மனம் ஒரு குரங்கு. தான் நினைப்பதை அடைய பிடிவாதமாக செயல்படும். பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் யோசிக்காது. அரசாங்க சட்டங்கள், சமூகத்தில் எழுதப்படாத சட்டங்களை மீறுவதில் மகிழ்ச்சி கிடைப்பதாகக்கருதும். எதைக்கூடாது என கருதுகிறோமோ அதை செய்திட ஆவலாக இருக்கும். சின்னச்சின்ன ஆசைகளை உடனே அடைய முயலும். அது பிறருக்குரியதாயினும் பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளத்துடிக்கும். உறங்க விடாமல் உடலையும் தடுக்கும்.
இன்று விடியும் வரை கண்களை மூடியும் உறக்கம் வரவில்லை கயாராவிற்கு. கயாரா திருமணமாகி வெளிநாட்டுக்கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவள். ஏழைக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உயர் நிலையை அடைய வேண்டுமென சிறு வயது முதல் லட்சியக்கனவுகளுடன் பள்ளி முதல் கல்லூரி வரை முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவள். சாமுத்திரிகா லட்சணங்களை ஒருங்கே கொண்ட அழகிதான்.

அறிவும், அழகும் ஒன்று சேர்ந்திருந்தவளை அதிர்ஷ்டம் அணைத்துக்கொண்டது. கல்லூரி இறுதியாண்டில் படிக்கும் போது நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திட, கிடைத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க படிப்படியான உயர்வு, அடிக்கடி கம்பெனி சார்பாக வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு. இத்தருணத்தில் நல்ல வரனும் அமைய நகரின் பெரிய திருமண மண்டபத்தில் ஊரும், உறவும் வியக்க ஆடம்பரமாக திருமணம் நடந்தது.
மனமொத்த தம்பதியராக கயாராவும் கணவன் பார்க்கவனும் வாழ்ந்த நிலையில், அலுவலகத்தில் இன்று நடந்த ஒரு சம்பவம் மனதில் பெரிய குழப்பத்தை என்பதை விட பூகம்பத்தையே உருவாக்கியது.
“கயாரா…”
“சார்….”
“உங்களை பார்த்திட்டே இருக்கனம் போல இருக்கு. அழகு தேவதையா மட்டுமில்லை வேற எதோ ஒன்னு கிறங்கடிக்குது….”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க சார். இனப்பெருக்கத்துக்காக மனிதர்களுக்கு இயற்க்கை கொடுத்த ஒரு விசயம். அவ்வளவுதான்”
“நீ ரொம்ப வித்தியாசமா பேசறே…! முப்பது வயசுல தொன்னூறு வயசு கிழவி மாதிரி பேசறே. வயசுக்குரிய விசயங்களை, தோன்றுகிற எண்ணங்களை உன்னோட கால்ல போட்டு மிதிக்கறே. வயசுக்கேற்றபடி வாழக்கத்துக்கனம். அது ஒரு கலை. மரத்துல பழம் எதுக்கு காய்க்குதுன்னு தெரியாம அது வீணா உதிர்ந்து போனாலும் சாப்பிடாம பசியோட அறியாமைல இருக்கிற ஒரு தோட்டக்காரனா நான் இருக்க விரும்பலை. அதோட காய்க்கிற பழங்களை தோட்டக்காரன் மட்டுமில்லை பசிக்கிற யாரு வேணும்னாலும் சாப்பிடலாம். அதுக்கான விலைய வேணும்னா கொடுத்திடலாம். இது வரைக்கும் என்னோட நாற்பது வயசுக்கு உன்னப்போல ஒரு பொண்ண இன்னைக்குத்தான் முதன் முதலா சந்திக்கிறேன். அதோட இந்த உலகத்துலியே என்னோட மனசு மிகவும் விரும்பற பொண்ணா உன்னப்பார்க்கிறேன். இன்னைக்குத்தான் இந்தக்கம்பெனில உனக்கு ஒரு படி மேல உள்ள வேலைல சேர்ந்தாலும், காலைல நீ என்னோட இந்த அறைக்கு வந்ததும் ஒரு நிமிசம் என்னோட உடல்ல ஒரு வித பதட்டம், நடுக்கம் வந்தது. நீ போன பின்னாடி உன் நினைப்பாவே இருந்துச்சு. ஒரு வேலையும் ஓடலை. சொல்லப்போனா என்னோட மூளையே வேலை செய்யலை. நான் நானாவே இல்லை. உனக்கும் எனக்கும் போன ஜென்மத்தொடர்பு கூட இருக்கலாம்” இந்த வார்த்தையை புதிதாக வந்துள்ள தனது கம்பெனி மேலாளர் கரண் சொன்ன போது, தனக்கும் அவர் மீது பிரியம் ஏற்படும் நிலையை மனம் விரும்புவதாக இருந்தாலும் பின் விளைவுகளைச் சிந்தித்து,
“சார் வீட்டிற்கு போக லேட்டாகுது . நாளைக்கு பேசலாமே...” என கூறிவிட்டு வீடு வந்தவள் குளித்து, சமைத்து கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு பரிமாறி தானும் உண்டவள் ‘ஏனோ மனசு ஒரு மாதிரியா இருக்கு. தனியா இருக்கனம் போல இருக்கு’ என கணவனிடம் கூறி விட்டு தனியறையில் சென்று படுத்துக்கொண்டாள்.
காலையில் எழுந்து வந்து பார்த்த போது கணவன் பார்க்கவன் சமையலறையில் டீ போட்டு எடுத்து வந்து மனைவிக்கு கொடுத்து விட்டு தானும் பருகினான்.
“ஒடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா…? ஏன் சோர்வா இருக்கே…? முடியலேன்னா இன்னைக்கு லீவு போட்டுட்டு ரெஸ்ட் எடுத்துக்க”
“இல்லீங்க. நேத்தைக்குத்தான் புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கார். இன்னைக்கே லீவு போட்டா பிரச்சினையாயிடும்.”
“ஓ… அதுதான் தூக்கம் வரலையா…? எல்லாம் போகப்போக பழக்கத்துல சரியாயிடும். அவரு ஒன்னும் கொடிய மிருகமா இருக்க வாய்பில்லை. மனுசன் தானே…? ” எனக்கூறியவர் மனைவியின் கன்னத்தில் ஆசையாக ஒரு முத்தம் பதித்து விட்டு அலுவலகம் செல்லத்தயாரான போது’ இவர் போன்ற கணவர் கிடைக்க தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என நினைத்தவளாய் காலை சிற்றுண்டி செய்யத் தயாரானாள்.
மேனேஜர் அழைப்பதாக பியூன் வந்து சொல்ல எழுந்து சென்ற கயாராவைப்பார்த்த மேனேஜர் கரண் முகம் முழுதும் மகிழ்ச்சியாக “வா கயாரா உட்கார்” என்று ஒருமையில் பேசியது ஒரு மாதிரியாக இருந்தது. ‘இது வேறு மாதிரி போகுதே…? நேற்று வாங்க போங்க என கூறியவர் இன்று அதிக உரிமையோடு மனைவியோடு பேசுவது போல் பேசுகிறாரே…?’ என மனதுள் பயம் கலந்த ஒரு வித புரிதலை உண்டாக்கியது.
“என்ன ராத்திரி பூரா தூங்கலை போலிருக்கு? கணவரை ரொம்பப்புடிக்கும் போல….” என கூறி வில்லனாகச்சிரித்த போது பதில் எதுவும் சொல்லாமல் தலை கவிழ்ந்தாள்.
“சரி நான் பேசறது புரியாததால புடிக்கல போலிருக்கு. புரியும் போது புடிக்கும். போய் வேலையை பாரு” என கூறியதும் தனது இருக்கைக்கு சென்று வேலையில் கவனம் செலுத்தினாள்.
‘இப்படி பச்சையாவே பேசறானே… இன்னும் என்னவெல்லாம் பேசப்போறானோ…? வேலையை விடவும் முடியாது. இவ்வளவு சம்பளத்துல வேற கம்பெனில வேலை சத்தியமா கிடைக்காது. இவன் பேச்சுக்கு கட்டுப்பட்டா என்ன வேணும்னாலும் செய்வான். எது பேசுனாலும் கண்டும் காணாம போயிட வேண்டியது தான் ‘ என நினைத்தவளாய் வேலையில் கவனம் செவுத்தினாள்.
தினமும் ஒரு மணி நேரமாவது தனது அறைக்கு வேலை விசயமாக அழைப்பதும், தனது அழகை வர்ணிப்பதுமாக, கையால் தொடவில்லையே தவிர சாடைமாடையான பேச்சால் தனது அங்கங்களை பங்கம் செய்த போது தீயில் விழுந்த புழுவாகத்துடித்தாள்.
மேலிடத்தில் புகார் செய்யவும் முடியவில்லை. முதலாளிக்கு நண்பனாக இருப்பதால் அவரது வேலை போவதற்கு பதிலாக தனது வேலை போகக்கூடும் என பயந்ததால் பணிந்தாள்.
இன்று அலுவலக விசயமாக கயாராவுடன் ஒரே காரில் வெளியூர் செல்லும் சூழ்நிலையை உருவாக்கியிருந்தான் கரண்.
கயாரா வேறு காரில் வருவதாக கூறிய போது இன்னொரு பெண்ணையும் உடன் அழைத்த போது ஒத்துக்கொண்டாள். சென்ற வேலையை முடிக்க வேண்டுமென்றே தாமதப்படுத்தி அந்த ஊரிலுள்ள ஹோட்டலில் அறையெடுத்து தங்கி விட்டு காலையில் செல்லலாம் என கூறியபோது தூக்கிவாரிப்போட்டது. இருந்தாலும் மறுக்க இயலாதவளாய் சம்மதித்தாள். உடன் வந்த பெண்ணை ‘வேலை முடிந்தது’ என அனுப்பிய கரண், ஹோட்டலில் இரண்டு அறைகளை எடுக்காமல் இருவருக்கும் ஒரே அறையே எடுத்திருந்தான்.
அதே ஹோட்டலில் தங்கிய அறைக்கு கீழே இருந்த உணவறையில் வித விதமான உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிடச்சொன்னபோது சில உணவுகளை சுவைத்தாள் கயாரா.
தான் நினைத்தது நிறைவேறப்போவதாக எண்ணி பூரிப்பிலிருந்தான் கரண். மதுவும் அருந்தினான். கயாராவையும் கட்டாயப்படுத்தி அருந்தச்சொன்ன போது அவள் மறுத்ததோடு அவனுக்கு முன்பே அறைக்குச்செல்வதாகக்கூறிச்சென்று விட்டாள்.
உணவை முழுவதும் உண்டு முடித்த கரண் வானத்து நிலவே தனக்கு வசப்பட்டதாக எண்ணியவனாய் அறைக்குச்சென்றவன் படுக்கையறை மீது அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தவளை பின் பக்கமிருந்து கட்டாயமாக கட்டியணைத்து பரந்த முதுகில் சத்தமிட்டு ஆசையாய் பலமுறை முத்தமிட்டும் அவள் தன்னைத்தடுத்து எதிர்ப்பு தெரிவிக்காததால் மகிழ்ச்சியில் மனம் துள்ளிக்குதிக்க அவளை முழுவதுமாக அள்ளி எடுத்து ஆசையாய் அணைத்தவன், காதல் கைகூடியதாக கருதி அவளது முகத்தில் முத்தமிட முனைந்த போது அதிர்ந்தான். பத்ரகாளியாகவே கோபத்தின் உச்சத்தில் மாறியிருந்தாள் அவளது மனைவி தியாரா.
“நீ…..நீ…. நீ…. எங்கே…. இங்கே….? ” பதறியபடி கேட்டான்.
அவள் கணவனை எரிப்பது போல் பார்த்தாளே தவிர பேசவில்லை. பேச முடியவில்லை. தன் கணவனைப்பற்றி தன் சிநேகிதி மூலமாக கயாரா சொன்ன போது நம்ப மறுத்தவள் இன்று நேரில் நடந்த சம்பவத்தால் மூச்சே ஒரு நிமிடம் நின்று போனது. தினமும் தன் கணவன் தொட வேண்டும் என ஏங்கும் மனம் இன்று, இந்த நொடி தொட்ட போது அருவருப்பாக உணர்ந்தாள்.
அப்போது இன்னொரு அறையிலிருந்த தன் கணவனுடன் உள்ளே வந்த கயாரா பேசினாள்.
“உங்களப்போல அறிவாளிக, அதிகாரத்துல இருக்கறவங்க இப்படிப்பண்ணறதுனால தான் பல திறமையான பொண்ணுங்க வேலையே வேண்டாம்னு வீட்ல முடங்கிடறாங்க. உடம்புல ஏற்படற ஒவ்வொரு விதமான பசியையும் தீர்த்துக்கிறதுக்காகத்தான் நம்ம முன்னோர்கள் ஒழுங்கு முறையை உருவாக்கி அற்புதமான திருமண பந்தத்த கொடுத்துட்டு போயிருக்காங்க. அதை முட்டாள் தனம்னு சொல்லிட்டு மனம் போற போக்குல வாழ, நெனைச்சதை மெத்தப்படிச்ச சமுதாயம் அடைய நெனைக்குது. தனக்கு கீழ இருக்கறவங்க என்ன சொன்னாலும் கேட்பாங்கறத விட, கேட்டே ஆகனங்கிற ஆணவம் தலைக்கேறியதால ஒரு குடும்பப்பொண்ணான என்னை விலைமாதுவைப்போல ஹோட்டல் அறைவரைக்கும் வர வெச்சுட்டீங்க. ஆனா பின் விளைவுகளைப்பற்றி கொஞ்சம் கூட யோசிக்வே இல்லை. வயிறு பசிக்கும் போது தட்டுலதான சாப்பிடறோம். மண்ணுல போட்டு சாப்பிடதில்லை. சாப்பாடே கெடைக்கிலீன்னா மண்ணுல கிடக்கிறத சாப்பிடலாம். மனைவிங்கிற பேர்ல தங்கத்தட்டுல உணவு கெடைச்சும் மண்ணுல சாப்பிடறது அறிவீனத்தோட உச்சம். விருந்து பரிமாறுகிற இடத்துல நமக்கு போட்ட இலைல இருக்கிற உணவ மட்டும் தானே சாப்பிடறோம்? அதுல கூட ஒழுங்கு முறைய கடைப்பிடிக்கிறோம். இரண்டு மூனு இலைன்னு சாப்பிடறமா? அது போலத்தான் எல்லாமும். உங்களுக்குப்பிடிச்ச கொஞ்ச நேர ஆசைக்காக கொஞ்சமும் பிடிக்காத ஒருத்தரோ வாழ்க்கைய சீரழிக்கலாமா? உங்க விபரீத ஆசைனால உங்க வேலை இப்ப போயிட்டதும், உங்க மனைவி உங்களை டைவர்ஸ் பண்ணப்போறதும், அதனால உங்க வாழ்க்கையே சூன்யமாகப்போறதும் உங்களுக்குத் தெரியுமா? ” எனக்கேட்ட போது அதிர்ச்சியடைந்த கரண் கயாராவின் காலிலும், தன் மனைவி தியாராவின் காலிலும் மாறி, மாறி விழுந்து மன்னிப்பு கேட்டும் மனமிறங்காமல் அவன் செய்த தவறுக்கான வாழ்நாள் தண்டனையை நீதிபதிகளைப்போல உறுதி செய்தனர் பெண்கள் இருவரும்.