வெண்ணிற பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 9,543 
 
 

வாசல் எங்கும் வெள்ளை கோலங்கள், வெற்று திண்ணையில் பேப்பர் படிக்கும் பெருசுகள், சோற்றை கட்டி கொண்டு பாயுந்தோடும் மாணாக்கள் – அலுவலர்கள், அந்த சிறிய தெரு

காலை 9 மணி வரை விழாக்கால பேருந்து நிலையம் போல் காட்சி அளிக்கும்.

காலை 9 மணிக்கு மேல் வீட்டுஅம்மாக்களின் பொழுதுபோக்கான பூ தொடுக்கும் சிறு தொழில் பிரதானம் பெரும் நேரம்.

சந்தையில் விற்கும் பூக்களை கூடை கணக்கில் வாங்கி தொடுக்க குடுத்து படிக்கு ருபாய் என்ற விகிதத்தில் வாங்கி விற்கும் தொழிலாளிகள் வேக வேகமாய் வாடிக்கையான வீடுகளில் தொடுக்க குடுக்க பறந்தோடி கொண்டிருந்தனர்.

தனது வீட்டு வேலைகளை போட்டது போட்ட படி இருக்க, பூக்காரன் சாமிநாதனுக்காக காத்திருந்தால் காசாம்பு, சாமிநாதனும் காசாம்புவிடம் இருந்து தான் தன் விற்பனையை துவங்குவான்.

“இந்த மா, இது ரொம்ப சீக்கிரம் வேணும், இல்லாட்டி ரொம்ப கஷ்டமாகி போகும், படிக்கு ரண்டு ரூவா தரேன் சரியா..”

“எத்தனை மணிக்கு ”

“பன்னண்டு மணி”

“அப்போ ஒரு பதினோரு மணிக்கு வா ”

“ம்ம்.. கட்டி வெச்சுரு, கால காலத்துல கொண்டோய் குடுக்கோணு” என்று முணு முணுத்து கொண்டே கிளம்பினான்.

சுற்று வட்டாரத்தில் தனது வாடிக்கை வீடுகளில் எல்லாம் தான் கொண்டு வந்த பூக்களை குடுத்து தீர்த்தான். மெல்ல காசாம்பு வீட்டருகே வந்து நின்றான். தொலைகாட்சியில் நாடகம் ஓடிகொண்டிருக்க, பூக்கள் அப்படியே இருந்தது.

“எய்ம்மா, பூவெல்லா அப்படியே இருக்குது , உன்னுங் கட்ட ஆரம்பிகலையா., அர்ஜண்டு னு சொன்னால”

“இதா.. இப்போ முடிசுருலாம், மணி பத்தர தான ஆகுது”

“சீக்கிரம் மோ.. உன்கிட்ட குடுத்த பூ தான் சீக்கிரம் போகோணும், வா வந்து கட்டு மோ”

“சரி சரி, நீயும் ஒரு கை வையேன், படிக்கு ரூவா குடு போதும்”

சரி என்று வீட்டிற்குள் சென்றான், இவ்வளவு நேரம் வெயிலில் சுற்றி திரிந்த களைப்பை ஆற்றி தலை பாகையை கழட்டி வைத்து விட்டு கொட்டி கிடந்த பூவில் ஒவ்வொன்றாக தொடுக்க ஆரம்பித்தான்.

தொலைக்காட்சி இரைச்சலை அணைத்துவிட்டு காசாம்பு வும் வந்தமர்ந்தாள், இருவரும் மும்முரமாக தொடுக்க ஆரம்பித்தனர்.

“சாப்டியா”

“எங்க…இனி தான்”

“சாப்புடுரியா யா.. சாம்பார் தான்”

“ஐயோ.. நீ கட்டுமா முதல நான் போகோணும்”

“அது கட்டிடலாம் விடு. ”

“யோவ் உன்கிட்ட கேக்கணும் னு இருந்தேன்.. உனக்கு எத்தன பசங்க”

“அது மாரிலாம் நல்ல விசயம் நடக்கல..”

“ஏன்யா.. இப்படி பேசுற”

“அவ ஒரு கொடும காரி, பொழுதெல்லாம் சண்ட தான், நல்ல நாள் பொல்ல நாள் வந்துட்டா அவ்ளோ தான் என் உசுர எடுத்துருவா, கிடைக்குற காச தான குடுக்க முடியும் இதுக்காக திருடவா முடியும், ஏதோ எங்க அம்மா இருக்கற நாலா சமாளிச்சுட்டு இருக்கேன், இல்லாட்டி என்னைக்கோ பரதேசம் போயுருப்பேன்”

“என்ன யா நீ இப்படி மனசு ஒடஞ்சு பேசுற, என்ன தான் இருந்தாலும் அவ உன் பொண்டாட்டி தான, எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்லுவா, நீ தான் புரிஞ்சு நடக்கணு”

“அவளா.. என் நல்லதுக்கா..? நீ வேற”

“எப்ப டா இவன் படுப்பான் தலை ல பாரங்கல்ல தூக்கி போட்டுட்டு ஓடலானு இருக்கா அந்த நாசமாபோரவ.. ”

“உன் பய்யன் ஸ்க்கூல் போறான்ல..”

“ம்ம்.. நாலாவது போறான்.. என்ன கட்டிகிட்ட தூம ஓடி போய் அஞ்சு வருஷம் ஆக போது , இந்த அஞ்சு வருசமா நா பட்ட பாடு அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. இப்பதான் ஊருக்குள்ள நாலு பேர் மதிக்குற லெவெலுக்கு வந்துருக்கேன்..”

“ஒன்னு கவல படாத காசு, எதாச்சும் பணம் கிணம் வேணும் நா தயங்காம என்கிட்டே கேளு சரியா”

“அதெல்ல ஒன்னு வேணா யா , மனுஷாள் துண இருந்தா போதும், தைரியமா இருந்துகுவேன், ஏன் என்னனு கேக்க கூட நாதி இல்ல, ஏதோ ஆண்டவன் புண்ணியதுல வட்டிக்கு விட்டு கொஞ்சம் காசு வருது, பூகட்டுறேன், பையன படிக்க வெக்குறே, வேற என்ன வேணும் சொல்லு”

“ம்ம்.. இதுக்கு மேல என்ன தைரியம் வேணும், நீ பொழச்சுக்குவ, பேசாம நீயும் பூ வியாபாரம் பண்ணுனா என்ன .. நல்ல தொழில் காசு ”

“வேணா சாமி, இதுக்கே முழி பிதுங்குது, கெடச்சத வெச்சு வாழ்கைய ஓட்ட வேண்டியது தான்.”

“கண்டு முடிஞ்சுது, பச்ச நூல் இருந்தா கொடேன்”

காசாம்பு தனது பூக்களை அப்படியே போட்டு விட்டு, பச்சை நூல் கண்டை தேடி கொண்டிருக்க, சாமிநாதனின் மனதளவில் காசாம்பு உள் நுழைந்தால், இவ்வளவு நாள் காசாம்பு மேல் இப்படி ஒரு பரிவு வந்தது இல்லை. இப்படி ஒரு மனதைரியம் தான் பார்த்த பெண்களிடம் இல்லை என்று சாமிநாதனின் சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.பச்சை நூல் கண்டும் கிடைத்தது.

“இந்த யா, என்னையா இவ்வளவு நேரம் வெறும் 2 முழம் தான் கட்டிர்க்கியா.. ரொம்ப ஸ்லோ யா நீ ”

“எல்லாம் வீட்டு நெனப்பு தான்.. என்ன தான் கஷ்ட பட்டு சம்பாதிச்சுட்டு வந்து கொடுத்தாலும் எம்மேல வெருப்ப தான் காற்றா.. பேரு சொல்ல ஒரு புள்ள இல்லன்னு தான் மனசு கெடந்து உளையுது, எதுலயும் ஈடு பாடு வரமாட்டேங்குது ”

“அட பாவமே.. இப்படி இருக்காதயா.. மத்த படி சந்தோசமா இருக்கியா ? ”

“என்னகென்ன ராசா மாறி இருக்கேன்.. வேல நல்லா போகுது, அப்பப்ப துக்கம் வரும்போதுலாம் தண்ணி போடுவேன் அவ்ளோதா… காலம் போகுற போக்குல நானு போகுறே.. நீ சந்தோசமா இருக்கியா..?”

“எங்க யா.. தினந்தினம் நிக்காம ஓடிகிட்டே இருக்கேன், என் சந்தோஷம் லா மறஞ்சு ரொம்ப வருஷம் ஆச்சு, டிவி ல எதாச்சு பழைய பாட்டு ஓடும் போது வர்ற சின்ன வயசு நெனப்பு தான் இதம் கொடுக்கும்.. அவ்ளோ தான்”

“இதோ பாரு யா.. பேசிட்டே 5 முழம் கட்டிட்டோம்”

இருவரும் ஒரே நேர் கோட்டில் பிரயாணித்தனர், கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளால் நெருக்கம் ஆனார்கள், காசாம்பு பெருமூச்சு விட்டு பேசிய பேச்சுக்கள் அனுதாபம் சேர்த்தது,

அவனின் அனுதாப வார்த்தைகள் அவளை கவர்ந்தது, தங்கள் உரையாடல்களால் அரை கிலோ பூவை தாண்டி போய்விட்டனர், இன்னும் கால் கிலோ பூ இருக்கும் நிலையில், காசம்புவின் மொத்த வாழ்கையை மனதளவில் ஓட்டி பார்த்தான்., தன் வாழ்கையில் இணைய வேண்டியவளோ என்று எண்ண தொடங்கினான்.

காசாம்பு ரொம்ப எளியவள், எப்பவும் சாம்பல் நிற பருத்தி சேலை, கூந்தல் முடித்து முகம் கழுவி மஞ்சள் பூசி பொட்டு வைத்து இவன் பார்த்ததே இல்லை. யாரிடமும் அதிக நேரம் பேச மாட்டாள்., இன்று காசாம்பு அப்படி இல்லை, கண்ணில் ஏதோ மாற்றம் இருக்கிறது., சேலை நழுவல்கள் சாமிநாதனை பித்தம் பிடிக்க வைத்தது, காசம்புவும் அதனை உணர்ந்தாள் இருவரின் பேச்சிலும் சுரம் குறைந்தது., கண்கள் ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்தது, இடை மடிப்பு கிளிர்ச்சி ஏற்படுத்தியது, அந்த அறையில் இருந்த வெப்ப காற்று இருவருக்கும் சபலம் ஏற்பட்டுஇருக்கிறது என்பதனை உணர்த்தியது.

சாமி காசம்புவை மெல்ல பார்கிறான் .

காசாம்பு தன் வயதின் உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் கண்களால் சம்மதம் தெரிவிக்கிறாள், இருவரின் ஆணி வேருக்குள் காமம் ஆலமரத்து பேய் போல ஆட,

பூ தொடுக்கும் வேகம் குறைய, கண்கள் அலைபாய, கைகள் சோம்பல் முறிக்கும் தருவாயில் இட நெருசலில் மோதும் விரல்கள் குட குழியில் விழுந்த தேரை போல குதித்தது. காசம்புவின் கண்களை பார்த்தவாறே அவளின் கைகளை பற்றினான் சாமிநாதன்.

அந்த கை பிடிப்பின் அழுத்தம் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் உணர்த்தின, இருவரின் மெய் சிலிர்க்க

இது தவறில்லை.சரியும் இல்லை

தவறாக இருந்தால் என்ன

இப்போதைக்கு அதை பற்றி யோசிக்க வேண்டாம் என்று தரையில் கொட்டி வைத்திருந்த பூக்களின் மேல் பூஜை கொண்டனர்.

மணி பகல் 12, ஒட்டி பிணைந்தவர்கள் அவசர அவசராமாக மீதம் இருந்த பூக்களை கட்டி முடித்தனர்

“சீக்கிரம் கொண்டா டி.. ”

“இன்னைக்கு எனக்கு பூச தான், இனி அந்த செட்டியார் பூ தர மாட்டாரு பாரு.. கொண்டா கொண்டா..மளார்னு..” என்று புலம்பி கொண்டே பூக்களை தயார் செய்தான்.

“யோவ். ஏன்யா பறக்குற.. அதெல்லாம் ஒன்னும் ஆகாது, அரக்க பறக்க ஓடாத.. என்ன..”

“ம்ம்..ம்ம்..”

“குடுத்துட்டு சீக்கிரம் வா, சாப்பிட.. ”

ஒரு நொடி தனது வேலை யாவும் மறந்து காசம்புவை திரும்பி பார்த்தான்,

கதவோரம் நின்றவள் மிக அழகாக இருந்தாள்.

அரக்க பறக்க 5 நிமிடத்தில் கொண்டு சேர்த்தான் பூக்களை, அந்த செட்டியாரும் இவனை திட்டி தீர்த்து பூக்களை அய்யரிடம் கொடுத்தார், அய்யரும் பூக்களை வாங்கி கொண்டு ஏதேதோ மந்திரங்கள் முணங்க கருவறைக்கு எடுத்து சென்றார்.அலங்கார தோரணையில் இருந்த சிலைக்கு பொருத்தமாக இந்த பூக்கள் ஜொலித்தன.

மந்திரங்கள் ஓத,பூஜைகள் நடக்க,தீபங்கள் சுடர்விட,பக்த கொடிகள் பரவசம் அடைய,

நாதஸ்வரம் மங்களகீதம் பாட, மாதவன் திருகல்யாணம் நடந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *