கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 15, 2014
பார்வையிட்டோர்: 13,730 
 
 

ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் மேற்பார்வையாளர் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. அங்கன்வாடிப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்த விவரங்களைச் சரிபார்க்கும் பணி. அப்பணியில்தான் வள்ளி அக்காவை கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத இந்த ஊரில் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. தன் வயதான அம்மாச்சியுடன் ஒரு சிறிய வீட்டில் இருந்தாள். அருகில் உள்ள ஒரு சிறிய தொழிற்சாலையில் வேலை செய்கிறாள் போலும். இன்னமும் அதே கம்பீரத்துடன் இருந்தாள்.

என்னைவிட வயது மூத்த வள்ளி எங்கள் அனைவருக்கும் கிராமத்தில் விளையாட்டுத் தோழியாக இருந்தாள். நெகுநெகுவென உயரமாக இருப்பாள். இரட்டை சடை போட்டிருப்பாள். ஓட்டத்தில் யாரும் அவளை வெல்லவே முடியாது. காளி அண்ணன் ஒரு முறை அவளிடம் பந்தயம் கட்டித் தோற்றுப் போய் டூரிங் கொட்டகையில் “சரஸ்வதி சபதம்’ படத்திற்கு எங்கள் அனைவருக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்தார்.

வள்ளிஎந்நேரமும் ஆண் பிள்ளைகளோடு மட்டுமே விளையாடுவாள். இதனால் “ஆம்பிளக் காமாட்சி’ என்று அவளை ஊரில் அனைவரும் கேலி செய்வர். வள்ளி ஒருவரையும் சட்டை செய்ய மாட்டாள். பாவாடை – சட்டை போட்டுக் கொண்டு ஆண்களுக்குச் சமமாக ஓடுவாள்; குதிப்பாள்; மரம் ஏறுவாள்; கம்பிகளில் தொங்குவாள்; சைக்கிள் ஓட்டுவாள்; சூப்பராக நீச்சலடிப்பாள்; பம்பரத்தைத் தரையில் விடாமலேயே கையில் ஏந்திக் காட்டுவாள். இதெல்லாம் என்னைப் போன்ற சிறுமிகளுக்கு அதிசயமாக இருக்கும்.

என் தாய் மட்டும், “”அந்தத் தடிமாடு வள்ளியோட என்ன வெளயாட்டு?’ என்று கேட்டு என்னை அடிப்பாள். வள்ளியின் தாயிடம் சென்று, “இதோ பாரு தெய்வான! ஓம் பொண்ண அடக்க ஒடுக்கமா வளக்கப் பாரு. இல்லாட்டி பின்னாடி நீதான் கஷ்டப்படுவ’ என்று அடிக்கடி கூறுவார். தன் தாயிடம் மாடு போல் அடி வாங்கினாலும், வள்ளி தன் இயல்பிலேயே இருப்பாள்.

எங்கள் ஊரில் “ஜெயந்தி நாதன் கிணறு’ என்று மிகப்பெரிய கிணறு ஒன்று இருக்கும். மிக மிக ஆழம் அதிகம். திருச்செந்தூர் முருகனுக்கு “ஜெயந்தி நாதன்’ என்று மற்றொரு பெயரும் உண்டு. அவர் மேல் பக்தி கொண்ட யாரோ ஒரு குறு நில மன்னன் கிணறு வெட்டி, “ஜெயந்தி நாதன் கிணறு’ என்று பெயரிட்டதாகவும், நாளடைவில் அது மருவி “செவந்திநாதன் கிணறு’ என்று மாறிவிட்டதாகவும் அங்குச்சாமி தாத்தா கூறுவார். “ஜெம்பு கங்கை வத்தினாலும் ஜெவந்தி நாதக் கிணறு வத்தாது’ என்று ஒரு பழமொழியே எங்கள் ஊரில் வழங்கப்பட்டு வந்தது. கிணற்றின் உள்ளே இறங்குவதற்கு உட்புறம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு முறை என் அண்ணன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்பொழுது ஜெவந்தி நாதக் கிணறு அடி மண் எடுத்தால் அங்கண்ணன் கடை பிரியாணி பரிசு எனப் பந்தயம் கட்டப்பட்டது. ஏதோ ஒரு வீராப்பில் என் அண்ணன் ஒத்துக்கொண்டான். ஆனால் நிஜத்தில் அந்தக் கிணற்றைப் பார்க்கவே பயமாக இருந்தது அவனுக்கு. அந்த வழியாகச் செல்லும் பெரியவர்கள் யாராவது சிறுவர்களை அக்கிணற்றின் அருகே கண்டால் அடித்து விரட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அவ்வளவு ஆபத்தானது அது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் யாரும் அங்கு வரமாட்டார்கள் என்பதால் என் அண்ணனும், நானும், மற்றும் அவனது நண்பர்களும் அங்கு கூடினோம். பந்தயத்தை முடிக்காவிட்டால் நூறு ரூபாய் தண்டம் தர வேண்டும். எண்பதுகளில் நூறு ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை. ஆனால் நண்பர்களின் கேலியும், கிண்டலும் தாங்கவே முடியாது. என் அண்ணனுக்கு ஜுரமே வந்துவிட்டது. வள்ளி திடுதிடுவென வரப்புகளினூடே ஓடி வந்தாள். “என்னடா! ஊர்ல ஒரு பயலயும் காணாமேன்னு பாத்தேன்! இங்க கூடி என்னடா செய்யிறீங்க!’ என்று கேட்டு விபரம் அறிந்தாள்.

“இதுக்கு அவனை ஏண்டா இழுக்கறீங்க? நானே எறங்கி மண் எடுப்பேனே!’ என்று எதிர்ச்சவால் விட்டாள்.

“ந்தா! ஆம்பளக் காமாச்சி! நீ இதுக்கு வராத! ஓடிப் போயிறு’ என்றான் ஒருவன்.

“ஏய்! பொட்டப் பரமா! தைரியம் இருந்தா எங்கிட்ட மோது’ என்று விரல் சொடுக்கினாள் வள்ளி.

“உள்ள தள்ளி விட்டேன்னு வை! உசுர் பொளக்க மாட்ட’ என்றது ஒரு குரல்.

“நீ என்னடா தள்றது? நானே குதிக்கிறேன் பார்’ என்று கூறி அந்த பிரம்மாண்டக் கிணற்றில் யாருமே எதிர்பார்க்கும் முன் “தொப்’ என்று குதித்தாள் வள்ளி.

அதற்குள் பந்தயம் கட்டிய பாதி டிக்கட் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தது. என் அண்ணனும் நானும் சில நண்பர்கள் மட்டும் தவிப்புடன் நின்றிருந்தோம். எப்படித்தான் தம் கட்டினாளோ? எங்கிருந்துதான் அந்த தைரியம் வந்ததோ? தெரியாது. சில நிமிடங்களில் கை நிறையக் கறுப்பு நிற சேற்று மண்ணுடன் மேலே வந்தாள். அவள் மேலே வந்த பிறகுதான் எங்களுக்கு உயிர் வந்தது. என் அண்ணன் கையில் கறுப்பு நிற மண்ணைக் கொடுத்துவிட்டு சிரித்தபடியே சென்றாள். நாங்கள் அனைவரும் மிரண்டு போனோம்.

அப்படி இருந்த வள்ளி ஒரு நாள் பெரிய மனுஷி ஆனாள். சடங்கு சுற்ற வந்தவர்கள், “ந்தா இனிமேயாச்சும் அடக்க ஒடுக்கமா இருக்கப் பாரு’ என்று அறிவுரை கூறிச் சென்றார்கள். இருந்தாலும் பெண்மையின் நளினம் அவளிடம் தென்படவே இல்லை.

அதன் பிறகு ஆண்களை விட்டு அவள் அறவே விலகிவிட்டாள். எங்கள் வீட்டிற்கு மட்டும்தான் வருவாள். “அத்தை’ “மாமா’ என்று என் பெற்றோர்களை அழைத்தபடியே என் வீட்டு வேலை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வாள்.

என் அம்மாவிற்கு உதவியாய் இருப்பாள். தேங்காய் இல்லையா? வேலைக்காரன் வரும்வரை காத்திருக்க மாட்டாள். சரசரவெனப் பாவாடையை இழுத்துக் கட்டிக்கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் ஏறிவிடுவாள். அது குட்டை தென்னை மரமாக இருந்தாலும் என் அம்மா பதறியபடியே “அடியே! ஒங்காயி தெய்வானைக்கு நான் பதில் சொல்ல முடியாது. தயவு செஞ்சு கீள எறங்கு தாயே’ என்று கெஞ்சுவாள்.

மட்டை காய்ந்து போன தேங்காயை உரிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஆனால் வள்ளி அக்கா உரிபாரையில் சரசரவென உரித்துவிடுவாள். அரிவாள் கொண்டு லாகவமாக இளநீர் சீவுவாள். மொத்தத்தில் வேட்டி கட்டாத ஆண் பிள்ளையாக இருந்தாள் வள்ளி.

இப்படியாகக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. நாங்களும் பெரியவர்கள் ஆனோம். என் அண்ணன் பொடிக் கலரில் பெல்பாட்டம் பேண்டும், மிட்டாய் ரோஸ் கலரில் முழுக்கை சட்டையும் அணிந்துகொண்டு ரஜினி போல் தலையைக் கோதிக்கொண்டு திரிந்தான். படிப்பில் அவனுக்கு நாட்டமில்லை. சதா நண்பர்களுடன் “மூணு சீட்டு’ விளையாடிக் கொண்டும், சுற்றிக்கொண்டும் இருந்தான். அப்பாவுக்கு அரசல் புரசலாகத் தெரிந்து கண்டித்துக் கொண்டிருந்தார்.

அவனைப் பார்க்கும்பொழுது மட்டும் தலைகுனிந்து புன்சிரிப்புடன் வெட்கப்படுவாள் வள்ளி. இது எனக்கே புதிதாக இருந்தது. ஒரு நாள் வள்ளி அக்காவிற்கும் வீட்டில் திருமணப் பேச்சு எடுத்தார்கள். அதுவரை கலகலப்பாக இருந்த அவள் உற்சாகமிழந்து காணப்பட்டதிலிருந்து அவளுக்கு அதில் விருப்பமில்லை என்பது புலனாகியது.

சில நாட்களாக ஊரில் ஆடுகள் திருடு போய்க் கொண்டிருந்தன. ஐயனார் கோவில், சாம்பான் கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டிருந்தன. ஊர் மக்கள் கொதிப்படைந்து இருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று ஒருநாள் மாலை கோவில் உண்டியலை உடைத்த ஒருவனை ஊர்மக்கள் துரத்தி வர அவன் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து தன் உடைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு பம்பு செட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த வள்ளி அக்காவிடம் களவாடிய பணம் இருந்த மூட்டையைக் கொடுத்துவிட்டு மறைந்துபோனான். எங்களுக்கு ஆச்சரியம் என்னவென்றால், வீட்டை விட்டு எங்குமே போகாத வள்ளி அன்று மட்டும் துணி துவைக்க ஏன் அங்கு போனாள்? அதுவும் தனியாக?

அவனைத் துரத்தி வந்தவர்கள் இப்பொழுது வள்ளி அக்காவை பிடித்துக்கொண்டனர்.

“இந்த நேரத்துல தனியா ஏன் இங்க வந்த?’

“அவன் ஒங்கிட்டப் பேசுனத நாங்க பாத்தோம். அவன் நம்மூர்க்காரனா? அசலூரானா? அவன் யாருனு சொல்லு வள்ளி?’ என்று கேட்டபடியே அவள் கையில் இருந்த துணி முடிச்சைப் பிரித்தனர். அத்தனையும் உண்டியல் காசுகள். வள்ளி அக்காள் திக்பிரமை பிடித்தவள் போல் எதற்கும் பதில் கூறாமல் நின்றாள். இதற்குள் ஊரே அங்கு திரண்டு விட்டது. ஊர்ப் பெரியவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் வள்ளி வாயையே திறக்கவில்லை.

“”பாவி மவளே! இத்தினி நாளா வீட்டுலதானடி துணி துவைப்பே. இன்னிக்கு ஏண்டி இங்க வந்த? அதுவும் தனியா? களவாணிப் பய குடுத்த காசையும் கையில வெச்சுக்கிட்டு நிக்கிறியே. அவன் யாருன்னு சொல்லுடி?” என்று கேட்டு அவள் தாய் அவளை அடி அடியென்று அடித்தாள். வள்ளி எதற்கும் மசியவில்லை.

இதனால், “வள்ளிக்கும், ஒரு திருட்டுப் பயலுக்கும் தொடர்பு’ என்று ஊர் கதை கட்டிவிட்டது. எனவே, மறுநாள் வள்ளியைப் பெண் பார்க்க வருவதாக இருந்த மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை.

இந்த சம்பவம் நடந்த அன்று இரவு என் தந்தை “”கரும்புத் தோட்டத்துக்குள்ள ஒம் பொடிக் கலர் பேண்ட்டையும், ரோஸ் சட்டையையும் நான் பார்த்தேன்டா. அத ஊரார் கண்ணுக்குத் தெரியாம மறைக்க நான் பட்ட பாடு இருக்கே. அது கடவுளுக்குத்தான் தெரியும். இந்த ஈனப் பொழைப்பு ஒனக்கு ஏன்டா? ஒரு பாவமும் அறியாத பொண்ணு உன்னால மாட்டிக்கிடுச்சே” என்று என் அண்ணனை அடி பின்னி எடுத்தார். வாங்கிய அடியில் அவன் எல்லா உண்மையையும் ஒப்புக்கொண்டான்.

“மூணு சீட்டு’ விளையாடக் காசில்லாததால் கோவில் உண்டியலை உடைத்துக் காசை மேல் துண்டில் கட்டி எடுத்திருக்கின்றனர். ஆள் அரவம் கேட்கவே கூட்டாளிகள் ஆளுக்கொரு பக்கம் பறந்திருக்கின்றனர். இவன் கையில் பண முடிச்சுடன் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து தன் உடைகளைக் கழற்றி எறிந்துவிட்டு பனியனால் முகத்தை மறைத்துக்கொண்டு ஜட்டி மட்டும் போட்டுக் கொண்டு ஓடி இருக்கிறான்.

அதுவரை கூட்டாளிகளைப் பிடிக்க அலைந்த கூட்டம் கடைசியாகத்தான் இவனைப் பார்த்திருக்கிறது. வள்ளியை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத இவன், சுதாரித்துக்கொண்டு தன் கையில் இருந்த பண முடிச்சை அவள் கையில் கொடுத்துவிட்டு ஓடி ஜெயந்திநாதன் கிணற்றில் இறங்கி ஒளிந்துகொண்டான். கூட்டம் வெகு தொலைவில் வந்ததால் இவனை அடையாளம் காண முடியாதது இவனுக்கு வசதியாகப் போயிற்று.

அடுத்த ஒரு மாதத்திற்கெல்லாம் வள்ளியின் குடும்பம் வேறு ஊருக்கு மாறியது. அன்றுதான் வள்ளியை கடைசியாகப் பார்த்தது. இவ்வளவு நடந்த பிறகும் வள்ளி ஏன் என் அண்ணனைக் காட்டிக் கொடுக்கவில்லை என்பது எங்கள் ஒருவருக்கும் புரியவில்லை.

அந்த வள்ளி அக்காவை ஐந்து வருடங்கள் கழித்து இன்றுதான் பார்க்கிறேன். என்னைக் கண்டதும் ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்.

“ஏ கண்மணி! எப்பிடிடி இருக்க? உங்கண்ணன் நல்லா இருக்காரா? அத்தையும் மாமாவும் எப்பிடி இருக்காங்க?’ என்று ஒன்றுமே நடவாதது போல் என்னிடம் பேச ஆரம்பித்தாள்.

“ஏன்க்கா? நீ கல்யாணம் பண்ணிக்கலையா?’

“”அடி போடி. என்னைய எவன் கட்டுவான்? அம்மாவும் செத்துப் போயிடுச்சு. இதோ அம்மாச்சி மட்டும்தான் தொணைக்கு. இப்பிடியே இருந்துட்டுப் போறேன் போ!”

“”ஏன்க்கா? கேக்கறேன்னு தப்பா எடுத்துக்காதே! ஒம் மனசுல யாரையாவது நெனச்சிருந்தியா நீ?”

“”ஆமாண்டி. எம் மனசுலயும் ஒருத்தன் இருந்தான். கட்டுனா அவனைத்தான் கட்டணும்னு நெனச்சேன். சாயந்திரம் ஆச்சுனா மோட்டார் பம்பு செட்டுல அவனைத் தெனமும் பாக்கலாம். ஒரு நா சாயந்திரம் அவனப் பாத்து எம் மனசுல உள்ள ஆசையச் சொல்லலாம்னு, யாரையும் துணைக்கு அழைக்காம நான் மட்டும் துணி துவைக்கிற மாதிரி அங்க போனேன்”

“”ஐயோ அக்கா. நீ எனக்கு மதனியா வர வேண்டிய ஆளாச்சே” என்றேன் நான்.

வள்ளி அக்கா அதிர்ச்சி அடைந்தாள்.

“”அண்ணன் முதல்ல மாதிரி இல்லக்க.. திருந்திட்டான்.. ஒழுங்கா வேலைக்கும் போறான். கல்யாணம் வேணாம்னுட்டான். ஒன்னயைத்தான் நெனைச்சிக்கிட்டு இருக்கானோ என்னமோ…”

– லெஷ்மி பாலசுப்ரமணியன் (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *