வலியின் மிச்சம்!

0
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 10,486 
 
 

ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும் அவரை எப்பவும் மனசால் கூட நொந்தது கிடையாது. ஆனால் இண்டைக்கு ஏஜ் இவ்வளவு நேரம். திருச்சி கே.கே. நகரில் ஒரு கோடியில் கிடந்த அந்த வீட்டினுள் எப்போதும் பேசிக் கொண்டிருக்கும் அமைதியை விரட்டிக் கொண்டிருந்தது மூத்திர நாற்றம்…

“ஏனப்பா…’ தொய்ந்து போன குரலையடுத்து விம்மல் வெடிப்புகள் அச்சிறிய வீட்டினுள் எதிரொலித்தன. காதலும் தேடலும் இருக்கக்கூடியதான 27 வயது வாலிபன் ஒருவனின் கண்களில் பொலபொலத்து கொட்டியது கண்ணீர். அவன் அம்மாவுக்குகூட கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் கண்ணீர் அவன் வேதனையை இன்னும் அதிகமாக்கும் என தன் துன்பத்தை மறைத்துக் கொண்டாள்.

சாரம் (லுங்கி) ஒன்றை எடுத்து அவன் இடுப்பில் கட்டி ஜீன்சைக் கழற்றிப் போட்டு வெளியே கொல்லைப்புறத்தில் விட்டு, அவசரமாகத் தண்ணியை நிரப்பி அவன் மேல் ஊற்றினாள்.
இப்பொழுது வீடெங்கும் சாம்புராணிப் புகையைப் பரவி விட்டிருந்தாள். இது வீட்டுக்குள்ளிருந்த நாற்றத்தை விரட்டித் தூய்மையை நிரப்பியிருந்தது. அவனுக்காக கொணந்திருந்த சிலோன் றோல்சைக் கொடுத்து தேத்தண்ணியும் ஆத்திக் கொடுத்தாள். அதைக் குடித்துவிட்டு நிமிர்ந்தவன் தாயின் நெற்றியில் காயத்தைப் பார்த்து பதறிப்போய் “அம்மா என்ன காயம்? எங்கயாவது விழுந்திற்றீங்களா?’

காயத்தைத் தடவிவிடுவதற்காகத் தன்னிச்சையாக கைகள் உயர, முழங்கைக்கு மேல் அறுபட்டுக் கடந்த சதைத் துண்டங்கள் ஆடிச் சோர்ந்தன. இயலாமை உணர்வு நெஞ்சடைத்து, பெருவலியாக உருவெடுக்க, தாயின் முகத்தோடு தன் தலையையும் சேர்த்து மௌனம் மூளை வெல்ல, மனசு தோற்றுவிடும். இப்பொழுதும் சம்பவங்கள் நிகழ்வுகளுடன் பேசத் தொடங்கியிருந்தான்; கொதித்துக் கொதித்து அணைந்து கொண்டிருந்தது மனசு.
அம்மா பாவம், அவவுக்கு முட்டு வருத்தும், நிறைய வயது போயிற்று. பாயில இருந்து நான் பாத்துக் கொண்டு இருக்கறன். எந்த உதவியும் செய்ய ஏலாமக் கிடக்கே, மூச்சை இழுத்துக் கொண்டு சமைக்க ஆயத்தப்படுத்துறா. ரண்டு முரக்கங்காய் வேண்டி வந்திருக்கிறா, எனக்கு சரியான விருப்பம் எண்டுதான். ஒரு காய் 9 ரூபா.

ஊரில எங்கட வீட்டுக் கொல்லைக்கரண்டு மருங்க மரம் நிண்டுது, நல்ல களி. நினைக்கவே வாய்க்க எச்சில் ஊறுது.

சில நேரம் நினைச்சா ஏன் வாழோணும் எண்டு கூடக் கிடக்குது. இந்தச் சீரழிவுகளோட…. இவ்வளவு என்னில வன்மம். இல்லாட்டி அம்மாவையும் கூட வயசு போனவ எண்டு பாக்காம இப்படிச் சீரழிக்குமா?

“என்ன மாமி முழுங்கக்கா கறியோ ம்… ம்…’ என்றபடி துழாவிய சிலோன் சுந்தரியின் கண்கள் என்னில் நின்றன.

இவள் கவிதா, எந்நேரமும் சிங்காரிச்சுக் கொண்டே இருப்பாள். இதால பக்கத்தில உள்ளவே எல்லாரும் “சிலோன் சுந்தரி’ எண்டு வினம். அகதியா வந்து இருபது வருசத்துக்கு மேல. இப்ப இருபத்தஞ்சு வயசு.

அவளுக்கு எம்மேல ஒரு இது. அத எப்படிச் சொல்லுற தெண்டு தெரியல்ல. இருபத்தேழு வாலிபத்தின் இயலாமக் கிடக்கிற உணர்ச்சிகளில் மீதான கருணையா? இல்லாட்டி, இச்சை தீர்க்கும் தூண்டலா…? அல்லது உண்மையாகவே அன்பு இருக்கக் கூடுமோ?
மூன்றையுமே பிரித்தறிய முடியா நிலையினையே தருகிறது அவள் வந்து போகும் தருணம். எப்படி இருந்தாலும் அவளுக்கு அன்பைத்தான் பகிர வேணும். காரணம் மூன்றின் தேவைகளும் எனக்கிருக்கு. யதார்த்தமான வாழ்க்கையில சாதாரண மனுசனுக்கு இருக்கக்கூடிய இச்சைகள்தான் எனக்குமிருக்கு. என்ர தனிமைகள உணர்ந்து பல நேரங்கள இனிமையாக்கியிருக்கிறாள். விளித்து விளித்துத் தொல்லை தரும் உணர்ச்சிகளின் வெறிப்பாடாக அணைக்கத்தேடி உயர்ந்து துடித்துச் சோரும். கைகள். இயலாமையிலும் வெறும் வார்த்தைகளைக் கொண்டு அளந்து போட முடியாது, ஆண்மை செத்துப் போக நினைக்கும் நொடிகள். உணர்ச்சிகளை உணர்ந்து கைகளை நீட்டி அணைத்து பல தடவைகள் ஆன்மத் தீயை அணைத்திருக்கிறாள், இச்சைகளைக் கழித்து ஆறுதலாய் இருந்திருக்கிறாள்.

என் ஊனத்தில் அருவருப்பில்லாமல் உணர்ச்சிகளைப் புரிந்து உறவாடித் தந்திருக்கிறாள். இதெல்லாத்தையும் அவளின்ர வயசுப் பிழை எண்டோ, உடம்பிச்சை எண்டோ சொல்லினால் நான் ஒரு கேவலமான பிறப்பாயிடுவன். நான் நிறையத்தடவ நினைச்சுப் பாத்திருக்கிறன், அவளோட வாழ்க்கையக் கடந்த தொலைதூர அன்பு என்ரமேல இருக்கோணும். இல்லாட்டி இப்படி “நிர்வாணமாய் அலங்கோலமாய்’ என்ன நேசிக்கவே சகிக்கவே முடியாது.

என்ன செய்ய ஏலும் என்னால…? எல்லாம் தெரியிற தூரத்தில இருந்தும்கூட எந்தப் பசியையும் தீர்க்க ஏலாதே… ஐயோ… மனசும் ஓலமிடும் சத்தம் எந்த மனிதரை உண்மையாய்த் தொட முடியும்…?

அவளால் மட்டும்தான் முடிந்திருந்தது எனக்கான நிர்வாண முக்தியைத் தர. முகச்சுழிப்புகளோ அருவருப்போ இல்லாம அத்தனை உணர்ச்சிகளையும் தழுவியிருக்கிறாள். சிறுநீர் கழிக்கவோ, மலங்கழித்து சுத்தப்படுத்தவோ முடியாமல் தவித்த நேரங்களில் தன்னைத் தியாகித்து என்னைச் சுத்தப்படுத்தியிருக்கிறாள். எனைப் பொறுத்தவரை உடல், மனம், ஆவி எல்லாத்துக்கும் அவளே ஆத்மார்த்தமான குரு. நிர்வாண முக்தியளித்த தீட்சகி.

கவிதா கலகலப் பேச்சுக்காரி, அவள் வந்து போறது அம்மாவுக்குகூட நிறைய ஆறுதல். பேச்சுத்துணை, மன இறுக்கம் கொஞ்சம் குறையும்தானே. என்ன முறையில அவள் அம்மாவ மாமியாக்கினாவோ தெரியாது. ஆனா, மாமி மாமி யெண்டு முன்னுக்கும் பின்னுக்குமாக வந்து போறது ஒரு மனச் சந்தோசம்.
நீண்ட பெருமூச்சொன்று வெளியேற முகட்டைப் பார்க்க அண்ணாந்து படுத்துக் கொள்ளுறன். அவளின் குரல இன்னும் தெளிவா கேக்கோணும் எண்ட ஆசை.

“மாமி ஊரில இருந்து கனபேர் வந்திருக்கினம், என்ன விசேஷம்?’

“எனக்கென்ன பிள்ள தெரியும், நீதான் ஊருக்குளால பூந்தோடித் திரியிறாய், உனக்குத் தெரியாததே?’

“வவுனியால இருந்து அம்மாட தம்பியும், மச்சானும் வந்தாவே. சித்தி வீட்டில நிக்கின.’

“என்னவாம், பொம்பிள பாக்கின மாமோ.’

“கேட்டவேதான், எனக்கு விருப்பமில்ல.’

“ஏன் பெட்ட.’

“கலியாணம் எண்டிட்டு நான் கொண்டு போறத வைச்சு கொஞ்ச நாளைக்கு சிலவளிப்பினம். பிறகு சண்டை, பிச்சல் பிடுங்கல், பிள்ளயும் வயிறுமா நான் அங்கையும் இஞ்சையுமா இழுபடோணும். அதவிட இப்பிடியே இருந்திரலாம் மாமி. கஸ்ரமோ நஸ்ரமோ தனியவே போயிரும். ஆசா நிம்மதி இருக்கும்தானே.’

சொல்லிக்கொண்டே என்னப் பார்கிறாள். கடைசி வார்த்தைகளில கவனம் பெற அரைக் கண்ணால் அவளையும் பார்க்கிறன். அவளும் என்னப் பாத்தாள் எனக்கு ஏதோ செய்து உடம்பெல்லாம் ஆடிப்போச்சு, அந்தர வெளியில பறந்து தத்தளிக்குது.

“இப்படியே இருந்து என்ன செய்யப் போறா வயசல்லே ஏறிக் கொண்டிருக்கு…’

“மாமி…’

“சொல்ல மருகுமவளே’

“மச்சான அந்த ஜெயத்த கண்டவராம்!’

“ஜெயம், ஜெயம்…’ இந்தப் பெயரக் கேட்டதும் நிமிடம் சந்தோம் நொறுங்கி, அந்தர வெளியிலிருந்து தொப்படீரெண்டு விழுந்து கொதிச்சு எழும்பிற்று அவன்ர நினைவு.

மேலும் அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

“வவுனியாலதா இருக்கானாம், ஏதோ சஞ்சிகை நடத்துறானாம்.’

“மாமி…’

“ம்….’

“கிளிநொச்சியில வீடு கட்டிக் கொண்டிருக்கிறானாம்.’

“ஓ…’

“இப்ப வசதியாத்தான் இருக்கிறான். இப்பிடி ஊரில பேசியினமாம்.’
குப்புறப்படுத்துக் கொண்டேன். ரத்தம் வேகமாப்பாயுது, உடம்புக்கு சூடு அதிகரிக்குது. கண்ண முடிக் கொண்டன். கண்ணீர் கூட சூடாகத்தான் சில துளிகள் வழியுது.

“ஓ அப்படி இருக்கிறானோ ராஸ்கல், துரோகி, துரோகி.’

எனக்கு இந்த வினாடிகளை எதிர்நோக்கவே முடியேல்ல.
நிர்வாணப்படுத்தப்பட்ட அந்த நாளில் நிமிடங்கள் இப்ப சரியா வெறுக்கறன். பலரக் கூப்பிட்டு என்ன நிர்வாணமாக்கி என்ர அங்கங்களுக்கு விலை கேட்டத பரம கேவலமா.. எண்ணமெல்லாம் புரட்டுது. ஒவ்வொரு மயிர்க் காம்புகளும் புடைத்துக் கொள்ளுது. உடம்ப பிணமாக உணர்றன். எண்ணெய் உற்றி என்னைக் கொழுத்தும் சுவாலை, அதுகூட முடியாம கட்டுண்டு போய்க் கிடக்கிறன்.

சத்தியமா இப்ப என்ர ஊனத்தையும் அத ஏற்படுத்திய சூழ்நிலைகளையும், சூழ்நிலைகளை உண்டு பண்ணிய சூத்திரதாரிகளையும் சபிக்கோணும்போல இருக்கு. உண்மையில இத்தின வருசத்தில எத்தின கஸ்டங்கள தாங்கீருப்பன், ஆனா ஒருநாள் கூட ஒரு நிமிசம் கூட நினைக்கேல்ல.

ஜெயசுதா அண்ண சென்னை தாம்பரம் தாண்டி இருக்கிற ஒரு யூனிவேர் சிற்றியில படிச்சுக் கொண்டிருந்தவர். அங்க இருக்கேக்க ரேடியோ ஒண்டிலயும் வே செய்தவர். அதவிட மனுசன் நல்ல அரசியல் வேலையளிலயும் ஈடுபாடு. சமாதான காலங்களில் ரண்டாயிரத்தி ஒண்டு, ரண்ட, மூண்டு ஆண்டுகள் கலை இலக்கியப் பண்பாட்டுக் குழுக்களோட சேர்ந்து பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நிறைய இடங்களில செய்தவே. நல்ல ஆழுமையான குரல்வளம். இஞ்ச வந்த பிறகுதான் எனக்கு அவர நேரில தெரியும். யுனிவர்சிட்டியில படிக்க வந்தவராம். வெளிநாட்டு சில எஃப் எம்களிலயும் இணைய இதழ்களிலயும் வேலை செய்து கொண்டிருந்தவர். என்ர நிலமையப் பார்த்து அவரும் மனவருத்தப்பட்டார். ஏதாவது உனக்கு நான் செய்யிறன், ஆப்ரேசன் செய்து ஓரளவு சரிப்படுத்தலாம், கவலப் படாத என்று ஆறுதல் வார்த்தைகள் சில இரவுகள் என்னை நிம்மதியா தூங்க வச்சிருக்க.

ஆனா கடைசியில எல்லாம் இப்பிடி முடிஞ்சு போகும் எண்டு தாயறிய நான் நினைக்கவே இல்லை. சிலபேர் சொன்னவே தான் ஜெயம் உன்னப் பேக்காட்டிப் போட்டான், ஏமாத்திட்டான் எண்டெல்லாம். ஆனா இதுகள வைச்சு ஒரு தீர்மானத்துக்கு என்னால வர ஏலாமக் கிடந்தது. ஏனெண்டா அவர் அவ்வளவு நம்பிக்கை ஊட்டுற மாதிரி கதைப்பார்.

உண்மையிலயே மனுசத் தன்மையோட வாழ்றது அபூர்வம். அதுவும் என்ன மாதிரி இருக்கிறவேட்ட கொஞ்சமாவது இரக்கம் காட்டி வாழ வேண்டாமா? இவ்வளவு கேவலமா நடக்கோணுமா?
அண்டைய நாள் இன்னும் நினைவிருக்கு; உடம்பில ஓடிக் கொண்டிருக்கிற கடைசிச் சொட்டு உசிர் சாகிற வரைக்கும் மறக்க ஏலாத நிமிசங்கள்.

பலதடவை என்னை அதையே திரும்பத் திரும்பச் சொல்லி தயார்படுத்தியிருந்தார். கட்டாயமா இதன் மூலம் ஆப்ரேசனுக்கு காசு கிடைக்கும். இந்த நிகழ்ச்சியப் பாக்கிற வெளிநாட்டில வாழக் கூடிய சில இலங்கையராவது உதவி செய்வினம். அதவச்சு வைத்தியம் செய்வம் எண்டார்.

அதேபோல 5 லட்சம் வர கிடைச்சதா அறிஞ்சன். அப்ப அது உண்மதான். புலம் பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிற எங்கட சனம் எனக்கு உண்மையா உதவோணும் எண்டு நினைச்சு ஒவ்வொரு லச்சத்தையும் எவ்வளவு கஸ்ரப்பட்டு அனுப்பிருக்குங்கள். எல்லாத்தையும் ஏமாத்திக் கொண்டு போயிற்றானே. அப்ப எல்லாம் நடிப்பா, பேசினது, பழகினது, நல்ல மனுசனா காட்டிக் கொண்டது…?

நிழலாடி நிழலாடிப் போனது அன்றைய நாள் அந்த நிமிசங்கள். கச்சைத் துண்டையும் கழற்றி வீச, அந்தரங்கத்துக்காய பிச்சை போடக் கேட்டேனா… நானா… நானா…

குப்புறக்கிடந்த தலையை நிலத்தோட முட்டி வலிக்கச் செய்கிறேன். வலி தெரியேல்ல.

“அண்டைக்கு ஒரு 10 மணி’ ஸ்ரூடியோக்குள்ள. அது நேரடி நிகழ்ச்சி, வெளிநாடுகளில் இணையத்தில் நேரடியாப் பார்க்கலாம்.
“என்ரபேர் சீலன், நான் கடைசிச் சண்டையில என்ர சில உறுப்புகள இழந்திற்றன். இஞ்சே என்ர கையாள பாருங்க’ எண்டுமுழங்கøயோடு கட்டாகிக் கிடந்த கைகளை, சதைத்துண்டங்கள தூக்கி ஆட்டிக் காட்டினன். அந்த நிமிசம் இதயம் தீயாய் எரிஞ்சு, அழுதுவிட்டேன். கையள மட்டுமில்ல ஒரு காலைக்கூட இழந்திருக்கறன் பாருக்க… என்ர கால, கையப் பாருங்க, எனக் குனிந்து கைச்சதைத் துண்டத்தால தொடையோடு கிடந்த காலைத் தூக்க முயன்று, தடுமாறிக் கிழ விழுந்திட்டன். அருகில் கணிணியில் வேலை செய்த பெடியன் ஓடிவந்து தூக்கிவிட்டான். ஒற்றைக் காலால் கெந்திக் கெந்தி அதே இடத்திற்கு வந்து நிண்டன்.

மீண்டு பேச ஆரம்பித்தன். “சண்டையில நிறையச் சனங்கள் எல்லாத்தையும் இழந்து, உயிர்களையும் இழந்துதான் இருக்கின். நான் என்ர சகோதரங்கள், அப்பா எல்லாரையும் இழந்திட்டன். 70 வயசில அம்மா மட்டும்தான் இருக்கிறா. ஆரும் எங்களுக்கு இதுவரை உதவ முன்வரேல்ல. ஒருகால், ரெண்டு கையும் இல்லாம என்னால ஒண்டுமே சுயமாச் செய்ய முடியேல்ல. நான் அப்பவே செத்துப் போயிருக்கோணும். துரதிஷ்டவசமா தப்பிற்றன. ஆரும் பக்கத்தில உதவி செய்ய இல்லை. பொய்க்கால் போட பணமும் இல்ல, விரக்தியில சாகலாம் எண்டா அதுகூட என்னால செய்ய முடியேல்ல. இஞ்ச பாருங்க. (கையை ஆட்டியபடி)’

சிறுநீர் கழிக்கக்கூட எனக்கு ஆரும் உதவி செய்தால்தான் முடியும். இந்த நிலம ஆருக்குமே வரக்கூடாது. தயவுகூர்ந்து (அந்தச் சதைத்துண்டங்களால் வணங்கியபடி) எனக்கு உதவுங்கள். கைகால்க பொருத்த நீங்கள் செய்யும் சின்ன உதவி கூட எனக்கு மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம். தயவு செய்து எனக்கு கைகால்களைப் பெற்றுத்தாருங்கள் அழுதுவிட்டேன்.
உருக்கமான அந்த உரையை அவர் சொன்னதுபோலே செய்தேன்.

ஆனா….

ஐயோ… ஐயோ… இந்த வலியை எதைச் செய்து மாற்றுவன். கைகளின் மீதச் சதைத்துண்டங்களை இரண்டு பக்கங்களிலும் அடிக்கிறன். இன்னும். இன்னும்… பலமா அடிக்கிறேன். நல்லா வலிக்கட்டும்.

நிறைய வலிக்குது நுணியில எரிவுகூட.

சடலமாகக் கிடந்த உடல் குலுங்கிக் குலுங்கித் தணிகிறது.
இன்னும் ஓங்கி அடிக்கிறன்.

வலக்கைத்துண்டத்தை ஒரு முழுக்கை பற்றும் உணர்வு. மெல்லத் திரும்பிப் பார்க்கிறன்.

சிவந்த கண்ணில் துளிநீருடன் தலை முடியை மற்றுகையால் வாரிவிட்டபடி அருகில் சிலோன் சுந்தரி.

“அம்மா குளிக்கிறா’

முகத்தைத் திரும்ப குப்புற வைத்துக் கொண்டேன்.

“நான் இருப்பன்’ என்கிறாள். என் மீது சாய்ந்தபடி.

– ஈழவாணி (ஜனவரி 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *