வெண்பனிப்பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 8,699 
 
 

“அம்மா போஸ்ட்….” என்ற குரல் கேட்க

சமைத்துக் கொண்டிருந்த கவிதா தன் நைட்டியில் கைகளை துடைத்துக் கொண்டு வேகமாக சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

அந்நேரம் குறுக்கே வந்த செண்பகம்

“நீ போய் வேலைய பாரு…லெட்டர நான் வாங்கிக்கிறேன்” என மருமகளை அதட்ட,

காதல் திருமணமாகி மூன்றே மாதமான கவிதா, தன் மாமியாருக்கு கட்டுப்பட்டவளாக சமையலறைக்குள் நுழைந்தாள். என்றாலும்

“வந்திருக்கும் லெட்டர் அவர் பேருக்குத்தான் வந்திருக்கு என்னவாக இருக்கும்” மனம் கேட்காமல் மீண்டும் சமையலறையிலிருந்து வெளியே வந்து மாமியாரின் முகத்தை பார்க்க,

“எல்லாம் நல்ல விஷயம் தான். உன் புருஷனுக்கு பாஸ்போர்ட் வந்திருக்கு. நாளைக்கு காலையில போஸ்ட் ஆபீஸ் போயி, பாஸ்போர்ட் வாங்க சொல்லி இருக்காங்க. நாளைக்கு மறக்காம போக சொல்லு. அவன் எப்பயோ வெளிநாடு போய் இருக்கணும். உன் பின்னாடி காதல் கத்தரிக்கான்னு சுத்தி, ரெண்டு வருஷம் வீணா போச்சு. கடவுளே அவனுக்கு நல்ல புத்தியை கொடு. இனிமேயாவது வெளிநாடு போய், புத்தியா பொழச்சு, நாலு காசு சம்பாதிக்கட்டும்” என்றாள் செண்பகம்.

மாமியாரின் முகத்தை பார்த்து சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள் கவிதா. தன் குடும்பத்தாரை தூக்கி எறிந்துவிட்டு காதல் கணவன் சக்தியை கை பிடித்தவள் கவிதா. இந்த வீட்டில் அவளுக்கென்று இருக்கும் ஒரே சந்தோஷம் அவன் மட்டும் தான். வழக்கம்போல் அன்றும், மாலை வேளையில் சக்தியின் வருகைக்காக காத்திருந்தாள் கவிதா. பைக் சத்தம் கேட்டவுடன் புன்னகையோடு வாசலை நோக்கி ஓடினாள். அவன் பைக்கிலிருந்து இறங்கியவுடன் கையிலிருக்கும் பையை வாங்கிக்கொண்ட சத்தியா அவனின் கையை பிடித்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தாள்.

“அம்மா எங்கே?” என்றான்

“அத்தை கோயிலுக்கு போய் இருக்காங்க. டீ கொண்டு வரட்டுமா” கவிதா கூற

“ஏன் திடீர்னு கோயிலுக்கு போய் இருக்காங்க” சக்தி வினவ

“உங்களுக்கு பாஸ்போர்ட் வந்திருக்காம். நல்ல வேலை கிடைச்சு, சீக்கிரம் நீங்க வெளிநாட்டுக்கு போகணும்னு வேண்டிக்க போயிருக்காங்க..” என சொல்லும் போதே கவிதாவின் முகம் வாடியது

“அம்மாக்கு நான் வெளிநாடு போய் வேலை பார்க்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. நானும் போய் நிறைய சம்பாதிச்சா நமக்கெல்லாம் நல்லது தானே” என்று சக்தி அவளை ஆறுதல் படுத்த,

“இப்போ உடனே போற மாதிரி இருக்குமா?”

“இல்ல அதுக்கு விசா வரணும். அப்ப தான் போக முடியும்” என சக்தி கூற

“கடவுளே..!! என்னையும் என் புருஷனையும் பிரிக்கிற அந்த விசா… வரவே கூடாது…” மனதில் வேண்டிக் கொண்டாள்

சமையலறையில் சக்திக்கு டீ போட்டுக் கொண்டே “ஒருவேளை அவர் வெளிநாடு போயிட்டா, எத்தனை நாள் அவர பிரிஞ்சிருக்கணும்? அவரை விட்டுட்டு இந்த வீட்ல எப்படி நான் தனியா இருக்கப் போறேன்னு தெரியல?” என மனதிற்குள் புலம்பிய படியே டீ கப்பை சக்தியிடம் நீட்டினாள.

“நானும் உங்க கூடவே வெளிநாட்டுக்கு வர முடியாதா?

“வரலாம். ஆனால் இப்ப வர முடியாது. நான் போயி அங்க கொஞ்ச நாள் வேலை பார்த்து, பேமிலி விசா வாங்கினால் தான் நீயும் வர முடியும்”

“வேற வழியே இல்லையா”

“கொஞ்சநாள் பொறுத்துக்கோ. அங்க போன உடனே உனக்கும் விசா வாங்கி அனுப்புறேன்” என அவளை சமாதானப்படுத்தினான் சக்தி.

நாட்கள் மெல்ல நகர்ந்தது. அம்மாவின் நகைகள் எல்லாம் அடகு வைத்து, விசாவிற்கு பணத்தை கட்டினான். வெளிநாடு செல்வதற்கான தேதியும் உறுதியானது. அது செண்பகத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் கவிதாவின் மனம் அவன் வெளிநாடு செல்வதற்கான தேதி நெருங்க நெருங்க தவித்தது.

அடுத்த நாள் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நிலையில், விமானத்தில் செல்வதற்காக பெட்டியில் உடைகள், அவன் விரும்பி படிக்கும் பாரதியார் கவிதை புத்தகங்களையும், அடிக்கி வைத்துக் கொண்டிருந்தாள் கவிதா. அப்போது ஒரு புத்தகத்திலிருந்து சில புகைப்படங்கள் கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது, இருவரும் காதலித்த நாள் முதல் இதுவரை எடுத்த சில புகைப்படங்களை அவன் புத்தகத்தோடு எடுத்துச் செல்வதற்காக வைத்திருந்தான் என்பதை அறிந்தாள்

“ஏன் இத்தனை போட்டோ எடுத்துட்டு போறீங்க?”

“இனி நான் வர்றதுக்கு ஒரு வருஷமா ரெண்டு வருஷமா ன்னு தெரியல. உன் ஞாபகம் வரும்போதெல்லாம் பார்த்துக்கலாம்னு எடுத்துட்டு போறேன்” என சக்தியின் பதிலை கேட்டு கண் கலங்கிய கவிதா சில நொடிகளில் மயங்கி கீழே விழுந்தாள்.

சக்தி “அம்மா….” அழைக்க, சக்தியின் குரல் கேட்டதும் செண்பகமும் வந்து, தண்ணீர் தெளித்து அவளை எழுப்புகின்றனர்.

“நாளைக்கு இவன் வெளிநாட்டுக்கு போகக்கூடாது நடிக்கிறா இவ” என மனதில் நினைத்த செண்பகம்

“இது சாதாரண மயக்கம்தான். பொண்ணுங்களுக்கு அப்பப்ப வருவது தான். நீ பயப்படாத சக்தி. அவளுக்கு ஒன்னும் ஆகாது. நான் பாத்துக்குறேன். நீ புறப்படுவதற்கு தேவையான வேலைய பாரு” என செண்பகம் கூற

“இல்லம்மா… நான் இப்பவே இவள ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன். அப்புறம் இந்த வேலையெல்லாம் பார்ப்போம்” என்னை மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்து சென்றான்.

அங்கு அவள் கர்ப்பம் தரித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது போன்ற சூழலில் தன் கணவனை விட்டு பிரிய அவளுக்கு துளிகூட மனமில்லை. அவனுக்கும் அவளை பிரிய மனமில்லை என்றாலும், அம்மாவின் நகைகளை அடமானம் வைத்து வாங்கிய விஷா, போகவில்லை என்றால் எப்படி நகையை திருப்பி பெறுவது? வேறு வழியே இல்லை, போயாக வேண்டும் என்ற சூழ்நிலை.

“நான்… போயி டெய்லியும் உனக்கு போன் பண்றேன். இங்க நடக்குற எல்லா விஷயத்தையும் எனக்கு சொல்லு. அங்க நடக்குற எல்லா விஷயத்தையும் நான் உனக்கு சொல்கிறேன். இரண்டு பேரும் பக்கத்துல இருக்க மாட்டோம் அவ்வளவுதான். முகத்தை போனில பாத்துக்கலாம். நான் உன் கூட இல்லன்னு வருத்தபடாத. நான் இல்லன்ன என்ன? என் குழந்தை உன் கூட இருக்கு. நீ பயப்படாத. குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே நான் வந்துடறேன்” ஆறுதல் கூறியவன் விமான நிலையத்துக்கு சென்றான்.

விமானம் ஏறுவதற்கு முன் தன் கைபேசியில் அழைத்து அம்மாவிடமும் மனைவியிடமும் பேசினான். என்னதான் அவன் பேசினாலும் அவன் அருகில் இல்லாதது கயிறில்லா பட்டம் காற்றில் பறப்பதுபோல், தான் தனித்திருப்பதுதாக வருந்தினாள். சில நிமிடங்கள் கழித்து விமானம் பறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து வானத்தை பார்த்தாள்.

இந்த விமானத்தில் தான் சக்தி போவாரோ? அவர் சாப்பிட்டு இருப்பாரா? அங்க போயி எப்படி இருக்க போறாரு? என மனதுக்குள் பல கேள்விகள். கணவனை பிரிந்து செய்வதறியாது தவித்தாள் கவிதா.

வெளிநாட்டில் ஓரிடத்தில் வேலைக்கு சேர்ந்தான் சக்தி. வேலையில் கவனம் இருந்தாலும் எப்பொழுதும் கவிதா, அவள் வயிற்றில் இருக்கும் தன் குழந்தையின் நினைவாக இருந்தது.

“அம்மா அவளை சரியா பார்த்திருப்பார்களா? நான் பக்கத்துல இருந்தா அவள் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கி கொடுத்திருப்பேன்” என தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களிடம் பேசிக்கொண்டே இருப்பான்.

நாட்கள் நகர்ந்தது. சக்தி வேலை செய்வது “போலி விசா” என்று அவனை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது. கைப்பேசி உட்பட அனைத்தும் அவனிடம் இருந்து பறிக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது கூப்பிடுவாரே என்று ஆவலுடன் இருந்த கவிதாவுக்கு ஏமாற்றமே. பத்து நாட்களுக்கு மேலாகியும் இன்னும் கூப்பிடவில்லை. என்னவாக இருக்கும்? அவருக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? தவித்தாள் கவிதா.

மறுபுறம் அவனால் எவ்வளவு முயற்சித்தும் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க முடியவில்லை. குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ள முடியாமல் கர்ப்பிணி மனைவியின் நிலையை எண்ணி தவித்தான் சக்தி.

மாதங்கள் கடந்தது. கவிதாவின் மீதிருந்த கோபத்தால், அவளின் தாய் வீட்டில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவளின் மாமியாரோ “பையன் சம்பாதித்து வந்துவிடுவான். நீ பயப்பட வேண்டாம்” என்று வார்த்தையால் மட்டும் ஆறுதல் கூறினாரே தவிர, அவனுக்கு என்னவாயிற்று? எங்கே இருக்கிறான்? என்று அவனின் நிலைமையை அறிய முயற்சிக்கவில்லை.

சக்திக்கு விசா வழங்கிய அலுவலகத்தில் அருகில் வயிற்றில் பிள்ளையுடன் காத்திருந்து, விசாரித்தாள். அங்கும் அவனைப் பற்றி எந்த தகவலும் சரியாக தெரிவிக்கவில்லை. அடுத்து என்ன செய்வதென்று அறியாமல் தவித்தாள்.

மறுபுறம் சக்தி எப்படியாவது கவிதாவிடம் பேசிவிடவேண்டும் என்று முயற்சித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. கர்ப்பிணி பெண்ணுக்கு கணவனின் அன்பும் அரவணைப்பும் கிடைக்க வேண்டிய நேரத்தில் அவளைவிட்டு தொலைவில் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை எண்ணி வருந்தினான்.

வெகு நாட்கள் ஆகியும் சக்தி பணம் அனுப்பவில்லை என்ற கோபத்தை செண்பகம் கவிதாவின் மீது காண்பிக்க ஆரம்பித்தாள். நாளுக்கு நாள் கொடுமை அதிகமானது. கவிதாவின் நிலையை அறிந்த அவளின் பெற்றோர் அவளைத் தன் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

சக்தி அடைபட்டிருந்த சிறைக்கு ஒரு தமிழ் அதிகாரி வர நடந்ததை அவரிடம் சொல்லி அழுதான்

“ஒரே ஒரு தடவை என் மனைவிகிட்ட பேசணும் சார். எனக்காக உங்க செல் போன்ல ஒரு கால் பண்ணுகிறேன். ப்ளீஸ் சார்” என்று கெஞ்சினான். அதிகாரியிடமிருந்து கைபேசி பெற்று கவிதாவிற்கு அழைத்தான்.

“நான் சக்தி பேசுறேன். கவிதா எப்படி இருக்க?” சக்தியின் குரலைக்கேட்ட கவிதா பதில் பேச முடியாமல் அழுதாள்.

“ஏன் கவி அழுகிற. அழுகாத நீ எப்படி இருக்க? வயிற்றிலிருக்கும் நம்ம குழந்தை எப்படி இருக்கு?“

ஒருபுறம் கணவனின் குரல் கேட்ட சந்தோஷம் மறுபுறம் இவ்வளவு நாள் அவள் பட்ட கஷ்டங்களை நினைத்து பேசமுடியாமல் அழுதாள் கவிதா

“நாங்க இங்க நல்லா இருக்கோம். வர்ற 25ஆம் தேதி நம்ம குழந்தை பிறக்கும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் இத்தனை நாள் கூப்பிடல? என்ன ஆச்சு உங்களுக்கு?” என அழுதபடியே கேள்விகளை தொடுத்தாள்.

“நான் வந்தது போலி விசாவாம். இப்ப என்ன ஜெயில்ல வச்சிருக்காங்க” என சொல்லி முடிப்பதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டது. கைபேசியில் இருப்பு தொகை இல்லாததால் மீண்டும் கூப்பிட முடியாமல் அதிகாரியிடம் நன்றி சொல்லி கைபேசியை கொடுத்துவிட்டான்.

கணவன் சிறையில் இருப்பதை நினைத்து வருந்தியவள் அக்கம் பக்கத்தினரிடம் தெரிந்தவர்களிடம் விசாரித்து, பலரது உதவியை நாடி அவனை அங்கு இருந்து மீட்பதற்காக முயற்சி செய்தாள்.

“தேதி 25 ஆயிற்று. இப்போது என் குழந்தை பிறந்து இருக்குமா? கவிதா எப்படி இருப்பா? என்ன குழந்தை? இந்த நேரத்தில் அவ பக்கத்துல நான் இருந்தா நல்லா இருந்திருக்குமே” என்று ஒருபுறம் சக்தி வருந்த,

மறுபுறம் “பிறந்த குழந்தையை முதலில் தன் கணவனிடம் தான் காட்ட வேண்டுமென்று எந்த பெண்ணும் நினைப்பாள். அந்தக் கொடுப்பினை எனக்கில்லையே” என பெற்ற குழந்தையை கையில் வைத்து கலங்கினாள் கவிதா. பெற்ற குழந்தையை பார்த்த சந்தோஷப்பட்டாலும் தன் கணவன் இல்லையே என்ற வருத்தமே அதிகமாக இருந்தது.

மாதங்கள் உருண்டோடியது. கணவரை மீட்கும் முயற்சியையும் கைவிடவில்லை. தினக்கூலிக்கு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தாள். தினமும் குழந்தையை தன் தாயிடம் கொடுத்துவிட்டு காலையில் வேலைக்கு செல்வாள். அதே போல் அன்றும் வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தாள். யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்ட திரும்பிப் பார்த்தாள். அடையாளம் தெரியாத ஒரு நபர், கதவு ஓரத்தில் நின்று கொண்டிருப்பதை கண்டு அருகில் சென்று பார்த்தாள். முடி வெட்டி பல நாட்கள் ஆனது போல் தாடியுடன் ஒருவர், கையில் பை ஒன்றை வைத்துக்கொண்டிருந்தார். யாரென்று வினவ முற்படுகையில், தன் கணவன் என்பதை உணர்ந்த கவிதா, அவனை கட்டிப் பிடித்து கதறினாள். இந்த கோலத்தில் தன் கணவன் வருவான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டான். சில வினாடிகள் உலகமே நின்று திரும்ப சுற்றியது போல் கவிதாவின் மனம் உற்சாகத்தில் குதித்தது. தன் மனைவியும் குழந்தையும் பார்த்த சக்தி தான் சொர்க்கத்துக்கே வந்துவிட்டோம் என உணர்ந்தான். அவர்கள் வாழ்க்கை மீண்டும் ஒரு புதிய பயணத்தை தொடங்கியது.

வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது ஒரு அங்கமே தவிர வாழ்க்கையை தொலைத்து பணம் சம்பாதிப்பது கண்ணில்லாதவன் ஓவியம் வாங்குவது போல் என்று எங்கோ படித்தது ஞாபகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *