விடுபடல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 4, 2012
பார்வையிட்டோர்: 11,386 
 
 

சந்தியா காத்திருந்தாள். நேரம் ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கால்மணி நேரத்துக்கும் கூடுதலாகக் காத்திருந்தாள். இவளோடு நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய்க் கரைந்திருந்தனர். ஒவ்வொரு பஸ்ஸும் ஒவ்வொருவரை ஏற்றிப் போயிற்று. இவள் ஏறவில்லை. சனங்கள் அதிக மென்றில்லை. ஏறியிருக்கலாம். ஏறவில்லை. அடிக்கடி மணி பார்த்துக் கொண்டு காத்திருந்தாள். இப்போது இன்னும் கொஞ்சம் பேர் புதிதாகச் சேர்ந்திருந்தனர். சற்றுத் தூரத்தில் மெல்லிய பையனொருவன் நடந்து வந்துகொண்டிருந்தான். பதினேழு, பதினெட்டு வயது இருக்கக்கூடும். இடையிடையே கண்ட ஞாபகம். வெள்ளைச் சீருடையோடு புத்தகப்பை கனக்க கண்களில் களைப்புத் தெரிந்தது. இவள் சினேகமாய் முறுவலித்தாள். அவனும் பதிலுக்குச் சிரித்தான்.

“இன்னும் பஸ் வரவேல்லையோக்கா…?”

“வான் ரெண்டும், ஒரு பஸ்ஸும் போகுது. சரியான கிறவுட்…” ஆனால் அது காரணமில்லை என்பது அவளுக்குத் தெரியும்.

“மூண்டையுமா விட்டீங்கள்…” அவன் கண்களில் வியப்புத் தெரிந்தது. இவள் எதிர்ப்புறம் நோக்கிய திசையில் கண்களைச் சுருக்கிப் பார்த்தாள்.

கண்ணெட்டும் தொலைவிற்கு எதுவும் இல்லை. வானத்தில் இரைச்சல் எழுந்தது. நிமிர்ந்து பார்க்கையில் முன்புறம் விரிந்து கிடநத எல்லையற்ற வானில் நூற்றுக் கணக்கான வெளவால்கள் பறந்து கொண்டிருந்தன. இளநீல வானத்தை மறைத்துப் பெரிய, கரிய சிறகுகளை விரித்துப் பிடித்தபடி வெளவால்கள் பறந்தன.

“எவ்…வளவு வெள…வால் அக்கா…”

அவன் அதை இப்போதே கண்டிருக்கக் கூடும். இவளோவெனில் தினமும் ரசிக்கின்ற காட்சிதான்.

ஏதோ ஒரு கணத்தில் அந்த வெளவால்கள் இயல்பான தொங்குதலினின்றும் கலைக்கப்பட்டுச் சிதறுகின்றன. அந்தக் கணமும் இவள் பஸ்ஸிற்குக் காத்திருக்கும் கணமும் ஒன்றித்துப் போகையில் இவள்முன் அற்புதமான காட்சியல்லவோ விரிகின்றது.

ஒருகணம் ரமணனோடு பஸ்ஸிற்குக் காத்திருப்பதில் சந்தோஷமாய்க் கூடவிருந்தது. (தெருவோடு போன பள்ளிக் கூடப் பையன்கள் அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில் அவன் பெயரும் தெரிந்து போயிற்று.)

வினோத்திடமிருந்து இவ்வாறான ரசனைகளை எதிர்பார்க்க முடியாது. அவன் அவசரக்காரன். அவனுடைய ஆர்வங்களெல்லாம் இயந்திரங்களை அக்குவேறு, ஆணி வேறாக பிரித்துப் போடுதலில் தானிருந்தது. வீட்டில் ஒரு பொருள் உருப்படியாய்க் கிடக்காது. எல்லாம் துண்டு, துண்டாய்த்தான் கிடக்கும், அப்படிப்பட்ட இவனுக்கு இவளுடைய ரசனைகள் பைத்தியக்காரத்தனமாய்த் தானிருக்கும். எட்டு வயசு வித்தியாசம். தலைமுறை இடைவெளிபோல இந்த எட்டு வயசு வித்தியாசமும் ரசனையை மாற்றுமோ…? வினோத்துக்கு அடுத்தவள் அகல்யா. அவளுக்கும், அவனுக்கும் இரண்டு வயதே வித்தியாசம். அவளோ அண்ணனோடு சேர்ந்து இவளோடு மல்லுக்கட்டுவதே வழக்கம்.

“இதுகளோடை சரிக்குச் சமனா வாதாட எனக்குக் கிட்ட வயதிலை. ஒரு அண்ணனையோ அக்காவையோ பெறாமல் போனீங்களேயம்மா…”

இவள் தாயிடம் சிணுங்கியிருக்கிறாள். பிரச்சினை அநேகமாய் பாட்டுக் கேட்பதில்தான் தொடங்கும். வினோத்தின் கைங்கரியம். ‘பற்றிகள்’ தடக்கப்பட்ட யுத்தகாலங்களிற்கூட வானொலி கேட்க முடிந்தது. சைக்கிள் டைனமோவைச் சுழற்றி செய்திகளும், பாட்டுகளும் கேட்க வழி செய்திருந்தான். அவன் அறிவுத்திறன் வாழ்க. அந்தத் திறமையின் உச்சம் இப்போது அவனைப் பொறியியல் பீடத்தில் நிறுத்தியிருக்கிறது. அது கிடக்க, அவர்களின் ரசனை இவளுக்கு எதிர்ப்பதமாயிருந்தது. இவளது ஈர்ப்பு இளையராஜாவினது இசையையும், இடைக்காலப் பாடல்களையும் நோக்கிக் குவிந்திருந்தது.

அந்த மென்மையான இசையின் லாகிரியில் மனதை லயிக்கவிட்டு மயக்கம் மீதூர ரசித்திருக்கவே விருப்பம். அந்த ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பம் இருந்தது. மற்றப்படி, ஆடையோ, அணிகலனோ எதிலும் அம்மாவின் விருப்பத்தோடு அவள் மாறுபட்டதில்லை.

வினோத்தும், அகல்யாவும் துள்ளிசைப் பிரியர்கள். மென்மையான இசையை விழிமூடி ரசிக்கும் பக்குவம் கைவரப் பெறாதவர்கள். பொங்கும் இசையை வழிய விட்டுக்கொண்டு வினோத் கணக்குச் செய்வான். அகல்யாவுக்குப் பாட்டு இல்லாவிட்டால் புத்தகம் விரிக்கப் பிடிக்காது. பாட்டு ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க இவள் படித்துக் கொண்டிருப்பாள்.

படிக்கிறாள் தானேயென்று வானொலியைத் திருப்பி இவள் தனக்குப் பிடித்த பாட்டிற்கு மாற்றுவாள். அதற்குள் எங்கிருந்தேனும், வினோத்தோ அகல்யாவோ வந்து விடுவார்கள். “என்னக்கா பாட்டு இது…” என்பதாய் அவளைக் கேலி செய்துவிட்டு, புதிய பாட்டுக்களின் பக்கம் மறுபடியும் வானொலியை முடுக்குவார்கள்.

அவளது ரசனை உள்ளுக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாய் கருகிக் கொண்டிருந்தது.

“ரெண்டு குட்டிப் பிசாசுகளும், எனக்கெண்டு வந்து வாச்சுதுகள், விருப்பமான பாட்டுக் கேக்கக்கூட ஏலாமல் கிடக்கு…”

அவள் அம்மாவிடம் முணுமுணுப்பாள். எப்போதேனும் இடையிடையே புதுப்பாடல்கள் எந்த அலைவரிசையிலும் கிடைக்காத வேளையில் இவளுக்கு அமிர்தமாய் இடைக்காலப் பாடல்கள் கிடைக்கும். அப்போதேனும் அவளை அமைதியாய் ரசிக்க விட்டால் போதாதா….? இவளைக் கேலி செய்து. சளசளவென்று அவர்கள் பேசிக்கொண்டே இருக்கையில் இவளால் அந்த இரைச்சலுக்கிடையில் தனக்குப் பிடித்த பாடல்களைக்கூட ரசிக்க முடியாமல் போகும்.

“இந்த வீட்டை விட்டு எங்கையாவது போடுவன்…”

எரிச்சல் தாளாது சீறியிருக்கிறாள்.

“எங்கை போகப் போறாவாம்…”

வினோத்தும், அகல்யாவும் தமக்குள் கண்சிமிட்டிச் சிரித்து அந்த வார்த்தைகளை வைத்தே அவளை அறுத்தெடுத்திருக்கிறார்கள். விடுபடத்தான் வேண்டும் இவர்கள் ரசனையிலிருந்து. அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமைகின்ற போது அதில் அவளது ரசனைக்குத்தானே மதிப்பிருக்கும். அப்படி இன்னொரு வாழ்விற்குப் புகும் வேளையில் இவர்கள் கேலியினின்றும், அவர்களுக்குப் பிடித்த நவீன துள்ளிசைகளினின்றும் விடுபட முடியாமலா போகும்….? அப்போது அவளது இனிய கானங்களுடு… தொடர்ந்த கனவுகளில் …. அந்தக் குறும்புச் சகோதரர்களின் கேலிகளைப் பொறுமையோடு தாங்கியிருந்தாள். விடுபட முடியும் என்ற நம்பிக்கைகளூடு…

“அக்கா, பஸ் ஒண்டு வரூதக்கா…”

ரமணனின் குரல் அவளைத் திருப்பியது. து}ரத்தில் மஞ்சள் புள்ளியாய்த் தெரிந்த பஸ் வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. இவள் கண்களைச் சுருக்கி ஊடறுத்துப் பார்த்தாள். சனங்களுக்கிடையே இடைவெளியிருந்தது.

“அது கனகம்புளியடி பஸ்ஸக்கா….?”

ரமணன் சோர்ந்து போய்ச் சொன்னான். இவர்கள் இருவரையும் தவிர, மற்ற எல்லாரும் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்.

இப்போது வெளவால்கள் திரும்பவும் மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. வானம் வெறிச்சிட்டுக் கிடந்தது. வெளேரென்ற நிறம் நீங்கிச் சற்றே கருநிறம் திரண்டது. ஒன்றிரண்டு துளிகள் இடைவெளி விட்டு விழுந்தன.

“மழை வரப் போகுதக்கா…” அவன் முணுமுணுத்தான்.

“ஹாய்…” மனம் சந்தோஷக் கூத்தாடிற்று. கையில் குடை இல்லை. எனினும் மழை என்றதும் ஒரு சந்தோஷம். வானில் கூடிய மேகம் கலைந்துவிடக் கூடியது என்பது தெரிந்தேயிருந்தது. சாதாரண தூறல் பட்டதும் உலர்ந்து விடும்படியாய், ஆங்காங்கு ஒன்றிரண்டு துளிகள் வீழந்தன. இவள் நிமிர்ந்தாள். சந்தோஷமாய் ஒரு ஈரலித்த புன்னகை. சொத்தென்று ஒரு ஈரநீர்த்துளி நெற்றிப்பொட்டில் விழுந்து அவள் குங்குமத்தைக் கரைத்தது. சிவப்பாய் கசிந்து, இமையோரங்களில் கசிய ஆரம்பித்தது. “ அக்கா பொட்டு கரையுது…” அவள் கைக்குட்டையை எடுத்துக் குறிப்பாய் நெற்றியின் இமையோரங்களைச் சீராக்கி ஒற்றிவிட்டு “சரியோ…?” என்றாள். அவன் தலையசைத்துச் சிரித்தான். மழை வந்தவாக்கில் போய்விட்டது போல்பட்டது.

“குடை கொண்டந்திருந்தால் இந்த மழை இப்படியே பெய்யிறதுதான் நல்லம். குடை இல்லாதபடியால் மழை போனதுதான் நல்லம்…”

அவன் சொல்ல இவளுள் லேசான பரவசம். அவள் நினைத்ததை அவன் அப்படியே சொல்கின்றானே. இருவரது மன அலைவரிசைகளும் ஒன்றுதானோ…?

“சனி, ஞாயிறு என்ன செய்யிறீர்…?”

“வயலின் கிளாசுக்குப் போறன்…?”

அவள் அவனை வியப்பாய்த் திரும்பிப் பார்த்தாள்.

“பாடுவீரா…?”

“ம்…” அவன் அடக்கமாய்த் தலையசைத்தான்.

“ஆரிண்டை பாட்டுப் பிடிக்கும்…?”

“ஜேசுதாஸ், ஜானகி…”

இவள் விழிகள் விரிந்தன.

“பாலசுப்பிரமணியம் பிடிக்காதோ…?”

“ம்ம்ம்… நல்லாய்ப் பிடிக்கும்…” என்று சிரித்தான். இவளுள் சிவானந்தனின் நினைப்புக் கிளர்ந்தது. அவனுடனான ஆரம்ப தினங்கள், எத்தனை ஆர்வமாய் அதை எதிர்கொண்டாள்.

இனிமேல் வீட்டிலுள்ள ‘குட்டிப்பிசாசுகள்’ இரண்டினதும் பிடி அகன்ற சந்தோஷத்தில் அவனோடு அவளுக்குப் பிடித்த பாடல்களில் நனையலாம் எனும் சந்தோஷமும் கூட….. நிலவு காலிக்கும் மணல் முற்றத்தில் அவனோடு மோனத்தில் இணைந்து இந்தக் கானங்களை உள்வாங்கலாமென்று… இவளது ரசனைகளுக்கு அவன் இசைந்து கொடுக்காமலா போவான்.

ஆனால் இவளது உணர்வுகள் அவளே எதிர்பார்க்காத படிக்கு சிதறிப் போயின. சிவானந்தன் மோசமானவனில்லை. குடிப்பதில்லை. இவளை அடிப்பதுமில்லை.

எனினும் இனிமையான வாழ்விற்கு அவை மட்டும் போதுமாகி விடுமா…?

இரவுகளில் மௌனமான நிசப்தம் உறைந்த வேளைகளில … இனிய ரசந் ததும்பும் பாடல்களை அவனது அணைப்போடு பருக விரும்பினாள் அவள்.

அவனோவெனில் அவற்றை ரசனைத்தனமாய் நுகர்தலை விடுத்து, துள்ளிசைப் பாடல்கள் ரீங்காரிக்க அவளை ஆங்காரமாய் ஆட்கொள்ளுதலிலேயே கண்ணாயிருந்தான். போகட்டும் அவனது ரசனைதான் வேறாயிருந்தது. அதற்காக அவனுடைய ரசனையையே அவள் மீதும் திணிக்க வேண்டுமா…?

அவள் அவனிடம் சில பாடல்களை எழுதிக் கொடுத்து ‘கசற்’ அடித்துக் கொண்டு வரும்படி கொடுத்திருந்தாள். மாலை வரை ஆவலோடு காத்திருந்தாள். அவன் ஒரு புன்னகையோடு வந்தான். அவளிடம் ‘கசற்’ றைக் கொடுத்து விட்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். இவள் ஆவலாய் ‘ரேப் றெக்கோடரில்’ அதைச் செருகினாள். அவன் அவளது முகத்தையே குறும்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

ரேப்பில் ஏதோ கறகறா சத்தம். ஏதும் பிழையோ…? இவள் யோசிக்கையில் பாட்டு ஒலித்தது.

“சும்மாச் சும்மா பாத்து பாத்து….சும்மாச் சும்மா பேசிப் பேசி…”

சும்மா சும்மாவென்றே போய்க்கொண்டிருந்த பாட்டில் இவள் முகம் சுருங்கிப் போயிற்று.

“எப்பிடிப்பாட்டு…?”

“நான் இதை அடிக்கச் சொல்லேல்லையே…”

“இதை அடிக்கச் சொல்லேல்லைத்தான். ஆனால் அந்தப் பழங்காலப் பாட்டுக்களை உமக்கொராளுக்காக அடிச்சு ஏன் ‘கசற்’ றை வீணாக்குவான்…? இதெண்டா நிலாந்தியும் கேப்பாள்… அதுதான் புதுப்பாட்டுகளா அடிச்சு வந்தன் …”

இவளுக்குள் விடுபட்ட உணர்வு பொசுங்கிப் போனது.

தம்பி தங்கையரின் ரசனையிலிருந்து விடுபட்டதாய் எண்ணுகையில் இங்கே இன்னுமொரு தளை பின்னப்பட்டு விட்டதோ…?

தூ ரத்தில் ஹோணின் சத்தம் கேட்டது. இவள் திரும்பிப் பார்த்தாள். பஸ்ஸின் இலக்கத்தைப் பார்ப்பதை விடவும், ட்றைவரின் இருக்கையைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அந்தக் கண்களுக்கிடையே மின்னியது. பஸ் அருகாகிக் கொண்டு வந்தது. ட்றைவரின் உருவமும், கண்ணாடியூடு மங்கி மங்கிப் பிரகாசம் கொண்டது. ஒரு கறுப்பு ரீசேட் போட்டிருந்தான். இளைஞன். தாடி வைத்திருந்தான். அப்பாவித் தனமான கண்கள். இவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

அரை மணிநேரம் காத்திருந்ததற்கு கைமேல் பலன் கிடைத்து விட்டது.

இப்போதெல்லாம் வீட்டுக்குப் போக நேரமாகி விடுகிறது.

“ஏன் சந்தியா இவ்வளவு நேரம்…?” சிவானந்தன் ‘கசற்’றுகளை மாற்றி மாற்றி போட்டப்படி இவளைக் கேட்பான். இவளுள் வேதனை நெட்டி முறித்துப் பொங்கும். என்றாலும் அந்த இனிய பயணச் சுகத்தை இழக்க மனம் வராது. எனவே ஒவ்வொரு தடவையும் பஸ் சனங்களால் நிரம்பி வழிவதாய்ச் சொல்லிக் கொள்வாள். அவன் அதற்குப் பிறகு எதுவுமே கேட்க மாட்டான். இவளுக்குப் பரிதாபம்தான் மிஞ்சும். எனினும் இருவரின் ரசனைகளும் வேறுபட்டுப் போனபின் அவளுக்காக அவன் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை அவன் தானாகவே உணராமலிருக்கும்பட்சத்தில் இது இப்படியே தொடர வேண்டியதுதான் எனத் தோன்றும். அவனுக்காக நீ விட்டுக் கொடுத்தால் என்ன என உள்ளுக்குள் முரண்டிற்று மனம். விட்டுக் கொடுத்து, அவள் தானே சகித்துக் கொணடு போகிறாள். இது சாத்தியமாகாத வரையில் அவன் அவன் ரசனையோடும், இவள், இவள் ரசனையோடும் இருக்க வேண்டியதுதான். ஒருவர் மீது மற்றொருவர் ஏன் ரசனையைத் திணிக்க வேண்டும்.

‘பூங்கதவே தாள் திறவாய்…பூவாய்…பெண் பாவாய்…’ பஸ்ஸுக்குள் ஏறியவுடன் உள்ளெழுந்து செவிகளுள் தேனமுதாய்ச் சொரிந்தது பாடல். இவள் ரிக்கெற்றை எடுத்துக் கொண்டு இருக்கையொன்றில் வாகாய்ச் சாய்ந்து கொண்டாள். பஸ் போகிற சாலையில் கண்களை மிதக்க விட்டாள். சற்றே திரும்பியபோது ரமணன் கண்களில் கனவு மிதக்க பாடலை முணுமுணுப்பது தெரிந்தது. புன்னகைத்தாள்.

முன்னிருக்கையில் ட்றைவர் மிக நிதானமாக, ரசனையோடு பஸ்ஸை செலுத்துவதாய்ப்பட்டது. அவனைத் தெரியும். இப்படித்தான் ஒரு நாள் பஸ் ஏறியபொழுதில் அவன், மிக இனிய, அவளுக்குப் பிடித்தமான பாடல்களையே மாற்றி மாற்றிப் போடுவதைக் கண்டுபிடித்த பிறகு இதுவே அவளது வாடிக்கையான பஸ் ஆகிவிட்டது.

‘இதயக்கோவில்’ பாட்டுகளுக்காகவும், இளையராஜாவின் இசைக்காகவும் அவள் இந்த பஸ்ஸைத் தவற விடுவதில்லை.

அவள் சாய்ந்திருந்த இரட்டை இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இறங்குவதற்கென எழுந்தாள். இவள் அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“யா…ர் தூ ரிகை செய்த ஒவியம்…” பாடல் இவளுள் தேன் வார்க்க ஒரு குரல் குறுக்கிட்டது.

“துலையாலையே…பிள்ளை…” இவள் எரிச்சலோடு திரும்பினாள். பக்கத்தில் அமர்ந்திருந்தது தூரத்து முறையான ஒரு மாமி.

பஸ்ஸிலாவது விரும்பிய பாட்டுக்களை ரசிக்க முடியாதோ? அவள் எரிச்சலோடு “வேலையாலை…?” என்றாள். இந்த மாமியிடமிருந்து எப்போது விடுபடுவது…?

இருக்கையோடு சாய்ந்து கண்களை மூடி தூக்கம் கொள்வதாய்ப் பாசாங்கு செய்தாள். பாடல்கள் காற்றோடு கரைந்து போயின. இவள் விழிமூடியபடியே ரசித்துக் கொண்டிருந்தாள்.

“சரி பிள்ளை, நான் இறங்கப் போறன்…” அப்பாடா எனத் தோன்றிய அமைதியில் பெருமூச்சு விட்டாள். மாமி விலகிப் போகத் திரும்பி ரமணனைப் பார்த்தாள். ஜன்னல் கரையில் தள்ளி உட்கார்ந்தவாறே “இருமன்…” என்றாள்.

அவன் அருகில்அமர்ந்தான்.

‘நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது…’ மென்மையான இசை வருடத் தொடங்கியது.

“எனக்குப் பிடிச்ச பாட்டுகளக்கா….”

அவள் சிரித்தாள்.

“இந்தப் பாட்டுகளைக் கேக்கிறதெண்டால் விடிய ஏழரைக்கும், பின்னேரேம் அஞ்சேகாலுக்கும் இந்த பஸ்ஸைப் பிடிக்கோணும். ட்றைவரைப் பாத்து வைச்சாச் சரி…”

“அப்ப நீங்களும் இதிலையோ வாறனீங்கள்…?

அவள் வெட்கமாய்ச் சிரித்தாள்.

‘கண்ணே கலைமானே…’ பாடத் தொடங்கியபோது அவன் எழுந்தான்.

“ஐயோ, அக்கா இந்தப் பாட்டை இப்பிடியே விட்டிட்டுப் போக மனமில்லையே…”

‘பயப்பிடாமப் போம், நான் அதை பத்திரமா வாங்கி நாளைக்குக் கொண்டாறன்…” குதூகலமாய்ச் சிரித்தான். அவன் அவளைப் பிரியமாய்ப் பார்த்து விட்டு மணி அடித்தான். பஸ்ஸின் வேகம் குறைந்து கொண்டிருக்கையில் ரமணன் ட்றைவரிடம் கேட்டான்.

“நாளைக்கு நீங்கள் வருவீங்கள் தானையண்ணை.”

“ஓமோம்…” ட்றைவர் சிரித்தபடி பஸ்ஸை நிறுத்தினான்.

ரமணன் இவளைத் திரும்பி பார்த்து “இதிலைதான் வருவனக்கா…” என்றபடி கீழே இறங்கினான். சந்தோஷமாய்க் குதித்தபடி அவன் போவது பட்டது.

இவள் மீண்டும் ஜன்னலோரம் கண்களை மூடிச் சாய்ந்து கொண்டாள். இந்த மூவரின் கூட்டுறவும் ஒரு ரசனையின் புள்ளியில் ஒருங்கிசைவதாய்த் தோன்றிற்று. இந்தப் புள்ளியில் ஒன்றிணைய முடியாத சிவானந்தனின் முகமும் ஏனோ அடிக்கடி மனதில் அலைப்புற்றது.

அவன் இப்போது தனது ரசனைப் புள்ளிகளால் இணைந்த பாடல்களில் லயிப்புற்றிருக்கக் கூடும். இவள் மனதில். ‘ வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்குத் தெரியாது…’ ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

அவள் அந்த அரைமணி தந்த பிரயாணத் திருப்தியோடும், விடுபட்ட உணர்வோடும் பஸ்ஸை விட்டு இறங்கத் தயாரானாள்.

– ஏகலைவன் ஆடி – ஆவணி 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *