தீக்குளிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2022
பார்வையிட்டோர்: 1,132 
 

(1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரஞ்சிதம் சோர்வாக நடந்து கொண்டிருந்தாள். ஏறிக் கொண்டு வரும் வெப்பத்தால் முகம் கன்றிப் போயிருந்தது. நெற்றியில் கசிந்து, பரவியிருந்த வியர்வையில், தலைத்துண்டையும் தாண்டி இரண்டொரு மயிர்க்கற்றைகள் சப்’ பென்று ஒட்டிப் போயிருந்தன. அவளுக்குப் பின்னால், இனிப்பு விழுந்த இடத்தில் மொய்த்துப் பிரியும் எறும்புக் கூட்டம்போல் கொழுந்து நிறுக்கும் இடத்தில் கூட்டம் திமுதிமுத்துக் கொண்டிருந்தது. அங்கு போனதையோ போய்த் திரும்பியதையோ உணரும் சொரணையற்று ரஞ்சிதம் நடந்து கொண்டிருந்தாள். எண்ணங்கள் முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியின் அதிர்ச்சியில் மோதிக் கிறங்கிப் போயிருந்தன. இப்போதுங் கூட நினைக்கும்போது உடலே தகிக்கிறது!

ஓராண்டு காலமாக அவள் ஆவலுடன் எதிர்பார்த்த நிகழ்ச்சி, கோட்டையின் மீது கோட்டையாக வானளாவ எழுப்பியிருந்த மனக்கோட்டையின் அடித்தளம் நேற்றைய நிகழ்ச்சியில் நொறுங்கி விட்டது. இதற்கு முன்பு பல தடவை பல இடங்களிலிருந்து அவளைப் ‘பெண்’ கேட்டு வந்த எல்லோருக்கும் இல்லை’ என்று கையை விரித்திருக்கிறான் ரஞ்சிதத்தின் தகப்பன். அப்போதெல்லாம் ரஞ்சிதம் இவ்வளவு அதிர்ச்சி அடையவில்லை. மாறாக தப்பினோம் என்றே இருந்தாள். அவள் வேண்டிக் கொண்ட கடவுள் தான் அப்பன் மனதில் புகுந்து அபயம் அளித்து விட்டதாகக்கூட நினைப்பு. நேற்று அந்தச் சாமியும் ஏமாற்றிவிட்டது.

அவளும் முத்தையாவும் ஒரு மாதிரி’ ஒரு வருடமாகவே அவர்களுக்குள் பழக்கம். அதன் விளைவாக அவனைத்தவிர வேறுயாருக்கும் கழுத்தை நீட்டுவதில்லை என்று சங்கற்பம் செய்து கொள்ளும் அளவுக்கு அவள் உறுதியாயிருந்தாள். நேற்று முத்தையா வீட்டார்தான் ‘பெண்’ கேட்டு வந்து வெறுங்கையுடன் திரும்பியிருந்தார்கள். இனி என்ன என்ற கேள்வி மனதில் எழும்பி, பின்னால் அகன்ற இருள் வெளியைக் காட்டிக் கொண்டிருந்தது. மனதில் பசுமையாகிப் போயிருந்த நினைவு ஒரு இதழ் விரித்து மணம் பரப்பியது.

நல்ல வெயில் வேளை. மண்ரோட்டில் பரவியிருந்த மணல் காற்றை அக்கினி மூச்சாக்கிக் கொண்டிருந்தது. தன் நிழல் கால்களுக்குள் பதுங்க ரஞ்சிதம் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். இரண்டு கைகளிலும் இரண்டு டிபன் கரியர்’ இரண்டு தோள்களிலும் கங்காருக்குட்டி பிளாஸ்குகள்’ கொழுந்து எடுக்கும் மலை ‘லைன்’களில் இருந்து தூரம் என்றால் கங்காணிமார்களுக்கு மதிய உணவு எடுத்துவர யாராவது போகவேண்டும்.

அன்று அவள்…..!

தூரத்தில் முத்தையா சவுக்குமர நிழலில் உட்கார்ந்து உலக்கை பருமனுள்ள கட்டை ஒன்றில் கத்தி தீட்டிக் கொண்டிருந்தான். மாக்கல் துகளில் தீட்டப்பட்ட கத்தி வெள்ளியாகிக் கொண்டிருந்தது. அன்று அந்த மலையில் கவாத்துவேலை. சக தொழிலாளர்கள் எல்லோரும் ஏறக்குறைய நிறையை முடித்துக் கொண்டிருக்கும் நேரம். அவனைத் தவிர வேறு குஞ்சு குருவியைக் கூட காணவில்லை. மலை பூராவும் ஒட்ட முடிவெட்டிய நரைத் தலைமாதிரி ‘ஹோ’ வென்று கிடந்தது. அதற்கு மத்தியில் அவனுடைய நிரை மட்டும் பாதி முடியாமல், வெறும் வயலில் ஒரு வரிசை நட்ட நாற்றுக்கள் மாதிரித் தலை தூக்கி நின்றன. ‘சரியான சோம்பேறி’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் ரஞ்சிதம்.

ஆளரவம் கேட்டுத் தலையைத் தூக்கிப் பார்த்தான் முத்தையா. அவன் யாரென்று தெரிந்ததும் அவளுக்குக் கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது. கவாத்து வேளையில் முதல் ‘நம்பர்’ ஆள் என்று பெயரெடுத்தவன்.

நெற்றியில் முத்தாகத் துளிர்த்து நின்ற வியர்வையை, ஆள்காட்டி விரலால் வழித்தான். விரலை வாய்க்காலாகக் கொண்டு வியர்வை ‘சொள சொள’ வென்று கொட்டியது. இரண்டு மூன்று தரம் விரலைச் சுண்டிவிட்டு “இஞ்சரு! ஒன்னைத்தானே” என்றான். ரஞ்சிதத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவளுடைய தம்பி கந்தனுக்கு இவன் நண்பன் தான். அவனுடன் பேச இரண்டொருமுறை தன் வீட்டுக்கு வந்திருக்கிறான்தான். என்றாலும்…..

அவனைத் தாண்டி இரண்டடி வைத்தவள் நின்ற நிலையிலே பாதி திரும்பி “என்ன?” என்றாள். பூனையின் பார்வை போல அவள் கண்களில் தேங்கி நின்ற மிரட்சியைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. “தேத்தண்ணி இருந்தா கொஞ்சம் குடுத்துட்டு போவே” என்றான். பேச்சில் தொனித்த மென்மை

அவளுக்குத் தைரியத்தைத் தந்திருக்க வேண்டும்.

“ஐய!” என்றாள் ஏளனத்தோடு. “பெரிய வேலை செஞ்சு களைச்சவுக மாதிரிதான். இன்னம் பாதி நெரை கூட முடியல்லே” என்று சொல்லும் போதே சிரித்து விட்டாள். முத்தையா அமைதியாக “என்ன சொன்னே. பாதி நெரை…” என்று இழுத்தான். பாதி வாக்கியத்தை அவளும் தொடரவில்லை; அவனும் முடிக்கவில்லை. ரஞ்சிதம் நடக்கத் துவங்கினாள்.

“இது யாரு நெரை தெரியுமா?” என்றான் முத்தையா கொஞ்சம் ஓங்கிய குரலில். “ஒங்கதம்பி இருக்காகளே, அவுக நெரைதான்” என்றான். ரஞ்சிதத்தின் நடைவேகம் குறைந்தது. நின்று திரும்பி அவனைப் பார்த்தாள். முத்தையா தலைகுனிந்து கத்தியின் கூர்மையில் கட்டை விரலை வைத்து வைத்துப் பார்த்தவாறு “பாவம்னு வெட்டிக் கொடுத்தா இப்படித்தான். நல்லதுக்கு காலமில்லே” என்றவாறு மீண்டும் கத்தியைத் தீட்டத் துவங்கினான்.

அவளுக்கு வெட்கமாக இருந்தது. ஓர் ஆண்பிள்ளை வாய்விட்டுத் தவித்த வாய்க்குத் தண்ணீர் கேட்கிறான். இப்படி சண்டி மாடாக திமிறி விட்டு வருகிறோமே என்று உதட்டைக் கடித்துக் கொண்டாள். கைகளில் இருந்த ‘டிபன்கரியர்’ களை கீழே இறக்கிவைத்து விட்டு வலது புறத்தோளில் தொங்கிக் கொண்டிருந்த பிளாஸ்குகளில் ஒன்றை அவளுடைய நீலநிற பிளாஸ்க்கை எடுத்துத் தரையில் வைத்தாள். உடம்பெல்லாம் கூசியது. இருந்தாலும் மெல்லிய குரலில் தேத்தண்ணி வேணுமா?’

முத்தையா தலையைத் தூக்கிப் பார்த்தான். ஆளையே காணவில்லை! துருவிப் பார்த்தபோது, ஒரு பெரிய சவுக்கு மரத்துக்குப் பின்னால் முழு உருவையும் மறைத்துக் கொண்டு ஒரு பக்கத்துக் கண் மட்டும் தெரிந்தது.

முத்தையா குறும்பாகச் சிரித்தான். அந்த ஒற்றைக் கண்ணும் மரத்துக்குப் பின்னால் மறைந்தது. முழங் கால்களில் கையை ஊன்றி எழும்பி அவளிடம் வந்தான். தரையில் இருந்த பிளாஸ்க்கைத் தூக்கி கொஞ்சம் தள்ளி மீண்டும் தரையிலே வைத்தாள் பொறுப்பை ஒப்படைப்பதுபோல். அதை எடுத்துத் திறந்து மடமடவென்று வாயில் ஊற்றிக் கொண்டான். முகம் எட்டுக் கோணலாக வளைந்தது.

“ஐய! சீனி இல்லே ….” என்றான்.

ரஞ்சிதம் சிரிப்பை அடக்க கீழுதட்டை உள்ளிழுத்துக் கடித்தவாறு, மடியிலிருந்த ஒரு காகிதப்பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சீனியில் கொஞ்சம் அள்ளினாள். முத்தையா வலது உள்ளங்கையை இடுப்புத்துணியில் துடைத்துவிட்டு நீட்டினான். உள்ளங்கையில் வெண்குன்றாகச் சீனி குவிந்தது. அதைப் பார்த்து விட்டு “உங்க வீட்டில் இப்படித்தான் குடிப்பீங்களா?” என்று அவள் முகத்தைப் பார்த்து விட்டு “நாங்களெல்லாம் கலக்கித்தான் குடிப்பம்” என்றான்.

ரஞ்சிதம் முகத்தை நொடித்துக் கொண்டாள். “நீங்கல்லாம் தொரை வீடு. கலக்கிக் குடிப்பீங்க. எல்லோருக்கும் முடியுமா?” என்றாள். இந்த நாலு வார்த்தைகள் பேசுவதற்குள் கண்கள் வெட்கத்துடன் நாலு திசைகளிலும் சுழன்று பாத்துக் கொண்டன. கால் கட்டை விரல் ரோட்டு மணலில் குழி பறித்தது.

கையிலிருந்த சீனியை நக்கி “கர்முர்” என்று கடித்தவாறு ஒரு வாய்த் தேநீரை வாயில் ஊற்றிக் கொண்டான். தேனீரில் கொஞ்சம் தாடையில் கொட்டி வளைந்து இறங்கி தொண்டை முடிச்சில் வந்து சொட்டியது.

பிளாஸ்க்கில் பாதித் தேனீரை மீதம் வைத்து நீட்டினான். “அதை எங்க தம்பிக்கிட்ட குடுத்துடுங்க’ என்றவாறு தோள்களைக் குலுக்கி பிளாஸ்க் குவியல்களை சரிசெய்தவாறு டிபன் கரியர்’களைத் தூக்கினாள். “கொஞ்சம் இரு வர்றேன்” என்ற முத்தையா கத்தி தீட்டிய இடத்துக்குத் திரும்பி வந்தான். அங்கு நின்ற முருங்கை மரத்தின் தாழ்ந்த கிளை ஒன்றில் பிளாஸ்கைத் தொங்க விட்டு, ஒரு தேயிலைச் செடியின் அடியில் உட்கார்ந்து, தலைத்துண்டை விரித்தான். செடியின் அடியில் நிழலுக்கு மறைவாக இரண்டு மூன்று றாத்தல் தேறும் கொழுந்து அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதை அள்ளிவைத்துப் பெரிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு ரஞ்சிதம் அருகில் வந்தான். மூட்டையைத் தரையில் வைத்து அது விரிந்தபோது ரஞ்சிதத்தின் முகமும் கண்களும் இலேசாக இதழ்களும் விரிந்து மலர்ந்தன. ‘எம்பூட்டுக் கொழுந்து!’ என்று மனம் கூவியது.

“எடுத்துக்க” என்றான். ‘கொழுந்தோட கவாத்து வெட்ட மனசே இல்லே, எடுத்துக்கிட்டே வெட்டினேன். எடுக்கலாம்னு நெனைச்சிருந்தா, இன்னம் நிறைய எடுத்திருக்கலாம்” என்றான்.

“லேஞ்சோடே கொண்டு போறியா ?”

“வேண்டாம்”

இடுப்புப் படங்கு முழங்காலுக்கு மேல் தொட்டியாக மடித்துக் கிடந்தது. அதற்குள் அள்ளிக் கொட்டிக் கொண்டாள். கண்கள் இரண்டொருமுறை முத்தையா மேல் படர்ந்தது. நன்றியைத் தெரிவித்துக் கொள்ளத் தவறவில்லை. இப்படி ஆரம்பித்த நட்புத்தான் இன்று கேள்விக் குறியாகி நின்றது. தூரத்தில் கூடையைத் தரையில் வைத்து விட்டு முத்தையாவின் தங்கை வள்ளி ரஞ்சதத்துக்காகக் காத்துக் கொண்டு நின்றாள். நேற்றைய நிகழ்ச்சிக்குப் பிறகு இருவருக்கும் இதுதான் முதல் சந்திப்பு. எனவே பேசுவதற்குக் கூடை கூடையாக விஷயம் இருந்தது வள்ளிக்கு. இவர்கள் விவகாரம் அவளுக்கும் இலேசாகத் தெரியும். நேற்றைய நிகழ்ச்சி அவளுக்கும் அதிர்ச்சியைத் கொடுத்திருந்தது.

ரஞ்சிதம் அருகில் வந்ததும் வள்ளியை ஏறிட்டுப் பார்த்துவிட்டுத் தலையைக் குனிந்தவாறு நடக்கத் துவங்கினாள். வள்ளியும் அவளுடன் தொடர்ந்தாள். கொஞ்சநேரம் இறுக்கமான மௌனம் நிலவியது. அதற்கு மேலும் பேசாவிட்டால் தலையே வெடித்துவிடும். பரபரப்புடன் வள்ளி, ரஞ்சிதத்தின் கையை அசைத்து ‘என்னது?’ என்றாள். ரஞ்சதம் அவளைப் பார்த்துச் சிரித்தாள். உயிரில்லாத சிரிப்பு.

இருவரும் நிழலுள்ள இடமாகப் பார்த்து உட்கார்ந்தார்கள். தேநீர் குடிக்க கூடைக்குள் உருண்டு கொண்டிருந்த பிளாஸ்கை எடுத்து, மூடியைத் திறந்து, சேலைத் தலைப்பால் மூடிக்குவளையைச் சுற்றித் துடைத்து விட்டு, தேநீர் ஊற்றி ரஞ்சிதத்திடம் நீட்டினாள் வள்ளி. ரஞ்சிதம் வாங்கிக் கொண்டாள்.

“என்ன ஒங்க அப்பன் அப்படிச் சொல்லிட்டுதாம்?” என்றாள் வள்ளி. தேநீர்க் குவளையையே உற்றுப் பார்த்தவாறு மௌனமாக இருந்தாள் ரஞ்சிதம்.

“வயது இருபத்தஞ்சு ஆகுதே ஒனக்கு! பத்தாதா? இன்னம் எவ்வளவு காலத்துக்கு இப்பிடியே இருக்கிறதாம்?” என்றாள் தொடர்ந்து. ரஞ்சிதத்துக்குக் கண்கள் குளமாகி நீர் பொல பொலவென்று உதிர்ந்தது. தலைத்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“ஒங்க அப்பனுக்கு பண ஆசை!” என்று முத்தாய்ப்பு வைத்தாள். “ஒன்னைக் கட்டிக் குடுத்துட்டா எம்பது தொண்ணு பன்னு ஒன் சம்பளம் இல்லாம போகுமில்ல!” உணர்வுக் கொந்தளிப்பில் சில நிமிஷங்கள் மௌனமாகக் கழிந்தன.

“அண்ணனுக்குச் சரியான வருத்தம்” என்றாள் வள்ளி. “என்னமும் சொன்னாகளோ?” ரஞ்சிதத்தின் குரல் ஈனமாக ஒலித்தது.

“ஒண்ணும் சொல்லல்லே!” என்றவாறு எதிரேயிருந்த தேயிலைச் செடியையே அர்த்தமற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, திரும்பி, அடங்கிய குரலில் “ராத்திரி சாப்பிடக் கூட இல்லை” என்றாள். சொல்லும் போது குரல் தழ தழத்தது. ரஞ்சிதம் நீண்ட பெருமூச்செறிந்தாள்.

“நான் ஒண்ணு சொல்றேன். கேக்கிறியா?”

ரஞ்சிதம் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“அழுகிற புள்ளைதான் பால்குடிக்கும். பேசாமே இப்பிடியே எங்க வீட்டுக்கு வந்துடேன்”

ரஞ்சிதத்தின் விழிகள் கூர்மையாகின!

“பின்னே என்ன? ஒங்க அப்பனை நம்புறதிலே வேலையே இல்லை. இன்னம் அஞ்சு வருஷமானாலும் இப்பிடியே இருக்க வேண்டியது தான்”

அவள் சொல்வதில் உண்மை இருப்பதாக நினைத்தாள் ரஞ்சிதம்.

“நீ மட்டும் எங்க வீட்டுக்கு வந்துடு, நாங்கல்லாம் ஒன்னைத் தங்கம் தங்கமா வச்சக்குவோம்” என்ற வள்ளியை ஊடுருவிப் பார்த்துவிட்டுத் தலைகுனிந்து கொண்டாள். மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள், முள்ளை மண்ணில் அழுத்திப் புரட்டியதும் புரண்டு விழும் மண்பாளங்கள் மாதிரி புரண்டு விழுந்தன.

போகலாமா?

போனால்?

போவதைத் தவிர வேறுவழி?

பெண்கேட்டு ஏமாந்து, இரவு சாப்பிடக்கூட முடியாமல் தவிக்கும் முத்தையாவின் முகம் அவள் மனதில் நிழலாடியது. இப்படியே இப்பொழுது அவர்கள் வீட்டுக்கு ஓடலாமா என்று மனதில் ஓர் அசுரவேகம் ஏற்பட்டது. அவள் முதுகில் கையை வைத்து “என்ன நாள் நட்சத்திரம் பார்க்கிறியா, என்ன யோசனை?” என்றாள் வள்ளி.

கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள் ரஞ்சிதம், போவதென்று!

அவளுக்கு மனு தர்மம் தெரியாது. இன்றைய சட்ட திட்டங்களும் தெரியாது. ஆனால் … இருபத்தைந்து வருட வாழ்வுக்குப் பிறகு, அதிலும் உணர்வு புரிந்த பிறகு தனக்குள்ளே போராடிப் போராடிக் களைத்துக் கிடந்த நெஞ்சு சுகத்துக்காக ஏங்கியது. இனியும் பழைய வாழ்வுதான் என்றால் அதைவிட பேசாமல் மண் எண்ணெயில் குளித்து நெருப்பை வைத்துக் கொள்ளலாம். உணர்வும் அக்கினியாகத்தானே தகிக்கிறது!

அன்று மாலையில் வள்ளியின் கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது கொண்டவனைக் காணப் பள்ளியறைக்குள் நுழைவது போல மனம் படபடத்தது. எத்தனையோ முறை வந்து பார்த்த வீடுதான். ஆனால் இன்று எண்ணவோ ஒரு மாற்றம். கூடையை இறக்கித் திண்ணைக்கு மேல் சுவரில் அடித்திருந்த ஆணியில் மாட்டி உள்ளே நுழைந்தார்கள். உள்ளே இலேசான இருள்.

அது வெளித் திண்ணையும், உள்ளே ஓர் அறையுமாக உள்ள பழைய மோஸ்தர் லயம். முன்பக்கம் மட்டும் தான் வாசல். உள்ளே அறைக்குள் ஆள் உயரத்துக்கு மேல் கம்பி வைத்த ஜன்னல் ஜெயில் மாதிரி. அடுப்பருகில் பலகையைப் போட்டு உட்கார்ந்தவாறு சமையலில் மூழ்கியிருந்தாள் வள்ளியின் தாய். மேலே ரவிக்கை இல்லாமல் சேலைமட்டும் பாதி முதுகையும் பாதி வயிற்றையும் அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது. வாசலில் நிழல் தெரிந்து திரும்பிப் பார்த்தாள். ரஞ்சிதத்தைப் பார்த்ததும் திகைப்பு சிரிப்பாக மாறியது. எழும்பி ரஞ்சிதம் அருகில் வந்து “எம்மவன்தான் பெரிசுன்ன வந்துட்டியா வாம்மா வா…” என்று அவள் கன்னத்தை உருவி நெற்றிப் பொட்டில் அழுத்திக் கொண்டாள். விரல்கள் சடசடத்தன. வள்ளிக்கு ஏக உற்சாகம்.

ரஞ்சிதத்தை உட்கார விடாமல் தோட்டத்துக்கும் ‘பீலி’ யடிக்கும் இழுத்து அலைந்து கொண்டிருந்தாள். இருவரும் கை கால் அலம்பிக்கொண்டு வந்தபோது வள்ளியின் தாய் தேநீர் ஊற்றி வைத்துக் காத்துக் கொண்டிருந்தாள். தேநீரைக் குடிக்கும்போது இந்நேரம் தன் வீட்டிலும் வெள்ளை நிற ‘ஜக்’ கில் தேநீர் ஆறிப் போய் அடுப்புக்குப் பக்கத்தில் தூசி படர்ந்து கொண்டிருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் ரஞ்சிதம். வள்ளியின் தம்பிப் பயல் ஒருவன் நடுவிரலையும் மோதிர விரலையும் சேர்த்து சூப்பியவாறு உடம்பில் துணியில்லாமல் அம்மணமாக வந்து நின்று ரஞ்சிதத்தை விழித்துப் பார்த்தான். அவனை இழுத்து அணைத்து தலைமயிரைக் கோதிவிட்டு “ஐய! இது என்ன அசிங்கம். நல்ல பிள்ளையாம். எங்கே சட்டை போட்டுக்கிட்டு வா பாப்பம்” என்றாள். அவன் திமிறி குடுகுடு வென்று வெளியே ஓடினான். மூவரும் சிரித்தார்கள்.

அவன் வயதேயுடைய தன் தம்பி ஒருவனின் நினைவு வந்தது. அவள்தான் சோறூட்ட வேண்டும். அவளருகில் படுத்துக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் முரண்டு பண்ணுபவன் இன்று என்ன செய்வான் என்று நினைத்த போது மனம் கலங்கியது. ‘எவ்வளவு காலத்துக்கு ஒரு பெண்ணுக்குத்தாய் வீடு?’ என்று தன்னையே மடக்கிக் கொண்டாள்.

வந்து அரைமணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் முத்தையாவைக் காணவில்லை. வந்து தன்னைக் கண்டவுடன் என்ன செய்வான் என்று கற்பனை பண்ணிக் கொண்டாள். கற்பனை சுகமாக இருக்கவில்லை! உள்ளத்தின் ஒரு பகுதி இருண்டு போய் அதற்குள்ளிருந்து நான்கைந்து அழுகுரல்கள் கேட்பது போலிருந்தது. தராசுப் படிக்கல் மாதிரி இருக்கும் தன் தம்பி தங்கைகளின் நினைவே மனதுக்குள் சுழன்றது.

ரஞ்சிதத்தின் குடும்பம் பெரியது. உருப்படியாக மூன்று பேருடைய உழைப்பில் ஒன்பது வயிறுகள் பசியாற வேண்டும். இதுவரையுமே அது ஒழுங்காக நடைபெறவில்லையென்றால் இனி ..?

குழந்தைகளில் ஒருவரையாவது அவளுடைய தாயினால் சமாளிக்க முடியாது. குழந்தைகளின் குறும்பு தாங்க முடியாவிட்டால் பட்பட்’ டென்று தன் தலையில் அடித்துக் கொண்டு “என்னைக் கொல்லாதீங்க சனியங்களா!” என்று அழத்தான் தெரியும். அடுத்தடுத்த பிரசவத்தால் நித்திய நோயாளியாகி, ரஞ்சிதத்துக்கு அவளும் ஒரு குழந்தை. தலையில் தான் சுமத்தியிருக்கும் பாரத்தை எண்ணுகையில் தான் செய்வது பெரிய அநியாயம் என்று தோன்றியது. உடம்பு கொஞ்சம் தெம்பாக இருக்கும் நாளில் மட்டும் ஏதோ ‘பெயர்’ பண்ணுகிறவள் இனிக் கட்டாயம் வேலைக்குப் போகவேண்டி வரும்.

கறுத்து இளைத்து நடக்கவே ஜீவனில்லாத தன் தாய் வேலைக்குப் போவதைக் கற்பனை பண்ணவே சிரமமாக இருந்தது ரஞ்சிதத்துக்கு.

வெளியே அந்தி மயங்கி அழுக்குப் போல இருள் பரவத் தொடங்கியது. வள்ளி ரஞ்சிதத்தைத் தனிமையில் விட்டுவிட்டு இரண்டு லாந்தர்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவைகளைக் கழற்றி கண்ணாடியைத் துடைத்து மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கை ஏற்றினாள். வள்ளியின் தாயும் சமையலை முடித்துவிட்டு அடுத்த வீட்டுக்குப் பேசிக் கொண்டிருக்கப் போய் விட்டாள். நெடுநேரமாகத் திண்ணையில் உட்கார்ந்திருந்த ரஞ்சிதம் எழும்பி உள்ளே வள்ளி அருகில் வந்து நின்றாள். கண்கள் ஈரமாகி, உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன. மெதுவாக ‘வள்ளி’ என்றாள். அதுவுங்கூட அழுகையாகத்தான் வெளிவந்தது. சேலை முந்தானையில் மூக்கைச் சீறிக் கொண்டாள்.

நிமிர்ந்து அவளைப் பார்த்த வள்ளிக்கு அவள் வெகுநேரமாக அழுதிருக்க வேண்டும் என்று தோன்றியது. “என்னது?” என்றாள்.

“நான் வீட்டுக்குப் போகிறேன்”

“என்னது?”

ரஞ்சிதம் மீண்டும் மூக்கைத் துடைத்து கண்களையும் துடைத்துக் கொண்டாள். வள்ளி அவள் தோளைக் குலுக்கி “என்ன ரஞ்சி ஒனக்கு?” என்றாள்.

ரஞ்சிதம் அமைதியாகக் கொடியில் கிடந்த துண்டையும், படங்குச் சாக்கையும் உருவி எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள், பின்னாலே வந்த வள்ளி அவள் கையைப் பிடித்து “ரஞ்சி! எங்கே போறே? வா உள்ளுக்கு” என்றாள்.

ரஞ்சிதத்தின் கண்கள் கலங்கி மிளகாய்ப் பழமாக சிவந்திருந்தன. “இல்லே வள்ளி ! நான் போறேன் விடு” என்று நழுவித் திண்ணை அருகில் வந்தாள். “நான் இப்படி வாறது சரியே இல்லை. எங்க அப்பனும் தம்பியும் சம்பாதிச்சா அந்தக் குடும்பத்துக்கு போதும்னா நினைக்கிறே?” என்று சொல்லும்போதே அவளுக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. “சின்னதுகளை நெனைச்சா எனக்கு வயித்தைக் கலக்குது!” என்று சொல்லிவிட்டு குலுங்கி அழுதாள். வள்ளிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

திண்ணைக்கு மேல் தொங்கிய கூடை கீழே இறங்கியது. அதற்குள் துண்டையும் படங்கையும் போட்டு, கயிற்றைத் தலையில் மாட்டிக் கொண்டு விட்டுக் கீழை இறங்கினாள்.

தன் தாயைக் கூப்பிட்டுச் சொல்லக் கூட முடியாமல் திகைத்து நின்ற வள்ளியிடம் சொல்லவும் இல்லை. அவளைப் பார்க்கவும் இல்லை.

இருளுக்குள் கலந்த ரஞ்சிதம் ஓடத் துவங்கினாள். வாழ்க்கையும் தான்!

– தினகரன் 17-11-63

– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

– சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *