(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘சாப்பாட்டுல உப்ப கூட்டிப் போட்டதுமில்லாம எரும மாட்டப்போல பாத்துக்கிட்டு நிக்கிறா. அடியே ஒனக்கு அப்படி என்ன யோசன?
பரமசிவம் கர்ஜிக்க வேலைக்காரி வனிதாவுக்கு விழியோரத்தில் நீர் கசிந்தது. உப்பு அளவாகத்தானே இருந்தது? ஒருவேளை குழந்தை அழும்போது ஏற்பட்ட பரபரப்பால் உப்பு கூடிவிட்டதோ? இல்லையே. இன்று அவள் சமைக்கும் போது குழந்தை ராணியிடம்தானே இருந்தது.
இவர் இப்படித்தான். மனைவியிடம் அவருக்கிருந்த பயம் காரணமாக ஏதாவதொன்றென்றால் வனிதாவிடம் எரிந்து விழுவார். அதுவும் சாப்பாட்டு நேரம் என்றால் உப்பு கூடியிருக்கும் அல்லது காரம் குறைந்திருக்கும். இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் விளங்காது. இந்த திட்டுதல் புதிதல்லவே. பழகிப்போய் புளித்துவிட்ட விடயம். வனிதா தரையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். மேசையில் அமர்ந்திருந்த பரமசிவத்தின் மனைவி ராணியும் அதற்கு உடன்பட்டாற்போல
‘சனியன். செய்றதையும் செஞ்சிட்டு நிக்கிறா பாரு. இன்னக்கி பகலக்கி உனக்கு சாப்பாடு இல்ல. இதுதான் தண்டனை. அப்பதான் நீ சரியா வருவே’
வார்த்தைகளை கத்தியாக்கி வீசினாள். வனிதாவின் மனம் அனலிடையே அகப்பட்ட புழுபோல துடித்தது. அப்போது பார்த்து உள்ளே குழந்தை அழும் சத்தம் கேட்டது.
‘கொழந்த அழுவுறது காதுல விழல? மசமசன்னு நிக்காம போயி கொழந்தய தூக்கிட்டு வாடி கறுப்பி’ மீண்டும் பரமசிவம்தான் அதட்டினார். மழையில் நனைந்த கோழிக்குஞ்சுபோல ஒடுங்கி அறைக்குச் சென்றாள் வனிதா.
வனிதா பதினாறு வயதை அடைந்தவள். மலையகத்திலிருந்து வேலைக்காக கொழும்புக்கு இதுவே முதல்தடவை வந்திருக்கிறாள். அவளது அப்பா அவளுடைய சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். தாய் பாக்கியமும் தேயிலைத் தோட்டத்தில் வெயில் மழை பாராமல் கொழுந்தெடுப்பாள். வனிதாவுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருக்கின்றனர். ஒத்தாசையாக தாத்தா இருக்கிறார். பாக்கியம் இரண்டாவது பிள்ளை கிடைப்பதற்கு கர்ப்பிணியாக இருந்த காலத்தில் மாதத்துக்கு ஒரு தடவை டவுன் ஆஸ்பத்திரிக்கு கிளினிக் போய் பார்க்க வேண்டும் என்று சிலர் சொல்லிக்கொடுத்தார்கள்.
ஆனால் அதை புரிந்துகொள்ளுமளவுக்கு பாக்கியத்தின் அறிவு இடம்கொடுக்கவில்லை. தன்போக்கில் இருந்தாள். இடையில் காய்ச்சலால் அவதிப்பட்டாலும் கொத்தமல்லி தண்ணீரை குடித்தே சமாளித்துவிடுவாள். அதன் விளைவு பாவம் இரண்டாவது பிள்ளை. போலியோவினால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இன்றுவரை வீட்டோடே இருக்கிறாள். வீட்டில் இருக்கும்போது வனிதாவே தங்கையின் அனைத்து வேலைகளையும் கவனித்து வந்தாள்.
நான்காம் தரம் வரைக்குமே வனிதா பாடசாலைக்குப் போயிருக்கிறாள். அவளால் பாடசாலை வறுமைக்கோட்டுக்குள் வாழ்ந்த சட்டத்திட்டங்களுக்கு அடிபணிய முடியவில்லை. கருப்பு சப்பாத்தும், அயன் களையாத உடையுடனும் இருக்கும் மாணவர்களுக்கு மத்தியில், தான் தாழ்த்தபட்டவளாக வனிதா உணர்வாள். தாயின் கஷ்டம் அறிந்திருந்தபடியால் ஆசிரியர்களிடம் கைநீட்டி அடிவாங்க மட்டுமே அவளால் முடியுமாயிருந்தது.
அவள் சுமாராக படித்தாலும்கூட பாடசாலையைவிட்டு விலகும்போது அதைத்தடுக்க யாருக்கும் தோன்றவில்லை. இதையெல்லாம் வனிதா யோசித்துக்கொண்டிந்தபோது அவள் சின்ன வயதில் வேலைக்கிருந்த வீட்டின் எஜமான், எஜமானியைப்பற்றி நினைவு வந்தது. எவ்வளவு நல்லவர்கள். இறைவா அவர்களுக்கு எதுவும் ஆபத்துக்கள் நேரக்கூடாது. உள்ளம் உருகி மன்றாடினாள் வனிதா.
ஆம். அவளது தாத்தா வனிதாவிடம் ஒருநாள்
‘வனிதாம்மா. நாம அயலூரில் இருக்கும் ஒம் மாமா வீட்டுக்கு போயி வருவமா?’ என்றார்.
ஒன்பது வயதுச் சிறுமியான வனிதா ‘சரி தாத்தா’ என்று ஆசையோடு புறப்பட்டாள். அவள் தாத்தாவுடன் பயணம்போகும்போது அம்மா அவளை உச்சிமோர்ந்து போய்வாடி செல்லம் என்று கூறியே எப்போதும் அனுப்பிவைப்பாள். ஆனால் அன்று வழமைக்கு மாற்றமாக தன் சேலையால் வாயைப்பொத்தியவாறு அழுதுகொண்டிருந்த அம்மாவைப் பார்க்க வனிதாவுக்கு ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருந்தது.
‘ஏம்மா அழுவுற. மாமா வீட்டுக்குத்தானே போறேன். சீக்கிரம் வந்துடுறேம்மா. தாத்தா என்ன கூட்டியாந்துரும். ஏம்மா நான் போவ வேணாமா?
அவள் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியம் காதுகளை அடைத்துக்கொண்டாள்.
பாக்கியம் பெரியவரை திரும்பிப் பார்த்து ‘அப்பா இவ இங்கயே இருதுரட்டும்பா. நாஞ் செத்தாலும் பரவாயில்ல. இதுகள அனுப்பப்படாதுப்பா’ என்று மன்றாடினாள்.
செத்தாலும் பரவாயில்லையா? அம்மா என்ன சொல்கிறாள்? மாமா வீட்டுக்கு போறேன்னு சொன்னதுக்கு இவ்ளோ அழணுமா? வனிதாவின் பிஞ்சு மனம் யோசித்தது.
‘நீ சும்மா இரும்மா. சின்னதுகளை வச்சுக்கிட்டு நீ படுறபாடு எனக்குத் தெரியும். நானும் வயசாளி. நோய்க்காரன் வேற. இவ அங்கிருந்தான்னா மாசா மாசம் காசும் கிடைக்கும். அதவச்சி சின்னதுக வயித்த காயப்போடாம இருக்கலாம். அத்தோடு அவளும் வயிறு நெரம்ப சாப்பிட்டு ஊட்டுப் புள்ளயாட்டம் இருப்பா. நீ ஒன்டும் யோசிக்காத தாயி. அந்த வீட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்க’
நல்ல நேரம். தாத்தா சொன்னது எதுவும் வனிதாவின் காதில் விழவில்லை. அவள் தாத்தாவுடன் பயணமானாள்.
அந்த வீடு லயத்து காம்பறா போல் இல்லாமல் பலமடங்கு விசாலமாக இருந்தது. புகை படிந்து அழுக்காக இருக்கவில்லை. மஞ்சல்நிற வர்ணப்பூச்சு வீட்டின் சுவரை அலங்கரித்தது. வாசலில் பூந்தோட்டம் வேறு. சுற்றிவர தேயிலைக் காடுகளை மட்டுமே பார்த்து வளர்ந்த வனிதாவுக்கு மிகவும் ரம்மியமாக இருந்தது அந்த சூழல். தலையை சிலுப்பி அங்குமிங்கும் புதினம் பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த வீட்டவர்கள் அவளுக்கும் தாத்தாவுக்கும் குளிர்பானம் கொடுத்தார்கள். இதுவரை தேயிலை சக்கையால் தயாரிக்கப்படும் பிளேன்டீயை குடித்துப் பழகியவளுக்கு அந்த வீடு சுவர்க்கலோகம்போல ஒரு மயக்கத்தையும் கிறக்கத்தையும் ஏற்படுத்தியது. கூடவே ஏறக்குறைய அவள் வயதிலிருந்த அந்தவீட்டுப் பிள்ளையின் விளையாட்டு பொம்மைகள்!
‘தாத்தா நாம இங்கயே இருந்துரலாமா?’
‘நீ இனிமேல் இங்கதாம்மா இருக்கப்போறே. நீ ஆசைப்பட்டபடி நல்லா சாப்பிடலாம். இந்த பேபியுடன் வௌயாடலாம்’
‘நிஜம்மா தாத்தா…?
‘ஆமாம்மா. இனிமே நீ இங்கயே தங்கிக்க. அப்ப தொரே நான் போயி வரட்டுங்களா? அம்மா வர்ரேனுங்க’ என்று சொன்ன தாத்தா தலையை சொறிந்துகொண்டு நின்றார்.
‘சரி குப்புசாமி. சொன்னபடி பேத்திய கொண்டுவந்து விட்டிட்ட அடிக்கடி வந்துப்பாரு பிரச்சினல்ல. ஏதும் பணம்கிணம் வேணும்னா எங்கிட்ட கேளு என்ன வெளங்கிச்சா? இப்போதைக்கு இந்த காசை வைச்சுக்கோ’
அந்த வீட்டுக்காரர் சொன்னது விளங்கியதோ இல்லையோ வனிதாவை ஒருதரம் கட்டியணைத்து உச்சிமோந்துவிட்டு அவர்கள் கொடுத்த காசையும் பெற்றுக்கொண்டு தாத்தா சென்றார்.
தாத்தா சென்று சற்று நேரத்தில் அந்த வீட்டம்மா வனிதாவை அழைத்து அவள் அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லத் தொடங்கினாள். அவளுடைய பிள்ளையுடன் விளையாட வேண்டும் என்றாள். பூ மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்றாள். சின்னசின்ன உதவிகளை செய்தால் போதும் என்றாள். எல்லாமே தனக்கு தெரியும் என்பதுபோல தலையை ஆட்டியாட்டி சம்மதித்தாள் சிறுமி வனிதா.
எனினும் காலம் செல்லச்செல்ல அவளுக்கு அம்மாவின் ஞாபகம் மனசை வதைத்தது. தம்பி தங்கையரின் நினைவு சந்தோஷத்தை இல்லாமலாக்கியது. தினமும் பூ மரங்களுக்கு நீர் ஊற்றுவதும், வீடு பெருக்குவதும், பாத்ரூம் சுத்தம் பண்ணுவதும், அந்தவீட்டு பேபியுடன் பொம்மை விளையாடுவதும் அவளுக்கு எரிச்சலை மூட்டியது. வனிதா செயற்கையாகிப் போனாள்.
வீட்டில் இருக்கும்போது தம்பி தங்கையோடு ஆற்றங்கரைக்குச் செல்வாள். அம்மாவைப் பார்க்க தேயிலை மலைக்குச் செல்வாள். பக்கத்து காம்பிறாவில் உள்ள சீதா அக்கா செய்யும் தையல் வேலைகளைப் பார்க்கச் செல்வாள். எதிர்த்தவீட்டு மாமா தன் மனைவியுடன் சண்டை பிடிப்பதைப் பார்த்து சிரிப்பாள். நினைத்தால் எதுவும் செய்வாள். ஆனால் இங்கு இந்த இந்த நேரத்துக்கு இதையிதைத்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை. கட்டுப்பாடு. அவளுக்கு கத்தியழ வேண்டும் போல் இருந்தது. ஒருநாள் காலையில் பூந்தோட்டத்தில் இருக்கும்போது தாத்தா வந்தார். தண்ணீரக் குழாயை அப்படியே போட்டுவிட்டு தாத்தா என்று கத்தியபடி ஓடிச்சென்று அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். இங்குள்ள கட்டுப்பாடுகளைப் பற்றி எல்லாம் சொல்லி இனிமேல் தனக்கு அங்கு இருக்க முடியாது என்றும் வீட்டுக்கு கூட்டிச் செல்லும் படியும் சொன்னாள்.
தாத்தாவுக்கு அந்த வீட்டாரைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்கள் நல்லவர்கள். மனிதனை மதிக்கத் தெரிந்தவர்கள். அவளது கதைகளை மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, அந்தவீட்டு எஜமான் எஜமானியம்மாவுடன் பேசிவிட்டு இரண்டு மயில்தாள்களையும் வேண்டிக்கெண்டார். அதன் பிறகு வனிதாவிடம் குனிந்து
‘வனிதாம்மா.. தாத்தா போயி உனக்கு புடிச்ச ஸொக்கலட் பிஸ்கட் வாங்கியாரேன். நீ உடுப்பெல்லாம் எடுத்து தயாரா இருந்துக்க. ஐயா காசு தந்திருச்சி. இதப்பாரு. நாம வீட்டுக்கு போலாம்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.
பகல் வந்தது. தாத்தா வரவில்லை. மாலையானது அப்போதும் தாத்தா வரவில்லை. அடுத்த நாள்.. அதற்கடுத்த நாள். ம்ஹூம் அவர் வரவேயில்லை. வனிதாவுக்கு விளங்கிவிட்டது. தாத்தா வரமாட்டார். தன்னிடம் பொய் சொல்லிவிட்டார். இனியும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் கவலையோடு சும்மா இருந்துவிட்டாள். மகள் வனிதாவுக்கு, கொடுமை கொடுக்கும் மனிதர்களற்ற நல்ல இடம் கிடைத்திருந்த மகிழ்ச்சியில் பாக்கியமும் பேசாமல் இருந்துவிட்டாள். வனிதாவாவது நிம்மதியாகச் சாப்பிடுகிறாளே.
அந்த வீட்டுக்கார எஜமானி நல்மனம் கொண்டவள். தனது மகளுக்கு போன்றே உடுப்புக்களை வனிதாவுக்கும் வாங்கிக்கொடுப்பாள். சாப்பாட்டில் குறை வைப்பதில்லை. வனிதாவின் ஓய்வு நேரங்களில் தலையிடுவதில்லை. வேலைக்காரி என்று பாகுபாடு பார்ப்பதில்லை. சம்பளத்தை சரியாக தாத்தாவிடம் சேர்ப்பித்துவிடுவாள். ‘வனிதா அக்கா’ என்றே தனது குழந்தைக்கும் சொல்லப் பழக்கியிருந்தாள்.
வனிதா ஐந்து வருடங்களை அந்த வீட்டில் கழித்துவிட்டாள். எனினும் சமைக்கும் வேலையை எஜமானி வனிதாவுக்கு கொடுக்கவில்லை. பாவம் என்று நினைத்தாளோ என்னவோ மற்ற வேலைகளை செய்யவே அவளுக்குப் பணிக்கப்பட்டிருந்தது. இப்போது விளையாடும் வேலையும் இல்லை என்பதால் எஜமானியின் அனுமதியுடன் வனிதா ஓய்வு நேரங்களில் கொஞ்சம் தையல் வேலைகளைப் பழகியிருந்தாள். கண் பார்த்ததை கை செய்யும் என்பார்களே. அதுபோல சீதா அக்காவின் தையல் வேலைகளைப் பார்த்து பழகியிருந்தபடியால் வனிதாவால் அதை இலகுவாக கற்றுக்கொள்ள முடிந்தது. மேலும் எழுத படிக்கவும் அவள் அறிந்திருந்தாள்.
காலச்சக்கரம் வேகமாக சுழன்றது. அந்த வீட்டு எஜமானிக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டதால் அவரை இந்தியாவுக்கு அழைத்துப்போகும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. வனிதாவுக்கு ஊருக்கு போகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தமாதிரியொரு இக்கட்டில் எஜமானியம்மாவை விட்டுவிட்டுப்போக அவளது மனம் இடம்தரவில்லை. ஆனாலும் அவர்கள் இந்தியாவுக்கு போவதால் அவளால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. அவள் திரும்ப ஊருக்கே வந்துவிட ஆயத்தமானாள்.
வீட்டாருக்கு தேவையான சிலவற்றை வாங்கிக்கொண்டு அவள் வீட்டையடைந்தபோது அனைவருக்கும் சந்தோஷமாக இருந்தது. ஏனெனில் வனிதா பதினாறு வயது பருவ அழகில் இருந்தாள். தாயைக் கண்டதும் அவள் மடியில் சாய்ந்து அழுதாள். தம்பி தங்கையரை அணைத்து ஆதரித்தாள். தான் கொண்டுவந்த பொருட்களை எல்லோருக்கும் கொடுத்தாள். தாத்தா மீதிருந்த கோபம், தனது குடும்பத்தாருக்காகத்தானே தாத்தா அப்படி செய்தார் என்று நினைவு வந்ததும் அடியோடு மறைந்துவிட்டது. அனைவரும் கொஞ்ச காலம் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தாத்தாவின் கையிருப்பிலிருந்த பணம் கரைந்தது. தாய் பாக்கியத்தின் சம்பளமும் கரைந்தது. யோசிக்கும் வயது என்றபடியால் வனிதா கொழும்பில் தற்போது இருக்கும் வேலைக்கு வர தாத்தாவிடம் அனுமதி கேட்டாள். சின்ன வயதில் அவளை விட்டுவிட்டு வந்த தாத்தா தற்போது மொட்டவிழத்துடிக்கும் மலராக இருக்கின்ற பருவ வயதுடைய வனிதாவை அனுப்ப சற்று யோசித்தார். அவரது மண்டை குழம்பியது. அதனால் மீண்டும் கொஞ்சகாலம் வறுமை அவர்களை அணைத்துக்கொண்டது.
வனிதா பருவமடைந்து சடங்கு சம்பிரதாயம் எல்லாம் முடிந்தது. வீட்டு நிலைமையும் மிகவும் மோசமடைந்தது. தாயின் வருமானத்தால் குடும்பம் ஓட்ட முடியாது என்பதும், இனி தாத்தா வேலைக்கு செல்வது உசிதமல்ல என்று விளங்கியதாலும் வனிதா மீண்டும் வீட்டு வேலைகளுக்கு செல்வதற்கு தீர்மானித்தாள். அவள் முன்பிருந்த வீட்டுக்காரர்களைப் பற்றிய எந்தத் தகவலும் அவளுக்கு கிடைக்காதபடியால் கொழும்பு பயணத்தை அமுல்படுத்தினாள். இன்று தாயின் கண்ணீர் அவளுக்கு வியப்பைத் தரவில்லை. அந்தக் கண்ணீரை துடைப்பது மாத்திரமே அவளது தேவையாக இருந்தது.
கொழும்புக்கு வந்த அடுத்த நாளே அவளுக்கு கொடுமைகளை நிகழ்த்தத் தொடங்கினாள் ராணி. காலை
காலை நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலை உணவு, பகலுணவை தயாரிக்க வேண்டும். ஏழு மணியாகும்போது தேனீர் ஊற்ற வேண்டும். பிறகு விசாலமான அந்த பங்களாவை துடைத்து பெருக்கி… கொஞ்சம் ஓய்வாக இருக்கலாம் என்று பார்த்தாலும் ராணி எதையாவது ஒரு வேலையை ஏவிக்கொண்டே இருப்பாள். ஒன்றும் இல்லாதவிடத்து ராணியின் தலையில் பேன் பார்த்துவிட வேண்டும்.
ஒருநாள் வனிதா வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு அங்கிருந்த செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தாள். எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த ராணி மனசாட்சியில்லாமல் கடுமையான தொணியில் அவளை அதட்டி
‘பஞ்சம் பொழைக்க வந்த நாய்! ஒனக்கு பேப்பர் படிக்க சம்பளம் தரயில்ல. இனிமே இந்த ஹோல் பக்கம் வந்தால் காலை வெட்டிருவேன். போ போ குசினியில கிடக்க வேண்டியதுகள் எல்லாம் ஹோலுக்கு வந்துட்டாளுங்க பேப்பர் பாக்க’ என்றாள்.
வேலைக்காரர்கள் என்றால் பேப்பர் படிக்க கூடாதா? என்ன மனிதர்கள் இவர்கள். காசு என்ற ஒன்றை இறைவன் அவர்களுக்கு அள்ளி வழங்கியிருக்கிறான். செல்வச்செருக்கால் ஏழைகளிடம் இப்படி நடந்துகொள்கிறார்களே. மாத இறுதியில் தருவதே வெறும் மூவாயிரம் ரூபாய்தான். அதில் இவ்வளவு சொல்லம்புகளா? அன்பாக, மனிதத் தன்மையுடனாவது கதைக்கலாமே. இறைவா. இவர்களெல்லாம் கஷ்டம் என்றால் என்னவென்று அனுபவித்திருக்கிறார்களா? பசியின் கொடுமையை உணர்ந்திருக்கிறார்களா? ஏன் ஏழைகளின் வாழ்க்கை எப்போதும் சிறுமைப்பட்டே இருக்கிறது? நாமெல்லாம் ஒரு நாளைக்கென்றாலும் சந்தோஷமாய் வாழ வேண்டாமா என்று பலவாறு எண்ணினாள். மிகவும் கவலைப்பட்டாள் வனிதா.
இன்னொரு நாள் அனைவரும் கோல்பேஸ் போனார்கள். இதுவரை கண்டில்லாத அழகான இடம். கடல்காற்று இதமாய் மேனியை வருடியது. அவளிருக்கும் வீட்டில் பரமசிவம் – ராணியின் அறை மட்டும் குளிரூட்டப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் காற்றாடி பொருத்தப்பட்டிருக்கிறது. என்ன ஓரவஞ்சனையோ? வனிதாவின் அறையில் கட்டில் கூட இல்லாமல் நுளம்பும், சிலந்திக்கூடும்தான் இருக்கிறது. காலையில் அவர்களுக்கு தேனீர் கொடுக்கப் போவதென்றால் வனிதாவுக்கு சந்தோஷமாக இருக்கும். ஏனென்றால் ஒரு நிமிடமேனும் அனுபவிக்க முடிகின்ற அந்த குளிரூட்டியின் சுகம். எல்லோரும் அந்த கோல்பேஸ் மணற்பரப்பில் நடந்து கொண்டு இருந்தார்கள். பரமசிவம் ஐஸ்கிரீம் வாங்கப் போனார்.
‘ராணி உனக்கு வெணிலாவா? ஸ்ரோபரியா? என்றபோது
‘வெணிலாவே வாங்கிடுங்க. ஏய் வனிதா உனக்கு என்ன வேணும். ஆ.. உனக்கு ரெண்டுநாளா தடுமலா இருந்திச்சில்லே?’ என்றாள் ராணி.
‘இல்லையே’ என்று சொல்ல வனிதா வாயைத் திறந்தபோது மீண்டும் ராணியே சொன்னாள்.
‘குழந்தய வேற அடிக்கடி தூக்கி பாத்துக்கணும். அதனால் நீ ஐஸ்கிரிம் சாப்பிடாதே. அதோ அந்தப்படியில நீ ஒக்காந்திரு. கொழந்தக்கி காத்து ஒத்துக்காது. இந்தா.. நானும் ஐயாவும் வந்துரரோம்’ ஐஸ்கிரீமை சாப்பிடுவதற்காய் பிள்ளையை அவளிடம் திணித்தாள் ராணி.
குழந்தைக்கு காற்று ஒத்துக்கொள்ளாது. வனிதாவுக்கு காற்றும், ஐஸ்கிரீமும் ஒத்துக்கொள்ளும்தானே? ஏன் அவளுடைய மனதை புரிந்துகொள்ள முடியவில்லை. வேலைக்காரி என்றாலும் அவளுடைய உடம்பில் இதயம், இரத்தம், ஆசை எல்லாம் இருக்கிறதல்லவா? விதியை வெல்ல யாரால் முடியும்?
மௌனமாக கண்ணீரை வடித்தவள் தன் நெஞ்சோடு குழந்தையை அணைத்துக்கொண்டு அவர்கள் வரும்வரை காத்திருந்தாள். அவர்களிருவரும் அங்கிருந்த பிரபலமான ஹோட்டலில் இரவு சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு வந்தார்கள். நான் உனக்குத்தான் என்பதுபோல பகல் சமைத்த உணவு வனிதாவுக்காக காத்திருந்தது.
கடந்தகால எண்ணங்களில் நிகழ்காலத்தை மறந்திருந்தவள் ராணியின் கை, கன்னத்தில் பதம்பார்த்து சுள்ளென்று வலிக்கவும்தான் சுயநினைவுக்கு வந்தாள். குழந்தை சிறுநீர் கழித்து அதில் தன் கைகால்களை அடித்தபடி விளையாடிக்கொண்டிருந்தது. ராணி தனக்கு அடித்தது நியாயம்தான் என வனிதா எண்ணிக்கொண்டாள்.
‘என்னடி முழிக்கிற எரும. குழந்த அதுபாட்டுக்கு மூத்திரத்துல வெளயாடுது. நீ பாத்துக்கிட்டு நிக்கிறியா? எவனோடு ஓடிப்போலான்னு யோசிச்சிக்கிட்டு நிக்கிற? லயத்து கூட்டம். நீயெல்லாம் சோத்தத் திங்கிறியா அல்லது…’
ஆமா. பெரிய சோறாம் சோறு. விடிந்தால் ராத்திரி வரைக்கும் வேலை. விருந்தினர்கள்னு வீட்டுக்கு யாராச்சும் வந்தா எந்த ஒத்தாசயும் இல்லாம முதுகு முள்ளு ஒடியங்காட்டிக்கும் தனியாக்கெடந்து சாவனும். இரவில் நீங்க சுகமாக தூங்குறதுக்கு தாய்ப்பாலும் கொடுக்காமல் புள்ளையை எங்கிட்ட தந்துடரீங்க. சின்னக்குழந்த பாவம். தினமும் ராத்திரிக்கு புட்டிப்பால் அடிச்சுக் கொடுத்தாலும் அது குடிக்கமாட்டேங்குது. ராவைக்கெல்லாம் கண்முழிச்சி, பகலில வேல செஞ்சி இன்னமும் இங்கயே கதின்னு இருக்கேனே. உண்மைக்கும் நீங்க சொல்ற மாதிரி நான் எரும மாடுதான். எரும மாடேதான்.
தொண்டைவரை வந்த இந்த வார்த்தைகளை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள் வனிதா. அவளது நினைவில் வீட்டார் சந்தோசமாக சாப்பிடும் காட்சி வந்துபோனது!!!
– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.