(1972 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அப்ப… நான் வரட்டுமா பிந்து…
அவன் கைகளிரண்டையும் நாற்காலிப் பிடிகளில் ஊன்றிக் கொண்டான். கால்கள் செருப்பைத் துழாவின. கண்கள் அவளில் நிலைத்தன.
வலது கையிலுள்ள வளையல்களை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்தாள். கண்களை ஒருதரம் அழுந்த மூடித் திறந்து மெலிதாக இவனைப் பார்த்துச் சிரித்தாள். மீண்டும் குனிந்து முழங்கையில் ஊன்றியிருந்த வளையல்களைத் தளர விட்டாள்.
முடிஞ்சா…நாளைக்கும் வரேன்… இவன் கால், இடது செருப்புக்குள் நுழைந்து கொண்டது.
இருங்கோளேன்… என்ன அவசரம்… ஏதாவது வேலையிருக்கா… தலையில் முடிந்திருந்த ரிப்பனைச் சொடுக்கி இழுத்தாள். ‘பம்’மென்று விடுதலையாகிச் சுருள் சுருளான கூந்தல் தோளில் படர்ந்தது.
புஸ்மாஸூரி, புஸ்மாஸூரி என்று இவன் மனது கூவிற்று. ஏதாவது ப்ரோக் ராம்னா சரி. ஒன்னுமில்லேங்கறபோது… கொஞ்சம் இருந்து பேசிட்டு போகலாமில்லையா…நான் வற்புறுத்தலே…உங்களாலே…
OK… அவள் வார்த்தைக்குத் தேடும்முன் இவன் நாற்காலியில் அழுந்திச் சரிந்தான். இடது கால் செருப்புக்குள்ளேயே இருந்தது. வலது காலை விரைத்துத் தளர்த்தினான். பின் பக்கம் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். கழுத்துப் பட்டையில் வியர்வை கசகசத்தது, வெளி வெய்யிலின் பளீரைக் கண்களை மூடிக் கொண்ட பின்னரும் உணர முடிந்தது. கூந்தல் பம்மி அவள் தோளில் படர்ந்த மாதிரி தன் மேலும் குப்பென்று ஒரு குளிர் காற்று சரிய ஆசைப்பட்டான். ஹாலின் நடுவில் சுற்றிக் கொண்டிருந்த பாஃளிலிருந்து லேசான காற்று வெப்பத்தோடு காலை மட்டும் நக்கிக் கொண்டிருந்தது.
இவன் கண்களைத் திறந்தான். இத்தனை நேரம் அவளோடு பேசிய பேச்சுக்களின் சாரம் மண்டைக்குள் கனத்தது. அதிகம் காட்டிக் கொண்டு விட்டோமோ என்ற கேள்வி நெஞ்சைக் குடைந்தது. அடிக்கடி இந்தத் தப்பைப்பண்ணி விடுவதற்காக இவன் வெட்கப்பட்டான். அப்படிச் செய்துவிட்டு வெட்கப்படுவதற்காகவும் வெட்கப்பட்டான். அந்த வெட்கத்தைப்போக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவையாய் இருக்கு. சுகமாய் இருக்கு. இவளுடைய அனுதாபம் எனக்குத் தேவைப்படறதினாலே, இவநட்பு தேவைபடறதினாலே இவ அனுதாபத்துக்கு முயற்சிக்கிறேன். முடிவில்லாம என் மேல் இவ அனுதாபப்படனும்னு என்னைப்பத்தி முழுசும் சொல்லிடறேன். முடிவில்லாம அனுதாபம் கிடைக்குமோ. முடிவில்லாத பொருள் தான் எது இந்த ஒலகத்தில? எனக்குத் தெரிஞ்சு எதுவுமில்லே. இன்னும் கேட்டா, என்னைப் பொறுத்தவரையில் எல்லாம் முதலாகிறப் போவே முடிஞ்சு போறது. இவ நட்பும்… இப்படித்தான் போயிடுமோ… நோ. விடப்படாது. திரும்பி அதே தப்பைப் பண்ணப்படாது. இவ நட்பு எனக்கு வேணும். இல்லேன்னா முறிஞ்சு போய்டுவேன். இவ நட்பு எனக்கு வேணும்னா இவ கிட்டேயிருந்து நான் ஒரு அடி தள்ளியே நிக்கணும். என் மனசின் ஒரு ஓரத்தை ஒளிச்சே வச்சுக்கணம். என்னிக்குத் தான் கத்துக்கப்போறே அம்பி, இதையெல்லாம் என்னிக்குத்தான் கத்துக்கப்போறே. Come on Get up, விலக்கிண்டு வெளியே போடா, மனசுக்குள் உரக்கச் சொல்லிக் கொண்டான்.
கழுத்தைத் திருப்பி இவளைப் பார்க்கையில், அவள் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
முதுகை உந்தி நேராய் உட்கார்ந்து கொண்டான்.
அப்புறம்… வேறென்ன… ஒரு பெரு மூச்சுடன் வார்த்தைகள் புரண்டு வந்தன. தன்னைப் பற்றிய பரிதாபம் முகத்தில் படர, கிராப்பை ஒதுக்கிக் கொண்டு, வேறென்ன இருக்கு…சொல்லுங்கோ.
அவள் கண்களின் ஓரம் ஈரம் பளபளத்துக் கொண்டிருந்தது. இமைகளின் பட படப்பை அடக்கி நிறுத்துவதன் மூலம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தெரிந்தது.
உங்களெ ஒண்ணு கேக்கறேன்… தப்பா நினைச்சுக்காதீங்கோ… உங்க எல்லா எழுத்திலேயும் நீங்க இருக்கேளா… நீங்க எழுதறதெல்லாம் உங்களைப் பத்திதானா- கடைசியா சொன்னேளே, அந்தக் கவிதை கண்ணைப் பிடுங்கும் ரத்தப் பூவே, உனக்குத் தந்தை நானடா மகனேன்னு…அதுலகூட நீங்க இருக்கேளா.
இந்தத் தடவை அவள் அனுதாபம் அவனுக்கு அன்னியமாய்ப்பட்டது… இல்லை, என்று சொல்ல வேண்டும் என்கிற முடிவு மனதுக்குள் ஏற்பட்டுவிட்டாலும், ஒருகணம் கண்ணைச் சுருக்கி யோசிப்பதுபோல் பாவனைக் செய்தான். பிறகு வெகு இயல்பாய் தோளை குலுசுகிக் கொண்டு சிரித்தான்.
நோ…யூ ஆர் ராங்… முழுக்க முழுக்க எல்லாமே தானாய் தன் எழுத்தில் எவனும் இருக்கிறதில்லே. பிறத்தியார் விஷயத்தெ தனனுதா பாவிச்சிண்டு எழுதறதும் உண்டு, நீங்கக் கூடத்தான் ஒரு கதை ஆரம்பிச்சிருக்கேள்.. மதன் மாலாவை அணைத்துக் கொண்டான்னு…யாரந்த மதன் உங்களுக்குத் தெரியுமா…அந்த மாலா நீங்கதானேன்னு நான் கேட்டா…
சே… நா ஒண்ணும் அந்த மாலா இல்லே, அது முழுக்கதை. அசல் கதை, வெறும் கதை. அவள் வெட்கத்துடன் சிணுங்கினாள்.
இவனுக்குச் சந்தோஷமாய் இருந்தது.
என்னுதும் அப்படித்தான் பாதி கதை, பாதி நிஜம். அதுல எது நிஜம், எது கதைன்னே நிஜமா, எனக்குத் தெரியலே. எல்லாமே எல்லாமே கதையா இருக்கு. வரட்டுமா … I am tired…போய் கொஞ்சம் உடம்பச் சாய்க்கணும். நாளைக்குப் பாக்கலாம். வலது காலை மடக்க செருப்பை நாற்காலிக்கடியிலிருந்து இழுத்துக் காலில் மாட்டிக் கொண்டான். விரைப்பாய் எழுந்துச் சட்டையை உதறிக் கொண்டான். அவளும் எழுந்தாள்.
சிகெரெட் பெட்டி இங்கே இருக்கு. நாற்காலியின் பின்பக்கம் விழுந்து விட்டிருந்த பெட்டியைக் குனித்து எடுத்தாள்.
‘தீர்க்க சுமங்கிலி பவ’… இவன் மனசுச்குள் சொல்லிக் கொண்டான். வரட்டுமா. அவள் கண்களைச் சந்திக்காமல் சிகரெட்டை வாங்கிக் கொண்டான். சிகரெட்டைக் குறைச்சுக்கோங்கோ… பேசிண்டிருந்த ஒரு மணி நேரத்திலெ அஞ்சு பிடிச்சுட்டேள். இது எதுல கொண்டுபோய் விடும் தெரியுமா? அவள் குரலின் தழதழப்பு அவனுக்கு வேதனையாய் இருந்தது. கொஞ்ச கொஞ்சமா நிறுத்திடுங்கோளேன்…
ப்ச்ச்… அவள் சொல்லியே நான் நிறுத்தலே நீங்க சொல்லித்தானா நிறுத்தப் போறேன். இது இல்லாம என்னால் முடியாது. நாளைக்கு வரேன். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வாசலைத் தாண்டி வெய்யிலில் இறங கினான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பை…
பை… சிரித்தபடி கையசைத்தாள். தோட்டத்தைக் கடந்து, கம்பிக் கதவைத் திறந்து தெருவில் நின்று மீண்டும் கதவை மூடுகையில் அவள் அங்கேயே நின்று மீண்டும் கதவை மூடுகையில் அவள் அங்கேயே நிற்பது தெரிந்தது. கதவின் கொக்கியைப் பொருத்தியபடி மீண்டும் கையை அசைத்தான். பதிலுக்கு அவளும் வீசினாள்.
வேஷ்டியின் நுனியைப் பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கையில் இவர்களைக் கவனித்தபடி கடந்த இரண்டு பையன்கள் தங்களுக்குள் பேசிச் சிரிப்பதைப் பார்த்தான்.
ராஜுகிட்டே சொல்லணும், இவளெப் பத்தி. அவன் கவிதையைக் கூட இவ படிச்சிருக்கேன்னு சொன்னா. ஏன், மூர்த்திக்கு லெட்டர் எழுதலாம். எனக்கு புதுசா ஒரு friend கிடைச்சிருக்காண்ணு. அவளுக்கு இலக்கியம் தெரியும்ன்னு அவன் சந்தோஷப்படுவான். உண்மையிலே சந்தோஷப்படுவான். பதினாறு மாசமா நான் தவிச்சததவிப்பெல்லாம் அவனுக்குத் தெரியும், சீதாலக்ஷ்மி எனக்கு இல்லேன்னு ஆனப்பறம் நான் பட்ட ஹிம்ஸையெல்லாம் தெரியும். எத்தனை தைரியம் சொல்லியிருக்கான்; எனக்கு வரிஞ்சு வரிஞ்சு பக்கம் பக்கமா லெட்டர். எத்தனை எழுதித் தேத்தியிருக்கான் என்னை. ஆத்துக்கு போனதுமே எழுத ஆரம்பிச்சுடலாம். இவ கிட்ட பேசினதெல்லாம் எழுதணும். சிகரெட்டை நிறுத்துங்கோன்னு சொனனதைக் கூட எழுதணும், ஆனா, அவ friend தாங்கிறதை நிச்சயம் எழுதிடணும், வெறும் Friend தான்னு சொன்ன மூர்த்தி நம்புவான… நம்பும்படியா எழுதணும. திருப்பித் திருப்பி அவ சினேகிதி தான்கிறதைத் சொல்லி அவளை வேறேஎதுபத்தியும் யோசிக்க முடியாதபடி எழுதணும், எழுதறது நம்மகிட்டதானே இருக்கு.
ஆனா இவ எனக்கு friend தானோ… நிச்சயம் friend தான். ராஜுமாதிரி, மூர்த்தி மாதிரி என்னைத் தட்டிக் கொடுக்கறா. என் மீது அனுதாபப்படுகிற friend, குரல் கம்ம… இது எதுல கொண்டு போய் விடும் தெரியுமான்னு கேட்டாளே. அவனுக்கு சீதாவின் மூக்குத்தி நினைவுக்குவந்தது. பிந்து மூக்குத்தி போட்டுக்கலே. ஆனா சீதாகண் மாதிரியே பெரியகண்… இவ பூசின மாதிரி இருக்கா; சீதா ஓடிசல். இவளைவிட ஒரு பிடி உயரம் கூட, சாட்டைமாதிரின்னா இருக்கும் பின்னல். பம்மென்று தோளில் படர்ந்த இவள் கூந்தலை நினைத்துக் கொண்டான். நெத்திலேந்து விரல்விட்டு அளைஞ்சா, கொறைஞ்சது நாலு இடத்திலியாவது சிக்கிக்கும். புஸ்மாஸுரி, புஸ்மாஸுரி, கூந்தலுக்குள் சொருகுவதாய் விரல்களைப் பிரித்துக் கொண்டு வலதுகையை காற்றில் வீசினான். பட்டென்று புறங்கை எதன்மீதோ மோதிற்று. வலி தாங்காமல் கையை இழுத்துக் கொண்டு பின்னால் பார்த்தான். இவனுக்கு வெகு அருகில் ரிக்க்ஷா ஒன்று வந்து கொண்டிருந்தது. ரிக்க்ஷா காரன் குனிந்த தலையை நிமிர்த்தினான், ஏர் காலைப் பார்த்தான். திரும்பி இவனைப் பார்த்தான். பிறகு ரிக்க்ஷாவை விலக்கிச் சாலையின் மையத்திற்கு ஓட்டிப் போனான். ரிக்க்ஷாவில் ஆறு ஏழு வாழைத்தார்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. உட்காரும் இடத்தில் கூட வாழைத்தார்கள் வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் காய் வெட்டாக, பச்சை நிறமாக உள்ள பழங்கள், ஒரு பழம் கூட மஞ்சள் இல்லை. கடையில கொண்டு போய் தொங்கவிட்டால் பழுத்துவிடும். இந்த வெய்யில் காற்றுக்கே கனிந்து போய்விடும். வைக்கோலை மூடி புழுங்கவிட்டால் சீக்கிரமே கனிந்து விடலாம். கடைக்காரன் சீக்கிரம் கனிய விடமாட்டான், விற்க வேண்டாமா. ரிக்ஷாவின் சக்கரம் இவனுக்கிணையாக உருண்டு கொண்டி ருந்ததைக் கவனித்தான். சட்டம் தெளிவா காத சுழற்சி இருந்தாலும் வேகம் என்ன வோ இவன் நடை வேகம்தான். ஒரு வேளை நம் காலும் நம்முடைய வீச்சில் உருவமில்லாது மறையுமோ. இவன் வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டான். பாதங்களின் வடிவு தெளிவாய்த் தெரிந்தது.
சீதாவுக்குக் குறுகல் பாதங்கள். பிந்துவுக்கு இவன் அவள் பாதங்களை நினைவு படுத்திப் பார்த்தான். நினைவுக்கு வரவில்லை. நாளைக்கு பார்க்கணும், உடம்பின் வெளுப்பு கண்டிப் பாய் அவள் பாதங்களிலும் இருக்கும். தன் பாதங்களையே பார்த்து வந்ததில் ரிக்க்ஷாவின் அருகில் போய்விட, சட்டென்று ஏர்காலில் கையை ஊன்றித் தன்னை விலக்கிக் கொண் டான். அந்தச் சின்ன அசைவில் ரிக்ஷாவின் ஓட்டம் தடைப் படவில்லை. ரிக்க்ஷாக்காரன் இவனைப் பார்த்துச் சிரித்தான்.
என்னாசார் உனுக்குள்ளேயே பேசிகினு வரே…
இவன் வேஷ்டியை இறுக்கிக் கொண்டு பதிலுக்குச் சிரித்தான். ஹாங். என்று ஆமோதிப்பதுமாதிரி குரலெழுப்பினான். ரிக்க்ஷா காரன் சிரிப்பு இவனுக்கு இதமாக இருந்தது. அவனும் நம்மைப்போல் அதிகம் யோசிக்கிறவனாக இருக்க வேண்டும். உட்கார்ந்து யோசிப்பதைவிட இப்படி ரிக்க்ஷாவை ஓட்டிக் கொண்டே யோசிப்பது அவனுக்கு அனுபவமாக இருக்க வேண்டும்.
இவன் ரிக்க்ஷாவின் கூடவே நடந்தான். ரிக்ஷாக்காரனின் ஈரமுதுகில் ஒரு இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதைச் சுண்டி எறிந்து விடலாம், ஆனால் ஏர்காலில் போய் முட்ட வேண்டியிருக்கும். மீண்டும் ரிக்ஷஷாக்காரன் சிரிப்பான் என்பது என்ன நிச்சயம். இவன் வேஷ்டியை ஒருதரம் பிரித்துச் சொருகிக் கொண்டு காலை வீசி நடந்தான்.
எந்தா சாரே…வாழைத்தார் வாங்கிட்டு போதோ, எந்தா விலை? பெட்டிக் கடை நாயரின் குரல் தெருவில் எல்லோரையும் திருப்பிற்று, இவனுக்கு முன்னே நடந்து கொண்டிருந்த ஒரு அம்மாள் ஒதுங்கி நின்று அவனுக்கும் ரிக்ஷாவுக்கும் வழி விட்டாள்.
என்னுதில்லேப்பா…அது ஏதோ வண்டி. இவன் நடப்பதை நிறுத்தவில்லை. அநாகரிகமானவன். பித்துவைப் போல் இவனுக்கு மெல்லப் பேசத் தெரியாது என நினைத்துக் கொண்டான். அதிக சந்தோஷம் ஏற்பட்டால் கூடப் பிந்து கத்தமாட்டாள். அப்பா…என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு லேசாய்க் கூவுவாள், அவ்வளவு தான். ஒரு வேளை கோபம் வந்தால் கத்துவாளோ..இருக்காது…பிந்து மாதிரி பெண்கள் கோபம் கொண்டால் உம்மென்று உட்கார்ந்து கொள்வார்கள். இல்லை, அறைக்குள் புகுந்து கதவைத் தாழிட்டு கட்டிலில் படுத்து விம்மி விம்மி அழுவார்கள். கட்டில் விளிம்பில் உட்கார்ந்து தலையை வருடி அவர்களைச் சமாதானப் படுத்திவிடலாம். பிந்துவின் கூந்தல் வருடுவதற்கும் இதமாய் இருக்கும்.
தெருவின் வளைவில், திருப்பத்திற்காக ரிக்க்ஷாவின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது. ரிக்ஷஷாக்காரன் இப்போது இவனுக்கு இணையாக வந்து கொண்டிருந்தான. எதிர்ப்பக்கம் சைக்கிள் மணி கிணு கிணுத்தது.. இவனுடைய ஆபீஸ் சிநேகிதன் கையசைத்தான் ஹய் ராஜாராம எங்கே போய்க்கிட்டிருக்கே இதென்ன. வாழைப்பழம்… தார்தாரா… போடா fool…நான் வீட்டுக்குப் போய்ண்டிருக்கேன். வாழைத்தார் எங்கயோ கடைக்குப் போறது. அவனுக்கு நிற்க இஷ்டமில்லை, கிட்டே இந்த மடையன் பேசறதைவிட வீட்டுக்கே போகலாம். போய் லெட்டர் எழுதலாம் மூர்த்திக்கு. பிந்துவைப் பத்தி…
இவன் வெகு விரைவாக ரிக்க்ஷாவைக் கடந்து நடக்க ஆரம்பித்தான், வெய்யில் பிடரியைக் கடித்து ஹிம்ஸித்தது. இந்தத் தெரு முழுக்கப் போய் திரும்பினாத்தான் வீடு வரும். பேசாம இருந்துட்டே வந்திருக்கலா மோ… வெய்யில் தாழறவரைக்குமாவது பேசிக்கொண்டிருந்திருக்கலாம்… என்ன பேசறது.. உங்களைப் பத்தி ஒன்னும் சொல்லவேல்லியே பிந்து… சொல்லுங்களேன். நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை… சமீபத்தில் ஏதாவது கல்யாணம் பண்ணிக்கறதா ஐடியா உண்டா…
சை… இவன் ரிக்க்ஷாவைப் பார்த்தான். இரைக்க இரைக்க துரத்திக்கொண்டிருந்தது. பாவம். இன்னும் எவ்வளவு தூரம் போகணுமோ. திரும்பிப் பார்த்தபடி நடந்ததில் வேகம் குறைந்தது. ரிக்க்ஷா நெருங்கியது. இவன் நடையை துரிதப்படுத்தினான்.
தெரு மரத்தடியில் வெற்றிலைக் குதப்பிக் கொண்டிருந்த கூடைக்காரி இவன் வழியில் எச்சில் துப்பினாள். எச்சிலைத் தாண்டி விட்டு அவளை முறைத்தான்.
என்னா ஐயரே என்னா விலைக்குப் புடிச்சே. பழத்தே… அவளுடைய காவிப்பற்கள் இவனை பார்த்துச் சிரித்தன.
ஒரு கணம் பளீரென்று தலையில் வெடி வெடிக்கிறமாதிரி ஒரு வலி மின்னிற்று. அழுந்தத் தலையைப்பிடித்துக் கொண்டு மரத்தடியில் நின்று விட்டான். தொண்டை வரண்டது…டசன் பதிமூன் ரூபாம்மா.. என்று பதில் சொன்னான். என்னாது டசன் பதிமூனா இரண்டு மூன்று குரல்கள் காதில் ஒலித்தன. இவனுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது…
– கசடதபற, மே 1972