தன் கைக்கட்டை மெல்லமாய் வருடிக்கொடுத்தவாறு, அவன் அந்த முன்னறையில் அமர்ந்திருந்தான்.
பழகிய சூழலின் கெமிக்கல் வாசனை, சிறிது தூரத்தில் தெரியும் தொழிற்சாலைத் தளத்தில், இயந்திரங்களிடையே நின்று, அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், அலுவலகக் கட்டிடத்தில் வெறுமனே உட்கார்ந்திருப்பதுதான், அவனால் ஏற்கமுடியாத முரணாய் இருந்தது.
போதாக்குறைக்கு, ஜன்னல்வழியே தெரிந்த அறிவிப்புப் பலகையும், அவனுக்குள் கத்திபோல் சுருக்கென்று பாய்ந்துகொண்டிருந்தது. அந்த போர்டில், ஒழுங்கில்லாத சாக்கட்டியினால் எழுதப்பட்டிருந்ததை, மௌனமாய் வாசித்துக்கொண்டிருந்தான் அவன்.
ஆண்டு : 2003
மாதம் : டிசம்பர்
இந்த மாதத்தில் நேர்ந்துள்ள விபத்துகள் : 1
இந்த ஆண்டில் நேர்ந்துள்ள விபத்துகள் : 1
சமீபத்திய விபத்து : 02 / 12 / 2003
கடைசி வரியைப் படிக்கையில், சட்டென்று அவன் கண்களில் நீர் திரண்டது. அந்த இரண்டாம் தேதியை மறுபடி, அவன் நினைக்கவும் விரும்பவில்லை.
அப்படியொன்றும் பெரிய விபத்தில்லை, வழக்கமான மெஷினில் ஏதோ ஒரு கோளாறு, சரி செய்வதாக நினைத்துக்கொண்டு எங்கோ கையைக் கொடுக்க, அது ஆவேசமாய்ப் பிடித்திழுத்துவிட்டது, அனுபவ அனிச்சையாய்க் கையை உதறியதில், மெஷினின் முரட்டுப் பிடியிலிருந்து தப்பித்துவிட்டான், என்றாலும், தடுமாறிக் கீழே விழுந்ததில், பாரமெல்லாம் கையில் இறங்கி, இரண்டு எலும்பு முறிவுகள் !
முதன்முதலாக பரிசோதித்த கம்பெனி டாக்டரில் துவங்கி, சமீபத்தில் மாவுக்கட்டு மாற்றிய நர்ஸ்வரையில், யாரும் அவனுடைய காயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ‘கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாப்போயிடும் மிஸ்டர். மூர்த்தி !’, என்றுதான் திரும்பத்திரும்ப சொன்னார்கள்.
அவனுடைய மனைவிகூட, முதல் நாள் ரொம்ப அழுதவள், பின்னர் அவனுடைய கைக்கட்டிற்குப் பழகிக்கொண்டுவிட்டாள், அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லைபோல், ‘கை சரியானப்புறம், என்னை திருப்பதிக்குக் கூட்டிட்டுப்போங்க, மலையேறி வர்றதா வேண்டிகிட்டிருக்கேன்’, என்று சகஜமாய் பேசத்தொடங்கிவிட்டாள்.
அவனுக்கும், இதில் பெரிய வருத்தம் ஏதுமில்லைதான். கை முறிந்து, தொழிற்சாலையிலிருந்து, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும்வரை, உயிர் போவதுபோல் வலித்தது, ஆனால், கட்டுப்போட்டபின், அவ்வளவாய் வலி இல்லை, தவிர, பதினெட்டு ஆண்டு கால சர்வீஸில், இதுபோன்ற சிறு காயங்களுக்குப் பழகியிருந்தான் அவன் – நீண்ட கட்டாய விடுப்புதான் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாயிருந்தது. அதுவும் சீக்கிரமே பழகிவிட்டது. சொல்லப்போனால், ‘இத்தனை வருஷமா மாடுமாதிரி உழைச்சிருக்கேன், கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிட்டாதான் என்னவாம் ?’, என்றுகூட நினைக்கத்தொடங்கிவிட்டான் அவன்.
ஆனால், சம்பளம் மற்றும் உதவித் தொகை விஷயமாக இந்த அலுவலகத்துக்கு வந்தபோதுதான், அவன் சற்றும் எதிர்பார்த்திராத ஒரு கோணத்திலிருந்து தாக்கப்பட்டான்.
அவனுக்கான மருத்துவ உதவிக் காசோலையைத் தயாராக எழுதி வைத்திருந்த உதவி மேனேஜர், அந்தக் கவரை அவனிடம் கொடுக்குமுன், பழகிய தோரணையில் சிரித்தபடி, சாதாரணமாகதான் கேட்டார், ‘என்னப்பா மூர்த்தி, இந்த வருஷம்முழுசும் ஒரு ஆக்ஸிடென்ட்கூட இல்லாம ஓட்டிடலாம்-ன்னு பார்த்தோம், அந்த நினைப்பில இப்படி மண்ணைப் போட்டுட்டியே !’
இதைக் கேட்டதும், அவன் மின்சாரத்தால் தாக்கப்பட்டதுபோல் உணர்ந்தான். தலை சட்டென்று பின்புறமிருந்த ஜன்னலைத் திரும்பிப்பார்க்க, ஆண்டுமுழுதும், பதினோரு மாதங்கள் வெறுமையாயிருந்த விபத்து அறிவிப்புப் பலகை, இப்போது நிரம்பியிருந்தது !
‘என்னாச்சு மூர்த்தி ?’, உதவி மேனேஜர் அக்கறையோடு விசாரித்தார், ‘நான் சும்மா விளையாட்டுக்குக் கேட்டேன்பா, அதைப்போய் சீரியஸா எடுத்துகிட்டியா என்ன ?’
‘அ – அதெல்லாம் ஒண்ணுமில்லை சார் !’, அவனுடைய வார்த்தைகள் திக்கித் திணறி வெளிவந்தன. மனதினுள், நூறு மெஷின்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்ததுபோல் கனத்தது, காசோலையை வாங்கிக்கொள்வதற்கு, கை நீட்டக் கூசினான்.
‘மூர்த்தி, ஆர் யு ஆல்ரைட் ?’
‘யெஸ் ஸார்’, சட்டென்று எழுந்துகொண்டான் அவன், ‘நான் கிளம்பறேன் சார் !’
‘செக் வாங்கிக்கலையே மூர்த்தி !’
‘கொடுங்க சார்’, அவரிடமிருந்து, கிட்டத்தட்ட பிடுங்குவதைப்போல் அந்த உறையை வாங்கி, பிரித்தும் பார்க்காமல் சட்டைப் பையில் திணித்துக்கொண்டான், ‘நான் வர்றேன் சார் !’, இடது கையால் ஒரு சிறிய சல்யூட் அடித்துவிட்டு, பொய்ப் புன்னகையோடு வெளியேறினான்.
எங்கும் மரங்கள் நிறைந்த அந்தத் தொழிற்சாலைச் சூழல், இப்போது மிக வெம்மையாய்த் தோன்றியது அவனுக்கு, முன்பு எப்போதும், அவன் இந்தக் கட்டிடங்களை அந்நியமாய் நினைத்ததில்லை – ஆனால் இன்றைக்கு, அவனையும் மீறி, உள்ளே பொங்கும் சுய இரக்க எண்ணங்களை அவனால் கட்டுப்படுத்தக் கூடவில்லை, தன்னை நம்பிய அந்தத் தொழிற்சாலைக்கு, பெரிய துரோகம் செய்துவிட்டவனைப்போல் உணர்ந்தான்.
அவனுடைய விபத்தை பகிரங்கமாய் அறிவித்த அந்தப் பலகையின்கீழ், சிறிதுநேரம் ஆசுவாசமாய் நின்றான் மூர்த்தி, பெப்பெரியதாக அதில் எழுதப்பட்டிருந்த ‘1’, இன்னும் பிரம்மாண்டமாய் விஸ்வரூபமெடுத்து, ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம்போல் அதற்குக் கைகளும், கால்களும் முளைத்து, அத்தனையும் அவனைச் சுட்டிக் காண்பித்து கேலி செய்வதுபோல் உணர்ந்தான் அவன். அல்லது, அந்த அறிவிப்புப் பலகையை ஒரு பூ மரமாகவும், அதில் கோடாலியைக் கொண்டு, அழிக்கமுடியாத ஒரு ஆழமான தழும்பை, அவன் செய்துவிட்டாற்போலவும்.
இந்தச் சிந்தனைகளாலேயே உடம்பில் சக்தி குறைந்துவிட்டாற்போலிருந்தது, கண்ணொளி லேசாய் மங்கியது, கண்களைச் சுருக்கிக்கொண்டு, அந்த அலுவலகக் கட்டிடத்தையும், தொழிற்சாலையையும் இணைக்கும் தார்ச்சாலையைப் பார்த்தான் மூர்த்தி. மரியாதைக்குரியவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பதைப்போல, அவமானத்துக்குரியவர்களுக்கான கறுப்புக் கம்பள வரவேற்பாக, அவனுக்கு அந்தச் சாலை தெரிந்தது.
அதைப் பார்க்கையில், அவனுக்குள் அளவற்ற ஆற்றாமையும், அவமான உணர்வும் பொங்கியது – இருபுறமும் மரங்களால் அரவணைக்கப்பட்டிருந்த அந்தச் சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் – நடந்துபோகிறவர்களில் துவங்கி, வெளிநாட்டுக் காரில் செல்லும் முதலாளிமார்வரை எல்லோரும், அந்தப் பலகையைப் பார்க்கிறார்கள், அவனுடைய விபத்தின் தகவல்களைப் படித்தறிகிறார்கள், ‘மோசமான பய, நம்ம கம்பெனிக்குக் கிடைக்க இருந்த நல்ல பேரைக் கெடுத்துட்டான் !’, என்று காறி உமிழ்கிறார்கள் !
வியர்வை துளிர்த்திருந்த முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டான் அவன். எல்லோரும் அவனையே பார்த்துக்கொண்டிருப்பதுபோன்ற அந்தக் குற்ற உணர்வை, அத்தனை சுலபத்தில் துடைத்தெறிந்துவிடமுடியும் என்று தோன்றவில்லை.
அந்தத் தொழிற்சாலையில் இதுபோன்ற சிறு விபத்துகள் சகஜம்தான். ஆண்டவன் புண்ணியத்தில் இதுவரை யாருக்கும் உயிர் போனதில்லை, என்றாலும், வருடம்தவறாமல் ஏழெட்டு விபத்துகளாவது நிகழ்வது நிச்சயம், அந்த சந்தர்ப்பங்களில், காயம் பட்டவர்களுக்குத் தேவையான சிகிச்சையும், உதவித் தொகையும் தருவதில் கம்பெனியார் ஒரு குறை வைத்ததில்லை.
இந்த வருடம்தான், அதிசயமாய், நவம்பர் இறுதிவரை எந்த விபத்தும் நடக்காமலிருந்தது. பலமுறை, ஷி·ப்டுக்கு வரும்போது, மூர்த்தியும், அவனது சக தொழிலாளர்களும், டிபன் பாக்ஸ் காக்கிப் பைகளை விசிறினபடி, அந்த விபத்து அறிவிப்புப் பலகையின் வெறுமையை, அதன் முக்கியத்துவத்தை உணராத மௌனத்துடன், எந்தச் சலனமும் இன்றி பார்த்துக்கொண்டு நடந்திருக்கிறார்கள்.
அதே பலகை, இப்போது ஒரு பெரிய கரும்புள்ளியாய், மூர்த்தியின்மேல் ஏறி உட்கார்ந்துகொண்டுவிட்டது, ‘பாவிப் பயலே, நீ உருப்படுவியா ?’, வாய்க்கு வந்தபடி திட்டுகிறது, ‘அப்படி என்னடா அலட்சியம் ? கொஞ்சம் கவனமா இருக்கமுடியாதா உன்னால ?’
சட்டென்று கண்களில் நீர் துளிர்க்க, அவன் பாக்கெட்டிலிருந்து அழுக்கான கைக்குட்டையை எடுத்து, கண்களை ஒற்றிக்கொண்டான்.
உண்மையில், அந்த விபத்துக்கு அவன் எந்த விதத்திலும் காரணமில்லை என்றுதான் சொல்லவேண்டும் – பாதுகாப்பு நடவடிக்கைகளின்மூலம் தவிர்க்கக்கூடிய அளவுக்குப் பெரிய விபத்தும் இல்லை அது, மிக யதேச்சையாய், யாருக்கும் நடந்திருக்கக்கூடியதுதான் – சாலையில் சாதுவாக நடந்து செல்கிறவன், ஒரு கருங்கல்லில் தடுக்கிக் கீழே விழுவதுபோல, அவனுக்கு, அது நடக்கவேண்டும் என்று எங்கோ எழுதியிருக்கிறது, நடந்துவிட்டது. அவ்வளவுதான் !
இதே விபத்து, போன வருடம் நிகழ்ந்திருந்தால், தனக்குள் இப்படி எந்தக் குற்றவுணர்ச்சியும் உண்டாகவேண்டிய அவசியம் இருந்திருக்காது என அவன் நினைத்துக்கொண்டான் – அந்த வருடத்தில் மொத்தம் பத்து விபத்துகள் நிகழ்ந்திருந்தன – பத்தோடு பதினொன்று, அத்தோட இது ஒன்று, அவ்வளவுதான் !
ஆனால் இப்போது, நிலைமை வேறு. எந்த விபத்தும் இல்லாமல், பதினொரு மாதங்கள் கட்டிக் காத்த பெருமையை, ஒரே நாளில் உடைத்துத் தூளாக்கிவிட்டான் அவன், ஆசாரமான வீட்டின் பூஜையறைக்குள், செருப்புக் காலுடன் நுழைந்த புது மருமகள்போல !
ஆனால், நான் புது மருமகள் இல்லையே ? விஷயம் தெரிந்தவன்தானே ? எனது அலட்சியத்தாலன்றி, என்னையும் மீறி நடந்த விபத்துதானே இது ? ‘விபத்து’ என்றாலே எதிர்பாராமல் நிகழ்வது எனும்போது, நான் எப்படி இதற்குப் பொறுப்பாளியாகமுடியும் ?
நேரடிப் பொறுப்பில்லாவிட்டாலும், தார்மீகப் பொறுப்பு என்று ஒரு விஷயம் இருக்கிறதே – விபத்துகளற்ற ஒரு ஆண்டைக் கழித்துவிடலாம் என்று எல்லோரும் உற்சாகமாய் நம்பிக்கொண்டிருக்கையில், அந்த எண்ணத்தைப் பிடுங்கி, கீழே போட்டு உடைத்துவிட்டது எந்தவிதத்திலும் சரியில்லைதான்.
அவன் மீண்டும் அந்தப் பலகையை நிமிர்ந்து பார்த்தான். ஒரு விபத்து, ஒரே ஒரு விபத்து, இந்த வருடம் முழுமையும் கடைப்பிடித்த பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம், மொத்தமாய் கேலி செய்வதுபோல், ஒற்றை விபத்து !
அவன் நின்றநிலையில் சரேலென்று திரும்பி, அங்கிருந்து விலகி நடந்தான். கம்பெனிப் பேருந்துக்காக காத்திருக்கவும் தோன்றவில்லை, முடிவில்லாமல் நீண்ட தார்ச்சாலைகளில், வழக்கத்தைவிட அதிக வேகத்துடன், வியர்க்க விறுவிறுக்க நடந்தான் அவன். கிட்டத்தட்ட இருபது நிமிடங்களுக்குப்பின், வீட்டுக்கு வந்துசேரும்வரை, அவனுடைய வேகம் குறையவேயில்லை – அந்த விபத்தின் பின்விளைவுகளைப்பற்றியே ஓயாமல் சிந்தித்துக்கொண்டிருக்கும் மனதை, சிறிது நேரமாவது, வேறு விஷயத்துக்குத் திருப்புவதற்கு, ஏதோ, அவனாலான உத்தி.
வீடு, அவனுக்குப் பழக்கமற்ற வெறுமையாய்க் கிடந்தது. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றிருந்தார்கள், அவன் மனைவி ஏதோ ஒரு சினிமாவுக்குப் போயிருப்பதாய் ஞாபகம், அல்லது பக்கத்துக் கோவிலில் விசேஷ பூஜை. அவனுக்கு எதுவுமே சரியாய் நினைவிருக்கவில்லை. கதவைத் தாளிட்டுவிட்டு, படுக்கையில் துவண்டு சரிந்தான்.
பஞ்சு மெத்தையின் இதமான சுகம், அவனுக்குள் இனம்புரியாத உறுத்தலைத் தோற்றுவித்தது – கம்பெனியின் பெருந்தலைகள் எல்லோரும் மொத்தமாய்ச் சேர்ந்து, அவன் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வருகிறார்கள், தெலுங்கு சினிமா வில்லன்கள்போல், கைக்குட்டையைச் சுருட்டி, மேல் நெற்றியில் அலங்காரமாய்க் கட்டிக்கொண்டு, ‘டாய்’, என்று கத்துகிறார்கள், ‘மவனே, செய்யறதையும் செஞ்சுபுட்டு, நிம்மதியாத் தூங்கறியா நீ ?’, என்று அவன் காலில் உதைக்கிறான் ஒருவன்.
‘சார், நான் ஒண்ணும் செய்யலையே சார் !’, பதறி எழுந்த அவன் கெஞ்சலாய்ச் சொல்கிறான்.
‘பேசாதடா, நாயே !’, என்று யாரோ கத்துகிறார்கள், ‘வருஷம்முழுக்க ஒரு ஆக்ஸிடென்ட்கூட இல்லாம கம்பெனி நடத்தறோம்-ன்னு எங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கறதா இருந்தாங்க, இப்போ உன்னால எல்லாமே கெட்டுப்போச்சு !’
‘அச்சச்சோ !’, என்கிறான் மூர்த்தி, அவன் அறிந்தவரை, தலைமுழுதும் வழுக்கையேறிய விஞ்ஞானிகளுக்குமட்டும்தான் வழங்கப்படும் நோபல் பரிசை, தொழிற்சாலைப் பாதுகாப்புக்கெல்லாம்கூட தருவார்களா என்று அவனுக்குத் தெரியவில்லை. என்றாலும், பெரிய முதலாளிகள் சொல்லும்போது நம்பாமல் இருக்கமுடியுமா ? ‘என்னை மன்னிச்சுடுங்க சார் !’, ஆத்மார்த்தமாய்ச் சொல்கிறான்.
‘என்னடா மன்னிப்பு ?’, மறுபடி ஒருவன் உதைக்கிறான், ‘ஒரே ஒரு ஆக்ஸிடென்டால நம்ம கம்பெனிக்குக் கிடைக்க இருந்த பெருமையெல்லாம் போச் ! நீ வெளியே போ, உன்னை டிஸ்மிஸ் பண்ணியாச்சு ! கெட் அவுட், கெட் அவுட் !’
‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார் !’, மூர்த்தியின் குரல் தழுதழுக்கிறது, ‘நான் புள்ளகுட்டிக்காரன் !’
‘புள்ளயாவது, குட்டியாவது’, இன்னொரு முதலாளி அவன் முகத்தில் குத்துகிறார், ‘ஒழுங்கா ஓடிப்போயிடு, இல்லைன்னா, இன்னொரு கையையும் உடைச்சு, ரெண்டு ஆக்ஸிடென்ட்ன்னு பதிவு பண்ணிடுவோம் !’
‘ஐ, இது நல்ல ஐடியாவா இருக்கே !’, என்று ஒருவர் குதூகலித்தார், ‘எப்படியும் நமக்கு அவார்ட் இல்லை-ன்னு ஆயிடுச்சு, ஒரு ஆக்ஸிடென்ட்ன்னு சொன்னாதானே எல்லாரும் நம்ம கம்பெனியைப் பரிதாபமாப் பார்த்து உச்சுக்கொட்டுவாங்க ? அதையே ரெண்டாக்கிட்டா ?’, ஒளிரும் கண்களோடு அவர் சொல்ல, எல்லோரும் குண்டாந்தடிகளுடன் மொத்தமாய் மூர்த்தியின் படுக்கையைச் சூழ்ந்தபோது, அவன் திடுக்கிட்டு விழித்துக்கொண்டான்.
பைத்தியக்காரத்தனமான அந்தக் கனவை அசைபோட்டபடி, பக்கத்தில் மடிந்து கிடந்த போர்வையால் முகத்தைத் துடைத்துக்கொண்டான் அவன்.
ஆனால், நிஜமாகவே அந்தக் கனவுமுழுதும் பைத்தியக்காரத்தனம்தானா. அல்லது, மிகைப்படுத்தப்பட்ட உண்மையா என்னும் கேள்வியை அவனால் தவிர்க்கமுடியவில்லை. ‘ச்சீ, அசடு !’ என்று மொத்தத்தையும் புறங்கையால் ஒதுக்கிவிடுவதா, அல்லது, அதில் பொதிந்திருக்கும் உள்செய்தியைத் தேடி எடுக்கவேண்டுமா ?
அநாவசியமாய்க் குப்பையைக் கிளறிக்கொண்டிருப்பதில் அவனுக்குப் பிரியமில்லைதான். ஆனால், மற்றவர்கள் அவன் நரகலுக்குள் கிடப்பதாக நினைத்துக்கொண்டிருந்தால் ? அல்லது, உண்மையிலேயே அவன்மேல் அவர்கள் குப்பைகளை எறிந்துகொண்டிருந்தால் ? அசூயைப்படாமல், அந்தக் அசுத்தத்திலிருந்து விலகி நடந்தால்தானே உண்டு ?
விலகுவதா ? எப்படி ? இனிமேல் எப்படி ? இந்தக் கரும்புள்ளி, வெறும் கறைதானா ? அல்லது தழும்பா ?
கேள்விகள் பெருகப் பெருக, இயலா ஆற்றாமையுடன் அழுகை பொங்கியது அவனுக்கு.
****
நாற்பத்தைந்து நாள் ஓய்வுக்குப்பின், அவன் மீண்டும் டியூட்டியில் சேர்ந்தபோது, நண்பர்கள் மூர்த்தியை ஆரவாரமாய் வரவேற்றனர், ‘என்னய்யா, முகத்தில ஒரு எக்ஸ்ட்ரா பொலிவு தெரியுது ?’, என்றும், ‘நல்லாத் தின்னு குண்டாயிட்டேபோலிருக்கு ?’ என்றும் விதவிதமான விசாரிப்புகள்.
பூடகமானதொரு புன்னகையுடன், அவன் அவர்களை எதிர்கொண்டான். யாரும் அந்தப் பழைய விபத்தை நினைவுபடுத்தாமல், சகஜமாய்ப் பேசியது, ரொம்ப சந்தோஷமாயிருந்தது.
மதியச் சாப்பாட்டிற்காக கேன்டீன் க்யூவில் நின்றிருந்தபோதுதான், பேக்கிங் செக்ஷன் சுப்புரத்தினம் அவனுடைய தோளில் தட்டிப்போனான், ‘என்னாச்சுய்யா ? கொஞ்ச நாளா ஆளையே காணோம் ?’
‘ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் சுப்பி, ரெண்டு மாசம் லீவ்ல இருந்தேன் !’, அவன் தயக்கமாய்ச் சொல்ல, சுப்புரத்தினத்தின் முகத்தில் ஆச்சரியச் சுருங்கல்கள், ‘ஆக்ஸிடென்டா ? அது எப்போ ?’, என்றான் திகைத்த குரலில், ‘யாருமே எனக்குச் சொல்லலையேப்பா !’
அதைக் கேட்கையில், ஏனோ மிக வெட்கமாய் உணர்ந்தான் மூர்த்தி. சட்டென்று தலை கவிழ்த்து, உள்ளுக்குள் மெல்லமாய்ச் சிரித்துக்கொண்டான். அன்று காலை ·பேக்டரியினுள் நுழைகையில் பார்த்த விபத்து அறிவிப்புப் பலகையின் கழுவித் துடைத்த வெறுமை நினைவுக்கு வந்தது, புதிய ஆண்டின் விபத்துகளற்ற உற்சாகம், அந்த வெற்றுப் பலகையில் அழுத்தமாய்ப் பதிவாகியிருந்ததை, முன்பெப்போதுமில்லாத நுட்பத்துடன் அவனால் உணரமுடிந்திருந்தது.
‘என்னய்யா ? பேச்சே காணோம் ?’
‘அதைவிடுப்பா, பழைய சமாச்சாரம், எல்லாம் சுத்தமா கழுவித் துடைச்சாச்சு’, என்றான் மூர்த்தி, ‘வேற எதுனா பேசுவோம், கீரை வடை சாப்பிடறியா ?’
நன்றி: ‘வடக்கு வாசல்’ மாத இதழ்
– என். சொக்கன் [nchokkan@gmail.com]