வாழ்க்கை என்கிற விமானம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2013
பார்வையிட்டோர்: 9,195 
 
 

நேரம் பகல் 3:30 மணி. புது டில்லியில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ விமானம் கிளம்பி அரை மணி நேரம் ஆகியிருந்தது. பெங்களூர் வந்தடைய இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்.

ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்து வெளியே வேடிக்கை பார்த்தவண்ணம் இருந்தான் ரவி. காலை ஒன்பது மணிக்கு ஏர்போர்ட்டில் சிற்றுண்டி சாப்பிட்டதோடு சரி, அதற்குப் பிறகு அவன் எதுவுமே சாப்பிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், ரவிக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் விமலா.

ரவியும் விமலாவும் பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்குள் இருந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. ஐந்து வருடங்களாக காதலித்து வருகின்றனர் இருவரும்.

விமலா புது டில்லியைச் சேர்ந்த ஒரு வங்காளப்பெண். ரவியின் குடும்பம் சென்னையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்து கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் ஆகிறது.

இவர்களது காதலுக்கு ரவியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்தனர். தங்களுடைய காதல் விவகாரத்தைப்பற்றி தன் பெற்றோரிடத்தில் சொல்லவேயில்லை விமலா. அவர்கள் எப்படியும் சம்மதித்து விடுவார்கள் என்று நினைத்திருக்கலாம். ஏனென்றால் விமலாவின் அண்ணனுடைய திருமணம் ஒரு காதல் திருமணம்தான்.

இந்த வருட தீபாவளி விடுமுறைக்கு புது டில்லி சென்று இந்த விஷயத்தைத் தன் பெற்றோரிடம் சொல்லி எப்படியாவது அவர்களுடைய சம்மதத்தை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்திருந்தாள் விமலா.

இரண்டு வாரங்களுக்கு முன் புது டில்லிக்குச் சென்ற விமலா, தன் காதலைப்பற்றி எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவளுடைய பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரமாக போராடி, கெஞ்சி, மன்றாடியும் இவள் எதிர்பார்த்த பதில் மட்டும் வரவில்லை.

இந்த நிலையில்தான் நேற்று ரவிக்கு விமலாவிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்ததால் அவசர அவசரமாக பெங்களூரிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு புது டில்லி வந்தான் ரவி.

இன்று காலை சாப்பிட்டுவிட்டு விமலா வீட்டுக்குச் சென்று, தன்னைப்பற்றியும், தங்கள் காதலைப்பற்றியும் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான் ரவி. ஆனால் விமலாவின் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவேயில்லை.

விமலாவின் அண்ணனின் காதல் திருமணம் அவர்களுடைய பெற்றோரை ஓரளவு பாதித்திருந்தது. அதனால் தங்களுடைய மகளுக்குத் தாம்தான் மாப்பிள்ளை பார்த்து, திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற நிலையிலேயே உறுதியாக இருந்தனர் அவர்கள்.

தன் தாய்க்கு ரத்தக்கொதிப்போடு சேர்ந்து இதயமும் பலவீனமாக இருப்பதால் அவர்களை மீறி எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பவில்லை விமலா. இதனால் ரவியிடம் தாம் இருவரும் பிரிந்துவிடுவதுதான் நல்லது என்று விமலா சொல்லிவிட்டதால், தன் காதல் தோல்வியை நினைத்து பெரும் சோகத்தில் இருந்தான் ரவி. தன் வாழ்க்கையே அர்த்தமற்றதானதாக நினைத்தான். இதனால்தான் அவனுக்கு சாப்பிடக்கூடத் தோன்றவில்லை.

இந்த நேரத்தில்தான் தன் இருக்கை வரிசைக்கு சில வரிசைகள் பின்னால் இருந்து “ஹாய் ரவி” என்று ஒரு பெண் குரல் கேட்டது ரவிக்கு. யாரது தன்னைக் கூப்பிடுவது என்று தன் தலையைத் திருப்பிப் பார்த்தான். கூப்பிட்டது வேறு யாருமில்லை, ஏர் ஹோஸ்டஸ் நந்திதாதான்.

நந்திதாவைப் பார்த்ததும் தன் இருக்கையில் இருந்து அவளை நோக்கி கையசைத்தபடி வந்தான் ரவி.

“ஹே நந்திதா, எப்படி இருக்கே? பார்த்து எவ்ளோ நாளாச்சு?”

“ஐ ஆம் டூயிங் கிரேட் ரவி. நீ எப்படி இருக்கே? காலேஜ் டேஸ்ல பார்த்தது உன்னை”

“ஆமா, ஆறு வருஷமாச்சு காலேஜ் முடிச்சு. அதுக்கு அப்பறம் இன்னிக்குதான் நாம ரெண்டுபேரும் பாத்துக்கறோம் இல்ல?”

“யெஸ் ரவி. நீ எப்படி இருக்கே? என்ன வேலைல இருக்கே?”

“நான் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனில ஒர்க் பண்றேன். நீ எப்போ இந்த ஏர் ஹோஸ்டஸ் வேலைல சேர்ந்தே?”

“ஒரு வருஷமா இந்த வேலைலதான் இருக்கேன் ரவி”

“ஓ அப்படியா? குட். சரி உன் கல்யாணம்…. சாரி, உன் கல்யாண இன்விடேஷன் கிடைச்சுது எனக்கு. ஆனா நான் அந்த நேரத்துல அமெரிக்காவுல இருந்ததால வரமுடியல. சாரி நந்திதா”

“பரவால்ல ரவி. ஐ அண்டர்ஸ்டாண்ட்”

“உன் ஹஸ்பெண்ட் எப்படி இருக்கார்? விக்னேஷ்தானே அவர் பேரு?”

சில வினாடி மௌனத்துக்குப்பிறகு, “ஹீ இஸ் நோமோர் ரவி” என்றாள் நந்திதா.

“வாட்? என்ன சொல்றே நீ?” அதிர்ந்தான் ரவி.

“யெஸ். அவர் இப்போ உயிரோட இல்லை. போன வருஷம் ஒரு ஆக்ஸிடெண்ட்ல…”

“ஐ ஆம் வெரி சாரி நந்திதா. தெரியாம கேட்டுட்டேன். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல”

சில நிமிடங்கள் மௌனமாக இருந்தனர் இருவரும்.

“அப்பறம் நந்திதா. எப்படி இருக்கு இந்த ஏர் ஹோஸ்டஸ் வேலை? பிடிச்சிருக்கா? ரொம்ப பொறுமை வேணுமே இந்த வேலைல இருக்கறவங்களுக்கு?”

“எனக்கு இந்த வேலை ரொம்ப பிடிச்சிருக்கு ரவி. இட் இஸ் எ சைக்கலாஜிக்கல் திங்க்”

“அப்படி என்ன சைக்கலாஜிக்கல் திங்க் இந்த வேலைல?”

“நம்ம வாழ்க்கையும் இந்த ஃப்ளைட்டும் கிட்டத்தட்ட ஒன்னுதான். தெரியுமா?”

“அப்படியா? எத வெச்சு இப்படி சொல்றே நீ?”

“நாம ஃப்ளைட்டுல போறது மாதிரிதான் நம்ம வாழ்க்கையும். ஒரே இடத்துல இருந்தா எங்கயுமே போக முடியாது. சில நேரத்துல ஸ்டெடியா, ஒழுங்கா எந்த தடங்கலும் இல்லாம போயிட்டு இருப்போம். சில நேரத்துல ஃப்ளைட் ஆட்டம் காணும். ஆனாலும் அதையெல்லாம் தாண்டி நாம போயிட்டே இருக்கணும். எதையாவது நினைச்சுட்டு ஒரே இடத்துல இருந்தா ஒன்னு அப்படியே கீழே விழுந்திடுவோம், இல்லை துரு பிடிச்சு ஒன்னுத்துக்கும் உபயோகம் இல்லாம போயிடுவோம்”

தன்னுடைய இழப்பைவிட பெரிய இழப்பை சந்தித்த நந்திதா இவ்வளவு பக்குவமாக பேசுவதை நினைத்து ஆச்சரியமும், அதே நேரத்தில் தன் தோழியை எண்ணி பெருமையும் அடைந்தான் ரவி. அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் இருக்கும் உண்மை புரிந்தது ரவிக்கு.

“யோசிச்சுப் பார்த்தா, நீ சொன்னது எல்லாமே நூத்துக்கு நூறு உண்மை நந்திதா. பல விஷயங்களை எனக்குப் புரிய வெச்சிட்டே நீ. தேங்க்ஸ்”

“எனக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்ததே இந்த ஃப்ளைட் தான் ரவி. அதனால இந்த ஃப்ளைட்டுக்கும், இதைக் கண்டுபிடிச்ச ரைட் சகோதரர்களுக்கும்தான் நீ நன்றி சொல்லணும்”

“ஹா ஹா, சரிதான். அவங்களை நான் சந்திக்கும்போது நேரடியாவே நன்றி சொல்லிக்கறேன்” கண்ணடித்தான் ரவி.

பயணம் முடியும் வரை இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தனர் இருவரும். விமானம் பெங்களூர் வந்து சேர்ந்தது. தனது இந்த ஒரு விமானப் பயணத்தின் மூலம் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய ரவியின் கண்ணோட்டம் மாறியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *