விருந்தாளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2022
பார்வையிட்டோர்: 6,108 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

– கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள்.
– நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்.
– மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான்.
– வெண்ணெயையும், பாலையும், சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து அவர்கள் முன்பாக வைத்து அவர்கள் அருகே நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
– ஆதியாகமம் : 18

ஆப்பிரிக்காவில் இருந்தபோது எனக்கு ஒரு விநோத மான சம்பவம் நேர்ந்தது. நான் வசித்தது செக்பீமா எனப்படும் ஒரு குக்கிராமத்தில். இங்கே எனக்காக மரத்திலான ஒரு வீட்டை ஒதுக்கியிருந்தார்கள். அத்தியா வசியமான தேவைகள் மாத்திரம் கொண்ட அடக்க மான வீடு அது. கூரைகூட மரத்தினால் ஆனதுதான். இந்த முழு வீடும் பெரிய மரத் தாங்கிகளில் ஏறி உட்கார்ந்திருந்தது.

இதன் சமையலறையும் வெளிவீடும் ஆப்பிரிக்க விதிகளின்படி சற்று தூரத்தில் இருந்தன. என்னுடைய சமையல்காரன், தோட்டக்காரன், வேலைக்காரன் எல்லோரும் இங்கே வசித்தார்கள். இதைத் தவிர ஒரு வாகன ஓட்டியும், மூன்று காவல்காரர்களும் வந்து வந்து போனார்கள். இப்படி அந்தக் கிராமத்தின் அரைவாசி ஜனத்தொகை என் ஒருவனைப் பராமரிப்ப தையே முக்கிய தொழிலாக ஏற்றுக்கொண்டிருந்தது. என்னுடைய வருகையினால் அந்தக் கிராமத்துப் பொரு ளாதாரமும் ஒரு சுற்று பருத்திருந்தது என்றுதான் நினைக்க வேண்டும்.

என் வீட்டுக்குச் சிறிது தள்ளி ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. காலையும் மாலையும், சிறுவர்களும் சிறுமிகளும் சொக்கலட் கலர் சீருடையில் கூட்டம் கூட்டமாகப் போவதைக் காணலாம். ஆசிரியர்கள் இங்கே கடுமையான தண்டனைகளை வழங்கினாலும் இந்தப் பாலர்கள் எப்போதும் மலர்ந்த முகத்துடனேயே இருப்பார்கள்.

என்னைக் காணும் போதெல்லாம் ஓடிவந்து ‘இந்தியாமான்’ ‘இந்தியாமான்’ என்று கத்திக் கையசைத்துவிட்டுப் போவார்கள். நானும் பதிலுக்குச் சிரித்தபடி ‘ஆப்பிரிகாமான்’ என்று சொல்லிக் கையை ஆட்டுவேன். இங்கே கறுப்பாக இல்லாத எவரும் வெள்ளையர்; வெள்ளையர் அல்லாதவர் ‘இந்தியாமான்’ தான்.

சில நேரங்களில், துணிவு பெற்ற சில சிறுவர்கள் வீட்டினுள்ளே புகுந்துவிடுவார்கள். என்னிடம் நிலைக்கண்ணாடி என்ற தகுதி பெறாத நீண்ட கண்ணாடி ஒன்று இருந்தது. தயங்கித் தயங்கி வரும் சிறுவர்கள் கண்ணாடியில் தங்கள் பிம்பங்களைப் பார்ப்பார் கள். பின்னால் நிற்பவர்கள் முன்னால் வந்தவர்களை முட்டுவார்கள். பிம்பங்கள் கொடுக்கும் சக்தி கண்ணாடியில் தீர்ந்துவிடுமுன் பார்த்து விடவேண்டும் என்பதுபோல இடித்துத் தள்ளுவார்கள். தங்கள் முறை வந்ததும் பல்லை இளித்து சரி பார்ப்பார்கள். இரண்டு பல் போன சிறுவன் கையினால் வாயைப் பொத்திச் சிரிப்பை அடக்கியபடி விலகி ஓடுவான். கண்ணாடி சீக்கிரத்தில் மங்கப் போகிறது; நாளைக்கு வாருங்கள்’ என்று நான் சொல்லும் வரைக்கும் அவர்கள் போகவே மாட்டார்கள்.

என் வீட்டுக்குக் குழாய் வசதி கிடையாது. மழைக்காலங்களில் வரும் தண்ணீரைச் சேமிக்கும் விதமாக மேலே தொட்டிகள் கட்டி வைத்திருந்தார்கள். இந்த ஊர்ப் பெண்கள் நிமிர்ந்த நடையுடன் காலையிலும் மாலையிலும், தண்ணீருக்கும் விறகுக்குமாக அலை வதைக் காணலாம். ஆப்பிரிக்க பெண்களின் அறுபது சதவீதம் உழைப்பு இதற்குச் செலவாகிறது என்று சொல்லும் புள்ளி விபரங்கள் உண்மையென்றுதான் பட்டது.

ஒருநாள் ஒரு பிழை செய்தேன். சும்மா ஜீப்பில் வரும் போது பெரிய டிரம் ஒன்றில் தண்ணீர் பிடித்து வந்து இந்தக் கிராமத்து மக்களுக்குக் கொடுத்தேன். அன்று அந்தத் தண்ணீரைப் பங்கு போடு வதில் பெரும் போர் நிகழ்ந்தது. இரண்டு பெண்கள் தலை மயிரைப் பிடித்துக்கொண்டு வீதியிலே புரண்டு வன விலங்குகள் போல அடித்துக்கொண்டார்கள். அதற்குப் பிறகு இலவசமாகப் புண்ணியம் சம்பாதிக்கும் காரியத்தை நான் நிறுத்திவிட்டேன்.

ஜெர்மன் கம்பனி ஒன்று இந்தக் கிராமத்து வழியாக பெரிய ரோடு போட்டது. அதை அரசாங்கத் தரப்பில் மேற்பார்வையிடு வதற்கு நான் நியமிக்கப்பட்டிருந்தேன். ரோட்டு வேலைகள் மழைக் காலங்களில் நின்றுவிடும். மற்ற நேரங்களில் இரவும் பகலுமாகத் தொடரும். நான் வேலையும் வீடும் என்று நேரத்தைக் கழித்தவாறு இருந்தேன்.

என்னை இந்த நேரங்களில் மிகவும் வாட்டியது தனிமைதான். எவ்வளவுதான் வேலை, புத்தகங்கள், இசை என்று மூழ்கியிருந்தாலும் இந்தத் தனிமை என்பது மனிதனைச் சில வேளைகளில் பெரிதும் வதைத்துவிடும்.

இந்த வேதனைகளில் இருந்து எனக்குச் சில சமயங்களில் விடு தலை கிடைக்கும். எதிர்த்து இருந்த மலை உச்சியில் ஓர் ஐரிஷ் பாதிரியார் இருந்தார். அந்தப் பக்கத்தில் மிகவும் பிரபலமானவர். நிறையப் படித்தவர். நீண்ட வெண் தாடியோடு அந்தக் கிராமத்து மக்களுக்கு அவ்வப்போது கருணையோடு பல சேவைகள் செய்பவர்.

அவருடைய இருப்பிடத்துக்கு நான் சில சமயம் போவேன். அநேகமான சனிக்கிழமை மாலை வேளைகளை இவர் என்னுடன் கழிப்பார். நீலநிற மோட்டார் சைக்கிளில் டுப் டுப் என்று ஒலியெழுப் பியபடி அவர் வரும்போது ஊர்ச் சிறுவர்கள் எல்லாம் பின்னா லேயே ஓடிவரும் காட்சி மறக்கமுடியாதது.

இவர் வரும் நாட்களில் என் பொழுது இனிதே போகும். பைபிளை மனப்பாடம் செய்த இவர் பழைய ஏற்பாட்டில் இருந்து அடிக்கடி அழகான கதைகளை எடுத்துச் சொல்வார். ஆனாலும் தமிழிலே பேசவேண்டும் என்ற என் ஆவல் வரவர அதிகரித்தபடியே இருந்தது.

இவர் வருகையில் எனக்கு ஒரு சிறிய சங்கடம் இருந்தது. இவருக்கு வைனில் மோகம் அதிகம். அதுவும் சாதாரண வைன் அல்ல. தேர்ந்தெடுத்த சுவை கூடிய வைன். சுவை நுட்பமான நாக்கு கொண்டவர். ஒவ்வொரு வைனையும் சுவைத்து அதன் நிறை குறைகளை விளக்குவார். இதன் காரணமாக அவர் வரும் சமயங் களில் எப்படியும் பட்டணத்தில் இருந்து வருபவர்களிடம் சொல்லி நல்ல வைன் வாங்கி வைத்திருப்பேன்.

இப்படி ஒரேயொரு நண்பரை அறிந்த அந்த தேசத்தில் ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது ஓர் அதிசயம் காத்திருந்தது.

என்னுடைய சமையல்காரனின் மனைவி கால்களை மடக்கி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய சிறிய மகளின் தலை அவள் முழங்கால்களுக்கு இடையில் கெட்டியாகப் பிடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறு பெண்ணின் முகம் கோணலாகிப்போக அவள் தலை மயிரை இழுத்து அந்தத் தாய் சிறுசிறு புழுக்கள் போல பின்னிக் கொண்டு இருந்தாள். என்னைக் கண்டதும் அந்தச் சிறுமி பறித்துக் கொண்டு ‘ஹொரேமா பீகாமா’, ‘ஹொரேமா பீகாமா’ என்று கத்தியபடியே ஓடி வந்தாள். என்னுடைய ஜீப் அந்த நேரம் என் வீட்டுக்குப் போகும் பாதையில் திரும்பிக்கொண்டிருந்தது. ஜீப்பை நிறுத்தி விசாரித்தபோது எனக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார் என்ற விபரம் தெரியவந்தது.

எனக்கு ஆச்சரியம். நான் வேகமாக வந்து பார்த்தால் வீட்டு முன் விறாந்தையில் ஒருவர் முதுகில் மாட்டிய பையுடன் நின்று கொண்டிருந்தார். அவருக்கு இரு பக்கத்திலும் என்னுடைய காவல்காரர்கள் துவாரபாலகர்களாக அவர் தப்பியோட எத்தனிப்பார் என்பது போல அவரைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.

என்னைக் கண்டதும் அவர் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் தெரிவித்தார். அவருடைய காலில் இருந்து தலைவரை புழுதி படிந்திருந்தது. தலை மயிர், சிறு தாடி எல்லாம் செம்மண் நிறமாக மாறியிருந்தது. அவர் நெடுந்தூரத்தில் இருந்து வந்திருக்கவேண்டும். சொக்ஸ் அணியாத பாதத்தில் மாட்டியிருந்த காலணிகள் ஓட்டை விழுந்து அவருடைய பெருவிரல் பருமனைக் காட்டுவதாக இருந்தன.

‘உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்றுதான் சந்திக்க முடிந்தது’ என்றார்.

காலணிகளை வெளியே கழற்றி வைத்து, பாதங்களைக் கழுவியதும் அவருக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது போல தெரிந்தது. உள்ளே வந்து சாய்ந்து உட்கார்ந்தார். பிறகு எங்கள் சம்பாஷணை வெகு நேரம் தொடர்ந்தது. எல்லா விஷயத்திலும் அவர் அனுபவப்பட்ட வராகத் தெரிந்தார். என்றாலும் தாமதமாகவும், அடக்கமாகவும் பேசினார். மிகவும் சிரமப்பட்டு அவரிடம் நான் கறந்த விருத்தாந்தம் இதுதான்.

அவருடைய பெயர் ஜெகன். சிலோனை விட்டுப் புறப்பட்டு கப்பலில் சேர்ந்தபோது அவருக்கு வயது இருபது. அதற்குப் பிறகு வந்த இனக் கலவரங்களால் அவர் திரும்பிப் போவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. அவருக்கு இருந்த ஒரே ஒரு சகோதரரும், தகப்பனா ரும் போரில் இறந்துவிட்டார்கள். தாயைத் தேடும் முயற்சியில் தோற்றுவிட்டார். தாயார் இருக்கிறாரா இல்லையா என்பது கூட அவருக்குத் தெரியாது.

ஐந்து வருடங்களுக்கு முன்பு கப்பல் வேலையை விட்டுவிட்டார். இவ்வளவு காலமும் சேமித்த பணத்தை வைத்து இவரும் இத்தாலிய நண்பர் ஒருவரும் ஒரு கம்பனி ஆரம்பித்தார்கள். ஆப்பிரிக்க மரங் களை வெட்டி ஏற்றுமதி செய்வது. நன்றாகத் தொடங்கிய வியாபாரம் படு தோல்வியில் முடிந்தது. கடன் தலைக்கு மேல் போய்விட்டது. கையிலே ஒன்றும் மிச்சமில்லை.

இப்பொழுது பக்கத்து நாடான லைபீரியாவில் இருக்கும் ஒரு நண்பரைத் தேடிப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே போய் ஏதாவது பிஸினஸ் செய்து முன்னுக்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை. நல்ல தொடர்புகள் கிடைத்தால் ஒரு சில வருடங்களில் லட்சங்கள் சம்பாதித்துவிடலாம் என்றார். விசா இல்லாதபடியால் கள்ள வழியில் போவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். கடைசி பஸ் தவறிவிட்டது. ஒரு நாள் இரவு தங்கிப் போவதற்காக என்னிடம் வந்திருந்தார்.

முந்தி பிந்தி எனக்கு விருந்தாளிகள் வந்தது கிடையாது. அழகான தமிழில் பேசினார். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலப் பட்டது.

எனக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனுடைய பெயர் சனூசி. நான் சொல்லும் வேலைகளைக் காட்டிலும் சொல்லாத வேலைகளைச் செய்வதிலே விசேஷ பிரியம் காட்டுவான். இருபது வயதான இவனுக்கு இரண்டு மனைவிகள். வாரத்துக்கு ஒரு கடிதம் எனக்கு எழுதுவான். இடது பக்கத்தில் பெரிய உருண்டையான எழுத்துக்களில் தொடங்கி வலது பக்கத்தில் குறுணியாக முடிப்பான். எல்லாம் சம்பள உயர்வு கேட்டுத்தான். காரணம் கேட்டால் ஒரு புஃலா பெண்ணைக் காதலிப்பதாகச் சிரித்தபடி சொல்கிறான். ஒருமுறை என் வீட்டில் தீப்பிடித்தபோதும் இதே மாதிரித்தான் சிரித்தான். என்னுடைய முடிவுகள் இவனுக்குத் திருப்தி தருவ தில்லை. விரைவில் என்னைப் பணி நீக்கம் செய்துவிடுவான் என்று எதிர்பார்த்திருந்தேன்.

அப்படிப்பட்ட சனூசிக்கு அன்று என்ன செய்வதென்றே தெரிய வில்லை . இங்கும் ஓடினான்; அங்கும் ஓடினான். ஒரு விருந்தாளியைச் சமாளித்த முன் அனுபவம் இல்லாததால் இன்னது செய்யவேண்டும் அல்லது செய்யாமல் விடவேண்டும் என்பது தெரியாமல் தடுமாறி னான். கைகளினால் எனக்கு சைகை காட்டினான். கண்களினால் பேசினான். ஆனால் நான் இவையொன்றையும் கவனிக்கவில்லை.

எனக்கு வந்த முதல் விருந்தாளியின் பேச்சில் மயங்கிப்போய் இருந்தேன். அவருக்கு வயது முப்பத்தைந்து இருக்கலாம். அவர் ரசனையும் என் ரசனையும் ஒன்றுபோலவே பட்டது. ஆனால் உற்சாகமில்லாத, எதையோ இழந்துவிட்ட குரலில் பேசினார்.

அங்கே கம்பனி ஜெனரேட்டர் ஒரு நாளைக்கு நாலுமணி நேரம்தான் வேலை செய்யும். மாலை ஆறுமணிக்குத் தொடங்கினால் இரவு பத்து மணியளவில் நின்றுவிடும். அன்று, என்னுடைய விருந் தாளியைக் கௌரவிக்கும் முகமாக இரவு ஒரு மணிவரை அது வேலை செய்தது. நாங்கள் இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தக் காலத்தில் என்னிடம் இரண்டு பெரிய உருளைகள் கொண்ட ரேப் ரிக்கார்டர் ஒன்று இருந்தது. இரண்டு பேர் அதைப் பிடித்துத் தூக்க வேண்டும். அவ்வளவு பெரியது. காருகுறிச்சி சபைகளில் வாசித்த நாதஸ்வர இசையை நான் ஒலிப்பதிவு செய்து வைத்திருந் தேன். சபையின் ஆரவாரம், கைதட்டல்கள் எல்லாம் அதில் பதிவாகியிருந்தன. அப்படிப்பட்ட இசையைக் கேட்கும்போது கிடைத்த நிஜத்தன்மையில் நான் என்னை மறப்பது சுலபமாகவிருக்கும்.

அன்று அந்த இசைப் பதிவில் ‘சக்கனிராஜா’ வரும் பகுதியைப் போட்டேன். கண்களை மூடிக்கொண்டு அவர் அதை ரசித்தார். இன்னொரு தடவை கேட்க விரும்பினார். மீண்டும் போட்டேன்.

அந்த ஆப்பிரிக்க காட்டில், ஒரு நடு நிசியில், மின் விளக்குகள் எரியும் ஒரேயொரு தனி வீட்டில், எங்கள் இருவருக்காகவும் காரு குறிச்சி இன்னொரு முறை கரகரப்பிரியாவை வாசித்தார். அந்த வாசிப்பு முன்பு வாசித்ததிலும் பார்க்க இன்னும் மெருகு கூடியிருந் தது. நண்பரின் கண்களில் பெரிய உருண்டையாக நீர் ஒன்று திரண்டு பட்டென்று விழுந்தது.

பிறகு பேச்சு இலக்கியத்துக்குத் திரும்பியது. ஓர் உருதுக் கவிதையை நான் சொன்னேன்.

நீ அங்கே
நான் இங்கே
பெண்ணே !
இரவு நகர்கிறது
வீணாக.

இந்தக் கவிதையை வெகுவாக ரசித்தவர் திடீரென்று மௌனமாகி விட்டார். இவருடைய கடல் பிரயாணங்களில், தாய்லாந்திலோ, துருக்கியிலோ சந்தித்து இவருக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்ணின் ஞாபகம் வந்திருக்கலாம். மழைக்கால மேகம் போல அவருடைய முகம் கறுத்துவிட்டது.

என் சமையல்காரனுடைய பெயர் கமாறா. அவனுக்குத் தேக பலத்தில் இருக்கும் நம்பிக்கை செய்முறையில் இல்லை. எல்லா சமையல் வேலைகளையும் பலத்தினால் சாதிக்கப் பார்ப்பான். ஊறுகாய் போத்தல் மூடியைக் கள்ளன் இரவில் வந்து அபகரித்துவிடு வான் என்பதுபோல இறுக்கப் பூட்டி விடுவான். ஒரு யானை பலத்தைச் சேகரித்தால் ஒழிய இதைத் திறக்க முடியாது. ஐந்து நிமிடத்தில் ஒரு தேங்காயைக் கையினால் உடைத்து, கத்தியினால் சுரண்டி சம்பல் போட்டுவிடுவான். இவனுக்காக நான் வாங்கிவந்த துருவலை இன்னும் தொடாமல் துருப்பிடித்துப்போய்க் கிடந்தது.

அன்று உணவு பரிமாறியபோது இரவு மணி பதினொன்றாகி விட்டது. கமாராவுக்கு எங்கள் சமையல்களில் உபயோகிக்கும் பலசரக்கு பற்றிய அறிவு கொஞ்சமும் கிடையாது. ஆனால் என்னு டைய அயராத உழைப்பாலும், இடைவிடாத முயற்சியாலும் பெருஞ்சீரகத்துக்கும், பெருங்காயத்துக்கும் அவனுக்கு வித்தியாசம் தெரிந்திருந்தது. வெள்ளைப்பூண்டு எங்கே போடவேண்டும், வெந்தயம் எங்கே தூவவேண்டும் என்பதையும் மனப்பாடம் செய்துவிட்டான். ஆனால் கடுகுக்கும் மிளகுக்கும் உள்ள வேறுபாடு மாத்திரம் என்ன செய்தும் அவனுக்குத் தெரியவில்லை. நான் ஊரை விடுமுன் இதை எப்படியாவது அவனுடைய மண்டைக்குள் ஏற்றிவிடவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன்.

அன்று கமாறாவுக்கு என்ன நடந்ததோ, எங்கிருந்து ரோஷம் வந்ததோ தெரியவில்லை. அபாரமாகச் சமைத்திருந்தான். சுடச்சுட அப்பம் சுட்டு அடுக்கியிருந்தான். வெந்தயக் குழம்பு அளவான வெந்தயம் போடப்பட்டு மிளகாய்ச் சிவப்பில் நல்ல மணம் வீசியது. ஆப்பிரிக்க முறைப்படி வைத்த இறைச்சிக்கறி துண்டு துண்டாக எண்ணெய்யில் மிதந்தது. ஆனால் சம்பலின் மகிமையைக் கூற இயலாது. அளந்தெடுத்துக் கலந்தது போல உறைப்பும், புளிப்பும், உப்புச்சுவையும் கூடித் தன்னிகரற்று விளங்கியது.

வந்த விருந்தாளி கடந்த பதினைந்து வருடங்களாக தான் இப்படியான உணவை உண்டதில்லை என்று சொன்னார். அவர் கண்களில் நீர் சுரந்தது. அதைத் துடைக்கக்கூட கை எடுக்காமல் ஆவலாக உண்பதில் கருத்தாகவிருந்தார். அவர் புசிப்பதையே கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு சம்பவம் நடந்தது. சனூசியைப் பார்த்து வைன் கொண்டுவரும்படி சைகை செய்தேன். அவன் காலைத் தேய்த்தபடி நின்றான். கீழே பார்த்தான் ; மேலே பார்த்தான். ஆனால் அசைய மறுத்துவிட்டான். இன்னொருமுறை சமிக்ஞை கொடுத்தேன். அவன் பொறுக்காமல் உள்ளே போய் ஒரு வைன் போத்தலைத் தூக்கிக்கொண்டு வந்து பட்டென்று வைத் தான். அது நான் சொன்ன உயர்ரக வைன் இல்லை; சாதாரண வைன். அதைத் திருப்பி அனுப்பிவிட்டு சனூசியை முறைத்துப் பார்த்தேன். அப்பொழுது அவன் அரைமனதுடன் அசைந்தசைந்து போய் நான் குறிப்பிட்ட வைனைக் கொண்டுவந்தான். அது டேவிட் பாதிரி யாருக்காக நான் பிரத்தியேகமாகப் பட்டணத்திலிருந்து அதிக விலை கொடுத்து வரவழைத்த சிவப்பு வைன். பத்து வருடம் வயதாக்கப்பட்ட கபர்னெ சாவினொன். சனூசியின் புத்தியில் எனக்கு வந்த விருந்தாளி இந்த உயர்ந்த ரக வைனுக்குத் தகுதியற்றவர் என்று பட்டிருக்க வேண்டும்.

ஆனால் நான் அந்த வைனை விருந்தாளிக்காகக் கொண்டுவரச் சொல்லவில்லை. எனக்கு அதை அருந்தவேண்டும் போல இருந்தது. அன்று என் மனம் அளவில்லாத சந்தோஷத்தில் மிதந்தது. இந்த நிலையில் அனுபவிக்கக்கூடியது அந்த வைன் ஒன்று மட்டுமே என்று எனக்குப்பட்டது.

அதைத் திறந்து நானும் நண்பரும் பருகினோம். ஓர் இசையின் உச்சம் போல, கவிதையின் தொடக்கம் போல் அது இருந்தது. ஊற்றுப்போல நாக்கிலே பட்டு ஒரு காற்றுப்போல மறைந்தது. அது கொடுத்த சுவை மாத்திரம் நாக்கிலேயே தங்கியது; நாசியிலேயே நின்றது.

என் நண்பர் கிறங்கிப்போய் விட்டார். ஒரு வார்த்தைதானும் பேசவில்லை. எப்பொழுது தூங்கினோம் என்பதும் ஞாபகத்தில் இல்லை.

திடீரென்று விழிப்பு ஏற்பட்ட போதுதான் என் வீட்டில் ஒரு விருந்தாளி தங்கியிருக்கும் ஞாபகம் வந்தது. மணியைப் பார்த்தேன். ஒன்பது மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. என்னுடைய விருந் தாளி காலை எட்டு மணி பஸ்ஸைப் பிடிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்.

அவசரமாகப் படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தேன். அவர் சாப்பாட்டு மேசையில் குனிந்தபடி இருந்தார். காலை உணவை முடித்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. தலையைப் பிடித்தபடி பெரும் யோசனையில் ஆழ்ந்து போய் இருந்தார். கமாறாவும், சனூசி யும் இவரைப் பார்த்தவாறு செய்வதறியாது எட்டத்தில் நின்றனர்.

அவர் புழுதி எல்லாம் போக சுத்தமாகக் குளித்திருந்தார். தலை வாரி ஒழுங்காக இருந்தது. ஆனால் உடுப்பு அதே உடுப்புதான். என்னிடம் சொல்லிவிட்டுப் போவதற்காகக் காத்திருந்தார். அதைப் பார்க்க என் மனது கரைந்தது. ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க முன்பின் அறியாத ஒரு நாட்டுக்கு இன்னும் சில நிமிடங்களில் புறப் படுவதற்கு இருந்தார். பஸ் கட்டணத்திற்குக் கூட காசு இருக்குமோ தெரியவில்லை . அதைக் கேட்பதற்கும் எனக்குக் கூச்சமாக இருந்தது.

என்னிலும் வயது கூடியவர் என்னைக் கண்டதும் எழுந்து நின்றார். உங்களிடம் சொல்லிவிட்டுப் போவதற்காகக் காத்திருந்தேன். நீங்கள் செய்த உதவியை என்றும் நினைவில் வைத்திருப்பேன். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு எங்கள் ஊர் சாப்பாடு உங்கள் புண்ணியத்தில் கிடைத்தது; மிகவும் நன்றி’ என்றார். அவர் நாக்குத் தழுதழுத்தது.

அநியாயமாக உங்களைத் தாமதிக்க வைத்துவிட்டேன். பஸ்ஸைத் தவற விட்டுவிட்டீர்களே!’ என்றேன். அதனாலென்ன, பத்து மணி பஸ்ஸை பிடித்துவிடலாம்’ என்றார்.

பனி உருகியது போல காற்று பளிங்குத்தன்மையோடு இருந்தது. முதுகுப் பையைக் காவியவாறு என்னுடைய விருந்தாளி படிகளில் இறங்கினார். சனூசியிடமும் கமாறாவிடமும் சொல்லிக்கொண்டார். இன்னொருமுறை என் கைகளைப் பாசமுடன் குலுக்கி விடைபெற் றார். ஒருவித ஏக்கத்துடனும் விருப்பமின்மையுடனும் ஓர் ஆதிவாசி மனிதன் போல தோள்களை ஒடுக்கி முன்னே குனிந்து நடக்கத் தொடங்கினார். நான் வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குப் பக்கத்தில் கமாறாவும் சனூசியும் நின்றார்கள்.

சிறிது தூரம் சென்றவர் எதையோ நினைத்துக்கொண்டது போல திடீரென்று திரும்பி வந்தார். என் மனம் பதைத்தது. நான் நினைத்தது சரியென்று தோன்றியது. பஸ் கட்டணத்தை அவர் கேட்காமலே கொடுத்திருக்கலாம். இந்த நல்ல மனிதரின் மனம் வேதனைப்பட அனுமதித்துவிட்டோமே என்று நொந்து கொண்டேன்.

என்னிடம் மிகக் கிட்ட வந்தவர் சொன்னார். ‘இதுதான் உங்களைப் பார்ப்பது கடைசித் தடவை என்று எண்ணுகிறேன். இனிமேல் இதைச் சொல்வதற்கு சந்தர்ப்பமும் கிடைக்காது. பல வருடங் களுக்குப் பிறகு உங்கள் தயவில் ஓர் உயர்ரக வைனைப் பருக முடிந்தது. முகம் தெரியாத எனக்கு நீங்கள் செய்த இந்த மரியாதை மிக அதிகமானது. என் நிதி நிலைமையில் இப்படியான வைனை நான் இனிமேல் அருந்துவது சாத்தியமில்லை. சாகும் வரை இதை மறக்கமாட்டேன்’ என்றார்.

நான் திகைத்துவிட்டேன். தன் உலகத்து உடமைகளையெல்லாம் ஒரு முதுகுப் பையில் காவி வந்த இவருக்கு வயதாகிய வைனின் சுவை நுட்பம் தெரிந்திருந்தது. ஏதோ பதில் கூறுவதற்காக வாயைத் திறந்தேன். அதைக் கேட்காமல் அவர் குதிக்காலில் திரும்பிவிட்டார்.

அந்தச் சனிக்கிழமை காலை , அவர் முழுச் சூரியனை நோக்கி, பெருவிரல்கள் தெரியும் காலணிகளைப் போட்டுக்கொண்டு நடந்து போனார். அந்த உருவம் கறுப்பாகும் வரை நாங்கள் அங்கே நின்றோம்.

நான் பின்னும் ஐந்து ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் வசித்தேன். அந்த வருடங்களில் என்னைத் தேடி ஒரு விருந்தாளிகூட வந்ததில்லை. என் ஆப்பிரிக்க சரித்திரத்தில் என்னிடம் வந்த ஒரேயொரு விருந்தாளி அவர்தான்.

ஜெகன் என்ற பெயரில் வந்த இந்த விருந்தாளி, தன் முழுப் பெயரையும் சொல்ல மறந்துவிட்டவர், ஓர் இரவு மறக்க முடியாத சந்தோஷத்தை எனக்குத் தந்தவர், லட்சாதிபதியாகும் கனவுகளுடன் கள்ள வழியாக அயல் நாடு சென்றவர், அதற்குப் பிறகு என்ன ஆனார் என்பது கடைசிவரை எனக்குத் தெரியாமலே போய்விட்டது.

– மஹாராஜாவின் ரயில் வண்டி, முதற் பதிப்பு: டிசம்பர் 2001, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *