வாழ்க்கை வாழ்வதற்கே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 7,261 
 

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி மகாதேவனின் இறப்புக்கு உறவினர்கள் கூட்டத்தை விட நண்பர்கள் கூட்டமே அதிகமாக காணப்பட்டது. நிறைய முகங்களில் உண்மையான சோகம் காணப்பட்டது. அவரின் நண்பர்கள் தள்ளி உட்கார்ந்திருந்த அவரது மனைவி சாருமதியிடம் வந்து வணக்கம் சொல்லி உண்மையான வருத்தத்தை கண்களில் காண்பித்துச்சென்றனர்.அம்மாவின் தோளைப்பற்றியபடி மூத்த மகன் அசோகனும் அவன் மனைவியும் நின்றுகொண்டிருந்தார்கள், அவனுக்கு சற்று தள்ளி இளையவர்கள் இருவரும் சோகத்துடன் நின்று கொண்டிருந்தனர். மகாதேவன் இரக்கமுள்ள சுபாவம் படைத்தவன்,அவன் இருக்கும் இடத்தில் கல கலப்புக்கு பஞ்சமில்லை, நண்பர்களுக்கு அவன் என்றுமே நம்பகமானவன், மகாதேவனுக்கு இப்பொழுது வயது அறுபத்தைந்து இருக்கும், அதற்குள் காலதேவன் அவனை கூட்டிச்சென்றுவிட்டான்.

சாருமதி கணவன் உடலுக்கு விமானப்படை வீரர்களின் இறுதி மரியாதை செய்வதை பார்த்துக்கொண்டிருந்தாள். எழுந்து நின்று அவளும் தன் கணவனுக்கு
சல்யூட் வைத்தாள். “போய் வா கணவனே, தோழனாய், தந்தையாய், என்னை கவனித்துக்கொண்டவனே ! உனக்கு ஆத்ம சாந்தி கிட்டட்டும்.மனதார வேண்டிக்கொண்டாள், அவளின் நினைவுகள் கண்ணீருடன்…

சாருமதி காலேஜூக்கு கிளம்பிட்டியா? அம்மாவின் கேள்விக்கு அலுப்புடன் பதில் சொன்னாள், “இதோ கிளம்பிட்டம்மா” அம்மா அவளை உற்று பார்த்தாள், நீ இந்த ஒரு வாரமாய் சரியில்லை, உன்னைப்பார்த்துட்டுதான் இருக்கேன், உனக்கு என்ன பிரச்னை? அம்மாகிட்ட சொல்லு, அதெல்லாம் ஒண்ணுமில்லை, அசைண்மென்ட் வேலை ஜாஸ்தி அதான் வேறொண்ணுமில்லை அம்மாவின் அடுத்த கேள்வி வருமுன் தப்பிக்க வேண்டுமென்று சரி வரேம்மா என்று அவ்சர அவசர்மாக கல்லூரிக்கு கிளம்பினாள்.

சாருமதியின் அம்மா சொன்னது உண்மைதான், சாருமதி தற்போது அவள் நிலையில் இல்லை.மனம் முழுவதும் மூன்று தெரு தள்ளி உள்ள ஒரு வாலிபனிடம் சிக்கி இருந்த்து. அவன் வெளியூரிலிருந்து தன் அத்தை வீட்டிற்கு வந்துள்ளவன், யதேச்சையாக இவள் தன் தெரு தாண்டி பஸ்ஸ¥க்கு செல்வதை பார்த்தவன் மனதில் இவள் விழ அதற்கான முயற்சியில் இவன் நாள்தோறும் இவளை வட்டமிட கிராமமும் இல்லாமல் நகரமுமில்லாமல் இருக்கும் இவர்கள் ஊரில் இவன் இவளை வட்டமிடுவதை இவள் தன்னை கதாநாயகியாக கற்பனை செய்துகொண்டு அவனுடன் செல்ல தயாராகிவிட்டாள்.

பூனாவிலிருந்து மும்பை செலவதற்காக தன் நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த மகாதேவன் ‘லோனாவாவில்’ காரை நிறுத்தி அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட ரோட்டின் எதிர்புறம் கடந்தபோது ஒரு பெண் அவனது கவனத்தை கவர்ந்தாள், முகத்தில் மிகுந்த பீதியுடனும், கண்களில் மிரட்சி தெறிக்க அவன் மாநிலத்தை சேர்ந்த பெண் போல காணப்பட்டாள், அதைப்பற்றி அவன் கூட வந்த நண்பர்களுடனும் சொன்னான். அவர்கள் போய் பேசிப்பார் என்று சொல்ல நாம் சாப்பிட்டுவிட்டு வரும்பொழுதும் நின்று கொண்டிருந்தாலானால் கேட்கலாம், என்றவன் நண்பர்களுடன் சாப்பிட ஓட்டலுக்குள் நுழைந்தான்.

சாப்பிட்டு முடித்து பணம் கொடுத்து வெளியே வந்தவன் கண்ணில் ஒருவன் இந்தப்பெண்ணின் கையை பிடித்து இழுப்பதையும் அவள் தமிழில் கூச்சலிடுவதையும் பார்த்தவன் வேகமாக அங்கே சென்று கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தவனிடம் என்ன பிரச்னை என்று இந்தியில் கேட்க இவனுடைய இராணுவ உடையை பார்த்து அவன ஸாப் இந்த பெண் என்னோட பொண்டாட்டி,வீட்டில இருந்து கோபிச்சுட்டு வந்துட்டா,இப்ப நான் கூப்பிட்டா வரமாட்டேங்கறா, என்று சொன்னான். அவன் மீண்டும் இந்த பெண்ணிடம் ஏம்மா இவன் சொல்றதெல்லாம் உண்மையா என தமிழில் கேட்க அவள் இத்தனை நாட்கள் கழித்து தாய்மொழி கேட்டவள் முகம் பிரகாசமாகி கண்களில் நீர் வழிய ஐயா இவன் யாரென்றே தெரியாது, நான் தெரியாமல் இந்த ஊருக்கு வந்துவிட்டேன், இந்த ஊர் பேர் கூட தெரியாது, தயவு செய்து என்னை இங்கிருந்து கூட்டிப்போய்விடுங்கள், என்று கதறினாள். மகாதேவன் திரும்பி ஏண்டா பொய்யா சொல்றே என்று இந்தியில் கத்தி அவள் கையைப்பிடித்தவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட அவன் ஐயோ என அவள் கைவிட்டவன் இவனுடைய கோபத்தை பார்த்து மெதுவாக அங்கிருந்து நழுவினான். அதற்குள் அவன் நண்பர்களும் வர அவன் அவர்களிடம் விசயத்தை சொல்ல அவர்கள் நீ மும்பையிலிருந்து ஊருக்குதான போற, இவளை ஊர்ல கூட்டிட்டு போய் விட்டுடு என்றனர். அவனும் சரி என்னுடன் வா என்று காரில் அவளை முன்புறம் ஏறச்சொல்லி நண்பர்கள் மூவரும் பின்புறம் வந்து ஏறிக்கொண்டனர்.

மும்பையிலிருந்து சென்னை வரும்போதே அவள் பெயர் என்ன? எப்படி அங்கு வந்தாள் என்ற அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்டான். சென்னையில் இறங்கியவன் சாருமதி நான் தஞ்சாவூர்தான் போகணும் உன்னை கும்பகோணத்துல விட்டுட்டு போயிடறேன்,சொன்னவனிடம் வீட்டை விட்டு நாலு மாசம் கழிச்சு போறவளை எப்படி வீட்டுல ஏத்துக்குவாங்க என்று கண்ணீருடன் கேட்க நான் உங்க அப்பா அம்மாகிட்ட பேசறேன் என்றான், அவள் எனக்கு அம்மா மட்டும்தான் இருக்காங்க என்றவளை கழிவிரக்கத்துடன் பார்த்தான் மகாதேவன்.

கும்பகோணத்தில் இறங்கி அவள் வீட்டுக்கு சென்றபொழுது அங்கு அதிச்சி காத்திருந்தது, சாருமதியின் அம்மா மகள் ஓடிவிட்டாள் என்று கேள்விப்பட்டபின் அவளின் உயிர் இரு மாதங்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை, உறவினர்கள் மட மடவென அவர்கள் காரியத்தை முடித்துவிட்டிருந்தனர். சாருமதி கதறினாள், மகாதேவன் அவளை தஞ்சாவூருக்கே அழைத்து வந்தவன் தன் தாய் தந்தையிடம் அடுத்து என்ன செய்யலாம் என கேட்க அவர்கள், நீயும் ஆறுமாசத்துக்கு ஒருக்காதான் வர்றே, அதுவரைக்கும் நாங்க தனியாத்தான் இங்கிருக்கோம், அதனால இவளை இங்கேயே எங்கேயாவது ஒரு காலேஜ்ல சேர்த்துடு, இவ இங்கிருந்தே காலேஜ் போகட்டும் என்று பெருந்தன்மையாய் சொன்னவர்களைப்பார்த்து தொப்பென அவர்கள் காலில் விழுந்து கண்ணீரால் அவர்கள் கால்களை நனைத்தாள்.

மகாதேவன் அடுத்து அவளை காலேஜ் சேர்க்க அலைந்து திரிந்து ஏற்பாடு செய்தான். சாருமதி வாழ்க்கையின் மறுபக்கத்தை உணர்ந்தவள் தன் படிப்பில் தீவிர கவனம் செலுத்த அரம்பித்தாள், அதே போல் மகாதேவனின் பெற்றோரை தன் பெற்றோர்களாக மனதார ஏற்றுக்கொண்டாள்.

ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன, சாருமதி தன்னுடைய முதுநிலை பட்டப்படிப்பை முடித்து எம்.பில், படிப்பும் முடித்தவள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தாள்.

அடுத்த முறை மகாதேவன் வீடு வந்தபொழுது அவன் பெற்றோர்கள் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவளிடம் சொல்ல அவள் திக்பிரமை அடைந்து நின்றாள்.இன்னும் ஒரு வாரத்துக்குள் இவர்கள் இருவருக்கும் திருமணம் என்ற செய்திதான் அது. இதற்கெல்லாம் தகுதியானவளா அப்பா நான்? என்று மகாதேவனின் அப்பாவிடம் கேட்க அவர்கள் மகிழ்ச்சியுடன் என்னைய எதுவும் கேட்காத இதை ஏற்பாடு பண்ணுனதே எங்க பையந்தான், எங்களுக்கு பூரண சம்மதம். இனிமேல் உம்பாடு, அவன்பாடு என்று ஒதுங்கிக்கொண்டனர்.

அவள் கண்ணீருடன் அவனைப்பார்க்க அவன் ஆதரவுடன் அவள் கையை பற்றிக்கொண்டான்.அந்த கையைபற்றிக்கொண்டு இந்த முப்பது வருடங்களாக கணவனாய், தோழனாய்,ஆசானாய், தந்தையாய், வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வாழ்ந்து காட்டினான்.(வாழ்ந்து காட்டினார்கள்)

கண்ணீருடன் அவன் உடல் எடுத்துச்செல்வதை பார்த்துக்கொண்டிருந்தாள் சாருமதி !.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *