வானமெல்லாம் ஆசைக் காற்றாடி

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம் முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 5,630 
 
 

(1995ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம்-1

அவளுக்குக் கலியாணம் நாளை நடக்கப்போகிறது. இந்தச் சாதாரணக் கழுத்துக்கு ஒரு மஞ்சள் மூலமாக முக்கியத்வம் கிடைக்கப் போகிறது. கால் விரல்களில் மெட்டிகள் தஞ்சமடையப் போகின்றன. 

மாடியில் பிற்பகல் வெளிச்சம் காணாத அறையில் பழையதோர் நாற்காலியில் பாரதி உட்கார்ந்திருந்தாள். இருக்கையின் ரப்பர் முலாம் தேய்ந்து, கிழிந்து வெளிறிக் கிடக்க பஞ்சு இரும்புக் கெட்டியாகப் பலகை போலாகி விட்டது. வலியை உணராமல். இம்சையை நினைத்தும் பாராமல், அவள் ஜன்னல் மூலம் பார்த்தவளாய் இருந்தாள். 

அவள் எப்படி இந்தத்திருமணத்துக்குச் சம்மதித்தாள்? ஆறு மாதங்களுக்கு முன்வரை அம்மா, அப்பாவிடம் வீராப்புடன் பேசியவள் ஏன், எப்படி மனம் மாறினான்? அப்பாவின் நெஞ்சிலிருந்து உருவி வந்த வெண்ணெய்க் கசிவு வார்த்தைகள் அவள் மனத்தைப் பாதித்தனவா? அம்மாவின் அழுகையும், தற்கொலை பயமுறுத்தலும் அவளை அயரச் செய்தனவா! அவளுடைய அண்ணா மேற்படிப்புக்காக அமெரிக்கா போனான். போனவன் அங்கேயே தங்கி ஒரு அமெரிக்கப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டு வாழ்கிறான். அவன் மேற்படிப்பை அயல்நாட்டில் வைத்துக் கொள்ளாமல் தாய் நாட்டிலேயே நடத்தினாலும், அண்ணன் காட்டிய வழியில் தங்கையும் போகக்கூடும் என்று அம்மா அஞ்சுகிறாள். அந்தப் பயத்தைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இந்தத் திருமணத்துக்கு இசைந்தாளா? 

அவளுக்கு விதியில் நம்பிக்கை இல்லை. ஆனால் இப்போது விதியின் சூழ்ச்சியால்தான் அவள் மணமேடையில் உட்காரப் போகிறாளோ என்று நினைக்கத் தோன்றியது. 

இது ஒரு திடீர்ச் சம்பவம் அன்று. ஒரு விபத்தும் அன்று! ஆனால் பாதிக்கப்பட்டிருப்பது அவள்தானே? இதிலிருந்து இனி அவளால் தப்ப முடியாது. தன்னைத்தானே மீட்டுச் கொள்ளவும் இயலாத காரியம், என்ன செய்யலாம்?, இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அவள் ஓடி விடலாம். பஸ்ஸையும், ரெயிலையும் பிடித்துச் சென்னையை அடைந்து அங்கிருந்து டெல்லிக்குப் பறந்து விடலாம். ஆனால் நெஞ்சில் உரம் இல்லையே? அல்லது அன்று மாலையே, இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்று நாலு பேர் முன்னிலையில் பிரகடனம் செய்துவிட்டு விடுதலை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அது நாகரிகமும் இல்லை, விவேகமும் இல்லை. அவளுடைய சம்மதம் தெரிந்த பிறகுதான் எல்லா ஏற்பாடுகளும் ஆரம்பமாகியிருக்கின்றன. இப்போது நேர்மாறாகப் பேசினால் அம்மா, அப்பாவுக்கு அல்லவா துரோகம் செய்ததாகிவிடும்? அவளால் அவர்கள் என்றென்றும் தலை நிமிர முடியாமற் போய்விடுவார்களே? 

அவளைத் தன் துணைவியாக ஏற்றுக் கொள்ளப் போகிறவன், அப்பாவின் சொந்தத் தங்கை பிள்ளை. அவள் மண்ணில் வீழ்ந்தபோதே, அவள் தான் தன்னுடைய மருமகள் என்று அத்தை முடிவு செய்துவிட்டாளாம். அப்பாவும். தங்கையின் பிள்ளைதான் தமமுடைய மருமகள் என்று அறிவித்து விட்டாராம். பைத்தியக்கார எண்ணங்கள்! அண்ணன் தங்கை பாசங்கள் சினிமாவில் பார்க்க வேண்டுமென்றால் நன்றாக இருக்கும். ரசிகர்கள் வேண்டுமானால், நிழலில் தெரியும் உணர்ச்சிக் காட்சியைக் கண்டு, நீர் வடிக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவளைத் தவிர, பாதிக்கப்பட்டவளைத் தவிர வேறு யார் நெஞ்சின் கண்ணீரோடு துடிக்கிறார்கள்? 

மெல்ல மெல்ல அவனுடைய உருவம் கண் முன் வந்து நின்றது. 

ஆறு அடிக்கு ஓர் அங்குலம் கூடக் குறையாத உயரம். எலுமிச்சம் பழம் போன்ற நிறம். அகலமான நெற்றி, பார்வையிலேயே சிரிப்புக் களித்தது. நீண்ட, கத்தி முனைக்கு இறங்கிய முக்கு. ஆஜானுபாகுவாய், வஜ்ரம் ஏறின உடற்கட்டோடு இருக்கும் அவனுடைய நடையில் ஒரு நிதானம். பேச்சில் அளவு இல்லாவிட்டாலும் தெளிவு. 

நான்கு மாதங்களுக்கு முன்-நன்றாக நினைவில் இருக்கிறது. தீபாவளிக்கு மறுநாள்-அவன் திடீரென்று டெல்லியில் வீட்டுக்கு வந்திருந்தான். கேரளத்து விவசாயிகளின் பிரதிநிதிகளில் ஒருவனாக வந்திருந்தவன், தன் தாயாரின் ஆக்ஞை பேரில் மாமாவைப் பார்க்க வந்தான், அவளுக்கு அவன் யார் என்று புரியவில்லை. எங்கேயோ, எப்போதோ பார்த்த முகமாகத் தெரிந்தாலும் நினைவில் முட்டவில்லை. 

“நீ பாரதி அல்லவா?”

“யெஸ்”. 

“மாமா இருக்காரா?”

“யூ மீன், மை ஃபாதர்?” 

“ஆமாம்”. 

“ப்ளீஸ் கம் இன்..டாட், ஸம் ஒன் இஸ் ஹியர் டு ஸீ யூ.”

“யார்ம்மா… அடடே, நாணாவா?…வாவா. எப்ப வந்தே? தங்கம்மா எப்படி இருக்கா…? அப்பா, தாத்தா பாட்டி எல்லோரும் செளக்கியம்தானே?” 

“எல்லோரும் ஒரு விதமா சௌக்கியம்.” 

“பாரதி!” 

“யெஸ், டாட்…” 

“இவன் யார்னு மொதல்ல புரியலே இல்லே?” 

“யெஸ் டாட்!” 

“உன் அத்தை புள்ளை…நாம பல வருஷங்களுக்கு முன்னாலே சித்தப்பா கலியாணத்துக்குப் போனோமே, நினைவு இருக்கா?”

“ஐ வாஸ் ஜஸ்ட் டென் அட் தட் டைம்.” 

“பாரதிக்குத் தமிழ் தெரியாதா, மாமா?”

“அம்மா கூடப் பேசுவா,” 

“மாமி இல்லியா?” 

“இப்பத்தான் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திக்கப் போனா.இப்ப வந்துடுவா…பாரதி  அம்மாவைச் சீக்கிரம் வரச்சொல்லு…” 

“மெதுவா வரட்டும். மாமா! டெல்லியில் பத்து மணிக்கு மேலதான் குளியல் போலிருக்கு”. 

“டெல்லியில என்ன திடீர்னு…” 

“மினிஸ்டரைப் பார்க்க வந்தோம். நான் பாலக்காட்டுப் பிரதிநிதி.”

“மீட் பண்ணியாச்சா?”

“முந்தா நாள் மீட் பண்ணினோம். பாதிப் பேசிண்டிருக்கறச்ச பி.எம். ஒபிசிலிருந்து ஃபோன் வந்தது. ஓடிட்டார்…இன்னைக்கு உச்சிக்கு அப்புறம் மீட் பண்ணச் சொல்லியிருக்கார்…கிருஷி பவன்ல.” 

“கொஞ்ச நாள் இருப்பே இல்லியா?” 

“ஹேய்.. நாளைக்குக் கேரளா எக்ஸ்பிரஸ்லே போறோம்.” 

“நீ நேரே நம் வீட்டுக்கு வந்திருக்கணும், நாணா! நான் இங்கே இருக்கறப்ப நீ வேற எங்கானும் தங்கலாமா?”

“நான் ப்ளெஷர் ட்ரிப்புக்கு டெல்லி வரலே மாமா….. நாங்க பந்திரண்டு பேர் வந்திருக்கோம் கேரள சமாஜம் இருக்கு இல்லியா, அங்கே எறங்கியிருக்கோம்”. 

“நாலு வருஷம் முன்னால நீ டெல்லி வந்தப்ப இங்கே வரலே.** 

“அதுக்கு அப்றம் அஞ்சாறு பிராவஸ்யம் வந்தாச்சு. ஒரு காரியமா வர்றப்ப அங்கே இங்கேன்று போயிண்.டி \ருக்கக் கழியுமா, மாமா? இன்னைக்கு எப்படி முடிஞ்சுதுன்னு கேட்பேள்? நேத்தைக்கே மந்திரிட்ட என்னென்ன பேசணும்னு எங்களுக்குள்ளே முடிவு எடுத்துண்டாச்சு. பந்திரண்டு மணி வரையில் அவா அவா இஷ்டம் போலப் போலாம்னு தீர்மானிச்சோம். அம்மாவும் வேற ரொம்பக் குறைப்பட்டுண்டா, நான் மாமா, மாமியைப் பார்த்து விசாரிக்கறதில்லைன்னு அதான் வந்தேன்…அதா மாமி வர்றாளே கொஞ்சம் தடிச்சுப் போயிட்டாளோ? என்ன மாமி, ஒன் பொண்ணு தான் புடைவை உடுத்திக்கலை.. நீயும் அவளை மாதிரி ஹவுஸ் கோட்டு போட்டுண்டிருக்காய்?” 

“இங்கே இதுதான் சௌகரியம். சீப்பும் வேற… எப்ப வந்தே… அம்மா, அப்பா எல்லாரும் எப்படி இருக்கா…?” 

“எல்லாம் மாமாகிட்டச் சொல்லியாச்சு. கேட்டுத் தெரிஞ்சுக்குங்கோ… மின்னால இதை வாங்கிக்குங்கோ…”
“என்ன இது?”

“பெங்காலி மார்க்கெட்டுக்குப் போயிருந்தோம். கொஞ்சம் ஸ்வீட்டு, பாரதி! இந்தா இது உனக்கு”. 

இதுவரையில் சோபாவில் உட்கார்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். பிறகு அப்பாவைப் பார்த்தாள்.

“வாங்கிக்கோ, பாரதி!” 

”வாட் இஸ் திஸ்?” கை நீட்டிப் பெற்றுக்கொண்டே கேட்டாள். 

“நீ தலையை நன்னாக் கட் பண்ணிண்டிருக்காய். பாதி, இருந்தாலும் கழுத்து வரை கேசம் இருக்கே… வாரிக்கலாம்”. 

தந்தச் சிப்பை ஒரு தடவை பார்த்துவிட்டு அவனுக் குப் பதில் சொல்ல பரரதி வார்த்தைகளைத் தேடினாள். தம் பெண் உள்ளுக்குள் பொருமிக் கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்த அப்பா சமிக்ஞையால் அவளை அடக்கினார். 

“நான் இப்படிப் பேசினதில் பாரதிக்கு தேஷ்க்ஷ்யம் இல்லையா?” என்றான் நாராயணன். 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று அம்மா சமாளித்தாள். 

“சுசீலா, மணி பதினொன்னு அடிக்கப் போறது. சமையல் ரெடிதானே?” 

“சமையலை முடிச்சுட்டுத்தான் குளிக்கவே போனேன், வா. நாணா சாப்பிடலாம்”. 

”ஹேய், நான் சாப்பிட வரலை, நாங்களெல்லாம் பந்த்ரண்டு மணிக்கு மேலே ஒந்நா ஒட்கார்ந்து சாப்பிடறதா இருக்கோம். நான் பொறப்படறேன்.” 

“என்ன அவசரம். நாணா… இரு போகலாம், நான் என் கார்ல கொண்டு விடறேன்?” 

“ஆவஸ்யம் இல்லை மாமா… கிட்டக்க பஸ் ஸ்டாப் இருக்கு… நான் போய்க்சுறேன். நான் வரேன் மாமி… வரேன் பாரதி,” 

நாராயணன் எழுந்தான். 

“ஒரு வாய் காப்பி குடிச்சா அது சோத்தை அடைக்கும்… மாமா, மாமி ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்கோ! நமஸ்காரம் பண்ணிட்றேன்” 

“பரவாயில்லை நாணா” 

“நமஸ்காரமெல்லாம் ஒண்ணும் வேண்டாம், நாணா. எங்க ஆசீர்வாதங்கள் எப்போதும் உனக்கு உண்டு”. 

“இப்படிச் சொன்னா நான் விட்டுட மாட்டேன். நில்லுங்கோ ” 

நின்றார்கள்; சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து, எழுந்த நாராயணன் சிரித்தான். 

“எல்லார்க்கும் போயிட்டு வரேன்”. 

*ஒரு நிமிஷம் நாணா” 

“என்ன மாமா?”

“வெறும் கதர் வேஷ்டியும், ஜிப்பாவுமா டெல்லிக்கு வந்திருக்கிறே… ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கோ. இரு தரேன்”. 

“ஹெய் ஸ்வெட்டர் ஒண்ணும் ஆவஸ்யம் இல்லை. நான் வரேன்”. 

பாரதியைப் பார்த்தான். 

சிரித்தான். 

“நீ ரொம்ப மோடர்னா இருக்காய், பாரதி..தோஷமில்லை. ஆனா அதுக்காகச் சலூன்ல கேசத்தைக் கட் பண்ணிக்கண்டாம். நெத்தியில் ஒரு குங்குமப் பொட்டு இருந்தா மொகம் லட்சணமா இருக்கும்” 

பாரதிக்குக் கோபம் தலைக்கேறியது. ஆனால் எப்படி எதிர்த்துப் பேசுவது? அப்பாவின் தங்கை பிள்ளை. கிராமத்து நாகரிகத்தில் பேசுகிறான். 

நாராயணன் வெளியேறிய பிறகு, சந்திரமௌலி “நல்ல பிள்ளை!” என்றார் 

“நம்மை நமஸ்காரம் பண்ணத் தோணித்தே அவனுக்கு! இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள்?” 

“அவனோட இன்னொரு பண்பையும் கவனிச்சியா, சுசிலா?” 

“என்ன” 

“நம்ப பரத்தைப் பற்றி ஒரு வார்த்தை விசாரிக்கலே… நம்ப மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு…” 

“நாணாவுக்குத் தெரியும் இல்லியா, பரத் ஓர் அமெரிக்காக்காரியைக் கலியாணம் செய்து கொண்டது?”

“நன்னாத் தெரியும், இவன் போன வருஷம் அமெரிக்கா போயிருந்தபோது அங்கெ அவர்களைச் சந்தித்திருக்கிறான். பரத் ஒரு தடவை போன்ல பேசினப்பச் சொன்னான்” 

“டாட்” 

“என்ன பாரதி?” 

“இந்த ஆள் அமெரிக்கா போயிருக்கானா?” 

“பாஸ்போர்ட்டும், விசாவும் இருந்து பணமும் இருந்தா யார் வேணும்னாலும் போகலாம், பாரதி… அது சரி, நீ என்ன சொன்னே? இந்த ஆள்னு; இல்லே?” 

“தப்பா?”

“அவன் உன் அத்தை பிள்ளை!” 

“ஸோ லாட்?” 

“உன்னைக் கலியாணம் பண்ணிக்கப் போறலன்”

“நான்சென்ஸ்… ஒரு கண்டிரி ப்ரூட் ஹஸ்பெண்டா? டோண்ட் பி ஸ்டுபிட் டாட்?” 

“கதர் வேஷ்டி, கதர் ஜிப்பா, அவன் பேசின தமிழ்”

“தமிழா அது?”

“பாலக்காட்டுத் தமிழ்! அவன் எங்களை விழுந்து நமஸ்காரம் பண்ணினது. அவன் நெத்தி நாமம்! இதெல்லாம் பார்த்து நீ நாராயணனை. ஒரு கண்ட்ரி ப்ரூட்டாக்கிட்டே இல்லே?” 

“ஆள் உயரமா, கம்பீரமா மட்டும் இருந்தாட் போதுமா, டாட்? மேனர்ஸ் வேண்டாம்? நான் என் தலையைப் பின்னலாப் போட்டுக் கொண்டா என்ன, இல்ல மொட்டையே அடிச்சுக்கிட்டாத்தான் இவனுக்கு என்ன…. அன்கல்ச்சர்ட் அன் எஜுகேட்டட் ஃபெலோ”

அப்பா கலகலவென்று பிரித்தார். 

“என்ன டாட் சிரிக்கிறீங்க?” 

“உன் கண்ணெதிரேயே உன் பழக்க வழக்கத்தையும் கலாசாரத்தையும் விமர்சித்தான். உன் அம்மா ஹவுஸ் கோட் போட்டுக்கறதையும் சுட்டிக் காட்டினான். ஆனா அவன் போன பிறகு நீ சரமாரியாக் கொட்டறே!” 

“நான் அப்பவே கொட்டி இந்த ஐவரி கோம்பையும் மூஞ்சியில விட்டெறிஞ்சிருப்பேன்… ஆனா நீங்க கண் காட்டினீங்க,” 

“நாராயணன் அதிகம் படிக்கலே, பாரதி”.

”அதான் தெரியறதே.’ 

“கோயமுத்தூர் அக்ரிகல்ச்சரல் காலேஜ்ல பி.எஸ்.ஸி கோல்ட் மெடல். அப்புறம் எம்.எஸ்.ஸியில் ஃபர்ஸ்ட் ராங்க். மேலே ரெண்டு வருஷம் அமெரிக்காவில் பிஎச்டி. இவ்வளவுதாம்மா அவன் படிச்சிருக்கான். ஒரு மீட்டிங்லே எம்.எஸ் சுவாமிநாதனே இவனைப் பாராட்டிப் பேசியிருக்கார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்வ போட்டோவே வந்தது”  

“இவ்வளவு படிச்சவருக்கு ஏன் நாகரீகம் தெரிலையாம்?” 

“நாகரிகம்னா என்ன பாரதி?”

“என்னப்பா இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்க?’

“பதில் சொல்லேன்…” 

“ஒரு ரிஃபைன் மென்ட்… நாசூக்கான அமரிக்கையான தன்மை”, 

“உன் அகராதிப்படி வாய்க்குள்ளேயே கொட்டாவி விட்டுக் கொண்டா, அது நாகரிசும். வாயை ஆன்னு திறந்து விட்டா, அநாகரிகம், அன்கல்ச்சர்ட், கண்ட்ரி ப்ரூட்… இல்லே” 

“சரி விடுங்க…ஆள்தான் போயாச்சே”

“மறுபடியும் நாராயணனை ஆள்னு சொல்லாதே… இப்ப நீதான் அநாகரிகமாக நடந்து கொள்றே…அவன் உன் அத்தை பிள்ளை” 

“ஐ டோண்ட் கேர்”

‘“பாரதி” அம்மா கத்தினாள். பிறகு “உனக்கு ரொம்ப இடம் கொடுத்து வளர்த்திட்டோம். அதான் துளுத்துப் போயிட்டே… எவ்வளவோ தடவை டெல்லி வந்து இங்கே வராதவன் இன்னிக்கு வந்திருக்கான்னா அதுக்கு என்ன காரணம் தெரியுமா?” என்றாள். 

“என்னவாம்?” 

“நீ பார்க்க எப்படி இருக்கேன்னு தெரிஞ்சுக்க! அவனாக வந்திருக்கான்னு நினைக்காதே. உன் அத்தை உந்தித் தான் வந்திருக்கான்” 

“இப்ப என்ன செய்யணும்னு குதிக்கிறே?” 

“உன் அப்பா என்னிக்கோ எடுத்த முடிவு. எனக்கும் இதிலே சம்மதம், நீ உன் மனசைப் பக்குவப்படுத்திக்கோ”

“என்ன விளையாடறியாம்மா?” 

“ஆமாம்” 

“அப்ப ஒண்ணு செய்!” 

“என்ன?” 

“எனக்கும் உன் அப்பாவுக்கும் இந்த வீட்டு பாத்ரூம்லேயே ஒரு தடவை கடைசித் தடவையா குளிச்சிட்டு இப்பவே படி இறங்கிப் போ” 

“டாட்” 

“என்னம்மா பாரதி?” 

“அம்மா சொன்னதைக் கேட்டீங்களா?” 

“அவ சொன்னா என்ன, நான் சொன்னா என்ன பாரதி?” 

“அப்ப…” 

“இன்னும் மேலே படிக்கணும்னு சொப்பனம் காணாதே. பாரதி இன்னும் முணு மாசத்தில நான் ரிடயர்ட் ஆபீசர், பென்ஷனர், நாம இந்த சர்க்கார் வீட்டைக் காலி பண்ணியாகணும். டெல்லியில பென்ஷளை வைச்சு வாழ முடியாது. சொந்த வீடு சொந்த ஊர்லதான் இருக்கு. மூட்டை முடிச்சோட போவதைத் தவிர வேறு வழியே கிடையாது”. 

“ஓகே டாட்” 

“இப்பத்தான் என் பெண்ணாப் பேசறே!” 

“நான் இந்த டெல்லியிலேயே ஒரு வேலை பார்த்துக்கறேன், எம்.ஃபில்-அதுவும் இங்கிலீஷ் லிட்டரேச்சர்- பாஸ் பண்ணினவளுக்கு வேலை கிடைக்காமலிருக்காது”. 

”உன் இஷ்டம்” அம்மா. 

“அப்புறம் அம்மா, பெண் உறவுகூட இல்லாமப் போயிடும். பிள்ளை வெளிநாட்டில் சீரழியறான் பெண் உள் நாட்டிலேயே சீரழியறாள்னு பெருமைப்பட்டுக்கறேன்… எப்படியோ போ” 

“நீ பேசாம இரு சுசீலா, இவ.எம்ஃபில் படிச்சவதான் ஆனால் யதார்த்த உலகம்னா என்னன்னு தெரியாதவ. கல்யாணப்பேச்சை இதுக்குமுன்னாடி எடுத்ததே இல்லியே, அதான் சட்டுன்னு ஆத்திரமும் கோபமும் வந்தது”. 

“ஸாரி டாட்..நான் ஒருநாள் இல்லாட்டா ஒருநாள் கலியாணம் பண்ணிக் கொள்ளத்தான் போறேன். ஆனா இன்னிக்கு வந்த ஆளை… ஸாரி…நாராயணனை அல்ல.” 

“நாராயணனைத் தவிர வேறு எந்தப்பிள்ளையையும் நான் வரனாப் பார்க்க மாட்டேன் பாரதி” என்றாள் சுசீலா. 

“உன் அம்மா போகிற வழியிலதான் நானும் போவேன்”. 

“ஐ டோண்ட் லைக் ஹிம்”. 

“உன்னை மட்டும் அவனுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறியா?ஆனா என் தங்கை தங்கம்மா கை அசைச்சாப் போதும், அவன் உன் கழுத்திவே தாலி கட்டிடுவான்…” 

“போகப் போக உனக்கே மெல்ல மெல்ல அவனைப் பிடிச்சுப் போயிடும். ‘அவர் இன்னும் வீடு திரும்பலையே எப்ப வருவார்’னு ஏங்கற நாளும் பிறக்கும்” 

திடீரென்று தன் உடம்பை யாரோ உலுக்குவதை பாரதி உணர்ந்தாள். 

“என்னடி சேர்லேயே உட்கார்ந்து தூங்கிக்கிட்டிருக்கியா?”

“என்னம்மா வேணும்?” 

”கீழே உறவுக்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கா. உன் பெரியம்மா, சித்தி அப்புறம் மாமா, மாமி எல்லாரும் உன்னைப் பார்க்கணும்னு சொல்றா” 

“என்னைக் கொஞ்சம் தனியா இருக்க விடும்மா.”

“பிள்ளை வீட்டுக்காரா வர்ற நேரமாயிட்டுது பஸ்லேயும், கார்லேயும் வரப்போறா. நீ இப்ப வா.”

“அம்மா ப்ளீஸ்…கொஞ்ச நேரம் பொறுத்து வரேன்… நீ இப்பப் போ…” 

“மணி இப்பவே, பதினொண்ணேகால், பன்னண்டுக்குள்ளே அவங்க வந்துடுவாங்க”. 

“வரட்டும்…இப்ப நீ போ” 

வேறு வழி தெரியாமல் சுசிலா மாடி இறங்க. பாரதி நாற்காலியிலிருந்து இறங்கி ஜன்னலருகே வந்தாள், பார்த்தாள். 

கீழே அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரே இரைச்சல், கூச்சல் இந்த நங்கவரமே ஒன்றாக எழுத்து வந்து கலியாண வீட்டை முற்றுகை இடுகிறதா? 

திடீரென்று எல்லா ஓசைகளுமே அடங்கி விட்டதான பிரமை ஏற்பட பாரதி இமைகள் மூட நின்றாள். 

இப்போது அப்பா வந்தார். தொடர்ந்து அம்மா. அவர்கள் சும்மா வரவில்லை. நாராயணனையும் அழைத்துக் கொண்டு வந்தார்கள். அவனுடைய வசீகர முகமும் கண்களும் அவளைத் தாக்க எதிர் நீச்சல் போட்டு தாக்குதலிலிருந்து விடுபட மனம் துடித்தது. 

அத்தியாயம்-2

இன்னும் ஜன்னல் அருகிலேயே நின்று கொண்டிருந்த பாரதி, தான் பிரமையிலிருந்து விடுபட வில்லை என்பதை உணர்ந்தாள், ஜன்னல் கம்பிகள் பார்வையை மறைக்கவில்லை. பார்த்தாள் தெரிந்தவர்களும் தெரியாதவர்களும், உறவினர்களும் உறவே இல்லாதவர்களும் கொத்து கொத்தாக அங்குமிங்குமாய்க் குழுமி, வரப்போகிற பாலக்காட்டுப் பஸ்கள் மற்றும் கார்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள். மேள வித்துவான்கள் தயாராக நின்றார்கள். 

இந்த ஏற்பாடுகளுக்கு இந்த வாழ்க்கைப் பிரவேசத்துக்கு அவள் எப்படிச் சம்மதம் தெரிவித்தாள்? 

இந்த வருடம் ஜனவரி மாதம் கடைசி நாளன்று முப்பத்தைந்து ஆண்டுகளாக அரசுடன் பந்தப்பட்டிருந்த அப்பா விடுதலை பெற்றார் தொட்டபிசுக்கு, விட்ட பிசுக்கு என்பது போலப் பென்ஷன் என்ற நூலிழை மட்டுமே எஞ்சி நின்றது. பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லிக்கு நன்றி கூறி விட்டு நங்கவரத்துக்குக் குடும்பம் பெயர்ந்தது. இந்த ஊருடன் அவளுடைய அப்பாவுக்கு இருக்கும் ஒரே பிணைப்பு இந்தப் புராதனமான பிதிரார்ஜித. வீடு மட்டும்தான் தாத்தா காலத்திலேயே நிலம் கைவிட்டுப் போய்விட்டது. அப்பா வேறே எங்கே போவார்? 

நெஞ்சில் துக்கம் பீரிட, ‘டாட்’ என்று அவர் அருகே சென்றாள். 

“என்னம்மா?” 

“நானும் வரணுமா?’ 

“ஏன் வேற ஏதானும் பிளான் கைவசம் வைச்சிருக்கியா?”

“பிஎச்.டி. அமெரிக்காவில் இல்லே. இங்கேயே டெல்லியிலேயே” 

“செலவுக்கு என்ன செய்வே?” 

“நீங்க என் கலியாணத்துக்காகச் செலவு செய்யன்னு பணம் வைச்சிருக்கிங்க இல்லையா?” 

“ஆமாம்”. 

“அதிலிருந்து….” 

” அதிலிருந்து?” அம்மாவின் குரல் கர்ஜனையாகக் கேட்டது. 

“மாசா மாசம் ஹாஸ்டல்…அப்புறம் மத்த செலவுகளுக்கு இந்தப் பணத்திலேந்து…” 

“முடுடி வாயை”, 

“அம்மா “

“‘இப்ப நீ எங்களோட வர்றே… அதான் முடிவு… நீங்க ஏன் உங்க டயத்தை வீணடிக்கிறீங்க…ஆயிரம் வேலை இருக்கு, 

“அம்மா!” குரலை உயர்த்திக் கொண்டு பாரதி சுசீலாவை நெருங்கினாள். 

“என்னடீ?”

“எனக்கு இப்ப வயசு இருபத்தி மூனு எனக்குன்னு சில உரிமைகளும் இருக்கு… ஞாபகம் வைச்சுக்கோ.” 

“ஓஹோ அப்படியா, உனக்குன்னு சில உரிமைகள் இருக்கா …அதை எப்படி நிலைநாட்டப் போறே? உன் அப்பாகிட்ட கையேந்திப் பணம் வாங்கியா? பி.ஏ.வோட நிறுத்தச் சொன்னேன். எம்.ஏவுக்கு தாவின. அத்தோடயாவது நிறுத்திக்கிட்டாயா? எம்ஃபில்னு ஓடின… இதுக்கெல்லாம் யார் செலவு செய்தா?” 

பாரதி பதில் சொல்லத் தயாராக இருந்தாள்.ஆனால். அப்பா குறுக்கே வந்தார். 

“சுசீலா நீ உள்ளே போ.” 

“ரண்ட்ல ஒண்ணு பார்த்தாகணும்”. 

“அதை நான் என் முறையிலே பார்க்கிறேன். சுசீலா! நீ இப்ப உள்ளே போ!” 

அவன் சென்ற பிறகு “முதல்ல உட்கார் பாரதி” என்றார் மௌலி, 

உட்கார்ந்தாள். 

”உன் வேதனை பிரச்சனையெல்லாம் எனக்குப் புரிய லேன்னு நினைக்காதே பாரதி எனக்கு எல்லாம் புரியறது. ஆனா இப்ப நான் கையாலாகதவனாகிட்டேன்… பிராவிடண்ட் ஃபண்ட், கிராடியுட்டி. அப்புறம் பென்ஷன்ல மூன்ல ஒரு பாகத்தை ரொக்கமா வாங்கினதெல்லாம் சேர்த்துக்கிட்டத்தட்ட மூணு லட்சம் வந்தது. இதுல உன் அண்ணாவால் ஏற்பட்ட கடன் ஒண்ணரை லட்சம். அவன் டாலர் டாலரா அனுப்புவான்ங்கூற தைரியத்தில வியாபாரத்தில மூலதனம் செய்யற மாதிரி கடன் வாங்கிக் கொட்டினேன். ஆமாம் பாரதி கடன் யார்ட்ட கடன் வாங்கினேன் தெரியுமா? வாங்கக் கூடாத இடத்துல தங்கையைக் கொடுத்த இடத்திலே! வட்டி இல்லாம தந்தார். பாக்கி என்ன இருக்கு பாரதி? கடனை அடைச்சப் புறம் பாக்கி ஒண்ணரை. இதிலே ஒரு அரையாவது நம்ம சொந்த வீட்டை ரிப்பேர் பண்ண ஆகும். சிதிலமாயிட்ட வீடு எவ்வளவு இழுக்கும்னு நிச்சயமாத் தெரியலே, யானை அசைஞ்சு திங்கும். வீடு அசையாமத் தங்கும் பாரதி”. 

“நீங்சு என்ன சொல்ல வர்றீங்கப்பா?” 

“நானும் என் தங்கையும் நீ பிறந்த அன்னிக்கே உனக்கும் நாராயணனுக்கும் முடிச்சுப் போட்டுட்டோம்ங்கற காரணத்துக்காக நீ அவனுக்கு மனைவியா வரவேண்டாம் பிள்ளையைத் தேர்ந்து எடுக்கறதில முழுச் சுதந்தரம் தாரேன்”. 

“அன்னிக்கு வேறு விதமாப் பேசினீங்களே, டாட்”

“அப்ப உன் அம்மா இருந்தா. அவளைத் திருப்தி செய்ய,” 

“இப்ப நான் என்ன செய்யணும் டாட்?” 

“நீ இந்த டெல்லியில் பிறந்து வளர்த்தவ. உன் சித்தி மாமாக்கள் கல்கத்தா கான்பூர்ல இருக்கிறவா, வருஷம் வருஷம் பம்பாய்க்குப் போய் பாட்டியின் அரவணைப்பு நீ இருந்துட்டே ரொம்பச் சின்ன வயசில நீ நங்கவாகதைப் பார்த்திருக்கே. நிச்சயமா அந்த ஊர் இப்ப உனக்கு வேம்பாகத்தான் இருக்கும். உண்மையைச் சொல்லப் போனா எனக்கும் உன் அம்மாவுக்கும் கூடப் பிடிக்கலை தான். ஆனால் என்ன செய்ய? வாழறோமோ இல்லியோ ஒரு இடத்தில் இருக்கணுமே! ரெண்டு வேளை கொட்டிக் குணுமே..? நீ இப்போதைக்கு எங்களோட வா”

“உங்களுக்காகத்தான் வரணும் டாட்”

“பரவாயில்லை, வா” 

“பிஎச்டி?”

“மெட்ராஸ்ல முடியுமான்னு பார்க்கறேன்”.

”ப்ராமிஸ்?” 

“என்னால ப்ராமிஸ் எல்லாம் பண்ண முடியாதும்மா. நாம நங்கவரம் போய்ச் சேர்ந்த சில நாள்ளேயே நிச்சயம் என் தங்கையும் அவ புருஷனும் உன்னைப் பார்க்க வந்துடு வா”

“மறுபடியும்…” 

”அத்தை பிள்ளையை எனக்குப் பிடிக்கலேன்னு சொல்லிடேன், பாரதி,கதை முடிஞ்சுடும். என் பேரிலேயும் குத்தம் வராது” 

பாரதி சிணுங்கினாள்.ஆனால் என்ன செய்ய? அப்பா பாவம்! ஏற்கனவே வளைந்துவிட்ட முதுகை அவள் ஒடித்துத்தான் ஆகணுமா? திடீரென்று அமெரிக்காவில் இருக்கும் அண்ணாவின் மீது ஆவேசம் வந்தது. நன்றி கெட்டவன்! இவ்வளவு உதவி செய்திருக்கும் அப்பாவுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டாம்? அவன் யாரைவேண்டுமானாலும் இழுத்து வந்து மனைவியாக்கிக் கொள்ளட்டும் ஆனால் அப்பாவை எப்படி மறக்கலாம்? இந்த ஒன்றரை லட்சம் ரூபாய்க் கடன் இருந்திரா விட்டால், அவளுடைய லட்சியம் நிறைவேற வாய்ப்பு இருந்திருக்குமே? 

நங்கவரம் வந்தாகிவிட்டது. 

ஊரில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஞாதிகள் என்றாலும் நெடுநாளாகத் தொடர்பு இல்லாததால் அப்பாவுக்கே ஊர் முகம் தெளிவில்லாமற் தெரிந்தது. இருப்பினும் பலர் குசலம் விசாரிக்க வந்தார்கள். அம்மா மெல்ல மெல்ல ஊருடன் இழைந்து இணைய முயன்றாள். 

ஒரு மாதத்துக்குப் பிறகு ஒரு நாள் பாலக்காட்டி லிருந்து கடிதம் வந்தது. அந்த வாரத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் அத்தையும் அவளுடைய கணவரும் வரப்போகிறார்கள்; நாராயணனும் உடன் வருகிறான். 

பாரதி, தன் மனத்தை ஏற்கனவே திடப்படுத்திக் கொண்டாகிவிட்டது பண்புடன் அம்மா, அப்பா மானம் போசாமல் அவள் நடந்து கொள்ளுவாள். பார்த்த நினைவு இல்லாத அத்தைக்கும், அவளுடைய கணவருக்கும் மரியாதை கொடுப்பாள். நாராயணனிடம் இயல்பான இன்முகத்துடன் பேசுவாள். கடைசியில்-கடைசியில் தன் முடிவை வெளியிடுவாள். அதன் பிறகு யார் எவ்வாறெல்லாம் அதிர்ந்து போளால் அவளுக்கு என்ன? 

வெள்ளிக்கிழமை வந்தது. பிற்பகல் வந்தது. 

ஒரு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும், போது வெள்ளை நிற மாருதியும் வந்தது. 

வாசல் வராந்தாவுக்குப் பக்கத்திலிருக்கும் அறையில் நின்று, சற்றே ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்தாள். 

முதலில் அத்தை இறங்கினாள். நாராயணனுடைய அம்மாவா இவள்? இருபது வயதில் பெற்றிருந்தாற்கூட வயது நாப்பத்தெட்டு இருக்க வேண்டுமே? எப்படி இவ்வளவு யௌவன சோபையுடன் இருக்கிறாள்? 

நாராயணனுடைய தந்தையைப் பார்த்தபோது ஆணவ கம்பீரமே ஒருவித அச்சத்தை உண்டாக்கியது. இவ்வளவுக்கும் புன்முறுவல் பூக்க, சுதர் வேட்டி ஜிப்பாவில் சாந்தமாக முன்னேறி வந்தார். அப்பா விபூதி பூசுகிறார். இவருடைய நெற்றியில் எப்படி எப்படி நாமம் துலங்குகிறது? குழம்பிப் போனாள் 

கடைசியாக நாராயணன் டிரைவர் உட்காரும். இடத்திலிருந்து இறங்கினான். உள்ளே கை நீட்டி எதையோ இழுத்தான். ஒரு பெரிய பை. டெல்லியில் பார்த்த அதே முகம். அதே புன்முறுவல். நடையில் அதே நிதானம். திடீரென்று அவனுடைய நையாண்டி நினைவுக்கு வந்தது. இந்தச் சீப்பு தலையை வாரியது. 

உள்ளேயிருந்து அம்மா குரல் கொடுத்தாள். “பாரதி இங்கே வா” அம்மாளின் அதிகார நச்சரிப்பில் அவள் புடைவை உடுத்தியிருந்தாள். சற்று இம்சையாகக் கூட இருந்தது. மெல்ல நடந்து ஹாலை அடைந்தாள். 

உட்கார்ந்திருத்த தங்கம்மா திடீரென எழுந்தாள். பாரதியை நோக்கி முன்னேறிப் பாய்ந்தாள்.

“நான் தாண்டீ பாரதி, உன் அத்தை தங்கம்மா! நீ, சின்னப் பொண்ணா இருந்தப்ப ஒரு கலியாணத்தில் பார்த்தேன். அப்புறம் நானும் இவரும் டெல்லியில் பார்த்தோம். அப்புறம் இன்னிக்குந்தான். அண்ணா, உன் பொண் தங்க விக்ரகம் மாதிரி இருக்காள்டா…!” 

“நான்தான் பொண்ணே, உன் அத்திம்பேர்… பேர் தெரியும் இல்லியா?’ஈசுவரன். ஈச்சான்னு ஊர்ல, கூப்பிடுவா. கோந்தை-அதான் என் புள்ளை, இந்த நாணா சொன்னான். உன்னை நாலஞ்சு மாசம் மின்னால பார்த்தேன்னு. நீ நன்னா அழகா இருக்காய்னான். ஆனா அவன் ஒண்ணைச் சொல்வலை?” 

“எதை ஈச்சா?” என்றார் மெளலி, 

“நீ பேசாம இருடா…நான் இப்ப உங்கிட்டயா பேசிண்டிருக்கேன்…? சோத்தியம் கேட்க வேண்டியவள் அவள்டா.” 

“சோத்தியம்னா கேள்வின்னு அர்த்தம், பாரதி!” என்றாள் தங்கம்மா. 

ஆனால் பாரதி வாய் திறக்கவில்லை. 

ஈசுவரனே தொடர்ந்தார். 

“நீ உன் தலையைப் பாப் பண்ணிண்டிருக்காய்…எப்படிப் பூச்சூட்டிப்பாய்?”

“இந்தக் காலத்திவ எத்தனையோ பெண்கள் தலை மயிரை இப்படி வெட்டிக் குறைச்சுக்கறா…இதில் ஒண்னும் தப்பு இல்லே…” என்றாள் தங்கம்மா, 

“ஆர்டீ தப்புன்னா தங்கம்? இதை இவன் நம்பகிட்ட சொல்லலைன்னுதானே சொன்னேன். சுசீலா, தாகமா இருக்கு, கொஞ்சம் வெள்ளம் கொண்டு வா”. 

“பிளாஸ்க்ல தக்கோளம் இருக்கு”. 

“சுக்கு இல்லாத நங்கவரம் வெள்ளத்தைக் குடிச்சுப் பார்க்கறேண்டீ, தங்கம்”. 

சுசீலா உள்ளே போய் வநதாள். 

“கோந்தே, நீ நிக்கறாய்னு அவளும் நிக்கறா. உட்காரு”. 

“பாரதி அதனால நிக்கலேப்பா”

“பின்ன என்னடா காரணம்?” 

“இங்கேந்து எப்ப உள்ளே போகலாம்னு காத்துண்டிருக்கா”. 

“பொண்ணே கோந்தை சொல்றதைக் கேட்டயா?”

“நீ என்னிக்குப் பிறந்தாயோ அன்னிக்கே நீதான் என் மாட்டுப் பொண்ணுன்னு உன் அப்பா அம்மாகிட்ட நான் சொல்லியாச்சு. அண்ணா, மன்னியும் சம்மதிச்சாச்சு சரிதானே மன்னி?” 

“ஆமாம்” என்ற சுசீலா, “வர்ற வழியிலேயே சாப்பிட்டாச்சா.. இல்லே…” என்று இழுத்தாள். 

“புளியஞ்சாதமும், தயிர் சாதமும் கட்டிண்டு வந்தோம். கரூர்ல சாப்பிட்டோம்” என்ற தங்கம்மா, ”உன்னை அளவுக்கு மீறிப் புகழ்றேன்னு நினைக்காதே, பாரதி. நீ நல்ல சிகப்பா, உசரமா, முக்கும் முழியுமா அழகாத்தான் இருக்கே.. நீ எம்ஃபில் படிச்சிருக்கேன்னு நாணா சொன்னான்” என்றாள். 

அத்தையின் அன்பின் உண்மையை, பவித்திரத்தைப் பாரதியால் உணர முடிந்தது. 

“பேசிண்டே நிக்காதே, தங்கம், பாரதி, உனக்குப் பாடத் தெரியுமோ?”

“தெரியாது” 

“சமைக்கத் தெரியுமா?” 

“தெரியாது” 

“பாட்டை நீங்க சொல்லிக் கொடுங்கோ, இல்லாட்டா நாணா சொல்லிக் கொடுக்கட்டும். நான் இவளுக்குச் சமையல் கத்துக் கொடுக்கிறேன்”. 

“ஆத்துலேயே மாட்டுப் பொண்னுக்கு ஸ்கூலா?” என்றார் ஈசுவரன். பிறகு “கோந்தே, நீ ஒரு ப்ராவஸ்யம் இவளை டெல்லியில் பார்த்திருக்காய். இருந்தாலும் தோஷமில்லை. இன்னொருக்கா நன்னாப்பார்த்துக்கோ… பாரதி நீயும் பாரு, வெட்கப்படாதே” என்றார். 

“அப்பா?” 

“என்னடா கோந்தே?” 

“ஒருத்தரை ஒருத்தர் பார்த்துண்டா என்ன கிடைக்கப் போறது? நான் இவளைக் கலியாணம் கழிச்சுக்கறதா இல்லை.” 

தங்கம்மா, மெளலி மற்றும் சுசீலா அயர்ந்து போனார்கள். பாரதி திகைத்துப் போனாள். இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பாராத ஈசுவரன் மட்டும் திடுக்கிட வில்லை, 

“பின்னே எந்துக்கு இந்தைக்கு இங்கே வத்தோம்?”

“நீங்க வரனும்னேன்” 

“நீதான் ஒருக்காப் பார்த்திருக்காயேர் ஊர்லேயே சொல்லியிருக்கலாமே?”

“பாரதிக்கு நான் புருஷனா வந்தா அவ சுகப்பட மாட்டாப்பா. மனசு கஷ்டப்பட்டுக் கொண்டே அவ நம்மாத்தில வாழணும். அது ஆவஸ்யமா?” 

“எதை வைச்சுண்டு நீ அப்படிச் சொல்றே?” என்றாள் தங்கம்மா. 

“அவ லிட்டரேச்சர்வ எம்ஃபில். யார் கண்டா, பிஎச்டி பண்ணனும்ங்கற ஆசை இருக்கும்”. 

“நான் உன் அம்மா. கெமிஸ்ட்ரியில் பி.எஸ்ஸி, எம்.எஸ்ஸி படிக்கணும்னு ஆசைப்பட்டேன். முடிஞ்சுதா? மணையில உட்கார வைச்சா, இப்ப நான் மனசு கஷ்டப் பட்டுண்டா இருக்கேன்?” 

“அது எனக்குத் தெரியாதும்மா, பாரதி டெல்லியில பொறந்து வளர்ந்தவ. சல்வார் கமிஸ், சூரிதார், பாண்ட், மிடி, மாக்ஸின்னெல்லாம் போட்டுப் பழகினவள். அவளுக்குச் சொந்தமா ஒரு புடைவை இருக்காங்கறந்த. சந்தேகம். வீட்ல ஹவுஸ் கோட்தான் போட்டுப்பா.” 

“நம்ப ஊர்லேயும்தான் எத்தனையோ பொண்கள் ஹவுஸ் கோட் போட்டுக்சுறா, சல்வார் கமீஸ் போட்டுண்டு காலேஜ் போறா!” 

“நீ என்ன சொன்னாலும் ஒத்து வராதும்மா. இவளோட நாகரிகத்தில முங்கி எழுந்த பிள்ளை தான் சரிப்பட்டு வரும்” 

“என்ன நாணா, இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடறே?” எனறாள் சுசீலா. 

பாரதியின் திக்பிரமை இன்னும் அடங்கவில்லை, இதன் மத்தியிலும் ஒரு புது அபிப்ராயம் நாராயணனைப் பற்றி எழுந்தது. அவளுடைய மனத்தை போட்டோ பிடித்து வைத்து இப்போது எல்லோருக்கும் காட்டுகிறான். திடீரென்று அவளையும் அறியாமல் அவன்மீது இதுவரை உணர்ந்தறியாத, அவளுக்கே இனம் தெரியாத அன்பும், அபிமானமும், மரியாதையும் உண்டாயின. 

திடீரென்று ஈசுவரன் பேசினார், 

“இங்கே வா பாரதி…இவன் என்னென்னவோ சொல்றான். அதெல்லாம் சரியா?” 

”ஆமாம், அத்திம்பேர்.” 

“உனக்கு லிட்டரேச்சரில் டாக்டர் பட்டம் வாங்கணும்னு ஆசை இருக்கு, இல்லியா?” 

பாரதி தலை ஆட்டினாள். 

“பாலக்காட்டிலேந்து ஒரு வண்டி ஏறினா முணு மணிக்கூர்ல கோழிக்கோடு வரும். அங்கே ஒரு யூனிவர்சிட்டி இருக்கு. இன்னொரு வண்டி ஏறினா அதே முணு மணிக்கூர்ல எர்ணாகுளம் வரும். அங்கே கொச்சி யூனிவர்சிட்டி இருக்கு”. 

“அப்பா.. போகாத ஊருக்கு வழி தேடாதீங்கோ. அவளுக்கு இஷ்டமில்லாத விஷயத்தில் நாம் தலை நீட்டண்டாம்,” 

“டேய் கோந்தே, நான் ஒண்ணு கேக்கறேன். பதில் சொல்லு.”

“கேளுங்கோ”. 

“இவ சரின்னா நீயும் சரியா?” 

“சரின்னு பாரதி சொல்ல மாட்டா!” 

“சோத்தியம் அது இல்லை. அவ சரின்னா, நீ சரியா?”

“அவ சரின்னு சொல்லட்டும். அப்புறம் சொல்றேன்”.  

“இது விதண்டா வாதம்”. 

பக்கத்து அறைக்குச் சென்று சுசீலா, பாரதியைத் தனியே அழைந்து, “நீ சரின்னு சொல்லு பாரதி, நிச்சயமா உன் ஆசையும் நிறைவேறும். ஒரு கோடீசுவரன் வீட்டுச் சௌகரியங்களும் கிடைக்கும். நாராயணனும் ராஜா மாதிரி இருக்கான” என்றாள். 

கூடவே வந்த மௌலி, “என் மானத்தை நீதான் காப்பாத்தணும் பாரதி. ஈசுவரனுடைய மனசு தாராளமான மனசு. அவரும் இங்கிலீஷ் லிட்டரேச்சர்ல எம்.,ஏ லயோலா காலேஜ்ல படிச்சவர்” என்றார். 

அம்மாவையும், அப்பாவையும் மாறி மாறிப் பார்த்து விட்டுப் பாரதி திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தாள் இத்தனை மாதங்களாக அவள் உறுதியுடன் எடுத்த முடிவு ஒரு கண நேரத்தில் தகர்ந்து போய்விட்டது. 

மீண்டும் மூவரும் கூடத்துக்கு வந்தார்கள். 

“என்னடா மௌலி! ஒன் பொண் காதைக் கடிச்சியா?” 

“கடிக்கலே” 

“மிரட்டினாயாக்கும்?”

“இல்லை.” 

”பின்னே வார்த்தையால மயக்கினியோ? இப்போ அவ மொகத்தில் ஒரு புதுப் ப்ரசன்னம் இருக்கு!” என்ற ஈசுவரன். “பாரதி மனசில் உள்ளதைச் சொல்லு!” என்றார். 

பாரதி ஈசுவரனைப் பார்க்கவில்லை. நாராயணனைப் பார்க்கலில்லை. மாமி தங்கம்மாவைப் பார்த்தாள், சற்றே முறுவலித்தாள் 

“சம்மதம் மாமி” முணு முணுத்தாள். 

மறுகணம் தங்கம்மா அவளை அணைத்துக் கொண்டாள். 

“தங்கம், அவளுக்கு வலிக்கப் போறது… டேய் கோந்தே. நீ இப்ப என்ன சொல்றே?” 

“இனிமே சொல்றதுக்கு என்ன இருக்கு அப்பா? நான் பாரதியை வார்ன் பண்ணினப்புறமும் அவ சரின்னா எனக்கு என்ன? நானும சரிதான்” சொல்லி நாராயணன் சிரித்தான் பிறகு பாரதியைப் பார்த்து, “பாரதி இன்னும் ஒரு சானஸ் தர்றேன். நன்னா யோசிச்சுப் பாரு. முடிவை மாத்திண்டாலும் குத்தமில்ல. ரத்தினக் கம்பளத்தில கூட ஊசியும் முள்ளும் இருக்கும். இன்னிக்கு எனக்கு வாழ்க்கைப்பட்டு நாளைக்கு நீ கண் கலங்கப்படாது. கண் கசக்கப்படாது”. 

“ஏண்டா கோந்தே, அவளைப் பயமுறுத்தறாய்?”

பாரதி மெலிதாகப் புன்முறுவல் பூத்தாள். 

“நீ உன் மனசுக்குள்ளே சிரிச்சுக்கறாய் பாரதி, நான் இவனைக் ‘கோந்தே கோந்தே’ன்னு கூப்பிடறப்பவெல்லாம் நீ கேலியாகச் சிரிக்கிறாய். எங்க ஊர்ல மூத்த பிள்ளையைக் குழந்தே, குழந்தேன்னு தான் கூப்பிடுவோம். அது கோந்தேன்னு ஆச்சு. சாவின்னு சொல்றேள். அது தமிழ் இல்லை. திறவுகோல், தாழ்க்கோல்ங்கறதுதான தமிழ். நாங்க தாழ்க்கோல்னு சொல்ல ஆரம்பிச்சு இப்பத்தான் கோல்னு ஆயிடுத்து” என்றார் ஈசுவரன்.

“அத்திம்பேர் தான் அதுக்குச் சிரிக்கலே”. 

“பின்னே?”

“என்னோட கண் அவ்வளவு சீக்கிரம் கலங்காதுன்னு உங்க பிள்ளைக்குத் தெரியாம இருக்கேன்னுதான் உள்ளுற சிரித்தேன்”. 

“என் புள்ளையைப் பத்தி உனக்குத் தெரியாது. அவன் பாறாங்கல்லையும் அழ வைப்பான். ஆராவது பொய் சொன்னா, ஏமாத்தினா, நாணாவோட சொரூபமே மாறிடும்”. 

”இப்ப நீங்கதான் அப்பா பாரதியைப் பயமுறுத்தறேள்”. 

திடீரென்று நாதசுரம் கேட்டது. தவில் ஓசை காதைப் பளார் என்று அறைந்தது. 

பாரதி ஜன்னல் அழிகள் மூலம் பார்த்தாள்.

வீட்டின் எதிரே, வீதியின் நட்ட நடுவே கார்களும் பஸ்களும், ஒன்றன் பின் ஒன்றாய் நின்று கொண்டிருந்தன. 

பாரதி நாராயணனைத் தேடினாள். கிடைக்கவில்லை. 

ஒரு காரிலிருந்து ஈசுவரனும், அத்தை தங்கம்மாவும் இறங்க அவர்களைத் தொடர்ந்து ஒரு வயது முதிர்ந்த தம்பதி இளமைத் துடுக்கோடு இறங்கினார்கள். 

கார்கள் காலியாகக் காலியாக அவை நகர்ந்து முன்னேறின. 

பஸ்கள் அவிழ்த்துவிடும் கூட்டத்தினுள் ஊடுருவிப் பார்த்தாள். 

திடீரென்று, நாராயணன் விசுவரூபமாகத் தெரிந்தான். 

யாரிடமோ எதையோ கூறிச் சிரித்தவனாய் பஸ்ஸிலிருந்து இறங்கினான். அதே கதர் வேட்டி, கதர் ஜிப்பா. ஒரு புது மாப்பிள்ளைக்கு இயல்பாக வரவேண்டிய செயற்கைத்தனமான முகம். உயர்த்தலோ அலட்சிய நடையோ இவனிடம் இல்லை. ஏன்? 

ஜானவாசம் தேவையற்ற விளம்பரம் என்று நாராயணன் உறுதியாய் நிற்க, நிச்சயதார்ததம் ஏழு மணிக்கே ஆரம்பமாயிற்று. 

பெண்ணின் கூறைப் புடைவையும், திருமாங்கல்யத்தையும் தாங்களே வாங்கி வரப்போவதாக ஏற்கனவே ஈசுவரன் கூறியிருந்ததால் மெளலியும், சசீலாவும் மற்ற பட்டுப் புடைவைகளையே வாங்கி வைத்திருந்தார்கள். 

ஒரு தட்டில் கூறையும், திருமாங்கல்யமும், கூடியிருக்கும் பெரியோர்களின் ஆசிபெற பவனி வந்தது. 

கடைசியாக அவளுடைய கைக்கு வந்தபோது பாரதி திடுக்கிட்டாள் அவள் அதிகமாகப் புடைவை உபயோகிக்காதவள் தான். ஆனால் கலியாணப் பெண்ணுக்கு அரக்கு நிறத்தில் சாதாரண நூல் புடைவையா? 

இதுவும் நாராயணனுடைய ஏற்பாடோ? 

பிறகுதான் ஒன்று அவள் கண்களைத் தாக்கியது. பிள்ளை வீட்டாரில் முக்கால் வாசிப்பேர் நூல் புடைவைகளில் காட்சி அளித்தார்கள். காஞ்சி முனிவரின் அறிவுரையோ? 

பாரதி திகிலடைந்தாள். 

அத்தியாயம்-3

கல்யாணச் சாப்பாட்டில் பாலக்காட்டு மணம் ஓரளவாவது கமழ வேண்டும் என்ற விருப்பத்தில் ஈசுவரன் ஏற்கனவே மூன்று சமையந்தாரர்களைப் பிரத்யேகமாக அனுப்பியிருந்தார். திருமணத்துக்கு உறவினர்களையும் பல சிநேகிதர்களையும் தவிர, சிப்பந்திகள், வயல் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரிகிறவர்கள் ஏற்கனவே குடும்ப சகிதம் வருவார்கள் என்று அவர் மௌலியிடம் அறிவித்திருந்தார். அறிவித்தபடி அவர்களும் வந்தார்கள் 

கல்யாண விருந்தில் பெரும்பாலும் தமிழ் மணம் கமழ்ந்தாலும் பாலக்காட்டு வாடையும் தலை நீட்டியது. ஓலன், காலன், அவியல், எரிசேரி என்றெல்லாம் இலையில் விழுந்தபோது, நங்கவரம் வாசிகள் திகைத்தார்கள். ருசித்தபோது பலர் முகம் சுளிக்க, சிலர் வியந்தார்கள். இன்னும் சிலர் ரசித்து ருசித்தார்கள் பால் அடைப் பிரதமன் என்னும் பாயசம் வந்தபோது எல்லோருமே ஒரு தனி உற்சாக ஒற்றுமையுடன் வரம்பு மீறினார்கள்.

பிற்பகல் மூன்று மணி அளவில் ஈசுவரன் மௌலியைத் தேடி வந்தார். 

“என்ன ஈச்சா, ரிஸப்ஷன் ஆறு மணிக்கு வைச்சிருக்கேன், சரிதானே?” என்றார் மௌலி 

“ரிஸப்ஷனுக்கு ஆர்டா வருவா? உனக்கு வேண்டப் பட்டவர்தானே? இப்ப ஒரு காரையும், ஒரு பஸ்ஸையும் ஒழிச்சு மத்ததெல்லாம் புறப்படப் போறது. நீ என்ன செய்தாய். நாலு மணிக்குச் சாயை மாத்தரம் கொடுக்கறாய். போற வழியில பசிக்குமே…? ஒரு பத்து முன்னூறு பேருக்கு தயிருஞ் சாதமும், உப்பிலட்டதும் அஞ்சாறு அண்டா பாத்திரங்களில் போட்டுத் தா.” 

“நாலு மணிக்கா…?” 

“நாலு மணிக்குச் சாயை. நாலே காலுக்கு அவா பொறப்படுவா.” 

“எப்ப உலை வைச்சு அரிசியைக் களைஞ்சு போடறது ஈச்சா? அது எப்ப வேகும்…? இப்பலந்து சொல்றியே?”

ஈசுவரன் சிரித்தார், 

”அண்டா பாத்திரங்களையெல்லாம் லாரியில் மடக்கி அனுப்பிடறேன். என் லாரியே வரும்” 

“கொஞ்சம் டயம் தாயேன் ஈச்சா” 

“சாதம் இப்ப நன்னா ஆறிப்போயாச்சுடா மௌலி”

“நான் கார்த்தாலேயே, என் புள்ளை உன் பொண் கழுத்தில் தாலி கட்றதுக்கு மின்னாலேயே, என்னோட சமையல்காரங்க கிட்ட சொல்லி வைச்சேன். உப்பிலட்டதுக்கு நூறு எலுமிச்சம் பழமும், மொளகாப் பொடியும் வாங்க ஏற்பாடு செய்ஞ்சேன்!” 

“எனக்குத் தெரியவே தெரியாதே. ஈச்சா!” 

“ஒனக்கு எப்படிடா தெரியும்? எல்லாம் நாங்க எறங்தின வீட்டுக் கொல்லையில நடந்தது. இப்ப ஒன் வேலை பஸ்ல ஏத்தந்து தான்” 

“தயிரு?”

“என்னடா மௌலி. அசமஞ்சமா ஒரு கேள்வி கேக்சுறாய்? இத்தனை ஏற்பாட்டை செய்ஞ்சவனுக்குத் தயிரும் வேனும்னு தெரியாதா? நேத்தைக்கு நேத்தைக்கு சாயங் காலமே இருபது லிட்டர் பால் வாங்கச் சொன்னேன். அப்புறம் இன்னொரு காரியம்”. 

“என்ன ஈச்சா?” 

“வாங்கிக்கோன்னா வாங்கிக்கணும், நீ இப்ப என் மச்சுனன் மாத்ரம் இல்லை. சம்பந்தியும் ஆயிட்டாய். உம் கையை நீட்டு”. 

மௌலி வாங்கிக் கொண்டார். பையைத் திறந்துபார்த்தார். கட்டுக்கட்டாக நூறு, ஐம்பது, இருபது, பத்து என்று ஒரே நெரிசல். 

“சரியா எத்தனைன்னு நான் கணக்குப் போடலை. உத்தேசமாத்தான் நானும், என் தம்பியும் போட்டோம். நான் தர்றண்டது நாப்பதாயிரத்துக்குக் குறைச்சன் இருக்காதுன்னு தோணித்து”. 

மௌலியின் கண்கள் கனத்தன. 

“ஈச்சா…ஈச்சா! இது நியாயமா எனக்குப்படலே”

“ஒனக்கு நியாயமாப் படறதை நான் சேயமாட்டேன். எது நியாயம்னு எனக்குத் தோன்றதே அதைத்தான் நான் சேவேன். நாளைக்கு நீங்களெல்லாரும் எங்களோட வர்ரேள். மத்த நாள் எங்காத்தில கிருஹப்பிரவேசம், மனசிலாச்சா?” 

மௌலியால் தலையாட்டத்தான் முடிந்தது. 

முன்னொரு காலத்தில் கல்யாணச் செலவை இருதரப்பினரும் பகிர்ந்து கொள்வார்களாம். ஈசுவரன் இன்னும் மௌலிக்கு அந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார். உணர்ச்சிப் பெருக்கில் தொண்டை அடைத்துக் கொண்டது. நாவில் ஒலி எழவில்லை. 

மறுநாள் ஒரு பஸ்ஸும். ஒரு காரும் பாலக்காட்டை நோக்கிப் புறப்பட்டன. மெளலி, சுசீலா மற்றும் பாரதி காரில் செல்ல, பிள்ளை வீட்டார் அனைவரும் பஸ்ஸில் ஏறினார்கள். மௌலி எவ்வளவு வற்புறுத்தியும் நாராயணன் பாரதியுடன் காரில் வரமில்லை. 

பள்ளிப்புறம் கிராமம் கோலாகலத்தில் ஆரவாரித்தது. அதை ஒட்டினாற்போல அமைந்த ஆதித்யபுர கிராமமும் இதில் பங்கு கொண்டது. விவாகங்கள் மூலமாக இந்த இரு கிராமங்களுக்கும் தொன்று தொட்டு உறவு உண்டு. ஒரு காலத்தில் பெரிய நிலச்சுவான்தார்களும், வியாபாரம் மற்றும் லேவாதேலியில் பணம் ஈட்டிக் கொடி கட்டிப் பறந்தவர்களும் வாழ்ந்த கிராமங்கள் அவர்களில் பலர் இப்போது சிதிலமாகிவிட்ட வீடுகளில் பழைய பெருமைகளில் ஒடிந்து போய் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தார்கள். ரேஷன் கடைகளில் அரிசி வாங்க வேண்டிய நிலை. அந்த அரிசியின் செலவுக்காகப் பிறரிடம் கைகட்டி வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். புதுத் தலைமுறைப் பெண்கள் கஷ்டத்துடன் கல்லூரியில் படித்து, படித்த உடனேயே வேலை ஒன்றை தேடிப் பிடிக்க வேண்டிய அவசியம்.

ஆனால் விதி விலக்காகச் சில வீடுகள் இன்னும் செல்வச் செழிப்பில் மின்னிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒன்று ஈசுவரனுடையது. 

நிலச் சீர் திருத்தங்கள் வரும் முன்னரே ஐநூறு ஏக்கர் நிலத்தை ஒரு பெரும் கூட்டுக் குடும்பப் பண்ணையாக மாற்றி, உழவுத் தொழிலை ஈசுவரனும் அவருடைய தந்தை மற்றும் சிற்றப்பாக்கள் நேரடியாக மேற்கொண்டார்கள். பாலக்காட்டில் மூன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்கும் நிலையங்கள். கார், லாரி, ஸ்கூட்டர் போன்ற வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பொருட்களில் வியாபாரம். ஒரு பெரிய உர உற்பத்தி நிறுவனத்தின் மாவட்ட விற்பனை உரிமை. பாலக்காடு டவுன் ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு பெரிய மருந்துக் கடை. கோவை, மதுரை மற்றும் சென்னை நகரங்களில் பலப் பல லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள கட்டடங்கள், கடை வீதியில் சிறிதும் பெரிதுமாகப் பன்னிரண்டு கடைகள். 

மூதாதையர் செய்து வந்த வட்டி வியாபாரம் மட்டும் இப்போது இல்லை. 

ஈசுவரனுடைய மூன்று தம்பிகளும் அவர்களின் சில பிள்ளைகளும் நாராயணனுமாக சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தார்கள். 

மகாலட்சுமி முகமெல்லாம் பிரகாசிக்க நர்த்தனமாடினாள். ஈசுவரன் எதைத் தொட்டாலும் அது பொன்னாயிற்று. கிராமத்தில் பல குடும்பங்கள் அவாடம் பணியாற்றி, திருப்தியாக ஜீவனம் நடத்தின ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டைச் சிற வயதிலிருந்தே அவர் உணர்ந்து அறியாத காரணத்தால் கிராம மக்கள் அனைவருமே அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் தனி அன்பு, மரியாதை, மதிப்பு காட்டினார்கள். 

இப்போது ஈசுவரனுடையபிள்ளை நாராயணனுக்குக் கல்யாணம் என்று வந்தபோது கிராமமே ஒன்றாக முந்து நங்வரம் சென்று திரும்பியது. கிருஹப் பிரவேசத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டது. 

ஈசுவரனுடைய மூன்று தம்பிகளில் கடைசித் தம்பி சகஸ்ரம் தன் வீட்டை, பெண் வீட்டார் தங்குவதற்காகத் தயார் செய்தான். அவனுக்கு அடுத்தவன் கோவிநதன் விருந்துக்கான ஏற்பாடுகளில் முனைந்தான். ஈசுவரனுடைய முதன் தம்பி சிவராமன கிரஹப் பிரவேச வீட்டைத் தூய்மைப்படுத்துவதில் இறங்கினான். 

பஸ்ஸும் காரும் பள்ளிப்புரம் கிராமத்தை அடைந்த போது இரவு மணி எட்டு. 

“டேய் மௌலி எங்காத்துக்குள்ளே. போகாதே… என்ன அவசரம் ஒனக்கு?'”ஈசுவரன் காரில் இருந்து இறங்கிய மெளலி தம் வீட்டு வாசற்படியில் கால் வைப்பதைக் கண்டு. 

மௌலி சிரித்தார். அவருடன் சுசீவாவும் பாரதியும் மௌனமாக நின்றார்கள். 

பஸஸிலிருந்து இறங்கி மெளலி அருகே வந்த ஈசுவரன். “நேரா எதிர்க்க இருக்கிற வீட்லதான் நீங்க எல்லாரும் தங்கப் போறேள். கட்டில், கடக்கை தலகாணி எல்லாம் சகஸ்ரம் தயாராக்கியிருப்பன். நாளைக்குக் கார்த்தாலே மேள வாத்தியத்தோட நாங்க வந்து அழைப்போம். அப்புறம் பாரதி எங்காத்துக்குள் வருவாள்” என்றார்.

“சரி ஈச்சா”

“ஆருக்குக் குளிக்கணுமோ அவா குளியுங்கோ…குளிக்காதவா கைகால் அலம்பிக்குங்கோ. இன்னும் அரைமணிக் கூறில் எலை போடச் சொல்றேன்”. 

மீண்டும், “சரி ஈச்சா!” என்றார் மௌலி, 

“நீ என்னோட மச்சுனன்தான். எப்பவேணும்னாலும் இந்தாத்திலே பிரவேசிக்கலாம். ஆனா நீ இன்னைக்கு என்னோட சம்பந்தி. அதனாலதான் இந்த சம்பிரதாயம் கிட்டயா!” மெளலி பதில் சொல்லவில்லை. தம் பெண்ணைப் பற்றிய சிந்தனை மின்னலாக எழுந்தது. 

டில்லியில் பிறந்து அங்கேயே வளர்ந்தவள்.ஏழுவயதில் ஒரே ஒரு முறை நங்கவரம் வந்திருக்கிறாள். சொந்த பந்தமெல்லாம் தாய்வீட்டு மாமா, சித்திகளுடன் மட்டும்தான். அவர்கள் பம்பாய் கல்கத்தா, கான்பூர் என்று சிதறிக் கிடந்தார்கள். கோடை விடுமுறையை அவள் பெரும்பாலும் பாட்டியுடன் பம்பாயில் கழிப்பாள். நங்கவரம் போன்ற ஒரு பெரிய கிராமத்தைக் கண்டே முகம் சுளித்த அவள் எப்படி இந்தக் கிராமத்தில் வாழப் போகிறாள்? என்னதான் சகல் நவீன வசதிகள் இருந்தாலும் அவள் வாழ்நாள் முழுதும் வளைய வளைய வரப்போவது இந்த ஒரு அக்ரஹார வட்டத்துக்குள் தானே? பல தரப்பட்ட வட இந்தியர்களோடு சாதிமத வித்தியாசம் தெரியாமல் பழகி வந்தவள் கடைசியில் இங்கே வந்து நிற்கிறாளே? 

திடீரென்று எல்லாம் தம்முடைய தவறினால்தான் என்று மனசாட்சி அடித்தது. அவர் ஓரளவுக்கு மேல் பேசியிருக்கக் கூடாது. அவருடைய வற்புறுத்தல் காரணமாக பாரதி கல்யாணத்துக்குச் சம்மதித்திருக்கிறாள். இல்லாவிட்டால் மேலே தொடர்ந்து படித்திருப்பாள். ஆங்கில இலக்கியத்தில் டாக்டர் பட்டம் வாங்குவதில் முனைந்திருப்பாள். அவருடைய தற்போதைய நிதிப்பற்றாக்குறையும், தங்கை தங்கம்மா அந்தக் காலத்தில் இந்தக் குடும்பத்தினுள் பிரவேசித்தவன் என்ற உண்மையும்தானே அவர் கண்களை முடின? 

“என்னக் குத்துக் கல்லாட்டம் நிக்கறீங்க. வாங்க வீட்டுக்குள்ளேயே போகலாம்” என்று சொல்லி சுசீலா மௌலியை இன்றைய உலகுக்கு அழைத்து வந்தாள் .

கிரஹப் பிரவேசம் விமரிசையாக நடந்து முடிந்தது. ஈசுவரனுடைய எழுபத்து நாலு வயதுத் தாயார் பாலும் பழமும் அளித்து கைலாகு கொடுத்து பாரதியை அழைத்துச் சென்றாள். எண்பத்திரண்டு வயதுத் தந்தை கூட நடந்தார். 

“எச்சுமி இப்ப நோக்குத திருப்தியாச்சா? கோந்தைக்குக் கல்யாணம் ஆகணும். பொண்ணுக்கு உன் கையாலே பாலும் பழமும் ஊட்டனும்னு ரொம்ப நாளா விசாரப்பட்டயே. இப்ப அது நடந்தாச்சு” என்றார். நாணுப்பாட்டா என்கிற நாராயண அய்யர். 

“நீங்க மாத்தரம் ஈஸிச்சேர்ல ஒக்காந்து ஒக்காந்து ‘எப்படி எச்சுமி நம்ம கோந்தை ஒரு பொண்ணு கழுத்லே தாலி கட்டுவான்னு’ ஏங்கலியாக்கும்?” 

“இதிலே ஒரு அதிசயத்தைப் பார்த்தியா?” 

“அதன்ன பெரிய அதிசயம்? புள்ளை ஈச்சாவுக்கு, ஒருத்தி நங்கவரத்திலேந்து வந்திருக்கா. அந்த மண்ணோட அதிர்ஷ்டமா?” 

“நோக்குத் தெரியாது. சும்மா தொண தொணக்கா தைக்கு இருங்கோ.”

பாரதியன் வாயில் இன்னும் பாலின் சுவை தவழ்ந்து கொண்டிருந்தது. சுலையேயானாலும் அகற்றிவிட வேண்டும் என்று நா துடித்தது. இந்தக் கூட்டத்திலிருந்து எப்படி அவளால் வெளியேறி வாய்க்கொப்பளிக்க முடியும்? மாமனார் மாமியார், நாராயணனுடைய சித்தப்பாக்கள், சித்திகள் இன்னும் ஊரிலே பல உறவினர்கள் அவளைச் சுற்றிக் குழுமி இருக்கும்போது அவள் மெல்ல நழுவிப் போகவும் முடியாதே? 

வேறு வழி தெரியாமல் சகித்துக் கொண்டாள். 

தம்பதியை மணையில் உட்கார வைத்தார்கள். நாராயணன் வெகு அருகே, இடிக்காத தோஷமாக உட்கார்ந்திருந்தும் அவன் தொலை தூரத்துக்குப் போய் விட்டதான பிரமை பாரதிக்கு ஏற்பட்டது. அவன் இதுவரையில் அவளுடைய கண்களைச் சந்திக்கவில்லை. ஏன்? அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் மூன்று முடிச்சுப் போட்டு விட்டானா? நங்கவரத்துக்குப் பெண் பார்க்க வந்தபோது தனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை என்றான். அதற்கான காரணங்களையும் கூறினான். தன் பொருட்டுத் தான் அவன் அப்படிப் பேசினான் என்று அவள் நினைத்துத் தானே அவளே தான் கொண்டிருந்த முடிவை மாற்றிக் கொண்டாள். அவன் மீது திடீரென்று எழுந்த மதிப்பு மரியாதை அபிமானம் எல்லாம் தானே முடிவை மாற்ற வைத்தது? அதன் பிறகு மெல்ல அவளுடைய மனமும் அவன்பால் வயப்படத் தொடங்கியதே! 

இப்போது நாராயணன் அலட்சியமாக, பராமுகமாக இருக்கிறான். ஏன்? புரியவில்லை. திடீரென்று உள்ளுக்குள் கோபம்தான் வீசியது- 

அவன் டில்லியில் வளர்ந்தவள். எம்ஃபில் படித்தவள், தூக்கி எறிந்து பேசுவதில் அவளை மிஞ்சுபவர் கிடையாது. நாராயணன் அலட்சியமாக இருந்தால் அதற்கும் மேலாக அவளால் அலட்சியமாக இருக்க முடியும். 

திடீரென்று மாமனார். ஈசுவரனுடைய குரல் கேட்டது. 

“பொண்ணே, பாரதி! எழுத்திரு. ரெண்டு பேரும, சபைக்கு நமஸ்காரம் பண்ணுங்கோ.” 

பாரதி எழுந்தாள். 

இருவரும் நமஸ்கரித்தார்கள். 

மீண்டும் உட்கார்ந்தார்சள். 

பெண்கள் கூட்டம் அவளுக்கு அருகே இருந்தது. அவர்கள் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டாலும் அவள் காதில் வார்த்தைகள் விழுந்தன. 

“டில்லியில் படிச்சவளாச்சே, அதான் ‘எதுவும் பிடிக்கலை’ன்னு மூஞ்சியை மர நாயாட்டம் வைச்சுண்டு இருக்கா” 

“இந்தைக்கு சகஸ்ரம் ஆத்துக்குப் போனேன்டீ. அப்பத்தான் அவ குளிக்க பாத்ரூம் போனா”. 

“கழுத்துக்குக் கீழே தலை மயிர் இல்லை” 

“பொய்டீ…தவைவாரிப் பின்னிண்டிருக்காளேடீ?” 

“சவுரி இருந்தா மொட்டைப் பாட்டியும் பின்னிப் பூ சூட்டிக்கலாம்டீ” 

“அபத்தமாப் பேசாதே, சொர்ணம்.” 

“தெளிச்சுப் பேசாதேடீ..அவ காதுல விழப்போறது”. 

“இல்லாததையா சொல்றேன்” 

“இன்னும் குரலைத் தாழ்த்துடீ..” 

“நாராயணனுக்கு நல்ல பெண்டாட்டியா அமைவான்னு நேக்குத் தோணலை” 

“அவன் சொன்னபடி இவகேட்கலேன்னா இவளுக்குத் தான் கஷ்டம்,”

“டீ, அவ நம்ப பக்கம் பார்க்கறா.” 

“ஒனக்கு இங்கிலீஷ் வரலேன்னா அவகிட்டப் போடீ..” 

“மூக்குக் குத்திக்கலை, கண்டயா?” 

“எச்சுமிப்பாட்டி ரெண்டு மூக்கையும் குத்திக்கச் சொல்லுவாடீ…” 

பாரதியால் அந்த இடத்தில் எதுவும் செய்ய முடிய வில்லை. மௌனமான கோபம் கட்டிப் போட்டது.

முதல் இரவு.

“பாரதி, நான் உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்”.

அத்தையாகவும், மாமியாராகவும் இருக்கும் தங்கம்மா அவள் அருகே வந்தாள். 

“சொல்லுங்க அத்தை” 

“நீ தொள்ளாயிரத்துத் தொண்ணூறில் இந்தப் பாலக்காட்டுக்கு வந்திருக்கே. நான் அம்பத்தாறில் பத்தொன்பது வயசில பி.எஸ்ஸி கடைசிப் பரிட்சை எழுதின கையோட இங்கே வந்தவள். அப்ப நான் பச்சை மண், கண்ணைக் கட்டிக் காட்டில விட்டமாதிரி இருந்தது. இங்க பேசற தமிழே புரியலே. நீட்டி இழுத்து முழக்கிப் பேசறதைக் கேட்கறப்ப சிரிக்கத் தைரியமில்லே. அழத் தெரியலே, யார் யாரெல்லாமோ வருவா? சொந்தம் கொண்டாடுவா-கையையும் கழுத்தையும் காதையும் பிடிச்சு இழுத்துப் பார்ப்பா. வளையலும் சங்கிலியும் வைரமும் உண்மையா போலியான்னு வார்ததையை வெளியே கொட்டாமக் கேட்பா. அழுகை வரும். அம்மா அப்பாவை அவமானப்படுத்தறானேன்னு ஆத்திரம் வரும். ஆனா என்ன செய்ய? மாமனார் மாமியார் சாத்த சொரூபிகள். கட்டின புருஷன்? அவரைப் பத்திச் சொல்லவே வேண்டாம். சகல சுதந்திரத்தையும் கொடுத்தார். ஆனா நின்னு பேச டயம் கிடையாது. பம்பரம் அவர்ட்ட தோத்துப் போகும். எப்பவும் ஓட்டம். 

இதை விடு. சாப்பாடு? வடிக்கிற சாதத்தில்தான் தேங்காய் இருக்காது. மத்த எல்லாத்திலேயும் ஒரே தேங்காய் மயம். அப்றம் இன்னொண்ணு சாம்பார் மட்டும்தான். ரசம் இராது. நான் தினமும் டம்ளரில் ரசத்தை விட்டுக்குடிச்சுப் பழகினவள். மிளகூட்டல்று ஒருவகைக் குழம்பு. பொரிச்ச கூட்டுன்னு மொதல்ல நினைச்சேன். ஒரே தேங்காயும், நாலஞ்சு வகைக் காய்களையும் போட்ட ஒரு கதம்பம். ஜீரகமும், வறட்டு மொளகாயும், தேங்காப் பூவில் கலந்து அரைச்சுக் கொட்டி.. தேங்கா எண்ணெயில தாளிச்சு ஒரு கிளை கருவேப்பிலையப் போட்டு கச்சட்டியில் தயார் பண்ஐ விஷயம், என்னால வாய்ல வைக்க முடியலே… என் மாமியார் புரிஞ்சுண்டா. ‘தங்கம்மா, நீ உனக்குப் பிடிச்சதைத் தனியா சமைச்சுக்கோன்னா’. இந்தத் தாராளத்தில் கொஞ்ச நாள் சமைச்சுண்டேன். ஆனா நாள் ஆக ஆக, இப்படிச் செய்யறது சரியில்லைன்னு பட்டது. மெல்ல மெல்ல மிளகூட்டல், எரிசேரி, காளன் ஓலன் இத்யாதிகளின் ருசிக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன்.”

பாரதி வாய் திறவாமல் அத்தையின் சுயபுராணத்தைக் கேட்டு அலுத்துப் போனாள். 

“இதெல்லாம் இப்ப நான் ஏன் சொல்ல வர்றேன்னு யோசிக்கிறியா, பாரதி? பின்னணி புரிஞ்சாத்தான நீ முன்னணியில நிற்க முடியும். இன்னிக்குக் கார்த்தால சில பெண்கள் உன்னைப் பத்தி விமர்சனம் பண்ணினா. என் காதுல விழுந்தது. ஆனா ஒண்ணு, மனசில பட்டதைப் படார் படார்னு சொல்றது இந்த ஊர்க் குணம். ஆனா யார் மனசிலுமே வெறுப்போ, விரோதமோ இல்லை. அவங்களே நாளைக்கு உன்னைத் தேடிண்டு சிநேகமாக்கிக்க வருவாங்க, அவங்க சொன்னதையெல்லாம் நீ உன் மனசில ஒட்ட வைச்சுண்டு பராமுகமா இருந்துடாதே”. 

”சரி, அத்தே.”

”அப்றம் இன்னொரு முக்கியமான விஷயம்.” 

”சொல்லுங்க அத்தே”. 

“நாராயணன் யார்ட்டேயுமே அதிகம் பேச மாட்டான், ஊர்ல மத்தவங்களோட உட்சார்ந்து வம்பு பேசறது. அரட்டை அடிக்கிறது.இதெல்லாம் தெரியாதவன். அவன் கவனம் எப்பவும் நிலத்திலும், தோட்டத்திலும் விவசாய ஆராய்ச்சியிலும் நெலைச்சிருக்கும். சர்க்கார் நியமிச்சிருக்கிற எத்தனையோ கமிட்டிகள்ளே மெம்பர். விவசாயிகள் சங்கத்திலே, செக்ரடரி. எல்லாப் புது மாப்பிள்ளை மாதிரி அவன் உன்கிட்ட நடந்து கொள்ளலேன்னா அதைத் தப்பா எடுத்துக்காதே”. 

“சரி அத்தே…ஆமாம் நீங்க மட்டும் எப்படி பாலக்காட்டு வாடை இல்லாம இப்ப என் கிட்டப் பேசறீங்க?”

தங்கம்மா சிரித்தாள் 

“என் பிறந்த ஊரு நங்கவரம். அங்கே பேசின தமிழை இப்ப உன் கூட பேச எனக்கு சான்ஸ் இருக்கிறப்ப அதை நழுவ விடுவேனா? ஆனா நானே நாளைக்கு மத்தலாள் கிட்டே எப்படிப் பேசறேன்னு பாரு”. 

“ஏற்கெனவே பார்த்தாச்சு அத்தே.” 

“இங்கே எல்லோருமே நல்லவா. என் ஓர்ப்படிகள் எல்லோருமே தங்கங்கள்; நீயும் நல்லவள். ‘குடும்பத்தோடு. இணைஞ்சு போகிறவள்’னு பேர் வாங்கணும்”. 

“சரி அத்தே”

“டமாரம் கொட்டி இந்த சாந்தி முகூர்த்தத்தை அம்பலப்படுத்த நாராயணன் விரும்பலே. அதான் சாயங்காலம் ஊர்க்கூட்டம் வரலை. சரி வா! வெளியே போகலாம்,” 

வெளியே வந்ததும் மூத்த ஓரகத்தி சிரித்தாள். 

“என்ன மன்னி! பர்ஸ்ட் நைட்டுக்கு மாட்டுப் பொண்ணுக்கு டியூஷனா?” 

”பேசாம இரேன் கமலம்” 

பாரதியை மாடிப்படிவாயிலில் விட்டு விட்டுத் தங்கம்மா சென்றாள். பாரதி மெல்ல மெல்லக் கால் வைத்துப் படியேறினாள். 

அறை வாயிலில் நின்றபோது அறை பெரிதாக ஆனால் மங்கலான வெளிசசத்தில் உறைந்திருப்பதைக் கண்டாள். நட்ட நடுவே ஒரு பெரிய இரட்டைக் கட்டில். கட்டிலைத் தாண்டி சுவரோரமாய் ஜன்னலுக்கு கீழே ஒரு பெரிய மேஜை. மேஜை மேல் கேள்விக்குறி அமைப்பில் ஒரு விளக்கு பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது. நாற்காலியில் உட்கார்ந்து நாராயணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

அவள் அறையினுள் பிரவேசித்து ஓரிரு நிமிடங்கள் நின்றாள். தூக்கம் வரவில்லை என்றாலும் கட்டிலில் அவனில்லாமல் உட்காரவோ படுக்கலே தோன்றவில்லை. 

மெல்ல அவனருகே சென்றாள். அவள் மிகவும் நெருங்கி வந்த பிறகுதான் நாராயணன் உட்கார்ந்து கொண்டான், எழுதுவதை நிறுத்திவிட்டு. 

“பாரதி நான் இந்த ரிப்போர்ட்டை விடியறத்துக்குள்ளே முடிச்சுத் தீர்த்தாகணும். கார்த்தால் ஐலண்டு எக்ஸ்பிரஸில் இதை எடுத்துண்டு எர்ணாகுளம் போய் ஆகனும். நீ தூங்கிக்கோ. கொஞ்சம் கொசு கடிக்கும். ஒனக்குக் கொசுவலையை எடுத்துத் தரச் சொல்லிட்டு வண்டி ஏர்றேன். வேணாம்னா ஃபேனைப் போட்டுக்கோ.” 

”சரி'” என்றாள் பாரதி. 

“என்னைத் தெத்து தரிக்காதே பாரதி…. ஸாரி…. என்னை மிஸ்டேக் பண்ணுக்காதே…” 

மௌனமாய்ப் பாரதி கட்டிலுக்கு வந்தாள். முதலிரவில் பெரியதோர் நாட்டத்தை அவள் உள்ளடக்கி வைத்துக் கொண்டிருக்கவில்லைதான் என்றாலும் ஏமாற்றத்தை அவளால் ஏற்க முடியாமற் போயிற்று. 

– தொடரும்…

– வானமெல்லாம் ஆசைக் காற்றாடி (நாவல்), முதற் பதிப்பு: மார்ச் 1995, கங்கை புத்தகநிலையம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *