கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 11,310 
 
 

”அம்மாடியோ!” என்று அலறினான் அவன்.

சில்லி மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. ”இன்னாடா சவுண்டு விடுறே?” என்றபடி அவன் வயிற்றில் ஓங்கி உதைத்தான் ஓர் ஆள்.

சின்னக் கடைத் தெருவும் ஆணிக்காரன் தெருவும் இணையும் இடத்தில் ஒரு திடல். பக்கத்திலேயே வேலுமணி வாத்தியார் வீடு. வீட்டு எதிரில் ஒரு பெரிய கீற்றுக் கொட்டகை. அதன் முகப்பில் ‘வேலு சிலம்பக் கூடம்’ என்ற பெயர்ப் பலகை, பெயின்ட் மங்கிய எழுத்துக்களுடன் தொங்கியது. கர்லாக்கட்டை, டம்பிள்ஸ், வெயிட் லிஃப்டிங், கராத்தேயுடன் இணைந்த நஞ்சாக் என ஆளுக்காள் பயிற்சியில் இருந்தார்கள். கொட் டகைக்கு வெளியில் ஜோடியாகவும் தனித் தனியாகவும் சிலம்ப விளையாட்டில் பலர் ஈடுபட்டிருந்தனர்.

சற்றுத் தள்ளி ஒரு மரத்தில் ஒருவன் கயிற்றால் கட்டிப் போடப்பட்டு இருக்க, அவனைச் சுற்றி வாட்டசாட்டமான நாலைந்து பேர் நின்று, ஆளுக்கு ஆள் பலமாகத் தாக்கி அவனை அலற வைத்துக்கொண்டு இருந்தார்கள்.

பயிற்சிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் ஓர் நீண்ட பெஞ்ச். ஏழெட்டு பிளாஸ்டிக் நாற்காலிகள். அவற்றில் சிலர் உட்கார்ந்து அங்கு நடப்பவற்றையெல்லாம் ஒருவிதத் திகிலோடு பார்த்துக் கொண்டு இருந்தனர்.

உடல் முழுவதும் மூடி, கண்கள் மட்டும் வெளித் தெரியும் விதத்தில் ‘புர்கா’ கறுப்பு உடை அணிந்த இரு பெண்கள் பின்னால் தயக்கத்துடன் வர, இளைஞன் ஒருவன் முன்னால் நடந்து வந்தான். ”யாரு நீங்க? இன்னா வோணும்?” என்று வாசலில் நின்றிருந்த ஒரு முரட்டு ஆசாமி விசாரித்தான். கையில் லெதர் பேக் வைத்திருந்த இளைஞன், ”வாத்தியார் ஐயாவைப் பார்க்கணும்” என்றான். ”பூஜையில இருக்காரு. இப்ப வந்துடுவாரு. உக்காருங்க!” என்று பதில் கிடைத்தது.

திடுமென்று அந்த இடத்தில் பரபரப்பு… ”ஐயா வர்றாரு, ஐயா வர்றாரு!” என்று சொல்லிக் கொண்டே சிலர் ஓடி வந்தார்கள். நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்கள் பயபக்தியுடன் எழுந்து நின்றார்கள். வேலுமணி வாத்தியார் கம்பீரமாக வெளியே வந்தார்.

வெள்ளை வெளேர் வேட்டி-சட்டை, நெற்றி நிறைய விபூதி, புருவ மத்தியில் பெரிய குங்கும வட்டம், அடர்த்தியான பெரிய மீசை. ”உக்காருங்க!” என்று எல்லோரையும் அமரச் சொன்னார். அவரும் அங்கிருந்த பெரிய இருக்கையில் அமர்ந்தார். மரத்தில் கட்டிப் போடப்பட்டு அடி வாங்கிக்கொண்டு இருந்தவன் பக்கம் திரும்பிப் பார்வையை ஓடவிட்டார். ”இன்னாப்பா சொல்றாரு சண்டியரு?” என்றுபுன்னகை யுடன் கேட்டார்.

”இன்னம் அடிக்கவே இல்லீங்க ஐயா, அதுக்குள்ள லபோதிபோன்னு கத்தறான்!” என்றான் அடித்தவர்களில் ஒருவன். ”எல்லாம் உள்காயமா இருக்கட்டும்!” என்று உத்தரவிட்டுத் திரும்பிய வாத்தியார், ”காலேஜுக்குப் போன பொண்ணை நட்ட நடு ரோட்டுல கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கப் பார்த்திருக்காரு தொரை. பொண்ணோட அப்பா ‘ஏன்டா அப்பிடிச் செஞ்சே?’ன்னு கேட்டதுக்கு, கத்தியைக் காட்டி மெரட்டியிருக்கான். இவனை அடிச்சுத் தோலை உரிக் காம விடலாமா சொல்லுங்க!” என்றார்.

”கொன்னாக்கூடத் தப்பில்லீங்க!” என்றார் ஒருவர்.

எதிரில் உட்கார்ந்திருந்தவர்களில் முதல் நபரைப் பார்த்து, ”உம், சொல்லுங்க!” என்றார் வாத்தியார்.

”ஐயா, என் பேரு அழகுராம். எனக்கு கீரப்பாளையம் கிராமமுங்க. சின்னதா ஒரு ரைஸ் மில் வெச்சிருக்கேன். சிறுகச் சிறுகப் பணம் சேத்து இங்கே சிதம்பரத்துல நாகச்சேரிக் குளத்துகிட்ட ஒரு வீட்டைக் கட்டி மூணு வருஷத்துக்கு முன்னே ஆயிரம் ரூபா வாடகைக்குவிட் டேன். இப்ப அந்த ஏரியாவுல என் வீடு அளவுள்ள வீடுகளுக்கு மூவாயிரம் ரூபாய்க்குக் குறையாம வாடகை வருது. நான் இன்னொரு ஆயிரம் ரூபா சேத்து ரெண்டாயிரம் ரூபா கேட்டேன். குடியிருக்கிற ஆளு அந்த ஏரியா ரவுடின்னு ஒருத்தரைக் கூட்டியாந்து என்னை மெரட்டுறார். ‘கோர்ட்டுக்குப் போனா, பத்து வருசத்துக்கு மேலே கேஸ் இழுக்கும் தெரியும்ல? வீட்டைக் காலி பண்ண முடியாது, ஒன்னால என்ன பண்ண முடியுமோ செய்யி’ன்னு தெனாவட்டாப் பேசுறாங்க ஐயா!” என்று அழாத குறையாகச் சொன் னார்.

வாத்தியார் திரும்பிப் பார்த்தார். ஒரு முரட்டு ஆள் முன்னால் வந்தான். ”மன்னாரு, நீ இவர்கூடப் போ. சரியா ஒரு வாரத்துல வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடணுமுன்னு அவன்கிட்டே நான் சொன்னதா சொல்லு. முடியாதுன்னு அவன் சொன்னாலோ, ஏரியா ரவுடின்னு எவனையாவது கூட்டிட்டு வந் தாலோ ரெண்டு பேரும் இனிமே நடக்கவே முடியாதபடி காலை உடைச்சிரு!”

”ஆகட்டுங்க!” என்றான் மன்னார் என்று அழைக்கப்பட்டவன்.

அழகுராமன் தன் கையிலிருந்த பையை வாத்தியாரிடம் பணிவுடன் நீட்டி, ”இதில் பத்தாயிரம் ரூபா இருக்குங்க ஐயா, போதலைன்னா…”

”போதும் போதும்! ஒரு வாரத்துல வீடு காலியாகிடும். நம்பிக்கையோட போங்க!” என்றார் வாத்தியார்.

அடுத்தவர் பேசினார், ”ஐயா! கனகசபை நகர்ல என் வீடு இருக்கு. பக்கத்து வீட்டுல ஒரு போலீஸ்காரர் இருக்காரு. நான் வீட்டுல இல்லாதப்ப அவரு தேவையில்லாம என் ஒய்ஃபுக்குப் போனைப் போட்டு, அசிங்க அசிங்கமாப் பேசறார். ‘ஏன்யா இப்பிடிப் பண்றே?’ன்னு கேட்டா, ‘கஞ்சா வெச்சிருந்ததா கேஸ் போட்டு உள்ளே தள்ளி டுவேன்’கிறாருங்க. என் சம்சாரம் பயந்து நடுங்குது. எந்நேரமும் அழுதுகிட்டே இருக்கு துங்க, நீங்கதான் எங்க குலதெய்வமா நின்னு ஒரு வழியைக் காட்டணும்” – உடைந்து அழவே ஆரம்பித்துவிட்டார் அவர்.

”எலேய் மருது!” என்றார் வாத்தியார். மருது பணிவுடன் முன்னால் வந்தான்.

”இவரு சொல்ற போலீஸ்காரன் வீட்டுல இன்னிக்கு ராத்திரியே அரை கிலோ கஞ்சாவைக் கொண்டுபோய் வெச்சிடு. விடி யக் காலையில ரெய்டு நடத் தணும்னு நார்கோடிக்ஸ் டி.எஸ்.பி.ரங்கசாமியை போன்ல கூப் பிட்டு நான் தகவல் கொடுத்ததாச் சொல்லிடு. காலைல அந்த போலீஸ்காரன் போதைத் தடுப்புப் போலீஸ் கஸ்டடியில் இருக்கணும். ஜாமீன்ல எடுக்க முடியாம கொஞ்ச நாள் களி தின்னட்டும். அப்புறம் போலீஸ் வேலையில இருக்கானா இல்லியான்னு பார்த்துக்கிட்டு மேல் நடவடிக்கை எடுக்கலாம்!”

”ரொம்ப நன்றிங்க ஐயா!” – நா தழுதழுத்தபடியே எழுந்து, தான் கொண்டுவந்த பணக்கட்டுகள் அடங்கிய பையை வாத்தியாரிடம் கொடுத்துவிட்டு விடைபெற்றுக் கொண்டார் அவர்.

அடுத்து, இன்னும் இரண்டு பேருடைய குறைகளைக் கவனித்துப் ‘பரிகாரம்’ சொல்லிவிட்டு, முஸ்லிம் பெண்கள் பக்கம் திரும்பினார் வாத்தியார்.

இரண்டு பெண்களில் வயது குறைந்த பெண் சிவப்பாக இருந்தாள். புர்காவை மீறி வெளியே தெரிந்த விழிகளில் கண்ணீர் பெருகி வழிந்துகொண்டு இருந்தது. வலது கையில் வெண்மையாக ஏதோ மாவுக்கட்டு போட்டு கையை முன்புறம் மடக்கி வைத்திருந்தது, மெல்லிய கறுப்பு புர்கா உடையையும் மீறித் தெரிந்தது.

கக்கத்தில் லெதர் பை வைத்திருந்த இளைஞன் எழுந்து கும்பிட்டான். ”என் பேரு ரஹீம். வெறகு மரவாடில கூலி வேலை செய்றேன். இது என் தங்கச்சி ஷகர்ஜாத். கூட நிக்கிறது என் சம்சாரம். என் தங்கச்சியை லப்பைத் தெருவுலதான் ஒரு பையனுக்கு நிக்ஹா பண்ணிக் கொடுத்தோம். அவன் அப்பா- அம்மா பேச்சைக் கேட்டு என் தங்கச்சியை ‘நின்னா குத்தம், உக்காந்தா குத்தம்’னு அடிச்சு உதைச்சுக் கொடுமை பண்றான். பணம் கொண்டுவான்னு ரெண்டு தடவை இந்தப் பொண்ணை வெரட்டிப்புட்டான். நாங்களும் இருக்கற எல்லாத்தையும் வித்துக் கொடுத்தனுப்பிச்சோம். போன வாரம் ‘மோட்டார் சைகிள் வாங்கப் பணம் கொண்டு வா’ன்னு சொல்லியிருக்காங்க. இந்தப் பொண்ணு, ‘எங்க அண்ணன்கிட்டே பணம் ஏது?’ன்னு சொல்லி அழுதிருக்கு. அதுக்கு என் தங்கச்சியைக் கண்டபடி அடிச்சு, கையைப் பலமா முறுக்கினதுல கை ஒடைஞ்சுபோச்சுங்க. ‘வலி வலி’ன்னு ரெண்டு நாள் கதறியிருக்கு இந்தப் பொண்ணு. ‘என்னாடி சும்மா அழுது நடிக்கிறே?’ன்னு மேலே மேலே அடிச்சு ஒதைச்சிருக்கான். அப்புறம்தான் ஒடைஞ்சு தொங்கின கையைப் பாத்துட்டு எங்க வீட்டுக்கு அனுப்பிவெச்சாங்க. ‘வீட்டுல போய், நீயா கீழே விழுந்து ஒடைச்சுக்கிட்டதா சொல்லணும்’னு மெரட்டி அனுப்பியிருக்காங்க அந்தப் பாவிங்க!”

அந்த இளம் பெண் இப்போது சத்தமாய் கேவிக் கேவி அழுதாள். வாத்தியாருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. ”சரி தம்பி, இப்ப நான் என்ன செய்யணும்?” என்று கேட்டார் வாத்தியார்.

”நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோமுங்க ஐயா. இந்தப் பொண்ணோட புருஷன் வேலை பார்க்குற வெத்தலை மண்டி முதலாளி எம்.எல்.ஏ-வுக்கு வேண்டப்பட்ட ஆளு. அதனால போலீஸ்காரங்க எங்க புகார் மனுவை வாங்கக்கூட மாட்டேங்கறாங்க. என் தங்கச்சி கையை ஒடைச்ச மாதிரி இவ புருஷனை ரெண்டு தட்டு தட்டி அவன் கையையும் ஒடைச்சீங்கன்னாதான் எங்க மனசு ஆறும். இல்லேன்னா, ஒங்க செல் வாக்கைப் பயன்படுத்தி போலீஸ்காரங்க மூலம் அவங்க எல்லாத்தையும் ‘உள்ளே’ தள்ளவெச்சீங்கன்னாகூடச் சரிதான். அவங்க பண்ணின கொடுமைக்குச் சரியான தண்டனையை அவங்க அனுபவிக்கணும். இதுல மூவாயிரம் ரூவா இருக்கு. இன்னும் வேணும்னாக்கூட எப்பாடுபட்டாவது கொண்டுகிட்டு வர்றேன். என் மனசே ஆறலைய்யா!” என்று கண் கலங்கியபடி, குமுறலோடு சொன்னான்ரஹீம்.

”இது ரொம்பச் சின்ன விஷயம்தான் தம்பி. ஒன் தங்கச்சி… என்ன பேரு சொன்னே, ஆங் ஷகர்ஜாத்து. இதோட புருஷனையும் அவனோட வீட்டு ஆளுங்களையும் அஞ்சு நிமிஷத்துல இங்கே தூக்கியாரச் சொல்லி மரத்துல கட்டிப் போட்டுடலாம். பசங்களைவிட்டு செமத்தியாக் கவனிச்சுடலாம். ஆனா, இதுக்கு எனக்குப் பணம் வேணாம். வேற ஒண்ணு வேணும். அது என்ன தெரியுமா, ஒன் தங்கச்சியோட சம்மதம். இந்தாம்மா ஷகர்ஜாத்து, நீ என்னம்மா சொல்றே? உன் புருஷனைத் தூக்கியாந்து மரத்துல கட்டிப் போட்டு அடிச்சு, ஒன் கையை ஒடைச்ச மாதிரி அவன் கையையும் ஒடைச்சிடலாமா? ஒனக்கு என்னா விருப்பமோ, அதை மனசு விட்டுச் சொல்லு!”

அந்தப் பெண் தலையைக் குனிந்து அழுதது. ”மை ஜிந்தகி கர்ணா சாத்தீ ஹும்!” என்றது. அண்ணன்காரனும் அண்ணியும் கூட வந்த குடும்ப நண்பர்களும் திடுக்கிட்டார்கள். அந்தப் பெண்ணுடன் காரசாரமாக உருதுவில் வாதாடினார்கள்.

வாத்தியார் யோசனையுடன் சொன்னார், ”தம்பி, உன் தங்கச்சி பேசினது எனக்கும் புரியுது. புருஷனோட வாழப் போறேன்னுதானே சொல்லுது? சித்ரவதை செஞ்சு தன் கையை இரக்கமில்லாமல் உடைச்ச புருஷன்காரனோடதான் வாழணும்னு இத்தனை உறுதியா ஒரு பொண்ணு சொல்லுதுன்னா, அந்தப் பையனைப் பழிவாங்கறது சரியான வழியாப்படலே.

ஊரே பயப்படற வேலுமணி வாத்தியாரான நான் இந்த விஷயத்துல தலையிட்டாலோ, அல்லது போலீஸ்காரங்க தலையிட்டாலோ, அந்த நேரத்துக்கு பயத்துல ‘இனிமே ஒழுங்கா வாழ்றேன்’னு அவன் சொல்லுவானே தவிர, கொஞ்ச நாள் கழிச்சு, இந்தப் பொண்ணைக் கொலை பண்ணிக் கெணத்துல தள்ளிட்டு, ‘தவறிப்போய் கெணத்துல வுளுந்துடுச்சு’ன்னு சாதிப்பான். தன்னை வேலுமணி வாத்தியார்கிட்டே மாட்டி அவதிப்படவெச்சவ இவங்கிற வெறி அவன் மனசுக்குள்ளாற இருந்துகிட்டே இருக்கும்.

உண்மையா உன் தங்கச்சியை அவ விரும்பியபடி வாழவைக்கணும்னா பழிக்குப் பழி எண்ணத்தை நீ விட்டுடு. பெண்ணோட உடைஞ்ச கை கூடட்டும். கொஞ்ச நாள் விஷயத்தை ஆறப்போடு. அப்புறமா உங்க சமுதாயத்துல இருக்கிற பெரிய மனுஷங்களைக் கூட்டிகிட்டுப் போய் மாப்பிள்ளை வீட்டாரோட சமாதானம் பேசு. உன் தங்கச்சியைக் கூட்டிப்போய் புருஷனோட நேரடியாப் பேச வை. பேச்சு வார்த்தையால முடியாத விஷயம் எதுவுமில்லை! நீ இந்த விஷயத்துல கோபத்தோடு இறங்கவே கூடாது!

ஷகர்ஜாத் தன் புருஷனோட வாழணும்னு ஆசைப்படறதுக்குக் காரணமே, அவன் எப்பவுமே முரடனா இருக்காம சில நேரம் நல்லவனா அன்பு செலுத்தறவனாவும் இருக்கான் என்பதால்தான். என்னிக்காவது அவன் திருந்தி அன்பா இருப்பான்கிறது ஷகர்ஜாத்தின் நம்பிக்கை. சரிதானாம்மா நாஞ் சொல்றது?” என்று அந்தப் பெண்ணிடம் பரிவோடு கேட்டார் வாத்தியார்.

அந்த இளம் பெண்ணின் கண்கள் நன்றியோடு வாத்தியாரைப் பார்த்தன. அவள் அவரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினாள்.

”ஒரு விஷயம் தம்பி. உன் தங்கச்சி என்னிக்கு ‘இனிமே என் புருஷன் திருந்தவே மாட்டான். எனக்கு அவன் வேணாம்’னு சொல்லுதோ, அன்னிக்கு இங்கே வா. நீ என்ன விரும்பறியோ, அதைச் செஞ்சு முடிக்கிறேன். இப்போ ரஹீம் தம்பி, உன் பணத்தை எடுத்துகிட்டுப் போ. ஷகர்ஜாத்து சந்தோஷமா புருஷனோட வாழற நல்ல செய்தியோட வா. அதுவே எனக்குச் சன்மானம். போயிட்டு வா தம்பி.”

வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அவர்கள் முகத்தில் தெளிவு தெரிந்தது. ”நீங்க சொல்றபடி செய்யறேன் வாத்தியாரய்யா!” என்றான் ஷகர்ஜாத்தின் அண்ணன். அனைவரும் கைகூப்பி விடைபெற்றார்கள்.

அவர்கள் அங்கிருந்து சென்ற வெகு நேரம் வரை தொலை தூர வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்த வாத்தியாரின் கண்கள், பின்னால் திரும்பி அவருடைய வீட்டைப் பார்த்தன. ஆழ்ந்த பெருமூச்சு அவரிடம் பிறந்தது..

திருமணம் செய்துகொடுத்த தன் மகளைக் கொடுமைப்படுத்தினார் மாப்பிள்ளை என்று அவரிடம் தன் முரட்டுத்தனத்தைக் காட்ட, மாப்பிள்ளை விவாகரத்து முடிவுக்கு வந்து பிடிவாதமாக வேறு திருமணம் செய்துகொண்டதும், மகள் வாழாவெட்டியாகத் தற்போது தன் வீட்டினுள்ளே இருப்பதும் நினைவுக்கு வந்து அவர் மனதை கருவேல முள்ளாய் குத்தி வலியால் துடிக்கவைத்தது.

”கடவுளே! இந்த ஷகர்ஜாத்துப் பொண்ணுக்காவது தன் புருஷனோடு மகிழ்ச்சியா வாழ்ற பாக்கியத்தைக் கொடுப்பா!”

– 19th நவம்பர் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *