விபத்து..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 3,960 
 
 

புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி.

சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

” எதுடா… இது…? ” – அன்னபூரணி குரலில் லேசான பதற்றம்.

” அலுவலகத்துல லோன் போட்டு வாங்கினேன். ” – அமர்ந்தான்.

” ஏன்…? ” தணிகாசலம் குரலிலும் கொஞ்சம் நடுக்கம்.

” பேருந்துல அலுவலகத்துக்குப் போக சிரமமா இருக்குப்பா..”

” உன்னை யார் வாங்கச்சொன்னா..? ” – அன்னபூரணி உள்ளுக்குள் தோன்றிய நடுக்கத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

” ஏன்…? ” ஏறிட்டான்.

” உனக்கு இருசக்கர வாகனத்துல கண்டம் இருக்குன்னு வைத்தீஸ்வரன் கோயில் சோசியக்காரன் சொல்லி இருக்கான்.!.”

” அப்பா! கண்டமாவது கத்தரிக்காயாவது…? ” – சேகருக்கு சிரிப்பு வந்தது.

” சேகர் ! அப்படியெல்லாம் சொல்லாதே ! என் அப்பாவுக்குத் தண்ணியில காண்டாமிருக்குன்னு சொன்னான்.” – அன்னபூரணி.

” அதான் சாராயத்துல செத்துப்போனாரா …? ” – சேகர் சிரித்தான்.

” எதிலும் விளையாட்டு. சிரிக்காக்காதே. சாராயமும் தண்ணிதானேடா..!”

” ஐயோ…! அம்மா ! அம்மா..! ” – சேகர் தலையில் அடித்துக்கொண்டான். ”

” இதோ பார். மொதல்ல பெத்தவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடு. அவுங்க சொல் கேள்.! ”

சேகர் கொஞ்ச நேரம் யோசித்தான்.

அவர்கள் வருத்தப்படுவது புரிந்தது.

” சரியப்பா. பெத்தவங்க வார்த்தைக்கு மதிப்புக்கு கொடுக்கிறேன். இப்போ நான் என்ன செய்யனும்… ? ” தழைந்தான்.

” வண்டியை வித்துடு…”

ஆசையாய் வாங்கியது.

” அப்பா..ஆ…! ” அதிர்ந்தான். திடுக்கிட்டான்.

” ஆமாம்.. சொல்றதைக் கேள்…! ” – அம்மா.

” சரிம்மா. இந்த வண்டி இப்போ தட்டுப்பாடு. என் நண்பன் ராமுவுக்கு இதன் மேல் ஆசை. நாளைக்கே கொடுத்துடுறேன் . ”

” வேணாம். இப்பவே கொண்டு போய்க் கொடுத்திடு…” – அன்னபூரணிக்கு அதைப் பார்க்கவே பயமாக இருந்தது. எமனாய்த் தெரிந்தது. அவளுக்கு சோசியத்தில் அதீத நம்பிக்கை.

தயங்கினான்.

” போடா…! ” – அப்பா.

” சரிப்பா…! ”

சேகர் வெளியே வந்து மனசில்லாமல் வண்டியை எடுத்தான்.

பத்து நிமிடத்தில் தணிக்காசலம் கைபேசி ஒலித்தது.

எடுத்துப் பார்த்தார். நண்பன்.

” என்ன…கோபால்…? ”

” லாரி மோதி உன் பையன் வண்டி விபத்து. சீக்கிரம் ஓடிவா..”

” எங்கே…? ” – பதறினார்.

” பைபாஸ்ல ”

உடனே கிளம்பினார்.

அருகில் நின்று கேட்ட… அன்னபூரணிக்கு உடல் நடுங்கியது.

”என்னங்க. நானும் வர்றேன்..! ” பதறினாள்.

மறுத்துப் பேச வழி இல்லை.

” சரி வா. ”

வெளியே வந்து தன் சிறுசக்கர வாகனத்தை எடுத்தார்.

அன்னபூரணி தொற்றினாள்.

‘ பதற்றத்தில் இவர் எங்காத்து மோதி விபத்தை ஏற்படுத்தி விடப்போகிறாரோ ! ‘ என்கிற பயத்தில்….

” என்னங்க. பார்த்துப் போங்க…” – நடுக்கத்துடன் சொன்னாள்.

பத்து நிமிடப் பயணத்தில்….தூரத்தில்….கூட்டமாகத் தெரிந்தது.

அதற்கடுத்து…

புல்லட் ஒன்று… சாலை ஓரமாக நசுங்கிக் கிடைக்க…அதற்கு சிறிது தூரத்தில் லாரி.

‘ ஐயோ மகனே…! ‘ – பெற்றவர்கள் இருவரும் மனசுக்குள் சத்தம் போடாமல் குரலெழுப்பி…

வண்டியை நிறுத்திவிட்டு கூட்டத்தை விலக்கிப் பார்க்க….

யாரிடமோ பேசிவிட்டு… கைப்பேசியைக் காதிலிருந்து எடுத்த சேகர்….

” ஒண்ணுமில்லேப்பா. வண்டியை நிறுத்திட்டு டீ குடிச்சேன். வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிடுச்சி. எனக்கு ஒண்ணுமில்லே. வண்டிதான் சேதாரம். அதுக்குக் கண்டம். ! ” – சொன்னான்.

‘ அலுவலகம் விட்டு வந்த மகனை டீ கூட குடிக்கவிடாமல் துரத்தி விட்டதால் இந்த விபத்து. !! ‘ – என்று நினைத்தத் தணிகாசலம், அன்னபூரணிக்கு….

‘ ஆமாம். கண்டம் யாருக்கு..???!!! ‘ – பேசமுடியவில்லை. !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *