விதியின் வழியே..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 6,670 
 
 

வீடு நிசப்தமாய் வெறிச்சோடிக் கிடந்தது. எல்லாமே முடிந்துவிட்ட உணர்வோடு கமலினி செயலிழந்து கட்டிலில் சரிந்து கிடந்தாள். இதுவரை நெஞ்சுக்குள் பூட்டி வைத்த துக்கம் விம்மலாய் வெடித்தது.

இருப்பதா, இல்லையா என்ற அம்மாவின் வாழ்க்கைப் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று டாக்டர்கள் கையை விரித்தபோதுதான், எதுவுமே தங்கள் கையில் இல்லை என்று அவளுக்குப் புரிந்தது!

தோற்றுப்போய் விட்ட உணர்வில், உடம்பும் மனதும் சோர்ந்து கிடந்தன.

அம்மா..! உயிரோடும், உணர்வோடும், உடலோடும் கலந்தவா! அம்மா அருகே இருந்தபோது, அம்மாவிடம் பாசத்தைக் கொட்டுவதில், வளர்ந்துவிட்ட எங்களுக்கு இனம்புரியாத தயக்கம். இப்போ பிரிவு பயங்கரமாய் வதைத்தது. நேற்று இருந்தா, இன்று இல்லை!

இருந்திருந்தால் என்னை இப்படிச் சும்மா படுத்திருக்க விட்டிருக்க மாட்டா. ‘கமலி, கமலி’ என்று எத்தனை தரம் கூப்பிட்டிருப்பா. நெற்றியிலே கைவைத்து ‘சுடுகுதா?’ என்று தொட்டுப் பார்த்திருப்பா.

காலையில் அவசரமாக வேலைக்குப் போகும்போது ‘என்ன பிள்ளை’ சமைக்கிறது என்பா. வீட்டில் சாப்பாடு இருந்தாலும் ஏதாவது மரக்கறியை செய்யச் சொல்லிவிட்டு போய்விடுவேன். அம்மா தனிமையில் இருந்து வேண்டாததை யோசிப்பதைத் தவிர்ப்பதற்காக, இப்படி அவாவுக்குப் பிடித்தமான ஏதாவது வேலையைக் கொடுத்து விட்டுச் செல்வேன்.

வேலையால் வரும் போது எனக்காக சமைத்து விட்டு சாப்பிடாமல் காத்துக்கெண்டு இருப்பா. அதுவே அவவின் பொழுது போக்கு, சந்தோஷம்.

இருவருமாக உணவு அருந்திய பின்பு அம்மா எனக்கு இலங்கை நிலைவரம் பற்றி சொல்லுவா. அம்மா ஒன்றும் விடாமல் எல்லாப் பத்திரிகைகளும் வாசிப்பா, வானொலி கேட்பா. எனது கணவர் இறந்த பின்பு எனக்கும் எனது மகன் சத்தீஸ்க்கும் மிகவும் ஒத்தாசையாக இருந்தவ.

அன்று அம்மா பேஸ்மென்ற்ருக்கு சென்ற போது படி வழுக்கி விழுந்து தலையிலை ஏற்பட்ட காயத்தால் இரத்தம் வடிந்தபடி இருந்தது, உடம்பு வேர்த்தும் இருந்தது. அம்மா நெஞ்சைப் பிடித்தபடி ஏதோ வலியால் துடிப்பதுபோல் இருந்தது.

நான் உடனே 9-1-1 க்கு தொலைபேசி அழைத்தபேது அன்புலன்ஸ் வண்டி காலநிலை சரியில்லை, வண்டி வரத் தாமதமாகும் என்று சொன்னார்கள்.

வெளியில் பனி கொட்டிக் கொண்டே இருந்தது. வீதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. அம்மாவிற்கு ஏற்பட்ட காயத்தால் இரத்தம் வழிந்தபடியே இருந்தது, ஐஸ்கட்டியை வைத்துப் பார்த்தும் அதை நிறுத்த முடியவில்லை.

‘என்னம்மா, என்ன செய்யுது?’

‘மயக்கம் வாறமாதிரி இருக்குப் பிள்ளை’ என்றா.

‘கொஞ்சம் பொறுங்கே, ஆம்புலஸ் வந்திடும்’ என்று ஆறுதல் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் அம்மா மயங்கிப் போனா. அன்புலன்ஸோ வருவதாக இல்லை. நான் ஓடிப்போய் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதிகளிடம் நடந்ததைச் சொல்லி உதவி கேட்டேன்.

அவர்களும் 9-1-1 அடித்துக் கதைத்துவிட்டு அன்புலன்ஸ் வரத் தாமதமாகும் என்று சொன்னார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றபோது,

“கமலி, எனது மனைவியுடன் சேர்ந்து இருவருமாக அம்மாவை துக்கிக்கெண்டு வாருங்கள், நாங்க உங்கம்மாவைக் காரில ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவோம்” என்றார் அயல் வீட்டுக்காரர் மைக்.

வேறு வழியில்லாமல், அவரது துணிச்சலை மனதுக்குள் பாராட்டிக் கொண்டு மூவருமாக அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கெண்டு சென்றோம். பனிமழையோ விடாமல் பொழிந்து கெண்டு இருந்தது. சில வாகனங்கள் தெருவோரம் அனாதரவாக விடப்பட்டு இருந்தன. எங்களுடைய காரை தவிர வேறு ஒரு வாகனமும் தெருவில் இல்லை. பனிக்குவியல் காரணமாக மெதுவாகத்தான் வண்டி நகர முடிந்தது.

காரில் முன்கண்ணாடியில் பெருத்தியிருந்த ‘வைய்ப்பர்’ எவ்வளவு விரைவாக வேலை செய்து கெண்டு இருந்ததோ, அதைவிட எனது இதயம் வேகமாகப் அடித்துக்கெண்டிருந்தது. மயக்க நிலையில் இருந்த அம்மாவிற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயமாக இருந்தது. கடவுளே, அம்மாவை காப்பாத்து என்று கும்பிட்டுக் கொண்டே ஆஸ்பத்திரியை அடைந்தோம்.

உடனேயே அவசர சிகிட்சைப் பிரிவு தாதிமார் வந்து அம்மாவை உள்ளுக்குள் கெண்டு சென்று விட்டார்கள். என்னிடம் இருந்த அம்மாவின் வைத்திய அட்டையைக் கொடுத்து, மருத்துவ விபரம், விபத்தைப் பற்றிய விபரங்களையும் பதிவு செய்து விட்டு நான் அம்மா இருந்த அறையை நோக்கி சென்ற போது எனக்கு எதிரே வந்த டாக்டர்,

‘நீங்கள் தான் சாவித்திரி குமாரசாமியின் மகளா’ என்றார்.

பதில் சொல்லாமல் தலையை மட்டும் ஆட்டினேன்.

தன்னுடன் வரும்படி தனது அறைக்கு அழைத்துச் சென்றவர்,

‘கொஞ்சம் தாமதமாய் வந்து விட்டீர்கள்’ என்று மறைமுகமாய்ச் சொன்னார்.

எனக்கு ஏன் அப்படிச் சொன்னார் என்று முதலில் புரியவில்லை.

“அம்புலன்ஸ் கிடைக்கவில்லை டாக்டர், இந்தப் பனியில் எவ்வளவோ கஷ்டப் பட்டுத்தான் அம்மாவைக் காரிலே கொண்டு வந்தோம்” என்றேன்.

‘அம்மா இறந்துவிட்டா, எங்களால் காப்பாற்ற முடியவில்லை’ என்பதை மிகவும் பவ்வியமாக எடுத்துச் சொல்லி, தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்தார்.

அம்மா என்கிற தொப்புள்கொடி உறவுவைத் திடீரென அறுத்து, என்னைப் பிரித்து விட்டு விட்டாரே என்ற வேதனையில், ஒரு குழந்தையின் குற்றம் சாட்டும் உணர்வோடு அவரைப் பார்த்தேன்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று எனக்கே தெரியாது. யார்யாரோ வந்து போனார்கள். துக்கம் விசாரித்தார்கள். இறுதிக் கடமைகள் எல்லாமே முடிந்தபிறகு தனித்துப்போன உணர்வு மட்டும் எனக்குள் தலை தூக்கி நின்றது.

நடந்து முடிந்தவற்றை மீண்டும் அசைபேட்டு கெண்டிருந்த போது…

“அம்மா,…. போன்…!”” என்று சொல்லியபடி வந்து, என்னிடம் தொலைபேசியை தந்தான் எனது மகன் சத்தீஸ்.

தொலைபேசியில் அவுஸ்ரேலியாவில் இருக்கும் எனது மச்சாள் சுமதி. துக்கம் விசாரித்து விட்டு,

‘மாமாவும் இப்படித்தானே அனியாயமாய் இறந்தவர்’ என்றா.

அப்பாவைப் பற்றிய அந்த நினைவு வந்ததும் இருவருமாக சேர்ந்து தெலைபேசியில் அழுதுதோம், வாய்விட்டு அழுதது மனத்தில் இருந்த சுமையைச் சற்றுக் குறைத்தது போல இருந்தது.

அப்பாவுக்கும் இப்படித்தான், எதிர் பாராத சாவு. யாழ்ப்பாணத்தில் இருந்தபோது, பென்சன் பணம் எடுக்கப் போவதாகச் சொல்லி விட்டுப் போனவர் திரும்பி வரவே இல்லை. வருடங்கள் பல சென்றாலும், அந்த நாள் ஞாபகம் மனதைவிட்டு கொஞ்சமும் அகல மறுத்தது. யுத்தம் என்ற போர்வையில் இப்படி எத்தனை உயிர்கள் அநியாயமாய் பறிக்கப்பட்டன.

“அப்பா பென்சன் போமில் கையெழுத்து போட்டு தாங்கோ, நான் எடுத்திட்டு வாறன்.” என்றேன்.

“இல்லை பிள்ளை, நானும் என்ர சிநேகிதர்மாருமாக ஒரு கார் பிடிச்சு யாழ்ப்பாணம் போய் பென்சன் எடுத்திட்டு, வேற சில அலுவலும் யாழ்ப்பாணத்தில இருக்கு, முடிச்சிட்டு வாறம்”

அப்பா வெளிக்கிட்டு கெண்டிருக்கும்போது எங்கள் வீட்டிற்கு இடைக்கிடை வந்து அம்மாவிற்கு ஒத்தாசை செய்யும் பொன்னி ஓடி வந்தாள்.

“ஐயா என்ரை மகள் பிரசவவேதனையால துடிக்கிறாள், ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கார் ஒன்றும் கிடைக்கவில்லை, என்ன செய்யிறது ஐயா” என்று அழுதாள்.

உடனே அப்பா தான் பிடித்த காரில் பொன்னியின் மகளை ஆஸ்பத்திக்கு கெண்டு போகச்சொல்லி அனுப்பி விட்டு நேரத்தை பார்த்தபொழுது காலை பத்து மணிஇருக்கும்.

‘இன்றைக்கு நேரம் சென்றுபேச்சு. நாளைக்குப் போகலாம் தானே’ என்று அம்மா சொன்னா.

“பரமு எனக்காக காத்துக் கொண்டு இருக்கப்போறார், அதனால நான் சைக்கிள்ளை போய்யிட்டு வாறன்” என்றவர் சைக்கிளில் பரமுமாமா வீட்டுக்கு சென்றார்.

அப்பா சென்ற சற்று நேரத்திற்கு பின் பக்கத்து வீட்டு ராசன் பதட்டமாய் ஓடிவந்தான்.

“என்ன..? என்ன ராசன்..?”

“யாழ்பாணப் பக்கம் போகஏலாது என்று திரும்பி வானுடன் வந்திட்டன். இருந்தாப்போல கோட்டையில இருந்து ரவுணுக்க ஆமி செல் அடிக்கறாங்களாம்” என்றான் ராசன்.

“இந்த மனுஷன் சயிக்கிளையும் எடுத்துக் கொண்டு போச்சுதே, இப்ப என்ன செய்ய..?” என்று அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கினா.

நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர அப்பா திரும்பி வரவில்லை. தேடிப்போனவர்கள் துக்க செய்தியோடு திரும்பி வந்தார்கள்.

அப்பா சைக்கிளில் போய்க் கெண்டுடிருக்கும் போது செல்அடிக்கிற சத்தம்கேட்டு, ரோட்டில சைக்கிளை விட்டிட்டு ஓடிப்போய் ஒரு மதவுக்கு பின்னால் ஒளிந்து இருக்கிறார். தூரதிஷ்டவசமாக ஆமி அடித்த செல் வந்து அப்பா பதுங்கி இருந்த இடத்தில் விழுந்து வெடித்து விட்டது. கடைசியாக அப்பாவை அருகே இருந்த அவருடைய சைக்கிளை வைத்துத்தான் அடையாளம் காணமுடிந்தது.

இவற்றை எல்லாம் நினைத்து பார்த்த கமலிக்கு, காலம் செய்த சதியை நோவதா, இல்லை விதியை நோவதா, யாரைக் குறைசொல்வது என்று மனதில் ஒரே குழப்பமாக இருந்தது.

‘விதியின் வழியேதான் போகிறோமா? இல்லை, எங்களை மீறி ஏதோ ஒரு சக்தி எங்களை இயக்குகிறதா?’ என்பது மட்டும் அவளுக்குப் புரியாத பதிராக இருந்தது.

புலம்பெயர்ந்த இந்த மண்ணிலே இப்போ உறவு என்று சொல்ல மகன் சத்தீஸைத் தவிர வேறுயாருமில்லை. இனி தனிமை வாட்டும். அதைத் தொடர்ந்து முதுமை வதைக்கும். இந்த மண்ணில் இப்படியே காலமெல்லாம் வாழமுடியுமா?

பிறந்த மண்ணின் ஞாபகம், இளமைக் காலக் கனவுகள், அங்கே வாழ்ந்த வாழ்க்கை, சொந்த மண்ணைப் பிரிந்த துயரம் எல்லாம் நினைவில் வந்து மனதில் பதிந்தது.

இப்படியான சூழ்நிலையில் ஆசை மகனைப் பிரிந்து பிறந்த மண்ணுக்குத் தனியே போய் வாழமுடியுமா?

“அம்மா, உங்களிட்டை ஒன்று கேட்கவேணும்.”

பீடிகையோடு வந்து பக்கத்தில்; இருந்தான் சத்தீஸ்.

“என்ன..?” என்றேன்.

“அம்மா வன்னிரெக்ஸ் கணனித் துறைக்கு பயிற்றுணர்கள் தேவை என்று பத்திரிகையில் படித்தேன். அந்த மண்ணிலே வெளிநாடுகளில் கற்றவர்கள் தாங்கள் கற்ற அறிவைப் பகிர்ந்து கொள்ள கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பம் இது. நான் படித்த படிப்பை எப்படியாவது பயன் உள்ளதாக ஆக்க வேணும். இந்த மண்ணிலே நான் பெற்ற அறிவை தமிழ் மண்ணிலே விதைப்பதற்கு எனக்குக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் இது. நாங்கள் இருவரும் கெஞ்சக்காலம் பிறந்த மண்ணிற்கு சென்று வருவோமா?” என்றான் சத்தீஸ்.

கொஞ்ச நாட்களாகப் புனர்வாழ்வுக் கழகத்திற்குப் போய் வருவதன் தாக்கமாக இருக்கலாம். தாய் மண்ணுக்காக, அங்குள்ள மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற நல்ல நோக்கம் அவனது பேச்சில் தெரிந்தது.

என் மனதைப் படித்தவன் போல எதை நான் கேட்க நினைத்தேனோ அதை அவன் கேட்கிறான்.

ஆச்சரியமாய் அவனை விழித்துப்பார்த்தேன்.

“மகன், உண்மையாத்தான் சொல்லுறியா? இல்லை என்னைத் திருப்திப் படுத்தச் சொல்லுறியா?”

“நாட்டிலே சமாதானம் நிலவுவதால் எனக்கும் அங்கே போய்ச் சேவை செய்ய விருப்பம்தான், அம்மம்மாவின் பிரிவை உங்களால தாங்கமுடியாமல் இருப்பது எனக்குப் புரியுது. உங்களுக்கும் கொஞ்ச நாட்கள் இனசனத்தோட இருந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், தேவையான ஒழுங்குகளைச் செய்யட்டாம்மா?” என்றான்.

‘எதை எதையோ எல்லாம் இழந்தாலும், இழப்பு என்பது எங்களுக்குக் காலப்போக்கில் பழகிப்போன ஒன்றாகி விட்டது. நடந்ததையே நினைத்துக் கவலைப் பட்டுக்கொண்டிராமல் நடக்க வேண்டியதை நினைத்து சந்தோஷப்படுவோம், எங்கள் மண்ணுக்காக எதையாவது நல்லதைச் செய்ய முடிந்தால் செய்வோம்.’ என்று என்னை நானே தேற்றிக் கொண்டு, ‘ஓம், போவோம்’ என்றேன்.

மகனின் முகத்தில் மகிழ்ச்சி பூத்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *