விழியின் விதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 7,151 
 

கலைஞனுக்கு முதல் ரசிகன் வெளியில் இல்லை, அவனுக்குள் இருக்கிறான். கல்லூரி கவின்கலை விழாவில் பாடிக்கொண்டு இருக்கும் மைதிலி அதை உணர்ந்து பாடினாள்.

காற்று அங்கு நின்று ரசிக்க தொடங்கியதில், இசை தேன்சாரல் அங்கு வீசிக்கொண்டு இருந்தது.

வெளியே பாடகியாய், உள்ளே ரசிகையாய் இருபெரும் உள்ளத்தில் இயங்கிக்கொண்டு இருந்த மைதிலி கூட்டத்தை கவனிக்கவில்லை.

பாட்டால் அவளும், அவளால் பாடலும் மலர்ந்ததில், அந்த கல்லூரி அரங்கம் இசைச்சோலையாகி பார்வையாளர்களை வண்டுகளாக்கியது.

வானத்தில் இருந்து இறங்கும் கண்ணுக்கு தெரியாத இசை தந்திகளாலான மாபெரும் வீணையாகி இருந்தாள் மைதிலி. பாட்டிசை அவள் அங்கம் முழுவதும் நிறம்பி வழிவதாக இருந்தது. மேடையே கலைவாணியாகி மைதிலி என்னும் வீணையை மீட்டுகின்றாளோ அங்கு!

கனத்த மௌனத்தில் அந்த அரங்கம் நிறைந்து, காற்றுகூட அங்கு திடமாகி மூச்சுவிட்டது.

மைதிலி பாடிமுடித்து சபையைப் பார்த்தாள். இசை பயணம் முடிவடைய செவி மூடிக்கொண்டதில் விழி திறந்த அரங்கம் மைதிலியைப் பார்த்தது. அரங்கம் கரஓசையால் தன் சிறகுகளை விரிக்க, வானம் முதன்முதலில் பூமியில் இடியோசையை கண்டது.

எழுந்து நன்றி சொல்ல கைகுவித்தாள் மைதிலி, குவித்த கைகளுக்கு இடையில் கூட்டத்தில் அவன் தெரிந்தான். கள்வன் அதுவும் வழிபோக்கன் எப்படி அங்கு? பெரிய குவளையில் இருக்கும் தண்ணீரை குனிந்து இரு கைகளாலும் அள்ளி முகத்தில் அடிக்கும்போது கழுத்தை பிடித்து குவளைக்குள் மூச்சு திணற திணற அழுத்தினால் எப்படி இருக்கும் அப்படி இருந்தது மைதிலிக்கு. குவிந்த கை குவிந்தப்படியே இருக்க அப்படியே மயங்கி மேடையில் விழுந்தாள். கண்ணீர் கன்னத்தில் வழிந்து மேடையை நனைத்தது. அரங்கத்தில் உட்கார்ந்து இருந்த அத்தனைபேரும் எழுந்து மேடைக்கு ஓடிவந்தார்கள். அவன் மட்டும் தலை குனிந்தபடியே மெதுவாக வெளியேறினான்.

***

அம்பாளைப் பார்த்திருக்கிறீர்களா? பார்க்காவிட்டாள் முதலில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். எந்நாட்டுக்கும் இறைவனாக இருக்கும் தென்னாடு உடையசிவன் கோயிலுக்குப்போய் பாருங்கள்.

பார்த்த மாத்திரத்தில் இந்த புவனம் முழுவதையும் தான்தான் ஈன்றேன் என்ற கம்பீரத்தோடு கண்களில் நிறைவாள் அன்னை. அன்பு ததும்பும் வதனமும், கருணை பொழியும் விழிகளும், புன்னகை பூக்கும் அதரங்களும், மெல்ல மெல்ல புலப்படுகையில் ‘இன்னும் நான் குழந்தை, தூக்கிக் கொஞ்சுங்கள்’ என்று அருள்பாலிப்பாள் அன்னை பெரியநாயகி.

ஏன் இதை சொல்கிறேன்?. நம்ம மைதிலி, சென்ற ஆண்டு கல்லூரி கவின்கலை ஆண்டுவிழாவிற்கு வந்தபோது எப்படி இருந்தாள் என்பதை பார்த்தால் அது புரியும்.

மைதிலியின் அலங்காரத்தை பார்க்கபோவதற்கு முன்பு அம்பாளை பார்த்துவிட்டால் கண்முன்னே தோன்றும் உவமையும், உவமேயமும் ஒன்றுக்குள் ஒன்று ஒளிர்வதை அறியலாம். அதற்காக சொன்னேன்.

மைதிலியின் அலங்காரத்தை நீங்கள் பார்க்கையில் காலங்களை கடந்த இந்த கிழவி யார் என்ற எண்ணம் தோன்றும்போதே, இந்த வயதுக்கு வந்த குழந்தையோ என்ற எண்ணமும் தோன்றாமல் போகாது. அப்படி ஒரு பால்வடியும் முகம் அவளுக்கு. அவள் வதனமும் மன்னர்கால அலங்காரமும் நம்மை முன்னுக்கு பின் இழுத்து மூச்சு திணற வைக்கும். அலங்காரத்தால் நிகழ்காலத்தை இறந்த காலமாக்குகிறாள். வதனத்தால் வடிவால் பிறந்த காலத்தை நிகழ்காலத்திற்கு இழுத்து உலவ விடுகிறாள்.

பாதங்கள் மறைக்காத பச்சை பட்டுப்பாவாடை, அதில் ஒரு ஜான் அளவுக்கு தங்கசரிகையின் உயிர் ததும்பும் ஜொலிப்புகள். அதற்குமேல் முகத்திற்கு முகம் பார்க்கும் இணைமயில்களின் தொடர் வட்டம். மைதிலி நடக்கும்போதெல்லாம் அவைகள் அவள் பாதத்தை சுற்றி சுற்றி முன்னொரு வட்டமும், பின்னொரு வட்டம் சுற்றி ஆடும். அப்படி ஒரு ஆட்டத்தை பெண்கள் கும்மி கொட்டும்போது பார்க்கலாம்.

கும்மி கொட்டுவதில் பல வகை உண்டு அதில் ஒன்று எல்லோர் தலைகளும் உள் வட்டத்திற்குள் வரும்போது குனிந்து கைகளை தரைதொட தொங்கவிட்டு ஒரு கொட்டும். அடுத்த அடி நகர்ந்து அப்படியே வலது புறமாக எல்லோரும் திரும்புகையில் எல்லோருடைய பின்னழகும் உள்வட்டத்திற்குள் வரும்போது குனிந்து தரைதொட ஒரு கொட்டும், கொட்டுகின்ற கும்மி ஒன்று உண்டு, அந்த கும்மி கொட்டையில் பார்த்தால் கும்மி கொட்டுகின்ற பெண்கள் அனைவருமே மயில்போல தோன்றுவார்கள். மைதிலி நடக்கையில் அதுபோன்று வட்டம் அடிக்கும் அந்த பாவாடை சித்திர மயில்கள்.

பெண்களே மயில்தானே! பெண்கள் மயில்மட்டும் அல்ல ஓவ்வொரு செயலின்போதும் ஒவ்வொரு அதிசயம் பெண்ணுக்குள் இருந்து வெளிப்படும். பெண்ணே சிதம்பரம் சிவகாமசுந்தரி, பெண்ணே தில்லைமாகாளி. பெண்ணால்தான் இந்த பூமி நிறைந்திருக்கிறது,நிறைகிறது, நிறையும், எனவே உலகில் உள்ள எல்லா ஜீவனாகவும் பெண் தோற்றம் அளித்துக்கொண்டுதான் இருக்கிறாள். அவள் சக்தி

எது உயிர் மயில்? அவளா? அவள் பாவாடை சரிகை மயிலா?. பாவாடை சுற்றும்போது அவள் சிலைபோல் தெரிவாள். பாவாடை சுற்றி நிற்கும் அந்த கணத்தில் அவள் பாவாடை மயில் சித்திரமாக தெரியும்.

புல்வெளியில் சிந்திய நெருஞ்சி மலர்போல் மயில்களுக்குமேல் தங்க சரிகை புட்டாக்கள் அவள் பாவாடை முழுவதும் பூத்து சிரித்தன. அதே பட்டில் சட்டை, கையின் கெண்டை சதையை இறுக்கி பிடித்திருந்த சட்டை கைகளில் உட்கார்ந்து இருந்த மயில்கள் அவள் முகம் பார்த்தன. அவள் கைளில் இருந்த மயில்கள் எல்லாம் ஒரே நேரத்தில் உயர பறந்தால் அவளும் பறந்துவிடுவாளோ என்கின்ற அளவுக்கு அழகு கொடி அவள். அழகால் கொல்வதால் கொடியவளும்கூட.

ரோஜாவில் வண்ணம் எடுத்து கண்ணாடி இழைகளில் தோய்த்து செய்த தாவணியோ அது? அவள் பாவாடை சட்டையை இன்னும் கொஞ்சம் பளிச்சென்று காட்டியது. இதோடு நிறுத்தி இருந்தால் அவள் தேவதை மட்டும்தான். அவள் அன்று அணிந்து இருந்தது அவள் பாட்டியம்மாவின் அம்மா அணிந்திருந்த காசுமாலை. அதுதான் அவளை யுகங்களை கடந்த கிழவியாகவும், வயதுக்கு வந்த குழந்தையாகவும் காட்டியது.

மைதிலியின் முன்னழகையும், பின்னழகையும் பார்த்துவிட்டு சதையில் சிற்பும் செதுக்கும் சிற்பி யார் என்று கேட்டால் நான் என்ன சொல்ல? அவளின் பெற்றோர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.

இப்படி ஒரு கோலத்தில் அவள் கல்லூரி கவின் கலை கழக ஆண்டுவிழாவிற்கு வருவாள் என்று யாரால் நினைக்கமுடியும். அவள் அப்படி நினைத்துவிட்டாள். வந்துவிட்டாள். மாணவர்கள் மனதில் மட்டும்மல்ல ஆசிரியர்கள் மனதிலும் ‘எந்த கோயில் அம்மன் இது’ என்று ஒரு மின்னல் மின்னிதான் மறைந்தது.

மைதிலி கல்லூரிக்கு வந்த முதல்நாள் தாவணியில் இருந்தாள். மூத்த மாணவர்களின் அறிமுக அடாவடியில், பாவிப்பயல்கள் பெண்கள் பக்கமாகவே பெயர்கேட்க போவார்கள், ஆண்கள் பக்கம் திரும்பி மூதாதையர்களின் உலகத்தை பார்ப்பதுபோல கண்டும் காணாமல் பார்த்துவிட்டுப் போவார்கள். ஆண்கள் எல்லாம் குனிந்து எங்கே தங்களின் வால் இருக்கைக்கு கீழே தொங்குகின்றதோ என்று பார்த்துக்கொள்ளவேண்டும்.

பாவம் முதல்நாள் கல்லூரி வரும் பெண் ஜென்மங்கள,; அண்ணனிடம்கூட அதிகம் பேசி பழகி இருக்காதுகள் அவைகள். முதல்நாள் அதுகளுக்கு சுரம்வந்துவிடும், பெயர் சொல்லிச்சொல்லியே தொண்டை காய்ந்துவிடும், ஆதாம் ஏவாளுக்கு பிறந்த பிள்ளைகளில் எந்த தலைமுறையில் முதன்முதலில் பெயர் வைக்க தொடங்கினார்களோ? யார் முதலில் பெயர் வைத்தார்களோ? யார் முதல் பெயர் பெற்றார்களோ? அவர்களின் குரல்வளையை கடித்து இரத்தம் குடித்து தொண்டையை நனைத்துக்கொள்ள நினைப்பார்கள். இந்த பெயரை தனக்கு ஏன் வைத்தார்கள் என்று வெந்து, நொந்து நூலானவர்களும்; உண்டு. அப்படி இந்த கலாட்டாவில் சுரம் வராத ஜீவன்கள் இருந்தால் அவைகள் எதையும் தாங்கும் இதயங்கள்தான்.

மைதிலியை பார்த்து முதன் முதலில் தாயே! கற்பகாம்பா என்ற குரல் கொடுத்தவன் குரல் இன்று காய்ந்துவிட்டது. அவனை துவைத்து காயவைக்கவேண்டும் என்றுதான் இப்படி யுகங்களை கடந்த அலங்காரத்துடன் கிளம்பினாள். காயவைத்துவிட்டாள். அதற்கான யுத்த களம்தான் கவின்கலைகழக மேடை.

ஒரு கிளியையும் அவள் கையில் கொடுத்து மதுரைக்கு அனுப்பினால் ஸ்ரீசொக்கநாதர் ஆடிவிடுவார்..ஊகும்.ஊகும்…ஆடுகின்ற ஆட்டத்தை நிறுத்தி விட்டு ‘யார் இந்த சின்ன மீனாட்சி?’ என்று புன்னகைப்பார். அவரே நக்கன்தானே.

***

கல்லூரி முடிந்து நகரபேருந்தில் வீட்டுக்கு திரும்பினாள் மைதிலி. மணல்வீடு பார்த்துக்கொண்டு இருக்கும்போதே விழுந்து சிதைந்து மணலோடு மணலாகிவிடுவதுபோல் மைதிலிப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே தன் குழந்தையை மார்போடு அணைத்து சாலையில் நின்று கொண்டு இருந்த அந்த தாய் மயங்கி விழுந்து தரையோடு தரையாகிவிட்டாள்.

மஞ்சள் பூவில் இரண்டு இதழ்கள் மட்டும் ரோஜாவின் இதழ்களாக எப்படி இருக்கமுடியும்? அந்த குழந்தையின் மஞ்சல் முகத்தையும் சிவந்த இதழையும், அதில் பூக்கும் குமின் சிரிப்பையும் மைதிலி தன்னை மறந்து பார்த்;துக்கொண்டு இருந்தபோதுதான் அந்த தாய் மயங்கி விழுந்தாள்.

நகர்ந்து கொண்டு இருந்த நகரபேருந்தில் இருந்துதான் மைதிலி அந்த குழந்தையையும் தாயையும் பார்த்தாள். இது நகரிலிருந்து கிராமத்திற்கு நகரும் நகரப்பேருந்து. அந்த தாயும் குழந்தையும் மட்டும்தான் அந்த இடத்தில். யாருக்காகவோ காத்திருப்பதுபோல தெரியவில்லை, ஏதோ காத்திருக்கும்படி நட்ட நடுவழியில் அவளை நிறுத்திவிட்டது. தான் விழப்போகிறோம் என்பதை தெரிந்து கொண்டுதான் அவள் அங்கு நின்றாளா? தெரிந்து இருந்தாள் அமர்ந்திருப்பாள், குழந்தையை கீழே இறக்கி வைத்திருப்பாள்.

தெரிந்த பின்பு எது நடந்தாலும், இடியே விழுந்தாலும் தூசு விழுந்ததுபோலத்தான். தெரியாதவரை மௌனம்கூட இடியோல ‘தடக்…தடக்’ இதயம் சும்மா அதிருமில்ல.

தாயின் மார்பு சூட்டில் குளிர்காய்ந்து கொண்டு இருந்த அந்த குழந்தையை பேருந்தில் இருந்து பார்ப்பதற்கு தூளியில் இருக்கும் குழந்தையை குனிந்து பார்ப்பதுபோல் இருந்தது, அத்தனை அழகு காட்சி. மைதிலி தன்னை மறந்து ரசிக்கத்தொடங்கினாள். எல்லா குழந்தைகளுமே குழந்தைகளாக இருக்கும்போது சந்தோஷத்தை மட்டுமே பரிசளிக்கின்றன, வளர்ந்தபின்புதான் பரிசுகள் சந்தோஷம் தருகின்றன. மைதிலி அந்த குழந்தை தரும் சந்தோஷபரிசில் சந்தோஷப்பட்டுக்கொண்டு இருக்கும்போதுதான் அந்த தாய் மயங்கி விழுந்தாள்.

‘ஐயோ’ என்று கத்திவிட்டாள் மைதிலி.

பிரேக் பிடித்திருந்தால்கூட அந்த பேருந்து அங்கே அப்படி நின்று இருக்காது. மைதிலிப்போட்ட சத்தத்தில் நின்று விட்டது.

அது என்ன சாபமோ தமிழ்குலத்துக்கு மட்டும். காப்பதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தால், காட்டிக்கொடுக்க எட்டையப்பனும் பிறந்துவிடுகிறான். காப்பதற்கு கேப்டன் பிரபாகரன் பிறந்தால் காட்டிக்கொடுக்க கருணாவும் பிறந்துவிடுகிறான். ஆனால் அதை எல்லாம் தாண்டிதான் தமிழ் இனம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்கர்களின் ஓற்றுமை மட்டும் அதிசய தக்கவிதத்தில் அற்புதமாகத்தான் இருக்கிறது. சீன, இந்திய யுத்தமாக இருந்தாலும், கார்கில் யுத்தமாக இருந்தாலும், சுனாமி பேரழிவாக இருந்தாலும் தமிழன் ஓற்றுமையை உலகறிய வைத்துவிடுகிறான். அப்படித்தான் அன்று ஒருவன் பேருந்தை நிறுத்தக்கூடாது என்று கத்த..கத்த கேட்காமல், அந்த பேருந்தில் இருந்த மற்ற அனைவரும் ஓடிப்போய் அந்த தாயை தூக்கிக்கொண்டு வந்து பேருந்தில் வைத்து, பேருந்தை நேராக அரசு மருத்துவ மனைக்கு விட்டார்கள்.

அந்த தாய் பிழைத்து எழுந்தாள். மைதிலி மயங்கி விழுந்தாள். ஆம்… மைதிலி அன்று அணிந்திருந்த 25 பவுன் காசுமாலையை, 150வருட பாரம்பரிய குடும்பநகையை, குடும்பத்தின் வணக்கத்துக்குரிய நினைவு சின்னத்தை யாரோ அறுத்துப்போய் விட்டார்கள். அது நகை மட்டும் இல்லை உறவுகளின் சங்கமம்.

அணியும்போதே அம்மா வேண்டாம் வேண்டாம் என்று கெஞ்சி, கொஞ்சி, கோபப்பட்டும் தோற்றுப்போனாள். இனி வீட்டில் நுழைய முடியுமா?

‘ஒரு வீட்டில் போயி வாழபோற பொண்ணு ஆக்க கத்துக்கிட்டமா? கூட்ட கத்துக்கிட்டமா என்று இல்லாமல் இப்படி பொழுதேறிக்கும் ஏதாவது படம் வரைஞ்சிகிட்டு இருந்தாபோதுமா?’ என்று அம்மா திட்டத்திட்ட கேக்காமல் படம் வரைய கத்துக்கொண்டது சரியான நேரத்தில் பயன் பட்டது.

மைதிலி பேருந்தில் ஏறியதில் இருந்து வைத்த கண் எடுக்காமல் அவள் காசிமாலையையே பார்த்துக்கொண்டு இருந்தவனை கலா ரசிகன் என்றுதான் மைதிலி நினைத்திருந்தாள். அவள் கற்பனையில் திருடர்கள் எல்லாம் தனி சாதி, பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருப்பவர்கள். பாவம் அவள் என்ன செய்வாள். பால் அறிவாள், கள் அறிந்தாள் இல்லை. பின் எப்படி பால்போல் கள்ளும் உண்டு என்று கண்டு கொள்வாள்.

கடித்து விஷம்ஏறி இறந்தபின்புதான் அது பாம்பு என்று நம்புகின்ற சாதிஅவள். அதுவரை அது கயிறு என்றுதான் சொல்வாள்.

காசுமாலையை கண்டுபிடிப்பதற்கு அந்த கள்வனை புகைப்படம் எடுத்ததுபோல் படமாக வரைந்து எடுத்து வந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாள்.

சும்மா சொன்னாவே பிடித்துப்போட்டு முட்டிய பேக்கும் காவலர்கள், படமும் வரைந்து கொண்டு வந்து கொடுத்தால் சும்மா விடுவார்களா?

ஓவ்வொரு அடி அவன்மீது விழும்போதும் மைதிலி துடித்துவிட்டாள். தமிழக காவலர்கள் அப்படி அடிப்பார்கள் என்பதை அவள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டாள். அரை குறையாக கேள்விப்பட்டிருக்கிறாள். கண்ணால் பார்க்கும்போது மலை கவிழ்ந்து அவள்மேல் விழுகையில் அவள் ஒரு புழுவாக மாறிவிட்டதுபோல் துடித்தாள். இப்படி ஒரு கொடூரமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று தெரிந்து இருந்தால் அவனை காட்டிக்கொடுத்து இருக்கமாட்டாள். அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்படியே போனால் அதில் ரத்தம்கூட வந்துவிடும்.

இன்பம் நினைவுகளில் ஏற்படுத்தும் பரவசத்தை அனுபவிக்கும்போது ஏற்படுத்துவதில்லை, மாறாக துன்பம் நினைவுகளில் ஏற்படுத்தும் துயரத்தைவிட மலையளவு துயரத்தை அனுபவிக்கும்போது ஏற்படுத்தி விடுகிறது.

அவன் திருடன் அவன் தண்டிக்கப்படவேண்டும் என்று நினைத்தபோது, அவன் இவ்வளவு கொடுமையாக தண்டிக்கப்படுவான் என்பதை அவள் உணர்ந்தவள் இல்லை. உண்மைகள் எல்லாம் உணர்தலுக்குள் வந்துவிடுமா என்ன?

தரை தீயாக மாறி சுடுவதுபோல் இருந்தது அந்த காவல் நிலையத்தில் நிற்பது. நொடிக்கொரு தரம் கால்களை மாற்றி மாற்றி வைத்து நின்றாள். இல்லை…இல்லை.. தவித்தாள்.

அவன்போடும் மரண ஓலத்தை காது கொடுத்து கேட்பதிலேயே இவள் செத்துப்போய்விடுவாள்போல் இருந்தது. புகார் கொடுத்த அவளே அவனை விட்டுவிடுங்கள் என்று கெஞ்ச ஆரம்பித்துவிட்டாள்.

இருபத்தைந்து பவுன் காசுமாலை போனால் போகின்றது. பவுன்போய்விட்டதே என்பதற்காகமட்டும் அவள் புகார் கொடுக்க வரவில்லை, அதனோடு சேர்ந்து ஒரு பாரம்பரியம், நினைவு, வரலாறு, போய்விட்டதே என்று ஆத்திரத்தில்தான் புகார் கொடுத்தாள். எதைவிடவும் ஒரு உயிர் பெரிது என்பதால் அவனை விட்டுவிட கெஞ்சினாள்.

இவன் புதிய திருடனோ? முதன் முதலாக திருடியவனோ? அவன் கதறல் கல்லையே கரைப்பதாக இருந்தது. மாவு தாங்குமா? மைதிலி மனம் மாவினும் மென்மை. அதுவும் மைதா மாவு.

மைதிலி காணமல் போனது தன் காசு மாலை என்பதையே மறந்து விட்டாள். தான்தான் அவனைக்காட்டிக் கொடுத்தது என்ற நினைவழிந்து போய்விட்டாள். எப்படியாவது அவனை காப்பாற்றினால்போதும் என்ற தவிப்பு மட்டும்தான் அவள் நெஞ்சில் இப்போது.

அவனும் திருட்டை ஒத்துக்கொள்வதாக இல்லை, ஒவ்வொரு அடிவிழும்போதும் மரண ஓலத்தின் நடுவிலே இல்லை என்றே மறுத்தான்.

அவள் கெஞ்சல் பலித்ததோ? காவலர்களின் கழி முறிந்தது? இரத்தம் துடைத்த திசு காகிதமாக வந்து அவள் காலடியில் விழுந்தான். தட்டுத்தடுமாறி எழுந்தான். அவள் மனம் முறிந்து விழுந்ததை அவள் மட்டுமே அறிந்தாள்.

கொடுத்த புகாரை திருப்பி வாங்கிக்கொண்டு அவள் காவல் நிலைத்தை விட்டு வெளியே வந்தாள். கூட இருந்த அவள் அப்பாவின் கண்களும் கசிந்துதான் இருந்தது. அவனை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனாள். அவள் கண்களில் எரிந்த ‘திருடிட்டியேடா பாவி’ என்கின்ற அக்கினி குளிர்ந்து ‘மன்னிச்சிடு..மன்னிச்சிடு’ என்கின்ற நீர் திவளையாக சொட்டிக்கொண்டே இருந்தது.

இவன் திருடன் இல்லையோ? தப்பு செய்துவிட்டோமோ? என்று மைதிலி நினைக்கும்தோறும் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது.

மைதிலி கண்விழித்தபோது மருத்துவமனையில் கிடந்தாள், கிளையில் இருந்து கழன்ற பூ காயும் துணியில் விழுந்ததுபோல் கிடந்தாள் அந்த படுக்கையில். பெற்றவர்களின் கண்ணீர் வயிற்றின் மேல் இருந்த அவள் கைகளை நினைத்தது. அறையில் நின்றிருந்த தோழர் தோழியரின் முகங்கள் மகிழ்சியில் பூத்தது.

மைதியிலின் விழிகள் மட்டும் அவனைத்தேடியது. அவன் வாசலுக்கு வெளியே நின்று ஜன்னல் வழியாக அவளைப் பார்த்தான்.

மைதிலி விழிகளால் அவனை உள்ளே அழைத்தாள். ‘என்னைத்தெரியுதா?..நல்லா இருக்கியா?, போலீஸ்காரங்க அவ்வளவு அடிப்பாங்கன்னு நான் நினைக்கல, என்னை மன்னிச்சுடு’ என்றாள் வாடிய கொடியின் சலசலப்புபோல இசையில்லாமல். அவள் விழிகளின் முத்து அருவி மீண்டும் சிந்தியது.

இழந்தவனின் சுமை கண்ணீரின் அளவுதான். எடுத்தவனுக்கு சுமை உயிரின் அளவு. அவன் உள்ளுக்குள் ஒரு பூகம்பத்தை அனுபவித்துவிட்டு வெளியில் கல்போல் நின்றான்.

அவன் தலை கவிழ்ந்து இருந்தது.மௌனமாய் நின்றான். ‘சரி…கிளம்புறேன்…’ என்பதற்கு அடையாளமாய் தலையை இடவலமாக சற்று அசைத்துவிட்டு விடுவிடுவென்று வெளியேறிவிட்டான்.

எதுவும் புரியாத நண்பர்களும், நம்பிகளும் மைதிலியையும், அவனையும் மாறி மாறி பார்த்தார்கள்.

‘ ஏதாவது உதவி வேண்டும் என்றால் மறக்காம வா’ என்றாள் போய் கொண்டு இருக்கும் அவன் முதுகைப் பார்த்தபடி. இவள் திருடன் என்று நினைத்த நாளில் அவன் வடிவும்..வீம்பும் கலந்து இருந்தான். இன்று உழைக்;கும் நாளில் எளிமையும்…பணிவும் கலந்து இருக்கிறான். உழைக்கும் கலை அவன் முகத்தில், உடம்பில் தெரிந்தது. தொழில் மனிதனை மாற்றுகிறதா? மாற்றம் வந்தபின்பு மனிதன் தொழிலை மாற்றுகிறானா? மைதிலி அவன் முதுகை பார்த்தப்படியே எழுந்து படுக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

எல்லோரும் விடைப்பெற்ற பின்பு, அப்பா சாப்பாடு வாங்கிவர கடைத்தெருவுக்கு சென்றார். அம்மா வெந்நீர் எடுத்துவர செவிலியர் அறைக்கு சென்றார். மைதிலி படுக்கையை விட்டு எழுந்து அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக அவன் நினைவோடு நடந்தாள். கட்டிலுக்கும்கீழே பாலீத்தீன் பையில் சுற்றப்பட்ட காகிதம் அவள் கண்களை இழுத்து அவள் நடையை நிறுத்தியது.

மைதிலி காகிதத்தைப் பிரித்தாள். காசிமாலையின் அடகு ரசிது. அதனோடு பென்சிலால் எழுதிய கடிதம். எழுத்துக்கள் மணிமணியாய் கண்ணை கவர்ந்தன.

‘நான் கண்ணீர் காணதவன் இல்லை, நான் கண்ட கண்ணீர் எல்லாம் உப்பும், தப்பும் நிறைந்ததுதான். முதன் முறையாக கண்ணீரை தீயாய், மருந்தாய், மலராய், அமுதாய் கண்டேன். அது உன் கண்ணீர்.

அடுத்தவருக்காக அழும்போது தண்ணீராய் இருக்கும் கண்ணீர் அமுதாகுமோ? அறிந்துக்கொண்டேன். நீ அழக்கூடாது உன் கண்ணீர் மண்ணில் விழுவதற்காக அல்ல மனங்களில் விழவேண்டியது.

கள்வர்கள் பிச்சைப்போடுவார்கள், ஒருபோதும் பிச்சை எடுப்பது இல்லை. நான் பிச்சைக்கேட்கிறேன்…… உனது காசுமாலையை திருப்பிக்கொள், அதற்கான பணத்தை எனக்கு பிச்சைப்போட்டதாக நினைத்துக்கொள். நான் வான்மீகி ஆகவேண்டாம். ஒரு மனிதன் ஆனால்போதும். உன் கண்ணீரால் நான் முளைக்க ஆரம்பித்துவிட்டேன் மனிதனாய்.

உங்கள் குடும்பத்தின் பாரம்பரிய நினைவு சின்னத்தை, வரலாற்றை, உறவுகளின் அறுபடாத தொடர்மாலையை திருப்பித்தந்த சந்தோஷத்தோடு செல்கிறேன். உன்னை நேரில் பார்த்து மன்னிப்பு கேட்டு கொடுத்துவிட்டு செல்லத்தான் வந்தேன். உனது இன்றைய நிலைக்கும் நான்தான் காரணம் என்னை மன்னித்துவிடு’

கடிதம் நின்று விட்டது. ஆனால், அவன் மட்டும் அவளுக்குள் நடந்து கொண்டே இருந்தான்.

– மார்ச்-30-2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *