வாழ்விற்கே ஒரு நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 4,741 
 
 

(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“கா, கா” என்று கரையும் சப்தம் கேட்டது. விடிந்துவிட்டதோ என்று சுப்பையா முதலியார் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தார்.

வெளியிலோ, ஷவரிலுள்ளிருந்து விழும் நீர்க்கம்பிகளைப் போல, சுக்லபக்ஷத்து நிலவு ‘பொருபொரு’வெனச் சொரிந்து கொண்டிருந்தது. ஏதோ சொர்க்க சொப்பனம் போல், உலகம் அந்த அமைதியினூடே படுத்துக்கிடந்தது. நில வொளியைப் பார்த்து விடிந்துவிட்டது என்று ஏமாந்த அந்தக் காக்கை, அந்த நிர்மலமான வானவெளியில் பீதியுடன் சிறகடித்துச் சென்றது.

“சே! நிலவு இன்னும் இறங்கக்கூட இல்லியே. அதற்குள் எப்படி விடிஞ்சிரும்?” என்று மனதை உற்சாகப்படுத்திக் கொண்டார். பொடித்தடையை எடுத்துத் தடவிப் பார்த்தார். ஒரு நேரத்துக்குக்கூட, அதில் பொடி இல்லை. தடையை விரித்து அப்படியும், இப்படியும் தட்டி அதில் ஒட்டியிருந்த தூள் அனைத்தையும் தங்கத் தூளை பிரஷினால் துடைத்து ஒன்று சேர்ப்பதுபோல் ஒன்று கூட்டினார். அப்படியே, மூக்கண்டை மட்டையைப் பிடித்து, ‘ராக்ஷஸ உறிஞ்சு’ உறிஞ்சினார். பொடித்தூள் முழுவதும் மூக்கினுள் ஐக்கியமாகிவிட்டது.

“ங்கே” என்று கனைத்து உற்சாகப்படுத்திக் கொண்டு, மீண்டும் வேலையைத் தொடங்கினார்.

“டகடக், டகடக்!”

தறியினூடே., நூல் அப்படியும், இப்படியும் ஓடிக் கொண்டிருந்தது.

மாடக்குழியிலிருந்த, ‘தகரச் சீமை எண்ணெய் ராந்தல்’ ஏதோ காக்காய் வலிப்பு வந்ததுபோல் படபடவென்று இடித்தது. விளக்கை எடுத்துக் காதண்டை வைத்துக் குலுக்கிப் பார்த்தார்.

“சே! ஒரு சொட்டுக்கூட, எண்ணை இல்லெ” என்று சலித்துக்கொண்டார், குலுக்கினதில் ஸ்வீகரித்த எண்ணையை வைத்துக்கோண்டு, அந்தக் கட்டைத் திரி மீண்டும் எரிய ஆரம்பித்தது.

மீண்டும் தறியில் கையை வைத்தார்.

“டகடக், டகடக்!”

சுப்பையா முதலியாருக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். கல்யாணமானவர்; அதன் பலனாய்த் தோன்றிய மூன்று குழந்தைகள். இவர்களை மேல் பார்க்கவேண்டிய பெரும் போறுப்பு அவர் தலைமேல் கிடந்தது. ஆளைப்பார்த்தால், ‘பஞ்சத்தில்’ அடிபட்டவர் மாதிரிதான் இருப்பார்… ! ஒட்டி உலர்ந்து போன் வற்றல் உடம்பு. முகத்திலே ஓயாத உழைப்பின் சலிப்புத் திரைகள் சிப்பிப் பாறைகள்போலப் படிந்திருந்தன. ஒரே மண்ணில் பிறந்து, பலவிதமாய்த் திரிபும் தேசிய வாதிகளைப்போல் அவருடைய மீசை கட்டுக் கடங்காமல், எப்படி எல்லாமோ வளர்ந்திருந்தது. ஓய்வற்ற உழைப்பாலும், தீர்க்க முடியாத கவலையாலும் தலையில் வழுக்கைகூட விழுந்து விட்டது. ஒன்றிரண்டு வெள்ளி மயிருங்கூட இழைவிட்டிருந்தன. ஆளைப் பார்த்தவுட னேயே:, எந்த அசந்தர்ப்பத்தையும் அநாயசமாய் ஏற்றுப் பழகினவர் என்று லேசாகப் புரிந்துவிடலாம்.

வாழ்க்கைப் புயலில் தன்னைத்தானே கவிழ்த்துவிடாத தீரப்படகு போன்றவர் அவர்.

“இன்னும் இரண்டு நாளைக்குள் ஜோலி முடிந்தால் தான் ஏதாவது கிடைக்கும். தீபாவளியையும் சமாளித்துக் கொள்ளலாம்” என்று தனக்குத்தானே தீர்மானித்துக் கொண்டதின் பயனாகத்தான் அவர் இரவுங்கூட, முழுநேர வேலையில் ஈடுபட்டிருந்தார். அவர் தொழில் நெசவுத் தொழில். உலகத்தாரின் மானத்தைக் காக்க உதவும் புண்ணியாத்மாக்களில் அந்தப் பிரகிருதியும் ஒருவர்.

“டகடக், டகடக்!” பாவினூடே, நூலிழைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தன.

இழுத்து இழுத்து அடித்து, அவருடைய காலும் கையும் ஓய்ந்துவிட்டன. கையையும் காலையும் உதறிவிட்டுக் கொண்டு, பொடித் தடையைத் தடவினார். ஆனால், மீண்டும் உறியப் பொடியில்லை. சலித்துப்போன மனதுடன், அப்படியே கண்ணைச் சுழற்றும் தூக்கத்திலே, சுவரில் சாய்ந்தார். அவருடைய சிந்தனை என்னவெல்லாமோ பின்னி. நெய்ய ஆரம்பித்தது.

“சே! தீபாவளியாம். தீபாவளியும் திருக்கல்யாணமும் யாருக்கு வேணும்?. அன்றன்றைக்குப் பாட்டைக் கவனிப்பதற்கே வழியைக் காணோம். தின்று கொழுத்த முண்டங்களுக்கு, இது சரிதான். ஆனால், நம் போன்ற வனுக்கு இந்தக் கட்டை பூமியிலே சாயுற நாள் தான் தீபாவளி!”

ஆனால் -? இந்த வறட்டு ஆராய்ச்சிக்கு அவருக்கு நேரம் ஏது?

கிட்டித்து வந்த தூக்கத்தை ஒரு. ‘உலுப்பூ’ உதாப்பி விரட்ட முயன்று கொண்டே முன்னே பார்த்தார்.

தறிக்கு அந்தப்புறம் மனைவி குழந்தைகள் எல்லாரும் படுத்துத் தூங்கு கிறார்கள். அந்தப் பல ஜீவன்களை மகிழ்விப்ப தற்காக, இந்த ஒரு ஜீவன் தன்னைத்தானே நாசமாக்கிக் கொண்டிருக்கிறது.

“பெண்ஜாதி? நான் எதற்குக் கல்யாணம் பண்ணிக் கொண்டேன்? என்னுடைய முட்டாள் தனமா – இல்லை சமதச் சந்தர்ப்ப நெருக்கடியா?-எதுவுமிருக்கட்டும். இப்போது எனக்கு எல்லாம் கசந்துபோய்விட்டது. ‘இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்றுமில்லை’ – இது எந்த மடச்சோணகிரி சொன்னதோ, தெரியவில்லை. என் வீட்டிலோ, அந்த இல்லாள் மட்டுந்தான் கண்டது மிச்சம்.

“குழந்தைகள்! மனுஷனுடைய நிலைமையை அறியாமல், இந்த உலகத்தைப் படைத்தானாமே, ஒரு போக்கிரி– அவன் அனுப்பிவைத்த அழைக்காத விருந்தாளிகள் தானா? சே! நொந்துபோன மனவேதனையை மறக்க எண்ணி, முன் என்றோ ஒருநாள் மனைவியின் முன் கொஞ்சம் மனுஷத்துவம் காட்டியதின் பயனா, இவை! காதல் எனும் மரத்தை அணைத்து வளரும் புல்லுருவிகள் தானா, குழந்தைகள்? அன்றைக்கு அந்த சுப்புத்தாயி கர்ப்பத் தடையின் அவசியத்தைப்பற்றிப் பேசினாளே, அது ரொம்பவும் சரிதான். பஞ்சமும் நோயும் சூறையிடும்போது, பிள்ளையென்ன, பிள்ளை? மனிதனுடைய சரீரப் பசியின் கோர விளைவுகள் தானா? குழந்தைகள்?………..சே! என்ன இது. என்னுடைய உயிர் தானே அதோ கூறுகூறாகப் பிரிக்கப்பட்டுக் கிடக்கிறது. என்னுடைய ஆத்மப் பரிபாகந்தான், அவர்கள்!

சுப்பையா முதலியார் கண்களைச் சுழற்றிக் குழந்தைகளைப் பார்த்தார். மடல் பிளந்த மக்காச் சோளக்கதிரின் உள்ளிருக்கும் மணிகளைப்போல் அந்த அரிசிப் பற்கள் வெளியே தெரியும்படியாய், மூத்த பையன் சொப்பனத்திலே சிரித்துக்கொண்டிருந்தான்.

“அவள் என்னென்ன சொப்பனங் காணுகிறானோ? காக்கையின் முதுகில் சவாரி போட்டுக்கொண்டு, ஆகாயத்தில் பறப்பதுபோலக் கனவு காண்கினோ? சொர்க்க உலகில், நிலாவோடு கைகோத்துக்கொண்டு, நக்ஷத்திர மீன்களைப் பிடித்து விளையாடுவதாகக் கனவு காண்கிறானோ? இல்லையெனில், தீபாவளியன்று தனது அப்பா வாங்கிக் கொடுத்த பட்டுச்சட்டை, பட்டு வேஷ்டி கட்டி, எண்ணெய் வழியும் அப்பத்தைத் தின்று கொண்டே பட்டாஸ் சுடுவதாகக் கனவு காண்பானோ? அப்படித்தானிருக்கும். பெற்றோர் களின் நிலைமை தெரியாத பயல்!”

அவருடைய கண் மீண்டும் உலவுகிறது. அந்தக் கைப் பிள்ளை, பற்றுக்கோடற்ற மரக்கிளையில் ஏறும். அணிற் பிள்ளையைப்போலத் தொத்திக்கொண்டு, தாயின் மார்பில் வாய்வைத்துச் சுவைத்துக்கொண்டிருந்தது. நாள் முழுதும் வேலைசெய்து களைத்துப்போன அந்த மனைவியோ உணர்ச்சி யன்றித் தூங்கிக்கொண்டிருந்தாள்.

அசதியின் மயக்கத்தினால், அயர்ந்து தூங்கும் மனைவி, தூக்கத்தின் மத்தியிலும் பாலுறிஞ்சும் அந்தச் சின்னக் கைப்பிள்ளை, தூக்கத்தின் இடையில் இன்பக்கனல் கண்டு புன்னகை புரியும் சிரேஷ்ட புத்திர பாக்கியம் எல்லாம் அவர் உடம்பில், ஒரு புது ஊக்கத்தையும், வலுவையும் ஊட்டிற்று.

“மனைவியும் மக்களும்” மனுஷன்மேல் ஒண்டவந்த பிடாரிகளல்ல. அவனுக்கு ஊக்கமளிக்கும் தெய்வச் சிற்பங்கள் என்ற உண்மை அவர் மனதில் எதிரொலித்தது. மீண்டும் வேலையைத் தொடங்கினார்.

“டகடக், டகடக்!” தறி கதறிக்கொண்டிருந்தது.

மேல வானத்தின் வெள்ளி நிலா வட்டம் வீங்கிப் பருத்து, தங்கமயமாகிக் கொண்டிருந்தது. கூட்டிலிருந்து தவறி விழுந்து, அந்தரத்திலே தொங்கும் சிலந்தியைப் போல், வானத்தில் விடிவெள்ளி தொங்க ஆரம்பித்தது..

சீமை எண்ணெய் விளக்கு போஜனமற்று மங்கிப் படர்ந்து எரிய ஆரம்பித்தது.

சரி, நேரமாகிவிட்டது என்று உணர்ந்துகொண்டே தறிவை விட்டு வெளியேறினார் முதலியார்.

“காகா” என்ற சப்தம் சூரியனின், வரவிற்குக் கட்டியம் கூறிற்று.

2

“நல்ல சகுனந்தான், காக்கா வலம் பாயுது. போயிட்டு வாருங்க” என்று வழியனுப்பினாள் முதலியாரின் மனைவி.

நெய்து முடிந்த, விற்பனைக்குத் தயாரான சேலை மூட்டையை எடுத்துக்கொண்டு, தெருவில் இறங்கினார் முதலியார்.

மனத்திலே ஏதோ எதிர்பாராத சம்பத்தை அனுபவிக்கும் முன்ருசி தட்டுப்பட்டுக் கொண்டிருந்தது. தன் னுடைய உழைப்பின் சிருஷ்டி, தனது வயிற்றை நிரப்பிவிடும் என்ற நம்பிக்கை களி கொண்டிருந்தது.

“சேலை நயம் சேலை!”

இந்த மந்திரத்தை அவர் பூர்ண நம்பிக்கையோடு தான் உச்சரித்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரை யாரும் கூப்பிடு வதாகக் காணோம்.

நேரம் போவதற்காக, சில ‘அந்தப்புர தர்பார் அமைச்சர்கள்’ அவரை வம்புக்குக் கூப்பிட்டு “’இது என்ன சேலை! தியாகபூமிச் சேலை யில்லையா? சிந்தாமணி பார்டர் தான் நன்றாயிருக்கும். இந்தக் கத்தரிப்பூவும், “சிலேட் கலரும்” யாருக்குப் பிடிக்கும்?” என்றெல்லாம் கேள்விக் குப்பையை அவர் மேல் கொட்டி விரட்டினர்.

அவருடைய கெம்புச் சாயத்தையும், ருத்திராக்ஷக் கரையையும், லுங்கி மோஸ்தரையும் ஒருவரும் விரும்பு வதாகக் காணோம்..

“சேலை! நயம் புடவை!”

அவருடைய இந்த மந்திரம் பலன் கொடுப்பதாயில்ல. நாவும் தொண்டையும் வறண்டதுதான் மிச்சம். பக்கத்துக் கடையில் ஒரு சல்லிக்குப் பொடி வாங்கி, ஒரு சிமிட்டா உறிஞ்சினார். பக்கத்துக் குழாயடியில் வயிறார நீரருந்திவிட்டு அப்படியே கீழே உட்கார்ந்தார்.

சலித்துப்போன உள்ளத்தின் சிந்தனை வேகத்தை, அந்த ஒரு சிமிட்டாப் பொடி கிண்டிவிட்டது, அவருடைய கண்முன் நெசவுலகத்தின் தாழ்மையே தடுமாறிக் கொண்டிருந்தது.

“நெசவுத் தொழிலாம், நெசவுத் தொழில்! தலை சிறந்த அது. வள்ளுவர் கூட, நெசவினால் தான் ஜீவனம் நடத்தினாராம். அது அவர் காலத்துக்குச் சரியாய்ப் போச்சு. அப்பன் வெட்டின கிணறேன்னு உப்புத் தண்ணியைக் குடிக்கவா? இது வள்ளுவர் யுக மில்லையே! ஒளரங்கசீப் தினந்தோறும் கொஞ்சமாவது நூற்றாலொழியச் சாப்பிட மாட்டானாம். ஆனால் அவனுக்கு நூற்கவேண்டிய கல்லை இருந்ததேயொழிய, அதை விற்கும் கவலையும், அதைக் கொண்டு சாப்பிட வேண்டிய கவலையும் இருந்ததா? எங்களுக்கோ நூற்கும் போதே சாப்பாட்டுக் கவலைதானே முன்னே நிற்கிறது!

“அன்னைக்கி, என்னமோ எங்கள் தெருவிலே, நாலு இளவட்டப் பிள்ளைகள் வந்து கூட்டம் போட் டாங்க. ‘நாட்டின் தற்காலப் பிரச்னையில் உற்பத்தியும் ஒன்று’, ஆதலால், உற்பத்தியைப் பெருக்குங்கள். உலக மக்களின் நித்திய தேவையைப் பூர்த்தி செய்வதில், உங்கள் கடமையையும் செய்யுங்கள்’ என்று என்ன வெல்லாமோ சொல்லி, நெசவுத் தொழிலாளர் சங்க மின்னு ஒண்ணை ஏற்படுத்தினார்கள். என்னமோ சந்தா சந்தான்னு இரண்டு மாசமா எட்டெட்டு அணா அழுதது தான் மிச்சம். இன்னம் கமிட்டி அமைக்கிறாங்களாம் கமிட்டி!

“இந்த இளவட்டங்கள் தான் இப்படின்னா, அந்தப் பொக்கைவாய் சேவா , கிராமத்துக் கிழவராவது சும்மா யிருக்காரா? இந்தியக் கைத்தொழிலை ஆதரிக்கணுமாம். தெரியுதே, இந்தியக் கைத்தொழிலுக்கு எவ்வளவு ஆதரவு இருக்குன்னு!

“எவனும், என்னத்தைாவது, சொல்லிட்டுப் போறான்னு, நம்ம பாட்டுக்கு நெய்து விற்கக்கொண்டு பேனா – வாங்கிறாங்களோ, வாங்கலையோ – ‘இது என்ன சேலை! ‘பிரிண்டட் ஸாரீ’ யெல்லாம் எவ்வளவோ, ‘சீப்’ பாக் கிடைக்குது’ என்று மார்க்கட் நிலவரத்தைக் கூறுகிறாள், அந்த வேதக்கார வாத்தி யம்மா !

“கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனா, அவர்களுக்கு எல்லாம் ஜார்ஜெட்டும், ஸ்பன் ஸில்க்கும், தியாக பூமி யுந்தான் பிடிக்கும். இந்தக் கொற்நாடும், கொட்டடியும் எங்கே பிடிக்கப்போகிறது? சாயும் போகும் போலிருக்கேன்னு, சேலை முனையைச் சுண்ணாம்பு வைத்து நீற்றுக் கசக்கிப் பார்க்கிறார்கள், பஜார்க் கடையிலே, சாயம் போகிற சேலையாயிருந்தாலும், அது கண்ணடிப் பீரோ விலல்லவா இருக்கிறது? அதைத்தான் வாங்குவார்கள்.

“கர்மம், உலகமே தந்திரமாய்ப் போச்சு, என்னைக்கி இந்தச் சிமைத்துனி இங்கே காலடி எடுத்து வச்சுதோ, அன்னைக்கே, எங்க வீட்டிலே அக்காளும் குடியேறிட்டா. எங்கே பார்த்தாலும், மில்கள் ஏற்பட்ட பின்னாடி நாங்கள் இந்த ஓட்டைத் தறியை வச்சு, எவ்வளவு நா தான் காலந்தள்ளுறது? ஆனால், மனுஷனும், மெஷினும் ஒன்றாகுமா? இடியோடு, மத்தளம் போட்டி போட முடித்தமா?

“சே! இந்தச் சேலைகளை வித்து, அதைக்கொண்டு தீபாவளி கொண்டாட! இந்தத் தீபாவளி கொண்டாட லைன்னாதான் என்ன? ஊரிலே ஒரு சாமான் கிடைக்கலே. தெருவுக்குத் தெரு எங்கே பார்த்தாலும், அநாதைப் பிரேதங்களாய்க் கீழே விழுகுது! தீபாவளியாம், தீபாவளி! இது யாருக்கு வேணும்?”

சுப்பையா முதலியார் பொடி மட்டையைப் பிரித்து, ஒரு விரற்கடைப் பொடியை எடுத்து உறிஞ்சிக் கொண்டார். வெயிலில் அலைந்து சூடேறிப்போன, வழுக்கை, உச்சியில் கைவைத்துத் தடவிக்கொண்டே, மூட்டையின் மேல் சாய்ந்தார்.

பக்கத்திலிருந்த எலிமெண்டரி ஸ்கூலிலிருந்து: வந்த பாடல் அவரை மீண்டும், சிந்திக்கத் தூண்டியது.

“ஆண்டிலே ஓர் நாள் தீபாவளியடா — அதை
ஆண்டியுங் கொண்டாட வேண்டுமடா”

என்ற அடிகள் முதலியாரை வசீகரித்தன. கூன் விழுந்த உள்ளம் மீண்டும் எழுந்து நின்று பார்த்தது.

“ஆண்டியும் கொண்டாட வேண்டும். நாமென்ன ஆண்டியை விடவா, கேவலமாப் போயிட்டோம். சே! எப்படியும் தீபாவளி கொண்டாடித்தான் தீரவேண்டும்?”.

அவர் மனதில் மீண்டும் உற்சாகம் முளைத்தது, களைப்புத் தீர்ந்த, அவர் கால்கள் மீண்டும் நடக்க ஆரம்பித்தன்.

“சேலை! நயம் சேலை!”

ரொம்பவும் நம்பிக்கையோடு கூவிக்கொண்டு சென்றார். எங்கு அலைந்தாலும் விற்றுவிடத்தான் வேண்டும் என்ற திடசித்தத்தோடு போனார்.

ஆனால், தெருக்காட்டில், விற்பதாகத் தெரியவில்லை. மேலும் அலையக் காலில் தெம்பு இல்லை.

“சந்தைக்குப் போனால் எப்படியும் விற்றுவிடலாம்” என்று தோன்றியது.

சந்தைக்குச் சென்று, கட்டவேண்டிய கட்டணத்தைக் கட்டிவிட்டு, கடையைப் பரப்பினார், அவர் ஆயுளிலேயே அதுதான் கடை பரப்பி விற்பது. விற்றுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரை அப்படியெல்லாம் பண்ணத் தூண்டிற்று.

சந்தையிலே, பெரிய வீட்டுப் பெண்கள் மட்டுமா வருவார்கள், அவர்கள் ஒருவருக்காவது இவருடைய சேலை பிடிக்காமலா போய்விடும்?

சில பேருக்கு அவை பிடித்தன.

சூரியன் மலைவாயில் விழுவதற்குள், அவர் நினைத்த படியே விற்க ஆரம்பித்தன. பன்னிரெண்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் மடியில் குலுங்கின.

மிஞ்சியிருந்த சில சேலைகளைக் சுருட்டி மூட்டை கட்டிக் கொண்டு கிளம்பினார்.

இவ்வளவு நேரமும் சேலை விற்கும் ஆர்வத்திலே மறந்து கிடந்த பசி, அவர் வயிற்றைக் கிண்டியது. விறு விறு என்று வீட்டை நோக்கி நடக்கலானார்.

அஸ்தமனத்தை உணர்த்த காக்கைக் கூட்டம் ‘காகா’ என்று இரைந்து கொண்டே, கூடுகளுக்குப் பறந்து சென்றன.

“எல்லாம் உன் சகுனபலந்தான்!” என்று அண்ணாந்து நின்று, காக்கைகளை வாயார வாழ்த்தினார், முதலியார்.

“ஆண்டிலே ஓர் நாள் தீபாவளியடா — அதை
ஆண்டியுங் கொண்டாட வேண்டுமடா”

என்ற அந்தப் பள்ளிப் பையனின் வரிகள் அவருடைய காதில் , தாளம் போட்டுக்கொண்டிருந்தன.

3

அன்று தீபாவளி இரவு. அடுப்பிலே ‘ வெந்துகொண்டிருந்த, பலகார, வாசனை, திண்ணையில் படுத்திருந்த சுப்பையா முதலியாரை உசுப்பி எழுப்பிற்று. ‘நிம்மதி நிறைந்த இனத்தோடு சோம்பன் முறித்துக்கொண்டே .. எழுத்திருந்தார். தலைமாட்டில் இருந்த பொடித் தடையைத் தடவி எடுத்துக் கொஞ்சம் பொடி உறிஞ்சிக் கொண்டார்.

தலையணைழேல் விரித்திருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, வீட்டினுள் சென்றார். உள் கட்டில், குழந்தைகள் எல்லாம் இன்னும் இருளின் அமைதியிலே, சுகமாய்த் தாங்கிக்கொண்டிருந்தன.

நேராக அடுக்களையும் சென்றார். அங்கு அவருடைய மனைவி, பலகாரம் வேகவைத்துக் கொண்டிருந்தாள்.. முதலியாருக்கு என்னவோ ஒருவித உற்சாகம் கிளம்பி விட்டது. மனைவி, குழந்தைகள் இவர்களை ரக்ஷிக்கும் ரக்ஷக புருஷனாகத் தோன்றினர்.

மனைவியின் பலகார வேலையில் தானும் பங்கெடுத்துக் கொண்டார். அதிலே அவருக்கு ஒரு திருப்தி.

“உங்களுக்கென்ன தெரியும்? நீங்க போய் எண்ணையெத் தேங்க” என்று மனைவி ரொம்பவும் சாகசமாய்ச் சொன்னாள்.

முதலியார் பதில் பேசவில்லை. அந்த அடுப்பின் சுழல் தீயின் ஒளியில், தம்முடைய மனைவியைப் பார்த்தார். என்னவோ ஒரு வயதுப் பெண் தங்கக் குழம்பில் குளித்து எழுந்ததுபோல் தோன்றியது. அவர் மனத்தின் குதூகலமும், பூர்ண நிறைவும், கிளுகிளுப்பை ஊட்டிற்று .

“பேச்சி!?’ என்ற இளங்குரலோடு, அவளைப் பிடித்து முகத்தில் முத்தமிட்டு விட்டார். இளமை மீண்டும் திரும் பியதுபோல இருந்தது, அவருக்கு.

முத்தம்பட்ட இடத்தைத் தடவிக்கொண்டே, மனைவி சொன்னாள்.

“என்ன இது! நல்ல நாளுங் கிழமையுமா? வருஷத்திற்கே ஒரு நாள்……. அன்னைக்குமா இப்படி?”

“இல்லைடி! என் வாழ்விற்கே ஒரு நாள்!” என்று நிமிர்ந்து நின்று சொன்னார் ஆண்பிள்ளைச் சிங்கம் சுப்பையா முதலியார்.

“போதும் விளையாட்டு. விடிந்த பிறகுமா…!” என்று முனகினாள், மனைவி.

“ஆமாம்; விடிந்துவிட்டது என்று ஆமோதிப்பதைப்போலக் கரைய ஆரம்பித்தது, காக்கைக் கூட்டம்.

– 1941 – க்ஷணப்பித்தம் – முதற் பதிப்பு: அக்டோபர், 1952 – மீனாட்சி புத்தக நிலையம், 60, மேலக் கோரத் தெரு : மதுரை கிளை : 228, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை

தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *