கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2023
பார்வையிட்டோர்: 951 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எல்லாமே முடிந்து எல்லோரும் வந்துகொண்டு இருந்தார்கள். தியாகு, செய்யவேண்டிய கடமைகள் முடிந்தவுடன், அவனை தனது மோட்ட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டான் தியாகுவின் பள்ளித்தோழன் பிரபு. 

தாய் மரணித்த செய்தி தியாகுவிற்கு சொல்லப்பட்டதும் லண்டனிலிருந்து உடனே பயணித்துவிட்டான். நான்கு வருடங்களுக்கு முன்னர் அவனது தந்தையின் மரணத்துக்கு அவனால் வரமுடியவில்லை. பயணிக்க கூடிய சூழ்நிலை அன்று அவனுக்கு அமையவில்லை. 

இப்போது தாயின் மரணத்துக்காவது சென்று தன் இறுதிக் கடமைகளை செய்யவேண்டும் என்று துடித்து, உடனே புறப்பட்டு வந்து இறுதிக் கடமைகளை முடித்து வீடுவந்து சேர்ந்திருகின்றான் தியாகு. 

மயானத்திலிருந்து அவனது தாயாரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஊரவர், உறவுகள்,நண்பர்கள் எல்லோரும் வந்து தியாகுவின் வீட்டின் முன்னால் போட்டிருந்த பந்தலுக்கு கீழும், வளவுக்குள் நின்றிருந்த மாமர நிழல்களுக்கு கீழும் போடப்பட்டிருந்த கதிரைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். 

அவர்களுக்கு கோப்பி, தேநீர். சிகரெட்,சுருட்டு, பீடி, வெற்றிலைபாக்கு எல்லாம் கொடுக்கப்படுகின்றன. 

இரவுச்சாப்பாடு பல உறவுகளால் கொண்டு வரப்படுகின்றன, 

பெரிய வீடு. எல்லாதிசைகளிலும் மின் ஒளி. 

‘தியாகு நான் சாகிறதுக்கு முந்தி பெரிய வீடு ஒன்று கட்டிவிட்டுத்தான் சாகுவன்’ என்று அப்பா சொன்னது நிறைவேறி இருக்கிறது என்று தியாகு எண்ணிக்கொண்டான். 

பலவருடங்களுக்கு பின் பார்க்கும் முகங்கள். பல முகங்கள் அவனுக்கு தெரிந்த முகங்களே. சிலரை பார்த்ததும் அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. சிலர் தங்களை அறிமுகப் படுத்தியபொழுது புரிந்துகொண்டான். ஒன்று இரண்டு வருடங்களா? இருபது வருடங்கள் அல்லவா. 

மரண வீட்டுக்கு வந்த பலர் தியாகுவை பார்க்கவேண்டும் என்பதற்காகவும் வந்திருந்தார்கள். 

அவர்கள் எல்லோரும் அவனை சந்தித்து விடைபெற்றபோது தியாகு மிகவும் மனம் வருந்தினான். 

அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு ஜேர்மனிய சொல்லாடல் நினைவுக்கு வந்தது. 

‘பகிர்ந்து கொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகும். பகிர்ந்து கொள்ளப்படும் துன்பம் பாதி குறையும்.’ 

இதில் அவன் எதை எடுத்துக்கொள்வது? ஊரவர், உறவுகளைக் கண்ட இன்பத்தையா? அல்லது தாயை இழந்து நிற்கும் துன்பத்தையா? தன் நிலை தடுமாறிய போதும், துக்கம் பகிர்ந்து விடைபெற்று செல்பவர்களை வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தான். 

விநாயகபுரம் பிரதான வீதியில் முதலாவது வீடு. பெரிய வளவு. தென்னைமரங்களும், மாமரங்களும் நிறைந்த பாரிய வளவு. இருபது வருடங்களுக்கு முன்னர் இளம்பிள்ளை தென்னைகளாக இருந்தவை இப்போது நெடுதுயர்ந்த மரங்களாக நின்றன. தியாகு கையால் நட்ட மாமரங்கள் நன்றாக கிளைகள் விட்டு காய்த்து நின்றன. எதிரிலிருந்த சின்னதோட்டம்,அங்கு இருந்த பங்களா, ஒன்றுமே இப்போ அங்கு இல்லை. எல்லாம் குடிமனைகளாக இருந்தன. தியாகுவின் அப்பாவின் கடை.கடைக்குமுன் ரோட்டோரம் நின்றிந்த வீரமரம் எதுவுமே இல்லை. தியாகுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தபோது கையில் கோப்பிக் கப்போடு வந்தான் பிரபு. 

“என்ன தியாகு உனக்கு எல்லாமே புதிதாக படுகிறதா? இஞ்ச,எல்லாம் மாறிப்போச்சுடா.அன்று இருந்த நிலைக்கும் இன்று இருக்கும் நிலைக்கும் நிறைய வேறுபாடு. வித்தியாசம். இந்தா முதல்ல கோப்பியை குடி.” என்று கையிலிருந்த கோப்பி கப்பை கொடுத்தான் பிரபு. 

அதை வாங்கிக்கொண்ட தியாகு 

ஏண்டா, எல்லாமே மாறிப்போச்சு. இரண்டு தசாப்தங்களாக நான் இந்த ஊரில் இல்லைதான். அதற்குள் இத்தனை மாற்றங்களா?” 

‘எல்லாம் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள்தான் காரணம். சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ முடியாத நிலை இருந்தது. அன்றாடம் இயல்பு வாழ்க்கை பறிபோன பரிதாபம். அரை வயிற்று கஞ்சிக்கே அவதிப்பட்ட காலம் இருந்தது. விவசாயம், மீன்பிடி, கூலித் தொழில் என்ற எதுவுமே இந்த ஊரில் பண்ண முடியாத ஒரு இக்கட்டான நிலை இருந்தது. உன் அப்பாவுக்கு அவரது கடையை நடத்த முடியாத கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் அவர் மனசு பாதிக்கப்பட்டது. இதெல்லாம் நான் உனக்கு கடித மூலம் முன்பு அறிவித்திருக்கிறேன் இல்லையா” 

“ஓம் நீ எழுதிய கடிதங்களில் உள்ள விஷயங்களை நான் வாசித்துவிட்டு கண் கலங்கியதுண்டு” 

“நாங்கள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல தியாகு. ஏதோ உன் நல்ல காலம் நீ ஊரைவிட்டு போயிட்டா. 
அதனால் நாங்க பட்ட கஷ்டம் உனக்கு தெரியாது” 

“சேச்சே ..அப்படி சொல்லாதே. தாய்,தந்தை, உறவுகள்,தாய்மண் எல்லாவற்றையும் விட்டுப் போய் அந்நிய நாட்டில் அகதியாக வாழ்கின்ற கொடுமையை நான் அனுபவித்தவன். இந்த மண்ணின் வாசத்தையும், மக்களின் நேசத்தையும் நான் இழந்தவன். செம்பருத்தியும், மல்லிகையும் பூத்துக் குலுங்கி நிற்கும் என் வீட்டு முற்றத்தை, கிணற்றடி,வாழை,கமுகை, வேலியோர முருங்கை, அம்மாவின் புடலங்காய்பந்தல்,வல்லாரை பாத்தி எல்லாமே இழந்தவன். இவைகளை மறந்து போன குற்ற உணர்ச்சி எனக்குள் இருக்கிறது. ஏதோ ஒரு வேகத்தில் தாய் மண்ணைப் பிரிந்து போனது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பிரிவு தந்த துன்பம்,துயரம் இருக்கே அது மிக கொடியது.அதை நான் இந்த இருபது வருடங்களாக னுபவிக்கின்றேன். தாய் நாட்டின் சேதிகள் நாள்தோறும் கேட்டு கண்கள் குளமாகி, நெஞ்சம் தடுமாறி எப்போ எமக்கு விடியல் வரும் என்று ஏங்கி விம்மி, வெதும்பி தூக்கமின்றி துடித்த இரவுகள் ஏராளம்.” 

“தம்பி தியாகு.. இங்க வா ராசா உன்னை பாக்க சோட்டையா இருக்கு எவ்வளவு காலம் உன்ன பாத்து” 

குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தான் தியாகு. அவனுக்கு தெரிந்த தங்கமணி மாமி கூப்பிட்டுக் கொண்டிருந்தா. 

பிரவுயையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான் தியாகு. 

தங்கமணி மாமி அவனை கட்டிப்பிடித்து ஓ வென்று ஒப்பாரி வைத்து விட்டார். சற்று நேரத்துக்கு பின் அது அடங்கியதும் பேசினா. 

“அந்த மகராசி இருக்கும்வரைக்கும் அடிக்கடி வீட்டுக்கு வந்துபோவன். இனி ஆரு இருக்கா.” 

தங்கமணி மாமி மூக்கை சிந்தி அவனின் அம்மாவின் பாசத்தை, பிரிவை சொல்லச்சொல்ல இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை அவனால் அடக்க முடியவிலை அழுதுவிட்டான். 

“அழு ராசா நல்லா அழுதிடு. வாய்விட்டு அழுதிடு.உங்க அம்மா உன்னை ஏழு வயசுவரைக்கும் அவட இடுப்பில தூக்கி சுமந்தவ. 

வயலென்றும்,வரப்பென்றும் ஆண்வேலையும், பெண் வேலையும் செய்து உன்ர அப்பாவுக்கு துணையாக இருந்தவ. 

இன்று நம்மை விட்டு போய்டா. நான் வாறபோற நேரமெல்லாம் சாப்பிடு,தேத்தண்ணி குடி, என்று சொல்லி நல்ல கவனிப்பு செய்துதான் அனுப்புவா. அந்த சீவன் போயிட்டே இனி நான் எல்லாம் என்னத்துக்கு கிடக்கிறது. என்ர மச்சாள் என்னையும் கூட்டிக்கோடி” என்று தியாகுவின் அம்மாமேல் வைத்திருந்த பாசத்தை தங்கமணி மாமி வெளிப்படுத்திய போது தியாகுவின் மனம் கனத்தது. 

“தியாகு நான் புறப்படுறன். உனக்கும் பிரயாண களைப்பு, மனச்சோர்வு எல்லாம் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொள்.நாளைக்கு கலையில் நான் வாறன்.” என்று சொல்லி புறப்பட்டான் பிரபு. 

அவனை வழியனுப்பி விட்டு ஹோலுக்குள் வந்த தியாகுவிடம், 

“மாமா சாப்பிட வாங்க, சாப்பிட்டுவிட்டு சாமி அறைக்குள் படுக்கை இருக்கிறது. படுத்து தூங்குங்க.” 

என்றாள் தியாகுவின் அக்கா மகள் மலர். 

“இல்ல, எனக்கு ஒன்றும் வேண்டாம். நான் பிறகு சாப்பிடுறன்.” என்று அவளுக்கு பதில் சொல்லிவிட்டு சாமி அறைக்குள் நுழைந்தான் தியாகு. அவன் அப்பாவின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அவரை வணங்கி விட்டு படுக்கையில் சாய்ந்தான். அவனுக்கு உடனே தூக்கம் வரவில்லை. நெஞ்சம் நிறைய துக்கம் இருந்தது. அவனின் அப்பாவின் சாவுக்கு அவனால் வரமுடியவில்லை. அவர் பற்றிய நினைவு வந்து கொண்டது.கண்களை மூடிக்கொண்டான். 

அவர் உருவம் அவனுக்கு நன்றாக தெரிந்தது. 

நீண்ட நெடிய மனிதர்,அகன்ற நெற்றி,அள்ளிப்பூசிய விபூதி,கபடமில்லாத சிரிப்பு, என்று அவரது உருவம் அவன் கண்களில் நிழலாட அம்மாவின் ஆவி அவனை கட்டி தளுவுவதுபோல ஒரு பிரமை. அவன் கண்ணயர்ந்து போக அவன் உள்ளம் பேசியது. 

‘அப்பாவும் அம்மாவும் அன்பாக வாழ்ந்தவர்கள்.நான் அறிந்தவகையில் அவர்கள் ஒருபோதும் ஒரு பிரச்சினையும் பட்டதில்லை. ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு அன்பாக வாழ்க்கை நடத்தியவர்கள். ஒருவரை விட்டு ஒருவர் ஒருநாள் கூட பிரிந்ததில்லை. அவ்வளவு அன்பாக இருந்தார்கள். வயல் விதைப்பு, அறுவடை, சூடு மிதிப்பு என்று எல்லா வேலைகளிலும் அம்மா,அப்பாவுடன் இணைந்தே இருந்தா. விநாயகபுரம் வீரையடிக் கடை என்றால் பக்கத்து ஊர்க்காரருக்கும் தெரியும்.அதிகாலை நான்கு மணிக்கே அம்மா எழுந்து கடை வாசல் பெருக்கி, கைகால் முகம் கழுவி சாமி கும்பிட்டு வந்து அப்பாவை எழுப்புவா. 

இஞ்சாருங்கோ, எழும்பயில்லையா, இக்கணம் பால்க்கார கந்தன் வந்து கூப்பிடப்போறான்.” 

“ம் .. ம் நான் முளிப்பாத்தான் கிடக்கிறன். நீ நேரத்தோட எழும்பிட்டியாக்கும்” 

இரவு முழுக்க நான் கண்ணோட கண் மூடயில்ல. இவன் தம்பி படுக்கிற அறைக்குள்ள. சரியான நுளம்பு. 

அவன் யன்னல திறந்துபோட்டு படுத்திட்டான்.” 

“அப்ப நல்லா குத்தி ரத்தம் குடிச்சி இருக்கும்.” 

‘ஓம் மெண்ணுறன்.. பிறகு நான் உரிமட்டை பற்றவைத்து அதில வேப்பமிலைகளை போட்டு புகைச்சி அறைமுழுக்க பிடிச்சபிறகுதான் ஓரளவு நுளம்புகள் கலைஞ்சு போயின. தம்பியும் அதற்கு பிறகு படுத்தான். 

“இரவு காத்தே இல்ல. ஒரு கொத்துக் குழைகூட உசும்பயில்ல. காத்து இருந்தா நுளம்பு கலைஞ்சு போயிருக்கும்.” என்று சொல்லிக்கொண்டே எழுந்து முகம் கழுவிவந்து சாமி கும்பிட்டு, கடை திறக்கும் அலுவலில் இறங்குவார். வீட்டோடு கடை அமைந்திருந்ததால் கடையிலிருந்து வரும் சாம்பிராணி வாசம், ஊதுபத்தி மணம் நித்திரையில் இருக்கும் எனக்கு இதமாக இருக்கும். இடைக்கிடை அப்பாவின் பேசுக் குரல் கேட்கும். 

வா வா குஞ்சித்தம்பி .. என்ன விதைச்சிப் போட்டியோ” 

“அத என்னத்த ராசாண்ணே கேட்கிறீங்க..இன்னுமில்ல. முதல்ல ஒரு கிளாஸ் பால் தாங்கோ” 

“சரி தாறன். என்ன நடந்தது.” 

இண்டைக்கு என்று இருக்கு அதுவும் சரிவருமோ தெரியாது.” 

“ஏண்டாப்பா … இந்தா பால் சுடசுடச் குடி. நீ கணபதிப்பிள்ளை அண்ணனின் மெசினுக்கு அல்லோகாசு கட்டின நீ. அவர் கண்டபடி பலரிட்டையும் காசுவாங்கிப் போட்டு இன்றைக்கு நாளைக்கு என்று சொல்லுற மனிசன் இல்லையே. நானும் அஞ்சு வருசமா அவர்ர மெசினாலதான் விதைப்பு தொடங்கி சூடடிப்பு வரை செய்யிறன்.’ 

“ஓமண்ணே, அவர் நல்ல மனிசன்தான். என்ர போதாத காலம் நேற்று வேறு ஒரு வயலில் விதைச்சஅவரது மெசினின் ‘அக்சல்’ உடைஞ்சு போச்சுதாம். 

அதை இன்று கொண்டுபோய் வெல்டிங் பண்ணி முடிச்சபிறகுதான் வருமாம். எப்படியும் மெசின் வர பத்துமணிக்கு மேலாகிடும். நான் கொஞ்சம் நேரத்தோடபோனால் வக்கடைகளை வெட்டிக்கிட்டி எடுக்கும்போது மெசினும் வந்திடும். இந்தக் கிழமைக்குள் விதைச்சுப்போட வேண்டுமெண்டு வட்டானை சொல்லிப்போட்டார்.” 

“ஓம் ஓம் பிறகு முந்தி விதைச்சவன்ர வயலுக்குள்ளால மெசின் கொண்டுபோக விடமாட்டானுகள். 

எனக்கு பரவாயில்ல. என்ர பூமி ரோட்டோரம்.அதனால அந்த பிரச்சினை எனக்கு இல்லை.” என்று சொல்லுவார். 

அப்பாவுக்கு தனது வயல் ரோட்டோரத்தில் இருக்கிறது என்று சொல்வதில் ஒரு சந்தோசம் இருந்தது. மெயின் றோட்டை விட்டு இறங்கினால் அவர் கால் வைப்பது அவரது வயலுக்குள்தான். தான் வாலிப வயதில் காடு வளைஞ்சு, வெட்டி,பிறகு நாட்டுக்கட்டைகள் புடுங்கி காணியாக்கிய கதையை மிக சுவார்சயமாக சொல்லுவார். நான் அவர் தண்ணி பாய்ச்சும்போதோ அல்லது பசளை எறியும்போதோ அவருக்கு ஒத்தாசையாக போவதுண்டு. அன்றைக்கு அம்மா மத்தியானம் சோறு, கறிகள் சமைச்சு எடுத்துக்கொண்டு தபால் பஸ்ஸில் வந்து இறங்குவா. 

அம்மாவைக் கண்டதும், ஓடிச்சென்று அவ கொண்டுவரும் தூக்குகளை எடுத்து வந்து வயலின் நடுவில் அப்பா கட்டிய இரண்டு தட்டு புரைக்கு கீழே வைத்துவிட்டு, வயலின் நடுவில் ஓடும் ஆற்றில் இறங்கி கைகால் முகம்கழுவி வர, அப்பாவும் வந்து சேருவார். பள்ளியான் பசி பொறுக்க மாட்டான் என்று சொல்லிக்கொண்டே அவரும் கைகால் கழுவிவந்து அமர்வார். பிறகு என்ன அம்மா பரிமாற அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் சந்தோசம் இருக்கிறதே அதை சொல்ல வார்த்தைகளே இல்லை. மகா அற்புதமான அனுபவங்கள். 

காலைவேளையில் அப்பாவின் கடையில் ஒரே சத்தமும் சந்தடியுமாக இருக்கும். அநேகமான உழவு இயந்திரங்கள்,மாட்டு வண்டில்கள், அவரின் கடையில் வந்து நின்று அப்பம்,புட்டு, இடியப்பம், என்று சாப்பிட்டு பின் பால், தேத்தண்ணி, குடிச்சி போகும்போது பிடி, சுருட்டு, வெற்றிலைபாக்கும் வாங்கிக்கொண்டே வயல்காட்டுக்கு போவார்கள். அந்த ஆரவாரம் முடிந்ததும்,அப்பாவின் வீரையடிக் கடையடியில் வேறு ஒரு வியாபாரம் களைகட்டும். 

அக்கரைப்பற்று, கல்முனை பகுதிகளிலிருந்து முஸ்லிம் மீன் வியாபாரிகள் கார்களில் வந்து சேர்ந்துவிடுவார்கள். கோரைக்களப்பு ஆற்றில் பிடிக்கும் மீன், இறால், நண்டு என்றால் நல்ல கிராக்கி. 

எல்லாம் மொத்தமாக வாங்கிக்கொண்டு போவது இந்த வியாபாரிகள்தான். இன்னும் சேனைகளில் இருந்து வரும், காய்கறிகள், ரூபஸ்குளம்,கஞ்சிகுடியாறு, சாவாறு என்று அங்கிருந்து வரும் கருவாடு, வெடிக்கார தம்பியர் சுட்டுவரும் மான், மரை இறைச்சி, குறவர் வாடியிலிருந்து வரும் காட்டுப்பன்றி,உடும்பு இறைச்சி, கோமாரித் தேன் என்று சகல வியாபார பொருட்களும் வந்து சங்கமமாகும் இடம் அப்பாவின் வீரையடிக் கடைதான். 

அம்மா கடைப்பொறுப்பை எடுத்தவுடன் அப்பா தனது கணக்கு கொப்பியுடன் வந்து அவரின் கொமிஷன் வியாபாரத்தை தொடங்குவார். ஊரிலுள்ள பல தொழிலாளிகளுக்கு முற்பணம் கொடுத்து வைத்திருப்பார். அவர்கள் அப்பாவிடம்தான் தங்கள் பொருட்களை கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒருவரையும் கண்ணைபொத்தி அடிக்காமல், அவர்களிடம் நல்ல விலைக்கே வாங்கி ஒரு. சின்ன கொமிஷன் வைத்து வெளி வியாபாரிகளுக்கு கொடுப்பார். 

இதனால் தொழிலாளிகளிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தார். முஸ்லிம் வியாபாரிகளும் ராசண்ணன், ராசண்ணன் என்று மரியாதையுடன் அன்பை பொழிவார்கள். 

சே. எவ்வளவு பிரபல்யமாக இருந்த வீரையடிக் கடை இருந்த இடமும் தெரியாமல் போய்விட்டதே. வீர மரமும் இல்லை. வீரையடிக் கடையுமில்லை. 

இந்த இழப்புகளால்தான் அப்பா அதிர்ச்சியடைந்து படுக்கையில் விழுந்து பின் உயிரை விட்டவர். அப்பாவின் மூச்சு இருக்கும்வரை அம்மா உறுதியாக இருந்தார். அவர் போனபின் அம்மா உடைஞ்சு போனா. இன்று அவரும் இந்த உலகத்தைவிட்டு போயிட்டா. 

“மாமா மாமா தூங்கிட்டீங்களா.. நீங்க சாப்பிட இல்லை. எழும்புங்கோ வந்து சாப்பிட்டுவிட்டு தூங்குங்க.” என்று தியாகுவின் மருமகள் எழுப்பியபோதுதான். அவன் தன் நினைவுகளில் இருந்தும், மனசு பேசிய விடயங்களிலிருந்தும் விடுபட முடிந்தது. 

“சரி சாப்பிட வாறன்.” என்று குரல் கொடுத்தவன் எழுந்து உட்கார்ந்தான். 

நல்லா தூங்கிட்டேனோ. ஏதோ பழைய நினைவுகள் எல்லாம் வந்ததுபோல் இருந்தது. 

மனசுக்குள் நினைத்துக்கொண்டான். அம்மாவின் எட்டாம் நாள் முடிந்த பின் தான் மீண்டும் லண்டன் செல்ல வேண்டுமே என்று நினைக்கையில் அவன் தன்னையே வெறுத்துக் கொண்டான். 

என்னதான் வெளிநாட்டில் வாழ்ந்திருந்தாலும் தாய்மண்ணில் வாழ்வதுபோல் வருமா? என்ற கேள்வி அவனுக்கு எழாமல் இல்லை, விதி வலியது என்ற நினைப்புடன் மருமகளின் அழைப்புக்கு இணங்க சாப்பாடு அறைக்கு சென்றான் தியாகு.

– ஊருக்குத் திரும்பணும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 2016, மெய்கண்டான் பிரைவேட் லிமிடெட். இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *