கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 15,692 
 
 

பன்னிரண்டு மணி வெய்யில் வானத்தின் உச்சியில் ஏறி உட்கார்ந்திருந்தது. உடம்பு முழுக்க பொத்துக்கொண்டு ரத்தமெல்லாம் உப்பு நீராய் வெளிப்பட்டு வழிவதுபோல தோல் பரப்பெங்கும் வியர்வை எரிச்சலுண்டாக்கியது. நெடுஞ்சாலையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தன. பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தில் ஒற்றிக்கொண்டான் சரவணன். அந்தச் சிறிய கர்சீப் நன்றாக நனைந்து கசங்கிச் சுருண்டிருந்தது. அதை மீண்டும் பாக்கெட்டினுள் திணித்தபடி, சற்றே பின்நகர்ந்து நிழலில் நின்றுகொண்டான். அவன் கையில், ‘எரிபொருள் சிக்கனம், தேவை இக்கணம்’ என்று கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்ட ஒரு அறிவிப்புப் பலகை இருந்தது. எல்.ஐ.சி விளம்பரத்தில் வருவதுபோல் இரண்டு கைகள் மேலும் கீழுமாய் இருந்து ஒரு திரவத் துளியைப் பொத்தி வைத்துப் பாதுகாக்கும்படியான ஒரு அழகிய ஓவியமும் அந்த அறிவிப்புப் பலகையில் வரையப்பட்டிருந்தது. பார்க்கிறவர்களை சட்டென்று கவரும்படியான விளம்பர உத்திதான், என்றாலும் பெரும்பாலானோர் இதை ஒரு சமூக சேவை அறிவிப்பாகமட்டும் எண்ணிக்கொண்டு, வண்டியை விரட்டிப் போய்க்கொண்டிருந்தார்கள்.

”அண்ணன்மாரே! ஐயாமாரே! நான் பொதுநலவாதி இல்லை. மற்றவர்களின் நலன் கருதி சிந்திப்பதற்கான வசதியோ, வாய்ப்போ எனக்கு இதுவரை ஏற்படவில்லை. இனிமேலும் ஏற்படுமா தெரியவில்லை. என் கையில் இருப்பது முற்றிலும் சுயநலமான விளம்பரப் பலகை. இன்னொரு கையில் நான் அடுக்கிவைத்திருக்கிற வண்ணமயமான பெட்டிகளைப் பார்த்தீர்களானால் புரியும். மேலாக இருக்கிற சிறிய பெட்டியினுள் ஒரு அற்புதக் கருவி இருக்கிறது. அதை உங்கள் பைக்கின் பெட்ரோல் டாங்குகளின் வெளிப்புறமாய்ப் பொருத்திவிட்டீர்களானால், குறைந்த பெட்ரோலில் அதிக தூரத்தைக் கடக்கலாம். வண்டியின் மைலேஜை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகரித்துத் தருகிற இந்த மாயக் கருவியால், நீங்கள் மாதத்துக்கு ஐம்பதிலிருந்து நூறு ரூபாய்வரை மிச்சம் பிடிக்கலாம். இந்தக் கருவியின் விலை வெறும் இருநூற்று முப்பது ரூபாய்தான். கம்பெனி விளம்பரத்துக்காக, இதில் ஐம்பது சதவீதம் தள்ளுபடியும் தருகிறோம். நானே சரியானபடி பொருத்தித் தருகிறேன்.

அதன்கீழ் இருக்கிற இன்னொரு பெட்டியை உங்கள் மனைவி ரொம்பவும் விரும்புவார்கள். கேஸ் அடுப்பில் இதைப் பொருத்திக் கொண்டால், நாற்பத்தைந்து நாள்கள் வருகிற சிலிண்டர், இனிமேல் அறுபது நாள்கள்வரை நீடிக்கும். கார்களில் கேஸ் சிலிண்டர்கள் பொருத்தியிருப்பவர்களுக்கும் இந்த உபகரணம் பயன்படும். இத்தனையும் வெறும் நூற்றைம்பதே ரூபாய்!

எங்கள் உபகரணங்கள் எல்லாவற்றுக்கும் இரண்டு வருட உத்திரவாதம் உண்டு. இது ஏமாற்று விற்பனை இல்லை, அச்சடித்த ரசீது கொடுக்கிறோம். ஒரு நிமிடம் என்னெதிரே நில்லுங்கள். நான் விளக்கிச் சொல்வதைக் கேளுங்கள். அதன்பின் நிச்சயம் வாங்காமல் செல்ல மாட்டீர்கள்.” இந்த வாசகங்கள் சரவணனின் மனதில் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தன.

பல மணிநேரமாய் பார்த்துச் சலித்திருந்த நெடுஞ்சாலையை மீண்டும் ஒருமுறை நோட்ட மிட்டான் சரவணன். ஒரு வாகனமாவது நின்று போகிறதா? வயிற்றுக்குள் கரமுரவென்று ஏதோ சப்தம். பசிக்கிறது. ஒரு டீயும், பிஸ்கட்டுமாவது உள்ளே செலுத்தினால்தான் இந்த வெய்யிலுக்கு மயக்கம் போட்டுவிடாமல் நிற்கமுடியும். அவன் கால்களை லேசாய் உதறிக்கொண்டபடி ரோட்டின் மறுமுனையிலிருந்த பெட்டிக்கடையைப் பார்த்தான். கடை வாசலில் நான்கு பெஞ்சுகள் போட்டு, எவர்சில்வர் தட்டுகளில் பிளாஸ்டிக் காகிதம் பரப்பி, சாதம், சாம்பார், வடை, மிக்சர், சிக்கன், இன்னும் ஏதேதோ. மூன்று பேர் மும்முரமாய் சாப்பிட்டுக்கொண்டிருக்க, கடைக்காரன் போண்டாவுக்கு மாவு பிசைந்துகொண்டிருந்தான்.

ஒரு பெட்டியாவது விற்காமல் மதியச் சாப்பாடு இல்லை என்கிற நீண்ட நாள் பிடிவாதத்தை இன்று கலைத்துக்கொண்டால்தான் என்ன என்று பலவீனமாய் யோசித்தான் சரவணன். என்ன பெரிய மதியச் சாப்பாடு ? ஒரு ஸ்ட்ராங் டீ, இரண்டு மசால் வடை அல்லது மூன்று இனிப்பு பிஸ்கெட்கள். அப்பா வெளிப்படையாய்ப் புருவ முயர்த்தி ஆச்சரியப்படும்படி, பெருமைப்படும்படி கௌரவமாய்ச் சம்பாதிக்கிறவரை, சாப்பாட்டுக்கு ஐந்து ரூபாய்க்குமேல் செலவு செய்வதில்லை என்பது அவனுடைய உறுதியான கொள்கை.

அம்மாவுக்கும், தங்கைக்கும் இந்த விஷயம் தெரியாது. தெரிந்தால் தாங்கமாட்டார்கள். ‘எங்க மத்தியான சாப்பாட்டுக்கு கம்பெனியே பணம் தருதும்மா; டெய்லி காலையில ஸ்டாக் எடுக்கப் போகும்போது ஒரு டோக்கன் தருவாங்க; அதை ஹோட்டல்ல கொடுத்தா சாப்பாடு ·ப்ரீ’ என்று அவன் சிரித்தபடி சொன்னதை, விரிந்த விழிகளோடு நம்பியிருந்தாள் அம்மா,

‘சாப்பாடெல்லாம் எப்படி இருக்கும் சரவணா ?’

‘அதெல்லாம் பிரமாதமா இருக்கும்மா ! கல்யாணச் சாப்பாடுமாதிரி, சாம்பார், ரசம், அப்பளம், வடை, தயிர், ஸ்வீட், சில நாள் ஐஸ்க்ரீம்கூட உண்டும்மா’, அவன் சரளமாய்ச் சொன்னதைக்கேட்டு அப்பாவித் தங்கை, ‘ஐஸ்க்ரீம் போடும்போது ஒருநாள் எனக்கு எடுத்துட்டு வாண்ணா, ப்ளீஸ்’ என்று கெஞ்சினாள். என்றைக்காவது அவளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கித் தரவேண்டும், பாவம் குழந்தை!

மரத்தில் சாய்த்துவைத்திருந்த சரவணனின் பலகையை ஒரு பெரியவர் நின்று கவனித்தார். ‘தம்பி’ என்று அவர் சப்தமாய் இரண்டுமுறை அழைத்த பிறகு, அவன் கவனம் கலைந்து எழுந்துகொண்டான். ‘வாங்க சார், வணக்கம்’ என்று அபத்தமாய்த் துவங்கின போதும், வாய் மடமடவென்று வழக்கமான விளம்பர வாசகங்களைப் பேச ஆரம்பித்திருந்தது. அறுபது வயதைக் கடந்துவிட்டவராய்த் தெரிகிற இந்தப் பெரியவருக்கு பெட்ரோல் சிக்கனத்தில் ஆர்வமிருக்காது என்று தோன்றியதால், கேஸ் மிச்சப்படுத்துகிற கருவியைப் பற்றி விளக்கமாய்ப் பேசினான்.

அவன் பேசுவதைத் தலையாட்டி ஆமோதித்த அந்தப் பெரியவர் பார்வையாலேயே அது சரியாய் இயங்குமா என்று சோதித்துவிடுபவர் போல அதைப் புரட்டினார். இதுபோல் எத்தனையோ பார்வைகளை எதிர்கொண்டிருந்த அவன் தன் சட்டைப் பையிலிருந்து ஒரு நோட்டீஸை எடுத்து, அந்தக் கருவி எப்படி இயங்குகிறது, என்பதை வரைபடங்கள் மற்றும் சோதனை முடிவுகளைக் காட்டி விளக்கினான். ரசீதுப் புத்தகத்தையும் எடுத்துக் காண்பித்தான். ‘ரசீது கொடுக்கறோம் சார், ரெண்டு வருஷ கேரன்ட்டி கொடுக்கறோம், எந்த ப்ராப்ளம்ன்னாலும் நீங்க எங்களைக் கான்டாக்ட் பண்ணலாம்’. ரசீதில் இருக்கிற கம்பெனியின் தொலைபேசி எண்ணை வருடிக் காண்பித்தான். ‘உங்களுக்கு முழுத்திருப்தி இல்லைன்னா உங்க பணத்தை வாபஸ் கொடுத்துடறோம்’.

சரவணன் கடைசியாய்ச் சொன்ன வாக்கியத்தில் பெரியவர் திருப்தியடைந்தத பெரியவர், ஜிப்பா பாக்கெட்டிலிருந்து மூன்று ஐம்பதுகளை அவனிடம் நீட்டிவிட்டு, ‘ஏதும் டிஸ்கவுன்ட் கிடையாதாப்பா?’ என்று சிரித்தார். ‘சார், ஏற்கெனவே ஐம்பது பர்சன்ட் டிஸ்கவுன்ட் கொடுக்கறோம்’, அட்டைப் பெட்டியின் சாய்வு மூலையிலிருந்த முன்னூறு ரூபாயைச் சுட்டிக் காட்டினான். அவருடைய பாவமான முகத்தைப் பார்த்து, ‘உங்களுக்காக ஒன் ·பார்ட்டி போட்டுக்கறேன் சார்’, என்று பத்து ரூபாயைத் திருப்பிக்கொடுத்தான்.

அவர் ஞாபகமாய் பிளாஸ்டிக் கவர் கேட்டு வாங்கிக்கொண்டார் விடைபெற்றார். கையிலிருந்த ரூபாய் நோட்டுகளைக் கண்ணில் ஒற்றினபடி பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். நட்டநடு மத்தியானத்தில் முதல் போணி. ‘ஆண்டவா, சாயந்திரத்துக்குள்ள இன்னும் நாலு பீஸாவது விக்கணும்’ என்ற பிரார்த்தனை மனதுக்குள்ளே ஓடியது. மாதம் நூறு பெட்டி விற்றால்தான் கொஞ்சூண்டு சம்பளமும் முழுசாய்க் கையில் கிடைக்கும்!

மரத்தடியில் வைத்திருந்த பையை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, சாப்பிடலாமா என்று யோசித்தான். இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும்! பாக்கெட்டிலிருந்த ரூபாய் நோட்டுகள் தந்த தெம்பில், விளம்பரப் பலகையை இன்னும் உறுதியோடு பிடித்துக்கொண்டு வெய்யிலில் மினுமினுக்கிற சாலையை நோக்கினான். தூரத்து மணிக்கூண்டில் இரண்டு மணி அடிக்கும்வரை சாலையோர வெய்யிலில் நின்றிருந்தான். கழுத்திலிருந்த டையைத் தளர்த்தி, முடிச்சவிழ்க்காமல் தலைவழியாகக் கழற்றி பேண்ட் பேக்கெட்டில் போட்டுக்கொண்டான். மென்னியைப் பிடிக்கிற பட்டனை நீக்கி கழுத்து முழுதும் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான். பையைக் கையில் எடுத்துக்கொண்டு சாலையைக் கடந்து டீக்கடையை அடைந்தான்.

‘ஒரு டீ, ரெண்டு வடை’, சொல்லிவிட்டு அங்கிருந்த பெஞ்சின் ஓரமாய் உட்கார்ந்ததும், கால் முட்டிகள் இரண்டும் கழண்டுபோவது போல் வலித்தன. உள்ளங்கைகளால் அவற்றை நன்கு அழுத்திக் கொண்டு, விரல்களால் லேசாய்ப் பிடித்து விட்டபோது ஓரளவு இதமாய் இருந்தது. கண்ணாடி க்ளாஸில் டீயும், தினத்தந்தியில் சுழற்றின வடைகளும் கொண்டு வந்த பையன், அவன் வடையைக் கடிப்பதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல், ‘பக்கோடா வேணுமா சார்? இப்பதான் போட்டிருக்கு’ என்றான்.

‘வேண்டாம்பா’, தளர்ந்த குரலில் சொல்லிவிட்டு டீயை உறிஞ்சினான். முறுகலாய் வறுபட்ட வெங்காயத்தின் மணம் எங்கும் நிறைந்திருந்தது. அவனுக்கு பக்கோடா ரொம்பவும் பிடிக்கும். ஆனால் விருப்பங்கள், விருப்பமின்மைகளையெல்லாம் ஐந்து ரூபாய் பட்ஜெட் முழுங்கி ஏப்பம் விட்டு வெகு நாள்களாகிவிட்டது.

தேநீர்க் கோப்பையின் இதமான சூடு விரல் நுனிகளில் படர்ந்து கல்லூரிக் காலத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது. ‘சந்திரிகா பேக்கரி’ என்றொரு டீக்கடை கல்லூரி கேட்டின் அருகிலேயே இருந்தது. நினைத்தபோதெல்லாம் டீ, காபி, வடை, சூடான வெஜிடபிள் பப்ஸ், மசாலாக் கடலை, வாழைப் பழம்…எப்போதும் யாரிடமாவது காசு இருக்கும். சிலநாள்கள் அவனும் செலவு செய்திருக்கிறான். நண்பர்களோடு கும்பலாய்க் கதை பேசிச் சிரித்தபடி சாப்பிட்டபோது, வெறும் பொழுதுபோக்கு உபகரணமாய்த் தெரிந்த டீயையும், வடையையும், இப்போது ஒருவேளை உணவாகப் பார்க்க வேண்டியிருப்பது வாழ்க்கையின் கொடூரமான விளையாட்டாகத் தோன்றியது அவனுக்கு.

குடும்பத்திலேயே முதன் முதலாய் கல்லூரிக்குப் போகிற பிள்ளைக்கு, இரண்டாம் கையாக ஒரு பைக் வாங்கிக் கொடுத்தார் அப்பா. மாதம் இவ்வளவு என்று பெட்ரோலுக்குக் காசும் ஒதுக்கித் தந்தார். ‘நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே, என்ன வேணும்ன்னாலும் சொல்லு, நான் வாங்கித் தர்றேன். உன் வேலை படிக்கிறதுமட்டும்தான். வேறெந்த யோசனையும் இல்லாம, அது ஒண்ணுல மட்டும் கவனமா இருந்துக்க’ என்று அடிக்கடி சொன்னார் அப்பா. எல்லாப் பிரச்சனைகளுக்குமான தீர்வுகள் நன்கு படிப்பதிலும், மார்க் வாங்குவதிலும்தான் இருக்கிறது என்று திடமாய் நம்பியவர் அவர். சிறுவயதில் அவருடைய பர்ஸிலிருந்து சரவணன் ரூபாய் திருடிய போதுகூட கோபப்படாமல் அறிவுரை சொன்னவர். அவன் மார்க் குறைகிறபோது மட்டும் சவுக்கால் அடிக்காத குறையாய் தண்டித்தார். அதேசமயம், அவன் தேர்வுகளில் நன்றாக செய்யும்போது, தவறாமல் ஊக்கப் பரிசுகள் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அப்பாவின் விருப்பங்களும், கனவுகளும் சரவணனுக்கு நன்றாகவே புரிந்திருந்தன. நண்பர்களோடு பைக்கில் சுற்றித் திரிந்த போதும், படிப்பில் கவனமாகவே இருந்தான் அவன். அப்பாவின் ஆசைப்படி பல்கலைக்கழக அளவில் இரண்டாவது மாணவனாகத் தேர்வாகி பட்டம் பெற்று வெளியேறினான். இனிமேல் வேலையோடு யாராவது வீட்டுக் கதவைத் தட்டவேண்டியதுதான் பாக்கி என்று குடும்பமே காதைத் தீட்டிக்கொண்டு காத்திருந்தது.

படிப்பு இருந்தும், நல்ல வேலை கிடைக்காமல் சரவணன் திண்டாடிய அந்த இரண்டு வருடங்களில், அப்பாவின் எதிர்பார்ப்புகளும், முன்முடிவுகளும் ஒவ்வொன்றாய்க் கழன்றுவிழுந்தன. இமைகளை யாரோ இறுகத் தைத்துவிட்டாற்போல், எதிரிலுள்ள எல்லாமும் இருள்பிரதிகளாய்த் தெரிய, ‘சீக்கிரமே’ என்று சரவணனை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்த அப்பாவும், ‘எப்போ ?’ என்று அவனை மேலும், கீழும் பார்க்கத் துவங்கிவிட்டார். அப்பாவின் இந்தத் திடீர் கைவிடலை எதிர்பார்க்காதவன், இருபுறமும் இடிவாங்கியவனாய் திகைத்து நின்றான். மார்க் வாங்கினால் வேலை கிடைக்கும், எதிர்காலம் உறுதிப்படும் என்று சின்ன வயது முதல் நம்பிக்கை விதைத்தது அவர் தப்பா, அல்லது அதை நம்பியது அவன் தப்பா? தன்னையே சுய இரக்கத்தில் தீய்த்துக்கொண்டான்.

‘பைக்ல போய்தான் வேலை தேடணுமா? பஸ்ல போனா தேஞ்சுடுவீங்களோ?’ என்று அப்பா அவனுடைய பெட்ரோல் அலவன்ஸை நிறுத்திய போது, தனது நண்பன் ஒருவனிடம் அந்த பைக்கை நல்ல விலைக்கு விற்று, அந்தப் பணத்தை அப்பாவிடம் கொடுத்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியாயிருந்தது. அவன் செய்தது அப்பாவுக்கு ஆச்சரியம்தான் என்றாலும், பெரிய அதிர்ச்சியாய் இருக்கவில்லை. ‘அதுவும் நல்லதுதான், உன் தங்கச்சி கல்யாணத்துக் காவது ஆவும்’ என்று அந்தப் பணத்தை எ·ப்.டி.யில் போட்டுவிட்டார்.

அதன்பின் அவன் பஸ்ஸில் சென்று வேலை தேட ஆரம்பித்தான். வெள்ளை காலர் உத்யோகம் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்த மனம், திருடுவது, பிச்சையெடுப்பது அல்லாமல் இப்போதைக்கு ஏதோ ஒரு வேலை, சம்பளம் என்று வந்தால் சரி என்று இளகிக்கொண்டதும் அப்போது தான்.
அந்த ஞானம் பிறந்த சில நாள்களுக்குள்ளாகவே இந்த வேலை கிடைத்துவிட்டது. ‘ஸ்டார் என்டர்ப்ரைஸ்’ என்று ஊருக்கு வெளியே ஒற்றைக் கட்டிடத்தில் ஆ·பீஸ்; உள்நாட்டில் தயார் செய்ததும், வெளிநாட்டிலிருந்து சுருட்டி வந்ததுமாய் சின்ன, பெரிய பொருள்கள் பலவற்றை வீடுவீடாய்ச் சென்று விற்கவேண்டும்; அல்லது இதுபோல சாலையோரங்களில் திடீர் கடை விரித்து, கொள்வாருக்காகக் காத்திருக்க வேண்டும்.

இதுதான் விற்பது என்று ஏதும் வரைமுறைகள் இல்லை. கார் கழுவுவதற்கான உபகரணங்கள், தாமிர அடிப்புறமுள்ள பாத்திரங்கள், பதினெட்டு வகை பேனாக்கள், குறைந்த விலையில் ஆக்ஸ்·போர்ட் அகராதியும், என்சைக்ளோபீடியாவும், இன்றுபோல் எரிபொருள் சிக்கன உபகரணங்கள், இன்னும் என்னென்னவோ. தினந்தோறும் ஷேவ் செய்து, திருத்தமாய் உடுத்தி, ஷ¤ அணிந்து, பயணிக்கிற தகர டப்பா டவுன் பஸ்ஸ¤க்குப் பொருந்தாத கம்பீரமாய் கழுத்துப் பட்டை கட்டிக்கொண்டு ஆ·பீசுக்குச் சென்ற பிறகுதான், அன்றைய தினம் எதை விற்க வேண்டும் என்கிற விபரமே அவனுக்கு தெரிவிக்கப்படும். அழுக்கு கொடௌனிலிருந்து வரும் பெட்டிகள் நீண்ட தோள் பையில் அடுக்கப்பட்டதும், அதைத் தூக்கிக்கொண்டு விதிக்கப்பட்ட ஏரியாவுக்கு ஓடவேண்டும். என்னதான் விலை குறைவு என்றாலும், கடையில் கிடைக்கும் பொருள்களை விட இவை மேலானவையா என்று தயங்குகிற கஸ்டமர் களையெல்லாம் தேனொழுகும் பேச்சாலேயே அடிக்க வேண்டும். இப்படி நாள்முழுக்க பேசிப்பேசி முடிந்ததை விற்றபிறகு, மாலையில் ஆ·பீசுக்குத் திரும்பி கணக்கு ஒப்புவிக்கவேண்டும். விற்ற பொருள்களுக்கு உரிய காசைச் செலுத்தி, மீதமுள்ளவற்றை கொடௌனில் வீசிவிட்டு, உடம்பும், மனசும் ஓய்வுக்கு ஏங்க, நெரிசலான பஸ்ஸில் வீடு திரும்பும், இரவு மணி பத்தாகிவிடும்.

உடம்பை உருக்குகிற உத்யோகம்தான் என்றாலும், நாள்முழுக்க வேலை தேடிச் சோர்ந்து போகிற வேலையைவிட, அவனுக்கு இது ரொம்பவே பிடித்திருந்தது. குறை சொல்லமுடியாத சம்பளம், இதுதவிர ஒவ்வொரு பொருள் விற்கும்போதும் அதில் கொஞ்சம் கமிஷனும் கிடைக்கிறது. மொத்தத்தில் அப்பாவை முழுமையாய்த் திருப்திப்படுத்துமளவு சம்பாதிக்கவில்லை என்றாலும், யாருடைய முணு முணுப்பும் இல்லாமல் ஓடுகிறது வண்டி.

டீக்கடையில் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் நெடுஞ்சாலைக்கு இறங்கி வந்தான் சரவணன். பேருந்து நிறுத்தத்தின் சாய்நிழல் மறைவில் பையை வைத்துவிட்டு, ஒரு கையில் அறிவிப்புப் பலகையும், இன்னொன்றில் அடுக்கின நான்கு பெட்டிகளுமாய் தார் ரோட்டின் அருகில் வந்துநின்றான். ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்தித்துவிட்டு, வாகன ஓட்டிகளை நோக்கி நின்றுகொண்டான்.

காலைப் பொழுதோடு ஒப்பிடும் போது, மதியங்கள் விற்பனைக்கு வசதியானவை. பரபரப்பில் ஓடும் ஜனங்களுக்குக்கூட, அவன் என்ன விற்கிறான் என்று நின்று கேட்க அப்போதுதான் நேரமிருக்கிறது. இப்படிப் பத்து பேர் விசாரித்தால், நான்கு பெட்டிகளாவது விற்றுவிடும் என்னும் அவனுடைய அனுபவக் கணக்கு அன்றைக்கும் தவறவில்லை. தெருமுனைப் பள்ளிக்கூடத்திலிருந்து விடுபட்டு குழந்தைகள் ஆரவாரத்துடன் பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடிவருகிற மூன்றரை மணிக்குள், ஐந்து பெட்டிகள் விற்றுவிட்டான்.

உள்ளமெங்கும் இலக்கற்ற உற்சாகம் பொங்கிக் கொண்டிருந்தது அவனுக்கு.

அதன்பின் கொஞ்சநேரத்துக்கு ஏதும் விற்பனையில்லை. ஐந்தரை மணிக்குமேல் அலுவலகங்கள் அவிழ்த்துவிடப்பட்டு, அக்கம் பக்கத்தில் இருப்ப வரைத் திரும்பிக்கூட பார்க்காமல் விரைகிற வாகனக் கூட்டங்கள் சாலையை நிரப்பத் தொடங்கி விட்டபின், அவன் ஆ·பீசுக்குத் திரும்புவது என்று முடிவெடுத்தான். அப்போதுதான் அந்த யுவதி அவனெதிரே தன் கைனடிக் ஹோண்டாவை நிறுத்தினாள். பட்டனில்லாத டி-சட்டையில் ‘ஓம்’ என்னும் மந்திரம் எழுதப்பட்டிருந்தது. அவன் கையிலிருந்த பெட்டிகளைச் சுட்டிக்காட்டி, ‘என்னது இது ?’ என்று விசாரித்தாள் அவள்.

அவன் விறுவிறுவென்று தன்னுடைய விளம்பர வாசகத்தை ஆரம்பித்தான், மூன்றாவது வாக்கியத் துக்குள் அவன் பேச்சைக் கத்தரித்தவள், ‘இது எங்க தயார் பண்றது ? வொர்க் ஆகும்ன்னு என்ன கேரன்டி? இதனால என் வண்டி கெட்டுப்போகாதுன்னு உங்களால நிச்சயமா சொல்லமுடியுமா? இப்படி அன்ஆதரைஸ்ட் ப்ராடக்ட்ஸ் ரோட்டோரமா நின்னு விக்கிறது கிரிமினல் குத்தம் தெரியுமா ?’ என்று பொரிந்தாள்.

அவன் திகைப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான், ‘அம்மா பரதேவதே, நான் உன் வண்டியைப் பிடித்திழுத்து நிறுத்தினேனா? என் பொருளை வாங்கிக்கொண்டால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தினேனா? நீயாக வந்து நின்று விசாரித்துவிட்டு இப்படிக் கத்தினால் என்ன அர்த்தம்?’ – இப்படியெல்லாம் கேட்க நினைத்தபோதும், அவள் படபடவென்று பேசுகிற வேகத்துக்கு அவனால் ஏதும் செய்யக்கூடவில்லை. பாக்கெட்டிலிருந்து விளம்பர நோட்டீஸையும், ரசீது புத்தகத்தையும் எடுத்துக்காட்டி ஏதேதோ பேசிப்பார்த்தான். அவள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. ‘எல்லாம் சுத்தப் பொய், டீசன்ட்டா ஏமாத்தற சமாச்சாரம்’ என்று உறுதியோடு சொன்னவள், ‘உங்களையெல்லாம் பிடிச்சு உள்ளே தள்ளணும்யா’ என்றாள் வெறுப்புடன்.

அவளுடைய இந்தத் திடீர் தாக்குதல் சரவணனுக்குப் பெருத்த அவமானமாய் இருந்தது. யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிலும் பார்த்துவிட்டு, ‘இது ரெஜிஸ்டர்ட் கம்பெனி மேடம், எல்லா ப்ராடக்ட்க்கும் கேரன்டி தர்றோம்’ என்று மட்டும் சொன்னான். குரலின் சுருதி தானாய் இறங்கியிருந்தது. அவள் அவனை மீண்டும் அலட்சிய தொனியில் பார்த்துவிட்டு, ஒரு ஆங்கிலக் கெட்ட வார்த்தையை உச்சரித்தாள், ‘ஒருவாட்டி போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணினாதான்யா நீங்க அடங்குவீங்க’ என்று அழுத்தமான குரலில் சொன்னவள், விருட்டென்று வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டாள்.

இருட்டும்வரை சரவணன் அங்கேயேதான் நின்றிருந்தான். அவனது விளம்பரப் பலகை யார் கண்ணிலும் படாத அளவுக்கு இருள் சூழ்ந்து கொண்டபிறகு, கையிலிருந்த பெட்டிகளைப் பையில் திணித்தபோது, அங்கே விற்காமல் மீதமிருந்த பெட்டிகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது, ‘உங்களையெல்லாம் பிடிச்சு உள்ளே தள்ளணும்யா’, அந்தப் பெண்ணின் குரல் பிடிவாதமாய் காதில் திரும்பத்திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

உடம்புமுழுதும் கூசுவதுபோல் உணர்ந்தான் அவன். அரை நாள் ஏமாற்றத்தை, ஐந்து பெட்டி விற்ற சந்தோஷம் மறைத்துக்கொள்ள, அதையும் இப்போது இந்தப் பெண்ணின் அதட்டல் விழுங்கித் தீர்த்துவிட்டது. எப்போதும்போல் மிஞ்சுவது தன்னிரக்கமும், மன வலியும்தான்.

காலடியிலிருந்த பையைத் தூக்கிக்கொண்டு கலவை உணர்ச்சிகளோடு மெல்லமாய் நடக்க ஆரம்பித்தான். அந்தப் பை வழக்கத்தைவிடக் கனப்பதாகத் தோன்றியது, காலத்தையும், தன்னையுமே அந்தப் பையில் சுமந்து கொண்டிருப்பது போல்…

– ஏப்ரல் 2003

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *