கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 14, 2017
பார்வையிட்டோர்: 7,948 
 

பாரில் கசகசவென்று கூட்டம் முண்டியடித்தது. பரணி பிளாஸ்டிக் தம்ளரில் இருந்ததை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். கூட வந்திருந்த முருகேசன், “யோவ் சாமி.. அதுல தண்ணி ஊத்தலய்யா..” என்று பதறும்முன் திரவம் தொண்டைக்குழி தாண்டிவிட்டது. தலையை உலுப்பிக் கொண்டு, எரியும் தொண்டையை காறியவாறு நாக்கில் கசந்ததை காறி கீழே துப்பினான். “இந்தாய்யா.. கடலைய தின்னு..” என்று முருகேசன் நீட்டியதை வாங்கியபடி, வாய்க்குள் மிச்ச தண்ணீரைப் பீச்சி கொப்புளித்து விழுங்கிவிட்டு கையிலிருந்ததில் ஒரு கடலையை வாய்க்குள் போட்டு மென்றான். கடுக் முடுக்கென்று கடிபடும் உப்புக்கடலை. மொத்தம் நான்கு கடலைகள்தான் கொடுத்திருந்தான். உண்மையில் எண்ணி எண்ணிதான் இங்கே கடலை தின்ன வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு கடலைப் பாக்கெட்டிலும் எண்ணி இருபத்து இரண்டிலிருந்து இருபத்தைந்து வரை கடலை போட்டிருக்கிறார்கள். போன மாதம் வரை ஐந்து ரூபாய் ஒரு பாககெட் என்று சொன்னவர்கள் இப்போது ஆறு ரூபாயாக்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் தம்ளர் ஆறு ரூபாய், தண்ணீர் பாக்கெட் ஆறு ரூபாய். முருகேசன் ஆரம்பத்திலேயே ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டான், “சரக்கு மட்டும்தான் என் செலவு. சைடு டிஷ்ஷை நீதான் வாங்கிக்கணும் சாமி.” என்று.இருந்த காசை எண்ணிப் பார்த்தால் பஸ்ஸுக்கு ஒதுக்கி வைத்தது போக மிச்சம் இருபது ரூபாய்தான் இருந்தது. அதில் பதினெட்டை செலவழித்துவிட்டால் சிகரெட் யார் தருவார்கள்..? அதனால் இவன் வெறும் வாட்டர் பாக்கெட் மட்டும் வாங்கிக் கொண்டுவிட்டான். முருகேசன்,”யோவ் சாமி.. கிளாசு இல்லாம எப்புடி குடிப்ப..?” என்று கேட்டதற்கு, “நீ முதல்ல குடி. அதை கழுவி அதுல நான் குடிச்சிக்கிறேன்.” என்று சொல்லி விட்டான். முருகேசன் தலையில் அடித்துக் கொண்டு இரண்டு ரவுண்டில் அவனது குவாட்டரை முடித்துவிட்டு இவனிடம் தம்ளரை நீட்டினான். அவனது வாட்டர் பாக்கெட்டில் மிச்சமிருந்த தண்ணீரிலேயே கிளாசில் தண்ணீர் ஊற்றி ரெண்டு சுற்று சுற்றி கீழே ஊற்றிவிட்டு இவன் ஊற்றிக் கொண்டான். பேச்சு சுவாரசியத்தில் மூன்றாவது ரவுண்டு ஊற்றி வைத்ததிருந்ததை தண்ணீர் ஊற்ற மறந்து போய் அப்படியே குடித்துவிட்டான். கடலையை மென்றபடி வெளியே போகலாம் என சைகை செய்து கொண்டே வாயைத் துடைத்தபடி நகர்ந்தான். இருந்த நான்கு கடலைகளை ஒவ்வொன்றாக வாயில் போட்டபடி முருகேசன் வெளியே வந்தான்.இவன் தன் மொபைலை எடுத்துப் பார்த்தான். மூன்று மிஸ்டு கால்கள். பக்கத்து வீட்டு மலரக்காவின் நம்பர். அம்மாதான் கொடுத்திருப்பாள். எரிச்சலாக வந்தது. ஏற்கெனவே மொபைலில் காசு கம்மியாகத்தான் இருந்தது. ஆத்திர அவசரத்துக்கு பேசுவதற்காகவே அதை அப்படியே வைத்திருந்தான். கடன் கேட்க வேண்டும் என்றால் கூட மிஸ்டு கால் கொடுத்துதான் கேட்டபடி இருந்தான். இவனுக்கே மிஸ்டு கால் தரும் ஒரே ஆள் இவனுடைய அம்மாதான். வீட்டுக்கு திரும்பி வரும் வரை பொறுமை இருக்காது. எப்போது பார்த்தாலும் நொய் நொய்யென்று எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பாள். இவன் ஒரு கணம் பேசாமல் விட்டுவிடலாமா என யோசித்தான். அப்புறம்தான் நினைவுக்கு வந்தது.வாடகை..

ஹவுஸ் ஓனரம்மா ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி விட்டாள். ஒரு மாத வாடகையை பாக்கி வைத்தாலே வீட்டை காலிபண்ணச் சொல்பவள். இரண்டாவது மாத தவணை சொன்னதில் கடுப்பாகிவிட்டாள். வாடகை கொடு அல்லது வெளியேறு என்று கறாராக சொல்லிவிட்டாள். நாளை மாலை வரை டயம் கொடுத்திருந்தாள். இப்பவே வந்து தகராறு செய்கிறாளா என்ன.. இல்லையென்றால் அம்மா வாடகைக்கு எதாவது ஏற்பாடு செய்துவிட்டாளா..? இவன் எதாவது ரெடி பண்ணியிருக்கிறானா என்று கேட்கக் கூட போன் செய்திருக்கலாம்.. எரிச்சலாக வந்தது. ஒரே ஒரு அறைதான் வீடு. தண்ணீர் கூட கிணற்றிலிருந்து சேந்திக் கொள்ள வேண்டும். அதுவும் இப்போது மண் கலந்து வர ஆரம்பித்து விட்டது. குடிதண்ணீருக்கு குடத்துக்கு மூன்று ரூபாய் என வெளியே ஓட வேண்டும். இந்த பிசினாறி வீட்டுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாடகை.. கரண்டு பில், முறை வாசல் என்று தனியாக இருநூற்றைம்பதை பிடுங்கிக் கொள்வாள். இந்த லட்சணத்தில் கறார் வேறு..

முருகேசனிடம் திரும்பி, “மாப்ள.. உன் மொபைல கொஞ்சம் குடுவேன். வீட்ல இருந்து அம்மா கூப்புட்டுருக்கு. உள்ள பார் சத்தத்துல ஒண்ணும் கேக்கல. நைட்டு நேரம். எதுக்காக கூப்புட்டுச்சுன்னு தெரியல. என் போன்ல காசு இல்ல.. குடுய்யா ப்ளீஸ்..” என்றான். இவன் ப்ளீஸ் என்பது ரொம்ப படித்தவர்கள் சொல்வது மாதிரியே இருக்கும். ப்ளீஸ் தவிர குறைந்தது ஐம்பது ஆங்கில வார்த்தைகளாவது அவனுக்குத் தெரியும். யாராவது முக்கியமானவர்களிடம் பேசும்போது அந்த வார்த்தைகளை அங்கங்கே போட்டுதான் பேசுவான். கேட்பவர்கள் நிச்சயம் இவன் ரொம்ப படித்தவன் என்று நினைத்து விடுவார்கள்.

முருகேசன் இவனை முறைத்து, “யோவ் சாமி.. பாத்தியா.. கோட்டர் மட்டுந்தான் வாங்கிக் குடுப்பேன்னு சொன்னேன். இப்ப செலவா இழுத்து விடுறியே.. இது நல்லால்ல.. என் மொபைல்ல மட்டும் காசு பொங்கியா வழியுது..?” என்றான்.

பரணி சட்டென்று மிக அணுக்கமானதொரு தொனிக்கு தன் குரலை மாற்றிக் கொண்டான். “ஏய்யா மாப்ள.. இப்ப ஒனக்கு நான் என்னத்த செலவ இழுத்து விட்டுட்டேன்.. முப்பது காசுக்கு கால் பண்ணுறதெல்லாம் ஒரு செலவாய்யா..? இந்தாய்யா.. பஸ்ஸஸுக்கு வச்சிருந்த காசு. வச்சிக்க. இப்ப உன் போனை குடு..” என்று தன் பாக்கெட்டிலிருந்து காசை எடுப்பது போல பாவனை செய்தான்.

முருகேசன், பாக்கெட்டிலிருந்த அவனது கையைத் தட்டிவிட்டு, “இப்புடியே இமுசைய குடு.. இந்தா. பண்ணிக்க. ஆனா ரெண்டு கால்தான் போகணும். நா என்ன வச்சிக்கிட்டா இல்லன்றேன். இருக்குற பேலன்சே ரெண்டு ரூவாதேன். அதயும் நீ பேசி காலி பண்ணிட்டா காலைல வேலைக்கு புறப்படுறப்ப மேஸ்திரிக்கு கால் பண்ண காசு வேணாமா..? என்னமோ ரெம்ப கோவப்படுற. எளுவத்திரெண்டு ரூவா கோட்ரு வாங்கிக் குடுத்தவனுக்கு முப்பது காசு பெருசாய்யா..?” என்றபடி போனை நீட்டினான்.

பரணி ரொம்ப மானஸ்தனைப் போல என்னமோ முனகியபடி தன் மொபைலில் இருந்த நம்பரைப் பார்த்து டயல் செய்தான். எதிர் முனையில் முன்பேவா என் அன்பே வா பாட்டு ஓடியது. மொபைலை அம்மாவே எடுத்தாள் “ஹலோ..”

பரணிக்கு எரிச்சலாக வந்தது. எல்லா கோபத்தையும் அவள் மேல் திருப்பி, “இந்த நேரத்துல உனக்கு என்ன உன் புருசனா போன் பண்ணப் போறான். நாந்தான் போன் பண்றேன்னு தெரியுதுல்ல. அப்புறம் என்ன ஹலோ.. பெரிய வெள்ளைக்காரப் பரம்பரை நீயி..” என்று பொரிந்ததும் அம்மா பதட்டமாக, “டேய் டேய். கோச்சுக்காதடா. இந்த போன்ல பேசறது எல்லாம் எப்புடின்னு எனக்கு என்ன தெரியறது.” என்றாள்.

முருகேசன் சீக்கிரம் பேசு என சைகையில் சொன்னதைப் பார்த்ததும் இவன், “இப்ப என்னத்துக்கு இப்புடி மிஸ்டு கால் மிஸ்டு காலா குடுத்து என்ன உசுரை வாங்குற..? என்ன எழவு விஷயம்? சீக்கிரம் சொல்லித் தொலை.. இது இன்னொருத்தரோட ஃபோன்.. அவா காசை நாம வேஸ்ட் பண்ணக்கூடாது..” என்று முருகேசனைப் பார்த்தபடி சொன்னான். முருகேசன் முகத்தில் ஒரு திருப்தி வந்தது மாதிரி தெரிந்தது.

அம்மா, ”ஶ்ரீவத்சனை பாக்கச் சொன்னேல்லியோ.. அவனைப் பாக்க அவாத்துக்கு சாயந்தரமா போனேன். வேலை எதுவும் இல்லன்னுட்டான்..” என்று சொன்னதும் இவனுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

“வேலை இல்லன்றத சொல்றதுக்காக இந்த மயிரு போனை பண்ணுனியா நீ..? அதை வீட்டுக்கு வந்தப்புறம் சொல்ல முடியாதா உனக்கு..?” என்று கத்தியதும் அம்மா பயந்து போனவளாக, “சித்த கோபப்படாம இருடா. ஶ்ரீவத்சன் பொண்டாட்டிதான் சொன்னா. அவாளோட பெரியப்பா பையன் கிரி இருக்கான்ல்லியா..” என்றாள்.

“அவன் எங்க இங்க இருக்கான்.. அமெரிக்காலல்ல இருக்கான்..”

“அதேதான். அமெரிக்கால இருந்து வந்திருக்கானாம்டா. அவனைப் பாக்கறதுக்காக நாம போனா அங்கயே உங்க மௌலி மாமாவைப் பாத்துடலாம் இல்லையா..? அவர் ஒரு தரம் சொன்னாரே.. உனக்கு கேட்டரிங் சர்வீஸ்ல வேலை வாங்கித் தறேன்னு. அப்புறம் அவர் நம்ம கண்லயே படல. இந்த சாக்குல போயி பாத்துட்டு வந்துடலாம்டா. இங்க நங்க நல்லூர்லதானே வீடு..”

“ஆமாம். பெரிய மௌலி மாமா. வேலை வாங்கித் தறேன்னு வாய் கிழிய சொன்னதுதான் பேச்சு. அப்புறம் போனையும் காணம். ஒண்ணையும் காணம். நீ வேணா போயிட்டு வா. நான் வரல.”

“அப்புடி சொல்லாதடா.. வேலை வாங்கித் தறேன்னு சொன்னார்ன்னா அப்புறம் நாமதானே போய் பாக்கணும். சரி. பாக்கலை. போனாப் போறது. இப்ப போய் பாத்துட்டு வந்துடலாம்டா. நீயும் கூட வந்தாத்தான் அவா மனசு இரங்கும்..”

“ஹய்யோ.. உன்னோட பெரிய தொந்தரவாப் போச்சும்மா.. அந்தாளுக்கு நான் ஒரு தரம் போன் பண்ணுனேன்னு நினைக்கிறேன்.. ரொம்ப மோசமா பேசினான்..”

“அது மட்டுமில்லடா. இந்த மாச வாடகைக்கு காசு இல்லையோன்னோ..”

“கடுப்பைக் கிளப்பக் கூடாது. அதான் உன் தோட்டை வச்சு குடுத்துடலாம்ன்னு சொன்னல்ல..?”

“சேட்டு கடைல போய் கேட்டேண்டா. ரெண்டாயிரத்துக்கு மேல சல்லி காசு தரமுடியாதுன்னு சொல்லிட்டான்.”

“என்னது..? ரெண்டாயிரம்தானா..? அவன்கிட்ட நான் வந்து பேசிக்கிறேன்..”

“அவன் மட்டும் இல்லடா. நம்ம கடைத்தெரு தாண்டி அமராவதி தெருவுல இருக்குற சேட்டு கடைலயும் கேட்டேன். அவன் ஆயிரத்து எண்ணூறுதான் தருவேன்னு சொல்லிட்டான். வாடகை தராட்டி தெருவுலதான் நிக்கணும்டா..” அவள் குரல் கலங்கினாற் போல தெரிந்தது. இவனுக்குள் எரிச்சல் மண்டிக் கொண்டு வந்தது.

“இதச் சொல்லி ஒப்பாரி வைக்கப் போறியா..?”

“இல்லடாப்பா.. நம்ம சேட்டு கடைல ரெண்டாயிரம் வாங்கிட்டா மேல ஐநூறுதானே வேணும். போறதுதான் போறோம். அப்புடியே கிரி அம்மாகிட்ட கைமாத்தா ஐநூறு ரூவா வாங்கிண்டு வந்துடலாம்டா. இந்த மெட்றாஸ்ல நம்மளுக்கு கடன் தர்றதுக்குன்னு ஒருத்தரும் இல்லையே.. அவளையே கேட்டுடலாம்ன்னு பாத்தேன்..”

“ப்ச்.. கேக்கறதுதான் கேக்குற.. ஆயிரமா கேளு. காசு வந்தப்புறம் குடுத்துடலாம்.”

“சரிடா.. நீ கொஞ்சம் சீக்கிரமா ஆத்துக்கு வந்துடு. நாளைக்கு அவாள்லாம் மத்யானம் ட்ரெயினுக்கு கோயமுத்தூர் போறாளாம். அதுக்கு மின்ன அவளா பாத்துட்டு திரும்பிடலாம். நானும் வேலை பாக்கற ஆத்துல எல்லாம் பத்து மணிக்கு மேலதான் வருவேன்னு சொல்லிட்டேன். காத்தால அஞ்சு அஞ்சரைக்கே கிளம்பினாத்தான் ஏழு மணிக்கு அவாளை எல்லாம் பாக்க முடியும்.”

“சரி சரி. வந்து தொலையறேன். நீ போனை வையி..” போனை கட் செய்துவிட்டு முருகேசன் முகத்தைப் பார்த்தான். கொஞ்சம் கடுகடுவென்று இருந்தாற் போல இருந்தது. சட்டென ஒரு ஐடியா தோன்றி, “மாப்ள.. இங்க வாய்யா.. ஒரு நிமிசம் வாய்யா..:” என்று அழைத்தான்.

முருகேசன் குழப்பமாகப் பார்த்தபடி, “என்னய்யா மேட்டரு..? சும்மா அங்க இருந்தே சொல்லு..” என்றான்.

இவன் பெரிய புன்னகையுடன் சென்று அவனைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்தான். “நீ கைராசிக்காரண்டா மாப்ள. அம்மா ஒரு வேலைக்கு சொல்லி இருக்குது. அவங்க வரச்சொல்லி இருக்காங்க.. அதுக்காகதான் போன் பண்ணி இருக்கு. இதுவே என் போன்ல பேலன்ஸ் இருந்து பண்ணியிருந்தா நல்ல செய்தி வந்திருக்கும்ன்ற..? ம்ஹும். உன் போன் ராசியான போன் மாப்ள.. அதான்..”

முருகேசன் கொஞ்சம் சமாதானமானவனாக, “எங்குட்டோ உருப்புட்டா சரிதான். சரி. நான் வர்றேன் சாமி..” என்று நடையைக் கட்டிவிட்டான். பரணி நினைவு வந்தவனாக கடைசி பஸ்ஸைப் பிடிக்க ஓட்டமும் நடையுமாக பஸ்ஸ்டாப்பை தேடி ஓடினான். வழியில் ஒரு கடையில் மூன்று சிகரெட்டும் வாங்கிக் கொண்டான்.

@@

தேனியிலிருந்து வந்து அது ஆயிற்று பத்துப் பன்னிரெண்டு வருடம். அக்கா தற்கொலை செய்து கொண்டபின் அம்மா கொஞ்சநாள் அழுது கொண்டு இருந்தாள். வீட்டில் வேலைக்கு போய்க்கொண்டிருந்தவள் அக்கா மட்டும்தான். கொஞ்சம் சாப்பாட்டுக்கு கஷ்டமாகப் போய்விட்டது.. அப்போதுதான் சென்னையில் ஓர் இடத்தில் சமைக்கிற வேலை இருக்கிறதென சொந்தக்காரப் பெண்மணி கேட்டதும் பேசாமல் கிளம்பிவிட்டாள். இவன் கடுமையாக கோபப்பட்டுப் பார்த்தான். அவளுக்கு கொள்ளி போடக்கூட வரமாட்டேன் என்று மிரட்டியும் பார்த்தான். அவன் என்ன பேசினாலும் பயப்படுபவள் சென்னைக்கு செல்வது என்ற முடிவில் மட்டும் உறுதியாக இருந்துவிட்டாள். போகட்டும். இவனை விட்டு ஒரு மாதம் கூட அவளால் இருக்க முடியாது என்றுதான் சென்னைக்கு கோபமாக அவளை மட்டும் பஸ் ஏற்றி அனுப்பினான்.

உண்மையில் அவனால்தான் ஒரு வாரம் கூட சமாளிக்க முடியவில்லை. கோபமும், உறுமலுமாக மறுபடி அம்மாவோடே போய் சேர்ந்து கொண்டான். அவளுக்கு அவன் வந்ததில் சந்தோஷம் என தெரிந்ததும் இன்னும் அதிகமாக கோபப்பட்டான்.

சென்னை சரியாக பழகுவதற்கு அவனுக்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் எடுத்தது. பின்னர் சட்டென அவனுக்கு சென்னையை தேனியாக மாற்றும் வித்தை புரிந்து போயிற்று. எல்லா இடத்திலும் தேனிக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் தேனிக்காரன் என்று தெரிந்துவிட்டால் அப்படி இப்படி பேசி, நீ அவனுக்கு சொந்தமா, இவனைத் தெரியுமா என்று பேசி சட்டென இருவருக்கும் பொதுவான ஒரு நபரைக் கண்டுபிடித்துவிடுவான். அந்த நபருக்கும் இவனுக்கும் பிறந்ததிலிருந்தே பிரிக்க முடியாத நட்பு இருப்பது போல உண்மையாகவும் பொய்யாகவும் நிறைய பேசி நம்ப வைத்துவிடுவான். இவன் நம்மாளு என நினைக்கவைத்துவிடுவான். பிறகு பேச்சு குடியை நோக்கி திரும்புவதும் மாட்டியவன் இவனுக்கு குவாட்டர் வாங்கித் தருவதும் தவிர்க்க முடியாத பின்விளைவுகளாக நடந்துவிடும்.

அவனும் வேலைக்கு போகாமலில்லை. எந்த வேலையாக இருந்தாலும், யார் கூப்பிட்டாலும், எப்போது கூப்பிட்டாலும் இவன் சிரித்த முகத்தோடு போய் விடுவான். அதிலும் அய்யர் வீட்டு திருமணங்களில் பரிமாறுவதற்கு இவனை விரும்பிக் கூப்பிடுவார்கள். கல்யாண வீட்டில் முக்கியஸ்தர்கள் யார் என தெரிந்து கொண்டு அவர்களை ஐஸ் வைத்து இவன் மீது பாசம் கொள்ள வைத்துவிடுவான். கணக்கு முடிக்கும்போது இவனுக்கு என்று அவர்கள் ஸ்பெஷலாக எதாவது தருவது கூட நடந்ததுண்டு. என்ன ஒன்று இந்த பாழாய்ப் போன குடி எல்லா இடத்திலும் எதாவது பிரச்சினையை கொண்டு வந்துவிடும்.

மூன்றாவது நாள் கட்டுச்சாதம் தருவதுதானே பாக்கி இருக்கிறது என்று நினைத்து காலை டிஃபன் முடித்ததும் ஒரு குவாட்டரை வாயில் கவிழ்த்துக் கொண்டு கட்டு சாதம் பேக் பண்ணும்போதுதான் வினையே என்று எவனாவது மாப்பிள்ளை வீட்டுக் காரனிடம் மாட்டுவான். குடிப்பது என்னமோ கொலைக் குற்றம் மாதிரி அந்த ஆள் சீன் போட்டு இவனை துரத்தி விடுவதில் முடியும். என்னமோ உலகத்தில் எவனுமே குடிக்காத யோக்கியன் மாதிரியும் இவன் மட்டும்தான் குடிகாரன் மாதிரியும்.. அவன்களை ஒயின்ஷாப் பாருக்கு போய் பார்க்கச் சொல்ல வேண்டும் : எப்படிப்பட்ட ஒழுக்க சீல அய்யர்கள் எல்லாம் குடிக்கிறார்கள் என்று.. குடித்தால் இவன் என்ன மற்றவனை மாதிரி அளப்பிறையா செய்கிறான். குடித்துவிட்டால் அவ்வளவு பணிவாக இருப்பான். அவ்வளவு மென்மையாகப் பேசுவான். இப்படி ஒருவனை இந்த உலகம் குடிகாரன் என்ற பெயரை வைத்து அவமானப் படுத்துகிறதே.. இவனுக்கு யாராவது பக்கத்தில் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி கொஞ்சம் அழுகலாம் போல இருந்தது.

அப்புறம் ஒரு நாள் கேட்டரிங் மேனேஜருடன் குடித்ததில் மேனேஜர் எக்குத்தப்பாக குடித்துவிட்டான். அதற்கும் இவன்தான் குற்றவாளி. ஒரு தரம் கல்யாண வீட்டில் மணப்பெண்ணின் அப்பா இவனைப் பார்த்ததும் முதலாளியிடம் சொல்லி வெளியேற்ற வைத்துவிட்டார் – அவரும் இவனும் எப்போதும் ஒரே பாரில் குடிப்பவர்கள். அவரது ரகசியம் வெளிவந்துவிடக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு..

எங்கு சுற்றினாலும் இந்த உலகம் குடியில் வந்துதான் முடிகிறது. எங்கு சென்றாலும் இவன்தான் குடிகாரன் என்று வெறுக்கப் படுகிறான்.

அவனது நிறுத்தம் வந்து கண்டக்டர் சத்தம் போட்டபோதுதான் அவனுக்கு பிரக்ஞை வந்தது. தன்னை அறியாமல் அழுது கொண்டிருப்பான் போல.. கண்ணைத் துடைத்துக் கொண்டு இறங்கினான்.

@

அம்மா இவனுக்காக காத்திருந்தாள். நிச்சயம் சாப்பிட சோறு இருக்கும். அம்மா அந்த விஷயத்தில் கில்லாடி. எப்படி அரிசி வாங்குகிறாள். யாரிடம் கேட்கிறாள் என்று எதுவுமே தெரியாது. இவன் வீடு முழுக்க தேடி ஒரு ரூபாய் கூட தேறாமல் வெறுத்துப் போன சமயத்திலும் எங்கிருந்தாவது அரிசியும் மண்ணெண்ணையும் வாங்கி சமைத்து வைத்துவிடுவாள். இவன் எப்போது பசி என்று சொன்னாலும் உடனே பதட்டமாகிவிடுவாள்.

தட்டை எடுத்துப் போட்டு சாதம் வைத்தாள். குழம்பு வாசனை ஆளைத் தூக்கியது.

‘என்ன குழம்பு..?’ என்று கேட்டபடி குழம்புத் தட்டின் மூடியைத் திறந்து பார்த்தான்.

‘தெரியலடா.. மலர்தான் வீட்டுல குழம்பு வச்சிருக்கேன்னு கொண்டுவந்து உனக்காக குடுத்தா. நான் மோர்சாதம் சாப்புட்டுட்டேன்..”

“சூப்பரு..” என்றபடி ஆசையோடு சாதத்தில் குழம்பைக் கவிழ்த்துக் கொண்டான். அம்மா எச்சில், பத்து என்னறெல்லாம் பேசுவதை நிறுத்தி வருஷக்கணக்கில் ஆகிவிட்டது. ஊரே அம்மாவின் சமையலைப் பாராட்டினாலும் இவனுக்கு மற்றவர்கள் வீட்டில், அதுவும் அம்மா சூத்ரா என்று சொல்பவர்களின் வீட்டில் சமைக்கும் சமையல்தான் ரொம்ப பிடிக்கிறது. அதிலும் மலரக்காவின் கைமணத்தில் குழம்பு வாசனை குடலையே கூத்தாட வைக்கும்.. இவனைப் பார்த்தாலே குடிக்காதே என்று பேசுகிறாள் என்று மலரக்காவிடம் பேசுவதையே இவன் நிறுத்திவிட்டான். அம்மா மேல் அவளுக்கு தனி பாசம். எதுவாக இருந்தாலும் அம்மா அவளிடம்தான் பேசுவாள் போல. இவனுக்குத் தெரிந்து அம்மாவுக்கு இருந்த ஒரே சிநேகிதியும் அவள்தான்.

இவன் திருப்தியாக சாப்பிடுவதைப் பார்த்தபடி அம்மா காலையில் ஐந்தரைக்கு புறப்பட்டாக வேண்டும் என்பதையும் மௌலி மாமாவிடம் பணிவுடன் பேச வேண்டும் என்பதையும் இவன் கோபப்பட்டுவிடக்கூடாதே என்று பயந்து பயந்து சொல்லி முடித்துவிட்டாள்.

@@

காலை நேரம்.. அதிலும் ஞாயிற்றுக் கிழமையாதலால் பஸ்ஸில் கூட்டமே இல்லை. ஜென்ட்ஸ் சீட்டிலேயே அம்மாவை ஜன்னலோரம் உட்காரச் சொல்லி இவன் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மனது கொதித்துக் கொண்டிருந்தது. மௌலி மாமாவாம் பெரிய மௌலி மாமா.. ரெண்டு வீடு வைத்திருக்கிறான். மூன்று கார் வைத்திருக்கிறான். ஒரு ஃபேக்டரி வேறு வைத்திருக்கிறான். இவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்ய மாட்டானாம். குடிகாரனாம். பொய் சொல்லுபவனாம். மனுஷாளை மதிக்கத் தெரியாதாம்.. வேலை வாங்கித் தந்தால் அதன் அருமை தெரியாதவனாம். இவனுக்கு கொதிப்பு அடங்கவே இல்லை.. போனில் மௌலி மாமாவை மாமு என்றெல்லாம் கேவலமாக பேசினானாம்.. மாமு என்ற வார்த்தை அவ்வளவு அசிங்கமா என்ன..? உண்மையில் மௌலி மாமாவிடம் போனில் பேசிய அன்று இவன் கொஞ்சம் குடித்திருந்தான் போல. என்ன பேசினான் என்று நினைவில் இல்லை.. ஆனால் நிச்சயமாக மோசமாக பேசியிருக்க மாட்டான். ஒரு சின்ன போன் பேச்சுக்கு இவ்வவளவா அவனமானப்படுத்துவார்கள்.. இந்த மௌலி மாமாவை என்ன மயித்துக்கு மதிக்க வேண்டும்.. கையில் நாலு காசு இருந்தால் இவனெல்லாம் பெரிய மனுஷனா. எதோ ஏழை.. கஷ்டப்படுகிறார்கள் என்று ஒரு உதவி செய்யத் துப்பில்லை.. இதில் நாலு முழத்துக்கு நாகை நீட்டி பேச்சு வேறு.. போதாதென்று வீட்டில் இருக்கும் யாரும் அம்மாவுக்கு கடனாகக் கூட காசு கொடுக்கக்கூடாது என்று இவர்கள் முன்னாலேயே சொல்லிவிட்டான்.. அம்மா கடன் வாங்கி மகனுக்கு குடிக்கக் கொடுத்துவிடுவாளாம்.. சொல்வது எல்லாம் பொய்யாம்.. எவ்வளவு திமிர். ஏழை என்றால் இவனுகளுக்கு அவ்வளவு இளக்காரம்.. இவனுக்கு வந்த கோபத்தில் அங்கேயே அந்த மௌலி மாமாவை ஒரு அப்பு அப்பி இருப்பான். அவர்கள் வீட்டில் செக்யூரிட்டி வைத்திருந்ததால் இவனுக்கு அந்த தைரியம் வரவில்லை..

இந்த முட்டாள் அம்மாவுக்காவது அவனிடம் பதிலுக்கு பதில் பேச தைரியம் இருந்ததா..? ஒரு மண்ணும் கிடையாது. வெறுமனே அழுதுகொண்டுதான் நின்று கொண்டு இருந்தாள். பதிலுக்கு பதில் பேசத் தெரிந்திருந்தால் இவள் எதுக்கு சமையல் வேலைக்கும் துவைக்கிற வேலைக்கும் போகப் போகிறாள்.. வீடு வாசலை எல்லாம் விற்றுவிற்று செலவழித்த புருசனையே எதிர்ததுக் கேட்க துப்பில்லாதவள்… எதுக்கெடுத்தாலும் நொய் நொய்யென்று ஒரு அழுகை. ச்சீயென்று வந்தது.

வாடகையும் தர முடியாது. என்னதான் செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இவனுக்குள் உள்ளே புகைபோல ஆத்திரம் மண்டிக் கொண்டு வந்தது.

“இவனுகளை நம்பி உதவி கேக்கலாம்னு நீ சொன்னப்பவே நான் வேணாம்னு சொல்லி இருக்கணும்.. இப்ப வந்து எவ்வளவு அவமானம் பாரு.. வந்த கோவத்துக்கு அங்கயே அவனை நாலு மாத்து மாதிரிஇருப்பேன்.. உன் மூஞ்சிக்காகதான் பேசாம விட்டேன்.. என்னமோ பெரிய மயிரு மாதிரி பேசுறான்..”

அம்மா கலங்கிய கண்ணோடு எதோ பேசவிருப்பவள் போல சட்டென்று இவன் பக்கம் திரும்பினாள். அப்புறம் பேசாமல் ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள்.

“கிரி பொண்டாட்டியப் பாத்தல்ல..? சரியான கருவாச்சி.. இப்பல்லாம் பிராமணாள்ள பொண்ணு கிடைக்கிறதே குதிரைக் கொம்பா இருக்கு. உன் பொண்ணு இருந்திருந்தா இந்த மாதிரி ஒரு நல்ல இடத்துல கட்டிக் குடுத்திருக்கலாம். அவ இருந்த அழகுக்கு வரதட்சணை நீங்கதாண்டா தரணும்ன்னு டிமாண்ட் பண்ணியே வாங்கியிருக்கலாம். அவ உன்னை விட முட்டாள். சின்ன விஷயத்துக்காகப் போயி தூக்குல தொங்கிட்டா.. மொத்த குடும்பமும் இப்புடி முட்டாள் குடும்பமா இருந்தா எப்புடி விளங்க..?”

அம்மா கோபமாக இவன் பக்கம் திரும்பினாற் போல இருந்தது, “போறும்டா.. அவளைப் பத்தி பேசாத..”

“இந்த கோவம் மசுருக்கு எல்லாம் குறைச்சலே இல்ல.. எல்லாம் என் தலையெழுத்து இப்புடி உங்ககிட்ட எல்லாம் சிக்கி சீரழிய வேண்டி இருக்கு..”

முகம் இறுகிப் போய் அம்மா மௌனமாக ஜன்னலுக்கு வெளியிலேயே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். இவன் தனக்குள் சில கெட்டவார்த்தைகளை முனகிக் கொண்டான். எல்லாம் வேஸ்ட். இப்படி காலங்கார்த்தாலையில் நங்க நல்லூருக்கு காவடி தூக்காமல் இருந்திருந்தால் ஜமீன் பல்லாவரம் போயிருக்கலாம். தேனியிலிருந்து படிப்பின் நிமித்தம் நான்கைந்து பையன்கள் அங்கே வந்து தங்கியிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து ஒரு இருநூறாவது தேத்தியிருக்கலாம். இப்போது அவர்களும் காலேஜுக்குப் போயிருப்பார்கள். இந்த பயணத்தின் பஸ்சார்ஜும் வேஸ்ட்.. செல்லில் மணி பார்த்தான் ஒன்பதே முக்காலைத் தாண்டிக் கொண்டு இருந்தது. கடை திறக்க பத்து பதினைந்து நிமிடம்தான் இருந்தது.

பல்லைக் கடித்தபடி, “இனி ஒருக்கா சொந்தக்காரங்யளைப் பாப்போம்ன்னு நீ கூப்புடு.. அப்ப வச்சுக்குறேன்..” என்றான்.

அம்மா சட்டென இவன் பக்கம் திரும்பி, “இனி ஒருத்தராத்துக்கும் போகவே முடியாது. போறுமா..?” என்று கோபமாக சொன்னாள்.

அவனிடமே அவள் கோபப்படுவதைப் பார்த்து இவனுக்கு இன்னும் கோபம் அதிகமானது. “ஏன் எல்லாரும் கூண்டோட செத்துத் தொலையப் போறாங்யளா..?”

“நாந்தான் செத்துப் போகணும்..”

“க்கும்.. இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல.. இப்புடித்தான் சொல்லுவ.. அடுத்த வாரமே இன்னொருத்தன் வீட்டுக்கு இழுத்தடிப்ப..”

அம்மா கொஞ்சம் குரல் உயர்த்தி, “முடியாதுடா.. எந்த காலத்துலயும் முடியாது. கிரி பொண்டாட்டி கிச்சன்ல வச்சிருந்த பணத்தை எடுத்துண்டு வந்துட்டேன்.. இனி எந்த சொந்தக்காராளாத்துக்கும் போகவே முடியாது. போறுமா..?” என்றாள்.

ஒரு கணம் இவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. மெல்லதான் அவள் சொன்னது விளங்கியது. திகைத்துப் போய் அவள் முகத்தைப் பார்த்தான். அவள் துடைக்கத் துடைக்க வழியும் கண்ணீரை கட்டுப் படுத்த போராடிக் கொண்டிருந்தாள்.

“திருடினியா..?”

“வாடகை குடுக்காட்டி நடுத்தெருவுல நிக்கணுமே.. வேற வழி..?”

இவன் முகத்தில் ஒரு புன்னகை, மெல்ல கூடும் விளக்கு வெளிச்சத்தைப் போல மலர்ந்தது. வாய்விட்டு சிரிக்க வேண்டும்போல இருந்தது. அவன் நினைத்தது போலவே அம்மா பெரிய கில்லாடிதான். இவனுக்கு அவளை கட்டிக் கொள்ள வேண்டும்போல இருந்தது. பாசம் பெருகிய குரலில், “எவ்வளவு ரூவா..?” என்றான்.

அம்மா அப்படியே கூசிப் போய் இவன் மேல் படாமல் ஒதுங்கியது மாதிரி இருந்தது.

“ப்ச்.. கேக்குறேன்ல்ல..? எவ்வளவு ரூவா..?”

அம்மா மௌனமாக பர்சிலிருந்து சுருட்டி வைத்திருந்த இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துக காட்டினாள். இவனுக்கு அப்படியே வானத்தில் பறப்பது போல இருந்தது. வாடகை போக 500 ரூபாய் மிஞ்சும். அதில் இருநூறு நிச்சயமாக இவனுக்குதான்..

சட்டென சந்தோஷமான மனதுடன் பஸ்ஸின் ஜன்னலுக்கு வெளியில் தெரியும் கடைகளில் எந்த ஒயின்ஷாப்பாவது திறந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்க்கத் துவங்கினான்..

– ஜூன் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *