தன் ஸ்கூட்டியை ரோட்டோரம் நிறுத்தி, குழந்தையை பின் சீட்டில் அமரவைத்து, செல் போனில் சத்தமாக பேசியபடி யாருடனோ சண்டைபோட்டுக்கொண்டிருந்த முப்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை சற்று தூரத்தில் நின்று கவனித்த அவனிதனுக்கு மனசுக்குள் அவனையறியாமல் ஒருவித படபடப்பும், அதனால் பரபரப்பும் தொற்றிக்கொள்ள தன் மனைவிக்கு போன் போட்டு “அலுவலகத்தில் வேலை முடிய லேட்டாகும், நீ சாப்பிட்டு விட்டு தூங்கு” என ஒரு பொய்யைச்சொல்லி விட்டு போன் காலைக்கட் செய்தான்.

அந்தப்பெண் போனில் பேசி முடித்தவள் சுற்றும், முற்றும் பார்த்தாள். ‘இரவு எட்டு மணிக்கு ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் எதற்க்காக ஒரு பெண் குழந்தையுடன் நிற்க வேண்டும்?’ என மனதில் எண்ணியவன், அவனது உருவம் அப்பெண்ணுக்குத் தெரியாமலிருக்க பைக்கையும், தன்னையும் மரத்தின் பின்னே மறைத்து நின்றான்.
பக்கத்தில் தண்டவாளம். இரயில் வரும் நேரம் நெருங்கியது. குழந்தை அழத்தொடங்கியது. அவளது உருவம் குழந்தையுடன் ஸ்கூட்டியை விட்டு இறங்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தது.
நிலவின் ஒளியில் ஓவியமாக, தேவதையாகத்தெரிந்தாள். ‘இத்தனை அழகானவளுக்கு இப்படி ஒரு சோதனையா?ஒரு வேளை அழகே ஆபத்துக்கு காரணமாகி விடுமோ…?’ அவளுக்கு ஏதும் நேர்ந்து விடக்கூடாதென அவன் வேண்டாத கடவுளே இல்லை. தன் மதம் தாண்டி வேறு மதக்கடவுள்களையும் வேண்டிக்கொண்டான்!
இரயில் சத்தம் காதில் இரைச்சலாக விழ, அவள் தண்டவாளத்தை நெருங்க, அவனை அறியாமல் அவனது கால்கள் அவளை நோக்கி ஓடின. அவளை முந்திச்சென்று முன்னால் நின்று மூச்சு வாங்கியவனை எதிர்பார்க்காத அவள், அவனை முறைத்துப்பார்த்த போது மயக்கமே வந்தது அவனிதனுக்கு…! அவள்…. அவள்… தன் உயிர் நண்பன் விவனின் காதல் மனைவி…!
அவளது கையைப்பற்றி இழுத்து தண்டவாளத்தை விட்டு தள்ளி நிறுத்தினான். குழந்தையை இன்னொரு கையில் பிடித்து அழைத்தபடி கட்டாயமாக பாதைக்கு வந்தான்.
அவள் திமிறினாள்!
“என்னை எதுக்கு காப்பாத்தினீங்க..? போய் முதல்ல உங்க நண்பருக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க” கடும் சினத்துடன் பேசினாள்.
பேசி சரி செய்து, தன் வீட்டுக்கு அழைத்துச்சென்றதோடு நண்பனையும் வரவழைத்தான். நண்பன் நடந்த சம்பவத்தை கேட்டதும் கதறி அழுது கண்ணீர் வடித்தான்.
“பிரச்சினை யாருக்கு தான் இல்லை. எதுன்னாலும் பேசி தீர்க்கனம். சந்தேகம் நம் தேகத்தை அழிச்சிடும்.” என்று அவனிதனின் பேச்சால் மனமாறினாள் விவனின் மனைவி சுனேகா.
“தற்கொலை திடீர் முடிவுதான். அது ஒரு தீய சக்தி. அந்த சக்திக்கு அதிக நேரம் ஆயுசு இருக்காது! பொறுமையா இருந்தா அந்த சக்தி இறந்திடும். பொறுமையிழந்தா நம்மைக்கொன்னுடும்” என்று
தத்துவ வார்த்தைகளைப்பேசி, அறிவுரை கூறி, அவர்களை ஒற்றுமைப்படுத்தி அனுப்பிய அவனிதனுக்கு இரண்டு உயிர்களை காப்பாற்றிய நிம்மதி மனதில் வெளிப்பட்டது.
‘நாம் வாழப்பிறந்தவர்கள், சாகப்பிறந்தவர்கள் அல்ல’ என்று தனது முகநூலில் பதிவிட்டுவிட்டு உணவருந்தி உறங்கச்சென்றான்.