வீட்டுப்பாடம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 1,830 
 
 

அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத வெற்றிடக் காட்சி முகத்திலறைந்தாற்போல் இருக்கவே ஒரு கணம் திடுக்கிட்டவன், தன்னிலை திரும்பி அந்த வெற்றிடத்தைப் பார்வையால் மெல்ல வருடிக் கொடுத்தான். அவனையறியாமல் ஒரு மெல்லிய பெருமூச்சு எழுந்தடங்கியது. “அவ இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படித்தான் சமாளிக்கப்போறேனோ!!” என்று தனக்குள் புலம்பியவன் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான்.

குழந்தைகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்ற ஜாக்கிரதையுணர்வுடன் மெல்ல எட்டிப்பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. மூத்தவள் பத்து வயதுத் தாரிணி பாதங்கள் மட்டும் வெளித்தெரிய தலை வரை இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தாள். சின்னவன் மூன்று வயது ஹரீஷ் அம்மாவின் புடவையொன்றைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு அதைப் பிடித்தவாறே தூங்கிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்ததும், “இதுங்களை விட்டுட்டுப்போக அவளுக்கு எப்படி மனசு வந்தது!!.. ம்.. எல்லாம் என் விதி” என்று நொந்து கொண்டவாறே வாசலை நோக்கி நடந்தான்.

செய்தித்தாளையும் அதன் மேல் படுத்திருந்த பால் பாக்கெட்டுகளையும் எடுக்கப் போனவன்,. “சை..” என்று செய்தித்தாளை உதறினான். பால் பாக்கெட் ஒன்றைச் சேதப்படுத்தி, அதன் வழியே வழிந்த பாலை நக்கிச் சுவைத்துக்கொண்டிருந்த பூனையொன்றும், தேங்கியிருந்த பால்துளிகளும் சிதறிப்போய் விழுந்தன. ஈரமாகியிருந்த செய்தித்தாளை அப்படியே வெறுப்பில் வீசி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். இப்போது கடைக்குப்போய் பால் வாங்கும் புது வேலையொன்று முளைத்தது அவனை எரிச்சல் படுத்தியது. அவள் இருக்கும்போது இரவிலேயே கதவின் கைப்பிடியில் துணிப்பையொன்றைத் தொங்க விட்டு விடுவாள். காலையில் பால்காரர் பாக்கெட்டுகளை அதிலேயே போட்டு விடுவார். சிந்தாமல் சிதறாமல் எடுத்துக்கொள்ளலாம்.

தினத்தின் ஆரம்பமே சரியில்லையே என்று நொந்து கொண்டவாறே வீட்டினுள் நுழைந்தான். குழந்தைகளை எழுப்பிப் பல் தேய்க்க அழைத்துக்கொண்டு போனான். இரண்டும் பல் தேய்த்து முடிப்பதற்குள் பாலைக் காய்ச்சி விட்டால் கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றெண்ணி, பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு வந்தான். பக்கெட் தண்ணீரை இறைத்து லூட்டியடித்துக் கொண்டிருந்த சின்னவனைச் சமாளிப்பதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. “துப்புடா.. துப்புடா..” என்று சொல்லச்சொல்ல பேஸ்டையும், கொப்பளிப்பதற்காக வாயில் ஊற்றிய தண்ணீரையும் விழுங்கிக்கொண்டிருந்தான். ஏதோ வித்தியாசமான வாசனை மூக்கைத்தாக்க, கூர்ந்து மோப்பம் பிடித்தவன், “ஐயோ.. காஸ் வாசனையாயிற்றே.. என்னாச்சோ..” என்று பதறியவாறு ஈரக்காலோடு வெளியே ஓடினான். பால் பொங்கி வழிந்து காஸ் அடுப்பை அணைத்து விட்டு மேடை வழியே தரைக்கும் இறங்கி இருந்தது.

மூத்தவள் கொஞ்சம் வளர்ந்தவளாதலால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “அப்பா,.. தம்பியை அடுக்களைப் பக்கம் வராம நான் பார்த்துக்கறேன். நீங்க இதெல்லாம் சுத்தம் செய்யுங்க. அவனைக் குளிப்பாட்டி நானும் குளிச்சுட்டு வரேன். நீங்க கவலைப்படாதீங்க.” என்று ஆதரவாக அவன் தலை கோதிச் சொல்லிச்சென்றாள். அவனுக்கு மனைவியின் ஞாபகங்கள் பொங்கிப்பொங்கி அலை மோதிக்கொண்டிருந்தன. இதற்கே இப்படியென்றால் தாயில்லாத குறை தெரியாமல் இந்தக்குழந்தைகளைச் சமாளிக்க இன்னும் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்குமோ என்று நினைக்கவும் கழிவிரக்கம் சூழ்ந்து கொள்ள அப்படியே டைனிங் டேபிளருகே நாற்காலியில் மடங்கினான்.

குளித்து முடித்து வந்த குழந்தைகளுக்கு ட்ரெஸ் செய்யும்போது ஹரீஷின் லூட்டியுடன் பிடிவாதமும் சேர்ந்து கொண்டது. “எனக்கு இந்த டெச் வாணாம் போ. அந்த பைடர்மேன் தான் வேணும்” என்றான். இது வேண்டாம், அது வேண்டாம் என்று கிட்டத்தட்ட பீரோவையே கலைத்துப்போட்டு விட்டு இறுதியில் சாயம் போன ஒரு ட்ரெஸ்ஸில் சமாதானமானான் குழந்தை. ஹாலில் இருவரையும் உட்கார வைத்து விட்டு, “செல்லங்களா,.. என்ன டிபன் சாப்பிடுறீங்க?” என்று கேட்டான், ஆப்பு காத்திருந்ததை அறியாமல்.

“நாக்கு,.. பூன வேணூம்…” கையுயர்த்தி அறிவித்தான் ஹரீஷ். ‘பூனையா.. ஐயய்யோ’ என்று கலங்கி நின்றவனைப் பார்த்து, “அப்பா, அவன் பூனை ஷேப்ல தோசை கேக்கறான்” என்று விளக்கிய மகளை, ”ஆபத்பாந்தவியே.. அனாத ரட்சகியே.” என்று கையெடுத்துக் கும்பிட வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

மகளின் உதவியுடன் செய்த டிபனை, கார்ட்டூன் சேனல்கள் உதவியுடன் ஒரு வழியாக மகனுக்கு ஊட்டி முடித்து விட்டு, போர்க்களமாகக் கிடந்த சமையலறையை ஒரு வழியாகச் சுத்தம் செய்தான். தேய்க்கப் போட்டிருந்த பாத்திரங்களைத் தண்ணீருடன் தன் கண்ணீரையும் கலந்து கழுவிச் சுத்தம் செய்து, துணியால் துடைத்து அடுக்கி நிமிர்ந்த போதுதான், தான் இன்னும் சாப்பிடவில்லை என்பதே ஞாபகத்துக்கு வந்தது. இரைந்த வயிற்றை ஒரு கப் மோரில் சமாதானப்படுத்தியபோது, காலை எட்டுமணிக்கெல்லாம் டிபன் தட்டுடன் ஆவி பறக்கும் காபியையும் நீட்டும் அந்த வளைக்கரங்களின் நினைவுகள் கன்னங்களில் உப்புக்கோடுகளாய்ப் படிந்தன.

மகள் தானாகவே தயாராகி, வாசலில் வந்து நின்ற ஸ்கூல் பஸ்ஸில் ‘பை.. ப்பா” என்றபடி ஏறிக்கொண்டாள். “ப்பா.. மீனு பாக்கணும்..” என்றவாறு வந்து நின்ற ஹரீஷைத்தூக்கிக் கொண்டு, வீட்டின் ஷோகேசிலிருந்த மீன் தொட்டியருகே சென்றான். ”ஹை.. மீனு பாரு.. எப்பி நீஞ்சுது?. ம்.. ஒனக்குப் பசிக்கலையா. ப்பா,.. மீனுக்கும் நேத்திக்கி மம்மம் தா” என்றபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். தலையை மெதுவாகத் தோளில் சாய்த்துக்கொண்ட மகனை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்தபடி பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த ஆனந்த், “ஹரீஷ்,.. நீ விளையாடிட்டிருப்பியாம். அப்பா போய் காய் வாங்கிட்டு வந்து சமைப்பேனாம். சரியா..” என்று மெதுவாக இறக்கி விட முயல, ‘நானும் வாரேன். அம்மா மாதிர்யே நீயும் கூட்டிட்டுப்போ” என்று இன்னும் இறுக்கிக்கொண்டான்.

இறங்க மறுத்த மகனை ஒரு கையிலும், சுமைகளை இன்னொரு கைகளிலுமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்குள் வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. பசிக்களைப்பு வேறு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்கு வந்ததும், அழுக்குத்துணிகளை மெஷினில் போட்டு விட்டு,

“டொண்டொடொயிங்க்… அப்பா இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் வெஜிடபிள் பிரியாணி செஞ்சு தந்து அசத்தப்போறேனே” என்று குதூகலத்துடன் அறிவித்து விட்டு, மகனை டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டுக் கதை சொன்னவாறே பிரியாணியைச் சமைக்கத் தொடங்கினான்.

என்னதான் பேச்சுலராக இருந்தபோது வகை வகையாய்ச் சமைத்திருந்தாலும், திருமணத்திற்கப்புறம், ‘இனிமே எல்லாம் உன் பாடு’ என்று மனைவியிடம் பொறுப்பைத்தள்ளி விட்டு விட்டதால் இப்போது எல்லாமே புதிதாக உணர்ந்தான். எது எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல் தடுமாறினான். ஹாலுக்கு ஓடி விட்ட குழந்தை ஹரீஷையும் சமாளித்துக் கொண்டு விரலை நறுக்கிக்கொண்டு, கையைச் சுட்டுக்கொண்டு, ஒரு வழியாகச் சமைத்து முடித்தான். முந்தின நாளே அலுவலகத்தில் லீவு சொல்லியிருந்தபடியால் இன்று அலுவலகம் போகத்தேவையில்லை. ஆனால், மறுநாளை எப்படிக் கழிக்கப்போகிறோம் என்று இப்போதே கவலை சூழ்ந்து கொண்டது அவனை. ஹாலெங்கும் இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைத்து நிமிர்ந்தவன், சோபாவிலேயே தூங்கி விட்டிருந்த ஹரீஷின் அருகில் ஆயாசத்துடன் அமர்ந்து கொண்டான்.

ஒரு பெண் இல்லையென்றால் வீடு எப்படிக் களேபரமாக ஆகி விடுகிறது என்று எண்ணும்போதே, “இங்கே ஏன் தூசியா இருக்கு?.. ஹரீஷோட பொம்மை கால்ல இடறுது. பார்த்து எடுத்து வைக்கத் தெரியாதா?. ரெண்டு வாய்ச் சாதத்தை அஞ்சு நிமிஷத்துல ஊட்டத்துப்பில்லை. சாப்பாடு ஊட்ட ஒரு மணி நேரமா?” என்று ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் மனைவியைக் கடிந்து கொண்டதும், நிற்கக்கூட விடாமல் வேலை ஏவிக்கொண்டே இருந்ததும், “வீட்ல சும்மாத்தானே இருக்கே,.. இதைச் செய்யக்கூடாதா?..” என்று அடிக்கடி குத்திக்காட்டியபடியே பாங்க், தபாலாபீஸ், டெலிபோன் எக்ஸேஞ்ச் என்று தன்னுடைய காரியங்களைச் சாதித்துக்கொண்டதும் ஏனோ இப்போது அவள் இல்லாத தனிமையில் நினைவில் வந்து இம்சித்தது. “நிழலின் அருமை வெயிலில் தெரியும்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க” என்று நினைத்துக்கொண்டான்.

ஏதேதோ நினைவுகளில் கிடந்தவனை வாயில்மணி அழைத்தது. அதற்குள்ளாகவா மகள் வந்து விட்டாள் என்று வியந்தபடி, “ட்ரெஸ் மாத்திட்டு வா,.. சாப்பிடலாம். நான் தட்டு வைக்கிறேன்” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தவனைத்தொடர்ந்தாள் மகள். “இல்லைப்பா,.. நல்ல பசி. மொதல்ல சாப்பிட்டுட்டு அப்றம் யூனிபார்ம் மாத்தறேனே.. ப்ளீஸ்” என்று கொஞ்சலாகக் கேட்ட மகளை மறுக்க மனம் வரவில்லை.

குக்கரைத் திறந்து தட்டில் பரிமாறிய தாரிணி, “ஹை.. அப்பா. இன்னிக்குப் பொங்கல் செஞ்சுருக்கீங்களா?” என்று வியந்தாள். பிரியாணி எப்படிப் பொங்கலானது என்று குழம்பினான். ‘எதுக்கும் இருக்கட்டும்ன்னு ரெண்டு கப் தண்ணீர் கூடுதலா ஊத்தினது தப்பாப்போச்சே’ என்று தன்னையே கடிந்தவன், “ஆ… ஆமாம்.. ஆமாம்.. வெஜிடபிள் மசாலா பொங்கல் செஞ்சேன். கல்யாணத்துக்கு முந்தி என் ரூம்மேட்ஸுக்கு மத்தியில் இது ரொம்ப ஃபேமஸான ரெசிப்பி தெரியுமோ!!” என்று சமாளித்தான். குழந்தைகளுக்கும் ஊட்டி, தானும் ஒரு வாய் அள்ளிப்போட்டபின் தான் உயிர் வந்தது அவனுக்கு. பகல் முழுதும் வேலை செய்த களைப்பும், உண்ட மயக்கமும் அவனைச் சற்றுப் படுத்து உறங்கச்சொன்னாலும், காய்ந்த துணிகளை அயர்ன் செய்து வைத்து விடலாமே என்று அந்த வேலையையும் முடித்தான்.

முதுகும் உடம்பின் ஒவ்வொரு கணுவும் ‘விண்.. விண்’ என்று வலிக்க “அக்கடா” என்று உட்கார்ந்தவன், “எப்படித்தான் அவள் இத்தனையையும் சமாளித்தாளோ!!..” என்று வியந்தான். “அவள் இல்லாத பொழுதுகளில்தான் அவள் எவ்வளவு பொறுப்புகளைச் சுமந்திருக்கிறாள் என்பது தெரிகிறது, முன்பே அவளைப் புரிந்து கொண்டிருந்தால் அவள் இந்த முடிவுக்குப் போயிருக்க மாட்டாளே” என்று பெண்ணின் சக்தியை, திறமைகளைக் குறைத்து மதிப்பிட்ட தன்னுடைய அறியாமையை நொந்து கொண்டான்.

“அப்பா,.. இந்த ஹோம்வொர்க்ல கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்களேன்” என்ற மகளின் குரல் அவனை நனவுலகத்துக்கு மீட்டுக்கொண்டு வந்தது. “ஐயோ.. இது வேறா?… தாங்காது சாமி” என்று மனதுக்குள் அலறியவன், “அப்பாவுக்கு ரொம்ப டயர்டா இருக்கும்மா. ப்ளீஸ்.. கொஞ்சம் பொறுத்துச் சொல்லித்தரேனே” என்றான்.

“போங்கப்பா,.. அம்மா இருந்தப்ப எவ்வளவு டயர்டா இருந்தாலும், எப்போ கேட்டாலும் ஹெல்ப் செய்வாங்க தெரியுமா?. சமைச்சுட்டே கூட பாடம் சொல்லித்தருவாங்க.” என்று சொல்லும்போதே கண்ணீர் திரையிட்டது தாரிணிக்கு.

சற்று நேரம் அமர்ந்திருந்தவன், மொபைலைக் கையிலெடுக்கவும் அழைப்பு மணி அலறியது.

யாராக இருக்கும் என்று எண்ணியபடியே கதவைத்திறந்தவன் வயிற்றில் ஆயிரம் குடம் அமிர்தம் பாய்ந்த உணர்வு.

“அதான் சொல்றேனில்லே.. பந்தயத்துல தோத்துட்டேன்னு. அப்றமும் என்ன நக்கல் சிரிப்பு வேண்டியிருக்கு..” என்று முணுமுணுத்தான்.

தர்ஷணா… அதுதான் அவன் மனைவி இன்னும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

முந்தின நாள் நடந்த வாக்குவாதத்தில் சற்று வார்த்தைகள் தடித்து விட, ”சரி,.. வீட்ல நான் சும்மா இருக்கறேன். நானில்லைன்னா இந்த வீடு ஒண்ணும் இருண்டு போயிராது. என்னை விட நல்லாப் பார்த்துப்பேன்னு என்னை பார்த்துச் சொன்னீங்கல்லே. நமக்குள்ள ஒரு பந்தயம் வெச்சுக்கலாமா?”

“என்ன பந்தயம்?.. சொல்லித்தொலை”

“நாளைக்கு முழுக்கக் குழந்தைகளையும் வீட்டையும் நான் எப்படிப் பார்த்துக்கறனோ அப்படிக் கிரமம் தவறாம நீங்க பார்த்துக்கணும். இதுல ஒரு கடமையில் தவறினாலும் நீங்க தோத்துட்டதா அர்த்தம். அப்படியில்லாம நல்லாக் கவனிச்சுக்கிட்டா நீங்க ஜெயிச்சுட்டதா அர்த்தம்.”

“தோத்தவங்களுக்கு என்ன தண்டனை?”

“கணவன் மனைவிக்கிடையே தண்டனைக்கு இடமில்லை. ஆனா பரிசுக்கு இடமிருக்கு. இதில் கிடைக்கும் அனுபவம்தான் பரிசு. ஆனாலும் ஊக்கப் பரிசா ஜெயிக்கறவங்க ஒரு வாரத்துக்கு ஹாய்யா ரெஸ்ட் எடுக்கலாம். தோத்தவங்க அந்த ஒரு வாரத்துக்கு வீட்டோட முழுப்பொறுப்பையும் சுமக்கணும், சரியா?”

கம்பெனியில் நூறு பேரை நிர்வாகம் செய்யும் தன்னுடைய திறமை மேல் அபார நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டவனுக்கு பாதி நாளிலேயே விழி பிதுங்கி விட்டது. அம்மா வீட்டிற்குச் சென்றிருக்கும் அவளை அழைத்து தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவதே சரி என்று அவன் நினைத்த வேளையில்தான் அவளே வந்து விட்டாள்.

“என்னை மன்னிச்சுக்கோ தர்ஷி,.. உன் அருமையை நல்லா உணர்ந்துட்டேன். இனிமே உன் மனசு புண்படற மாதிரி பேச மாட்டேன். ஒத்துக்கிட்டபடி இந்த வாரம் முழுக்க வீட்டுப்பொறுப்புக்கு நான் பதவியேத்துக்கறேன். என்ன செய்யணும்ன்னு ஆணையிடுங்கள் மஹாராணி” என்றபடி சலாம் செய்தான்.

“அதெல்லாம் வேணாம்.. நீங்க உணர்ந்ததே போதும். பரிசை ஆளுக்குப் பாதி பகிர்ந்துக்குவோம். கொஞ்சம் கூட மாட உதவியாயிருங்க. அது போதும்”

“அப்பா,.. ஹெல்ப் செய்யறேன்னு சொன்னீங்களே. நான் இன்னும் வீட்டுப்பாடம் முடிக்கலை” என்றபடி அம்மாவின் மடியிலிருந்து இறங்கினாள் தாரிணி.

“ஆனா,.. நான் வீட்டுப்பாடம் படிச்சிட்டேன்ம்மா”.. என்று அர்த்தபுஷ்டியுடன் மனைவியின் முகத்தைப் புன்னகையுடன் நோக்கியவாறே மகளிடம் கூறினான்.

– ஆகஸ்ட் 2012, அதீதம் இதழில் வெளியானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *