விக்ரம்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2020
பார்வையிட்டோர்: 7,000 
 
 

நிலா தன் கைபேசியை வெறித்துப் பார்த்தாள். அழுகை அழுகையாக வந்தது. மீண்டும் அதனை எடுத்தாள். கால் அழைப்புகளில் அவன் பெயரைப் பார்த்தாள். விக்ரம் என்கிற அவன் பெயருக்குப் பதிலாக பட்டுக் குட்டி என்று பதிவு செய்து இருந்தாள். காதலித்த காலத்தில் தொடங்கி மணவாழ்க்கை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை அவனைச் செல்லமாகப் பட்டுக் குட்டி என்றுதான் அழைப்பாள். கால் அழைப்பில் பார்த்தாள். அவர்கள் பேசியது வெறும் 10 நொடிகள். அழைப்பை முடிக்க எவ்வளவு அவசரம் காட்டினான். ஏன் இப்படி மாறிவிட்டான். எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்களா. எல்லா கணவர்களும் இப்படித்தான் நடந்து கொள்வார்களா. ஆரம்பத்திலிருந்து இதுதான் வழக்கம் என்று இருந்தால் நமக்கும் அது பழக்கமாகிவிடும். ஆனால் விக்ரம் அப்படி இல்லையே. திருமணத்திற்கு முன்பு தொலைபேசி உரையாடல்கள் பல மணி நேரங்கள் நீடிக்கும். திருமணமான பின் அந்த அளவிற்கு இல்லையென்றாலும் கூட உற்சாகமும் எதிர்பார்ப்பும் உரையாடல்களிலிருந்தன.

கடந்த ஓராண்டில் எப்படி மாறிவிட்டது. எல்லாம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததிலிருந்து தொடங்கியது. தொலைபேசி உரையாடல்கள் வெகுவாகவே குறைந்து விட்டது. ஏதாவது தேவை அல்லது தகவல் வேண்டுமென்றால் மட்டுமே அழைப்புகள்.

இப்போதெல்லாம் நெருக்கம் குறைந்து விட்டதோ என நிலாவிற்குத் தோன்றியது. காதலித்த போது எப்படிச் சுற்றிச் சுற்றி வருவான்.

தற்செயலாகத் திரையரங்கொன்றில் அவர்கள் சந்திப்பு ஏற்பட்டது. இடைவேளையில் இரு கைகளில் தனக்கும் அப்பா அம்மாவிற்குச் சேர்த்து மூன்று பாக்கெட் பாப்கார்ன் கைக்கொள்ளாமல் எடுத்துக்கொண்டு வரும்போது எங்கிருந்தோ விடுக்கென திரும்பியவன் தட்டிவிட மொத்தமும் தரையில் சிந்தியது. நிலா அதிர்ச்சியில் உறையப் பலமுறை மன்னிப்பு கேட்டான்.

தான் போய் வேறு வாங்கி வருகிறேன் என்றபோது “வேண்டாம்” என்று மறுத்தாள். படம் தொடங்கிய சிறிது நேரத்தில் மூன்று பாக்கெட்டுகளுடன் அவளைத் தேடி வந்து கைகளில் திணித்து விட்டு புன்னகையொன்று வீசிவிட்டுச் சென்றான். அவள் கவனம் முழுவதும் படத்தில் செலுத்த முயன்றும், அவள் மனதில் நீங்காது நிலைத்தான்‌.

அவன் மோதியது, பதட்டத்துடன் மன்னிப்பு கேட்டது, மீண்டும் வந்து தன்னிடம் பாப்கார்ன் தந்தது, புன்னகை வீசி கம்பீரமாய் நடந்து சென்றது, திரும்பத் திரும்ப மனத்திரையில் ஓடியது.

வேடிக்கை என்னவென்றால் நாம் யாரைப் பற்றி நினைக்கக் கூடாது என்று எண்ணுகிறோமோ அவர்களை குறித்து அதிகம் நினைக்கிறோம். நாம் யாரை அதிகம் நினைக்கிறோமோ அவர்களைக் காணத் துடிக்கிறோம்.‌ பொது இடங்களுக்குச் செல்லும்போது ஆழ்மனது நாம் அறியாமலேயே அவர்களைத் தேடத் தொடங்குகிறது. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் அவர்கள் நம் கண்களில் தென்பட்டு விடுகிறார்கள்..

அத்தகைய அனுபவம் நிலாவிற்கு ஏற்பட்டது. கல்லூரி சுற்றுலாவிற்கு கொடைக்கானல் சென்றபோது படகுத் துறையில் பார்த்தாள். அருகில் ஓடிப்போய் ‘ஹாய்’ எனச் சொல்லத் துடித்தாள். ஆனால் ஏதோ தடுத்தது. தன்னை அவன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே. பிறகு தோழிகளோடு படகு சவாரி முடித்து விட்டு சூடான மசாலா டீ குடிக்க வந்தனர். அனைவரும் அங்கிருந்த புல்தரையில் அமர நிலாவும் இன்னொரு தோழியும் கடையிலிருந்து தேநீர் கோப்பைகள் எடுத்துக் கொண்டு அவர்களை நோக்கி நகர

“பார்த்து, சிந்திவிடப் போகிறீர்கள். நான் வேண்டுமானால் உதவட்டுமா ?” காதருகில் அவனது கம்பீரமான குரலைக் கேட்டவுடன் அதிர்ந்தாள்.

அவன் புன்னகையுடன், ” ஹாய். அ யம் விக்ரம்”.

அவள் என்ன சொல்வது என விழித்தாள்.

“நினைவில்லையா? பாப்கார்ன்” என்றான்.

“அப்படியா தெரியலைங்க. என்ன பாப்கார்ன்? ”

அவன் முகம் வாடியது. அவளுக்குப் பாவமாக இருந்தது.

இருந்தாலும் அவனைச் சீண்டிப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

சீண்டல்களும் கிண்டல்களும் விரைவிலேயே இணைத்து நட்பாய் மலரச் செய்தது.

இப்படித் தொடர்ந்த நட்பு வெகு விரைவிலேயே காதலாகக் கனிந்தது. அதைக் கூட அவன்தான் மிக அழகாக வெளிப்படுத்தினான்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து கொண்டிருக்கும்போது அவ்வப்போது மேற்குத் தொடர்ச்சி மலையைத் தாண்டி தமிழகத்தில் நிலமகளையும் குளிர வைத்து விட்டுப் போகும். அப்படி மழை இல்லாத நேரங்களில் குளிர்ந்த சாரல் வீசும். இளம் மாலை வெயிலும் சாரலும் குளிர்ந்த காற்றும் ரம்மியமாக இருக்கும். அப்படியொரு பொழுதில் இருவரும் பேசிக் கொண்டு செல்லும் போது அவளது கைகளைப் பற்றி,

“நிலா, ஒவ்வொருத்தருடைய வாழ்க்கை என்கிற இரயில் பயணத்தில் எத்தனையோ பேர் உடன் பயணிக்கிறார்கள். உறவினர்கள், நண்பர்கள் , அறிமுகமானவர்கள் என்று பலவிதத்தில். யாரோ ஒருவரின் துணையால் அந்த பயணத்தை அழகு படுத்திக் கொள்கிறோம். அர்த்தமுள்ளதாக்கிக் கொள்கிறோம். எனது வாழ்க்கைப் பயணத்தில் அந்த யாரோ ஒருவர் ஏன் நீயாக இருக்கக் கூடாது’

என்று கேட்டான்.

அவளுக்கு அது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இல்லை. எத்தனையோ யுகங்களாய் எதிர்பார்த்த ஒன்று தனக்கு இப்போது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி மனதில் நிறைந்திருந்தது.

இருவரின் பெற்றோர்களும் முற்போக்கான எண்ணங்கள் உடையவர்களாகியதால் சாதி, குலம் இவற்றையெல்லாம் கடந்து இத்திருமணத்திற்கு முழு சம்மதத்தையும் அளித்து விட்டனர்.

நிலா பெற்றோருக்குச் செல்லப் பெண்ணாக வளர்ந்தவள். கேட்டதெல்லாம் கிடைத்தது. ஆளை மயக்கும் அழகு இல்லையென்றாலும் திரும்பப் பார்க்க வைக்கக்கூடிய எடுப்பான அழகு. எவ்வளவோ எதிர்பார்ப்புகளோடுதான் விக்ரமை காதலித்து, மணந்தாள்.

அப்பா மட்டும் “எதுக்கும் ஒன்னுக்கு ரெண்டு தடவ யோசிச்சக்குமா’ என்றார்.

அவனுடைய ஆறடிக்கு சற்றே குறைவான நெடுநெடுவென வளர்த்தியும் கம்பீரமான தோள்களும், பரந்த மார்பும் முறுக்கிய மீசையும் எல்லாவற்றையும்விட கவர்ச்சியான புன்னகையும் அவளுடைய அறிவை ஓரம் தள்ளி உணர்வுகளை உசுப்பி விட்டதால் அவனோடு பயணிக்கத் தொடங்கிவிட்டாள்.

அவளும் வேலைக்குச் சென்று கொண்டிருந்தவரை அவனுடைய பிரிவு தெரியவில்லை. ஆனால் புதிதாகச் சென்னைக்கு மாற்றலாகி வந்ததிலிருந்து அவள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாகியது.

நிலாவிற்கு அசதியில் தூக்கம் கண்ணைச் சுழற்றியது. .அதே நேரத்தில் எதிர்பார்ப்பு தூக்கத்திற்கு அணைக் கட்டியது. இத்தனை மணிக்கு வந்துடுவேன் என்று சொன்னால் குறைந்தா போய்விடுவார்.

நகரின் மையத்தில் நட்சத்திர விடுதியொன்றோடு இணைந்திருந்தது அந்த பார். வெளிச்சம் வெகுவாக குறைந்திருந்த

அவ்விடத்தில் ஏகத்துக்கும் சாராய நெடி வீசியது. ஆண், பெண் வேறுபாடுகள் களைந்து பாலின சமத்துவம் விரவியிருந்தது. பெண்கள் வயது வித்தியாசமின்றி உடலோடு ஒட்டி‌ய உடையணிந்து தாங்கள் சரியான வடிவமைப்பு கொண்டவர்கள் என்றனர். ஏகத்துக்கும் பூரிப்பு, முகச்சாயத்தைத் தாண்டி வழிந்தது. அப்படி உடலில் வளைவு நெளிவு இல்லாதவர்கள் தாராளமாகத் தொளதொள வென்று உடைத் தரித்திருந்நனர்.‌ அவ்வப்போது முன் நெற்றியில் விழும் தலை முடியைச் சரி செய்யக் கைகளைத் தூக்கும் போது ஃபெர்யூம் வாசனைச் சாராய நெடியோடு மோதி கிறங்கடித்தது.

இங்கு வருபவர்கள் பலவிதம். கவலை, சோகம், உற்சாகம், மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றிற்கும் வடிகால் இது என நம்புபவர்கள். கவலைகளும் பிரச்சினைகளும் தற்காலிகமாக மரத்துப் போகச் செய்யும் என்கிற அளவில்தான் அது உண்மை. ஆரம்பத்தில் நண்பர்களோடு பொழுதுபோக்குக்காக ஆர்வத்துடன் வரத் தொடங்குபவர்கள், நாளடைவில் பழக்கமாகி மதுவை எதிர்பார்க்கத் தொடங்குகின்றனர். பழக்கத்தில் விழுந்த பிறகு அதிலிருந்து மீண்டு வருவது கடினம். காரணம், தான் அப்படியொரு பழக்கத்திற்கு ஆளானவன் என்று எளிதில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மேலும் அப்பழக்கத்திற்கு நாள்தோறும் இழுக்கும் காரணிகள் அப்படியே இருக்கிறவரை அது அவ்வளவு எளிதல்ல. இரண்டு மூன்று சுற்றுமுடிந்து மேலும் தொடரும்போது எல்லா கட்டுப்பாடுகளையும் தளரச் செய்து உள்ளக்கிடங்கில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பி விடுகிறது. அதற்குப்பிறகு எந்த விதமான தயக்கமும் இன்றி எதையும் பேச முடிகிறது. யாரைப் பற்றி வேண்டுமானாலும் பேச முடிகிறது. குடிகாரர்களைப் பொறுத்தவரை அதைத் தியான நிலை என்றே சொல்லலாம். எதையும் மூடி மறைக்காமல் உண்மைகள் அப்பட்டமாக வெளிவரும் தருணம். நான், நீ, மறைந்து அனைவரும் ஒன்றற கலந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

விக்ரம் அவனது நண்பர்கள் மூவர் ஒரு ஓரத்தில் மற்றவர்கள் கண்ணில் எளிதில் படாதவாறு அமர்ந்திருந்தனர். விக்ரம் ஓராண்டாகத் தான் இவர்களோடு வரத் தொடங்கினான். ஒரு ஆர்வத்தோடு என்ன ஏது என்று அறிந்துகொள்ள ஆரம்பித்து . வெகு சீக்கிரத்திலே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது. வீட்டிலே குடும்பம் இருக்கிறது என்கிற நினைவு அவ்வப்போது அவனைத் தடுக்க முயற்சித்தாலும் நாம் ஒரு கட்டுப்பாட்டில்தானே இருக்கிறோம். இந்த வாரத்தோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானிப்பான். ஆனால் அது தொடர்கதையாகத் தான் இன்னும் சென்று கொண்டிருக்கிறது.

குடித்துக்கொண்டு உல்லாசமாக அரட்டை அடித்தாலும் மூளையின் ஏதோ ஒரு மூலையில் வீட்டுக்குச் சீக்கிரம் போகவேண்டும் என்கிற கவலை அவனுக்கு இருந்தது. சரி இத்தோடு கிளம்பலாம் என்று நினைத்தால் அதிலொரு சிக்கல் இருந்தது. கடைசி ஆள் முடிக்கிறவரைக் கிளம்பிவிட முடியாது. அப்படியே முயற்சித்தாலும் தடுத்து உட்கார வைத்துவிடுவார்கள்.

“நேரமாகிவிட்டது. மூடப் போகிறோம் கிளம்புங்கள்‌” என உள்ளிருப்போர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள். இது அன்றாடம் நடக்கும் வாடிக்கை.

ஒருவழியாக இவர்கள் வெளியே வரும்போது மணி பதினொன்று முப்பது. வீட்டில் மனைவி காத்திருப்பாள் என்கிற எண்ணம் நினைவுக்குவர இரத்த ஒட்டத்தில் சற்று பதட்டம் கூடியது.

தனது இருசக்கர வாகனத்தைக் கிளப்பி ஆள் அரவமற்ற சாலையில் சீறிப் பாய்ந்தான். குளிர்ந்த காற்று அவன் முகத்தில் சில்லென்று அடித்தது. ‘அடடா தலைக்கவசத்தை பாரிலேயே விட்டுவிட்டோமே’. திரும்பிச் செல்லலாம் என்று நினைக்க‌, அடைத்து விட்டிருப்பார்கள் என்று தோன்றியதும், ‘எங்கே போய்விடப் போகிறது, நாளை எடுத்துக் கொள்ளலாம்’ என்று வண்டியை விருட்டென்று விட்டான். வாலாஜா சாலையிலிருந்து அண்ணாசாலையில் இடது புறம் திருப்பி வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

தேவி திரையரங்கம், எல்ஐசி மெட்ரோ இவைகளை கடந்து பயணிக்கும்போது ஸ்பென்சர் சந்திப்பில் காவலர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். ஏற்கனவே குடித்திருக்கிறோம், தலைக்கவசம் இல்லை. மாட்டினால் அவ்வளவுதான் என்று தீர்மானித்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தான். தடுப்பு இருந்ததால் சாலையின் அந்தப்பக்கம் போக முடியாது. ஆகவே இடதுபுற சந்து ஒன்றில் திரும்ப முடிவெடுத்து சரக்கென்று திருப்பினான். எல்லாம் அரை நொடி தான். முகப்பு விளக்குகள் சரியாக எரியாமல் அவன் பின்னாலேயே வேகமாக வந்த தண்ணீர்லாரி மோட்டார் சைக்கிளையும் அவனையும் அப்படியே உள்வாங்கிக் கொண்டது. லாரியின் பின் சக்கரம் ஓட்டுநர் அழுத்திய பிரேக்கிற்கு கட்டுப்படுவதற்குள்‌ அவன் தலையில் ஏறி இறங்கியது. வலியை உணருவதற்குக்கூட வாய்ப்பின்றி மரித்துப் போனான்.

எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது. நிலாவிற்குத் தூக்கம் வரவில்லை. மீண்டும் போன் எடுத்து அவன் எண்ணை அழைத்தாள். அடித்துக் கொண்டேயிருந்தது. சலிப்பும் ஏமாற்றமும் வந்தது. எப்பொழுது தூங்கினாள் என்று தெரியாது. அதிகாலை மூன்று மணியிருக்கும். வாசலில் வண்டி வரும் சத்தம் கேட்டது. சன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள். குழல் வைத்த அந்த போலீஸ் வண்டி நிற்கிறது. விரைந்து சென்று கதவைத் திறந்தாள். களைப்பினை காட்டாமல் கம்பீரமாய் நின்ற அவன்மீது சாய்ந்து இறுக்கக் கட்டிக் கொண்டாள். அணைத்துக் கொண்டே உள்ளே அள்ளிச் சென்றான்.

அவன் மார்பில் இன்னும் அழுத்தமாகப் புதைத்துக் கொண்டு ‘ஓ’வென்று அழுதாள்.

செல்லம் என்ன ஆச்சு உனக்கு?

எப்ப போன் பண்ணாலும் நீங்க எடுக்க மாட்டேங்கறீங்க. அப்படியே எடுத்தாலும் ஒரு நிமிஷம் கூட முழுசா பேச மாட்டேங்கறீங்க. எப்ப வருவீங்க என்ன பண்றீங்க, ஒன்னுமே தெரிய மாட்டேங்குது.

ஆஹா. அதுதான்‌‌ விஷயமா? போலீஸ் அதிகாரின்னா அப்படிதாண்டா செல்லம். நேரம் காலமே கிடையாது. எப்பவுமே ஒரு பரபரப்பான வாழ்க்கை.

“நீங்களும் எல்லாரையும் போல காலைல ஆபீஸ் போயிட்டு சாயந்தரம் வீட்டுக்கு வந்து என் கூட இருக்கணுன்னு நினைக்கிறது தப்பா”.

“அதுக்கு நீ அந்த மாதிரி வேலை செய்யற ஒருத்தர லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்கனும்”.

“அப்பா அப்பவே சொன்னாரு. பாத்துக்கம்மா போலீஸ் உத்தியோகம். நேரங்காலம் இருக்காதுன்னு”.

“அப்பா சொன்னத கேட்டு உனக்கு ஏத்த பையனா பார்த்து பண்ணிக்க வேண்டியது தானே”

“முடியலையே”.

“ஏன்?”

“நீதான் என்ன சாச்சிட்டியே”.

“அய்யோ, நான் என்ன தப்பு பண்ணேன்.”

“இந்த போலீஸ்காரர் திருட்டுத்தனமாக என் உள்ளத்தைக் கொள்ளை அடிச்சிட்டார்” என்று சொல்லிக் கொண்டே இன்னும் அழுத்தமாகக் கட்டிக் கொண்டாள். இருவரும் அப்படியே சோபாவில் சரிந்தார்கள்.

“இன்னைக்கு கூட புறப்படும் நேரத்தில ஸ்பென்சர் கிட்ட ஒருத்தன் ஃபுல்லா குடிச்சுட்டு பைக்க கொண்டு போய் லாரியில விட்டுட்டான். ஸ்பாட்டிலேயே அவுட்”..

நிலா எதையுமே கேட்கும் மூடிலயே இல்லை. வெகுண்டெழுந்த பெண் புலியாய் அவனை அங்குலம் அங்குலமாய் இரசித்துக் கொண்டிருந்தாள்.‌

“இதில ஒரு வேடிக்கை என்ன தெரியுமா? விபத்தில் இறந்தவன் பேரு………….”

‘விக்ரம்’னு சொல்வதற்குள் அவன் சிவந்த உதடுகளை தாழிட்டாள், தன் இதழ்களால்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *