விஷச் சொட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 3,919 
 

(இதற்கு முந்தைய ‘அழகான பெண்டாட்டி’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

“வேணுகோபால் மவளை நீ கட்டிக்கிட்டா எனக்கு அவன் தம்பிமுறை ஆயிடுவானே! ரொம்பப் பெரிய விஷயமாச்சே அது. உடனே போ மாப்ளே; கல்யாணத்துக்கு மாமன் சாஸ்திரத்துக்காக எனக்குப் பட்டு வேட்டியும் ஒரு பட்டுத் துண்டும் நல்லதா பாத்து வாங்கித் தந்திரு.

மிச்சத்தை நான் பாத்துக்கிறேன். உடனே கிளம்பி இப்பவே நடையைக் கட்டிடாத. சுப்பக்கா கடையில் இருந்து சூடா கொத்துப் பரோட்டாவும் கோழி சாப்ஸும் இப்ப எடுத்திட்டு வந்திருவான். கொஞ்சநேரம் இருந்து சாப்பிட்டுப் போயிடு. மாமனைப் பாக்க வந்திட்டு அர்த்த ராத்திரியில வெறும் வயித்தோட போனேன்னு யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டு பேசிரக் கூடாது…”

“ஸாரி மாமா. இவ்வளவு ராத்திரியில எதையும் சாப்பிடற பழக்கம் எனக்குக் கிடையாது. இன்னொரு நாள் காலையிலேயோ மத்யானமோ உங்க வீட்டுக்கு வந்தே சாப்பிடறேன். இப்ப நான் கிளம்பறேன் மாமா…”

“அப்ப உன் பிரியம். நான் என்ன சொல்றது அதுக்கு மேல… நல்லபடியா மகராசனா இரு.”

ராஜாராமன் கிளம்பிச் செல்லும் ஒலி கேட்டது. நான் மலைத்துப் போய் படுத்திருந்தேன். நாச்சியப்பனின் பேச்சு என்னை அதிர்ச்சியடைய வைத்திருந்தது. ‘வைப்பாட்டி’ என்ற சொல்லால் பெண்ணையும், பெண்ணுடன் கொள்ளும் உறவுகளையும் மிக மோசமாக மலினப் படுத்திய அவரின் அலட்சியமும் அகம்பாவமும் குரூரமாகத் தோன்றியது எனக்கு. வாழ்க்கையையும் உறவுகளையும் சீலம் கெட்டதாய் திரிக்கும் நாச்சியப்பனின் ஆண் அகம்பாவம் என் மனதைக் காயப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.

இந்த மாதிரி கொச்சையான மனோபாவம் கொண்டிருப்பவர்கள் எங்கேயோ ஒன்றிரண்டு பேர்கள்தான் இருப்பார்களா; இல்லை நிறைய பேர் இப்படித்தான் இருப்பார்களா என்ற கேள்வியும் பயமும் என்னுள் எழுந்தன.

நாச்சியப்பனின் புத்திமதியைக் கேட்டுவிட்டுப் போயிருக்கும் கமலாச் சித்தியின் மகனை நினைத்துப் பார்த்தேன். இப்போதுதான் டாக்டர் படிப்பு முடிந்து வந்து உலக வாழ்க்கையில் கால் பதிக்கப் போகிற சின்னஞ்சிறு பையனாகிய அவனுக்கு, அவனைக் காட்டிலும் இரண்டு மடங்கு வயசு அதிகமான நாச்சியப்பன் என்ற மனிதன் இப்படியா ஒரு விவஸ்த்தை கெட்ட வழியை சொல்வான்?

நினைக்க நினைக்க நிஜமாகவே எனக்கு வெட்கக் கேடாக இருந்தது. நாச்சியப்பனின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு விஷச் சொட்டு. ஒரு சொட்டு விஷம் போதாதா, ஒரு குடம் பாலை நாசம் பண்ண? என் மனம் உடனே ராஜாராமனை எண்ணிப் பார்த்தது.

அவனுடைய மனதில் நாச்சியப்பனின் பேச்சு அவனின் தீர்மானங்களை மறு பரிசீலனை செய்யும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி விட்டிருக்குமோ என்ற கவலை எனக்கு வந்தது. ஒவ்வொரு நிமிடமும் அந்தக் கவலை அதிகமாகிக்கொண்டே போனது.

அனால் அதற்காக புறப்பட்டுப் போய் என் சித்தி மவனைச் சந்திக்கும் உத்வேகமும் எனக்குள் வந்து விடவில்லை. அதற்கான நெருக்கம் எனக்கு ராஜாராமனிடம் கிஞ்சித்தும் கிடையாது. ராஜாராமனிடம் மட்டும் இல்லாமல் உறவினர்கள் எல்லாரிடத்திலுமே எனக்கு உற்சாகம் குன்றிப் போயிருந்தது.

ரொம்பச் சின்ன வயதிலேயே நான் மட்டும் சென்னைக்கு வந்து விட்டதுதான் இதற்குக் காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். வாழ்க்கை பற்றியும் மனித உறவுகள் குறித்தும் திம்மராஜபுரம் வம்சாவளியினர் கொண்டிருந்த மரபு முறைகள் பலவற்றில் இருந்தும் நான் சிறிது சிறிதாக விலகி தள்ளி வந்து விட்டிருந்தேன்.

அந்த ஊரில் நிகழும் சம்பவங்களும் அனுபவங்களும் எனக்குள் என் பங்களிப்பு எதுவும் இல்லாத செய்திகளாகத்தான் பெறப் பட்டிருந்தன. என் அம்மா அப்பா அங்கே திம்மராஜபுரத்தில் இருந்ததால் அவ்வப்போது அவர்களைப் பார்ப்பதற்காக அங்கே இருந்த எங்களுடைய வீட்டிற்கு நான் போய் வந்த மாதிரிதான் அர்த்தமே தவிர அந்த ஊருக்குச் சென்றதாக அர்த்தம் கிடையாது!

அடிக்கடி என் அப்பா அம்மாவிடமிருந்த்து சென்னையில் இருக்கும் எனக்கு மொபைலில் போன்கள் வரும். எனக்குச் சொல்ல வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றும் திம்மராஜபுரத்து ஊர் விஷயங்களை அவர்கள் என்னிடம் சொல்வார்கள்.

பொதுவாக ஊரில் நடைபெறும் கல்யாணங்கள்; நிகழ்ந்த மரணங்கள் போன்ற விஷயங்களும் எனக்குத் தெரியவரும். அது தவிர, நான் ‘திக்கெட்டும் திம்மை’ என்கிற வாட்ஸ் ஆப் குருப்பிலும் என் பழைய நண்பர்கள் குழுவுடன் இருக்கிறேன். அந்த நண்பர்களில் பெரும் பாலோர் வெளியூரில்தான் இருக்கிறார்கள். பெருமாள் கோவில் கருட சேவையின் போது நாங்கள் அவ்வப்போது ஊரில் பார்த்துக் கொள்வோம். அதில் விச்சு, ஜெயஸ்ரீ, ரவி சுந்தர்ராஜன், சங்கர், மூர்த்தி போன்றவர்களின் பெற்றோர்களையும் எனக்கு நல்ல அறிமுகம் இருந்தது.

ஒருமுறை நான் என் அம்மா அப்பாவைப் பார்க்கப் போயிருந்த நேரத்தில்தான் கமலாச் சித்தியின் மகன் ராஜாராமனுக்கு நாச்சியப்பன் போதித்த உபதேசம் நேரிடையாகவே என் காதுகளில் விழ நேர்ந்தது. அவரின் உபதேசத்தில் பொதிந்திருந்த அநாகரீகம் சென்னை திரும்பி நீண்ட நாட்களாகியும் என் நெஞ்சை விஷ முள்ளாக கிழித்துக்கொண்டே இருந்தது.

உபதேசத்தைக் கேட்ட ராஜாராமன் என்ன செய்வானோ என்ற கேள்விக்கான பதில் எனக்கு ஊகிக்க முடியாததாகவே இருந்தது. மொத்த மனித வாழ்வே திகில் அடங்கிய மர்மமாய் தெரிந்து என்னைச் சிறிது அச்சப் படுத்தவும் செய்தது. கிட்டத்தட்ட இருபது தினங்கள் சென்ற பிறகும் நாச்சியப்பனின் உபதேசம் எனக்குள் புழுபோல ஊர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் என் அம்மாவிடம் இருந்து எனக்கு மொபைலில் அழைப்பு வந்தது.

கமலாச் சித்தியின் மகன் ராஜாராமனுக்கும் வேணுகோபாலனின் மூன்றாவது மகள் பொற்கொடிக்கும் திருமணம் செய்வதாய் பெரியவர்கள் பூ வைத்து வெற்றிலைப் பாக்கு மாற்றி உறுதி பேசிவிட்டார்கள் என்று அம்மா சொன்னாள். நிச்சயதார்த்தம் ஐப்பசி மாதமாம். தை மாதம் கல்யாணம். உடனே என் மனதில் நாச்சியப்பனின் முகம் தெரிந்தது.

சூது ஒன்று வெற்றி பெற்றுவிட்ட மாதிரியான துயர அலைகள் எனக்குள் எழும்பின…. வேணுகோபாலின் மகளைக் கல்யாணம் செய்துகொள்வதற்கு விருப்பம் இல்லாமலேயே இருந்த ராஜாராமன் மனசு மாறி அந்தப் பெண்ணையே மணந்துகொள்ள முன் வந்ததற்கு நாச்சியப்பனின் உபதேசம்தான் காரணமா? அது எனக்குத் தெரியாது. அதைத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை தெரிந்து கொள்வதற்கான முயற்சிகளிலும் நான் ஈடு படவில்லை.

அந்தப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. பின் எதற்காக அதைத் திறந்து பார்க்க வேண்டும்.? தெரிந்த பிறகும் திறந்து பார்த்து அவல உணர்வுக்கு உள்ளாவதற்கு நான் தயார் இல்லை…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *