைத்த பிறகு சொல்லலாமென்று இருந்தேன். நல்லசமயத்தில் பணம் கிடைத்தது இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரிடம் மறைத்து நடப்பதில் தவறில்லை என்று தோன்றியதால் உங்களிடம் அந்தப் பணத்தைத் தந்துவிட்டேன்” என்றான் சம்பந்தன்.

“அச்சா!” என்றான் இளங்கோ. “கள்ளி, நீயும் பூனைமாதிரி இருந்துகொண்டு புலியாகப் பாய்ந்துவிட்டாயே! இப்போது ஒரு சந்தேகம். இந்தக் கதையில் தேர்தல் வெறியா, பத்தாயிரம் ரூபாயைத் தாரை வார்த்த சம்பந்தனுடைய காதல் வெறியா முக்கிய இடம் வகிக்கிறது?”

“இரண்டு வெறிகளாகவுமே இருக்கட்டும்” என்றாள் கயல்விழி.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *